
காலம் தாண்டிய பயணம் 24
மித்ரனோ மகிழ்வுடன் “யாழ்.. யாழ்.. அப்பா யாழ்..” என்று தன்னைச் சுட்டிக்காட்டி பேசியவன்,
“என்னைப் பாரு யாழ், உன் அப்பா உன் மித்து, அவனை விட்டு வெளிய வாடா. அப்பாகிட்ட வாடா” என்றவனிடமிருந்து அடுத்த வார்த்தையை வர விடாமல் அழுகை அடைத்துக் கொண்டது.
ஆனால் அவன் பேச்சுக்குப் பலனாய், ஆத்ரிகனின் ஆன்மாவை மகிழ் முந்திக்கொண்ட நொடிகள் அவை.
மகனது கண்ணீர் துளி மித்ரனுக்கு புது நம்பிக்கை கொடுக்க, கலங்கிய கண்களுடன் மகனையும் அவன் போராட்டத்தையுமே பார்த்திருந்தான்.
அத்தனை நேரம் அமைதியாய் பூஜையில் இருந்த மார்த்தாண்டனோ மகனின் ஆதிக்க மாற்றம் உணர்ந்து விழிகளைத் திறந்தவன் “ஆத்ரீகா” என்றொரு அழைப்பைச் சிந்தினான்.
அவ்வளவு தான், அவ்வளவே தான் அத்தனை போராட்டத்தின் பின் மகிழின் உணர்வுகள் மேலேழுந்தது எல்லாம் அந்த சில நொடிகள் தான். அடுத்த நொடி ஆத்ரீகன் விழித்துக்கொள்ள, இரத்தச் சிவப்பாய் மாறிய அவன் விழிகளின் வீச்சில் தூரச் சென்று விழுந்தான் மித்ரன்.
அதனைக் கண்ட மாரத்தாண்டனின் இதழ்கள் அலட்சியமாய் விரிய, அவன் பார்வையில் ‘என்னுடைய ஒற்றை அழைப்புக்குக் கட்டுப்படுவான் என் மகன்’ என்ற பெருமை ஒளிந்திருந்தது.
மீண்டும் விழிகளை மூடிக்கொண்ட ஆத்ரீகன் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்க, அதன் பின்னான மித்ரனின் போராட்டம் பேச்சுகள் எல்லாம் அவனைச் சென்றடையாவிட்டாலும் மயக்கத்தில் படுத்திருந்த இனியாவின் காதினுள் புகுந்து கொண்டது.
அவள் மயக்கத்திலிருந்து லேசாகக் கண்ணை விழிக்க முயன்றவளுக்கு, உடலை அசைக்க முடியவில்லை…
மெல்ல வறண்ட இதழை ஈரப்படுத்தியவளோ முன்னே அமர்ந்திருந்தவளின் மீது பார்வையைச் செலுத்தினாள்.
இதழ்களோ “மகிழ்” என்று மொழிந்தது..
அவனிடம் அசைவில்லை என்றதும் சற்று பார்வையைத் திருப்ப, அங்கே மித்ரன் அவள் விழிகளில் விழுந்தான்.
“மாமா” என்றவளின் குரலில் அவள் புறம் அவன் பார்வை திரும்ப, “டோல், உனக்கு ஒன்னும் ஆகாதுடா மாமா இருக்கேன்ல. நான் யாழ் கிட்ட சொல்லுறேன்டா. நீ பயப்படாத மாமா பார்த்துக்கிறேன்” என்றவன் மகிழிடம் மீண்டும் பேச விழைய ஒரு குரல் அவனைத் தடுத்தது.
மித்ரனோ அப்படியே அசைவற்று நின்றுவிட்டான்.
அந்தக் குரல், அந்த ஒரு குரலைக் கேட்க, அவன் பட்ட பாடுகள் தான் எத்தனை எத்தனை?
இக்குறலுக்காக எத்தனை இரவுகள் தனிமையில் ஏங்கித் தவித்திருப்பான்.
ஆனால் இன்று காதின் அருகே கேட்டும், அசைய முடியவில்லை அவனால்…
சற்று திரும்பினால் போதும் கண்ணில் அவளைக் கண்டு விடலாம். காதால் அந்தக் குரலை கேட்டும் விடலாம். ஏன் அவளது ஸ்பரிசத்தை அருகில் சென்று உணர்ந்து விடும் தூரத்தில் இருந்தும் உள்ளம் நடுங்கியது அவனுக்கு…
மனதோடு உடலும் மரத்துவிட, அவனது நிலையை எண்ணி, கண்களில் குருதித்துளி ரணப்பட்டு ஆவியாகி வெளியேறியது.
மீண்டும் அதே குரல் “தேவ்” என்று மொழிய, அதற்கு மேல் முடியாமல் மனைவியின் புறம் திரும்பியவனுக்கு உலகமே உறைந்த உணர்வு தான்.
அவள் முகத்தை நேருக்கு நேர் இந்த நிலையில் பார்க்கும் நிலையை அறவே வெறுத்தான்.
அவனது இத்தனை வருட தேடல் இப்படியா உயிர்ப்பு பெற வேண்டும்???
அவளுக்கோ அவனைப் பிரிந்து சில நாட்கள் தான், அதுவே அவளைக் கூறு போட்டிருக்க, அவனுக்கோ அது சில ரணமான வருடங்களின் நீட்சி அல்லவா???
அதன் தாக்கம் அவனை அடுத்த எட்டை எடுத்து வைக்க விடாமல் மனமோ சண்டித்தனம் செய்தது.
ஆனால் உள்ளே இன்னொரு மனமோ ‘உன் யாழுக்கு இப்போ நீ வேணும். போ’ என்று அவனை அவளிடம் விரைய உந்தியது.
“யாழ்” என்று அழைத்தவனுக்கு அவளை நெருங்கச் சூழ்நிலை இடமளிக்க வில்லை.
அவளிடம் செல்லக் காலை எடுத்து வைத்த கணம் இங்கே கண்களைத் திறந்துகொண்டான் ஆதரீகன்.
மந்திர உச்சரிப்புகள் முடிந்திருக்க, ஐம்பூதங்களும் இப்போது ஆத்ரீகனின் கட்டுப்பாட்டில் நின்றிருந்தது.
அவனும் மார்த்தாண்டனும் அமர்ந்திருந்த பூஜைக்கான இடத்தை தவிர மற்ற இடங்களில் சுற்றிலும் மழை அதன் ஆதிக்கத்தை செலுத்தி இருக்க, இதோ வாளைக் கையில் ஏந்திவிட்டான் ஆத்ரீகன்.
நொடி நேரத்துக்குள் நிகழவிருக்கும் பேராபத்தை தடுக்கும் வழி அறியாமல் மித்ரனோ சட்டைப்பைக்குள் இருக்கும் மாலையை எடுத்து வலது கரத்தினுள் புதைத்துக் கொண்டான்.
தன்னை நோக்கி நீண்ட வாளினையும் அதனை ஏந்தி நின்றவனையும் பார்த்த இனியாவின் மனதுக்குள், அந்த நேரம் அவளிடம் காதல் சொன்ன மகிழின் எண்ணங்களின் பிரவாகம் ஊற்றெடுக்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
தனது கரத்தில் அந்த வாளால் ஒரு கோடு போட்டுகொண்ட ஆத்ரீகனோ அந்த இரத்தத் துளியை இனியாவின் கழுத்தில் சிந்த விட்டான்.
தன்மேல் சொட்டிய இரத்ததின் வெப்பம் உணர்ந்த இனியாவின் பார்வை அவனைத் தாண்டி எங்கும் அகலவில்லை…
அவள் விழிகளை ஊருடுவிய அவன் பார்வையும் உக்கிரம் பெற, இரத்தத்துளி சிந்திய இடத்தைக் குறி பார்த்து வீசிய அவனது வாளானது அவள் கழுத்தை அடைய ஒரு நொடி இடைவெளியில் சட்டென நின்றது.
நடந்த செயலில் ஆத்ரீகனின் பார்வை உக்கிரமடைய, மித்ரனைக் கண்களால் எரித்தான்.
அவன் ஓங்கிய வாளைக் கைகளால் பிடித்துத் தடுத்த மித்ரனின் செயல் அவனை மூர்க்கனாக்கி இருக்க, கையில் இருந்த வாளில் அழுத்தத்தைக் கூட்ட, மித்ரனின் கரத்திலிருந்து குருதி தெரித்தது.
அப்போதும் மித்ரன் வாளை விடவில்லை, மாறாக அவன் இதழ்கள் புன்னகைத்தது.
அத்தனை நேரம் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மாரத்தாண்டனுக்கு ஏதோ தவறாகப் பட, கூர்ந்து நோக்கியவனுக்கு மித்ரனின் கரத்தில் இருக்கும் முத்து மாலை கண்ணில் பட்டது.
அதன் பின்னான விடயம் புரிந்து கொண்ட நொடி, பூஜையில் இருந்தும் அவனால் பாதியில் எழ முடியாது என்பதை உணர்ந்தவன் “ஆத்ரீகா வேண்டாம்” என்றான் சத்தமாக, கோபத்தில் இருந்த மகனுக்கு அதுவோ கேட்காமல் போனது.
இந்த முறை அதிக கோபத்தில் பார்த்த அவன் பார்வையில் தூக்கி வீசப்பட்ட மித்ரனின் கையிலிருந்த முத்து மாலை அவர்கள் இருவர் உதிரத்திலும் நனைந்திருந்தது.
மித்ரன் அந்த வாளைப் பிடித்த காரணமும் அதுதானே!…
இனியாவின் கழுத்தில் விட்ட ஆத்ரீகனின் இரத்தத்துளி அந்த வாளில் மீதம் இருந்ததை உணர்ந்த, மித்ரனுக்கு சடுதியில் தோன்றிய யோசனையே இது.
ஆத்ரீகனின் பார்வை வீச்சில் தூக்கி எரிப்பட்டவன், அந்த முத்து மாலையை இறுகப் பற்றிக்கொள்ள, அந்த முத்து மாலையோ தானாக ஒரு வாளாக மாற்றம் பெற்றதில் இப்போது மார்த்தாண்டனின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
‘இவன் என்ன செய்து விடுவான்?’ என்ற எண்ணத்துடன், அவனை அப்படியே விட்டிருக்க, இதோ அவனை அழிக்கும் ஆயுதத்தைக் கொண்டு வந்து விட்டானே!
அமர்ந்த பூஜையை விட்டு எழுந்தால் யாழினியின் உடல் தன்னால் அழிந்துவிடும், எழவும் முடியாமல் மித்ரனைத் தடுக்கவும் முடியாமல் கோபத்தோடு அவனைப் பார்த்து,
“ஆத்ரீகா அவனைக் கொன்று விடு, என்னை நெருங்க விடாதே” என்றவன் மேலும் “பூஜையை விட்டு எழவும் வேண்டாம்” என்று கட்டளையையும் பிறப்பித்தான்.
வான்மீகியோ நிலைமை உணர்ந்து “மித்ரா, மார்த்தாண்டனை கொன்று விடு, அவனால் பூஜையை விட்டு எழ முடியாது, பூஜையில் வைத்தே அவனைக் கொன்றால் மட்டுமே உன் மனைவியின் உயிர் உடல் இரண்டுமே மீளும்” என்று சத்தமாய் கத்தினார்.
ஆத்ரீகனோ அவரைத் திரும்பிப் பார்த்தவன் “நான் இருக்கும்போது, என்னைத் தாண்டி என் தந்தையை கொல்வதா?” என்று கேலியாய் கேட்டபடி இதழ் குவித்து அவன் காற்றை ஊத அவன் இதழ்களிலிருந்து புறப்பட்ட கரும் புகைகள் மித்ரனை வட்டமிட்டது.
மித்ரனோ கையில் இருக்கும் வாள் கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்த மீண்டும் மீண்டும் எண்ணிக்கை பல்கி பெருகி அவனையே மொய்த்தது.
அவன் படும் பாட்டைப் பார்த்த தந்தையும் மகனும் ஒரு சேரப் புன்னகைத்து மீண்டும் பூஜையை ஆரம்பித்தனர்.
இப்போது மீண்டும் வாள் ஆத்ரீகன் கையில் ஏந்தப்பட்டது.
வாழ்வில் முதன் முறையாக தைரியமாக அவன் விழிகளையே நோக்கிய இனியாவோ “மகிழ், எனக்கு எப்பவுமே அன்புக்கு ராசி இல்லை போல, அப்போ என் அத்த என் மேல பாசமா இருந்தாங்க அவங்க என்னவிட்டு போய்ட்டாங்க. அப்பறம் அண்ணி பாசம் வெச்சாங்க அவங்களையும் பிரிஞ்சு வரணும்னு என் நிலைமை. உங்க வீட்டுக்கு வந்து மாமாவோட பாசம் கெடச்சிச்சு, அப்பறம் இங்க வந்து உங்க அன்ப காதலத் தெரிஞ்சிகிட்டேன்” என்றவள் ஒரு விரக்திப் புன்னகை சிந்தி,
“ஆனா பாருங்க தெரிஞ்சிகிட்ட கொஞ்ச நேரத்துலயே எல்லாமே முடியப்போகுது. இப்போ சாகப் போறதுல எனக்குக் கவலையே இல்லை. எப்போவோ போக வேண்டிய என்னோட உயிர், இப்படி உங்க கையாள போறதுல சந்தோசம் தான். ஆனா உலகத்தோட அழிவு என் ஒருத்தியோட உயிர் அழிவுல இருந்து ஆரம்பமாகப் போகுதுனு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது மகிழ். எனக்காகவே பிறந்தவர் நீங்க, அப்படி இருக்கும்போது நாம சேர்ந்து வாழ வேண்டாமா மகிழ்?” என்று அவள் பேசப் பேச, ஆத்ரீகனின் கரமோ உயர்ந்து, மீண்டும் தாழ்ந்து என ஆட்டம் காட்டியது. அதுவே அவளுக்கு மகிழின் போராட்டத்தை காட்டியிருந்தது.
உள்ளே மகிழோ ஏற்கனவே தந்தையின் போராட்டத்தில் சிறிது முழித்துக் கொண்டவன், இவள் பேச்சில் வெளி வரப் போராடினான்.
ஆனால் அவனால் முடியவில்லை. இவளது ஒவ்வொரு வார்த்தையும் உள்ளே இருக்கும் மகிழின் மனதை உறுதிப்படுத்த, வெளியே வரத்துடித்தவனை ஆத்ரீகனின் ஆளுமை தடுத்தது.
அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் உள்ளே இருக்கும் மகிழின் போராட்டம் புரிய மனதில் ஒரு நிம்மதி. ஆனால் மார்த்தாண்டனோ கொதித்துப் போய் இருந்தான்.
மகிழ் வெளிப்படும் போதெல்லாம் கரும்புகையின் ஆதிக்கம் குறைந்து அவற்றுடன் போராடும் மித்ரனின் தடைகள் நீங்கிக் கொண்டிருந்தது. ஆனால் முற்றிலும் குறைந்து விடவில்லை.
“சுவாமி, இவர்களை இப்படி போராட விட்டு விட்டு யாம் வெறும் பார்வையாளராக இருப்பதா, இதற்கு ஏதேனும் வழி இல்லையா? எதுவும் செய்ய முடியாமல் தவிப்பது வேதனையாக உள்ளது சுவாமி” என்ற பூவிழி விழிகளில் விழி நீர் வழிய அவரைக் கேள்வியுடன் பார்த்தாள்.
வான்மீகியோ “வழி இருப்பின் இப்படி அமைதியாக தவிப்புடன் அமர்ந்திருப்பேனா மகளே! எத்தனை எத்தனை ஆண்டுகளின் போராட்டம் இது? மித்ரன், மகிழ் இருவரின் மூலம் மட்டுமே இந்த முற்றுப்பெறாத கேள்வி முடிவடையும் என்பது விதி. நிச்சயம் விதி வலியது தான். உலகில் இயற்கைக்கு மாறாக இத்தனை தூரம் அவர்களை அழைத்து வந்த காரணம் நிச்சயம் நிகழ்ந்தே தீரும். பொறுமை கொள் மகளே!” என்றவர்,
மனதிலோ ‘பைரவா அந்தப் பெண்ணின் முயற்சியில் துணை நில். வெளியே வரப் போராடும் அந்த ஆன்மாவுக்கு உன் உதவி வேண்டும்” என்று மனமார வேண்டிக்கொண்ட அந்த நேரம்,
அங்கே பைரவன் கோயிலில், அனைத்து மணிகளும் தன்னால் வேகமெடுத்து அசைந்து பைரவனின் சிலையில் விழிகள் திறந்து கொள்ள, சிலையிலிருந்து அவனது அருபம் எழுந்து வெளியே வந்தது.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…

