
காதல் -38
சிந்தாமணி கண்கள் சிவக்க அமர்ந்திருக்க… அவர் அருகில் மூர்சையான நிலையில் இருந்தார் மூர்த்தி… அவரையே பார்த்துக் கொண்டு இருந்தனர் சாயாலி , மறவன் மற்றும் ஒருவர்.
காலையில் தான் மகன் மருமகளை காண மகிழ்ச்சியாக வந்த சிந்தாமணிக்கு தலையில் இடி விழுகாத குறையாக நடந்தது அந்த சம்பவம்.. அந்த சம்பவத்தில் அதிகம் பாதிக்க பட்டது என்னவோ மூர்த்தி தான்…
மறவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க.. சாயா தான் கதவை திறந்தாள் .. அவளது கணிப்பு இரவு உணவை தான் தேனு சமைத்து கொண்டு வந்திருக்கிறார் என்று..
ஆனால் வெளியே இருந்த நபரோ வேறு… அவரை பார்த்து சாயாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய… அதற்கு மாறாக மறவனது கண்கள் கோபத்தில் சிவந்தது…
தானாக அவனது பெயரை உச்சரித்தாள் “தமிழ் காதலன் ” என்று… அவளது கண்களை அவளால் கூட நம்ப முடியவில்லை .. எதிரில் இருப்பது இதுவரை தன் எண்ணங்களை வெளியே கொண்டு வந்த தமிழ் காதலன் வரிகளுக்கு சொந்தமானவன்.. துன்பத்தில் வாடும் போது எல்லாம் அந்த சிறு கவிதை கொடுக்கும் ஆறுதல் மிகையாகாது.. அப்படி ஒரு கவிதையை கொடுக்கும் தமிழ் காதலன் .. இதோ அவள் கண் முன்னே…
ஆர்வமாக அவனை நோக்கி சென்றவள் , அந்த நிமிடம் சுற்றத்தை மறந்து போனாள். வேகமாக அவன் முன்பு சென்று ஆசையாக பேச போக… அடுத்த நொடி வாசல் அருகில் நின்றவன்.. மறவன் மிதித்த மிதியில் ரோட்டில் சென்று விழுந்தான் தமிழ் காதலன்…
இதை சற்றும் எதிர்பார்க்காத சாயாலி அரண்டு போய் அவர்களையே பார்க்க… அதே நேரம் வாசலில் வந்து நின்றது ஒரு வெள்ளை நிற கார்…
காரில் இருந்து இறங்கி தன் காருக்கு முன்னே கிடக்கும் ஆடவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சிந்தாமணி மூர்த்தி தம்பதியினர்.
மறவன் வெறி பிடித்தவன் போல அவனை தாக்க போக… அதே நேரம் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து போனார் மூர்த்தி. இதை யாரும் எதிர்பார்க்காத நிலையில் அப்படியே அவரை தூக்கி காரில் போட்டு கொண்டு அனைவரும் மருத்துவமனை நோக்கி சென்றனர் … தமிழ் காதலன் உட்பட..
தற்போது தான் அவரது நிலையை கூறி விட்டு சென்றார் மருத்துவர். ” இவ்வளவு தூரம் வலி வரதுக்கு என்ன காரணம்.. உடம்பு எல்லாம் ஹெல்த்தியா தான் இருக்கு, இப்ப இருக்குற மாறி இன்னொரு முறை வலி வராம பார்த்துக்கோங்க.. ஹார்ட் அட்டாக் அறிகுறி இதான்.. இன்னும் வலி கொஞ்சம் கூடி இருந்தாலும் ஆட்டாக் ஆகிருக்கும்.. ”
அதில் அதிர்ந்த சிந்தாமணி.. “சார் இப்ப அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என கலக்கத்துடன் கேட்டார். அவருக்கு அவர் கணவர் எந்த அளவிற்கு முக்கியம் என்பது அவருக்கு தானே தெரியும்.. இத்தனை நாள் கோமாவில் இருந்துவிட்டு தற்போது தான் நினைவு திரும்பி அவருடன் ஒன்றாக வாழ நினைக்கும் போது இப்படி மூர்த்தி படுத்து கிடப்பது அவருக்கு பயத்தை உண்டு பண்ணியது.
” அதெல்லாம் இப்ப எந்த பிரச்சனையும் இல்லை, அவரை ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம பார்த்துக்கோங்க… ரிலாக்ஸ் பண்ண வெளிய எங்கையாச்சும் கூட்டிட்டு போங்க ” என சில சத்தான மருந்துகளை எழுதி கொடுத்ததோடு அவர் அறையில் இருந்து வெளியேறி இருந்தார்.
மூர்த்தி விழிப்பதற்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.நேரம் கடந்து அனைவரையும் பதற வைத்து நண்பகலில் கண் விழித்தார் மூர்த்தி… தான் பார்த்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்ற நினைப்பில் சுற்றி உள்ளவர்களை பார்த்தவர் பெரும் மூச்சை விட்டு விட்டு நிம்மதியாக இருக்க.. அவர் கண் திறந்தவுடன் அனைவரும் அவரை நோக்கி சென்றனர்
” அப்பா இப்போ எப்படி இருக்கீங்க ” என மறவன் ஒரு பக்கமும், ” மாமா இப்போ வலி பரவாயில்லையா” என சாயா ஒரு பக்கமும், என்னங்க நான் இப்போதான் உங்க கிட்ட வந்து சேர்ந்து இருக்கேன், இப்ப நீங்க என்ன விட்டு போக பார்க்கிறீங்களா ” என சிந்தாமணி கண் கலங்க.. உண்மையிலேயே கலங்கி போனார் மனிதர்.
அப்போது தான் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவன்.. அதுவரை அமைதியாக இருந்த மூர்த்தியின் முகம் சட்டென்று மாறி விட, அவரது முக மாற்றத்தை கண்டு மூவரும் பதறி போனார்கள்.
” ஏங்க நீங்க எதுக்கு இப்போ டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் ” என ஆறுதல் அளிக்க… மூர்த்தி அமைதியாக எதிரில் வருபவனை வெறிக்க பார்த்தார்.
” ஹலோ மிஸ்டர் மூர்த்தி, பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல இப்ப எப்படி இருக்கீங்க ” என்ற குரலில் ஏகத்திற்கும் நக்கல் நிறைந்து இருக்க.. ” ஓ நலம் விசாரிக்க தான் இவ்வளவு தூரம் வந்தியா, இல்ல….” என இழுத்து கொண்டு சந்தேகத்துடன் எதிர்கேள்வி கேட்டார் சிந்தாமணி.
” பார்த்தீங்களா உங்களை மறந்துட்டேன் ” என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்டியவன்.. ” சும்மா இவ்வளவு தூரம் வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியுது, நல்ல விஷயம் தான் என் வேலையும் சீக்கிரம் முடியும் ” என்றதும்… ” இவன் திருந்த மாட்டான் ” என்று மனதில் நினைத்து கொண்டான் மறவன்.
சாயாலிக்கு தான் புரியாத மொழியில் படம் பார்ப்பதை போல இருந்தது.. இதற்கு பின் ஏதோ பெரிய விஷயம் இருப்பதாக தோன்ற அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இருந்தாலும் தமிழ் காதலன் என்ற ஆர்வம் அவனது பேச்சில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்தது.
” இப்போவே விஷயத்தை பேசிடலாமா ?” என பொடி வைத்து கேட்க… மூர்த்தியின் நிலைமையை உணர்ந்து.. ” இல்ல இப்போதைக்கு எதுவும் பேச வேணாம்… ஈவ்னிங் வீட்டுக்கு வா பேசிக்கலாம் ” என சிந்தாமணி அமைதியாக பதில் அளித்தார்.
” அப்போ அதுவரைக்கும் நான் இங்க தான் இருக்க போறேன் ” என அங்குள்ள ஒரு இருக்கையை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவன்… எதிரே அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் மூர்த்தியை தான் பார்த்தான்.
” நீ இங்க இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல, ஈவ்னிங் வந்தா போதும் .. இப்ப கிளம்புறியா ” என வாசலை நோக்கி கையை காட்டினார் சிந்தாமணி…
அவரது அதிரடியான அணுகுமுறையில் சற்று வியந்தாலும்… அதை மீட்டுக் கொண்டு ” நீங்க எல்லாரும் இங்க இருக்கும் போது எனக்கு என்ன வேலை.. பூட்டுன வீட்ல போய் நான் என்ன செய்ய ” என எதிர் கேள்வி கேட்க..
” உன்ன யாரு இப்ப வீட்டுக்கு போக சொன்னது… அங்க போக உனக்கு என்ன உரிமை இருக்கு ” என மறவனின் அதிரடியான கேள்வியில் ” உரிமை ” என உச்சரித்து விட்டு அட்டகாசமாக சிரித்தவன்…
” என்ன மாம் உரிமையை பத்தி உன் பிள்ளை பேசுறான்… நான் யாருன்னு அவனுக்கு தெரியாதா இல்ல நீ சொல்லலையா ” என்றதும் சாயாலியின் கண்கள் அகன்று விரிய..
” இன்னொரு முறை என்ன அம்மான்னு கூப்பிடாத ” என கத்தியே விட்டார் சிந்தாமணி..
” எனக்கு விவரம் தெரிஞ்சு நீங்க தான் மாம்ன்னு சொல்லி கொடுத்ததா நியாபகம் , இப்ப இல்லைனா என்ன அர்த்தம் ” சற்றும் அசராமல் கேட்டவனை கை முஷ்டியை இறுக்கி கொண்டு பார்த்திருந்தான் மறவன்..
சிந்தாமணி கேட்டுக் கொண்டதால் இன்னும் அமைதியாக நிற்கிறான்.. இல்லையென்றால் அவன் பேசும் பேச்சிற்கு வாயை உடைத்து இருப்பான் மறவன்.
” இப்போதான் அவருக்கு கொஞ்சம் ஹெல்த் ஓகே வா இருக்கு, இப்ப தேவையில்லாம பேசி பிரச்சனை பண்ணாத ” என சிந்தாமணி சற்று இறங்கி வர.. அவரையே அமைதியாக வெறித்தவன் ” ம்ம் ஈவ்னிங் ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வீட்ல இருப்பேன் ” என்றதொடு அங்கிருந்து வெளியேறினான் மூர்த்தி மற்றும் சிந்தாமணியின் மூத்த வாரிசு தமிழ் அகரன் …
வாயை பிளந்து நிற்கும் சாயாலியின் அருகில் சென்றவன்… ” நீ என்கூட வா , வீட்டுக்கு போயிட்டு அப்பா அம்மாக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு வரலாம் ” என மறவன் அழைக்க.. அதே அதிர்ச்சியோடு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் சாயாலி.
தன் பெற்றோர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு மறவன் வெளியேறி விட… தம்பதிகள் இருவரும் செய்வது அறியாது ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காரில் ஏறிய சாயாலி கேட்ட முதல் கேள்வி.. ” தமிழ் காதலன் புக் எழுதினது இவர் தானா ” என்று தான், ஏனென்றால் அவனது பேச்சுக்கும் எழுத்திற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லை…
” ஏன் திடீர்னு கேட்கிற ”
” இல்ல எனக்கு தெரிஞ்சு ஆகனும் ”
” அவன் தான் தமிழ் காதலன்னு நீ எதை வச்சு முடிவு பண்ண ”
” நான் தான் அவரை ஒரு முறை பார்த்து இருக்கேன்ல… அவரோட முகம் எனக்கு எப்படி மறக்கும் ”
” இப்பவும் அவன் அதே மாதிரி தானே இருக்கான் ”
” இருக்காரு, ஆனால் அவரு பேசுறதுக்கும் அந்த எழுத்துக்கும் கொஞ்சமும் ஒத்து போகலை ” என வெளிப்படையாகவே தான் கணித்து விட்டதை கூறி விட்டாள்.
” புக் எழுதுற எல்லாரும் நல்லவங்க கிடையாதே… சில பேர் எழுத்து பெயர் போகனும்னு நல்ல கருத்துகளை எழுதுவாங்க, ஆனால் அவங்க வாழ்க்கையில அந்த கருத்துகள் ஒன்னு கூட பின்பற்றி இருக்க மாட்டாங்க… அந்த வகையா இருந்தா ?” என மேலும் பேச்சை வளர்ந்தான் மறவன்
ஏனோ இந்த விஷயம் பேசும் பொழுது தான் அவன் முகத்தை பார்த்து அவளும் சுவாரிஷ்யமாக பேசுகிறாள். ” இல்லவே இல்லை… அந்த புக்ல உள்ள ஒவ்வொரு வரியும் அத்தனை அழுத்தமானது , கண்டிப்பா இவரா இருக்க முடியாது ”
” அப்போ அந்த புக் எழுதினது யாரா இருக்கும்னு நீ நினைக்கிற ” என்றதும் அவனை சந்தேகமாக பார்த்தாள் சாயா..
” ம்ம் சொல்லு” என்றதும்… “கண்டிப்பா வெளி ஆள் யாரோ தான் எழுதி இருக்காங்க” என யோசனையாக கூற.. அதற்கு மறவன் கூறிய பதிலில் ஒரு நிமிடம் நெஞ்சை பிடித்து விட்டாள் சாயா…
சனா💖

