
06
மகிழுந்து பாட்டு சப்தத்தில் தான் அதிர்ந்து கொண்டிருந்தது. “ஹூ..லலல..” என்று பாட்டோடு சேர்ந்து தானும் கத்திய பிரம்மா, “அண்ணா நாம ரீச் ஆக இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?” என்று கேட்க,
“லேட் நைட் ஆயிடும் பிரம்மா” என்று சுடர் கூறினான்.
அவன் பார்வை பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் மீது அவ்வப்போது கோபம் போல் படிந்து மீண்டது.
‘வான்னு கூப்பிட்டா வரமாட்டா.. சரியான பயந்தாங்கொலி’ என்று செல்லமாய் மனதோடு அவன் அவளை வறுத்தெடுக்க,
‘வா வான்னா எப்படி வர? எல்லாரும் இருக்காங்க.. அதெப்படி நான் முன்னாடி அவரோட உட்கார்ந்துக்குறேன்னு கேட்க முடியும்?’ என்று தானும் அவனை வறுத்துக் கொண்டிருந்தாள், ப்ரீத்தி.
பின்னிருக்கையில் நடுவே அமர்ந்திருந்த பிரம்மா மட்டும்தான் பாட்டுக்கு ஏற்றவாறு ‘வைப்’ செய்துக் கொண்டிருந்தாள்.
விஷ்ணுவின் மனம், ஒருவித இனம் புரியாத படபடப்பை உணர்த்திக் கொண்டிருக்க, ப்ரீத்திக்கு தன்னவனைக் கோவப்படுத்துகிறோமே என்று வருத்தமாக இருந்தது…
“என்னடி ரெண்டுபேரும் மௌன ஊர்வலத்துல வர்ற போல வரீங்க? ஏ சுபி.. இதுங்க செம்ம போர் டி.. நீ வா” என்று பிரம்மா கூற,
சுடர் ‘இப்பவாவது வாயேன்டி’ என்று மனதோடு கேட்டுக் கொண்டான்.
“நான் முன்னாடி வர்றேன் சுபி.. நீ இங்க வா.. எனக்கு இவ பாடுறேன்னு பெயர்ல கத்துறதுக்கு தலை வலிக்குது” என்று விஷ்ணு கூற,
“அடிப்பாவி.. இவ பெரிய சின்னக்குயில் சித்ரா.. என்னைச் சொல்றா.. போடி” என்று பிரம்மா கூறினாள்.
‘ப்ச்.. வாய்ப்பு கிடைச்சாக்கூட மிஸ் பண்ணுறா’ என்று நொந்துக்கொண்ட சுடர், வண்டியை நிறுத்த, சுபிக்ஷா பின்னிருக்கைக்கும், விஷ்ணு முன்னிருக்கைக்கும் மாறினர்.
மீண்டும் ஆட்டம் பாட்டத்தோடு பயணம் தொடர, “விஷ்ணு.. ஆர் யூ ஓகே?” என்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, அமைதியாக அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் சுடர் கேட்டான்.
“அ..அம் ஓகே அண்ணா” என்று விஷ்ணு கூற,
“ஸ்யூர்? ஏதோ டல்லா இருக்கப்போல தெரியுதே.. உடம்புக்கு ஏதும் பண்ணுதா? வண்டி ஏதும் நிறுத்தனுமா?” என்று சுடர் கேட்டான்.
“இல்ல இல்ல அண்ணா.. அம் ஆல்ரைட்..” என்று விஷ்ணு கூற,
“தென் ஓகே டா” என்று கூறினான்.
சில நிமிடங்களில் விஷ்ணுவுக்குத் தூக்கத்தில் கண்கள் சொருக, பின்னிருக்கையில் ப்ரீத்தியைத் தவிர மற்ற இருவரும் தூங்கியிருந்ததைக் கண்டாள்.
“ப்ரீத்தி.. எனக்கு தூக்கம் வருது.. நீ முன்னாடி வரியா? நான் தூங்கினா அண்ணாக்கும் ஸ்லீப்பியா இருக்கும்” என்று விஷ்ணு கேட்க,
“ஓகே டா” என்று ப்ரீத்தி கூறினாள்.
மீண்டும் இடம் மாற்றப்பட்டு பயணம் தொடர, பின்னிருக்கையில் இருக்கும் மூவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டு, “ரொம்ப பண்றடி” என்று சுடர் கூறினான்.
“யாரு நானா? நீங்கதான்.. மூனு பேருட்டயும் என்னனு சொல்லிட்டு நான் வந்து உக்காந்துக்க முடியும்?” என்று ப்ரீத்தி கேட்க,
“இதுல என்னடி நினைக்கப் போறாங்க? அட்லீஸ்ட் சுபி பின்னாடி போகும்போதாவது வருவனு பார்த்தா அதுவும் இல்ல.. அவ்ளோ கஷ்டமா இருக்குல்ல என்கூட உட்கார்ந்துக்க?” என்று கேட்டான்.
“ப்ச்.. ஏன் இப்படிலாம் சொல்றீங்க? நான் அப்ப வரணும்னு தான் நினைச்சேன்.. அதுக்குள்ள விஷ்ணு சொல்லிட்டா.. நான் என்ன பண்ண முடியும்?” என்றவள் குரல் முற்றுமாய் குறைந்து ஒலிக்க,
தன்னை நிதானித்துக் கொண்ட சுடர் மௌனமானான்.
அவன் இன்னும் கோபமாக இருப்பதாய் உணர்ந்த ப்ரீத்தி, “சாரிங்க..” என்று அவன் தோளில் கரம் வைக்க,
அவளது நுனி விரல்களின் ஸ்பரிசம், அவனுள் பூந்தென்றலாய்…
“ப்ளீஸ்.. கோச்சுக்காதீங்க.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. என்னைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே.. சாரிப்பா” என்று ப்ரீத்தி இறங்கிய குரலில் கூற,
அவன் இதழ் பூவாய் விரிந்தது.
“உன்னைப் பத்தி எனக்கென்ன தெரியும்? நான் யாரு உனக்கு?” என வேண்டுமென்றே அவன் அவள் வாயைக் கிளற,
அவள் பதில் உரைக்கவில்லை.
அவள் மருண்ட விழிகள், அவன் மனம் கொய்வதாய்…
“என்னென்னமோ பண்ற ப்ரீத்தி” என்றவன், அவள் கரத்தை எடுத்துவிட்டுப் பெருமூச்சு விட,
அவளுக்குள் அழகிய ரசாயன போராட்டம்…
மௌனம் சில நிமிடங்களைத் திருடிக்கொள்ள,
“ஆஃபிஸ்ல மேடம்க்கு ப்ரபோஸல்லாம் வந்திருக்கும் போல?” என்று கேட்டான்.
அச்சத்துடன் நிமிர்ந்தவள், வேகமாய், “நா.. நான் நோ சொல்லிட்டேங்க..” என்று கூற,
“ச்சில்.. நான் இருக்கும்போது வேற யாரும் உன்கிட்டப் பேசக்கூடாது, உன்கிட்ட லவ் சொல்லக்கூடாதுனு சொல்ற அளவு நான் ஆல்ஃபா மேல் இல்லை” என்று கூறினான்.
“ச்ச ச்ச.. நீங்க அப்படியில்லைனு எனக்கும் தெரியும்..” என்றவள், “எ..எனக்கு உங்ககிட்ட சொல்ல பயமா இருந்துச்சு.. அதான்..” என்க,
“அவ்ளோதான் நம்பிக்கையா?” என்றான்.
“ப்ளீஸ் இப்படிலாம் சொல்லாதீங்க” என்றவளுக்குக் கண்கள் கலங்குவது போலானது.
“என்ன சொல்லி மறுத்த?” என்று அவன் தெரிந்துகொண்டே கேட்க,
“சொல்ல என்ன காரணம் இருக்கோ அதைச் சொன்னேன்” என்றாள்.
அவன் இதழ் பூவாய் மலர, கசங்கிய அவள் முகம் கண்டவன், அவள் கரம் பற்றிக் கொண்டு, அழுத்தம் கொடுத்தான்.
திடுக்கிட்டுப்போய் அவனைப் பார்த்தவள், பின்புறம் திரும்பிப் பார்க்க,
“எல்லாம் அடிச்சுப்போட்ட மாதிரி தூங்குறானுங்க” என்றான்.
“எழுந்துடப்போறாங்க விடுங்க..” என்று அவள் மெல்லமாய் கூற,
“ஹ்ம்.. நானும் ஆறு வருஷமா இதையேதான்டி கேட்குறேன்” என்று பெருமூச்சோடு கூறினான்.
அவளுக்கு சங்கடமாய் இருந்தது…
தன் பயத்தை நினைத்துத் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டாள்.
அவன் தன் கரத்தை எடுத்துக் கொள்ள, “ப..பரவால்ல பிடிச்சுக்கோங்க” என்று முயன்று வரவழைத்தக் குரலில் கூறினாள்.
“இருக்கட்டும் மேடம்” என்று அவன் கூற,
பின்புறம் ஒருமுறைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு, அவள் அவன் முட்டியில் கரம் வைத்தாள்.
புன்னகைத்துக் கொண்டவன், அவள் முகம் நோக்க, நாணம் மறைக்க முகம் திருப்பிக் கொண்டாள்.
“கியூட்..” என்று அவன் கூற,
“ச்சு.. சும்மா இருங்க” என்றாள்.
“சிரிங்க மேடம்” என்று அவன் கூற, அவள் இதழும் புன்னகை பூத்தது.
அந்த அமைதியான பயணம் தொடர்ந்து, அவர்கள் தங்கும் விடுதிக்கு வந்துவிட, இருவருமாய், மற்ற மூவரையும் எழுப்பி, அறைகளுக்குச் சென்றனர்.
பொதிகளை அடுக்கிவிட்டு, புத்துணர்ச்சி பெற்ற மற்றவர்கள் மீண்டும் படுக்கையில் விழுந்து, தூக்கம் தொடர, விஷ்ணு, அவ்வறை பால்கனியில் அமர்ந்து, இருள் படர்ந்தக் காட்டை வெறித்தாள்.
அந்த பச்சை நிற விழிகள் மீண்டும் அவள் மனதோடு வந்துபோக, இரவு நேரத் தென்றல் அவள் மேனியெங்கும் தீண்டி, குளிர் தடம் பதித்தது…
‘யார் நீ?’ என்ற குரல் அவள் மனதில் எழவும், ‘நிஜமாவே பேயா? அப்படி ஏதும் அந்தக் காட்டுல இருக்கா?’ என்று அவள் மனதோடு கேட்க,
அந்தக் காட்டில், அவள் விட்டுச் சென்ற ஓஜா போர்டில், அந்தக் கண்ணாடித் துண்டு, ஒரு பச்சைநிறக் கரத்தால் ‘yes’ என்ற இலக்கை நோக்கி நகர்த்தப்பட்டது…
மறுநாள் காலை அனைவரும் உற்சாகத்தோடு தயாராகி வந்தனர்.
கோயம்பத்தூரிலிருந்து, அவர்கள் பயணம் துவங்கியது.
ஆனைமலை!
கோவையிலிருந்து அவர்களது பயணம் ஆழியார் அணை நோக்கி சென்றது.
“கேர்ள்ஸ்.. ஆழியார் டேம் போறோம். அங்க போய் சுற்றிப் பார்த்துட்டு பக்கத்துல மங்கி ஃபால்ஸ் போய் குளிக்கலாம். குளிச்சு ஃப்ரெஷ் ஆயிட்டு ஹோட்டல் எங்கேயாவது போய் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு லோம் வ்யூ பாயிண்ட் போறோம். அங்க முடிச்சுட்டு ரிட்டர்ன் வந்து சாப்பிட்டுட்டு வால்பாறை டௌன் ஏரியா போயிடலாம். அங்க நைட் வாக் அன்ட் ஸ்ட்ரீட் ஃபுட்டோட இன்னிக்கு டே முடியுது” என்று சுடர் கூற,
“எங்க தங்குறோம் சுடரண்ணா?” என்று பிரம்மா கேட்டாள்.
“ஹோட்டல் தான்டா” என்று சுடர் கூற,
“ஃபாரெஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் இல்லையா?” என்று விஷ்ணு அதிருப்தியாய் கேட்டாள்.
“அங்க அவ்ளோ சேஃபா இருக்காது விஷ்ணு” என்று சுடர் கூற,
“நாங்க நாலுபேரும் லாஸ்ட் டைம் வந்தப்ப அங்கதான் தங்கினோம் சுடரண்ணா.. சேஃபாதான் இருந்தது” என்றாள்.
“ம்ம்.. அப்படி விட்டதாலதான்..” என்று ஏதோ கூறவந்த சுடர், வாயை மூடிக் கொள்ள, நால்வருக்குமே அவன் எதைக் கூறவந்து நிறுத்திக் கொண்டான் என்பது புரிந்தது.
ஒரு முழு நிமிட மௌனத்திற்குப் பின், “சாரி சுடரண்ணா” என்று விஷ்ணு கூற,
“ஃபாரெஸ்ட் ரெசார்ட் கிடைக்குமானு பாக்குறேன்” என்றான்.
“வேணாம் அண்ணா.. விடு” என்று விஷ்ணு கூற,
“பரவால்ல விஷ்ணு.. ஒரு வேகத்துல சொல்லிட்டேன்.. சாரி” என்று கூறினான்.
“விடு சுடரண்ணா..” என்று அவள் கூற,
“அய்யா சாமி ரெண்டுபேரும் விடுங்க.. சென்டியா போவுது.. என்ஜாய் பண்ண வந்துருக்கோம்” என்று சுபிக்ஷா கூறினாள்.
ஆட்டமும் பாட்டமும் ஓங்கி ஒலிக்க, “ஹே.. வெளிய பாருங்க காய்ஸ்.. வ்யூ செம்மயா இருக்கு” என்று ப்ரீத்தி உற்சாகமாய் கூறினாள்.
வாகனத்தை கவனமாக செலுத்திக் கொண்டிருந்த சுடர் அவ்வப்போது தன்னவளை ரசித்துக் கொண்டும் இருக்க, “சுடரண்ணா.. நான் வண்டி ஓட்டுறேன். நீ பின்னாடி வா.. வந்து கொஞ்ச நேரம் ச்சில் பண்ணு” என்று பிரம்மா கூறினாள்.
அவள் அருகேதான் ப்ரீத்தியும் அமர்ந்திருக்க, கரும்புத்தின்ன கசுக்குமா அவனுக்கு?
“ஓகே டா” என்று அவன் வண்டியை நிறுத்தி பின்னே சென்று அமர்ந்து கொண்டான்.
ஏனோ ப்ரீத்திக்குதான் அத்தனை வெட்கமாக இருந்தது.
“ப்ரீத்தி.. இங்கப் பாரேன்..” என்று வெளியே இயற்கையின் அழகை காட்டுவதாய் கூறி அவள் கரம் பற்றி இழுத்தான்.
அவன் மீது சாய்ந்தவளுக்குத்தான் உள்ளம் உதறலெடுக்கத் துவங்கியது.
யாரும் அறியா வண்ணம் அவனை முறைத்தவள், தன் கரத்தை விடுத்துக் கொள்ள,
அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை சிரிப்பு வந்தது.
அதே இதத்துடன் அவர்கள் ஆழியார் அணையை அடைந்தனர்.
“கேர்ள்ஸ்.. ஃபால்ஸ்ல குளிக்க ப்ளான் வச்சுருக்கேன்.. டேம்ல கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துட்டு ஃபால்ஸ் போகலாம்” என்று சுடர் கூற,
சரியென்ற கூவலோடு இறங்கினர்.
அணையின் சாலையில் இறங்கி நடந்த பெண்கள், நால்வரும் சுடரை புகைப்படம் எடுக்கச் சொல்லியே படாத பாடு படுத்தி விட்டனர்.
“செம்மயா இருக்குப்பா இந்த இடமே” என்று சுபி கூற,
தங்கையை அவள் அறியாது அழகாய் இரு ‘கேன்டிட்’ புகைப்படம் எடுத்து இன்னும் சந்தோஷப்படுத்தினான்.
ஆசைதீர புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் குரங்கு அருவியை நோக்கிப் பயணமாக, மகிழுந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தி அனுமதி சீட்டுக்கள் பெற்றுக் கொண்டு, ஐவரும் தங்கள் உடைகளை எடுத்துக் கொண்டு நடந்து சென்றனர்.
“ஹே சுடரண்ணா.. நாங்க போன முறை இங்கலாம் வரவே இல்ல.. ரொம்ப அழகா இருக்கு” என்று பிரம்மா கூற,
“ம்ம்.. சுபிட்ட நீங்க இங்கலாம் வந்தீங்களானு கேட்டுட்டுத்தான் ப்ளான்ல ஆட் பண்ணேன்” என்று சுடர் கூறினான்.
தன்னவனை காதலாய் பார்த்துக் கொண்ட ப்ரீத்தியும் தோழிகளுடன் இணைந்து கும்மாலமிடச் சென்றாள்.
அருவியில் ஆட்டம் போட்ட நால்வரையும் பார்த்து சிரித்த சுடர், “இதுக்கு ஏன் குரங்கு அருவினு பெயர் தெரியுமா?” என்று கேட்க,
நால்வரும் ‘ஏன்?’ என்பதைப்போல் அவனைப் பார்த்தனர்.
“உங்கள மாதிரி நாலு குரங்கு இப்படிக் கும்மாலம் போடுறதால தான்” என்று கூறி சுடர் சிரிக்க,
“சுடரண்ணா” என்று அவனது தங்கைகள் அதட்டலாகவும், அவனவள் பார்வையிலேயே மிரட்டலாகவும் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
ஐவருமாக புகைப்படம் எடுப்பது, துரத்திப் பிடித்து ஓடுவது, நீரை அள்ளித் தெளித்து விளையாடுவதென்று, மிக சாதாரணமாக சில மணி நேரங்கள் அங்கே கழிய, பசியை உணர்ந்த பிற்பாடுதான் காலை உணவை உண்ண வேண்டுமென்றே நினைவு வந்தது.
“எப்பா சாமி.. பசிக்குதுயா” என்று விஷ்ணு கூற,
“எனக்கும்”
“எனக்கும்”
“எனக்கும்” என்று பெண்கள் வரிசையாகக் கூறினர்.
“வாங்க போய் டிரஸ் மாத்திட்டுக் கிளம்பலாம்” என்று கூறிய சுடர் பெண்களை முன்னே அனுப்பி அவர்களை வழிநடத்திய படி பின்னே வந்தான்.
அவனுக்கு முன் சென்று கொண்டிருந்த ப்ரீத்தி, அவனைத் திரும்பிப் பார்க்க முகம் திருப்ப, கால் பாறை ஒன்றில் இடறி வழுக்கி விட்டது.
“அம்மா..” என்று சாயப்போனவள், சுடரின் கரம் பற்ற,
எதிர்பாராத நிகழ்வில், நிலையாக நிற்க இயலாமல் அவனும் அவளோடு சேர்ந்து நீருக்குள் விழுந்தான்.
இருவருமே நீச்சல் தெரிந்தவர்கள் என்றாலும்கூட, திடீரென்று அவர்கள் விழுந்ததில் தோழிகள் அனைவரும் பதறிப்போயினர்.
“ப்ரீத்தி.. சுடரண்ணா..” என்று சப்தம் போட்டபடி சுபி வர,
பயத்தில் நீந்த மறந்த ப்ரீத்தியை, அணைத்துப் பிடித்தபடி நீருக்குள்ளிருந்து எழுந்த சுடர், “ஒன்னுமில்ல சுபி” என்று தங்கைக்குக் குரல் கொடுத்தான்.
அவர்களை நெருங்கி வந்த தோழிகள்,
பயத்தில் கண்கள் மூடி சுடரை அணைத்துக் கொண்டிருந்த ப்ரீத்தியின் முதுகில் கை வைத்தனர்.
சுயம் பெற்று அவள் திடுக்கிட, “ஷ்ஷ்.. ப்ரீத்தி.. ஒன்னுமில்ல” என்று சுடர் கூறினான்.
அவன் குரலில் நிம்மதி எழுந்த அதே சமயம், அவனை அணைத்துக் கொண்டிருப்பது உரைத்து நாணத்தில் மீண்டும் உடல் அதிர, திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அவள் முகத்தில் ஒட்டியிருக்கும் கூந்தலை அவன் ஒதுக்கிவிட, “ப்ரீத்தி.. ஒன்னுமில்லடி” என்று பிரம்மா கூறினாள்.
“சுடரண்ணா.. உனக்கு ஒன்னுமில்லயே?” என்று விஷ்ணு கேட்க,
“எனக்கு ஒன்னுமில்லடா” என்று அழுத்தமாய் கூறினான்.
அதில் இலையோடிய குறும்பு ப்ரீத்தி மட்டுமே அறிந்தது..
கூச்சத்தோடு அவள் நகர எத்தனிக்க,
“இரு இரு.. பாறைல வழுக்கி மறுபடியும் விழுந்துடாத” என்று கூறி தானே அவளைத் தூக்கிவிட்டான்.
‘அய்யோ..’ என்று மனதோடு சிணுங்கியபடி, அவள் எழ,
தானும் எழுந்தவன், “அடி ஏதும் இல்லையே?” என்று கேட்டான்.
“அதெப்படி இருக்கும்? நல்லா உன் மேல இல்ல விழுந்துருக்கா’ என்று சுபி கேலி செய்ய,
“மேலலாம் விழுகலை” என்று ப்ரீத்தி கோபம் போல் கூறினாள்.
“ஆமா ஆமா. இழுத்துட்டுத்தான் விழுந்தாங்க மேடம்” என்று சுடரும் கேலியில் இறங்க,
அவனை முறைத்தவள், முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள்.
“மறுபடியும் விழுந்துடாதடி” என்றபடி தோழிகளும் செல்ல,
மந்தாகப் புன்னகை ஒன்றை சிந்தியபடி சுடரும் அவர்களைத் தொடர்ந்து சென்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1

