
அத்தியாயம் -4
அதைப் பார்த்து சிந்தியா புன்னகையோடு அந்த மல்லிப்பூவை எடுத்து தலையில் வைத்தாள்.அதைப் பார்த்த ஆதிரை கொஞ்சம் அதிர்ச்சியாகி “மதனுக்கு குழந்தை இருக்கா?”
“ம்ம்ம்….” என்றாள்.
ஆதிரை “அவரோட மனைவி அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டாங்களா?”
“மாட்டாங்க ஏன்னா இது அவங்க பொண்ணு இல்லையாம்”
ஆதிரை புரியாமல் பார்த்தாள்.சிந்தியா தலையில் வைத்த பூவை கண்ணாடியில் சரிபார்த்தப்படி “ம்ம்… டென்ஷன் ஆகாதேடி இது அவங்க ரெண்டுபேருக்கும் பிறந்த குழந்தை இல்லை தத்து எடுத்து வளர்க்கிற பொண்ணு ஆனால் அது குட்டிம்மாக்கு தெரியாது.மதனுக்கும் அவரோட மனைவிக்கும் குழந்தை பிறக்கிற வாய்ப்பு குறைவுங்கிறதுனால மதன் ஒரு பெண் குழந்தையை கைக்குழந்தையாக இருக்கும் போது எடுத்து வளர்க்கனும் முடிவு பண்ணி வளர்க்க ஆரம்பிச்சாங்க ஆனால் அது அவங்க மனைவிக்கு விருப்பம் இல்லை மதனை மாதிரி வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகரவும் விருப்பமில்லை அப்படியே தேங்கி இருக்கனும்னா முடியாது ஆதிரை அதோட நேத்து அவரும் குடும்பமும் எப்பவும் ஜாலியா பேசுறதைப் பார்த்தேல்ல அந்த மாதிரி இருந்ததுக் கூட அவங்களுக்கு பிடிக்கலை அதனால அவங்களே டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டாங்க மூன்று வருஷம் ஆகிடுச்சு இந்த மதன் எங்க கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணி இருக்காரு என்னச் சொல்றதுன்னு தெரியலை ஆனால் அவங்க இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வேற ஒருத்தரை கல்யாணம் முடிஞ்சி வெளிநாட்டுக்கு போய்ட்டாங்களாம் இந்த விஷயம் பத்து நாளுக்கு முன்னாடித் தான் அவருக்கே தெரியும் எப்படி பாரு” என்று சொல்லி சிரித்தாள்.
ஆதிரைக்கு சிந்தியாவைப் பார்க்க வித்தியாசமாகத் தெரிந்தாள்.எப்போதும் எல்லாவற்றையும் தீவிரமாக ரொம்ப கவனமாக பேசுபவள் செய்பவள் இன்றைக்கு எல்லாற்றையும் எளிதாக அதுவும் புன்னகையோடு கடந்து இருப்பவளை ஆச்சரியமாக பார்த்தாள்.
ஆதிரை அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட சிந்தியா “என்ன ரொம்ப வித்தியாசமா தெரியுறேன்னா மதன் தான் காரணம் என்னோட மாற்றத்தை நீ பார்க்கனும் தான் உன்னை நேர்ல வரச் சொன்னேன் நீ தானே ரொம்ப ஆசைப்பட்டே இதோ பாரு” என்று கைகளை இரண்டு பக்கமும் விரித்து சுற்றிக் காட்டியவள் “அழகா இருக்கேனா” என்று சிறு பிள்ளையைப் போல் கேட்டாள்.
விழிகளில் ஆனந்தக் கண்ணீரை நிரப்பியபடி ஆமாம் என்று தலையசைத்துச் சொன்னாள்.
முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோழியர் இருவரும் இளம்வயது தோழிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.
சிறுபிள்ளைப் போல் சிந்தியா ஆதிரையின் கையைப் பிடித்து தட்டாமாலை சுற்றினாள்.அவள் பிடித்து சுற்றிய சுற்றில் தலையில் கைவைத்து ஓரமாக அமர்ந்தளைப் பார்த்து சிந்தியா சிரித்தப்படி “என்ன வயசாகிட்டு வருதோ?” என்று சொன்னாள்.
அவளைப் பார்த்து முறைக்க முடியாமல் தலையை கவிழ்ந்தப் படி இருந்தாள்.
சிந்தியா “உன் பொண்ணு எப்படி இருக்கா?நல்லா வளர்ந்துட்டாளா? பார்த்து ரொம்ப நாளாச்சே”என்றாள்.
ஆதிரை “நானும் இங்கே வந்து சேர்ந்ததும் போன் பண்ணனும்னு நினைச்சேன் இரு வீடியோ கால் பண்ணுறேன்” என்று தன் அன்னையின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
அவளின் அழைப்பை எடுத்தவர் “ஹலோ ஆதிரை ஊருக்கு நல்ல படியா போய்ட்டியாம்மா” என்று கேட்கவும் இவளும் “ம்ம்… நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டேன் வியன்கா எங்கேம்மா?”
“இதோ பக்கத்துல தான் இருக்கா”என்று தன் பேத்தியிடம் கைப்பேசியைக் கொடுத்தார்.
புன்னகை முகமாய் வாங்கியவளோ “அம்மா கேரளாக்கு போயாச்சா? ஜாலியா இருக்கீங்களா?” என்று ஆறு வயதுக் கொண்ட தன் மகள் கேட்கவும் அவளும் தன் பெண்ணை பார்த்தபடியே ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
பக்கத்தில் இருந்த சிந்தியாவைப் பார்த்த வியன்கா “ஆன்ட்டி பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க எங்க அம்மாவை விட” என்று சொல்லி சிரித்தாள்.
வியன்காவிடம் சிந்தியாவும் ஆதிரையும் பேசி சிரித்து கடைசியாக வியன்கா ஆதிரை தன்னை அடிக்கடி கைப்பேசியில் அழைத்து பேசி தொந்தரவு செய்யக் கூடாது என்ற ஒரு பெரிய உத்தரவை போட்டு விட்டு அழைப்பை துண்டித்தாள்.
அன்றைய நாள் இப்படியே பலகதைகள் பேசி சிந்தியாவின் உடைகள் சரியாக போட வேண்டியதை எடுத்து வைப்பதில் நேரம் சென்றது.
மாலை வேலையில் சிந்தியா தன்னோடு கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றாள்.
மணமக்களின் பெற்றோர்கள் ஒரு வண்டியிலும் இரண்டு பேரின் உடன் பிறந்தவர்கள் இன்னொரு வண்டியில் மதன்,சிந்தியா இவர்களோடு ஆதிரையிலும் தர்ஷனும் சேர்ந்துக் கொள்ள கூடவே குட்டிம்மாவோடு இன்னும் இரண்டு பிள்ளைகளும் சேர்ந்துக் கொண்டனர்.
இம்முறை மதன் காரை ஓட்டுவதால் சிந்தியா முன்னால் அமர்ந்திருக்க ஆதிரையும் தர்ஷனும் அவர்களுக்கு நடுவில் குட்டிம்மா தன் தோழிகளோடு அமர்ந்திருந்தாள்.பிள்ளைகள் எல்லாம் பேசி சிரிக்க இதைப் பார்த்து மற்ற மூவரும் சிரிக்க ஆதிரை தான் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து சிந்தியா தமிழில் சொல்வதற்கு முன்னாலேயே மதன் அவர்களுக்குள் பேசுவதற்கான அர்த்தத்தைச் சொன்னான்.அதைப் பார்த்த தர்ஷன் “நான் வேணும்னா போன்ல கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஆன் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று மலையாளத்தில் தான் கேட்டான்.
அவன் சொன்ன டிரான்ஸ்லேட்டர் வார்த்தையின் மூலம் புரிந்துக் கொண்டவள் விழிகளாலேயே அவனை எரித்து விடுவதைப் போல் பார்த்து முறைத்தாள்.இதைப் பார்த்த குனிந்து சிரித்தப்படியே திரும்பிக் கொள்ள சிந்தியாவோ “உன்னை பற்றி பேசுனா மட்டும் டிரான்ஸ்லேட்டர் தேவையில்லை போல” என்று அவளும் சேர்ந்துக் கொள்ள ஆதிரைக்குத் தான் என்னச் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
ஆனால் மதனோ “இவ்வளவு நேரமா எல்லோரும் பேசுனாங்கல்ல அதை வைச்சு ஓரளவு யூகிச்சாங்க என் தங்கச்சி” என்று அவன் ஆதரவு தரவும் ஆதிரை “ஆமாம் அதை வைச்சுத் தான் புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.
உடனே தர்ஷன் “தமிழை தலைகீழா எழுதினா மலையாளம் அவ்வளவுதான்” என்று சொல்லவும் அந்த நேரத்தில் ஒரே சிரிப்பாகத் தான் இருந்தது.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வரவும் எல்லோரும் துணி கடைக்குச் சென்றனர்.அப்போது சிந்தியாவின் கைகளைப் பிடித்த ஆதிரை மெதுவாக “ஹேய் யார்னே தெரியாதவங்க என்னை கிண்டல் பண்ணுறது சரியில்லை”
அவளோ சிரித்துக் கொண்டே “ஏன் யார்னே தெரியாதவங்கன்னு நினைக்கிற இன்றையிலிருந்து ப்ரெண்ட்ஸ் ஆகிக்கோங்க”
“அதெப்படி முடியும்?” என்று ஆதிரை யோசனையாகக் கேட்க சிந்தியா “ப்ச் ஆதி எல்லோரும் ஒன்றாக இருக்கப் போறது இந்த ஒருவாரம் தான் அப்புறம் எல்லோரும் அவங்க இடத்திற்கு போய்டுவோம் அப்புறம் நம்மளே நினைச்சாலும் இதே மாதிரி எல்லோரையும் ஒன்னு சேர்க்க முடியுமான்னு நினைச்சா கஷ்டம் தான் ஏன்னா அப்போ அவங்க சூழ்நிலை எப்படி இருக்கும்னு தெரியாது அதனால சிரித்து பேசி சந்தோஷமாக இந்த நேரத்தை புது உறவுகளோடு இருந்துட்டுப் போகலாம் சரியா அதனால எதையும் பெரிசா எடுத்துக்காதே எல்லாமே ஒரு நல்ல நினைவுகள் தான்” என்று சிந்தியா சொல்லவும் ஆதிரையால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
அவள் சொல்வதும் எல்லாம் உண்மை தானே.ஏன் தன்னால் இப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று நினைத்தவள் அவள் சொல்வது போல் இருந்து விட்டுப் போகலாம் என்று முடிவெடுத்தாள்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு தேவையான உடையை வாங்கத் தான் எல்லோரும் வந்திருந்தனர்.முதலில் மணமக்களுக்கு உடையை எடுத்து முடிக்கவும் அடுத்து மற்றவர்களுக்கு எடுத்தனர்.
அப்படி அவர்கள் உடை எடுக்கும் போதே ஆதிரைக்கும் சில துணிகளை வைத்துப் பார்த்தாள் சிந்தியா.
ஆதிரை “எனக்கு எதுக்கு வைச்சுப் பார்க்கிறே? நானே நிறைய பர்சேஸ் பண்ணிட்டேன்” என்றதற்கு “ப்ச் அமைதியா இரு ஆதிரை எல்லாத்துக்கும் கேள்வி கேட்காதே! அவரோட தங்கச்சிகளுக்கு எடுக்கிறதுக்காத் தான் கடைசியில் ஒரு இளஞ்சிவப்பு நீண்ட மேக்ஸியை எடுத்துக் கொண்டாள்.கடைசியில் எல்லோரும் மிகப்பெரிய குடும்பமாக ஒரு உணவகத்திற்குச் சென்றனர்.இவ்வளவு நபர்களோடு உணவருந்தச் செல்வதெல்லாம் ஏதோ வித்தியாசமாக இருந்தது.அவரவருக்கு பிடித்த உணவு அதை பண்டமாற்று முறையில் இரசித்து கருத்துச் சொல்லி சாப்பிட்டு சிரித்து பேசி பெரிய கும்மாளமிட்டு என்று அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.
மனம் முழுவதும் அழுத்தம் இல்லாமல் லேசாக இருக்கவே காரில் அமர்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.பயணம் முடிந்து வீட்டிற்கு அருகில் வரவும் சிந்தியா ஒரு முறை அழைத்ததும் விழித்துக் கொண்டாள்.எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சியும் சோர்வும் சேர்ந்துக் கொள்ள இன்னும் சில புதுஉறவுகள் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவர்களிடமும் விசாரிப்பு அறிமுகப்படுத்துதல் என இன்னும் கொஞ்சம் அந்த இரவை நீளப்படுத்தியது.அதோடு எல்லோரும் படுக்கச் செல்ல ஆதிரை தன் அறையில் உள்ள மெத்தையில் படுத்துக் கொண்டாள்.சிறிது நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து படுத்திருப்பதை போல் உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க அங்கே சிந்தியாவும் குட்டிம்மாவும் படுத்துக் கொண்டனர்.கீழே இன்னும் சில சிறு வயதுப் பெண்களும் படுத்துக் கொண்டனர்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் புதியதாக இருந்தது.யாருமே இல்லாமல் தனிமையில் இருந்தவளுக்கு ஏதோ சுற்றி எங்கிலும் அவளோடு இருக்க பலபேர்.அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கையையும் காலையும் மேலே போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் சிந்தியா.
அந்த கணமான அணைப்பினில் விழிகளை மூடியவள் அப்படியே தூங்கிப் போனாள்.திடீரென்று பதறியபடி விழித்தவள் நேரத்தைப் பார்க்க அது காலை ஐந்து மணியை காட்டியது.எப்போதும் எழுந்து பழக்கமானாதால் படுக்கையிலிருந்து எழ முயற்சிக்க இன்னொரு சின்ன பாதம் மேலே இருந்தது.யாரென்று பார்த்தால் குட்டிம்மா இவளோடு ஒட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்.
அவளையும் அவளுடைய அம்மாவையும் விலக்கி விட்டு கீழே அதை விட மோசமாக ஒவ்வொரு பக்கமாக கிடந்தவர்களை தாண்டி குதித்து குளியலறைக்குச் சென்று நேராக மொட்டை மாடிக்குச் சென்றாள்.
சில்லென்ற தென்றலும் விடிந்தும் விடியாத ஒரு வானிலையில் தூரத்தில் சிறிது சிறிதாக கூவிய குயிலின் கானத்தில் மெய்மறந்து கண்களை மூடியபடி நின்றவள்
இயற்கை தாயின் மடியில்
பிரிந்து எப்படி வாழ இதயம்
தொலைந்து சலித்து
போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து தெரிந்து
பறந்து… என்ற மெதுவாக பாடிய போது இம்முறையும் அங்கே புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தான்.
அவளைப் பார்த்து மெதுவாக இரு கைகளையும் தட்டி பாராட்டியபடி “வாவ் செமையா பாடுறீங்க ஆதி” என்றான் ஆங்கிலத்தில்.
அவளோ மெதுவாக “என்னன்னு அர்த்தம் தெரியாமலேயே பாராட்ட வந்துட்டாங்க” என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து கொஞ்சம் சத்தமாகவே தனக்குள் புலம்பினாள்.
அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.அவனோ அவளைப் பார்க்க அவளின் பார்வையில் கோபமும் திமிரும் தான் தெரிய வேறு எங்கோ பார்வையை நிலைத்து நின்றாள்.
“நான் பாராட்டினதுக்கு சின்னதா ஒரு தாங்ஸ் சொல்லலாமே!” என்றதற்கு சட்டென்று அவனைப் பார்த்து முறைத்தவள் “எனக்கு எந்தவிதமான பாராட்டும் தேவையில்லை” என்றாள்.

