Loading

காபி குடித்து முடித்து விட்டு பைரவி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, தேவேந்திரன் அவளை யோசனையாக பார்த்தான்.

‘என்னை பற்றி இவளுக்கு எவ்வளவு தூரம் தெரியும்?’ என்று யோசித்தான்.

எவ்வளவு தூரம் தெரிந்தாலும்? தன்னை பற்றித் தானே சொல்வது சிறந்தது என்று தோன்றியது. அங்கிருந்த இரு நாற்காலிகளில் அவளை அமரச் சொன்னான். அவளுக்கெதிராக நாற்காலியை இழுத்துப் போட்டு அவனும் அமர்ந்தான்.

“உனக்கு என்ன பத்தி எவ்வளவு தெரியும்னு எனக்குத் தெரியல. சோ நானே சொல்லிடுறேன். முழு பெயர் தேவேந்திரன். எம்.சி.ஏ படிச்சு இருக்கேன். என்னோட ப்ரண்ட் கூட பார்ட்னர்ஷிப்ல பிஸ்னஸ் பண்ணுறேன். க்ராணைட் . தமிழ்நாட்டுக்குள்ள சில ஊருல ஃபேக்டரி இருக்கு.” என்று தேவேந்திரன் கூற, பைரவி தனது விசித்திரமான பார்வையை தான் பார்த்து வைத்தாள்.

‘போச்சுடா.. இப்படி பார்க்க ஆரம்பிச்சுடாளா’ என்று மனதிற்குள் நினைத்தவன், நேராகவே கேட்டான்.

“இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்?” என்று தேவா கேட்க பைரவி, “புரியல” என்றாள்.

“அதான் ஒரு பார்வை பார்க்குறியே . இவன் எல்லாம் ஒரு ஆளானு பார்க்குறியா? இல்ல இவ்வளவு பெரிய ஆளானு பார்க்குறியா? ப்ளீஸ் ஃபர்ஸ்ட் மட்டும் சொல்லிடாத. மனசு தாங்காது”

பைரவிக்கு சிரிப்பு வந்தது. முழுவதும் சிரிக்காமல் உதடுகள் மட்டும் லேசாக விரிந்தது. அதுவே அவளுக்கு அழகு சேர்க்க, ‘இவ நல்லா சிரிச்சு ஒரு தடவ பார்த்துடனும்’ என்று நினைத்துக் கொண்டான்.

“அப்படி எதுவும் இல்ல. நீங்க சொல்லுங்க” என்று கூறினாள்.

அவள் அர்த்தம் சொல்லாததை கணக்கில் எடுக்காமல் விட்டவன், “எங்கப்பாவுக்கு நானும் பிருந்தாவும் தான் பிள்ளைங்க. அவர் சம்பாதிக்கும் போது, எங்களுக்காக சொத்து சேர்த்தார். நான் அத யூஸ் பண்ணாம சம்பாதிச்சு இந்த வீட்ட கட்டினேன். கட்டினதுல இருந்து இங்க தங்குன நாள் ரொம்பவே கம்மி தான். இது போல இல்லனாலும், சின்னதா இன்னொரு ப்ளாட் ஒன்னு வாங்கி போட்டு இருக்கேன்.

பிருந்தாவுக்கு போன வருசம் தான் கல்யாணம் ஆச்சு‌. அவ ஹஸ்பண்ட் ஒரு கம்பெனி மேனேஜர். அப்பாவோட அந்த வீட்ட பிருந்தா பேருல எழுதி வைக்க சொல்லிட்டேன். சந்துருக்கு இந்த வீடு இருக்கே.‌

என்னோட பிஸ்னஸ் டீல் வெளிநாட்டு கம்பெனி கூடயும் இருக்கு. முதல்ல அடிக்கடி வெளிநாடு போக வேண்டி வரும். சந்துரு வந்ததுக்கு அப்புறம், என் ஃப்ரண்ட் தான் போறான். அவனுக்கும் கல்யாணமாகி குழந்தை இருக்கு.

ஆனா, தமிழ்நாட்டுக்குள்ள நிறைய சுத்துவேன். எங்க போனாலும் ஒரு நாள் கூட தங்க மாட்டேன். சந்துரு தனியா இருப்பான்னு தோனும். மிட் நைட்டா இருந்தாலும் கிளம்பிடுவேன். இனி பார்த்துக்க நீ இருக்கனு போனாலும் போகலாம்.

இவ்வளவு தான் என் விவரம். நீ உன்னை பத்தி சொல்லு? உன் குடும்பம். உன் வேலைய பத்தி?” என்று கேட்டான்.

“அம்மா மகாலட்சுமி. அப்பா கந்தசாமி. மூணு வருசத்துக்கு முன்னாடி அப்பா இறந்துட்டாங்க. அம்மா ஹவுஸ் வொய்ஃப். அண்ணன் பார்த்திபன். ஒரு கம்பெனில க்ளர்க். அண்ணி நளினி. அவங்களுக்கு ஒன்றரை வயசுல மக இருக்கா. பவானி. இவ்வளவு தான் குடும்பம்.

சென்னையில அப்பா வாங்குன வீடு மட்டும் தான் சொத்து. அதுக்கு மேல எனக்கு நகை செஞ்சது… அவ்வளவு தான். என்னை பத்தி சொன்னனே. அதுக்கு மேல எதுவும் இல்ல” என்று முடித்து விட்டாள் பைரவி.

‘நிஜம்மாவே அவ்வளவு தானா?’ என்று கேட்க தோன்றினாலும், அதை தேவா கேட்கவில்லை.

பிறகு, வீட்டின் ஒவ்வொரு அறையையும் காட்டினான். சுற்றி பார்த்து விட்டு கீழே இறங்க, பூஜை அறை கண்ணில் பட்டது.

உள்ளே சென்று விளக்கை ஏற்றியவள், “இந்த வாழ்க்கைய உறுத்தல் இல்லாம ஏத்துக்குற சக்திய கொடு” என்று வேண்டிக் கொண்டாள்.

ஹாலில் ஒரு ஓரம் இருந்த கதவை திறந்து, தேவா அவளை அழைத்துச் சென்றான்.

தோட்டம். அவளது அன்னையின் வீட்டிலும், இதற்கு முன்னால் இருந்த வீட்டிலும் தோட்டம் கிடையாது. அடுத்தடுத்து வீடுகள் தான் இருந்தன. இங்கு இவ்வளவு பெரிய பரப்பளவில் அமைந்துள்ள தோட்டம், அவள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

ரசனையாக அதை பார்த்துக் கொண்டே வர, சந்துரு சிரிக்கும் சத்தம் கேட்டது. அவசரமாகத் திரும்பி பார்த்தாள். பசுமை நிறைந்த இடத்தில், பட்டாம் பூச்சியாக அவன் ஓடி விளையாடியதை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.

அந்த வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் தான் விளையாட வேண்டும். அதுவும் சந்துருவிற்கு விளையாட்டு எல்லாம் தெரியாது. சிறிய மிதிவண்டியை ஓட்டுவான். இல்லை என்றால் அமர்ந்து குட்டி காரை ஓட்டுவான்.

பைரவி அவனுக்கு சில விளையாட்டுகள் சொல்லிக் கொடுத்திருந்தாள். அதை தான் சமையல் செய்பவருக்கும் தோட்ட வேலை செய்பவருக்கும், சந்துரு சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவனின் மழலை மொழி புரியாமல் அவர்கள் முழித்துக் கொண்டு நிற்க, பைரவி களுக்கென சிரித்து விட்டாள். அவள் சிரிப்பை தேவேந்திரன் சுவாரசியமாக பார்த்தான்.

இப்போது தானே நினைத்தான், சிரிப்பை பார்க்க வேண்டும் என்று. அது உடனே நிறைவேற்றி விட்டது. இன்று வேறு எதுவும் கேட்டாலும் நடக்குமோ? என்று தோன்ற, அவன் மனது அவசரமாக ஒரு ரகசிய வேண்டுதலை கடவுளிடம் வைத்தது.

பைரவியின் சிரிப்பை பார்த்து அங்கிருந்தவர்கள் அசடு வழிய, பைரவி பக்கத்தில் சென்றாள். முறையாக அவர்களுக்கு விளையாட்டு எதுவென்று சொல்லி கொடுக்க, உடனே பிடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டனர்.

தேவேந்திரன் வீட்டின் மற்ற பகுதியை காட்ட அழைக்க, சந்துருவை விட்டு அகல பைரவி தயங்கினாள். தேவா வற்புறுத்த, மனமில்லாமல் நடந்தாள்.

“கயல் அக்காவும் தங்கமும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப். அவங்க சமையல் வேலைனா தங்கம் தோட்டத்த பார்த்துப்பார். குழந்தை இல்ல. அதுனால சந்துரு தான் இவங்களுக்கு எல்லாம்.

இங்க சந்துருவ தூக்கிட்டு நான் வரும் போது, பிறந்து வெறும் பதினஞ்சு நாள் ஆன குழந்தை அவன். இவங்கள முதல்லையே வேலைக்கு வச்சுருந்தேன். சந்துருவ பார்த்தும் அவங்களுக்கு அவ்வளவு சந்தோம். அவங்க பிள்ளையில்லாத கஷ்டம் தீர்ந்த சந்தோசம்.

சந்துருக்கு ஒன்னுனா எல்லாரையும் விட இவங்க துடிச்சு  போயிடுவாங்க. ஆறு மாசம் இவங்க கிட்ட தான் வளர்ந்தான்னு சொல்லனும். குழந்தை பராமரிப்பு எல்லாம் அவங்களுக்கு தெரியாது. எனக்கும் தான்.

ஆனா, அக்கம் பக்கம் விசாரிச்சு, டாக்டர் கிட்ட ஆயிரம் கேள்வி கேட்டு, அவன பொத்தி பொத்தி பாதுகாத்தாங்க. அம்மா ரொம்ப வற்புறுத்தி கூப்பிடவும் தான், நான் கிளம்புனேன். பாவம் ரொம்பவே அழுதாங்க.

கஷ்டமா இருந்தாலும், வீட்டு ஆளுங்க கூட அவன் வளரனுமேனு தூக்கிட்டுப் போனேன். அது எவ்வளவு பெரிய தப்புனு இப்போ தான் புரிஞ்சது.

இந்த வீட்ட பார்த்துட்டு, பின்னாடி இருக்க அவுட் ஹவுஸ்ல தான் இருக்காங்க. செக்யூரிட்டி ரெண்டு பேர். சிஃப்ட் மாத்தி வேலை செய்வாங்க.

நம்ம யாரும் இல்லாதப்போ, வேலை கம்மி தான். இப்போ வேலை கூடும். எக்ஸ்ட்ராவா ஒரு ட்ரைவரும், கயல் அக்காவுக்கு உதவியா ஒரு ஆளும் போடலாம்னு இருக்கேன்” என்று  கூறிக் கொண்டே நடந்தான்.

பைரவி அமைதியாக கேட்டுக் கொண்டாள். பேசிக்கொண்டே வர, கயல் தேவாவை அழைத்தார்.

“ஐயா..” என்று அழைக்க, “சொல்லுங்க கயலக்கா” என்று திரும்பினான்.

“அக்கானு கூப்பிடாதீங்க ஐயா” என்று கயல் கூற, “வயசுல பெரியவங்கள வேற எப்படி கூப்பிடுறது? நீங்க விசயத்த சொல்லுங்க” என்று தேவா சிரிப்போடு கேட்டான்.

“மத்த வேலை பார்க்க ஆளு கேட்ருந்தீங்களே. வந்துட்டாங்க யா” என்று கூற, பைரவியையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

வேலை செய்ய வந்திருந்த பெண்ணையும், கார் ஓட்ட வந்திருந்தவரையும் விசாரித்து திருப்தி ஏற்பட, அவர்களை வேலைக்கு வைத்து  விட்டான்.

“ப்பா.. வாங்க பா விளாடலாம்” என்று சந்துரு அவன் கையை பிடித்து இழுக்க, “அப்பா இப்போ ஆபிஸ் கிளம்பனும்டா கண்ணா. வேலை இருக்கு. நீ இவங்க கூட எல்லாம் விளையாடு. நான் சாயந்தரம் வர்ரேன்” என்று கூற, சந்துரு முகத்தை தூக்கிக் கொண்டான்.

“என்‌ செல்லம்ல..” என்று தேவா கொஞ்ச, போனால் போகிறது என்று சந்துரு சம்மதித்தான்.

அவனை மேலும் கொஞ்சி விட்டு கிளம்பியவன், நின்று பைரவியிடம் தலையசைத்தான்.

ஒரு நொடி என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் மலைத்தவள், பிறகு அவனை போல் தலையசைத்து விடை கொடுத்தாள். காரில் அமர்ந்து மகனுக்கு டாடா காட்டி விட்டு, தேவா கிளம்பி விட்டான். அவன் சென்றதும் எதோ குறைந்தது போல் இருந்தது பைரவிக்கு. அதை ஆராய பிடிக்காமல், சந்துருவுடன் விளையாட ஆரம்பித்தாள்.

இன்று முகூர்த்த நாள். அவளுடன் வேலை செய்பவருக்கு திருமணம் என்று எல்லோரும் சென்று‌ இருந்தனர். பைரவிக்கு இது போன்ற விழாக்களுக்கு சென்று பழக்கமில்லை என்பதால், விடுமுறை எடுத்து விட்டாள்.

சந்துருவுடன் வீட்டில் வேலை செய்பவர்களும் விளையாடினர். ஒரு கட்டத்தில் சந்துரு களைத்து போக, பைரவி அவனை அழைத்துச் சென்றாள்.

கயலின் மனது நிறைந்து இருந்தது. சந்துரு அவர்களுக்கு பெறாத மகன். அவர்கள் இருவரும் அவனை போற்றி வளர்த்தனர். இந்த வீட்டிற்கு தேவேந்திரன் இரண்டாவது மனைவியுடன் வரப்போகிறான் என்று கூறியதும், அவர்களுக்கு பகீரென்றது.

தேவேந்திரன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதில், அவர்களுக்கு மகிழ்ச்சியே . அருமையான முதலாளியின் வாழ்க்கை, தனிமையில் கழிவது அவர்களுக்கும் விருப்பமில்லை.

ஆனால், வரும் பெண் அவர்கள் உயிரான சந்துருவை கொடுமை செய்து விட்டால்? அதற்கு தான் அவர்கள் அஞ்சினர். என்ன கொடுமை செய்தாலும், தாங்கள் அவனை காக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.

அதற்கெல்லாம் தேவையே இல்லை என்பது போல் இருந்தாள் பைரவி. அவளது அமைதியும் சந்துருவை அவள் கவனிக்கும் விதமும், அவர்களை ஈர்த்தது. அவர்களிடம் பைரவி நன்றாக பேசியது மரியாதையை வரவழைத்தது. நிம்மதியாக தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

இரவு அந்த பெரிய மெத்தையில் ஒரு ஓரமாக படுத்திருந்த பைரவி, தூக்கம் வராமல் விழித்துக் கிடந்தாள்.

இந்த வீட்டில் சந்துருவின் அம்மா சந்தியா வாழவில்லை என்றால், அந்த வீட்டில் அவள் இருந்திருக்கிறாள்.

“அப்படி என்றால் இவ்வளவு நாள் அவள் தங்கியிருந்த அறையிலா நானும் தங்கி இருந்தேன்?” என்று மனம் கேட்டது.

தேவையில்லாத கேள்வி தான். இருந்தாலும் அதற்கு பதில் வேண்டும் என்று மனம் கூப்பாடு போட்டது. பைரவி தூக்கம் தொலைத்து புரண்டு கொண்டிருப்பதை தேவேந்திரன் கவனித்தான்.

“என்ன பைரவி தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.

தேவேந்திரன் சோபாவில் அமர்ந்து, மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘கேட்டு விடலாமா?’ என்று தோன்ற, ‘கேள்’ என்று மூளை கட்டளையிட்டது.

“இந்த வீட்டுல சந்துரு அம்மாவோட போடோவே இல்லனா நியாயம் இருக்கு. அந்த வீட்டலயும் இல்லையே.. ஏன்?” என்று மனதை மறைத்து வேறு கேள்வி கேட்டாள்.

இதை ஏன் கேட்கிறாள் என்று தேவேந்திரனுக்கு புரியவில்லை. இருந்தும் பதில் கூறினான்.

“அங்க நம்ம ரூம்க்கு பக்கத்து ரூம் தான் சந்தியாவோடது. அதுல இருந்துருக்கலாம். ஆனா, அம்மா அவளோட எந்த திங்க்ஸும் வீட்டுல வைக்கல. அவ பேரன்ட்ஸ் கிட்ட கொடுத்ததா சொன்னாங்க. அந்த ரூம்ம கூட குடோனா மாத்தி லாக் பண்ணிட்டாங்க. நானும் கண்டுக்கல”

அவளது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. சந்தியா இருந்தது பக்கத்து அறை. அப்பாடா! என்று எண்ண முடியாமல்ஃ அவளது ஆழ் மனம் எதையோ கூற விளைந்தது‌‌.‌ அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. யோசித்துக் கொண்டே தூங்கி விட்டாள்.

அடுத்த நாள்,‌ பைரவிக்கு ரொம்பவுமே அழகாக விடிந்தது. குளித்து முடித்து கீழே வந்தவளுக்கு, கயல் காபியை கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு தோட்டத்தில் இறங்கினாள்.

எங்கு திரும்பினாலும் பசுமை மட்டுமே கண்ணுக்குத் தெரிய, அதை ரசிப்பது இதமாக இருந்தது. கடந்த வருடங்களில், சொந்த வீட்டிலேயே அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. வெறுப்பை கொட்டும் அண்ணி. அதை ஏனென்று கூட கேட்காத அண்ணன். மகாலட்சுமியும் முடிந்தவரை சமாளிப்பார். முடியாத பட்சத்தில் மௌனமாகிவிடுவார்.

அதனால், வீட்டில் பைரவி இருக்கும் நேரம் குறைந்தது. காலையிலேயே எழுந்தாலும், அறையை விட்டு வெளியே வர மாட்டாள். சரியாக சாப்பிடும் நேரம் அன்னை கொடுப்பதை அவசரமாக சாப்பிட்டு விட்டு, அலுவலகம் ஓடி விடுவாள்.

மாலை வரும் போது, வீட்டிற்கு தேவையானவைகளை வாங்கிக்கொண்டு முடிந்த வரை தாமதமாக தான் வருவாள். இருந்தும் இரவு உணவின் போது நளினியின் கண்ணில் பட்டுத் தொலைப்பாள். பொறுமையை இழுத்து பிடிக்க முடியாமல் பைரவி பதிலுக்கு பேசி விடும் நேரம் மட்டும், பார்த்திபன் வாய் திறப்பான்.

அண்ணனிடம் சண்டையிட முடியாமல், அவள் பின்வாங்க வேண்டி வரும். அதே சூழ்நிலை தான் மல்லிகாவின் வீட்டில் இருந்த போதும். இதோ இந்த வீட்டில் தான் நிம்மதியாக சுவாசிக்கிறாள்.

சந்தோச மனநிலையில் இயற்கையை ரசிக்கிறாள். காபியை குடித்து முடித்து அவள் வீட்டிற்குள் வரும் போது, சந்துரு எழுந்திருந்தான். அவனை கயல் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவரை பற்றி தெரிந்ததால் பைரவியும் அவர்களோடு ஐக்கியமாக, தேவா கீழிறங்கி வந்தான். கயல் அவனுக்கு காபி எடுக்க போய் விட, இவர்கள் மட்டும் இருந்தனர். அழகான குடும்பமாய்…!

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்