Loading

அத்தியாயம் – 21

 விஷ்வாவை முறைத்த நிஷாந்த், ஆருவிடம் “நீ சும்மா லுலுலுவாய்க்கு தான சொன்ன?” என்று கேட்டதில்,  சிரிப்பை அடக்கிக் கொண்டு தேவாவை பார்க்க,

அவன் மொத்தக் கோபத்தையும் ஸ்டியரிங்கில் காட்டி தீ வேகத்தில் காரை ஓட்டி ஆஸ்ரமத்தில் நிறுத்தினான்.

அங்குச் சென்றதும் தேவா அவசரமாக உள்ளே சென்றிட, அம்முவின் கன்னம் சிவந்திருப்பதை கண்ட விஷ்வா, “ஹே என்னாச்சு,  உன் கன்னத்துல?” என்று  பதறினான். அவள் “அது அது ஒண்ணும் இல்ல” என்று திணறும் போதே, தமி, “அது ஒண்ணும் இல்ல டிவி… ,நாங்க செத்து  செத்து விளையாண்டோம். அதான் அடிபட்டுருச்சு ஈஈஈ” என்று சமாளிக்க, அருண் அவளை முறைத்தான்.

வைஷு பேச்சை மாற்றும் பொருட்டு, “ஷான், வந்து ஆஸ்ரமத்தை சுத்தி காட்டு. சூப்பரா எல்லாத்தையும் சேன்ஜ் பண்ணிருக்கீங்க” என்க, அவன் “என்னது சுத்திக் காட்டவா? உன் பிரெண்டு பண்ற வேலைக்கு நாங்க சுடுகாட்டுக்கு தான் போகணும் போல…” என்று பாவமாகக் கூற, மூவரும் புரியாமல் பார்த்தனர்.

பின் ஆரு பேசியதை கூற, தமி தான் ‘அடிப்பாதகத்தி, லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ளே பிரேக் அப் பண்ண பார்க்குறாளே’ என்று மிரண்டு அருணை பார்க்க, அவனோ ‘உண்மையிலேயே நம்மளை போட்டுத் தள்ளிடுவாளோ?’ என்று தீவிர சிந்தனையில் இருந்தான்.

விஷ்வா, “ப்ச் அவள் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கா… நீங்களும் அதை நம்பிகிட்டு! அவள் அப்படி பேசும்போது தேவாவை பார்த்தீங்களா?

அவன் முகம்லாம், செம்ம சாக்ல இருந்துச்சு. அவனை  இப்படி பார்த்ததே இல்ல” என்று வியந்தவன், அம்முவிடம் “திலகன் சார் ஏதாவது சொன்னாரா?” என்றான் ஆர்வமாக.

அதில் அம்மு, “அது இல்ல விஷ்வா, உங்ககிட்டயே சொல்லல, எங்ககிட்டயா சொல்லிட போறாரு…” என்று அவனைப் பாராமல் பொய் சொல்ல, மற்ற இருவரின் முகமும் வாடிப் போனது.

அதில் நிஷாந்த், “உண்மையிலேயே எதுவும் சொல்லலைனா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மூணு பேரும்?” எனக் கேட்க, தமி “ப்ச் மாம்ஸ்! காலைல ஓட ஆரம்பிச்ச புள்ளைங்களுக்கு சோறு கூடக் குடுக்காம, நீங்க பாட்டுக்குப் போய்ட்டிங்க… அதால வந்த டல்லு தான் இது…” என்று ஏதேதோ சமாளித்து, அவர்களை நம்ப வைத்தனர்.

அங்கிருந்த ஒரு அறைக்குச் சென்ற தேவா, ஆரு பேசியதில் திகைத்திருக்க, ‘இவள் ரொம்ப பண்றாள்… சே, எப்படி இவளை அவாய்ட் பண்றதுன்னே தெரியல!’ என்று ஏதேதோ சிந்திக்க, மனமோ மீண்டும் பழைய நினைவுகளுக்கே புகுந்து நடுக்கத்தைக் கொடுத்தது.

அவள் அதட்டியது கூட அவனுக்குச் சிறு பயத்தை தான் கொடுத்தது. முயன்று தன் பயங்களை தனக்குள் மறைத்தவன், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ‘உன்னை என்னை நெருங்க விடமாட்டேன் இசை…’ எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன், சில நேரம் கழித்து வெளியில் வந்தான்.

 

அங்கு அவனின் நண்பர்கள் அவர்களின் மனம் கவர்ந்த மங்கைகளோடு அங்கிருக்கும் சிறுவர்களை அறிமுகப்படுத்தி, மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க, அருணும் தமியும் தனி ட்ரக்கில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதனைக் கண்டவன், ‘இது வேறயா? இவன் எப்போ இங்க ஜாயிண்ட் அடிச்சான்?’ என்று எண்ணி, தலையை ஆட்டிச் சிரித்துக் கொண்டவனின் மனமோ, முதன் முதலாய் எதற்கோ ஏங்கியது.

அது என்னவென்று பிரித்தறிய இயலாமல்,  அவன்  கரு விழிகள் இசையைத் தேடி அலைபாய, அவள் அந்த இடத்தில் இல்லை என்றதும், எதேற்றையாக அவர்கள் அருகில் வருவது போல், “எங்க அந்த ராட்சசி?” எனக் கேட்டான் மொட்டையாக.

வைஷு “யாருண்ணா” எனப் புரியாமல் கேட்க, அவள் அழைப்பில் தடுமாறியவன் அப்படியே நிற்க, தமியோ “ஹே நம்ம சபதப்படி அவனை நீ மாம்ஸ்ன்னு தான் கூப்பிடனும்.” என்று அவள் காதைக் கடித்தாள்.

வைஷு, “எதுக்கு அவன் பார்வையாலேயே என்னை சாம்பலாக்கவா? மூடு…” என்றதும் அம்மு, “இருந்தாலும்” என்று பேச வர இருவரையும் அமைதிப்படுத்தவே போதும் போதும் என்றானது அவளுக்கு.

வைஷு தொடர்ந்து, “யாரை அண்ணா கேட்ட?” என நல்ல பிள்ளையாக வினவ, அவன் “ம்ம்… உங்க கூட்டத்து தலைவியைத் தான்.” என்றதும், அப்போது தான் அவர்களும் அவளைத் தேடினர். அம்மு “அவள் உன்கூட இல்லையா?” எனப் பதட்டமாகக் கேட்க,

தேவா “என்  கூடயா? இல்ல…” என்றவன் அவன் நண்பர்களிடம் “அவள் உள்ள வந்தா தான?” என்று வினவ, அவர்களோ பேந்த பேந்த விழித்தனர்.

தேவா, “ப்ச் அவள் வந்தாளா இல்லையான்னு பார்க்காம என்ன பண்ணீங்க?” என்று கத்தி விட்டு, வேகமாகச் சென்று காரை எடுத்தவன் அவளின் எண்ணை ட்ராக் செய்தான்.

அது சரியாக அவள் மாமாவின் வீட்டைக் காட்ட, “ஷிட்! இவள் எதுக்கு அங்க போனா? இடியட்…” எனப் பதறியவன் அங்கு விரைந்தான். அப்போதே மாலை ஆகி இருக்க, அந்த பெரிய பங்களா போன்ற வீட்டின் காம்பௌண்ட் சுவரை ஏறிக் குதித்தாள் ஆராதனா.

அவள் கல்லூரி படிக்கும் போதே பல முறை இங்கு வந்திருக்கிறாள். ஆனால் வந்ததும் உடனே, அவர் அவளை வெளியில் அழைத்துச் சென்று விடுவார். அவளே அந்தப் பங்களாவை முழுதாகச் சுத்திப் பார்த்தது இல்லை. இப்போது, சிவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றறிந்து உள்ளே புகுந்தவள், பின் பக்க பைப் மேல் ஏறி ஜன்னல் வழியே வீட்டினுள் நுழைந்தாள்.

பூனை நடை நடந்தவள், கீழிருக்கும் அறைகளை அலசி ஆராய்ந்து விட்டு, மேலிருக்கும் அறைக்குள் சென்று தேட, உள்ளே  யாரோ  வருவது போல் இருந்ததில் திகைத்தாள்.

வேகமாகச் சென்று கப்போர்டினுள் ஒளிந்து கொள்ள, அந்தக் கதவு பட்டெனத் திறக்கப் பட்டது. அதில் ‘ஐயோ மாட்டுனோம்!’ என்று கண்ணை இறுக்க மூடி நின்றவள், ‘என்ன இன்னும் வில்லன் டயலாக்லாம் பேசாம இருக்காங்க!’ என்று ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்க, அங்குக் கையை கட்டிக் கொண்டு, அவளைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தேவா.

அதில் நன்றாகக் கண்ணைத் திறந்தவள், “நீ எதுக்குடா வந்த?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க, அதில் “அப்படியே அறைஞ்சேன்னா தெரியும்.” என்று கையை ஓங்கியவன், “நீ எதுக்குடி இங்க வந்த, அறிவிருக்கா? உன் மாமா கையில சிக்குன, உன்னைக் கண்ட துண்டமா வெட்டிப் போட்டுருவான்” என்றான் கோபமாக.

“அவரு என்னை வெட்டுனா உனக்கு நல்லது தான…” என்று தோளைக் குலுக்கியவளிடம், அவனும் அதே அசட்டையோடு “ரொம்ப ரொம்ப நல்லது தான். ஆனால் அந்த ஆளு உன்னை என் கூட பார்த்துருக்கான். சோ உன்னைக் கொன்னுட்டு பழியை என் மேல போட்டுடுவான். அப்பறம் நான் போய்க் களி திங்கவா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அவள் அவனை முறைத்தாள்.

பின் அவனே, “சரி நீ முதல்ல வெளிய வா!” என்று அழைக்க, அவள் “ப்ச் இங்க ஏதாவது எவிடன்ஸ் கண்டிப்பா இருக்கும். நீ   இந்தப் படத்துல    எல்லாம் பார்த்தது இல்லயா? வில்லனுங்க இந்த மாதிரி பெரிய வீட்டுல இருக்கிறதே அவங்களோட முக்கிய ஆதாரத்தை மறைக்கிறதுக்கு தான்” என்றாள் கண்ணை உருட்டி.

அதில் சற்று தடுமாறியவன், பின் “நான் இங்க வந்து ஆல்ரெடி தேடிட்டேன் இசை. பட் எதுவுமே இல்ல” என்றதும்,

“நீ தேடுனது உன் ப்ராஜக்ட்காக அக்கியூஸ்ட் வீட்டுல! நான் தேடுறது என் மாமா வீட்டுல…! பாலோ மீ…” என்று உத்தர விட்டவள், முன்னே செல்ல அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

“ப்ச் இசை, இங்க நான் எல்லா இடமும் தேடிட்டேன்… எதுவுமே இல்ல.” என்றிட, அவள் தரையை ஆராய்ச்சி செய்து கொண்டே வந்தாள். அவனோ, “ஏய் இங்க என்ன நீ தரையை உடைச்சு ஆராய்ச்சி பண்ணவா வந்துருக்க? என்னடி பண்ற?” என்று கேட்க, அவள், “என்னடா நீ எல்லாம் டிடெக்ட்டிவ்? இவ்ளோ பெரிய பங்களால அதுவும் அடிக்கடி வந்துட்டு போற என்னை வச்சுக்கிட்டு, அவரு எல்லாத்தையும் முன்னாடியே வச்சுருப்பாரா? இங்க ஏதாவது சுரங்கப்பாதை இருக்கலாம். அதுக்குள்ள, அப்படியே பெரிய குடோன் மாதிரி உருவாக்கி அங்க அவரு எல்லாத்தையும் வச்சுருக்கலாம்ல. அதான், ஏதாவது தரையை பேத்து எடுத்த மாதிரித் தடயம் இருக்கான்னு டெஸ்ட் பண்றேன்.” என்றாள் தரையை பார்த்துக் கொண்டு.

“நீ இன்னும் 80ஸ், 90ஸ்ல இருந்து வெளியவே வரலையா? அவன் அவன் கம்ப்யூட்டர்ல எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி, பென் ட்ரைவ்ல கொலை பண்ற மெத்தட ஏத்தி வைக்கிறான். இப்போதான் இவளுக்கு சுரங்கப்பாதை போகுதாம்… அந்த ஆளு போன், கம்பியூட்டர் கூட ஹேக் பண்ணி செக் பண்ணியாச்சு எல்லாமே பக்கா செக்கியூரிட்டி.” என்றான்.

அவள், “என் மாம்ஸ் அந்த அளவுக்குலாம் டெக்னாலஜில வளரலை தேவா… அவருக்கு டச் போன் எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்ததே  நான் தான். அந்த ஆளைக் கண்டுபிடிக்கவா, ஆறு மாசமா கேவலமான பிளான்லாம் போட்டீங்க?” என்றதில் அவன் வெறியாகி முறைக்க,

அவளோ விடாமல், “அதுவும் அந்த மினிஸ்டர் கூட எல்லாம் கான்டேக்ட் வச்சிருக்கரப்பவே தெரிய வேணாம், அவரு டம்மி பீஸ்ன்னு” என்று கிண்டலடித்தவளுக்கு, கூடவே வருத்தமாகவும் இருந்தது.

கண்மணி அத்தை இதை எப்படி தங்குவார்கள் என்று நொந்தவள், “தேடலாம்” என்று மட்டும் சொல்லி வேலையைத் தொடர,  அவன் அவளின் சுருங்கிய முகத்தையே பார்த்திருந்தான். அதில் அவனின் மனமும் அனிச்சையாகச் சுருங்கி போனது.

ஆரு திடீரென, “ஹே இங்க பாரு! இந்தத் தரை லேசா பேந்துருக்கு பாரேன்!” என்று காட்ட, அவனும் அப்போது தான் அதனைக் கவனித்தான்.

“காட்!”  என்று அதிர்ந்தவன், வேகமாக அதனை அப்புறப் படுத்த உள்ளே படிக்கட்டுகள் சென்றது.

“நான் சொல்லல, என் மாம்ஸ் ஒரு வெத்து பீசுன்னு” என்று தன்னையே புகழ்ந்து கொண்டவளை, சிரிப்பை அடக்கிக் கொண்டு “இறங்குடி முதல்ல” என்றான்.

பின் இருவரும் இறங்கி, உள்ளே செல்ல, அவள் சொன்னது போல் சுரங்க பாதை தான் இருந்தது. சிறிது தூரம் அதன் வழி நடந்தவர்களுக்கு ஒரு பெரிய குடோன் போன்ற அமைப்பு தெரிய, அங்கு நிஷிதா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருந்தாள்.

அதனைக் கண்ட ஆரு, பயத்தில் தேவாவின் கையை இறுக்க பிடிக்க, பின் பட்டென அவன் கையை விட்டவள், அவனை விட்டுத் தள்ளி நின்றாள்.

அவளைப் புரியாமல் பார்த்தவனுக்கு, அவள் பயத்தில் கையைப் பிடிக்கவும், என்னவோ போல் தான் இருந்தது. ஆனால், சட்டெனத் தள்ளிச் சென்றதும் ஏதோ போல் இருக்க, ‘நீ தான தொட்டதுக்கு அடிச்ச, இப்போ குத்துதே குடையுதேன்னா?’ என்று அவன் மனமே அவனுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியது.

அவன் அந்த எண்ணங்களை மறைத்துக் கொண்டு, போனை எடுத்து நிஷிதாவை போட்டோ எடுத்து விட்டு, தலையில் அடிப்பட்டவளை ‘எதை வைத்து அடித்திருக்கிறார்கள்?’ என ஆராய்ச்சி செய்ய, அவளோ, “டேய், அவள் செத்துக்கிடக்குறா, நீ போட்டோ எடுத்துட்டு இருக்க…” என்று பதறினாள்.

அவனோ, “அதான் செத்துட்டாளே! இவள் எப்படி செத்தான்னு தெரிய வேணாமா?” என்று அங்கு வேறு எதுவும் ஆதாரம் இருக்கிறதா? என்று பார்க்க, ஆருவும் தேடியவள் அங்கு ஒரு லாக்கர் போன்று இருக்க,  அதில் கையை வைத்தாள். உடனே அவளுக்கு அதிலிருந்து ஷாக் அடிக்க, பட்டெனக் கையை எடுத்தவளுக்கு கையெல்லாம் மரத்து வலிக்க ஆரம்பித்தது.

“ஆ” என்று கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகில் சென்றவன். “இசை என்னாச்சுடி…” எனக் கேட்க, அவள் “ஷாக் அடிச்சுருச்சு” என்னும் போதே. அதிலிருந்து பீப் சத்தம் வேறு கேட்க, “வா! உடனே இங்க இருந்து போகலாம்…” என்றான் அவசரமாக.

அவள் “எவிடன்ஸ்” என்று கேட்க, “அதான் இவ்ளோ பெரிய எவிடன்ஸ் செத்து கிடக்கே நான் போலீஸ்க்கு அலெர்ட் பண்ணிட்டேன்.  அவங்க வந்துடுவாங்க… நீ வா” என  வெளியில் அழைத்துச் சென்றவன், மாடியிலிருந்து இறங்கும் போது, சிவன் அங்கு வந்து விட்டார்,  கையில் துப்பாக்கியோடு.

ஆரு திகைத்து நிற்க, தேவா அவளை அவனுக்குப் பின்னால் மறைத்து, கையில் துப்பாக்கியை எடுக்க, வெளியிலிருந்து வந்த சிவனின் ஆட்கள், அவர்களைச் சுற்றி வளைத்தனர். ஆரு “மாமா, அத்தை நீங்க நல்லவன்னு எவ்ளோ நம்புறாங்க… இப்படி அவங்களுக்கு துரோகம் பண்றீங்களே?” என்றாள் கோபமாக.

அவர், “நான் என்ன பண்றேன்னு அவளுக்குத் தெரியவே போறது இல்லை. உனக்கு என் மேல சந்தேகம் வந்துடுச்சுன்னு எனக்கு சந்தேகம் வந்ததுமே உன்னைப் போட்டுத் தள்ளிருக்கணும்… நீ சென்னை வந்து இறங்குனதுமே,  உன்னைக் கொலை பண்ண எல்லா பிளானும் பண்ணேன்.

 

ஆனால், இவன் தான் உன்னைக் கடத்திக் கெடுத்துட்டான். என்னைப் பத்தி உன் அத்தை கிட்ட சொன்னாக் கூட எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. அவளுக்குத் தெரிஞ்சாலும் ஒன்னு, உன்னை நம்ப மாட்டா! இல்ல துக்கம் தாங்காம போய்ச் சேர்ந்துருவா! உன் அத்தையை, நீயே கொலை பண்ணப் போறியா ஆரும்மா” என்று நக்கலாகப் பேசினார்.

அவளுக்கோ அவர் இப்படி நேரடியாகவே, அவளை எதிரியாக நினைத்துப் பேசியது கண்ணைக் கரித்தது.

நீயெல்லாம் ஒரு மனுஷனா? சே…! ஆமா, என் அத்தை ஏன்யா சாகனும்? அவங்க என்ன தப்பு பண்ணாங்க? அவங்க வந்து உனக்கு நல்லா குடுப்பாங்க வாங்கிக்க” என்று கடுங்கோபத்தில் கூறியதும், சிவன் “என்ன சொல்ற?” என்று புரியாமல் பார்க்க, வெளியிலிருந்து அவளின் தாத்தா கணேசனும், அத்தை கண்மணியும் கசங்கிய முகத்துடன் வந்தனர்.

தேவா,  இவர்களை  எப்போது வரச்  சொன்ன என்று அவளைப் புரியாமல் பார்த்தான். ஆராதனா சென்னைக்கு கிளம்பும் போதே, அவள்  எதையோ மறைக்கிறாள் என்றுணர்ந்த கணேஷன் அவளிடம் வற்புறுத்திக் கேட்க, அவரிடம் எதையும் மறைத்துப் பழக்கம் இல்லாதவள், சிவனின் மேல் இருக்கும் சந்தேகத்துடன் அனைத்தையும் கூறினாள்.

அவரோ அதிர்ந்து, தன் மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதேயென வருந்தி உடைந்து போக, அவரை சரி செய்து, “இந்த விஷயத்தை அத்தைக்கு பொறுமையா நீங்க தான் புரிய வைக்கணும். நம்ம கலங்குனா அவங்களும் கலங்கிடுவாங்க. இந்த நேரத்தில நீங்க தான் தாத்தா ஸ்ட்ராங்கா இருக்கணும்.

ஒருவேளை, நான் நினைக்கிறது தப்பா கூட இருக்கலாம். அவரைப் பத்தின ஆதாரம் எனக்குக் கிடைக்கும்போது நான் சொல்றேன், நீங்க அத்தையை கூட்டிகிட்டு அங்க வாங்க.” என்று சொல்லி இருந்தவள், தேவா சிவனை பற்றிச் சொல்லியதும், அவரை இங்கு வரச் சொல்லிக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள். அவரும்,  உடனே கண்மணியை அழைத்துக் கொண்டு விமானம் ஏறி விட்டார்.

இதில் அவருக்குச் சவாலாக இருந்தது கண்மணி தான். அவருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லி, மனதை திடப்படுத்தி இங்குக் கூட்டி வர, சிவன் பேசியதை கேட்டு உள்ளுக்குள் உடைந்தவர் அவரைத் தீப்பார்வை பார்க்க, அவர் கண்மணியை அங்கு எதிர்   பாராமல், திகைத்தவர்   துப்பாக்கியை கீழே போட்டார்.

கண்மணி, “உன்னை நான் எவ்ளோ நம்புனேன்? ஆனா நீ…? எவ்ளோ பெரிய தப்புலாம் பண்ணி சே…! எத்தனை பேரோட வாழ்க்கையில விளையாடி இருக்க, அவங்களோட பாவம் தான் என் குழந்தையைக் கூடக் கொன்னுடுச்சு…!” என்று வயிற்றில் கையை வைத்து அழுதவரை தேவா பாவமாகப் பார்த்தான்.

சிவனோ கோபத்துடன், “என்ன பண்ணேன் நான்? ஹான்! எனக்கு வெளிய எவ்ளோ பேர்! எவ்ளோ புகழ் தெரியுமா? நான் நினைச்சா சென்ட்ரல்ல கூட ஆட்சியை மாத்த முடியும். அந்த அளவு என்கிட்டே பவர்  இருக்கு. நான் நினைச்சா, இப்போ என்ன  வேணா பண்ண முடியும். சின்ன வயசுல, அநாதை பயன்னு சொல்லி, எத்தனை பேர் என்னைக் கேவலமா பார்த்துருக்காங்க தெரியுமா? அப்படி என்னைக் கேவலமா பார்த்தவங்கள்லாம் இப்போ என்னைப் பயந்து பார்க்குறாங்க. இந்த சமுதாயமும், இந்த மக்களும் தான் என்னை இப்படி மாத்துனாங்க. இங்க நமக்கு என்ன வேணுமோ அதை நம்ம தான் எடுத்துக்கணும்.” என்றவர் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவர்தான்.

கணேசன் தான், அவரின் நல் குணத்தை நடிப்பு என்றறியாது, தான் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர் பேசியதை கேட்கையில், தவறை கூட உணராமல் இப்படி பேசுகிறாரே என்றிருந்தது. மேலும் சிவன் பேசிக் கொண்டே போக, ஆரு “நிறுத்துறீங்களா?” எனக் கத்தினாள்.

“என்ன இந்த சமுதாயம் உங்களை மதிக்கல ஹான்…? ஏதோ ஒருத்தர் ரெண்டு பேர் பண்ற தப்புக்காக நீங்க அவங்களை அழிக்கணும்னு கிளம்பிடுவீங்களா? என்றவள்

தேவாவை  காட்டி, ”இதோ, இவனும் இவன் பிரெண்ட்ஸ்   எல்லாம் கூட அநாதை ஆஸ்ரமத்துல வளர்ந்தவங்க தான். உங்களோட போதைப் பொருளால கஷ்டப்பட்டு, ஊரை விட்டு ஓடிப் போனவங்க தான். அவங்களை இந்த சமுதாயம், என்ன மடியில தூக்கி வச்சு கொஞ்சவா செஞ்சுச்சு?

அவங்க நல்லவங்களா வாழணும்னு நினைக்கல? நான் அம்மா அப்பா, இல்லாம வளர்றவங்களை கேவலமா பார்க்குறவங்களுக்கு சப்போர்ட் பண்ணல… எந்த ஒரு விஷயத்தையும் நம்ம எந்தக் கோணத்துல பார்க்குறோம்ன்றதுல தான் இருக்கு. நீங்க மட்டும் தான் கஷ்டப்பட்டீங்களா? உங்க கூட எத்தனையோ அநாதை பசங்க இருந்துருப்பாங்களே அவங்க கஷ்டப்படல? உங்களை மாதிரி எல்லாருமே கஷ்டப்படணும்னு நீங்க நினைச்சதுனால தான் இப்படி குற்றவாளி கூண்டுல நிக்கிறீங்க… அவங்க அவங்களை மாதிரி யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னு போராடுறாங்க. ரெண்டு பேரும் ஒரே மாதிரி சூழ்நிலைல தான வளர்ந்துருக்கீங்க. உங்களுக்கேன் புத்தி இப்படி போச்சு…?

 

சரி முன்னாடி தான் அப்படி இருந்தீங்க…! அப்பறம் உங்களுக்குன்னு குடும்பம், மாமனார், மாமியார்ன்னு எவ்ளோ சந்தோசம் கிடைச்சுச்சு. உங்களை வீட்டு மருமகனாவா நடத்துனாரு, என் தாத்தா. மகன் மாதிரி தான பார்த்துக்கிட்டாரு. அவரு கிட்ட உங்களைப் பத்தி சொன்னப்போ கூட அவரு, ‘என் பையன் அப்படிலாம் பண்ண மாட்டாருன்னு தான் சொன்னாரு…’. உங்க பொண்டாட்டி,’ என் புருஷனை பத்தி எனக்குத் தெரியும்’ன்னு சொன்னாங்க.

இதான் நீங்க அவங்க உங்க மேல வச்ச நம்பிக்கைக்குக் குடுக்குற மரியாதை இல்ல” என்று அவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க, கண்மணி கணேஷன் மேல் சாய்ந்து அழ, சிவன் அமைதியாகப் பார்த்திருந்தார்.

தேவாவோ இசையை விட்டு அவன் பார்வையை நகர்த்தவே இல்லை. ஒரு காலைச் சுவற்றில் மடக்கி, கையைக் கட்டிக்கொண்டு அவள் ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் சுவாரஸ்யமாக பார்த்திருந்தான். அப்போது போலீசும் வந்து விட, தேவா “உள்ள டெட் பாடி இருக்கு…” என்றதும், அவர்கள் வேகமாக உள்ளே சென்று அனைத்தையும் ஆராய்ந்தனர்.

சிவனின் ஆட்களையும் பிடித்து விட்டுப் போக, கண்மணி, “அப்பா வாங்க போகலாம்… இதுக்கு மேல என்னால இங்க நிக்க முடியாது.” என்று வெளியில் சென்றிட, சிவனுக்கு ஆரு பேசியதும், கண்மணியும் கண்ணீரும் ஏதோ ஒரு உணர்வைக் கொடுத்தது.

ஆரு அவர் அருகில் சென்று, “மாமா! நீங்க என்னை எப்படி நினைச்சீங்களோ, எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களை என் அப்பாவா தான் நினைச்சேன்.

அதான் நீங்கத் தப்பு பண்ணிருக்கீங்கன்னு தோணும்போது கூட உடனே எதுவும் பண்ணமுடியாம, முழுசா தெரியாம எதையாவது உங்ககிட்ட கேட்டு, நீங்கக் கஷ்டப்படக்கூடாதுன்னு அமைதியா இருந்தேன்.

உங்களுக்கு சொந்தம்ன்னு நாங்க இத்தனை பேர் இருந்தும், உங்களுக்கு நாங்க முக்கியம்ன்னு தோணவே இல்லையா?

உங்களை மாதிரி அப்பா அம்மா இல்லாம வளர்ந்து, தப்பான தொழில் பண்ணி சமுதாயத்துக்குத் தப்பான உதாரணமா இருக்குறனாள தான், இதோ இவனை மாதிரி நல்லா வாழணும்னு நினைக்கிற பசங்களை கூடத் தப்பா நினைச்சு அவங்களை வாழ விடமாட்டுறாங்க! எத்தனை பேர் உங்களை இன்ஸ்பிரேஷனா நினைச்சு தப்பான வழிக்குப் போயிருப்பாங்க. இதான் உங்க பேர் புகழா மாமா? இதான் உங்க நியாயமா?” எனக் கேட்கும் போதே,

அந்த இன்ஸ்பெக்டர் வந்து, “சார், உங்களைத் தப்பா ஃபிரேம் பண்ணிருக்காங்களா சார்? நீங்க ஒரு கம்பளைண்ட் குடுங்க. நாங்க என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம்.” என்று சொன்னவர் சிவனின் கைக்கூலி தான்.

தேவாவும் ஆருவும் அவனை முறைத்துப் பார்க்க, சிவன் “இதெல்லாம் நான் தான் பண்ணேன், என்னை அரெஸ்ட் பண்ணுங்க.” என்றார் தலையைக் குனிந்து கொண்டு. அதில் இன்ஸ்பெக்டர் அதிர, சிவனே போலீஸ் வேனில் சென்று அமர்ந்து விட்டார் யாரையும் பார்க்கத் திராணியற்று.

 

அப்போது தான், தேவா அனுப்பிய குறுஞ்செய்தியில் மற்ற ஜோடிகள் அங்கு வந்திருக்க, நிஷாந்த்க்கு கண்மணியைக் காணவே குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரிடம் விபத்து தன்னால் தான் நடந்தது என மன்னிப்பு கேட்க, அவர் புரியாமல் பார்த்தார்.

பின் ஆரு தான் எல்லாவற்றையும் விளக்கி, “தேவா தான் உங்களைக் காப்பாத்துனான்.” என்று அவனை அவர் முன் நிறுத்த, அவனும் தயங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்டான். கண்மணி, “நீங்க ஏன்பா மன்னிப்பு கேட்குறீங்க? எல்லாம் என் தலையெழுத்து… அதுக்கு யார் என்ன பண்ண முடியும்?” எனக் கண் கலங்கியவருக்கு யாராலும் ஆறுதல் சொல்ல இயலவில்லை.

பின், அந்த  மண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியையும் சமர்ப்பித்து, ராஜாங்கன் மற்றும் சிவனுடன் கூட்டாக இருந்த மற்ற, பெரிய முதலைகளையும் உள்ளே தள்ளினர். அடுத்த இரு நாட்களில் இந்த ஆராவாரம் முடிந்து, அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்க, அம்முவும் தமியும் எப்படி வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் வாங்குவது எனச் சிந்திக்க, வைஷு ஒரு முடிவுடன் முத்துவேலை பார்க்கச் சென்றாள்.

ஆருவோ தேவாவிடம், “சரி நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” எனக் கேட்க, அவன் “லூசு மாதிரி உளறாத. அது என்னைக்குமே நடக்காது.” என்றான், எப்படியும் அவளைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணி.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு. உன்னை ஒத்துக்க வைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன்…” என்றாள் அழுத்தமாக.

“என்னடி பண்ணுவ? என் பிரெண்ட்ஸை போட்டுத் தள்ளுவியா? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணுடி…” என்னும் போதே, விஷ்வா “ஆஆஆ, எனக்கு யாரோ விஷம் குடுத்துட்டாங்க. தொண்டையெல்லாம் எரியுது… என்னைக் காப்பாத்துங்க!” என்று கத்த, தேவா பதறி விட்டான்.

ஆரு “நான் சொன்னா, சொன்னதை செய்வேன்… தேவ் டார்லு! போ! போய் உன் பிரெண்டை காப்பாத்து. நான் ஊருக்குப் போயிட்டு, உனக்கு போன் பண்றேன். ஹ்ம்ம்? நம்ம கல்யாணம் நடந்தா தான் அவனுங்க உயிரோடயும் இருப்பானுங்க. என் பிரெண்ட்ஸ் அவனுங்கள கல்யாணம் பண்ணிக்கவும் முடியும். பை” என்று காற்றிலேயே ஃபிளையிங் கிஸ் ஒன்றை கொடுத்து விட்டுச் செல்ல, தேவா “ராட்சசி!” என அதிர்ந்து நின்றான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்