
அத்தியாயம் – 26
இத்தனை நாள் தேவா பேசியதையும், அடித் ததையும் கூடத் தன்னை பாதிக்காதவாறு பக்குவப்படுத்திக் கொண்ட ஆராதனா,
இன்று, அவன் பேசிய வார்த்தையில் உடைந்து போனாள். யார் முகத்தையும் காணாமல் குளியலறைக்குள் புகுந்தவள், அழுது கரைந்தாள்.
அவளையே பாவமாகப் பார்த்திருந்த மூன்று ஆடவரையும் கண்டு தமி, “அதான் பேசுற வரை பேசிட்டு அவன் போய்ட்டான்ல, நீங்களும் பின்னாடியே வால் புடிச்சுகிட்டு போக வேண்டியது தான…” என்றாள் கோபமாக.
அருண், “ப்ச் நாங்க தான் ஏற்கனவே சொன்னோம்ல. அவன் கோபத்துல என்ன பேசுறோம் என்ன பண்றோம்னே தெரியாம நடந்துப்பான் அவன் கோபத்தை அவளால தாங்க முடியாதுன்னு, யாராவது கேட்டீங்களா?” என்று சலிப்பாகக் கூற,
அம்மு, “ஓ அப்போ அவன் பேசிட்டு போனது தப்பு இல்ல. அவன் கோபம் தெரிஞ்சு அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் தப்பு அப்படித்தான?” என்று சீறிட, விஷ்வா “அப்படி சொல்லல அம்மு…” என்று பேசும் முன், “தயவு செஞ்சு மூணு பேரும் கிளம்புறீங்களா! ப்ளீஸ்…” என்றாள் கடுப்பாக.
நிஷாந்த், “ஐயோ, இப்போ எதுக்கு நீங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க… இதை இப்படியே விடக் கூடாது, அவன் கிட்ட பேசலாம், வாங்க ரெண்டு பேரும்” என்று நண்பர்களை இழுத்துச் சென்றான்.
வைஷுதான், “அம்மு, அவன் பேசுனதுல அவள் ஏதாவது பண்ணிக்க போறா. கதவைத் தட்டு!” என்று பயத்துடன் பேச, அவர்கள் தட்டும் முன் அவளே வெளியில் வந்தாள்.
“டைம் ஆச்சு கிளம்பலாம்” என்றவள், வெளியிலேயே சென்றிருக்க, அவளிடம் என்ன பேசுவது என்று கூட மூவருக்கும் புரியவில்லை.
வந்த வேலை முடியும் வரை, சென்னையிலேயே சிறிதாக அலுவலகம் வைத்திருந்தனர் நால்வரும். தேவா, அங்கிருந்த அறையில், தலையில் கை வைத்து அமர்ந்திருக்க மூவரும் அவனைச் சுற்றி வளைத்தனர்.
நிஷாந்த், “பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேச மாட்டியா தேவா? உன்னை நம்பி வந்த பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவியா?” என்று கடிந்து கொள்ள, அவன் அமைதி காத்தான்.
விஷ்வா “டேய் உன்கிட்ட தான் கேட்குறோம். வாயைத் திறந்து பதில் பேசு! அட்லீஸ்ட் இதுக்காவது ரியாக்ட் பண்ணு தேவா!” என்று அழுத்திக் கேட்க,
சட்டென எழுந்தவன், “என்ன ரியாக்ட் பண்ணனும் ஹான்? அவள் பேச்சைக் கேட்டு ஆடுனீங்கள்ல… நான் வேணா வேணான்னு சொல்லியும் கல்யாணம் பண்ண வச்சீங்கள்ள! இப்போ மட்டும் எதுக்கு என்கிட்ட வந்து கேள்வி கேட்குறீங்க? கெட் லாஸ்ட்!” என்று பைலை தூக்கி எறிந்தான்.
அருண் மட்டும் அவர்களைக் கவனியாது, சத்தம் இல்லாமல் வெளியில் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியைக் கண்ணாடி வழியே பார்த்துப் பேச்சு வராமல், “மச் மச்சான் டீவி… ! நியூஸ்” என்று அதனைக் கைக்காட்ட, அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருணுக்கு காலையில் நடந்ததெல்லாம் படமாக ஓடியது.
அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவன் எதிரில், “டேய்ய்ய்…” என்று கத்திக் கொண்டு வந்தாள் தமி. அவன் என்னவென்று விழி உயர்த்தி வினவ, “என்னடா சட்டை பட்டனை போட்டு வச்சுருக்க… லூசு” என்று கேட்டதும் தான் ஏதோ யோசனையில் பட்டனை மாற்றிப் போட்டு, சட்டை அலங்கோலமாக இருப்பதே அவனுக்கு உரைத்தது.
அதில் அசடு வலிந்தவன், அதனை சரி செய்யும் முன், அவளே அவனை நெருங்கிப் பட்டனை போட ஆரம்பித்தாள். அவளின் நெருக்கத்தில் கிறங்கியவன், அவள் கைகளில் ஒற்றை விரலால் கோடிழுக்க, அவன் கையைப் பிடித்துத் தடுத்தவள் “என்ன பண்ற அருண்…? பேசாம நில்லு!” என்று நெளிந்தாள்.
அவன் விரல்களோ அவள் மேனியில் ஊர்வலம் சென்று கொண்டிருக்க, அவனைத் தள்ளியவள் “சி பே! உனக்குப் போய் ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு…” எனச் சிறு வெட்கத்துடன் நகரப்போனவளை,
பிடித்துத் தன் கை வளைவுக்குக் கொண்டு வந்தவன், எப்போதும் போல், “ஏன் யது… உங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக ஏதாவது வழி இருக்கா?” என்றான் குறும்பாக.
அதில் அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றியவள், “இது ஒரு வழி பாதை… திரும்பிப் போகணும்னு நினைச்சா அது நான் போனதுக்கு அப்பறம் தான்!” என்று நக்கலடித்ததில் பதறி விட்டான்.
“ஹே யது என்ன பேசுற…! இப்படி விளையாட்டுக்குக் கூட பேசாத ப்ளீஸ்…” என்று முகத்தைச் சுருக்க,
அவனின் பதட்டத்தை ரசித்தவள், “நீ இனிமே என்னை விட்டு எஸ்கேப் ஆகுறதை பத்தி யோசிச்சு பாரு. அப்பறம் இருக்கு உனக்கு…!” என்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள். அதில் மெலிதாய் நகைத்தவன் “இன்னைக்கு என்ன பிளான்?” எனக் கேட்டான் எப்போதும் போல். “இன்னைக்கு லைப்ரரில ஒரு ஒர்க் இருக்கு. ஆனால் நான் தனியா தான் போறேன். செம்ம போர்…!” என்றாள்.
“ஏன் மத்தவங்க உன் கூட வரலையா” என அவள் காதோரம் இருந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டே கேட்க, “இல்ல அவங்க நான் போற இடத்துக்குப் பக்கத்துக்கு பில்டிங்க்கு மீட்டிங் போறாங்க…” என்னும் போது தான், தேவா கத்தியது. வெகுநேரம் விஷ்வாவும் நிஷாந்தும், அருணை உலுக்க அப்போது தான் நினைவிற்கு வந்தவன், “யதுடா… இங்க தாண்டா போயிருக்கா! யது இங்க தான் போயிருக்கா!” என்று காட்ட,
அவர்களோ அந்தச் செய்தியைக் கண்டு அதிர்ந்து நின்றனர். அவள் சென்றிருந்த அந்த மிகப்பெரிய லைப்ரரி எரிந்து கொண்டிருந்தது. உடனே நால்வரும் அவசரமாக அங்கு விரைய, அருண் தான் பேயறைந்ததை போன்றிருந்தான். முதன் முதலாக ஒரு சொந்தத்தின் பிரிவின் வலியை உணர்ந்தவன் தவித்திருக்க,
மற்ற இருவரும் “அவளுக்கு ஒண்ணும் ஆகிருக்காதுடா… நீ ரிலாக்ஸா இரு.” என்று அமைதி படுத்த,
“என் யதுடா! அவள் எனக்கு வேணும்டா…!” என்று முகத்தை மூடி அழுகவே ஆரம்பித்தவனை செய்வதறியாது பார்த்தனர்.
சிறிது சிறிதாய் நெருப்பு அந்தக் கட்டடம் முழுதும் பரவி, கட்டிடத்தில் சில பகுதி கீழே விழுந்து கொண்டிருக்க, தீயணைப்பு வாகனம் அந்த நெருப்பை அணைக்க முயன்று கொண்டிருந்தது. அதனைக் கண்ட அருணுக்கு நெஞ்செல்லாம் படபடக்க, “யது” என்று கத்திக் கொண்டு உள்ளே செல்ல விழைந்தவனை, தேவா, “அருண் என்ன பண்ற…? போகாத!” என்று பதட்டத்துடன் தடுக்க, அவன், “எனக்கு என் யது வேணும்டா… நான் போறேன் எனக்கு அவ வேணும்.” என்று அழுகும் போதே, தூரத்தில் அந்த நெருப்பையே அதிர்ச்சியுடன் பார்த்து நின்றிருந்த தமியை கண்டவன், திடுதிடுவென தேவாவை தள்ளி விட்டு, அவளை நோக்கிச் சென்றான்.
சென்றவன், அவளை இறுக்க அணைத்துக் கொண்டு, “உனக்கு ஒண்ணும் இல்லைல யது… உனக்கு ஒண்ணும் ஆகலைல” என்று நடுக்கத்துடன் கேட்க, அப்போது தான் அவன் நடந்ததை அறிந்து பயந்திருக்கிறான் என்று உணர்ந்தவள்,
“ஹே, எனக்கு ஒண்ணும் இல்ல அருண். நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சொல்வதையும் பொருட்படுத்தாது, அவள் கழுத்தில் புதைந்து அழுது தீர்த்தான்.
மற்ற மூவரும் தமியை கண்டதில் நிம்மதியாக, அவளோ அவர்கள் பார்ப்பதை கண்டு நெளிந்து அருணை தள்ள முயல, தேவா “மத்தவங்கள்லாம் எங்க” எனக் கேட்டான் இசையைத் தேடிக் கொண்டு.
அருண் அப்போது தான் சற்று சமன்பட்டு அவளிடமிருந்து விலக, அவள் “அவங்கள்லாம் வேற இடத்துல…” என்னும் போதே, அம்முவும் வைஷுவும் அங்கு ஓடி வந்து தமியின் நலனை வினவி விட்டு, “ஆரு எங்க” எனக் கேட்க,
அவள் புரியாமல் “எங்கன்னு என்கிட்ட கேட்குறீங்க? அவள் உங்க கூடத் தான இருந்தாள்…” என்றாள்.
இருவரும் அதிர்ந்து “கடவுளே! அவள் மீட்டிங்ல இருந்து பாதியிலேயே வந்துட்டா… உன் கூட இருக்கேன்னு சொல்லி விட்டு தான், இங்க வந்தா! நீ அவளைப் பார்க்கவே இல்லையா?” என்றதில் அனைவரும் அதிர, தேவா அடுத்த நொடி உள்ளே சென்றிருந்தான்.
‘டேய்’ என்று அவனின் நண்பர்கள் கத்தக் கத்த, உள்ளே புகுந்தவன், “இசை! இசை! எங்க இருக்க?” என்று அங்கு வந்த நெருப்பு புகையையும் பொருட்படுத்தாது
“என்கிட்ட வந்துடு இசை!” என மனதில் கதறிக் கொண்டு அவளைத் தேட, ஆராதனா சரியாக ஒரு அறையில் மாட்டிக் கொண்டாள். அங்குத் தீப்பிடித்ததில் அந்த இடமே சிவப்பு நிறத்தில் எரிய, அதைவிட, அங்கு வந்த புகை அவளை மூச்சடைக்க வைத்தது. இதில் காலையில் தேவா சொன்ன ‘செத்துரு’ என்ற வார்த்தை வேறு அவள் மனதில் தீயாக எரிய, ‘நான் உண்மையிலேயே செத்துருவேனா தேவ்? உனக்கு என் காதல் கடைசி வரை புரியவே இல்லைல? நான் செத்ததுக்கு அப்பறமாவது உன் ஃபீலிங்ஸ வெளிப்படுத்துவியா தேவ்? ஐ லவ் யூ டா!’ என்று நொந்தவள், அந்த இடம் முழுதும் தீப்பரவியதில் ‘ஆ’ வெனக் கத்தினாள்.
அந்த இரைச்சலிலும் தன்னவளின் குரலை நோக்கி விரைந்தவன், நெருப்புக்கு மிக அருகில் அவள் மயங்கி இருந்ததை கண்டு, சட்டென அவளைக் கையில் தூக்கி வெளியில் விரையும் போதே, “இசை…. இங்க பாருடி… காட்!” என்று அவள் கையில் இருந்த காயத்தைக் கண்டு நடுங்கியவன்,
“வலிக்குதா இசை… நம்ம ஹாஸ்பிடல் போய்டலாம். சீக்கிரம். ம்ம்… உனக்கு ஒண்ணும் இல்ல இசை” எனத் தன் போக்கில் புலம்பிக் கொண்டு வெளியில் வந்து கீழே கிடத்தியவன்,
“இசை கண்ணைத் திற இசை. என்னைப் பாரு இசை!” என்று அவள் கன்னத்தைத் தட்ட , அவள் தான் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள்.
மற்றவர்கள் அவளை அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, தேவா “இசை என்னைப் பாரு இசை ப்ளீஸ்…! எனக்குப் பயமா இருக்கு இசை. என்னைப் பாரு…!” என்று கத்தியவன், உள்ளே இருந்த புகையில் மூச்சுக்கு திணறி இருப்பாள் என்றெண்ணி, பட்டென அவள் மூச்சுக்குழலில் அவன் மூச்சை நிரப்ப, அப்போதும் அவளிடம் அசைவில்லை.
அதில் மேலும் உதறல் எடுத்ததில், மேலும் மேலும் அவளுக்குத் தன் மூச்சை புகுத்தும் போதே, அவளிடம் சிறு அசைவு தென்பட, அப்போது வந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவளை ஐசியூவில் அனுமதிக்க, தேவா தான் நடந்தது எதையுமே புரிந்து கொள்ள முடியாமல், ‘இசை என்கூட இல்லையா? அவள் என்கூட இருக்க மாட்டாளா? அவள் இல்லாம எனக்குப் பயமா இருக்கே! நான், நான் எப்படி அவள் இல்லாம இருப்பேன்…?’ என்று நடுக்கத்தை மறைக்கவும் முடியாமல், பேசக்கூட முடியாமல், மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தான்.
அவனின் நண்பர்கள் தான் அவனைப் பிடித்து, “தேவா… என்ன ஆச்சுடா?” என்று பதறிட, பேசக்கூட முடியாதவனாய்,
“இசைடா… என்… அவள்… அவள் என்கிட்ட வந்துடுவாள்ல… அவளுக்கு ஒண்ணும் ஆகாதுல?” எனக் குரலில் ஏக்கத்தையும், பயத்தையும், கண்ணில் நீரையும் தேக்கிக் கேட்க,
அவர்களுக்கு, ‘அவள்மேல் இவனுக்கு இவ்ளோ பாசமா?’ என்று வியந்து அவனைச் சமாதானப்படுத்த, வைஷுவும் தமியும் அவள் அறையையே பார்த்துக் கண்ணீர் விட, அம்முவுக்கு, தேவா மேல் தான் கடுங்கோபம் வந்தது.
அவன் அருகில் சென்றவள், “இப்போ, எதுக்குடா ஓவரா அவள் மேல பாசமா இருக்குற மாதிரி நடிக்கிற…? நீ தான அவளைப் போய் சாகச் சொன்ன. இப்போ சந்தோசம் தான உனக்கு? உன் கோபம், உன் வாழ்க்கைன்னு இனிமே நிம்மதியா இருப்பீல… உன்னை யாரும் எதுவும் கேட்கப் போறது இல்லை.” என்று கோபத்தில் பொங்கிட, அவனோ மேலும் நொந்து போனான்.
விஷ்வா, “அம்மு அமைதியா இருக்கியா?” என்று கடிந்ததில், “என்னால முடியாது… இவன் அப்படி பேசுனதை நினைச்சு தான் அவள், மீட்டிங்ல கூட இருக்க முடியாம வெளிய வந்தா. இல்லைன்னா அவள் அங்க போயிருக்கவே மாட்டா!” என்றவள், தேவாவிடம்,
“நான் தெரியாம தான் கேட்குறேன் அவள் என்ன தப்பு பண்ணா? உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நீ அவளை அடிச்சதையும் திட்டுனதையும் கூட பெருசா எடுத்துக்காம, நீ என்னைக்காவது மாறுவன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாலே, அவளைப் போய் சாக சொல்லிட்டீல!” என்று நிறுத்திட,
தேவா தான் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப இயலாது “இப்போ என்ன சொன்ன? அவ அவளுக்கு என்னைப் பத்தி தெரியுமா?” என்று புருவத்தைச் சுருக்கி கேட்டதில்,
வைஷுவும் தமியும், அம்முவை தடுத்தனர். அவள் அமைதியாக இல்லாமல், “எல்லாமே தெரியும். திலகன் சார் உன்னைப் பத்தி எல்லாமே சொன்னாரு…! அதைத் தெரிஞ்சதுக்கு அப்பறம் தான், அவள் உன்னைக் கல்யாணமே பண்ணிக்கிட்டா உன்னை வற்புறுத்தி. அவள் அம்மா அப்பாவைக் கூட எதிர்த்து… அவளுக்கு அவள் குடும்பம்னா எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? அவ மாமாவோட தப்பை கண்டுபிடிச்சு, அவள் அத்தை உடைஞ்சு போயிருக்குற நேரத்தில கூட அவள் உன்னைப் பத்தி மட்டும் தான் யோசிச்சா…
எங்க, நீ விட்டுப் பிடிச்சா அவளை விட்டுப் போய்டு வியோன்னு பயத்தில, அந்த நிலைமையில எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கிகிட்டு, உங்கிட்ட அடியும் வாங்கிகிட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணவளை, ஈஸியா செத்துப்போன்னு சொல்லிட்டீல…” என்று வழிந்த கண்ணீரை துடைத்தவள்,
அவன் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, “யாரோ பண்ண தப்புக்காக, ஏண்ணா எங்க எல்லாரையும் தண்டிக்கிற…? அவள் காதலை நீ ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்ல, ஆனால் அவளைக் கஷ்டப்படுத்தாதண்ணா… ப்ளீஸ்!” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்து அழுதவளை கண்ட விஷ்வாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அருணும் நிஷாந்தும் அதே பாவனையோடு தத்தம் மனைவியைக் காண,
அப்போது மருத்துவர் வந்தவர் நெருப்பு புகையில் மூச்சு திணறியதில் தான் மயங்கியதாகவும், கையில் தான் தீக்காயம் ஆழமாகப் பட்டிருப்பதால் சரியாகச் சிறிது நாள் ஆகும் எனவும், சிறிது நேரம் கழித்து சென்று பார்க்குமாறு கூறி விட்டுச் செல்ல, அங்குப் பலத்த அமைதி நிலவியது. பின் தேவா தவிர மற்றவர்கள் அவளைச் சென்று பார்த்தனர்.
தேவா இடத்தை விட்டு அசையவே இல்லை. ‘ஒருவேளை கடைசி வரைக்கும் உனக்கு அதுல விருப்பம் இல்லைனா, மனசளவுல உனக்குத் தாயா தான் இருப்பேன்… உண்மையா அன்பா இருக்குற யாரும், வெறும் உடல் தேவைக்காக மட்டுமே கல்யாணம் பண்ணிக்கிறது இல்ல…!’ என்ற அவளின் வாசகமும்…
‘நீ எல்லாத்தையும் மறந்துட்டு என்கூட படுக்கையைப் பகிர்றதுல இல்லை உன்னோட மாற்றம். உன்னோட எல்லா உறவுவாவும் நான் இருந்து, உன் மனசுல இருக்குற காயத்தைச் சரி பண்ணி, சகஜமா என்கிட்ட பேசவைக்குறதும், நான் தொட்டா நீ பாதுகாப்பாவும், நான் குடுக்குற சின்ன முத்தம் கூட உனக்கு ஒரு அம்மா பையனுக்குக் குடுக்குற முத்தமா அருவருப்பு இல்லாம இருந்தா, அது தான் நான் உன்னை மாத்துனதுக்கான அடையாளம்’ என்ற அவளின் உறுதியும்…
‘ஒருவேளை இப்போ, இந்த நிமிஷம் அந்தப் பையன் இடத்துல நீ இருந்துருந்தாலும் நான் இதைத் தான் சொல்லிருப்பேன்… பிகாஸ் ஐ லவ் யூ’ என்று காதலை உணர்த்த முயன்ற நொடியும் அவனை உயிருடன் கொய்தது.
‘அப்போ எல்லாமே தெரிஞ்சு தான் பேசுனாளா? எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்பறம் கூட என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாளா? எனக்குப் புரியவைக்க தான் அந்தப் பையனுக்குப் பிரச்சனைன்னு, பொய் சொல்லி என்னைப் பேச வச்சு என் மனசுல இருக்கிறதை வெளிய வர வைச்சாளா?’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டவன், அப்போது தான், அவன் ‘தொடாதே’ என்று சொன்னபிறகு, தன் உணர்வுகளை உணர்ந்தே தன்னை தொடாமல், தான் சங்கடமாக உணரக் கூடாதென்று பால்கனியில் சென்று உறங்கிய, அவளின் புரிதலில் உருகியவன், யோசிக்க கூடத் திராணியற்று அப்படியே அமர்ந்திருந்தான்.
உள்ளே கண் விழித்தவள் சுற்றி தேவாவைத் தான் தேடினாள். தமி, “இப்போ எப்படி இருக்கு ஆரு” எனக் கேட்க,
“ம்ம்…” என்றவள், “தேவ் எங்க…? அவனைத் தனியா விட்டுட்டு ஏன் வந்தீங்க? அவனைப் போய்ப் பாருங்க மாம்ஸ்.” என்றிட,
குழம்பி கொண்டே வெளியில் சென்று பார்த்தவர்கள் அவன் உடைந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு, அவன் அருகில் சென்று அமர, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிஷாந்த் “விடுடா… அதான் அவளுக்கு எதுவும் ஆகலைல…! நீ போய் அவளைப் பாரு” என்றான்.
தேவா அவர்களைக் காண முடியாமல் திணற, விஷ்வா, “நீ எதுவும் எங்க கிட்ட சொல்ல வேணாம்…! எங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு நீ நினைச்சுருந்தா எங்களுக்குத் தெரியவே வேணாம். எங்ககிட்ட சொல்லணுமேன்னு நீ ஃபீல் பண்ணாத… நாங்களும் அவங்க கிட்ட எதுவும் கேட்க மாட்டோம். என்ன நடந்து இருந்தாலும் சரி, நீ மாறினாலும், இல்லைனாலும் சரி எப்போவுமே எங்களுக்குக் கோபமாவே இருக்குற தேவா தான் எங்க ப்ரெண்ட்…” என்றிட சட்டென நிமிர்ந்து விஷ்வாவை பார்த்தான்.
அருண், “என்னமோ அவளுக்குத் தான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரி அவள் பேசிட்டு போகட்டும்… வெறும் 8 வயசுக்கு முன்னாடி நடந்தது மட்டும் தான் அவளுங்களுக்கு தெரியும். அதுக்கு அப்பறமா இருக்குற எங்க பிரெண்ட பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்…! நீ எங்ககிட்ட எதுவுமே சொல்ல வேண்டாம்டா…” என்றதும், தேவாவுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
நிஷாந்த், “நீ எங்க கிட்ட கோபப்பட்டு திட்டக் கூட செய்…. ஆனால் இப்படி இருக்காத! அதைப் பார்க்குற அளவுக்கு எங்களுக்குத் தைரியம்லாம் இல்லை. உனக்கு அவளைப் பிடிக்கும்னு எங்களுக்குத் தெரியும். அதை நீயும் புரிஞ்சுக்கோ. அது போதும்.” என்னும் போதே, தேவா மூவரையும் அணைத்துக் கொண்டான்.
என்ன மாதிரியான நட்பு இது! எவ்வளவோ வலிகளும், காயங்களும் இருந்தாலும் எதிர்பார்ப்பில்லாத நட்பும், அன்பும் தனக்கு கிடைத்ததில் பெருமையாக உணர்ந்தவன், ஏன் இதனைப் பெரியதாக நினைக்காமல் வெறும் காயங்களுடன் மட்டுமே போராடிக் கொண்டிருந்தோம் என்று தன்னையே சுய அலசலில் ஈடுபடுத்திக் கொண்டான். அப்போது உள்ளே ஏதோ சத்தம் கேட்க என்னவென்று பார்த்தனர்.
தமி சும்மா இல்லாமல் அம்மு பேசியதை ஆராதனாவிடம் சொல்லி இருக்க, அவள் அருகில் இருந்த பொருட்களைத் தட்டி விட்டு, “யாரை கேட்டு நீ அவன் கிட்ட அப்படி பேசுன…? ஆக்சிடென்ட் யாருக்கு வேணா, எப்போ வேணா நடக்கலாம். அதெப்படி அவன் சொன்ன வார்த்தையால தான் இப்படி நடந்துச்சுன்னு நீ சொல்லிருக்கலாம்…! அதோட நான் தியாகி இல்லை… என்னமோ அவனைக் கல்யாணம் பண்ணி முற்றும் துறந்த முனிவர் மாதிரி, நான் இருக்குற மாதிரி நீ எப்படி அவன் கிட்ட பேசலாம்? அப்படி பேச உனக்கு யார் ரைட்ஸ் குடுத்தது? பிரெண்டா இருந்தாலும் என் வாழ்கைக்குள்ள வந்து என் புருஷனை கேள்வி கேட்க எவளுக்குமே உரிமை கிடையாது. அவுட்…” என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
அம்மு, உதட்டைப் பிதுக்கி “போடி!” என்றவள், கண்ணீருடன் வெளியில் வர, “அம்மு…” எனப் பரிவாக அழைத்த விஷ்வாவை கட்டிக் கொண்டவள், “அவள் என்னைத் திட்டுறாடா” என்று தேம்பியதில், வைஷு தமியை முறைக்க, அவள் திருதிருவென விழித்தாள்.
விஷ்வாவுக்கு அப்போதும் அவள் அழுவதை கண்டு சிரிப்பு ஏற்பட, அவள் காதருகில் “காயம் பட்டா போடுவோம் கட்டு! சப்போர்ட்க்கு போனா, செமத்தியா விழும் திட்டு!” என்று கடிக்க, அதில் அவனை விட்டு விலகியவள், “டேய்.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன்.” என்று அடிக்கத் துரத்தினாள்.
அந்த நேரத்திலும் அவனை விட்டுக் கொடுக்காமல் பேசிய அவனின் துணைவியின் பேச்சில் தேவாவுக்கு சிறு புன்னகையும் வர, மெல்ல அவள் அருகில் சென்றான். அவளோ அவன் வருத்தப்படுவானோ? இல்லை அவனறியாமல் அவனைப் பற்றி அறிந்து கொண்டதில் கோபப்படுவானோ? என்று புரியாமல் குழம்பிக் கொண்டு அவனைப் பாராமல் அமர்ந்திருக்க…
வெகுநேரம் அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அதில் மெதுவாகத் தலையை உயர்த்தி பார்க்க, அவளுக்கு அருகில் தலையைக் குனிந்து கொண்டு, அவள் போட்டிருந்த துப்பட்டாவின் நுனிப்பகுதியை விரலால் வருடிக் கொண்டு, அமைதியாக இருந்தவனை கண்டவளுக்கு மனதில் ஏதோ பிசைந்தது.
மிருதுவாக “தேவ்” என்று சற்று பயந்து கொண்டே அழைத்தவளின் முகத்தைக் காணாது, அமர்ந்தபடியே அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
அதில் திகைத்தவள் அவன் முதுகை வருட எத்தனித்து பின், அதனைச் செய்யாமல் காற்றிலேயே அவள் கரங்கள் நின்று விட, “தேவ் என்னாச்சு” என்றாள் குழப்பமாக.
அவன் மடியிலிருந்து முகத்தை நிமிர்த்தாமல் “உன் மடியில படுத்துக்கவா இசை…?” என்றவனின் ஏங்கிய குரலில், ஒரு நொடி புரியாமல் பார்த்தவள், சட்டெனத் தள்ளி அமர்ந்து, அவனை நன்றாக மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
பின், திரும்பி அவள் முகம் பார்ப்பது போல் படுத்துக் கொண்டவன், அவள் நெற்றியிலும் கையிலும் ஏற்பட்ட காயத்தைக் கண்டு “வலிக்குதா இசை…” எனக் கேட்க, “இல்ல” எனத் தலையாட்டினாள், அவனைப் பரிவாகப் பார்த்து.
“ஆனால் எனக்கு வலிக்குது…!” என்று கண்ணில் வலியைத் தேக்கி, அவள் கண்ணைப் பார்த்துக் கூறியவனின் கண்களிலிருந்து நீர் அமைதியான கோடுகளாக வெளியில் வந்து கொண்டிருந்தது. அவன் கண்ணில் கண்ட கண்ணீரில் தன்னிச்சையாக அவளின் கண்களில் இருந்தும் நீர் வழிய, அவன் தலை முடியை ஆதரவாக வருடி விட்டாள். தேவாவோ, அவளிடம் எதுவும் பேசாமலேயே அவனின் கண்ணீரின் வழியே அவனின் காயங்களைக் கரைத்துக்கொண்டிருந்தான்.

