Loading

அகம் 12

நள்ளிரவை எட்டிய சமயம்., கோட்டான்களின் சத்தம் கேட்க, அகனை பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அவந்திகை மனம் படபடவென அடித்துக்கொண்டது. வீட்டின் பூஜை அறைக்குச் சென்றவள், குலதெய்வ புடவையைத் தேடி எடுத்து அதை உடுத்திக்கொண்டாள். சாமிக்கு விளக்கேற்றியவள், விழிகள் மூடியிருக்க, அவளின் காட்டம்மன் ஊரின் எல்லையை அவளின் அக கண்ணில் காட்ட பயந்து போனவள், வீட்டிலிருந்து கிளம்ப முற்பட, ஜெயக்கொடி வந்து தடுத்தார்.

“இப்ப தான் கலியாணம் முடிஞ்சிருக்கு, நடுராத்திரி எங்கட்டி போற”

“எம்மா அகனுக்கு எதோ ஆபத்துமா” என அவந்திகை பதிலுறைக்க.,

“மருமகளே இப்போ நீ எங்கேயும் போக வேண்டாம், அகனுக்குக் கால் பண்ணி பார்க்கலாம்” எனச் சொன்ன காயத்ரி அகனை அழைக்க, அவன் செல்பேசி வீட்டிலே அவனுடைய அறையில் இருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போயினர்.

“சரிதான், பாரத்தியளா மைனி.?தாலியை கட்டிட்டு ராத்திரியோட, ராத்திரியா ஓடி போயிருக்கான்” எனப் பார்வதியும் அவர் பங்குக்குச் சேர்ந்துக்கொண்டார்.

“எத்தை செத்த சும்மாயிருங்க, அவியளுக்கு எதோ ஆபத்துன்னு நினைக்குதேன்” அவந்திகை எதோ விவரிக்க வர.

“அவி சொல்றது சரிதான்னு நினைக்குதேன், மாப்பிள்ளை அப்படிப் பட்ட ஆள் இல்லை” என முத்துவேல் மகளுக்காகப் பரிந்து பேசினார்.

“அண்ணேன் அவி சொல்லுதான்னு நீங்களும் கேக்குதியளா..? அவன் ஓடி தான் போயிட்டான்” என அழுத்தமாய்ப் பார்வதி சொல்ல,

“ஏட்டி அவி வா நம்ம போய்ப் பார்ப்போம்” என மன்னராசா அழைக்க நொடி கூடத் தாமதிக்காமல் அவன் பின்னே புறப்பட்டுச் சென்றாள் அவந்திகை.

வண்டுகளின் “க்ரீச் க்ரீச்” சப்தமும், கோட்டான்களின் சத்தமும், கேட்டுக்கொண்டிருக்க, ஒற்றைஅடி பாதையின் முடிவில் சாலை இரண்டாகப் பிரிந்திருக்க, ஒருபுறம் மன்னராசாவை அனுப்பியவள், ஊரின் எல்லையை நோக்கி இவள் ஓட ஆரம்பித்தாள்.

இயல்பிலே அசட்டுத் தைரியம் கொண்டவள் தான் அவந்திகை, அவளுக்கு எந்தப் பயமும் இதுவரை தோன்றியதே இல்லை, இந்த இருளிலும் எதோ பகலை போல் சாதாரணமாக நடந்து சென்றாள் பெண்ணவள்.

ஊர் எல்லையை அடையும் முன்னவே, நடுரோட்டில் கிடந்த அகனை அவள் பார்த்துவிட்டு இன்னும் வேகத்தைக் கூட்டினாள் அவந்திகை.

“அகன்..! அகன்.!” என்று அவளின் அலறல் அவன் செவிகளை ஏனோ எட்டவில்லை. அவள் அவனை நெருங்கிய தருணம், அகனை யாரோ ஏந்தி பிடித்தது போல் அந்தரத்தில், அவன் தொங்கிக் கொண்டிருக்க, அவந்திகை அதற்குப் பயம் கொள்ளாமல்,

“யாரது..? யார் நீ..!” கேள்வி எழுப்பினாள், அவள் கண்கள் ரத்த சிவப்பாய் இருக்க, சுற்றியுள்ள பகுதியை ஆராய்ந்தாள் அவந்திகை, திடுமெனக் கலகலவெனச் சிரிப்புச் சப்தம், அந்த மையிருட்டிலும் அவள் செவிகளை எட்ட,

“ஏய் எவாட்டி அது, என் புருசனை தூக்கி வச்சிகிட்டு பல்லை காட்டுதவ, எவளா இருந்தாலும் எல்லைய தாண்டி ஓடி போயாம்ட்டி” கோபமாய்ச் சாடினாள் அவந்திகை.

இந்த முறை சிரிப்பு சப்தமும், கொலுசொலியும் இணைந்து கேட்க.

“ஏம்ட்டி என்கிட்டையே பூச்சாண்டி காட்டுதியோ, என்னைக் கண்டா கொல்லிவாய் பிசாசுல இருந்து குட்டி சாத்தான் வரைக்கும் அரண்டு ஓடிரும், தைரியம் இருந்தா முன்ன வந்து நில்லுட்டி” தளராமலும் என்ன வருமோ அதை எதிர்கொள்ளலாம் எனத் தைரியோத்தோடு அவந்திகை நிற்க, மெல்ல அகனை இறக்கி வைத்தது அந்தச் சக்தி.

அங்கே கொட்டிக்கிடந்த பாரிஜாத மலர்கள் ஒன்றாய் சேர்ந்து அழகிய பெண் உருவம் எடுத்து அவந்திகை எதிரே நின்று, தன் முத்து முரல்கள் காட்டி சிரித்தாள் அந்தப் பெண், பார்ப்பதற்கே கொள்ளை கொள்ளும் அழகும் தேவ லோக பெண்ணைப் போலக் காட்சி தந்தவள், அழகாய் பட்டு உடுத்தி, அழகாய் மிளிர்ந்தவளின் விழி எனோ ரௌத்திரம் கொண்டது.

“சொல்லு யாரு நீ..?” கர்ஜிக்கும் சிங்கம் போல் நின்றாள் அவந்திகை.

“நான் ஒரு காவல் தேவதை” அந்தப் பெண் பதில் சொன்னாள்,

“உனக்கு என்ன வேணும், எதுக்காக என் புருசனை தூக்கிட்டு வந்திருக்க..?” என அவந்திகை கேட்க, அகனை கை காட்டி,

“இவன் தான்” எனச் சொல்ல, பின்னே மன்னராசா வருவதைக் கண்டு பட்டென மறைந்து போனது.

“ஏட்டி அவி, என்ன பண்ணிகிட்டு இருக்க, அண்ணேன் எதுக்கு இங்க வந்து கிடக்காவ தூக்குட்டி” என மன்னராசா திட்டிய படி அவந்திகையை நெருங்கியிருந்தான். அதன் பின் அருகில் இருந்த பொதுத் தண்ணீர் தொட்டியிலிருந்த குழாயை திருகி தண்ணீரை எடுத்து அகன் முகத்தில் தெளித்து, மயக்கத்தைத் தெளிய வைத்தான் மன்னராசா. எழுந்தவுடன் அவந்திகையைப் பார்த்தவன்.

“அவந்தி என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த..?” எனக் குழந்தையைப் போல் கேட்டவனைப் பார்த்து அதிர்ந்தே போனாள்.

“என்ன அகன் சொல்றீய, நான் உங்களை இங்க கூட்டிட்டு வரலை”

“அப்போ யாரு அவந்தி, நீ தான் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு” என அவன் சொன்னதை வைத்துச் சூழ்ச்சி இருப்பது போல் அவந்தியும், மன்னராசாவும் ஒரே நேரத்தில் உணர்ந்தனர்.

“சரி வாங்க அண்ணேன் வீட்டுக்குப் போய்ப் பேசிகிடுவோம்” என மன்னராசா சொல்ல, மூவரும் அந்த நள்ளிரவில் வீட்டை நோக்கி நடந்தனர்.

“அகன் இதைப் பத்தி எதுவும் வீட்ல பேசிகிட வேண்டாம், வெள்ளண விடியட்டும் பார்த்துகிடலாம்” என அவந்திகை சொல்ல சம்மதமாய்த் தலையசைத்தான்.

மூவரும் ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்துவிட,

“டேய் இனியன் எங்கடா போன..?” கோபமாய்க் கேட்டார் காயத்ரி.

“ம்மா சின்ன வாக் போயிருந்தேன்”

“நட்ட நடு ராத்திரில, எவனாவது வாக்கிங் போவனா” எனக் காயத்ரி திட்ட,

“அடியே அவி இதென்னட்டி, சாமி புடவையை எடுத்து கட்டியிருக்கவ, அதை உரிஞ்சி போட்டு, வேற சீலையை எடுத்து கட்டிக்க, கோயிலுக்குப் போன மட்டும் தான் இதைக் கட்டணும்” என ஜெயக்கொடி சொல்ல, அவந்திகை புடவையை மாற்ற தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

“சரி சரி மச மசன்னு எல்லாரும் நிக்காம, ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க” எனக் காயத்ரி சொல்லி விட்டு அகனை அவனறைக்குள் அனுப்பினார். அதன் பின் அனைவரும் உறங்க சென்று விட.,

மீண்டும் அகன் அறைக்குள் அவந்திகை நுழைந்தாள், அகனோ மிரண்டபடி அவளைப் பார்த்தான். அவளா..? அதுவா..? என்ற சந்தேகம் அவனுள் எழ, கண்ணிமைக்காமல் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அகன்..!” மெல்ல கிசுகிசுப்பாய் அழைத்தாள் அவள்.

“சரி தான் அதே தான்” என மௌனமாய்ப் புலம்பினான்.

“எக்ஸ்க்யூஸ்மீ நீங்க போயிட்டு, நான் தாலி கட்டின என் பொண்டாட்டிய அனுப்பி வைக்கிறிங்களா..?” அவந்திகையைப் பார்த்து அவன் பேச., அவந்திகை கலகலவெனச் சிரித்தாள்.

“அகன் நான் தான்..!”

“அதான் தெரியுதே நீ தான்னு, போம்மா போயிட்டு என் பொண்டாட்டிய அனுப்பி வைம்மா”

“அய்யோ அகன் ஏன் இப்படிப் பேசுதிய, நான் அவந்தி தான்” எனச் சொன்னவள் அவன் கையில் எதோ சிவப்பு நிற கயிற்றைக் கட்டினாள்.

“ஓ..! நீ தானா, ஆமா அவந்தி என்ன இது..?” கேள்வியாய் அவள் முகம் பார்த்தான்.

“இது சாமி சீலைல உள்ள நூலை வச்சு செஞ்சேன்,இதோ பார்த்தியளா நானும் கட்டியிருக்கேன், இனி எதுவும் நம்ம ரெண்டு பேரையும் நெருங்காது” அவள் உற்சாகமாய்ச் சொல்ல,

அதே சமயம் “அவி உள்ள வரலாமா..?” கதவை தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் மன்னராசா.

“வா லே.! எல்லாரும் உறங்கிட்டாவளா..?” கேள்வியாய் பார்த்தாள் அவந்தி.

“உறங்கியாச்சு, மாமாவும், அப்பாவும் சரக்கு இறக்கிட்டு மாடில மல்லாந்தாச்சு” எனச் சிரித்தபடி அவன் சொல்ல,

“என்ன லே சொல்லுத.? அப்பா குடிப்பாவளா..? பொய் சொல்லாத லே” என அவந்திகை புருவம் உயர்த்திக் கேட்க,

“ஆமாட்டி இப்ப அது தான் முக்கியம், என்ன எதுக்குட்டி வரச் சொன்ன”

“இருடே சொல்லுதேன்”

“அகன் நடந்தத ஒண்ணுவிடாம சொல்லுதியளா.? நான் உங்களை என்ன சொல்லி எல்லை வரைக்கும் கூட்டிட்டு போனேன்..?” என மும்மரமானாள் அவந்திகை.

“நீ ரூம்குள்ள வந்து, ஒரு இடத்துக்குப் போகலாம் கூப்பிட்டு, முன்னாடி போன, உன் பின்னாடியே வந்தேன், அப்ப எதோ பூ வாசணை வந்திச்சு, இது என்ன வாசனைன்னு கேட்டேன், மல்லிப்பூவான்னு கேட்ட, இல்லை வேற எதோன்னு சொன்னேன், அது பாரிஜாதம்ன்னு சொல்லிகிட்டே காத்துல காணாம போயிட்ட, அப்பறம் அங்க நிறையப் பூ கொட்டி கிடந்துச்சு அதுல யாரோ நடந்து போகுற மாதிரி கால் தடம் தெரிஞ்சுது, அதுக்கு அப்பறம் என்ன நடந்திச்சின்னு தெரியலை அவந்தி, உண்மைய சொல்லு, நீ சாமி ஆடின மாதிரி இதுவும் மேஜிக் தானே” என அகன் அப்பாவியாய் கேட்டான்.

“மன்ராசா..! கேட்டியா..? நம்ம ஊர் எல்லைல எதாவது இருத்குதாலே..?”

“பாரிஜாதப்பூவா..? இது புதுசா இருக்கேட்டி, பயலுவல்டா விசாரிச்சா தான் தெரியும், காலையில விசாரிச்சு சொல்லுதேன், நீங்க உறங்குங்க இதையே போட்டு குழப்பிட்டு இருக்காதட்டி, நாளைக்குப் பேசிகிடலாம்” எனச் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட,

“அப்போ என்னை அழைச்சிட்டுப் போனது நீ இல்லையா..?”

“நீங்க எதுவும் பயப்படாதீய, நமக்குத் தெய்வம் துணையிருக்கு” எனத் தன் கணவனைத் தேற்றினாள் அவந்திகை.

இருவரும் அங்கும் இங்கும் அலைந்த அசதியில் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உறங்கி போயிருந்தனர்.

*********************

விடிந்தும் விடியாமலும் இருந்த காலை வேலை பிரம்ம முகூர்த்ததில் விழித்து நீராடி, பூஜை அறையில், மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள் அவந்திகை. பூஜை அறையை நோக்கி வந்த சிவ சக்தி,

“எக்கா இந்நேரத்துல என்னைக்கா பூசை பண்ணிட்டு இருக்க..?”

“மனசு சரியில்லைட்டி அதான்” என அவந்திகை பதிலுறைக்க,

“எக்கா உனக்காகப் பனம்பழம் எடுத்து வச்சிருக்கேன் வேணுமா..?”

“வேணாம்ட்டி நீயே சாப்பிட்டுக்க” எனத் தங்கையின் மேல் உள்ள பாசத்தில் சொன்னவளின் விழிகளில் தானாய் நீர் வழிய ஆரம்பித்தது

“வாக்கா ஒரு பந்தயம் வச்சிகிடுவோம், நீ தான் மெட்ராஸூக்கு போயிருவ, பிறவு நான் யார் கூடப் பந்தயம் வச்சிகிடது” முகத்தை வாட்டமாய் வைத்துக்கொள்ள., அவளுக்கும் தங்கையுடன் கடைசியாய் ஒரு பந்தயம் ஆடிவிடலாம் எனவே தோன்றியது.

“சரிட்டி சக்தி கடுங்காப்பிப் போட்டு வச்சிட்டு வருதேன்” என அடுக்களைக்குள் நுழைய அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அகன், அக்காவும் தங்கையும் கிளம்பி போவதை பார்த்து தானும் பின்னே சென்றான்.

குறிப்பிட்ட தூரம் வரை பேசிக்கொண்டு சென்றவர்கள் ஒரு எல்லையை வகுத்து அங்கிருந்து பந்தயத்தைத் துவங்க, திடீரென இருவரும் ஓட ஆரம்பித்ததைப் பார்த்து திகைத்து போன அகன், தானும் ஓட ஆரம்பித்தான்.

அவந்திகையோ மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க, சக்தியின் பின்னே அகன் ஓடி வந்தான்.

“ஏய் சக்தி..!” ஒடியபடி அழைத்தான் அகன்.

“வாங்க மாமா.! என்ன ஜாக்கிங்கா..?” அவள் இயல்பாய் கேட்க,

“உங்களைப் பார்த்து தான் ஓடி வந்தேன், அவந்தி எங்க போறா..?” தீவிரமாய் அவன் கேட்க.,

“அவ கிணத்துல குதிக்கப் போறா மாமா” எனச் சிரித்தபடி சக்தி சொன்னாள்.

“ஏய் என்ன சொல்ற..?” எனப் பதறி போனவன், அவள் சிரித்ததைக் கவனிக்காது, ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டினான்.

“போங்க மாமா போய் அக்காவ பிடிச்சுகாட்டுங்க” எனச் சக்தி சொன்ன நொடியில், மனம் ஏனோ படபடத்தது, தன்னைத் திருமணம் செய்துக்கொண்டாதால் அவள் தற்கொலை முடிவை எடுத்துவிட்டாளா..? எனத் தவறாய் அகனின் அகம் கணக்கு போட, அவந்திகை அதற்குள் பனங்காட்டை அடைந்திருந்தாள், இந்த முறை அவள் தலைவிரிக்கோலத்தில் ஓடவில்லை மாறாக, அவள் கேசத்தை அழகாய் பிண்ணலிட்டு, மல்லிசரங்களைத் தொங்க விட்டிருந்தாள், அவளின் மஞ்சள் நிற புடவையில் சிவப்பு நிற பூக்கள பூத்திருந்தது, ஒயிலாய் ஓடிவந்தவளின் முகத்தில் முத்தாய் வேர்வை வர, முந்தானையை வைத்து துடைத்தபடி ஓடினாள், அவளின் நெற்றி விகிட்டில் குங்குமம் துலங்கியிருந்தது, இமைகள் படபடவென அடித்துக்கொள்ளத் திரும்பி பார்க்காமல் ஓடினாள் அவந்திகை.,

அங்கே வயலில் கதிர் அறுத்துக்கொண்டிருந்த பெண்கள் அவர்களை வித்தியாசமாய்ப் பார்க்க, கடைசியாய் கிணத்தை நெருங்கியிருந்தாள் அவந்திகை.

அவன் ஓடிச்சென்று அவளைப் பிடிப்பதற்குள், பொத்தெனக் கிணற்றில் குதிக்க, நொடி பொழுதுக்கூடத் தாமதிக்காமல், அகனும் குதித்திருந்தான். அவன் குதித்தை அறிந்தவள், நீரினுள்ளே சென்று தன்னவனை அவள் தேட, அவன் அவளின் கைகளில் பிடிபடவில்லை.

“அவிக்கா.! மாமாவும் உள்ள குதிச்சுட்டாவ”எனக் கிணற்றின் மேல்புறத்தில் நின்றபடி குரல் கொடுத்தாள் சக்தி.

“தெரியும்ட்டி அவியள தான் தேடிகிட்டு இருக்குதேன்” என நீரில் இருந்து அவள் தலையை வெளியே காட்டி கத்த, அதிரடியாய் அவள் முன் நீரை பிளந்துக்கொண்டு வந்து நின்றான் அகன்.

“நீங்க ஏன் குதிச்சிய..?” கோப முகம் காட்டினாள் அவந்திகை.

“நீ குதிச்சதால தான் நான் குதிச்சேன், உன்னைக் காப்பாத்த தான் குதிச்சேன்” அவன் பதில்கொடுத்தான்.

“மெட்ராஸ்காரவியளே.! எனக்கு நல்லாவே நீச்சல் தெரியும், உங்களுக்குத் தெரியுமா..?” நக்கலாய் அவள் சிரிக்க,

“சரிதான் உன்னைக் காப்பாத்த நான் குதிச்சேன் பாரு என்ன சொல்லணும்” என அவன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, இருவரும் சண்டையிட்ட கிணற்றின் படி ஏறி வர,

“எக்கா இப்போ எப்புடி பங்கை பிரிக்கிறது” சக்தி கேள்வியாய் நோக்க, அகன் புரியது விழித்தான்.

“நான் தானட்டி முதல்ல குதிச்சேன், முழுசும் எனக்குத் தான்” அவந்திகை வம்பு செய்தாள், இவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரியாமலே அமைதியாய் நின்றிருந்தான் அவன். அதன் பின் தான் அவனுக்குத் தெரிய வந்தது பனம்பழத்திற்காக இருவரும் பந்தயம் கட்டியிருப்பது.

“சரிட்டி சக்தி நீயே சாப்பிட்டுக்கோ” என வி்ட்டுக்கொடுத்தாள் அவந்திகை.

“எக்கா பிறவு என்னத்துக்குக் குதிச்ச..?” புரியாது விழித்தாள் சின்னவள்.

“நான் தான் ஊருக்கு போயிருவேன்ல, அதான் கடைசியா ஒருக்கா கிணத்துல குதிச்சேன், இவிய ஊர்ல எங்க கிணறு இருக்கப் போவுது” எனச் சலித்துக்கொண்டாள் அவந்திகை. அவள் சலித்துக்கொண்டதை பார்த்துப் புன்னகை சிந்தினான் அகன்.

“சரி்க்கா நீங்க பேசிகிட்டே வீட்டுக்கு வாங்க, நான் வீட்டுக்குப் போய்ப் பனம்பழத்தை சுடுதேன், மூணு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்” எனச் சொல்லி வேகமாய் ஓடிவிட.,

பனைமரக்காட்டில் மெல்ல நடந்தபடி இருவரும் பேசிக்கொண்ட வந்தனர், இருவரும் மொத்தமாய் நனைந்தே போயிருந்தனர், சூரியனின் ஒளி வீச்சில் இருவரும் இதமாய் உணர.,

“அவந்தி இந்த மாதிரி டேஞ்சரஸ் கேம்லாம் விளையாடத” எனச் சொல்லி அவள் விழி பார்த்தான்.

“ம்ம்ம்” என மௌளனமாய்த் தலையசைத்தாள் அவந்திகை.

“என்ன அவ்ளோ பிடிக்குமா அகன்.?” கனவுகள் தேங்கிய விழியுடன் அவள் கேட்க,

“பிடிக்கமா தான் தாலி கட்டியிருக்கேனா..? உன்னோட அசட்டு தைரியமும், அன்பை பொழியுற குணமும் பிடிக்கும் அவந்தி”

“சரிதான்” என அவள் சிரித்து வைக்க, அவள் இடையில் போட்டு தன் புறம் இழுத்தவன்.தன் சட்டை பையிலிருந்து எதோ பொருளை எடுக்க, வியந்து போனவள் கண்கள் விரிய தன்னவனைப் பார்த்தாள்.

“என்ன பாக்குற, இந்தக் கொலுசை தான தொலைச்ச..?”

“இதெப்படி உங்க கிட்ட..?” குழம்பினாள் பெண்ணவள்.

“கிணத்துக்கு அடியில கிடந்துச்சு” சாதாரணமாய்ச் சொல்ல,

“இது என்னோட கொலுசுதான்னு எப்படி உனக்குத் தெரியும்.? அவனைச் சந்தேகப் பார்வை பார்த்தாள்.

“ஏய் அவந்தி, உனக்குத் தாலி கட்டின புருசன்,முதல் தடவை, நீ தொலைச்ச பொருளை கண்டுபிடிச்சுக் கொடுத்திருக்கேன், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணா கூடப் பரவாயில்லை இத்தனை கேள்வி கேக்குற..?” எனச் சொன்னவன் அவள் நாசியில் தன் நாசியை வைத்து உரச.

“தள்ளி நில்லுங்க, இதென்ன உங்க ஊருன்னு நினைச்சியளோ..?” என அவனை விட்டு விலகி நின்றாள்.

“இவ்வளவு நேரம் நெருக்கத்துல நின்னப்ப எதுவும் சொல்லலையே அவந்தி.”

“அய்யோ அதை விடுங்களான், இந்தக் கொலுசு என்னோடதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்.? அதைச் சொல்லுங்களான்”

“அப்போ எனக்குப் பதினாறு வயசு அவந்தி, அன்னைக்கு என்னோட பொறந்த நாளும் கூட, அப்பா ஆசையா ஒரு நகைக் கடைக்கு என்ன கூட்டிட்டு போனாங்க, அன்னைக்கி எதோ சந்தோசமான தகவல் வந்திருக்குனு, ஒரே சந்தோசமா இருந்தாங்க அப்பா, என் பொறந்த நாளுக்குத் தான் செயின் எடுத்து தர போறாங்கன்னு அப்பா கூடப் போனேன்” என அவன் இடைநிறுத்த,

“பிறவு என்னாச்சு.?” அவந்திகை கேட்டாள், இருவரும் சுவாரசியமாய்ப் பேசியபடி நடந்துக்கொண்டிருந்தனர்.

“அப்பா நேரா தங்க கொலுசு இருக்கச் செக்‌ஷன்க்கு கூட்டிட்டு போனாங்க, அதுல நிறையக் கொலுசை காமிச்சு உனக்குப் பிடிச்சதை எடுன்னு சொன்னாங்க, எனக்கு இந்தக் கிளி டிசைன் போட்ட கொலுசு ரொம்பப் பிடிச்சிருந்தது, அப்பா அந்தக் கிளிய பார்த்து ஒரு மாதிரி சிரிச்சிட்டு, என்னையும் பார்த்தாங்க, இப்போ தான் எனக்குப் புரியுது, இந்தக் கிளிக்காகத் தான் அப்பா என்ன செலக்ட் பண்ண சொல்லிருக்காங்கன்னு” என அவன் சொல்லி முடிக்க.,

“எனக்காக இவ்ளோ செய்துருக்காவ அவியளவே திட்டிடேன்ல அகன்” எனக் குற்ற உணர்வை உணர்ந்தவளின் தோள் பற்றியவன்.

“உன் இடத்துல யாரா இருந்தாலும் அப்படித் தான் பேசிருப்பாங்க அவந்தி, சரி இதை நான் போட்டு விடவா..?” அவன் கேட்க, செவ்வரளியாய் சிவந்தவள் விழிகளிலே சம்மதம் தெரிவிக்க, ஒற்றைக் கால் கொலுசை அணிவித்து அவளின் கால்களில் முத்தமிட்டவன், நாசியைத் துளைத்தது பாரிஜாத பூவின் நறுமணம்.

“அவந்தி உனக்கு எதாவது வாசனை வருதா..?” மிரண்டு போய்ச் சொன்னான்.

“இல்லையே அகன்”

“எனக்குப் பாரிஜாத பூ வாசனை வருது” அவன் சொன்ன நொடியில்

கலகலவெனச் சிரிப்புச் சத்தம் விடாமல் ஒலிக்க, அவர்கள் நின்றிருந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்தே போயினர் இருவரும்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

    1. Author

      பயப்பட வேண்டாம் சிஸ்😊♥️ Good spirit than ❤️🦜 Thanks for sharing your view 😊😊