
இதயம்-7

அந்த அறையில் மிக கனமான நிசப்தம் மட்டுமே ஆட்சி செய்துக் கொண்டிருந்தது.
ஏசியின் காற்றுக்கு மென்மையாய் திரைச்சீலைகள் அசைந்துக் கொண்டிருந்தது. ஏனோ அந்த நிசப்தமே அவளை ரொம்பவே பயமுறுத்துவதாய் இருந்தது. கண்களில் பயத்தைத் தேக்கியபடியே எதிரில் கண்ணாடி குவளையிலிருந்த பழச்றைப் பார்த்தாள் சம்யுக்தா.
எதிரில் அவளின் காதலன் ஆகாஷ். அவளை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்க, இவளுக்குள் மிரட்சி வந்து போனது.
“ஜூஸைக் குடி சம்யூ! ஏன் பயப்படறே? என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“இல்லை..! வேணாம்!”
தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளிவர மறுத்தது. பறத்தில் குரல் நடுங்கியது அவளுக்கு. ஏதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.
“நீ ஜெயிலுக்குப் போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆகாஷ்! எனக்கு எதுவுமே தெரியாது.”
“ஓ! உன் அண்ணன் செஞ்சது உனக்கும் தெரியாது. உன் அப்பனுக்கும் தெரியாது. இதை நான் நம்பணும்.!”
“இல்லை நிஜமா.. எனக்கு ஒண்ணுமே தெரியாது..!”
“நல்லா கதை சொல்ற சம்யூ! நீ லவ் பண்ணுற மாதிரி பண்ணுவே, உன் அண்ணன் என்னைப் போலீசில் பிடிச்சுக் கொடுப்பான். உன் அப்பன் பதிலே பேசாமல் வாயை மூடிக்கிட்டு இருப்பான். இதெல்லாம் உனக்கு தெரியவே தெரியாதுன்னு நான் நம்பணும் அதானே?” நக்கல் தெறித்தது ஆகாஷின் குரலில்.
“நிஷா..! நீயாச்சும் நான் சொல்றதைக் கேளேன்.!” இன்னொரு இருக்கையில் அமர்ந்திருந்த நிஷாவைப் பார்த்துக் கேட்டாள் சம்யுக்தா.
“நம்பற மாதிரி எதையாவது சொல்லு சம்யூ! உன் அண்ணன் அந்தச் சாமியார் கிட்டெல்லாம் நான் பேச்சு வாங்கினதுக்கு காரணம் நீ தான். உன் ஃப்ரெண்ட்ஷிப்க்காக மட்டும் தான் இத்தனை நாளும் நாங்க பொறுமையாய் இருந்தது. இனிமே அதெல்லாம் முடியாது.!”
“சூப்பர் நிஷா! இப்போ தான் என் தங்கச்சின்னு நீ ப்ரூவ் பண்ணுறே! இப்போவே படத்தை ரிலீஸ் பண்ணிருவோமா?”
“சீக்கிரம் பண்ணு ஆகாஷ். அந்த சட்ட மந்திரியோட மானம் காத்தாடி மாதிரி காற்றில் பறக்கட்டும்.!” நிஷாவின் இதழ்ளில் வழிந்த புன்னகை சம்யூவிடம் கசந்த முறுவலைத் தோற்றுவித்தது.
‘தான் உற்ற தோழியாக நினைத்தது இவளைத்தானே? ஆனால் இத்தனை நாளும் பல்லைக் காட்டிப் பேசிவிட்டு, இப்போது தன் அண்ணனுக்கு ஒன்றென்றதும், ஒட்டு மொத்த விஷத்தையும் கக்குகிறாளே? இவள் அண்ணன் என்ன உலக மகா உத்தமனா?’ மனதிற்குள் கேள்வி எழ, காலம் கடந்த ஞானோதயம் வந்து தொலைத்தது சம்யுத்தாவிற்கு.
“இப்போ என்ன தான் செய்யணும் நிஷா? அப்படி அந்த வீடியோவில் என்னதான் வச்சிருக்கீங்க?” கொஞ்சமே கொஞ்சம் கோபம் சம்யூவின் குரலில் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
“ஹேய்! ஆகாஷ் இவளுக்கு கோபமெல்லாம் வருது பாரேன். உனக்குக் கோபமெல்லாம் வரக்கூடாதும்மா! இங்கே பாரு எங்கக் கிட்டே இருக்கிற வீடியோஸை வச்சு, ‘சட்டத்துறை அமைச்சரின் மகள் போதையில் உல்லாசம்’ அப்படின்னு ஹேஷ் டேக் போட்டு, நெட்டில் விட்டுடுவோம் பார்த்துக்கோ!” எனச் சொன்ன நிஷா,
அலைபேசியில் அந்தக் காணொலிக் காட்சியை இயக்கி சம்யுக்தாவின் முன் வைத்தாள்.
அந்த அலைபேசியின் திரையில் தெரிந்த காட்சிகள், சம்யுக்தாவின் உயிரை ஒட்டுமொத்தமாய் நடுநடுங்கச் செய்தது. கண்கள் கலங்கி, கண்ணீர் காட்சிகளை மறைத்தது.
“நீ நிஜமாவே என் ஃப்ரெண்ட் தானே நிஷா? ஏன் இப்படியெல்லாம் செய்றே? நீயும் ஒரு பொண்ணு தானே.?”
“நான் பொண்ணு தான் யார் இல்லைன்னு சொன்னா? நான் உன்கிட்டே ஃப்ரெண்டா பழகினது என் சுயநலத்திற்காக! உன்னை வச்சு உன் அண்ணன் மனசில் இடம் பிடிக்கலாம்ன்னு நினைச்சேன். அவன் கம்ப்பெனி ஷேர்ஸ் மதிப்பு உனக்கு தெரியுமா? நாளுக்கு நாள் வளர்ந்துட்டே இருக்கான். அதுக்காகத் தான் ஆகாஷ் மூலமா உனக்கு ஸ்கெட்ச் போட்டேன். புலிக் கூண்டுக்குள் சிக்கின புள்ளிமானாய் வசமாய் வந்து சிக்கிட்டே!”
“நீ நட்புங்கிற போர்வையில் எனக்கு துரோகம் பண்ணிட்டே நிஷா! உன்னை நான் எவ்வளவு நம்பினேன்?”
“உன்னை யாரும்மா என்னை நம்பச் சொன்னது? ஆமா, நான் உனக்கு துரோகம் தான் பண்ணினேன். எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கிதுங்கிறது தான் எனக்கு ரொம்ப முக்கியம். நட்போ, காதலோ, எதுவா இருந்தாலும் அதில் எனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கணும்.!”
“ப்ராஃபிட் பார்த்து வர்ரதுக்கு இது என்ன பிஸ்னஸா? உண்மையான நட்பும் காதலும் ப்ராஃபிட் பார்த்து வராது. அப்படி வர்ரதுக்குப் பேர் நட்பே இல்லை.!”
“எங்களுக்கு எல்லாமே ப்ராஃபிட் தான். இங்க பாரு டார்லிங்..!” சம்யூவின் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டான் ஆகாஷ்.
“நான் சொல்றதைக் கேளு டார்லிங்! இப்போ எந்தப் பிரச்சனையும் நமக்குள்ளே இல்லை புரியுதா? எல்லா பிரச்சனையும் உன் அண்ணனால் மட்டும் தான். நீ என்ன செய்றே, உன் அண்ணனை வந்து என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லு. எல்லா பிரச்சனையுமே ஈஸியா முடிஞ்சுடும்.!”
“வாட்..!” அதிர்வுடன் எழுந்து நின்றாள் சம்யுக்தா.
“நீ அந்தப் பொண்ணை விரட்டினது தப்பு தானே ஆகாஷ்! என்னவோ நீ தப்பே பண்ணாத யோக்கியன் மாதிரி பேசறே?”
“நான் யோக்கியன்னு உன் கிட்டே சொன்னேனா டி? பெரிய இவ மாதிரி பேசறே? உன் அண்ணனை வந்து என் காலில் விழச் சொல்லு. இல்லைன்னா இந்த வீடியோ இன்னைக்கு சாய்காலத்திற்குள்ளே உலகம் முழுசும் ஃபார்வேட் ஆகிடும்.!” குரூரமாய் மிரட்டிய ஆகாஷைப் பார்க்க உள்ளுக்குள் குளிர் பிறந்தது சம்யுக்தாவிற்கு.
“ஆகாஷ்! இருடா அவசரப் படாதே! பேசாமல் இவளைக் கல்யாணம் பண்ணிட்டு, இவ அப்பன் கிட்டே சொத்தை எழுதிக் கேட்கலாம். இவளையும் வீட்டிலேயே வேலைக்காரியாய் வச்சு செய்யலாம்! செம ஐடியா பாரு! தங்கச்சிக் கண்ணில் கண்ணீர் வந்தால் அந்த ரித்விக் தன்னால் வந்துடப் போறான்.!” முழுக்க முழுக்க பழிவெறி ஊறிக் கிடந்தது நிஷாவினுள்.
“செம நிஷா! இந்த ஐடியா கூட நல்லா இருக்கே நிஷா! ஆனாலும் எனக்கு அந்த ஆதன் ரித்விக் என் காலில் விழணும்! எவளோ ரோட்டில் போற ஒருத்திக்காக என்னை ஜெயிலுக்குள்ளே உட்கார வச்சான்ல.. அவன் என் காலில் விழுந்துக் கதறணும்.!”
“ஏய் என்னடி, பார்த்துக்கிட்டே நிக்கறே? போ, உன் அண்ணனை வந்து என் காலில் விழச் சொல்லு!” ஆத்திரத்துடன் கத்தினான் ஆகாஷ்.
அவனின் நடவடிக்கைகளில் பயந்து போய், இருக்கையிலிருந்து எழுந்து நின்றவள், பதற்றத்தில் எதிரிலிருந்த பழச்சாறைத் தட்டி விட்டிருந்தாள். கவிழ்ந்துக் கிடந்த கண்ணாடி டம்ளரின் அடியில் கரைந்தும் கரையாமலும் கிடந்த மாத்திரை சம்யூவின் கண்களில் விழ, நொடியும் தாமதிக்காது, படபடக்கும் இதயத்துடனே அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.
‘இது துரோகம்! பச்சை துரோகம்! நட்பு என்ற பெயரில் எவ்வளவு பெரிய துரோகம்.?’ கண்கள் கலங்கிப் போனது சம்யூவிற்கு. இத்தனை கீழ்த்தரமான நபர்களுடன் பழகியிருக்கிறோம் என்ற எண்ணமே வலியைத் தந்தது. நியாயமாகச் சொல்லப் போனால், ஆகாஷுடனான காதலே நிஷாவின் நட்பினால் விளைந்தது தான்.
அதைக் காதல் என்று சொல்வதும் அபத்தம் தானோ? எதையும் எதிர்பாராமல் உண்மையான அன்பு மிகுதியினால் வருவது தானே காதல்? அந்தஸ்தையும், பணம் பதவியையும் பார்த்து வருவது காதலே அல்ல அதற்குப் பெயர் சுயநலம்.
என்னென்னவோ எண்ணங்கள் அவள் மனதை மிச்சம் சொச்சம் வைக்காமல் ரணப்படுத்த,
‘ஏமாற்றப்பட்டுவிட்டோமே?’ என்ற ஆற்றாமை அதிகமாகவே இருந்தது சம்யூவிடம். அதிலும் அவள் சற்று முன் கண்ட காணொலி, ஊசியின் முனையில் அமர்ந்திருப்பதைப் போல, பயத்தையும் பதற்றத்தையும் கொடுத்தது.
‘நான் இனி எப்படி எல்லார் முகத்திலும் விழிப்பேன்? அப்பாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்? ஆகாஷ் வேண்டாமென்று கண்டித்த ஆதுவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்? யார் முகத்தையும் துளி சஞ்சலமில்லாமல் என்னால் பார்க்க முடியுமா? சத்தியமாய் முடியவே முடியாது..’ என தனக்குள் சிந்தித்தவளின் மனதிற்குள் வார்த்தையால் சொல்லவே முடியாத அளவிற்கு போராட்டம் நடந்துக் கொண்டிருக்க, இறுதியாய் அந்த முடிவை எடுத்திருந்தாள் சம்யுக்தா.
“கற்பு எங்கிருக்கிறது..?
ஆடை சூடி அலங்கரித்து நிற்கும் பெண்ணுக்குள்ளா..?
முட்டாள் மனிதனே..!
கற்பு பெண்ணுக்குள் இல்லையடா!
பெண்ணுக்குள் கற்பைப் பூட்டிவைத்த
கண்ணியமான ஆணின் கண்களில் இருக்கிறது..
பெண்ணின் அங்கங்களைக்
கண்களால் மேய்ந்தபடியே பேசாது..
கண் பார்த்து மட்டும் பேசும் கண்ணியமான
ஆணின் கண்களுக்குள் இருக்கிறதடா கற்பு..!”
*****
அந்தக் கண்ணாடி அறைக்குள் கூண்டுப் புலியைப் போல் நடை பயின்றுக் கொண்டிருந்தான் ஆதன் ரித்விக். கண்களில் கனல் குடியேறியிருந்தது. தன் தந்தையின் பேச்சு அவனுக்குள் கோபத்தைத் தூண்டி விட்டிருந்தது.
“இந்த சம்யூவும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறா? அந்த ஆகாஷ் நல்லவனாய் இருந்தால் நான் மாட்டேன்னு சொல்லப் போறேனா? ஸ்ட்டுப்பிட்..!” எரிச்சல் வார்த்தைகளில் தெரிந்தது.
‘இவர் சட்டத்துறை அமைச்சராய் இருக்கலாம் பண்ணுறது எல்லாம் ஃப்ராடு வேலை. மதுபான ஃபேக்டரியோட ஓனர் சட்டம் ஒழுங்கைத் தூக்கி நிறுத்துராராம். இப்போவெல்லாம் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கிறதும், அந்த சொத்துக்காகவும் அரசியல் வாரிசாக மாறுவதற்கு அடிச்சிக்கிறதும் தான் லேட்டஸ்ட் அரசியல். இவர் பண்ண நினைச்சதும் அதைத் தானே? இரண்டு கல்யாணத்தை நடத்தறேங்கிற பேரில், பணப் பரிமாற்றம் பண்ண நினைக்கிறார். பெத்தப் பொண்ணோட வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லைன்னு அவருடைய லாபத்தை மட்டும் பார்க்கிறார் ச்சே..!’
எல்லாவற்றையும் நினைக்க நினைக்க தந்தை என்ற உறவின் மீது துளி பாசமில்லாது கோபம் மட்டுமே மிச்சமிருந்தது.
மனதிற்கு மையமிட்டக் குழப்பங்களால் தலை வலிப்பதைப் போல் தோன்ற, முன்னாலிருந்த அழைப்புமணியை அவன் விரல் அழுத்தியது.
“எஸ் ஸார்!” பிரபு வந்து நிற்கவும்,
“ப்ளாக் டீ ப்ளீஸ்..!”
எனச் சொல்லிவிட்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
அதே நேரம், “மே ஐ கம் இன்..!” தேனில் தோய்த்து, மதுவில் நனைத்ததைப் போன்றக் குரல் இவன் செவியோரம் தீண்டிச் சென்றது.
“எஸ்!” என இதழ்கள் அவள் உள்ளே வருவதை ஆமோதிக்க, கண்கள் அனுமதியில்லாமல் கதவையேப் பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த வாஹினியை அவன் கண்கள் அங்கலம் தவறாது அளந்து தொலைத்தது. ஏனோ திடீரென விழிகளுக்குள் வெளிச்சம் வந்ததைப் போல் ஓருணர்வு. அவள் உள்ளே வந்ததும், ரோஜாப் பூவின் மணம் அவன் நாசியை நிறைத்து அறை முழுதும் பரவியது. ஏதோ நந்தவனத்திற்குள் இருப்பதைப் போல் உணர்ந்தான் அவன்.
“ஹாய்..!” சம்பிரதாயப் புன்னகை அவள் இதழினோரம்.
“ஹாய் கேண்டி!” இத்தனை நேரமிருந்த மனநிலையும் சுத்தமாய் வடிந்துப் போக, குரலில் கிறக்கம் குடியேறி கொஞ்சம் குழைந்து பின் வெளி வந்தது.
“என் பேரு கேண்டி இல்லை, நான் சிம்மவாஹினி!”
ஆதனின் குரல் குளிர்ந்த பனிக்கட்டியைப் போலிருக்க, வாஹினியின் குரலிலோ அனல் காற்று வீசியது.
‘டேய்! ஷியாம் எருமைமாடு! எப்போ பார்த்த்தாலும் இந்த வளர்ந்துக் கெட்டவன் கிட்டே என்னை மாட்டி விட்டுடுறே? உன்னைத் தானே ஸேம்ப்பிள் காட்டிட்டு வரச் சொன்னேன். உன்னை வந்து வச்சிக்கிறேன் டா!’ மனதிற்குள் நண்பனைத் திட்டிக் கொண்டிருந்தவள்,
“ஹலோ, புதுசா சில ஐட்டம்ஸ் ட்ரை செய்திருக்கோம். ஸேம்ப்பிள் பார்த்துட்டு சொல்லுங்க உங்களுக்குப் பிடிக்குதா என்னன்னு..!” கொஞ்சம் சத்தமாய் பேசி, எங்கேயோ கனவில் மிதந்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை தன் புறம் திருப்ப முயன்றாள் சிம்மவாஹினி.
“எனக்கு உன்னை விட, உன் சாக்லேட்ஸ் மேலே ரொம்ப நம்பிக்கை அதிகம் கேண்டி க்ரஷ்!”
“ம்ப்ச்!”
என அவள் சலித்துக் கொண்டதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. எழுத்துக் கூட இல்லாத வெறும் சலிப்பான ஓசை தான் ஆனாலும், அதிலும் ஆயிரம் அர்த்தங்கள் அவனுக்குப் புலப்பட்டது.
நீலநிற டாப்பும் கருப்பு நிற ஜீன்ஸும் அணிந்து, நீண்டக் கூந்தலை ஹேர் இன் பன் ஸ்டைலில் உச்சந்தலையில் அடக்கியிருந்தாள். காதுகளில் உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பதைப் போல் வளையம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கழுத்தில் எதுவும் அணியாத போதும் கூட, காதோரம் வழிந்து கழுத்தை வளைவைத் தொட்டு உரசிக் கொண்டிருந்த சில கூந்தல் கற்றைகள் கூட அவளுக்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது. ஒவ்வொரு கண்ணசைவிலும், கையசைவிலும், அவளின் மூக்கு நுனி சிவக்க வரும் கோபத்திலும் அவளிடம் தன்னையறியாமலே கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்துக் கொண்டிருந்தான் ஆதன்.
“ஆதன்! என் மூஞ்சியவே பார்த்துக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம், சேம்ப்பிள் பார்த்துட்டு அப்பறமா கால் பண்ணி சொல்லுங்க! எனக்கு டைம் ஆகுது.” மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்தபடியே அவள் சொல்ல,
“ஹேய்! சிமி வெய்ட்! நானே ஸேம்ப்பிள் பார்த்து சொல்றேன்.!” எனச் சொன்னவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தவளின் கோபம் ரொம்பவே பிடித்திருந்தது. அவளைக் கண்களால் தன் இதயக் கூட்டிற்குள் நிதானமாமய் நிரப்பியபடியே, பொன்னிற தாளில் சுருட்டப்பட்டிருந்த அந்த சாக்லேட்டை எடுத்து வாய்க்குள் போட்டான் ஆதன்.
முதலில் சாக்லேட்டின் சுவை, அதைத் தாண்டியதும், தேங்காய், வெல்லம் ஏலக்காயோடு செய்த பூரணம் போன்ற சுவையை உணரவும், நிஜமாகவே மெய் மறந்துப் போனான் ஆதன் ரித்விக்.
“வாவ்!” மெய் மறந்து சொன்னவனை ஏதோ பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் அவள்.
“இப்போ என்ன ஆச்சு? ஏன் சிமி என்னை இப்படி பார்க்கிறே?”
“பின்னே நீ பாட்டி சுட்ட கொழுக்கட்டையில் பூரணம் சாப்பிட்டதே இல்லையா? என்னவோ உலகத்திலேயே இல்லாத டேஸ்ட் மாதிரி வாவ்ன்னு சிலாகிச்சு சொல்றே? எனக்காக எதுவும் சொல்ல வேண்டாம். நல்லா இருக்கா இல்லையான்னு உண்மையைச் சொன்னால் மட்டும் போதும்.!”
“எனக்கு பொய் சொல்லத் தெரியாது சிமி! அதோட உனக்காக நான் எதையும் சொல்லணும்னு அவசியமில்லை. எனக்கு என் பிஸ்னஸ் தான் முக்கியம். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்யிருப்பேன்.!”
“இதில் எந்தெந்த ஃப்ளேவர்ஸ் அதிகமா விரும்பறாங்கன்னு தெரிஞ்சால் நல்லா இருக்கும். ட்ரை கலர், மின்ட், சில்லி சாக்லேட், ரூபி சாக்லேட்ன்னு நிறைய இருக்கு.!”
“அதைக் கண்டு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சேம்ப்ள் கொடுத்து செக் பண்ணிக்கலாம். அதாவது ஃப்ரீன்னு இல்லாமல், ஆஃபர் ப்ரைஸ் மாதிரி கொடுக்கலாம். நீ எதுக்கும் ஸ்டாக்ஸ் கையில் வச்சுக்கோ!”
“ஓகே! அப்போ நான் கிளம்புறேன்.!” அவள் எழுந்து நிற்கவும் பிரபு வந்து தேநீரை வைக்கவும் சரியாக இருக்க,
‘இதை எப்போ சொன்னான்? இதைக் குடிக்கலைன்னா சிமி, சிமின்னு டார்ச்சர் பண்ணுவான் இம்சை!’ என மனதிற்குள் புலம்பியபடியே தேநீரைப் பருகத் துவங்கியிருந்தாள்.
“ஐயோ ஸார்..!” பிரபு ஏதோ சொல்ல வர, கைநீட்டித் தடுத்து அவனை அனுப்பியிருந்தான் ஆதன்.
கண்முன்னே ஓவியம் போல், கண்களால் அறையை அளந்தபடியே துளித்துளியாய் அவள் தேநீரை ரசித்துப் பருகுவதைக் கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதன். அவன் மனமோ அவள் பின்னோடு செல்ல தன்னாலே அடம் பிடித்தது. சிறு குழந்தை போல் அடம் பிடிக்கும் மனதைக் கடினப்பட்டு தலையில் தட்டி அடக்கி வைத்தவன், அவள் தேநீரைப் பருகி முடிக்கும் வரை அமைதி காத்தான்.
“தேங்க்ஸ் ஃபார் தி டீ ஆதன். அப்போ நான் கிளம்பறேன்..!” அவள் எழுந்து நின்ற நேரம்,
“அந்த டீ என்னோடது!” நிதானமாய்ச் சொன்னான் அவன்.
“வாட்..?” புரியாமல் குழப்பமாய் அவள் அவனைப் பார்க்க,
“அந்த டீ, எனக்கு தலை வலிக்குதுன்னு எனக்காகச் சொன்னேன். இப்போ அந்த டீயை நீ குடிச்சுட்டே! இப்போ எனக்கு டீ வேணும்?” ஆழமாய் அதே நேரம் வெகு நிதானமாய் அவன் பார்வை அவளைத் துளைத்தது.
“டீ வேணும்னா, உன் அசிஸ்டன்ட் வருவார் அவர் கிட்டே சொல்லு!” அவளுக்கு என்னவோ அவனின் செயல் ரொம்பவே சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது.
‘இவன் ஏன் இவ்வளவு சில்லியாய் பிஹேவ் பண்ணுறான்?’ மனதிற்குள் எரிச்சல் முட்டினாலும், எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது புன்னகையோடே பதில் சொன்னாள் அவள்.
ஆனால் அவனுக்கோ, அவளைப் போக விடுவதில் துளியும் விருப்பமே இல்லை.
ஏனோ மிட்டாய்க்கு ஏங்கும் பிள்ளை போல், இதயம் அவளுக்காக ஏங்கத் துவங்கியிருந்தது. ஏனோ அவள் விட்டுப் போனதும், வெறுமை சூழ்ந்து விடுமோ? என்றுக் கூடத் தோன்றியது அவனுக்கு. அவளைத் தன் பக்கத்திலேயே தனக்கு நெருக்கமாய் வைத்துக் கொள்ள மனம் பரபரத்துத் தொலைத்தது.
“எனக்காக டீ போட்டு தர மாட்டியா கேண்டி?”
அவனின் வார்த்தைகள் மறுக்கத் தோன்றாத அளவிற்கு இவளை ஏதோ செய்தது. தன் அலுவலக அறையின் அருகிலேயே இருந்த சிறிய அறையைக் கண்களால் காட்டினான். ஏனோ தவம் செய்து வரம் பெற்றுவிட்டதைப் போல் மனம் துள்ளிக் குதித்தது ஆதனுக்கு.
தூண்டல் அடுப்பில் (Induction stove) நீரை ஊற்றி அது கொதிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தவளைக் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“எனக்கு உன்னைப் பார்த்தாலே சுத்தமாய் பிடிக்கலை. நான் உன் கூட பிஸ்னஸ் டீல் தான் வச்சிருக்கேன். நான் உன்னோட மெய்ட் இல்லை, பி.ஏ. இல்லை பொண்டாட்டியும் இல்லை. ஆனால் உனக்காக இப்போ டீ போட்டுட்டு இருக்கேன். நான் என்ன செய்றேன்னு எனக்கே புரியலை.!” புலம்பிக் கொண்டிருந்தவளை அதீத ரசனையுடன் மொய்த்துக் கொண்டிருந்தன ஆதனின் விழிகள்.
“ரொம்ப குழப்பிக்காதே கேண்டி, ஃப்ரெண்டுக்காக டீ போட்டுக் கொடுத்திருக்கே! சிம்ப்பிள்..!”
“நீ என் ஃப்ரெண்டும் இல்லையே? என் ஃப்ரெண்ட் ஷியாம் தான்.!” அவள் சொல்ல வருவதன் சாராம்சம் புரியாமல் திருதிருத்தாள்.
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். நான் உனக்கு யாருன்னு நீயே உன் வாயால் சொல்லுவே!” என்றபடி, அவள் கழுத்து வளைவை உரசிய கூந்தல் கற்றையைக் காதோரம் ஒதுக்கினான் அவன்.
பட்டும் படாமல் அவன் நுனிவிரல் தீண்டிய நொடியினில் இவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள். சட்டென்று தேநீரை கண்ணாடி கோப்பையில் ஊற்றி அவன் கரத்தினில் தந்தவள்,
“நா.. நான் கிளம்பறேன்..!”
ஒட்டு மொத்தமாய் முட்டி மோதிக் கொண்டிருக்கும் உணர்வுகளின் தாக்கம் புரியாது அங்கிருந்து அவள் நகர முயன்றாள். அவள் தேநீரை அவன் கைகளில் தந்த நொடி, அவளின் கவனமின்மையால், கோப்பை தழும்ப நிரம்பியிருந்த சூடான தேநீர் அவன் கரத்தினைச் சுவைத்திருந்தது.
“ஸ்ஸ்ஸ் ஆஆ..!” வலியில் தன்னை மீறிச் சொன்ன போதும் கூட, தேநீர் சிந்திவிடாது அருகிலிருந்த மேஜையில் வைக்குமளவிற்கு நிதானமிருந்தது ஆதனிடம்.
“ஸ்ஸ்ஸ்..! ஸாரி, ஐ அம் ரியலி ஸாரி.! நான் வேணும்ன்னு பண்ணலை!” தனக்கே வலித்தது போல் சொன்னவள் அவன் கரம் பற்றி குளிர் நீரில் காட்டியிருந்தாள். அவன் மாநிறத்திலும் கூட தோல் சிவந்திருப்பது தெரிந்தது.
“ரொம்ப வலிக்குதா?” தன்னால் தான் என்றக் குற்றவுணர்வு அவள் கண்களில் மேலோங்கியிருக்க, அண்ணாந்து தன்னைப் பார்த்தவளை, அணைத்து ஆறுதல் படுத்த பரபரத்த கரத்தினை முயன்று அடக்கியவன்,
“ஹேய்! ஒண்ணுமில்லை சிமி! மருந்து போட்டால் சரியாகிடும்.!” வார்த்தைகளால் அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.
“ம்ப்ச்! நான் உன்னை ரொம்ப காயப்படுத்தறேன் இல்லை? ஏன்னு தெரியலை, உன்னை ஏதோ வகையில் நான் காயப்படுத்திட்டே இருக்கேன்.! ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எங்கே வச்சிருக்கே?!” குரல் உள்ளே போயிருந்தது.
“இட்ஸ் நத்திங் கேண்டி! ஒண்ணுமில்லை, சின்ன காயம் தன்னால் ஆறிடும்!” அவள் அருகில் இருக்கும் பொழுதுகளில் வலி கூட சுகமானதாய் மாறி விடுகிறது அவனுக்கு.
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! நிஜமாவே வேணும்ன்னு எதுவும் செய்யலை ஆதன். உன்னை எனக்கு பிடிக்காது தான், அதுக்காக இப்படியெல்லாம் பழி வாங்கணும்ன்னு நினைக்க மாட்டேன்.!”
“எனக்குத் தெரியும் கேண்டி! நீ வேணும்ன்னு பண்ணலை! விடு!” என்றவன் தேநீரை எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்குள் நுழைய, அவன் பின்னாலேயே சென்றவள், முதலுதவிப் பெட்டியைத் தேடி எடுத்து, அவன் வலக்கை பெருவிரலை ஒட்டியிருந்த இடங்களில் மருந்திட்டாள்.
இடக்கையில் தேநீர் கோப்பையிருக்க, தேநீரை பருகியபடியே அவளைக் கேள்வியாய் பார்த்தவனிடம்,
“இது.. உனக்காக இல்லை, என் மன நிம்மதிக்காக!” எனச் சொன்னவள், வெகு தோரணையாய் தோள்பையை எடுத்து மட்டிக் கொண்டு, இதழில் வழிந்த துளி புன்னகையுடன் வெளியேறியவளை பிரம்மிப்புடன் பார்த்திருந்தான் ஆதன் ரித்விக்.
இத்தனை நாளாய் குடியிருந்த வெறுமை வெளியேறி, வசந்தம் வந்திருந்தது அவன் அறைக்குள் மட்டுமல்ல அவன் வாழ்க்கையிலும் கூடத்தான்..!
இசைக்கும்..!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சம்யூ லூசு என்ன பண்ணபோகுது.