
அத்தியாயம் – 28
அதே நிலையிலிருந்து மாறாமல் தேவா, அவளின் கன்னத்தில் வழிந்த நீரை இரு விரல்களாலும் துடைத்து, இரு கண்ணிலும் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
அவன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டியவன், அவள் கலங்கிய கண்களைக் கண்டு “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா இசை? என்னால உன்னை லவ் பண்ண முடியும்னு நினைக்கிறியா?” என்றான் பாவமாக, ஒரு முத்தத்திற்கு கூடத் தன் கைகள் தன் பேச்சைக் கேளாமல் இப்படி நடுங்குகிறதே என்றெண்ணி.
அவனை அமைதியாகப் பார்த்தவள், அவள் கண்ணத்தில் இருந்த அவன் கைகளை எடுத்து விட்டு, “லவ்” னா என்ன தேவ்?” எனக் கேட்டாள். அவன் பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென விழிக்க, அதில் எழுந்த புன்னகையை இதழில் படர விட்டு, “பதில் சொல்லு, ‘லவ்’ னா என்ன உன் அகராதில?” என்றாள் மீண்டும்.
“அது அது ‘லவ்’ னா” என்று திணறியவனிடம் “கட்டிப் பிடிக்கிறதா?” எனக் கேள்வியாய் வினவ, அவன் யோசனையுடன் இருபுறமும் மெல்ல தலையாட்டினான்.
“பின்ன, முத்தம் குடுக்குறதா?” என வினவிட, அவன் அப்போதும் யோசனையாக இல்லையெனத் தலையசைத்தான். “வேற, படுக்கையைப் பகிர்ந்துக்கிறதா?” என்று கேட்க, அவன் வேகமாக அதே சமயம் அழுத்தத்துடன் மறுப்பாகத் தலையாட்டினான்.
“இது எதுவுமே இல்லைன்னா, அப்போ எது லவ்?” என்று முகத்தைக் குழப்பமாக வைத்துக் கேட்க,
அவன் பொறுமையிழந்து “இதெல்லாம் லவ் இல்ல… உனக்காக நானும், எனக்காக நீயும் எந்த நிலைமையிலயும் விட்டுக் குடுக்காம வாழறது தான் லவ்.
அன்னைக்கு எனக்கு சாப்பாடு ஊட்டும்போது, நான் உடனே விலகவும் அப்போ கூட உனக்குக் கோபம் வராம, என்னைப் புரிஞ்சுக்கிட்டீல தட்ஸ் லவ். எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும், உனக்காக நான் மாறனும், என் உணர்வுகளால நீ காயப்படக் கூடாதுனு நினைச்சேன்ல அது லவ். என்னை சங்கடப்படுத்த கூடாதுனு நீ பால்கனியில் தூங்குனியே அது லவ். நீ பால்கனியில தூங்குறதை ஏத்துக்க முடியாம, தவிச்சேன்ல அது லவ்.
என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சும், என்னை விட்டுப் போகாம அடம்பிடிச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீல, தட் இஸ் லவ். உன் குடும்பத்தைப் பிரிஞ்சு நீ வருத்தப்படக்கூடாதுன்னு உன் அப்பாகிட்ட பேசுனேன்ல, அது லவ்” என்று பேசிக் கொண்டே போக, அவள் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சோ, இதெல்லாம் தான் லவ். அப்டின்னா, நீ ஆல்ரெடி என்னை லவ் பண்ற தான? அப்பறம் ஏன் உனக்கு என்னை லவ் பண்ண முடியுமான்னு டவுட் வருது, தேவ்!” என்று அழுத்தமாகக் கேட்க, அப்போது தான், அவன் பேசிய வார்த்தைகளையே உணர்ந்து, அப்படியே நின்றான்.
அவள் விழி உயர்த்தி, “ஏன் அமைதியாகிட்ட, லிஸ்ட் போட்டு சொன்னீல! இதெல்லாம் என் மேல இருக்குற லவ்ல நீ பண்ணதுன்னும்! நானும் உன் மேல இருக்குற லவ்ல பண்ணேன்னும். அப்போ ஆல்ரெடி ரெண்டு பேரும் லவ் பண்றோம் தான?” என்று கூர்மையாக வினவ,
அவன் இதழ்கள் குறுநகை பூத்தது. ‘கேடி என் வாயாலேயே எல்லாத்தையும் உளற வைக்கிறா!’ என்று மனதில் செல்லமாகத் திட்டிக் கொண்டவன் அவளையே பார்க்க, அவள் அவன் கையைப் பற்றி, அவள் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, “இங்க பாரு தேவ். அன்புக்கு வரையறை எல்லாம் கிடையாது.
எல்லாமே அன்பு தான். நான் உன்னால கஷ்டப்படக் கூடாதுன்னு என்ன அவாய்ட் பண்ணி, என்னைக் காயப் படுத்தணும்னு நினைச்ச உன் எண்ணம் கூட அன்பு தான். காதல் தான். நான் சொன்ன ஹக், கிஸ், அண்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாமே லவ் தான். அதுவும் காதல்ல ஒரு பார்ட். இப்போ நீ ஏன் என்கிட்ட கிஸ் கேட்ட…? ஆசையினாலயா? இல்ல வேற ஏதாவது இன்டென்சன்லையா?” என்று கேள்வியெழுப்பியவள் அவளே பதிலாக,
“இல்ல தேவ். நம்மமேல அன்பா இருக்குறவங்ககிட்ட இருந்து வர்ற, பிஸிக்கல் டச் நம்ம எதிர்பார்க்காத அளவுக்கு ஆறுதலையும், ஒரு பாதுகாப்பு உணர்வையும் கண்டிப்பா குடுக்கும். அதைத் தான் நீ என்கிட்ட எதிர்பார்த்த. அதே சமயம் பிடிக்காம நடக்குற டச் வெறுப்பையும் அருவருப்பையும் குடுக்கும். அதை நம்ம கடந்து போகணும் தேவ். இதெல்லாம் நம்மள மீறி நடந்த ஒரு விஷயம். நம்மள மீறி வாழ்க்கையில நடக்குற எந்த விஷயத்துக்கும், நம்ம காரணம் ஆகவே முடியாது. இப்போவும் சொல்றேன்… உனக்கு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப் பிடிக்கலைன்னா, கண்டிப்பா எனக்கும் பிடிக்காது.
என்கிட்ட நீ இப்படித்தான் இருக்கணும். இப்படி இருந்தா தான் நான் சந்தோசமா இருப்பேன்னு நினைக்கிறதை தூக்கி போட்டுட்டு, ஃபிரீ யா லவ் பண்ணு. ஏன்னா நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்.
எனக்குத் தேவை நீ பழசை மறந்துட்டு, வெறும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தாம, எல்லா உணர்வையும் அட்லீஸ்ட் என்கிட்டயாவது வெளிப்படுத்தனுன்றது தான்.
எந்த நேரத்தில என்ன உணர்வு நம்ம தாக்குதோ அதை வெளிப்படுத்தாததுனாலேயே தான் எல்லா பிரச்சனையும் வரும் தேவ். அழுகை வந்தா அழுதுடனும். சிரிப்பு வந்தா சிரிச்சுடனும். கோபம் வந்தா காட்டிடனும்… மனசுலயே எல்லாத்தையும் வச்சுக்கிட்டா எல்லா உணர்வும் மரத்து தான் போகும்.
உனக்கு என் மேல இருக்குற காதலை, உனக்குப் பிடிச்ச மாதிரி என்கிட்ட காட்டு, கண்டிப்பா எனக்கும் அது பிடிக்கும்…” எனப் பேசி முடித்தவளின் கடைசி வரிகளில் இருவரின் இதழிலும் புன்னகை மலர, உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தவன் மனமோ எதில் இருந்தோ விடுபட்ட உணர்வு.
அவன் அமைதியாக இருப்பதை கண்டு சற்று குழம்பியவள் “என்ன ஆச்சு…” எனக் கேட்க, அவன் “இல்ல, வில்லன் கிட்ட பேசுன டயலாக் தான் வேஸ்ட் ஆகிடுச்சு. இதாவது யூஸ்ஃபுல் ஆ இருக்குமான்னு திங்க் பண்ணிட்டு இருக்கேன்.” என்றான் கேலியுடன்.
அதில் அவள் “டேய்ய்… என்னங்கடா நாக்கு தள்ள டயலாக் பேசுற வரை நல்லா கேட்குறீங்க… அப்பறம் மறுபடியும் முருங்கை மரத்துல ஏறுறீங்க. போங்கடா இனிமே நான் மௌன விரதம்” என்று சிரிப்புடன் கோப மொழியாகக் கூற,
அதில் தேவா, “சே சே, நான் உன் மாமா மாதிரி இல்ல இசை. நீ பேசுனது எல்லாம் கேட்டு குட் பாயா இருப்பேன்” என்றான் நல்ல பையனாக.
அதில் சிரித்தவள், “யாரு நீ நல்ல பையனா? சரியான திருட்டு பையன்டா நீ? உன்னைத் திருடன்னு என்னையவே நம்ப வச்சுட்டீல” என்று பொய்யாய் முறைக்க,
அவன், “நான் என்னைக்காவது சொன்னேனா, திருடுறேன்னு? நீயா அப்படி நினைச்சுகிட்டா, நான் என்ன பண்றது மியூசிக் டப்பா?” என்று பொங்கிய சிரிப்புடன் கேட்க,
அவள் “நான் உன்கிட்ட கேட்டேன்ல? நீ போலீஸான்னு. அப்போ நீ ஏதோ வாண்டட் லிஸ்ட்ல இருக்கேன்னு பேப்பர்லாம் காட்டுன..” என்று முறைத்தவளிடம்,
“அதுவா! அது நீ எப்படியும் என்னை கேட்ச் பண்ணி கேள்வி கேட்கப்பன்னு நினைச்சு, நான் பண்ணுன செட் அப்” என்றான் கண்ணடித்து.
அதில் தீப்பார்வை பார்த்தவள், அவன் பார்வையில் புன்னகைத்து “மாமா இன்னும் திருந்தலையா?” எனக் கேட்டாள். அவன் பெருமூச்சுவிட்டு, “நீ என்ன நினைச்சுட்டு இருக்க? அந்த ஆளு எவ்ளோ பெரிய கிரிமினல் தெரியுமா? அந்த ஆளுகிட்ட போய் செண்டிமெண்ட் டயலாக் பேசிகிட்டு காமெடி பண்ணிட்டு இருக்க” என்றதில் அவள் மேலும் முறைத்தாள். தேவா “சரி சரி… முறைக்காத! அன்னைக்கு நீ பேசுன டயலாக் கேட்டு அந்த ஆளு போலீஸ் ஜீப்ல ஏறல… நான் காட்டுன துப்பாக்கியைப் பார்த்து தான் ஏறினான்” என்றதும் ஆரு புரியாமல் பார்த்தாள்.
ஏற்கனவே மறைமுகமாக சிவனுக்கும் தேவாவுக்கும் ஒரு பனிப் போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்த சில நல்ல தலைவர்கள் தான் தேவாவை வைத்து சிவன் மற்றும் ராஜாங்கனின் ஊழல்களையும் தவறுகளையும் ஆதாரத்துடன் கண்டறிய முயல,
தேவா லைசென்ஸ் உடன் துப்பாக்கியும், இதனால் விபத்தாக சிவன் மற்றும் ராராஜாங்கனின் ஆட்களைச் சுட்டாலும், என்மேல் பழி வரக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்க, அவர்களும் அதனை ஆமோதித்தனர்.
அதன் படி, சிவனை பற்றிய ஆதாரங்களைப் பெற முயன்றபோது அவனுக்குத் தொந்தரவு கொடுத்த சிவனின் ஆட்களை, பேசக்கூட விடாமல் சுட்டுத் தள்ளிவிட்டான்.
அவர்கள் காட்டை விட்டு வெளியில் வரும் நாளுக்கு முந்தைய நாள் நேரடியாக சிவன் தேவாவிடம் டீல் பேச வந்திட,
தேவா எதையும் காதில் கூட வாங்காது மேலும் அவனைக் கோபப்படுத்திய அவனின் ஆட்களை சிவனின் முன்னேயே சுட்டு தள்ளிட, அதில் சிவன் மேலும் வெறியாகி விட்டார். அதன் பிறகே காட்டில் துப்பாக்கி சூடு நடந்தது.
அனைவரும் காட்டிலிருந்து வெளியில் வந்து விட்ட தகவல் வர, அங்கு விரைந்த சிவன் அப்போது தான் தேவா ஆருவை பார்த்துக் கொண்டே நடந்து வந்ததை கண்டார்.
சிவன் வரவும், அவரின் அருகில் நின்றிருந்த ஆருவை கண்டு அவன் கண்ணில் தெரிந்த தவிப்பை உணர்ந்து கொண்டவர், அதனாலேயே அவள்மேல் துப்பாக்கி வைத்து மிரட்டினார்.
அதன் பிறகு, நிஷிதா உண்மையை உளறி விட்டதை அறிந்து கொண்ட சிவன், அவளையும் கொலை செய்து விட்டு, கோபமாக வெளியில் சென்றிட, அந்த நேரத்தில் தான் ஆராதனா சிவனின் வீட்டை அடைந்தாள்.
தேவாவும் சிவன் அவர்களை வழி மறித்ததில், இதுவும் நல்லது தானென நினைத்து அவனை அங்கேயே சுட்டு விடலாமெனத் தான் நினைத்தான். ஆனால் அவன் எதிர்பாராதது ஆருவின் தாத்தாவும் கண்மணியும் அங்கு வந்தது தான். ஏற்கனவே கண்மணி குழந்தை இறந்ததை நேரில் பார்த்தவனுக்கு, அவளின் கணவரையும் அவர் முன் கொன்றிட ஏதோ தடுக்க, ஆரு அவரிடம் உருக்கமாக வசனம் பேசுகையில், பின்னேயிருந்து துப்பாக்கியை எடுத்து சிவனின் நெற்றியில் குறி வைத்தான்.
அவன் கண்கள் போலீஸ் ஜீப்பை கண் காட்ட, ஏற்கனவே அவன் பட்டு பட்டு எனச் சுட்டதை நேரில் பார்த்திருந்த சிவன், எங்கே உண்மையில் சுட்டு விடுவானோ என்று பதறி, அவன் சுடவும் தயங்க மாட்டான் என்று வெளியேறியவர் எப்படியும் வெளியில் வந்து விடலாம் என்ற மிதப்பில் ஜீப்பில் சென்று அமர்ந்தார். இதனைக் கேட்ட ஆரு “காட்… இவ்ளோ விஷயம் இருக்கா இதுல! ஆமா எப்படி அப்பா அம்மா இங்க வந்தாங்க என்ன சொன்ன அவங்ககிட்ட?” என்று கேட்க,
அவன் “ஹே மியூசிக் டப்பா! மணியைப் பார்த்தியா இட்ஸ் 3. காலைல வேலை இருக்கு. மீதியை நாளைக்கு கன்டினியூ பண்ணலாம். வந்து தூங்கு” என்று அவள் கையை எடுத்துத் தனக்குள் சிறைப்பிடித்து கொண்டு, கண்ணை மூடி உறங்கிட,
‘உன் வாயில இருந்து, ஒரு வார்த்தையை வர வைக்கிறதுக் குள்ள எனக்குத் தாண்டா கண்ணைக் கட்டுது’ என்று நகைத்தவள், அவனைப் பார்த்துக் கொண்டே உறங்கி விட்டாள்.
“விளக்கமாத்தாலேயே அடிப்பேன்… பொம்பளைப் புள்ளைங்க மாதிரியா இருக்கீங்க! எங்க அவ? இன்னும் மகாராணிக்கு விடியலையா?” என்று காலையிலேயே பர்வதம் மூன்று பெண்களையும் விளாசிக்கொண்டிருந்தார்.
அவர்களைக் கண்டு சிரிப்புடன் மூன்று ஆண்களும் நின்றிருக்க, அம்மு ‘ரொம்ப சிரிக்காத நாக்கை கட் பண்ணி விட்ருவேன்’ என்று முறைப்புடன் விஷ்வாவுக்கு சைகை காட்ட, அவன் “ஆண்ட்டி! இவள் என்னைத் திட்டுறாள் என்னன்னு கேளுங்க.” என்று கூடக் கொஞ்சம் எண்ணெய் ஊற்ற, அவரோ அம்முவின் காதைப் பிடித்துத் திருகி, “புருஷன்னு மரியாத குடுக்குறது இல்ல. காலங்காத்தால எந்திரிச்சு வேல வெட்டிய பாக்காம அந்தப் புள்ளைங்களை அடுப்பாங்கரைல விட்டுட்டு நீங்க மூணு பேரும் ஒய்யாரமா தூங்கிட்டு இருக்கீங்க…” என்று கத்திட, ஆராதனா அப்போது தான் லேசாக வெளியில் எட்டிப் பார்த்தாள்.
அவள் தலை முடியைப் பற்றி வெளிய இழுத்த பர்வதம், “மாப்பிள்ளை காலையில எந்திரிச்சு காபி தண்ணி கூடக் குடிக்காம வேலைக்குப் போறாரு… வெள்ளனையே எந்திரிச்சு சமைச்சு குடுப்போம்ன்னு இல்லாம, ஆடி அசைஞ்சு எந்துருச்சு வர்ற. உன் காலை ஒடைச்சா தான் சரிப்படுவ” என்று திட்ட, அவள் “மா என் கையில அடிப்பட்டுருக்கு நீ பாத்தியா இல்லையா?” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“முடியாம படுத்த படுக்கையா இருந்தாலும், புருசனுக்கு என்ன பண்ணணுமோ, அதை சரியா பண்ணனும்.” என்று கரித்துக் கொட்ட, கண்மணி, “அட விடுங்க அண்ணி, சின்னப் புள்ளைங்க தான, போகப் போக சரியாகிடுவாங்க” என்று சப்போர்டுக்கு வந்தார். கண்ணம்மாவுக்கு மருமகளை பற்றித் தெரியும் ஆதலால் கமுக்கமாக இருந்து விட்டார்.
அவர் “யாரு இதுங்க சின்னப் புள்ளைங்களா…?” என்று மேலும் திட்ட ,நால்வரும் தன்னை நொந்து நின்றிருந்தனர்.
காலையில் ஆண்கள் மூவரும், அவரவர் துணைகள் தூங்கிக் கொண்டிருந்ததில், அடுக்களையில் சமையல் வேலை பார்க்க, மாடியில் காயப்போட்டிருந்த துணியை எடுத்து மடிக்க என ஆளுக்கொரு வேலை பார்த்ததைக் கண்ட பர்வதம் பொங்கி விட்டார்.
நிஷாந்த் பர்வதம் அருகில் வந்து “ஆண்ட்டி, இப்போ என்ன ஆகிடுச்சு. எங்களுக்கு இது ரொம்ப பழகுன வேலை தான். அதோட… வீட்டு வேலை பார்க்குறது என்ன அவ்ளோ பெரிய கொலை குத்தமா?” என்றிட, அவர், “பொம்பளைப் பிள்ளைங்க தான் இந்த வேலை எல்லாம் பார்க்கணும்…” என்றார்.
விஷ்வா, “அவங்களும் வேலைக்குத் தான போறாங்க ஆண்ட்டி. இந்த வேலையை நாங்க பார்க்குறதுல என்ன தப்பு. நாங்க ஒண்ணும் டெய்லி பார்க்கலயே. அவங்க இங்க வந்ததுல இருந்து காலையில எல்லா வேலையும் அவங்க தான் பார்த்துட்டு வேலைக்கும் போறாங்க.
எங்களுக்காகவும் சேர்த்து தான வேலை பார்க்கறாங்க. எங்க வேலையை நாங்க பிரிச்சு பார்க்குறதுல என்ன தப்பு…” என்றதில் அவர் மேலும் பேச வர,
அருண், “ஆன்ட்டி… சின்ன வயசுல இருந்து எங்க வேலையை நாங்களே தான் பார்த்துக்கிட்டோம். நாங்க ஒருத்தரை பார்த்துக் கணும்னு நினைச்சாலும் யாரும் எங்களுக்குக் கிடையாது. இப்போ வைஃப்க்காகப் பார்த்துப் பார்த்து செய்றது ரொம்ப பிடிச்சு தான் இருக்கு.” என்றிட அவர் தலையை ஆட்டி உள்ளே சென்றதும், கண்மணி, “அப்டி சொல்லுங்க தங்கங்களா” என்று மூவருக்கும் திருஷ்ட்டி சுத்தினார்.
அவர்கள் சிரித்து விட்டுப் பெண்களைப் பார்க்க, அவர்களோ நிஷாந்த் பேசும் போதே சோபாவில் விட்ட தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர். அருண் “அட பக்கிங்களா… ஃபீல் பண்ணுவீங்களேன்னு டயலாக்லாம் பேசுனா இப்படி தூங்குதுங்க!” என்று முறைக்க,
விஷ்வா, “ரேடியோல பாடும் கானம்! இதுங்களுக்குலாம் இல்லவே இல்ல மானம்! ஹே டண்டணக்கா ஹே டனக்கு டக்கா…” என்று டி.ஆர் ஸ்டைலில் பேச, இருவரும் கொலை வெறியுடன் அவனைத் துரத்தினர்.
பின் ஆராதனா தவிர அனைவரும் வேலைக்குக் கிளம்பி விட, ஆரு கணேசனை பிடித்து, “தாத்ஸ் என்ன தான் ஆச்சு?நீங்க எப்படி இங்க வந்தீங்க…?” என்று ஆர்வமாகக் கேட்டிட,
அவர் “தம்பி, எதுவும் சொல்லலையா?” எனக் கேட்டார். அவள் இல்லை என்றதும், அவர் முந்தைய நாள் நடந்ததை கூற ஆரம்பித்தார்.
சிவன் ஜெயிலுக்கு போன அடுத்த ஒரு மணி நேரத்தில், அவரைப் பிடித்தால் பல அரசியல் முதலைகள் மாட்டி விடுவார்கள் என்ற பயத்தில், சிவனை வெளியில் எடுக்க டெல்லியில் இருந்து எல்லாம் போலீசிற்கும் அரசியல் தலைவர்களுக்கும் அழுத்தம் வந்தது. அதோடு, தேவா வைத்திருந்த ஆதாரங்களையும் அழிக்க முயற்சி நடக்க, சிவன் அடிபட்ட புலியாய் தேவாவை பலி வாங்க வேண்டும் என்று கோபத்துடன் இருக்க, ஆராதனா மூலமாக அவனை அழ விட நினைத்தார்.
அவள் சென்றிருந்த மீட்டிங்கில் அவளைக் கொல்ல ஆட்கள் அனுப்பி இருக்க, அவள் தேவாவின் நினைவில் லைப்ரரி வந்து விட்டாள். அப்போது தான் தமி வெளியில் நின்று போன் பேசிக்கொண்டிருக்க அவள் அவளைக் காணாமல் உள்ளே சென்று தேடினாள்.
ஒரு அறைக்குச் சென்று புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கிக் கத்தியுடன் ஒருவன் வர, அப்போது அங்கு லைப்ரரியன் வந்து விட்டதில், அவன் கடுப்பானான்.
அவளை, இப்போதே கொலை செய்ய வேண்டும் என்று உத்தரவும் வந்திட, வெளியில் வந்தவன் கர்சீப்பில் நெருப்பை பொருத்தி, ஜன்னல் வழியே புத்தகத்தில் போட்டு விட அங்கு நெருப்பு பரவ ஆரம்பித்தது.
அவள் இறந்து விடுவாள் என்று எண்ணி இருந்த சிவன் அவள் பிழைத்து விடவும், கோபமாகக் கண்மணிக்கு போன் செய்து, “இன்னைக்கு அவள் தப்பிச்சுட்டா! ஆனால் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. அவன் மட்டும் என்னை மாட்டி விடணும்னு நினைச்சா! நீ ஆசையா வளர்த்த பொண்ணு உயிரோடயே இருக்க மாட்டா!” என்றிட அவருக்கு அப்போது தான் நடந்த விபத்தே தெரிந்தது.
ஒரு முடிவுடன் தேவாவிற்கு போன் செய்தவர், சிவன் பேசியதை பற்றிக் கூறி, “அந்த ஆளைச் சும்மாவே விடாத… எனக்கென்ன ஆனாலும் ஆருவுக்கு எதுவும் ஆகக் கூடாது.” என்றார் கோபத்துடன். அவனுக்கும் சிவன் மேல் சந்தேகம் தான். அதனாலேயே இந்த சம்பவத்தைப் பற்றி, விசாரிக்கச் சொல்லி நண்பர்களை அனுப்பினான்.
“நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், போனை வைத்து விட்டு, அவர் பேச்சில், ஏதோ உணர்ந்தவன், அடுத்த பிளைட்டில் மதுரைக்கு விரைந்தான். அதோடு, கணேஷனுக்கு போன் செய்து, கண்மணியை, பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் படி கூறியதில் அவர் குழம்பி, கண்மணியிடம் வெகுநேரம் பேசி இருந்து விட்டு, அறைக்குச் சென்றார்.
அதற்குள் தேவாவும் வீட்டிற்கு வந்திட, அந்த நேரத்தில் அவனை எதிர்பாராமல் முதலில் விழித்தவர்கள், பின் “வாங்க தம்பி. ஆரு வந்துருக்காளா” என்ற கண்ணம்மாவின் குரலில் தான் சற்று நினைவிற்கு வந்து, வீட்டிற்கு வந்தவனை எதுவும் பேச மனமற்று உள்ளே அழைத்தனர்.
அவன் அதனைப் பொருட்படுத்தாமல் “அவங்க எங்க” எனக் கேட்க, அவர்களோ புரியாமல் பார்த்தனர். கண்மணி அறையிலிருந்து சேர் சத்தம் கேட்டதில், அவன் விறுவிறுவென அங்கு சென்று கதவைத் தட்டினான்.
உள்ளிருந்து பதில் வராமல் போகவே, கதவை உடைத்து உள்ளே சென்றவன், அவர் அவசரமாக தூக்கு போட்டு, சேரை தள்ளி விடுவதைப் பார்த்து, உடனே சென்று பிடித்தான். அவரை அந்த நிலையில் கண்ட குடும்பத்தினர் பதறிக் கண்ணீர் வடிக்க, தேவா அவரைப் பார்த்து “ஏன் இப்படி பண்ணுனீங்க” என்றான் கோபமாக.
“நான் உயிரோட இருந்தா தான என் மூலமா ஆருக்கு பிரச்சனை வரும். நான் இல்லைன்னா இந்தக் குடும்பத்துக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தமே இருக்காதுல… நான் உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்” என்று அழுதவரைக் கண்டு, அவனுக்குத் தான் வருத்தமாகி விட்டது.
பாண்டியன் “என்னமா நீ? நாங்கல்லாம் இல்லையா உனக்கு?” என்று வருந்த, கண்ணம்மா, “ஏண்டி உன்ன பெத்தவங்க நாங்க உயிரோட இருக்கும்போது ஏண்டி இந்த வேலைய பார்த்த…?” என அழுது கரைந்தார்.
கணேசன் “நீங்க எப்படி தம்பி வந்தீங்க” எனக் கேட்டிட, அவன் “இவங்க எனக்கு போன் பண்ணும்போது குரல் சரி இல்ல. ஏதோ தப்பா பட்டுச்சு அதான் வந்தேன்.” என்றான் அமைதியாக. அப்போது தான் அவர்களுக்கும் ஆருவிற்கு நடந்த விபத்தே தெரிந்தது.
கணேசன் அவன் கையைப் பிடித்து, “ரொம்ப நன்றி தம்பி. இவள் இல்லைன்னா நாங்களும் சேர்ந்தே போயிருப்போம்” என்று கண்ணீர் மல்கக் கூற, தேவா, “ஏன் எல்லாரும் சாகுறதை பத்தியே பேசுறீங்க…” எனக் கடிந்து விட்டு, கண்மணியிடம் “இசையைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா? நீங்க இப்படி முட்டாள்தனமா முடிவெடுத்து இறந்துட்டா, அவள் நிம்மதியா இருப்பாளா? ஒரு விஷத்தைப் புருஞ்சுக்கோங்க. நீங்க இருந்தாலும் இல்லைன்னாலும், அந்த ஆளு மாறப்போறதும் இல்ல, என்னை டார்கெட் பண்றதை நிறுத்தப் போறதும் இல்லை.” என்றதும் கண்மணி தலையைக் குனிந்து கண்ணீர் வடித்தார்.
அதற்கு மேல் என்ன பேசுவது எனத் தெரியாமல் கிளம்பிய அவனுக்கு, அவரை விட்டுப் போகவும் முடியாமல் ஏதோ தடுக்க, சிறிது தடுமாறியவன் ஒரு முடிவோடு, அவர் அருகில் வந்து, “என் அப்பா அம்மா உயிரோட இருந்தும் கூட, நான் அநாதை ஆஸ்ரமத்துல தான் வளர்ந்தேன். எனக்குன்னு சொந்தம் பந்தம்ன்னு நிறைய பேர் இருக்காங்க. ஆனால் அவங்க யாருக்கும் நான் உயிரோட இருக்குறது கூடப் பிடிக்கல. அப்படியும் நான் ஏன் இருந்தேன்னா அதுக்கு காரணம் என் பிரெண்ட்ஸ்ஸும், எங்க ஆஸ்ரம நிர்வாகியும் தான். நான் சாகணும்னு நினைக்கிற அத்தனை பேர் மத்தியில நான் வாழணும்னு நினைச்ச ஜீவன்கள் இவங்கல்லாம்… நம்ம சாகணும்னு நினைக்க எவ்வளவோ கெட்ட விஷயம் இருக்கலாம். ஆனால் நம்ம வாழணும்னு நினைக்கிறதுக்கு கண்டிப்பா ஒரே ஒரு ரீசன் ஆவது இருக்கும். அந்த ஒரு ரீசன நினைச்சா யாருக்கும் தற்கொலை பண்ணிக்க வேண்டிய அவசியமே வராது. உங்களுக்காக அப்பா, அம்மா அண்ணா, அண்ணி, மருமகள்” என்றவன் சிறிது தயங்கி விட்டு,
“உங்களுக்கு ஒரு பையனும் இருக்கும்போது எங்களை விட்டுட்டு போகணும்னு நினைச்சது நியாயமா?” என்று தலையைச் சாய்த்து கேட்க, அவர் திகைத்து விட்டார்.
“என்னைப் பையனா நினைக்கிறதும் நினைக்காததும் உங்க இஷ்டம். ஆனால் இசைக்காகவாது இனிமே இப்படி பண்ணாதீங்க. அவள் கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது.” என்றவன், அங்கிருந்து எழுந்து பாண்டியனையும் பர்வதத்தையும் பார்த்து,
“இசை மேல எந்தத் தப்பும் இல்லை. என்னால தான் அவள் அப்படி அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா! என்ன இருந்தாலும் நான் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டுருக்கணும். நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னுச்சுடுங்க. உங்களுக்குக் கோபம்னா அதை என்மேல காட்டுங்க. அவள் கிட்ட பேசுங்க ப்ளீஸ்!” எனக் கூறி விட்டு நகர்ந்தவனை, கண்மணி “நில்லு” என்றார்.
அவன் புரியாமல் பார்க்க, “பையன்னு சொன்ன, அப்போ இப்படி தான் அம்மாகிட்ட சொல்லாம போவியா?” என்று மிரட்டலாகக் கேட்க, அவன் திருதிருவென விழித்து விட்டு, சட்டெனப் புன்னகைத்தான்.
“இனிமே இப்படி பண்ணமாட்டீங்கல்ல…?” என்று கேட்டவனிடம்,”ஓ! இப்படி பண்ணமாட்டேன்னு தெரிஞ்சுக்க தான் பையன் அது இதுன்னு சொன்னியா? மனசுல இருந்து சொல்லலையா?” என்று எதிர்கேள்வி கேட்டிட,
“உங்களுக்கு இசையே பரவாயில்லை மா… இனிமே இந்த மாதிரி பண்ணிப் பாருங்க. அப்பறம் இருக்கு உங்களுக்கு” என்று போலியாக மிரட்டி முடிக்கையில், இருவர் கண்ணிலும் கண்ணீர்.
பாண்டியனுக்கும் பர்வதத்திற்கும் அவன் பேசியது பாரத்தை கொடுக்க, பாண்டியன் “வந்துட்டு, நைட்டோட நைட்டா ஏன் மாப்பிள்ளை போறீங்க. நாளைக்கு கிளம்பலாம், நீங்க போய் ஓய்வெடுங்க.” என்றிட, அவன் அவரை வியப்பாகப் பார்த்தான்.
பின், மறுநாள் ஆருவை பார்க்க அவளின் குடும்பமும் அவனுடன் கிளம்ப, ஆருவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்றெண்ணி, அவளுக்கு போன் கூடச் செய்யாமல் அவர்களை அழைத்து வந்தான். இதனைக் கேட்டு ஆருவிற்கு நெஞ்செல்லாம் படபடத்தது. ‘என்ன காரியம் செய்ய இருந்தாங்க அத்தை’ என்று பதறி, அவரிடம் சென்று சண்டையிட்டு கட்டிக்கொண்டு அழுதாள்.
அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த தேவா, அழுது கொண்டு இருந்த ஆருவைக் கண்டு, அழாத என்று கண்ணைச் சுருக்கி சொல்ல, அவள் கண்ணை துடைத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.
அவள் பின்னே சென்றவன், “இசை” என அழைக்கும் முன், அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “தேங்க்ஸ் தேவ்… நீ மட்டும் கரெக்ட் டைம்க்கு போகலைன்னா அத்தை” என்று அழுததில், அவன் தான் பேயறைந்ததை போல் நின்றான்.
இப்போது நடுக்கம் இல்லை என்றாலும், செய்வதறியாமல் அப்படியே நிற்க, அவள் தான் செய்த காரியத்தை உணர்ந்து தன்னையே திட்டிக் கொண்டு அவனிடமிருந்து விலகி, அவனைப் பாராமல் தயங்கியவள், “சாரி… நான் நான்!” என்று திணறி ‘இனிமே இப்படியொரு முட்டாள்தனத்தை பண்ணவே கூடாது’ என நொந்தாள்.
அவன் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “என்ன மியூசிக் டப்பா திடீர்னு புருஷனை கட்டிப்பிடிச்சு, ஷாக்லாம் குடுக்குற… ஹ்ம்ம்?” எனக் குறும்பாகக் கூறியவனை, கண்ணை சிமிட்டிக் கொண்டு குற்றம் செய்து விட்டவள் போன்று பார்த்திட, அவளின் பார்வையில் சிதைந்தவன், அவளை இழுத்து, நெஞ்சில் போட்டு, “லூசு மியூசிக் டப்பா! என்கிட்ட எதுக்குடி தேங்க்ஸ், சாரிலாம் கேட்குற? உனக்கு எப்படி லவ் பண்ண பிடிச்சுருக்கோ அப்படியே பண்ணு. எனக்கும் அது கண்டிப்பா பிடிக்கும்.” என்றவனை நிமிர்ந்து கலங்கிய கண்ணுடன் பார்த்தவளிடம், நெற்றியை காட்டி “கிஸ் குடு” என்று சைகை செய்ய, அவள் சிறு புன்னகையுடன் அழுந்த முத்தமிட்டாள்.

