
காதணி விழாவில் கந்தனின் கேட்டரிங்கில் சமைத்த உணவை உண்ட வரதராஜர், கோபம் கொண்டு வெகுண்டார். தனது சம்பந்தியிடம் உணவைப் பற்றி முறையிட, அவரோ பேச முடியாமல் தடுமாறினார்.
தனது செல்லப் பேத்தியின் திருமணத்திற்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவர், திருமண விருந்தில் மட்டும் கோட்டை விட்டால், வந்தவர்கள் அனைவரும் அதைப் பற்றி மட்டும்தான் பேசித் தங்கள் வன்மத்தைக் கொட்டிச் செல்வார்கள். குறை மட்டுமே பெரிதாகத் தெரியும் அவர்களது கண்களுக்கு. அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றுதான் கல்யாண விருந்திற்குச் சிறந்த கேட்டரிங் சர்வீஸ் தேடி அலைந்தார்.
சுப்பிரமணி மூலமாக வந்த ஜனனிக்கு வாய்ப்புக் கொடுக்க நினைத்தவரை, ‘சொந்தம் அது இது’ என்று பேசி அந்த வாய்ப்பைக் கந்தரூபனிடம் கொடுக்க வைத்திருந்தார் அவரது சம்பந்தி.
ஆனால், அது பெரும் தவறென்று காதணி விழாவில் கந்தனின் சமையலை உண்ட பின் உணர்ந்தார். தன் சம்பந்தியைக் கடிந்தவர், சுப்பிரமணியிடம் சொல்லி ஜனனிக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கச் சொல்லிவிட்டார்.
சுப்பிரமணியும் உடனே நீலகண்டனுக்கு அழைத்து அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்தார். அவரும் ஜனனியிடம் சொல்ல, சிறு பிள்ளை போலத் துள்ளிக் குதித்தாள்.
நேராக அறைக்கு வந்தவள் முதலில் அழைத்தது என்னவோ இளாவிற்குத்தான்.
அவனும் அவளைக் காக்க வைக்காமல் உடனே அவளது அழைப்பை ஏற்று,
“ஓய் அன்னம்மா!” என்றான்.
“இளா! ஒரு ஹாப்பி நியூஸ்! என் கைமீறிப் போன ஆர்டர், மறுபடியும் எனக்கே கிடைச்சிருச்சு! அந்த ஆர்டரை எனக்கே தந்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா! என்னால நம்பவே முடியல… எனக்கு அந்த ஆர்டர் கிடைக்கும்னு நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்றாள் அந்த ஆர்டர் கிடைத்த உற்சாகத்தில்.
“நீ எவ்வளவு சந்தோஷமா இருக்கேனு எனக்குத் தெரியுது அன்னம்மா! இருபது வயசு குறைஞ்சு, ஒன்பது வயதுக் குழந்தை போலக் குதிக்கிறதுலயே தெரியுது உன் சந்தோஷத்தோட அளவு!” அவன் சொன்னதும் இவளுக்கும் அப்படித்தான் தோன்றியது.
குழந்தை போலத் துள்ளிக் குதித்ததை நினைத்துத் தன்னை நினைத்தே தலையில் அடித்துக் கொண்டாள்.
“ரொம்பக் கஷ்டமா இருந்தது இளா! கைக்கு வந்த வாய்ப்பைப் பறிச்சுட்டானேனு கோபம், அழுகை, ஆத்திரம் எல்லாம் வந்தது. அந்த ஆளை நல்லாக் கேட்கணும் போல இருந்தது. ஆனா கேட்க முடியல… நம்ம தலையெழுத்துனு விட்டுட்டேன். இப்படி அந்த ஆர்டர் எனக்கே வரும்னு எதிர்பார்க்கல இளா!” என்று மனதில் உள்ளதை அவள் அவனிடம் பகிர, அவளது சந்தோஷம் அவனைத் தொற்றிக்கொண்டது.
புன்னகையுடன் கேட்டுக்கொண்டே வந்தவன் அவளிடம்
“அன்னம்மா! இந்த உலகத்துல உனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் இன்னொருத்தர் பறிச்சுக்கிட்டாலும், உன் கையை விட்டுப் போனாலும் அது உனக்கு இல்லைனு ஆயிடாது. நிச்சயம் ஒரு நாள் அது உன்னை வந்து சேரும். அது எத்தனை வருஷங்களானாலும், மாதங்களானாலும் கண்டிப்பா உன்னை வந்து சேரும் அன்னம்மா! இதோ உன் கைக்கு வர வேண்டிய ஆர்டரைத்தான் அவன் பறிச்சுட்டான் சொன்ன… இப்போ உனக்கே வந்து சேரலையா? அதேதான்! பீல் பண்ணாம, இந்த ஆர்டரை எப்படிச் சிறப்பா செய்யலாம்னு யோசி! இந்த ஒரு ஆர்டர் மூலமா இனி உனக்குப் பல ஆர்டர்கள் கிடைக்க என்ன பண்ணலாம்னு சிந்தி! வேண்டாத சிந்தனை எதுக்கு இப்போ? இந்த ஆர்டரைப் பற்றி மட்டும் யோசி அன்னம்மா!” என்று நண்பனாக அறிவுரை தந்து தட்டிக் கொடுத்தான். அவனுக்குப் பெரும் ஆதரவாக இருந்தது. புதுத் தைரியம் பிறந்தது போல இருந்தது.
“இதை நீ என் பக்கத்துல இருந்து சொன்னா இன்னும் கொஞ்சம் தைரியம் கிடைக்கும் எனக்கு இளா!” என்று தன்னை மீறி மொழிந்திட, அவ்வளவுதான்! அவன் அங்கே இல்லை; விண்வெளி தாண்டி எங்கோ சென்றான்.
“சீக்கிரமா வந்துடுவேன் அன்னம்மா… நான் வந்ததுக்கப்புறம் உனக்கு எல்லாமே நான்தான்,” என்றான். அவளோ அவனது கூற்றில் இருந்த மறைபொருளை ஆராயவில்லை.
சிரித்துக் கொண்டே, “காத்துட்டு இருக்கேன் செஃப்பே… சீக்கிரமா வா!” என்றாள்.
‘ஐ லவ் யூ அன்னம்மா!’ என வாய் வரை வந்ததை ஏக்கமாக விழுங்கியவன், மேற்கொண்டு வேறு பேச்சிற்குத் தாவினான்.
“அப்புறம் விபு கிட்ட சொல்லிட்டீயா? என்ன சொன்னான் உன் பிரண்ட்?” என்றான்.
“இன்னமும் சொல்லலடா! உன்கிட்டதான் முதல்ல சொல்றேன்… இனிமேல்தான் அவனுக்குப் போன் பண்ணனும்,” என இவள் சாதாரணமாகச் சொன்னாலும், அவளது சந்தோஷத்தைத் தன்னுடன் முதலாவதாகப் பகிர்ந்து கொண்டதே ஏதோ தலையில் கிரீடம் வைப்பது போல் இருந்தது அவனுக்கு.
இதைத்தானே அவனும் அவளிடம் எதிர்பார்க்கிறான்! அவளைப் போல அவனும் இச்சிறு விஷயத்திற்காகத் துள்ளிக் குதித்தான்.
அவனை வெகு நாட்களாகப் பார்க்க முடியாத தவிப்பில் அவனைத் தேடி வந்த மித்ராவின் கண்களில் அவன் மகிழ்ச்சியாக இருப்பது விழ, இவளுக்குக் கோபம் பழியாக வந்தது!
அன்று தன்னை அடித்ததற்காகத் தன் நண்பர்களை வைத்து இளாவை அவமானம் செய்திருந்தாள். இரண்டு நாள் அவன் மீது கோபமாக இருந்தவள், கோபம் குறைந்து அவனிடம் பேசச் செல்லும் வேளையில்தான் அவளது தந்தை அனுப்பிய, நாற்பத்தைந்து வயது நிறைந்த கண்மணி வேலைக்கு வந்து சேர்ந்தார்.
அதுவும் மித்ராவைப் பார்த்துக்கொள்ள, அவளைக் கண்காணிக்க, அங்கு நடப்பதை வெங்கடராமனிடம் சொல்லவே கண்மணியை அங்கு அனுப்பி வைத்தார். அவரை கண்டதும் இளாவிற்குப் பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது.
இனி சமையல் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று நிம்மதியடைந்தான். ஆனால் மித்ராவிற்கு அவரைப் பிடிக்கவில்லை; தந்தையின் கட்டளைக்காக அவரை ஏற்றுக்கொண்டாள்.
வந்த இரண்டு நாட்களிலேயே பஞ்சுவிடம் உரிமையாகப் பேசுவது போல் பாசம் காட்டும் இளா, கண்மணியிடமும் ‘அக்கா’ என்று விளித்துக்கொண்டு அவரோடு ஒட்டிக்கொண்டான். யாருமில்லாத அவனுக்குச் சொந்தமில்லாத இவர்கள்தான் உறவுகளாகத் தெரிந்தனர்.
கண்மணி, விபத்தில் தன் குடும்பத்தை இழந்து தனியாக நிற்பவர். துபாயில் வீட்டு வேலை செய்ய வந்திருந்தார். தன்னிடம் பல வருடங்கள் வேலை பார்த்தவரைத்தான் மகளைக் கண்காணிக்க அனுப்பி வைத்திருக்கிறார் தந்தை.
கண்மணி வந்தபின் சமையலறை தாண்டி வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இளாவிற்கு! மித்ராவிற்குத் தேவையான அனைத்தையும் கண்மணியே செய்திட, இவனுக்கு அவளைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. அதுதானே அவனுக்கும் வேண்டும்! அதுவே எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அன்னம்மாவுடன் தினமும் சந்தோஷமாகப் பேச வைக்கிறது.
கண்மணியைத் தாண்டி மித்ராவால் இளாவிடம் பேச முடியவில்லை. வசந்தியும் முயற்சி எடுக்க, அவரையும் அடக்கிவிட்டார் கண்மணி!
கண்மணிக்குத் தெரியாமல் அவனைப் பார்க்க வந்தவள், அவன் இன்னொருவருடன் அலைபேசியில் கதைப் பேசுவதை கண்டு புருவங்கள் சுருங்கப் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
மித்ரா பார்த்துவிட்டுச் செல்வதை அவன் கவனிக்கவில்லை; சந்தோஷமாக அவனது அன்னம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான் இளா.
நாட்கள் உருண்டோட, ஜனனி சமைக்க வேண்டிய நாளும் வந்தது. வாழ்க்கை அவளுக்கு அளித்த பெரிய ‘டாஸ்க்’ போல அது இருந்தது.
அரண்மனை போன்று இருந்த பெரிய மண்டபத்தில் வரதராஜர் சொன்னது போல ஆட்கள் வழிந்து கொண்டிருந்தார்கள். முதலில் வாயைப் பிளந்த ஜனனி, தன் மாமனாரையும் தன்னிடம் வேலை செய்யும் ஆட்களையும் பயத்துடன் பார்த்தாள்.
வயது முதிர்ந்து அனுபவமிக்க அவர்களோ, தன் முன்னே குழந்தை போலப் பயந்து நிற்கும் அவளுக்கு நம்பிக்கை தந்தனர். அவளும் அவர்கள் அளித்த நம்பிக்கையுடனேயே சமையலைத் தொடங்கினாள்.
முதல் நாள் வரவேற்பு, மறுநாள் கல்யாணம் என்ற ரீதியில் இரண்டு நாளும் சொந்தங்கள் நிறைந்திருந்தனர். முதல் நாள் வரவேற்பில் வகைவகையான உணவுகளைச் செய்து வாழை இலையை நிறைத்துவிட்டார்கள் ஜனனி கேட்டரிங் சமையல்காரர்கள்.
இளநீர் இட்லியிலிருந்து ருமாலி ரொட்டி என வகை வகையான பெயர்களைச் சொல்லி இலையை மட்டும் நிரப்பாமல், வயிற்றையும் மனதையும் நிரப்பித்தான் அனுப்பி வைத்தனர்.
கந்தரூபனிடம் ஒப்படைத்த ஆர்டரைத் திரும்ப வாங்கிக் கொண்டாலும், சொந்தம் என்கிற ரீதியில் அவனையும் அவனது குடும்பத்தையும் அழைத்திருந்தார் வரதராஜர்.
முதலில் அவமானப்பட்ட இடத்திற்குப் போக வேண்டாம் என்றுதான் எண்ணியிருந்தான். பிறகு ஜனனி கேட்டரிங் சர்வீஸ் பெரிதாக என்ன செய்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே வந்திருந்தான்.
அவனும் பந்தியில் அமர்ந்திருந்தான். முதல் நாள் வரவேற்பிற்கு வந்தவனுக்குத் தலையாய வேலையாக ஜனனி கேட்டரிங் சர்வீஸ் ஆட்களையும் அவர்கள் செய்யும் வேலையையும் கவனிப்பது மட்டுமே! சமையல் தளத்திற்கு வந்தவனின் கண்களில் என்னவோ முந்தானையை இடுப்பில் சொருகியபடிப் பரிமாறும் ஜனனிதான் தென்பட்டாள்.
விளம்பரத்துக்காக இன்ஸ்டாகிராம், யூடியூப், முகநூல் என அனைத்திலும் கணக்குத் தொடங்கி, இது போன்று முதலாளிகள் இறங்கிச் சமைப்பதும் பரிமாறுவதும் போலப் பல வீடியோக்கள் எடுத்து, அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுத் தங்கள் தொழிலைப் பரப்பிடும் வேலைகளில் இறங்கியது போலத்தான் ஜனனியும் செய்கிறாள் என்று எண்ணிக்கொண்டான்.
அவளைச் சலிப்பாகப் பார்த்தபடி:
“ஐயோடா! ஆர்டருக்காக வேட்டியை மடிச்சுக் கட்டி குழம்பைக் கிண்டுறது மாதிரி வீடியோ எடுக்குறதும், இடுப்புல புடவையைச் சொருகிப் பரிமாறுறது போல எடுக்குறதும் முடியலடா சாமி! இந்த விளம்பரமெல்லாம் இவனுங்களுக்காக இல்ல இவனுங்க கேட்டரிங்குக்காகவான்னே தெரியல! பார்ப்போம் என்னதான் சமைச்சு வச்சிருக்காய்ங்கன்னு,” என்று இலையை விரித்துத் தண்ணீரைத் தெளித்து வைத்தான்.
இனிப்பில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரிசையாக வைத்துக் கொண்டே வந்தனர் கேட்டரிங் சர்வீஸ் பணியாட்கள். அவர்கள் வரிசையில் பன்னீர் பட்டர் மசாலா ருமாலி ரொட்டிக்காக ஊற்றிக்கொண்டு வந்தாள் ஜனனி.
அனைவருக்கும் சிரித்த முகத்துடன் வைத்துக் கொண்டே வந்தவள் இவனைக் கண்டதும் கை தானாக நின்றது.
அவனோ நிமிர்ந்து பார்த்து இளித்து வைத்தான். அவளோ அவனைக் கண்டதும் முறைக்கவும் இல்லை, சிரிக்கவும் இல்லை. என்ன செய்வதென்று விழிக்க:
“என்னங்க பார்க்குறீங்க! நான் எதிரியா வரல… இரண்டு வீட்டுச் சொந்தக்காரனா வந்திருக்கேன். அந்தப் பன்னீரை கொஞ்சம் வச்சுட்டுப் போங்க,” என்றான் விறப்பாக.
ஆனால் தன்னை வார்த்தைகளால் கேலி செய்வாளோ, நக்கலாகச் சிரித்துவிட்டுச் செல்வாளோ என்ற பயம் அவனுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது. மாறாக, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது ரொட்டி அருகே பன்னீர் மசாலாவை ஊற்றிவிட்டுப் போனாள். அவனும் அவளை வித்தியாசமாகப் பார்த்தபடி உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.
அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐயோடி… என்ன ருசி?! இந்த அளவுக்கு ருசியா சமைச்சா திமிரா இருக்க வேண்டியதுதான்… பொறாமையா இருக்கே ரூபா!’ தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
அறுசுவைகள் கொண்ட விருந்தாக இருந்தது. அவனும் ருசித்து ருசித்துச் சாப்பிட்டான். தந்தையின் கேட்டரிங் சர்வீஸில் இப்படிச் சாப்பிட்டு வெகு நாட்களுக்குப் பின் இப்போது சாப்பிடுகிறான். தந்தையின் நினைவு வந்தது அவனுக்கு.
வயிறாரச் சாப்பிட்டுத்தான் எழுந்தான். அன்றிரவே அவளிடம் பேச நினைத்தான். ஆனால் அவளோ வேலையில் சுழன்று கொண்டிருக்க,
“நாளைக்குப் பேசிக்கொள்ளலாம்” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
மறுநாள் காலையிலும் மதியமும் அவர்கள் ‘சரி’ என்று சொன்ன மெனுவைத் தான் சமைத்தனர்.
மக்கள் அடுத்த நாள் பந்தியில் என்ன சமைத்திருப்பார்கள் என்ற ஆவலுடனேயே சாப்பிட வந்திருந்தனர்.
அளவான நெய் விட்டு குழைந்த பொங்கல், அதற்கேற்ற சாம்பார் வடை, பூப்போன்ற இட்லியும் தக்காளிச் சட்னி, தோசை அதற்கு ஏற்ற சட்னி வகைகள், பூரி கிழங்கு என்று அசத்தியிருக்க…
மதியத்துக்கு வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், மூன்று காய்கறி கூட்டு தயாராகிக் கொண்டிருந்தன.
காலையில் சாம்பார் வாளியைத் தூக்கிப் பரிமாறிக் கொண்டிருந்தார் நீலகண்டன். அவர் பரிமாறுவதைக் கண்ட ஜனனி வேகமாக அவரிடம் வாளியை வாங்கினாள்.
“என்ன மாமா நீங்க போய் இதெல்லாம் பண்ணிட்டு?” எனப் பதறினாள்.
“ஏண்டா மா, நான் பண்ணினா என்ன? இதுவும் நம்ம வேலைதானே! நம்ம வேலையை நாம பார்க்குறதுல என்னடா இருக்கு?” என்றார்.
“நம்ம வேலைதான் மாமா! அதுக்காக நீங்க பார்க்கணும்னு இல்லை… நீங்க வேலை எல்லாம் சரியா நடக்குதான்னு மேற்பார்வை பாருங்க. வெயிட் எல்லாம் நீங்க தூக்கி வேலை செய்ய வேண்டாம்,” என்று பிடிவாதமாக மறுக்க…
“இதெல்லாம் ஒரு வெயிட்டா ஜனனிம்மா! நானும் சின்னச் சின்ன வேலை செய்றேனே!” எனக் கெஞ்சினார்.
“நோ மாமா! நீங்க வெயிட் தூக்கக் கூடாது. நீங்க மேற்பார்வை மட்டும் பாருங்க!” என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு வாளியை வாங்கிக்கொண்டு செல்ல, அவரது கண்கள் பனித்தன. அமெரிக்காவில் பேரனைத் கீழே வைத்து தூங்கி வைத்திருக்க சொல்லும் மகளின் கட்டளைக்கு இணங்கத் தூக்கிச் சுமந்தவருக்கு, மருமகள் தெய்வமாகத் தெரிய கண்ணீர் வந்தது. துடைத்துக்கொண்டு கவனிக்கச் சென்றார்.
தூரத்திலிருந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த கந்தரூபனுக்கு இவர்கள் உறவு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசை!
மணமக்களை ஆசீர்வதித்துப் புகைப்படங்கள் எடுத்த கையோடு சாப்பிட வந்தனர். பந்தி நடக்கும் இடம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
சாம்பார், மோர், கூட்டு எனக் கேட்ட வண்ணம் இருந்தனர். விபுவும் அவர்களுடன் இணைந்து பரிமாறினான்.
“விபு!! சண்டே ஒரு நாள்தான் லீவு உனக்கு! ஜோ கூட இருக்காம இங்க என்னடா பண்ற?” என்று தன் நண்பனைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் ஜனனி.
“உன் அருமைத் தங்கை! ரெக்கார்ட் நோட்டுதான் என் லவ்வர்! அவனோடதான் டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறேன். நீ என்னை தொந்தரவு செய்யாதேன்னு துரத்தாத குறையா வெளிய அனுப்பிட்டா! அதான் இந்த ஒரு நாளைக் கடத்த, என் வயித்தை நிரப்ப இங்க வந்துட்டேன். என்னை நீ எதுவும் சொல்லக் கூடாது,” என்று தான் வேலையைச் செய்ய, ஜனனி தலையில் அடித்துக் கொண்டாள்.
இலையில் உணவு குறையக் குறைய நிறைத்த வண்ணமே இருந்தனர். ‘போதும்’ என்ற வார்த்தையோடு இலையை மூடிய பின்னர்தான் விட்டனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

