

காலம் தாண்டிய பயணம் 18
மாலை நேரம், அங்கே அந்தக் குகைக்குள் ஓர் ஓரத்தில் கண்களில் மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள் யாழினி.
அங்கே அருவமாய் நின்றிருந்த மோகினியோ யாழினியைப் பார்த்தபடி “வளவா, என்னைப் போலவே இருக்கிறாளடா” என்க,
புன்னகைத்த மார்த்தாண்டனோ “உன்னைப் போலவா?” என்று கேட்டு மீண்டும் சத்தமாய் சிரித்தவன், “உன்னைப் போல இல்லையடி, நீயேதான்” என்றிருந்தான் அவன்.
அவளோ கேள்வியாகப் பார்க்க, அவனே மீண்டும் “உன் மறுபிறவி அவள். உனக்கான உடலும் அவளே!” என்றான்.
அவளோ சந்தோஷமாகப் புன்னகைத்தபடி “இன்னும் என்ன தாமதம் வளவா, இப்போதே இவள் உடல் எனக்கு வேண்டும், எம் மகன் இந்த உலகை ஆள வேண்டும். மக்களின் மரண ஓலத்தின் முன்னே சிம்மாசனமாய் எம் தீய சக்தி சாம்ராஜ்யம் வீற்றிருக்க வேண்டும் வளவா” என்றாள் கண்களில் தீயுடன்.
“இன்றே நிகழும், கவலை வேண்டாம். நள்ளிரவு வரை காத்திரு. இன்னும் சில மணி நேரங்களில் நம் ஆத்ரீகன் நம் கைகளில்” என்றான், யாழியைப் பார்த்தபடியே.
யாழினிக்கோ அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க ஏதோ செய்தது.
கண்களை இறுக மூடியவளின் உதடுகளோ “தேவ்” என்ற உச்சரிப்பை விடவில்லை.
பூவிழி சொல்லி இவனைப் பற்றி அறிந்திருக்கிறாள்.
ஆனால் அது தன்னைச் சுற்றி இப்படி பின்னப்பட்டிருக்கும் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை.
இப்போது தெரிந்துகொண்ட உண்மை வலிக்க, கரங்களோ அவளை நம்பி அவளுக்குள் பூத்திருந்த சிறு மொட்டை அரவணைத்துக்கொண்டது.
___________
இதே நேரம் அங்கே பைரவன் கோயிலில், அதே மனநிலையில் தான் மித்ரனும் அமர்ந்திருந்தான்.
மகிழோ “என்ன சொல்றீங்க? அது எப்படிச் சாகா வரம் பெற்ற ஒருத்தன் செத்துப் போகாமலேயே மறுபிறவி எடுக்கலாம்? இதெல்லாம் எப்படி நம்புறது?” என்று எரிச்சல் குரலில் சத்தமாய்க் கேட்க, புன்னகைத்தார் வான்மீகி.
சற்று முன்னர்தான் ஊருக்குள் நுழைந்திருந்தனர் மூவரும்.
அவர்களை முதலில் கண்டது என்னவோ துயிலன் தான். பார்த்ததும் முதலில் அதிர்ச்சிதான் அவனுக்கு, பின்னர் யாரென்று விசாரித்ததில் நிலைமை ஓரளவுக்குப் புரிய, தந்தையிடம் அழைத்து வந்திருந்தான்.
கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்த இளவேந்தன் மித்ரனைக் கண்டதும் “இன்னும் யாரின் உயிரை எடுக்க வந்திருக்கிறாய் மார்த்தாண்டா? இத்தனை உயிரைக் கொன்று குவித்தும் உன் வெறி அடங்கவில்லையோ?” என்றவர் கோபமாய் எழ, ஒரு குரல் அவரைத் தடுத்தது.
“மகனே அவசரம் வேண்டாம். நீ நினைப்பது சரியே, ஆனாலும் இவன் கொடூரனல்ல” என்றவர் வேறு யாருமில்லை, சித்தர் வான்மீகிதான்.
தேவை ஏற்படின் அவர் அங்கே தோன்றுவார் என்பது இளவேந்தன் அறிந்ததே.
இன்றும் அதேபோல் திடீரென அங்கே தோன்றிய அவரை வணங்கிய இளவேந்தனோ “சுவாமி, தாங்கள் சொல்ல வருவது?” என்று கேள்வியுடன் நிறுத்த, வான்மீகி தொடர்ந்தார்.
“உன் மூத்தாதையர்கள் என்னிடம் கொடுத்துச் சென்ற பொறுப்பை நிறைவேற்றவே எம்பெருமானார் ஈசனின் அவதாரமான பைரவனின் துணையுடன் இவர்களை இங்கு வரவழைத்தேன் மகனே!” என்றவர்,
மகிழிடம் “உன் தந்தையை அழைத்து வந்துவிட்டாயே வளவா… மிக்க நன்றி” என்றார் புன்னகையுடன்.
அங்கு நின்றிருந்த மற்ற நால்வரும் குழப்பத்துடன் நிற்க, வான்மீகியோ மித்ரனை நோக்கி விரலை நீட்டி, “இவன் மார்த்தாண்டனின் மறுபிறவி” என்று சொன்னவர், மகிழைப் பார்த்து அர்த்தமாய்ப் புன்னகைத்தார்.
அவர் புன்னகையின் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் அவர் மட்டுமே அறிந்தது.
அந்த நேரம் தான் மகிழ் அந்தக் கேள்வியை வான்மீகியிடம் கேட்டிருந்தான்.
“மார்த்தாண்டன் சாகா வரம் பெற்றவன் தான். ஆனால் மறுபிறவி அவன் முடிவு. அவன் மனைவி மோகினி மறுபிறவி எடுக்கவிருக்கிறாள் என்று அறிந்தவனோ, பல நாள் யாகத்தின் பதிலாய் அவன் உயிரின் பாதியை காணிக்கையாய் செலுத்தி மறுபிறவி எடுத்திருந்தான். அதன் விளைவால் இங்கு அவனால், அவனது இரத்த சொந்தங்கள், அவன் உறவுகள் தவிர்த்து யார் கண்ணுக்கும் புலப்பட முடியாமல் போனது. அதில் அவனுக்குக் கவலை இருந்ததில்லை. ஆனால் அவன் எண்ணியது போல் மறுபிறவி எடுத்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவனால் அவன் மறுபிறவியான உன்னுள் அவனது கடந்தகால ஞாபகத்தைக் கொண்டு வர முடியவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் பேரழிவு நிச்சயம்” என்றார் இறுதியில் மித்ரனைப் பார்த்தபடி.
துயிலனோ “இவை எல்லாம் எதுக்காக சுவாமி?” என்றான் கேள்வியாக.
பின்னே இத்தனை உயிர் எடுக்கப்பட்டிருக்க, இதோ காலம் கடந்தும் அதுவே தொடர்கிறதே!
வான்மீகியோ “எல்லாம் மார்த்தாண்டனின் பேராசை துயிலா. அவன் தந்தை வீரவேந்தன் மட்டுமே அறிந்த ரகசியம் இந்தக் காலம் கடக்கும் முத்து மாலை. அரத்த மோகினிக்கும் இது தெரியும். அதனை அடைய ஆவல் கொண்டாள் அவள். அதன் மூலம் அவள் சக்திகள் பல் மடங்கு உயரக் கூடும். ஆனால் ஊருக்குள் வர முடியாது என்பதால் அவள் உதவி நாடியது என்னவோ அவளது மகள்மீது காதலில் திளைத்திருந்த கொடூரன் மார்த்தாண்டனிடன் தான். அவனது முந்திய பிறவிகள் பற்றியும் அவள் அறிவாள்” என்றவர்,
“அவனும் அவள் சொல்படி அதனை அடையக் காத்திருந்தான். ஆனால் இறுதி வரை அந்த ரகசியத்தை அறிய முடியாமல் போன கோபம் அவனை மூர்க்கனாக்கியது. அதனாலேயே அகோரிகளுடன் யாகம் செய்து இந்த உலகையே அடக்கி ஆள அவன் உயிர் நீரை இவ்வுலகில் உதயமாக்கினான். அதுவரை அந்த முத்துமாலை மீதிருந்த அவன் ஆசை, உலகையையே ஆளும் பேராசையாக மாறியிருந்தது. ஆனால் வீரவேந்தனோ பிறக்க முதலே அவன் கருவை அழித்திருக்க, இன்னும் மூர்க்கமானான் மார்த்தாண்டன். இதோ அவன் மனைவி, மகனை இவ்வுலகில் மீண்டும் கொண்டு வருவேன் என யாரும் நெருங்க முடியாத அகோராதிபதியாக மாறி நிற்கிறான்” என்றார்.
அவர் சொன்னவற்றை உள்வாங்கிய மித்ரனோ “அப்பறம் எப்படி என் மனைவியைக் காப்பாத்துறது சாமி?” என்றவனின் மனதில் இருந்த கவலை அவன் குரலிலேயே பிரதிபலித்தது.
அவரோ “கவலை வேண்டாம் மகனே! மார்த்தாண்டன் உன் மனைவியை எதற்காக அழைத்து வந்தானோ, அந்த எண்ணம் ஈடேற அவனுக்கு இவள் உதவி வேண்டும்” என்றவர் இனியாவை சுட்டிக்காட்டியபடி,
மீண்டும் “காலம் கடந்து அவன் பயணித்தாலேயன்றி, கடந்து சென்ற அந்த அமாவாசை நாளை விரைவில் அடைய முடியாது, அவன் மனைவிக்கு உடலும் கொடுக்க முடியாது” என்றார்.
மித்ரனோ “இவளா? இவ எதுக்கு? இவளுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே” என்றான் அவசரமாய்.
வான்மீகியோ புன்னகைத்தவர் “தொடர்பு இல்லை என்பது உன் எண்ணம் மகனே! உன்னவளின் இரத்த சொந்தம் அவள். நாகமச்சம் கொண்டு பிறந்த மூத்த பெண் குழந்தை அவள், இவளைப் பலி கொடுத்தால் தான் அந்த மார்த்தாண்டனுக்குக் காலப் பயணம் செய்ய வழி பிறக்கும்” என்றார்.
“இரத்த சொந்தமா?” என்று கேட்டவனுக்கு எல்லாம் புதிராகவே தோன்றியது.
அவனைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விடயமும் ஏதேதோ வினாவைத் தொக்கியே நிற்கின்றது.
கிடைக்கும் விடையும் இன்னொரு வினாவை எழுப்புகிறதே!
வான்மீகி புன்னகைத்தவர் “இவள் யாழின் இனிமையானவள் அன்றோ?” என்று வினாத் தொடுக்க,
மித்ரனின் எண்ணத்தில் ‘இனிக்குட்டியையும் நம்ம கூடவே வெச்சுப் பார்த்துக்கலாம் தேவ்’ என்ற மனைவியின் வார்த்தைகள் சட்டென உதிர்த்தது.
அவனோ வான்மீகியைக் கேள்வியாகப் பார்க்க, அவரோ புன்னகையுடன் அவன் எண்ணம் சரி என்பது போலக் கண்களை மூடித்திறந்தார்.
அடுத்த நொடி இனியாவின் அருகில் சென்று அவள் கன்னத்தைப் பற்றியவனுக்கு “டோல்” என்றதை அடுத்துப் பேச்சே வரவில்லை.
அவளது பெயருக்காகவே அவளை ‘டோல்’ என்று அழைத்தவனுக்கு, உண்மையில் அவள் தான் இவள் என்று எண்ணுகையில் அத்தனை உவகை உள்ளுக்குள்.
கூடவே எத்தனை பெரிய இடரிலிருந்து தப்பி இருக்கிறாள் என்று கவலை கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
அன்றுபோல் இன்றும் அவளைக் காக்க எண்ணி அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன்.
அவளோ என்னவென்று புரியாமல் தான் பார்த்திருந்தாள்.
அவளை விடுவித்தவனோ “டேய் டோல், என்ன தெரியுதாடா, மாமாவைத் தெரியுதா?” என்றான் தழுதழுத்த குரலில்.
இந்தக் கேள்வி அபத்தம் என அவனுக்கே தெரியும். அவன் அங்கே இருக்கும்போது ஐந்து வயதுக் குழந்தை அவள். மொத்தமாய் ஒரு நான்கைந்து முறை யாழினியுடன் பார்த்திருக்கிறான், அவ்வளவே. அப்படி இருக்கையில் அவளுக்கு இவனை எங்கனம் ஞாபகம் இருக்கப் போகிறது?
அவள் என்ன சொல்வதென்று விழிக்க, தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவனோ வான்மீகியிடம்,
“இதுக்கு என்ன தான் சாமி முடிவு? இப்படி இத்தனை பேர் காலம் கடந்தும் கஷ்டத்தை அனுபவிப்பதற்கு முடிவே இல்லையா? இத்தனைக்கும் அந்தக் காலம் கடந்து வர்ற மாலைதான் பிரச்சனைன்னா அத உருவாக்காமலே இருந்திருக்கலாமே” என்றான் ஆற்றாமையுடன்.
அவனைப் பொறுத்தவரை அந்த ஓலைச்சுவடியின் சொந்தக்காரர் வான்மீகி என்னும்போது, அந்த மாலையை உருவாக்கியதும் அவர் என்பது அவன் எண்ணம்.
அவரோ “தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பதும் இருக்கும் மகனே! அந்தக் காலம் கடந்து பயணிக்கும் மாலை உருவாக்கப்பட்ட நோக்கம் அந்த மார்த்தாண்டனின் அழிவு ஒன்றே! அவனை அழிக்கும் ஆயுதம் அது. யாம் அறியா பல மர்மங்கள் பல வருடங்களுக்கு முன்பே உணர்ந்துகொண்ட சித்தர்கள் உருவாக்கியது. அது உங்கள் கையில் கிடைக்க உதவியவன் நான், அவ்வளவே!” என்றார்.
மகிழோ இடையில் “பல வருஷத்துக்கு முன்னாடி உருவாக்கினதுன்னா அப்படினா அது எங்க ரெண்டு பேரோட இரத்தத்துல எப்படி வேலை செஞ்சுச்சு?” என்று கேட்டான்.
வான்மீகி “மார்த்தாண்டனின் பிறவி அவனது இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பு இருந்த ஒன்று. அவன் ஒவ்வொரு பிறவியிலும் தோற்று, இறுதியாய் எடுத்த பிறவிதான் இது. ஒவ்வொரு முறையும் அவனை அழித்துக் கடவுள் இவ்வுலகத்தைக் காத்திருக்க, தீரா ஆசை கொண்டவன் மீண்டும் மீண்டும் பிறந்தான். அதில் இம்முறை அவனுக்குச் சாகா வரமும் கிடைத்திருக்க, அவன் ஆட்டம் அதிகரித்திருந்தது. முப்பிறவிகளிலும் அவன் இரத்தம் தான் நீங்கள். அதனாலேயே இவை எல்லாம் சாத்தியமானது” என்றவர் முடிக்க,
மகிழோ “எனக்கும் மித்துக்கும் இரத்த உறவா????” என்று கேட்க, வான்மீகி புன்னகைத்தாரே ஒழிய பதில் உரைக்கவில்லை…
அவர் அமைதியில் இடையிட்ட துயிலனோ “சுவாமி, இத்தனை சக்தி வாய்ந்தவன் அவன் என்றால் ஏன் அவனால் அந்த முத்து மாலையை அடைய முடியவில்லை? அதனைக் கவர்ந்து அவனுக்குத் தேவையானவற்றைச் நிகழ்த்திக் கொள்ள முடியும் தானே! பின்னர் ஏன் இத்தனை பெண்களைப் பலியாக்க வேண்டும்? இதில் இந்த சிறு பெண்ணையும் தேட வேண்டும்?” என்று இனியாவைக் காட்டிக் கேட்டான்.
வான்மீகியோ “காரணம் இருக்கிறது துயிலா. இந்த மாலையை அடையவே முடியாது என்பது அவனது சாபம். எப்படி வீரவேந்தனை அழித்துச் சாகாவரம் பெற்றானோ, அதேபோல் அவரை அழித்ததினாலேயே ஊருக்குள் கால் வைக்க முடியாது என்பதையும், அந்த முத்துமாலையை அதற்கு உரியவன் கொடுக்கும் வரை அவனாக அதனை அடைய முடியாது என்பதையும் சாபமாய் பெற்றான். இதனை அவனும் அறிவான். அதனாலும் வீரவேந்தன் மீது கொண்ட கோபத்தாலும் இந்த ஊரில் பிறக்கும் பெண்களை அவனது தேவைக்கு பயன்படுத்த வரமும் பெற்றுக்கொண்டான்” என்றார்.
மித்ரனோ “எல்லாம் சரி, இப்போ அவனை எப்படி அழிக்கிறது? எப்படி இதுல இருந்து நாங்க தப்பிகிறது?” என்று கேட்டான்.
அவரோ “மார்த்தாண்டனின் அழிவு மூவர் மூலம் நிகழும் என்பது விதி” என்றவர் மித்ரன், மகிழ் இருவரையும் ஒன்றுசேரப் பார்த்தார்.
“மூவரா??” என்று மித்ரனும் மகிழும் குரல் கொடுக்க, மற்றவர்கள் மனதிலும் அந்தக் கேள்விதான் ஓடியது.
“ஆம் மூவர்தான். அவன் அழிவு நிகழ, அவன் இரத்தம் வேண்டும். அவன் கைகளால் தான் அவன் அழிவு. இதுவே அவன் சாகா வரத்தின் அடிப்படை. அவன் என்றும் அவனை அழித்துக்கொள்ளவே மாட்டான் என்ற இறுமாப்பு அவனுக்கு” என்றவர்,
“ஆனால் அவன் கெட்ட நேரமோ என்னவோ அவன் உன்னை உருவாக்கியது தான். அவன் அழிவின் ஆரம்பம். அவன் உயிரின் பாதி நீ என்பதால் உன் கையாலும் அவனை அழிக்க முடியும். அதற்கு உன் உதிரமும் அவன் உதிரமும் வேண்டும். அதனாலேயே மூவர்” என்றார்.
அங்கிருப்பவர்களுக்கு புரிந்தும் புரியாத நிலைதான்.
‘இவர் தெளிவாகவே பேசமாட்டாரா’ என்று கடுப்பாக வந்தது மித்ரனுக்கு.
‘அனைவரின் வாழ்க்கையும் சீராகப் போக, தாங்கள் மட்டும் ஏன் இப்படி மர்மமாகப் போராட வேண்டும்’ என்று எரிச்சலே மேலோங்கி இருந்தது அவனுக்கு.
இன்னும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ என்ற கேள்வியும் உள்ளே பிரளயத்தை உருவாக்கி இருந்தது.
மித்ரனின் மனதைப் படித்ததைப் போல மகிழோ “தெளிவா சொல்லுங்க சாமி” என்று கேட்க, அவரோ புன்னகையுடன்,
“அவனை அழிக்க வேண்டும் என்றால் மித்ரனின் உதிரமும் அவனது மகனின் உதிரமும் மார்த்தாண்டனின் மகனின் உதிரமும் கலந்த அந்த முத்து மாலை வேண்டும்” என்றார்.
மகிழோ ‘கிழிஞ்சுது போ, தெளிவா குழப்புறது எப்படினு இவர்கிட்டதான் படிக்கணும் போல’ என்று எண்ணிக்கொண்டான்.
அந்த நேரம் இவர்களைக் கேள்வியாகப் பார்த்தபடி அங்கே வந்திருந்தாள் பூவிழி.
அவளைக் கண்ட மற்றவர்கள் சாதாரணமாக நிற்க, ஒரு ஜோடிக் கண்களில் அதிர்ச்சி என்றால், இன்னொரு ஜோடிக் கண்களில் அதிர்ச்சியுடன் பரவசமும் சேர அவளையே பார்த்திருந்த அந்தக் கண்களில் கண்ணீர்…
அதற்கு ஏற்றாற் போல் கரங்களோ அவள் உணரும் முன்பே அவளை அணைத்திருந்தன.
அவளோடு சேர்ந்து அங்கிருந்தோருக்கும் அதிர்ச்சி தான். இரு ஆண்களைத் தவிர, அவர்களுக்கு தான் காரணம் தெரியுமே!
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…

