Loading

அத்தியாயம் 3

“ம்ம்ம்ம்…” மறுப்பாய் தலையசைத்த நிதர்ஷனாவை மேலும் சோதிக்கும் வண்ணம், அவளை ஆளத் தொடங்கி இருந்தான் யாஷ் பிரஜிதன்.

நிகழ்காலத்திலும் அவன் விரல்கள் அவளது இடையினைப் பரிசோதிக்க முற்பட, மறுப்பாய் தலையசைத்தவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.

“உன்னை ஈவ் டீசிங்ல உள்ள பிடிச்சுப் போட்டிருவேன்யா… ஒன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க? இஷ்டத்துக்குக் கடத்திட்டு வந்து, தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத…” எனச் சீறிட, அவனோ அசட்டையாய் “தொடாம பேபி ஃபார்ம் ஆகாது நிதர்ஷனா, பை தி வே… இதெல்லாம் பழகிக்கோ! பழகித்தான் ஆகணும்!” என்று கர்ஜனையுடன் கூறி விட்டுச் செல்ல, அவள் கால்கள் தானாய் மடங்கித் தரையில் தொய்ந்தது.

கண்ணை இறுக்கி மூடிக் கொண்டவளுக்கு, அவனிடம் இருந்து தப்பிக்க இயலா நிலை.

மீண்டும் கிடைத்திடவே வேண்டாமென, ஒதுக்கிய உணர்வுகளைத் தட்டி எழுப்பி விட்டுச் சென்ற யாஷ் பிரஜிதன் சென்ற திசையையே வெறித்தாள்.

——————

சில மாதங்களுக்கு முன்பு,

விடியல் நேரத்திலும், தன்னவளின் அழகை அள்ளிப் பருகிய யாஷ் பிரஜிதனிடம் சிக்குண்டு சிவந்து தளர்ந்த நிதர்ஷனா, “யோவ் அரக்கா… வெக்க வெக்கமா வருது, விடுயா…” என்று சிணுங்கினாள்.

உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “நைட்டு முழுக்க இந்த பெட்ஷீட்குள்ள இருந்தும் இன்னும் ஷை ஆகுதா ஆலம்பனா?” எனக் கிசுகிசுப்பாய் வினவியதில் உருக்குலைந்து போனாள்.

“அச்சோ! நீ ரொம்ப வெவகாரமாய் பேசுற, போ…” என்று முகத்தை மூடிக் கொள்ள அவளது கைக்கும் முத்தமிட்டவன், “உன்னை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கவே பிடிக்கலடி!” என்றான் மூக்கைச் சுருக்கி.

“பாருடா… இந்த எந்திரன்குள்ள ஒரு இந்திரன் இருக்கான்…” என அவன் மீசையைப் பிடித்து ஆட்ட,

“அது யாரு இந்திரன்?” என வினவினான் புரியாமல்.

சந்திரன், இந்திரன்னு ரஜினி டபுள் ரோல் பண்ணுன படம் அது. அதுல அந்த இந்திரன் லவர் பாய்…” என அவள் கதை கூற, “ஹூ இஸ் தட் ரஜினி?” என்றான் குழப்பம் அகலாமல்.

“சூப்பர் ஸ்டாரு, யாருனு கேட்டா சின்னக் குழந்தை கூடச் சொல்லும்… இப்படி என் தலைவரைக் கூடத் தெரியாத ஒருத்தனுக்கு வாக்கப்பட்டுட்டேனே…” எனப் போலியாய் கண்ணீர் சிந்தியவளின் போர்வையை உருவினான்.

அதில் மிரண்டவள் அவசரமாகத் தன்னை மறைத்துக் கொண்டு, “யாஷ், விடுங்க ப்ளீஸ்!” என்று கெஞ்சத் தொடங்க அவன் மிஞ்சத் தொடங்கினான்.

—–

ஆதிசக்தி, தனது மகனது திருமணம் நன்முறையில் முடிந்ததில் அதிக மகிழ்வில் திளைத்தார்.

இந்தியாவிற்குத் திரும்பியதும், குலதெய்வம் கோவிலுக்குச் சென்று படையல் வைக்க வேண்டுமெனக் கூற இளவேந்தனும், மனையாளை ரசித்தபடி தலையாட்டினார்.

நிவேதன், கையில் இருந்த கோர்ட் சூட்டைப் பரிதாபமாகப் பார்த்தான்.

இதனை அணிந்து கொண்டு அலுவலகம் வர வேண்டுமென்பது யாஷ் பிரஜிதனின் கட்டளை.

கதிரவனோ, தனியாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்க, “நீ இன்னாத்துக்குடா இளிக்கிற?” என்றான் கடுகடுப்பாய்.

கருவாட்டுக்கு கோர்ட்டு போட்டு அழகு பார்க்க நினைக்கிற உன் வெளிநாட்டுக்கார மச்சானை நெனச்சேன், சிரிச்சேன்…” என்றதில் வெறியானவன், “டேய், நானே அவனாண்ட சிக்கிட்டேனேன்னு நாஷ்டா கூட எறங்காம தவிச்சுப் போயிருக்கேன்.” என நொந்தான்.

நிவேதன் புலம்பும்போதே பூட்ஸ் சத்தம் எதிரொலிக்க, சாம்பல் நிற உயர்ரக கோர்ட்டில் தன்னைப் புதைத்துக் கொண்டு அங்கு வந்த யாஷ் பிரஜிதனின் விழிகளில் கூர்மை தாண்டவமாடியது.

அத்தனை நேரமும் மனையாளிடம் இளகியிருந்த தேகம், தற்போது இரும்பாய் இறுகி இருந்தது.

அவனைக் கண்டதும் நிவேதனும், கதிரவனும் அட்டென்ஷன் மோடில் நிற்க, அவர்கள் தயாராகாததைக் கண்ட யாஷ் பிரஜிதன் கடுகடுப்புடன் “ஏய் ஆலம்பனா!” என உறுமினான்.

அவனது ஒரு சத்தத்தில் அப்போது தான் குளித்து உடை மாற்றிய நிதர்ஷனா, தலையைக் கூடத் துவட்டாது திடுதிடுவென ஓடி வந்தாள்.

“எதுக்குயா கத்துற?”

“உன் பிரதரை இன்னும் டூ மினிட்ஸ்ல ரெடி செஞ்சு காருக்கு அனுப்புற. யூ டூ…” என்று கதிரவனையும் விரல் நீட்டிக் கூறி விட்டு வெளியில் சென்றதில் இருவரும் பீதியாகி நின்றனர்.

“ரெடியாக்கி அனுப்ப இவன் என்ன பிளே ஸ்கூல் பையனா?” தலையில் அடித்துக் கொண்டு புலம்பிய நிதர்ஷனா, “நேரத்துக்குக் கிளம்பித் தொலையேன்டா…” என்று தமையனை அதட்டினாள்.

நிவேதனோ சுண்டிய முகத்துடன், “நிதா… என்னதான் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டாண்ட வச்சாலும், நாய் கொணம் மாறாது! அது புரியாம மச்சான் தான் பேசுறான்னா, நீயும் ஆமா சாமி போடாத. எனக்கு அந்த வரதராஜன் அப்பாவே இல்லன்னு நெனச்சுட்டு இருக்கேன். அவன் சொத்து மட்டும் எனக்கு எதுக்கு? அதுவும் இந்த வியாபாரத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாம நான் போய் எதையும் சொதப்பி வச்சுட்டா என்னாகும்? நீயாச்சும் சொல்லு நிதா…” எனக் கிட்டத்தட்ட கெஞ்சினான்.

நாய் பற்றிப் பேசியதும் நிதர்ஷனாவின் முகம் கன்றிப் போனது.

தன்னை ஒரு முறை நாயாக யாஷ் பிரஜிதன் பேசியது நினைவடுக்கில் உதயமாக, அதற்காக அவன் அளித்த விளக்கமும், மன்னிப்பும் மட்டும் மூளையில் இருந்து கரைந்திருந்தது.

முயன்று அதனை மறைத்துக் கொண்டவள், “லூசாட்டம் பேசாத. யாஷ் எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். இம்மாம் பெரிய கம்பெனி வச்சு நடத்தறவரு, இதெல்லாம் யோசிக்காம இருக்க மாட்டாரு நிவே… நீ நினைக்கிறதை விட, இங்க எல்லாம் சீரியஸா போயிட்டு இருக்கு. இப்போதைக்கு அவர் சொல்றதைச் செய், அது போதும்!” என்றதில் நிவேதன் சோர்ந்து போனான்.

“இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டுச் சீக்கிரம் காருக்குப் போ… மறுபடியும் உள்ள வந்தாக்க, உன்ன அடிச்சுத் தான் இழுத்துட்டுப் போவான்.” என்ற நிதர்ஷனாவின் கண்டிப்பில் அவசரமாக கோர்ட்டைப் போட்டுக் கொண்டான்.

தமையனை விழி விரித்துப் பார்த்தவள், “ஹை! இந்த ட்ரெஸ் உனக்கு நல்லாருக்கு நிவே… இரு, தலையை வாராம போற…” என்று அவனது கேசத்தைக் கோதி விட்டவள், “அவன் பேசுறது, ஒனக்குப் புரியலைன்னாலும் பரவாயில்ல. புரிஞ்ச மாறிக்கத் தலையாட்டிக்க சரியா…” என்று அறிவுரை கூறியதில் அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

நிவேதன் அனைத்துக் கடவுளையும் கும்பிட்டு விட்டு அறையை விட்டு வெளியில் வர, அவர்களைக் காலை உணவிற்காக அழைக்க வந்த கண்மணி அப்படியே நின்று விட்டாள்.

நிவேதனை அந்த உடையில் எதிர்பாராதவளுள் பெரும் கலவரம்.

அவளைக் கண்டதும் அவனும் ஒரு கணம் நின்று விட, அவனது விழிகள் அவள் விழிகளைத் தீண்டும் முன்னே பார்வையைத் தாழ்த்தியவள், “சாப்பாடு ரெடி. அம்மா வரச் சொன்னாங்க.” என்று விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

கதிரவனோ, “சாப்பிட்டுப் போலாமா?” என நகரப்போக, அவனது சட்டைக் காலரை பிடித்த நிதர்ஷனா, “இன்னும் ரெண்டு செகண்ட்ல ரெண்டு பேரும் கார்ல இல்ல, அந்த அரக்கன் உங்கமேல காரை ஏத்திக் கொன்னுடுவான். போங்கடா மொதல்ல…” என்று வாசல் புறம் தள்ளி விட்டாள்.

நிவேதன், “உன் புருசனுக்கு நாஷ்டா தரல?” எனக் கேட்டபடி நடக்க, ‘அவன் பழத்தத் துன்னே உயிர் வாழ்வான்…’ என முணுமுணுத்துக் கொண்டாள். யாஷ் பிரஜிதன், காரின் மீது சாய்ந்து தனது கையில் இருந்த ஐ-பாடில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க, கிருஷ்ணவேணி வேகமாய் அங்கு வந்தார்.

“நிதா… இது ஊர்ல இருந்து எடுத்துட்டு வந்த திருநீறு… மொத மொதல்ல பிசினஸைக் கைல எடுக்கப் போற நிவேதனுக்கு வச்சு விடு.” எனக் கொடுக்க, “சரி பெரிம்மா…” என்று திருநீறைப் பயபக்தியாய் எடுத்து நிவேதனுக்குப் பெரியதாய் பூசி விட்டாள்.

பின் கதிரவனுக்கும், “எந்த இரத்தக் காட்டேரியும் உன்னை அண்டாமல் பாதுகாக்க…” என்று கிண்டலாய் பூசி விட, அந்நேரம் கதிரவனைக் குறுகுறுவெனப் பார்த்தபடி வந்தாள் சிந்தாமணி.

அவளைக் கண்டதும் மிரண்டவன், ‘அதான் ஆல்ரெடி அண்டிடுச்சே!’ எனப் புலம்பிக் கொள்ள, நிவேதன் அவனது கூற்றில் நமுட்டு நகை புரிந்தான்.

நிதர்ஷனாவோ, “இரு இரு… எங்க இருந்தோ சூடா ஒரு நெருப்பு வந்துட்டு இருக்கே…” எனச் சுற்றி முற்றித் தேடியவள் அதன்பிறகே அவளது கண்ணான கணவனைக் கண்டாள்.

அவனது விழிகள், சூடாய் நெருப்பு அமிலம் கக்கிக் கொண்டிருந்தது.

“நீ தான் இதெல்லாம் வச்சுக்க மாட்டல்ல அரக்கா…” என அவள் திணறிட, அவனது விழி வீச்சில் சாம்பல் ஆகும் முன், அவசரமாக விபூதியைப் பூசி விட்டாள்.

அதன் பிறகே மெல்லத் தளர்ந்தவன், குனிந்து அவள் இதழ்களில் இதழொற்றி விட்டு, “சீ யூ இன் தி ஈவ்னிங் மின்னல்!” எனக் கொஞ்சும் குரலில் கூறிவிட்டுக் காரில் ஏறி அமர அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. எப்போதும் மற்றவர் முன்பு கன்னத்திலோ, நெற்றியிலோ முத்தமிடுவான். அது கூடப் பழகி விட்டது. இப்போதென்னவென்றால்?

நிவேதனும், கதிரவனும் கண்டு கொள்ளாதது போல அவனுடன் காரில் அமர்ந்து கொண்டனர்.

அப்போதும், யாஷ் ஐ-பாடில் இருந்து நிமிராமல் இருக்க, “மச்சான்” என அழைத்தான் நிவேதன்.

“ம்ம்”

“நம்ம எப்ப ஊருக்குப் போறோம்?”

“இங்க சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கு, அது முடிச்சுட்டு!”

“அதான் இங்க உங்க முறைப்படி கல்யாணம் முடிஞ்சுதே…”

“பிசினஸ் ரிலேட்டட் ஒர்க்!” என்றவனிடம் தப்பிக்க வழி தெரியாமல், “மச்சான், எனக்கு ஒரு சந்தேகம்ம்ம்…” என மீண்டும் ஆரம்பித்தான்.

‘இம்சை’ எனக் கடுப்பானவன், ஐ பாடை மூடி வைத்து விட்டு “வாட்?” எனக் காட்டமாக வினவ, ‘நீ அவனாண்ட செருப்படி வாங்காம ஊருக்குப் போக மாட்டேன்னு நினைக்கிறன்…’ என்று கதிரவன் தலையில் அடித்துக் கொண்டான்.

யாஷ் பிரஜிதனின் ‘வாட்’ என்ற வார்த்தையிலேயே நிவேதனுக்கு வாயடைத்த நிலை தான்.

இருப்பினும் மனத்தைத் தளர விடாதவன், “என்னை மட்டும் எதுக்கு பிசினஸைப் பார்த்துக்கணும்னு சொல்லி அடம் பிடிக்கிற மச்சான். அப்படிப் பார்த்தாக்கா, நிதாவும் தான வரதராஜனோட பொண்ணு. அப்புறம் உன் தங்கச்சிக்குக் கூட தொழில்ல பங்கு இருக்குல்ல. அவங்களை எல்லாம் வரச் சொல்லி வேலை வாங்காம, நீ என்ன பிசினஸ் பண்றன்னு கூடத் தெரியாத என்னைப் பிடிச்சு வேலை வாங்குறதுலாம் நியாயமே இல்ல…” என்று மூச்சு வாங்கப் பேசினான்.

அதற்குள் பல அடுக்கு மாடிக் கட்டடமான அலுவலத்தின் முன் கார் நிறுத்தப்பட, நிவேதனை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்து விட்டு இறங்கினான் யாஷ் பிரஜிதன்.

“பாயிண்டா பேசிட்ட மச்சி…” கதிரவன் சிலாகித்ததில், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் நிவேதன்.

இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்றபடி, யாஷ் அடுத்த அரை மணி நேரத்திற்கு மடிக்கணினியில் புதைந்து விட, கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ஆஹில்யன்.

இரு ஆடவர்களையும் பார்த்து ஸ்நேகப் புன்னகை வீசியவன், யாஷ் நிமிர்ந்ததும் முக பாவனையை மாற்றிக் கொண்டு, “சார், நேத்து நீங்க கேட்ட பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். சென்னைல நம்மளோட ஹெட் பிரான்ச் மாத்துறதுக்கு ஏற்பாடு நடந்துட்டு இருக்கு. நம்ம ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாம் இடத்தை மாத்துறதுல சாடிஸ்பையா இல்ல சார்… உங்க கூட மீட்டிங் அரேஞ்ச் பண்ணச் சொல்றாங்க. அண்ட் சேர்மன் இனாகுரேஷன் எப்போன்னு ஆர்வமா இருக்காங்க.

தென், சைனா கவர்மெண்ட்ல இருந்து உங்களோட ஸ்பேஸ் ஏ.ஐ எப்ப ப்ராப்பரா லாஞ்ச் பண்ணப் போறீங்கன்னு குவெஸ்ட்டின் பண்ணிருக்காங்க…” என மடமடவென உரைத்தான்.

நிவேதனுக்கும் புரிய வேண்டுமென அனைத்தையும் தமிழிலேயே பேசினான்.

தாடையை ஒற்றை விரலால் நீவிய யாஷ் பிரஜிதன், “அந்த ஸ்பேஸ் ஏ.ஐல ஒரு டெக்னிகல் இஷ்யூ. சோ இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகும்னு சொல்லிடு!” என்றான்.

“பட் சார்… அவங்க அக்செப்ட் பண்ணிப்பாங்களா?”

“அக்செப்ட் பண்ற மாதிரிச் சொல்றது தான் உன் வேலை!”

அதில் தலையை உருட்டிய ஆஹில்யன், “மீட்டிங் ஏற்பாடு பண்ணட்டா சார்?” என வினவ, “ம்ம் நாளைக்கு மார்னிங் 10 ஏ.எம்., நான் கேட்ட பேப்பர்ஸ் எல்லாம் பைல்ல இருக்கா?” கேட்டபடி ஆஹில்யன் கொடுத்த கோப்பைத் திறந்தான்.

“எஸ் சார். நிதர்ஷனா மேமை உங்களோட பிசினஸ் பார்ட்னரா ஜாயின் பண்ண வைக்கத் தேவையான டாக்குமெண்ட்ஸ் இருக்கு சார்… உங்க சிஸ்டர் கண்மணியும், நிவேதனும் எலைட் கம்பெனியோட சீப் எக்சிகியூட்டிவா டெம்ப்ரவரியான பொசிஷன்ல இருக்காங்க. ஒன்ஸ் அவங்க ப்ரிப்பேர் ஆனதும், போர்ட் மெம்பெர்ஸ் லிஸ்ட்ல ஆட் ஆகிடுவாங்க.

அண்ட் ஆதிசக்தி மேம் எலைட் கம்பெனியோட சேர்மனா பொறுப்பேத்துக்க ப்ரபோசல் ரெடி ஆகியிருக்கு. மத்த போர்ட் மெம்பெர்ஸ்க்கு நாளைக்கு மீட்டிங்ல இதை எக்ஸ்போஸ் பண்ணிடலாம்.”

ஆஹில்யனின் கூற்றில் நிவேதனின் முகத்தில் ஈயாடவில்லை.

அவன் தன்னை மட்டுமல்ல, ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் டார்ச்சர் செய்ய வேண்டுமென்ற முடிவுடன் இருக்கிறான் என நொந்து கொண்டவனுக்கு, இனி பேச வார்த்தைகளில்லை.

தன்னையும் கண்மணியையும் இணைத்து என்னவோ கூறினானே, என்னவாக இருக்கும் என்ற யோசனைக்குச் சென்று விட்டான் நிவேதன்.

ரித்திகா, ஏற்கெனவே யாஷ் பிரஜிதனின் பார்ட்னராக இருப்பதால் அவளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. ஆனால், இங்கிருந்து இந்தியாவிற்கு அனைத்தையும் மாற்றுவது எந்த அளவு சாத்தியமென்பது தான் ஆஹில்யனுக்குப் புரியவில்லை.

யாஷ் பிரஜிதனோ, “ட்ரெயின் தெம்!” என இரு ஆடவர்களையும் கண்ணைக் காட்டி விட்டு, அவனது லேப் நோக்கிச் சென்றான்.

அங்கு சில வேலைகளை முடித்து விட்டுத் தனது வீட்டிற்குச் சென்றவனை, வாசலிலேயே தடுத்து நிறுத்தியது நிதர்ஷனாவின் குரல்.

“கடல் தாண்டி வந்தாலும், கடல் மீனெல்லாம் கண்ணுல காட்ட மாட்டிங்களா அத்தை?” என ஆதிசக்தியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அவரோ, “நம்ம ஊருன்னா பிரச்சினை இல்ல, இங்க சில டிஷஸ் எல்லாம் உடம்புக்கு ஒத்துக்காமல் போயிடும் நிதா…” என்றவரும் ஒரு காலத்தில் இத்தாலி நாட்டின் மருமகள் தானே!

கண்மணியோ, “தஞ்சாவூருக்கு நடிக்க வந்தப்ப மட்டும் நீங்க வெஜ் தான சாப்பிட்டீங்க?” எனக் கிண்டலாகக் கேட்க,

“அப்ப உன் அண்ணன் மேல குட்டியூண்டு பயம் இருந்துச்சு.” எனத் தெனாவெட்டாகக் கூறியவளிடம்,

“அப்போ இப்ப இல்லையோ?” எனக் குறும்பாய் வினவினாள்.

“ஹய… என்னைப் பார்த்து உன் நொண்ணன் தான் பயப்படணுமாக்கும்…” எனத் திமிராய் கூறியவள், தனக்கெதிரில் ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்றிருந்த யாஷ் பிரஜிதனைக் கண்டு வாரிச் சுருட்டி எழுந்தாள்.

“ஈஈஈ… சும்மா பேசிட்டு இருந்தேன் அரக்கா…” நொடியில் மாறி விட்ட நிதர்ஷனாவைக் கண்டு கண்மணி தான் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

ஆதிசக்தி அவனிடம் பேச வர, அவனது விழிகளோ நிதர்ஷனாவைத் தான் விழுங்கியது.

அதில், சத்தமின்றி இரு பெண்களும் நகர்ந்து விட்டனர்.

அவர்கள் சென்றதுமே அவளைக் கையில் அள்ளியவன், “எவ்ளோ கிஸ் பண்ணாலும் இந்தத் திமிர் பேச்சு மட்டும் குறையுதா உனக்கு…” என்று முத்தமிட்டவாறே காருக்கு அழைத்துச் சென்றான்.

அவளோ உரிமையாய் அவனது கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டு, “எதுக்குக் குறையணுமாம்?” எனக் கேட்டபடி அவனது முத்தத்தில் மூழ்கிப் போனாள்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 66

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
72
+1
1
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இப்ப கொஞ்சம் புரியுது.. flashback ல after marriage life பத்தி சொல்றீங்க..நிகழ்காலத்தில் நிதா யாஷ் கூட இல்லை..மறந்து போன மாதிரி நடிக்கிறா?? Right??