
அத்தியாயம் 20
பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் மௌனிகா.
அழைப்பு மணியின் ஒலி கேட்க, வாயில் கதவைத் திறந்தாள் ரஞ்சனி.
வெளியே நின்று இருந்தவனைக் கண்டு மனம் ஒரு நொடி திடுக்கிட, “என்ன?”
“மௌனி வந்தாச்சா?” என வினவினான் சந்துரு.
தோழி கிளம்பிய தினத்தன்று, “அவ எப்ப ஊர்ல இருந்து வருவா?” என்று அவன் விசாரித்ததற்கு, “மண்டே மார்னிங்.” என எதார்த்தமாய் பதில் தந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி, நெற்றியில் தட்டிக் கொண்டாள் பாவை.
அவளின் அமைதியில் பொறுமை இழந்தவனாய் “என்ன ரஞ்சனி, பதில் சொல்லாம நிக்கிறீங்க?’ என்று வினவிட, “காலிங்பெல் சௌண்ட் கேட்டுச்சு. யாரு படி!” எனக் கேட்டபடியே வந்தாள் மௌனிகா.
இடையைத் தாண்டி சற்று இறக்கமாய் இருந்த மேலாடையும், கணுக்காலுக்கு மேலேயே நின்றிருந்த கால்சராயும், குழல் முழுவதையும் அள்ளி முடித்த குதிரையின் வாலை போன்ற சிகை அலங்காரமும்.. இதுதான் அவள் என்று கட்டியம் சொன்னது.
முதல்நாள் நிச்சய விழாவில்.. புதிய உறவிற்கு அச்சாரமாய் பாகீரதி அணிவித்த தங்கச்சங்கலி, கழுத்தில் நெளிந்து உடையின் விலகலில் பளிச்சிட்டு கவனத்தை ஈர்த்தது.
ரஞ்சனியே ஒருநொடி, தோழியைக் கண்டு இமைக்க மறந்து நோக்கினாள்.
சற்று முன்னர் “மேரேஜ் ஃபிக்ஸ் ஆன எக்சைட்மென்ட் எதுவும் உன்கிட்ட இல்லையே?” எனக் கேட்டவளிற்கு, அதற்கான விடையை பாவையின் தோற்றம் அளித்தது.
உண்மையில் சரணிடம் பேசிய கடந்த சில நிமிடங்களும், “யூ லுக்டு கிரேட், வித் யுவர் ஓன் வே!” என்ற ஆடவனின் இயல்பான பாராட்டும், பாவையை உள்ளும் புறமுமாக மெருகேற்றி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கைப்பேசியில் அவனிடம் பேசும் பொழுதே, மனதின் திடம் சற்று கரைந்து உள்ளிருக்கும் உணர்வு கசியத் தொடங்கி விட்டது தான். எனினும் அதை முகத்தில் காட்டாது, திறமையாய் மறைத்து வைத்திருந்தாள்.
ஆச்சி ரெங்கநாயகிக்காக என்பதைக் கடந்து, நேற்றைய இரவில் உடன் வந்து வழியனுப்பிய அத்தருணத்தில்.. ‘ஆடவனை அவனது குணத்திற்காகவே திருமணம் செய்து கொள்ளலாம்!’ என்ற எண்ணம் உருவெடுத்து இருந்தது.
அதன் நீட்சியாய் இன்று அவன் பேசியதும், உள்ளிருந்த அந்த இனம் புரியாத மனதின் குறுகுறுப்பு, சட்டென தற்போது தோற்றத்தில் வெளிப்பட்டு விட்டது.
அவளின் உடல் அசைவுகளைக் கவனித்து இருந்த சந்துரு.. கண்களை விலக்க இயலாது, “யூ லுக் பியூட்டிஃபுல் மௌனி..” எனச் உரைத்த பாராட்டு, பாவைக்கு ஏனோ கசந்தது.
சரணின் வார்த்தைகளில் இருந்த நேர்மையும் லேசான வியப்பும் தந்த அந்த துளி மகிழ்விற்கும், இவனின் சொற்களிற்குப் பின்னிருக்கும் ஆசையும் கள்ளத்தனமும் தரும் எரிச்சலிற்கும் தான் எத்தனை பெரும் வேறுபாடு என்று மலைப்பாய் இருந்தது பாவைக்கு.
“அவனும் டவுன் ஆகாம என்னையும் டவுன் பண்ணாம இருந்தா போதும்!” என்ற வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பாய் தோழியிடம் உரைத்ததற்கு, முழு தகுதி உடையவனாய் தற்போது சரண் மட்டுமே அவளிற்குத் தோன்றினான்.
அரிசி ஆலையில் சந்தித்துப் பேசியதில் தொடங்கி, உடை தேர்வு, அவளிற்காக தம்பியிடம் உணவை கொடுத்து அனுப்பியது, நிச்சய நிகழ்வில் பாவையின் எண்ணம் அறிந்து அச்சூழலைக் கையாண்டது, “நீ ஓகே தான?” என ஒன்றிற்கு இரண்டு முறை கேட்டு அவளது இயல்பு தன்மையை உறுதி செய்து கொண்டது என்று ஒவ்வொரு விஷயத்திலும் மௌனியே அறியாமல், அவளின் மனக்கதவை திறந்து உள்ளே நுழைந்து இருந்தான் ஆடவன்.
அதனால் தற்போது எதிரே நிற்பவன், பாவையின் சிந்தையில் மட்டுமல்ல பார்வையிலும் கூட பதிய மறுத்தான்.
மௌனி தோழியின் பக்கம் திரும்பி, ‘எதற்காக வந்திருக்கிறான்?’ என்பது போல் பார்க்க, “நீ வந்துட்டியானு விசாரிச்சிட்டு இருந்தாரு படி!” என்று பதில் தந்தாள் அவள்.
வாயிலின் அருகே இருந்தவளைக் கடந்து அவன் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, “ஸ்டேண்ட் ரைட் தேர்!” எனக் கட்டளையாய் ஒலித்தது பாவையின் மொழி.
அவளின் சொல்லை மீறி அடுத்த அடி எடுத்து வைக்க திராணி இன்றி, அப்படியே நின்று கொண்டான் சந்துரு.
“மிஸ்டர், இப்படிதான் சட்டுனு வீட்டுக்குள்ள வருவீங்களா?” என்று ரஞ்சனி சினத்துடன் வினவ, “கெட் அவுட்!” என எவ்வித உணர்வும் அற்ற குரலில் உரைத்தாள் மௌனிகா.
“மௌனி..” என்று அவன் பேச முற்பட, “உங்களை வெளிய போகச் சொன்னேன் மிஸ்டர். மேனர்ஸ் இல்ல? ரெண்டு பொண்ணுங் தனியா இருக்க வீட்டுக்குள்ள இப்படி சட்டுனு வர்றீங்க?”
“ஸாரி..” என பின்னால் காலடி எடுத்து வைத்து வெளியே சென்று நின்றவன், “உன்கிட்ட பேசணும் மௌனி.”
இடது மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரத்தை பார்த்தவள், “உங்கக்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல. அதோட ஆஃபிஸுக்கு டைம் ஆச்சு. படி ரெடியா, கிளம்புவோமா?” என்று அவனை முற்றிலுமாய் தவிர்த்து தோழியிடம் வினவினாள்.
“ம்ம்.. போகலாம்!” என உரைத்த ரஞ்சனி கைப்பையை எடுத்து வர, இரு பெண்களும் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டனர்.
சந்துரு அவர்களது வழியை சென்று மறித்தான்.
“ப்ளீஸ் மௌனி.”
“ஏய்.. நானும் ஏதோ போனா போகுதுனு கொஞ்சம் சாஃப்டா உன்னை டீல் பண்ணா, என்ன ஓவரா போற?” என்று ரஞ்சனி பொறுமை இழந்து அவனை நோக்கிக் குரல் உயர்த்த, “படி, விடு!” என சமாதானம் உரைத்த மௌனி, ‘என்ன?’ என்பது போல் அவனை நோக்கினாள்.
“நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி, நான் பேசி இருந்தேனே?”
“நான் அப்பவே அதுக்கான பதிலைச் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்!”
“நான்தான், உனக்குப் பிடிச்ச மாதிரி மாறுறேனு சொல்றேனே?”
“மிஸ்டர் சந்துரு. இதுக்கும் அன்னைக்கே ரிப்ளைக் கொடுத்துட்டேன்.”
“ஏன், உனக்கு என்னைப் பிடிக்கல?”
“பிடிக்கலனு இல்ல. இண்ட்ரெஸ்ட் இல்ல. அவ்வளவு தான்!”
“அப்ப, உனக்கு எதுல இண்ட்ரெஸ்ட்னு சொல்லு. நான் அது மூலமா டிரை பண்ணுறேன்.”
சட்டென்று சிரித்தவள், “சந்துரு, நான் சொல்லுறது நிஜமாவே உங்களுக்குப் புரியலயா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?”
“மௌனி.?” என அவன் ‘விரும்பியவள் கை நழுவி சென்று விடுவாளோ?’ என்ற தவிப்புடன் பார்த்தான்.
“ஒரு விஷயம் சொல்லுறேன், கேட்டுக்கோங்க. நீங்க என்ன செஞ்சாலும், எப்படி மாறுனாலும் எனக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் வராது. அதுக்கு சில காரணங்கள் இருக்கு. ஃபர்ஸ்ட் ஒன், எனக்கும் உங்களுக்கும் செட் ஆகாது.
உங்களைக் குறையாவோ, குறை உள்ள ஆளுனோ நான் மறுக்கல. முயலையும் பூனையையும் ஜோடி சேர்க்க முடியாது, பாருங்க. அதுபோல தான் இதுவும்.
செகண்ட்.. நான் என்னோட வேவ்லென்த்ல இருக்கிற ஆளைத்தான் கல்யாணம் செஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். அதேபோல நீங்க உங்களை மாதிரி யோசிக்கிற பொண்ணைத் தேடுங்க, அப்பதான் லைஃப் நல்லா இருக்கும்.
அப்புறம் லாஸ்ட், ஐம் எங்கேஜ்டு.” என தனது விரலில் இருந்த மோதிரத்தைக் காட்டினாள்.
அதிர்ச்சியுடன் அவளை நோக்கியவன், “பொய் சொல்லாத மௌனி.”
“நான் எதுக்கு மிஸ்டர் பொய் சொல்லணும்? நேத்துதான் எங்கேஜ்மெண்ட் ஆச்சு.”
“ஊருக்குப் போகும் போது, நீ இதைப் பத்தி எதுவும் சொல்லலையே?”
“அன்எக்ஸ்பெட்டட் ஈவண்ட்.”
‘எதிர்பாராமல் நடந்த நிகழ்வு’ என அவள் உரைத்தரை தவறாய் புரிந்து கொண்டு, “உன்னை, ஃபேமிலியில இருக்கிறவங்க ஃபோர்ஸ் பண்ணாங்களா?” என்று வினவினான் பாவையைப் பாதுகாத்திடும் நோக்கில்.
“ஃபோர்ஸா.? நாட் அட் ஆல்! என் முழு சம்மதத்தோட தான் நடந்தது. என்ன, திடீர்னு ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அதைத்தான் நான் அப்படிச் சொன்னேன்.”
“இல்ல. நான் நம்ப மாட்டேன். ஒரு வருஷமா உனக்கு என்னைத் தெரியும். அப்படி இருந்தும், என்னை வேணாம்னு சொல்லுற. ஆனா ஊருக்குப் போன நாலு நாள் கேப்ல எப்படி ஒருத்தரைப் பிடிச்சு, ஓகே சொல்லி, எங்கேஜ்மெண்ட் வரைக்கும் போவ?”
“ஒருத்தரை பிடிக்கிறதுக்கு, ஒரு வருஷம் தேவை இல்ல. ஒருநாள் கூட போதும். எனக்கு அவரை பிடிச்சிருக்கு. எனக்காக, எதையும் அவரு மாத்திக்கிறேன்னு சொல்லவே இல்ல. அதுனால பிடிச்சிருக்கு. நான் ஒரு வார்த்தை சொன்னா, அதுக்கு மரியாதைக் கொடுத்து நடந்துக்கிறாரு. என்னைப் புரிஞ்சுக்கிறாரு. உங்களை மாதிரி திரும்பத் திரும்ப வந்து பேசி, என்னோட உணர்வுகளைப் பத்தி யோசிக்காம டைம் வேஸ்ட் பண்ண மாட்டாரு! நானும் இப்படித்தான். சோ, ஐ லைக் ஹிம்! ப்ளீஸ், டோண்ட் டிஸ்டர்ப் மீ..” என்றவள் அவனைக் கடந்து செல்ல, “மௌனி. வெயிட்.” என அவளின் கரத்தைப் பற்றினான்.
‘அவனைக் காயப்படுத்தாது, தனது வாழ்க்கைப் பாதையில் இருந்து விலக்க வேண்டும்!’ என்று அதுவரை பொறுமையாய் பேசிக் கொண்டிருந்த மௌனிக்கு, எதிர்பார்த்திடாத திடீரென்ற தொடுகையில் சட்டென்று சினம் துளிர்த்திட, “மிஸ்டர் சந்துரு! மைண்ட் யுவர் ஆக்ஸன்!” என விரல் நீட்டி எச்சரித்து, அவனது பிடியில் இருந்த தனது மற்றொரு கரத்தை உதறி விடுவித்துக் கொண்டாள் மௌனிகா.
“என் வுட்பி, என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணுறதை விரும்ப மாட்டாரு. அது, அவரோட ஃபேமிலியாவே இருந்தாலும், உடனுக்குடனே பதில் கொடுத்திடுவாரு. அப்புறம், சட்டுனு கோபம் வந்துடும் அவருக்கு. அப்படி வந்துட்டா, பேச்சு எல்லாம் கிடையாது. ஸ்ட்ரைட்டா ஆக்ஸன் தான். அவரோட பதில் செயல்ல தான் இருக்கும். உங்க விஷயத்தை, அவரோட காதுக்கு கொண்டு போக வேண்டாம்னு நினைக்கிறேன். ஒருவேளை இதுக்கு மேலயும் நீங்க என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டா, நான் அவர் மூலமா உங்களை டீல் பண்ண வேண்டியதா இருக்கும். பீ கேர்ஃபுல்!” என்று உரைத்து அங்கிருந்து நகர்ந்திட, உடன் நின்றிருந்த ரஞ்சனியும் அவனை பார்வையாலேயே எரித்துவிட்டு தோழியின் பின்னால் வந்தாள்.
“படி..”
திரும்பிப் பார்த்த மௌனி, ‘என்ன?’ என்பது போல நோக்கிட, “உன்னோட ஆளைப் பத்தி, இப்ப நீ சொல்லீட்டு வந்தது எல்லாம்?”
“உண்மை தான், ஏன் கேட்கிற?”
“நிஜமாவா? பேச்சால பதில் சொல்ல மாட்டரா? செயல்ல தானா?”
அவள் சிரிக்க, “படி, மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி ரெண்டு நாள்தான ஆகுது? அதுக்குள்ள எப்படி இவ்வளவு கான்ஃபிடன்ஸா அவரைப் பத்திப் பேசுன?”
“ஏன்னா, நான் சம்மந்தப்பட்ட ரெண்டு விஷயத்துல அவரோட ரியாக்ஷனைப் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன்!” என்று, முதல்முறை சரணின் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது உடை விஷயத்தில் வசந்தி உரைத்ததற்கு அவன் தந்த மறுமொழியையும், உணவு விஷயத்தில் சேகரனின் குடும்பத்தாரின் முன்பான நடவடிக்கையையும் பகிர்ந்தாள்.
“ம்ம்.. ஸ்மார்ட் தான். உன்னோட சித்தப்பா ஃபேமிலியை அவர் ஆஃப் பண்ணது ஒன்னும் எனக்கு பெருசா தெரியல. அவங்க பொண்ணை வேண்டாம்னு மறுத்ததால, இப்படி நடந்துக்கிறது ஓகேதான். ஆனா.. அவரோட சித்திக்கு சொன்ன பதில்.. ஐம் இம்ப்ரஸ்டு.” என ரஞ்சனி உரைத்திட, மௌனியும் அதனை தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.

