Loading

அத்தியாயம்-42

 

“விருட்சங்கள் வழிகாட்ட

மணிநேர பயணம்,

பட்சிகள் கதை சொல்ல

பயணத்தின் அந்தம்.

மேதினியின் உள்ளத்தில் ஊடுறுவி செல்ல,

புதிர்கள் பல 

அர்த்தம் கூறி தொடரும்..

அவற்றின் முடிவுவர

மறைகை கிட்டிடுமே!” என்று இளநகை வாசிக்க, அனைவரும் பேவென்று விழித்தனர்.

 

“விருட்சங்கள்னா மரங்கள். மரங்கள் வழி காட்டும்னு சொல்லுது..” என்று தனக்கு புரிந்ததை மட்டும் அகர்ணன் கூற,

 

அந்தக் காகிதத்தை வாங்கி பார்வையிட்டுக் கொண்டிருந்த ஜான்விகா, “பட்சினா பறவை.. பறவை எங்கருந்துடா கதை சொல்லுது? காக்கா வடை சுட்ட கதையில் நரியைப் பத்தி நம்மட்ட புலம்பப் போகுதோ?” என்று கேட்டாள்.

 

“அய்யோ..” என்று தலையில் அடித்துக் கொண்ட மதி, 

 

“எனக்குப் பறவைகள் மொழி புரியும், அப்ப பறவை நமக்குப் போக வேண்டிய பாதையைச் சொல்லுது போல” என்று கூற,

 

“வாய்ப்பிருக்கு” என்ற ப்ரியா, அகநகையை நோக்கினாள்.

 

அதற்காகவே காத்திருந்ததைப் போல் அகநகை கைகளை அசைத்து நீச்சலடிப்பதைப் போன்று சைகை செய்தாள்.

 

“நாம இங்க எவ்ளோ சீரியஸா பேசுறோம் இவ குளிக்க நீச்சல் குளம் கேட்குறா பாருங்களேன்.. அருவில தள்ளி விட்ருவேன் பாத்துக்க” என்று ஜான்வி கூற,

 

அவளைப் பார்த்து முறைத்தபடி தன் தலையில் அடித்துக் கொண்டவள், இதயம்போல் கையில் அபிநயம் பிடித்தாள்.

 

“லவ்” என்று கண்கள் மின்ன இளநகை கூற,

 

அனைவருமே அவளைக் குறுகுறுவென்று பார்த்தனர்.

 

பின்னே!? காதலைப் பற்றியெல்லாம் யோசிக்காது இதயம் ஈமோஜியைக் காட்டினால் கூட ‘இதயம் தானே? ரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்பு’ என்று கூறுபவள், இன்று காதலென்று கூறுவதில் அனைவருக்கும் ஆச்சரியம் வருவதில் ஆச்சரியம் இல்லையே!

 

அவர்கள் பார்வையில்தான் தனது வார்த்தையை உணர்ந்தவளின் மேனி சிலிர்க்க, விழிகள் அவள் கட்டுப்பாட்டை மீறித் துருவனைத் தொட்டுத் தொக்கி நின்றது!

 

அதில் அவனுள் ஒரு இன்ப மின்சாரம் பாய்ந்திடவே, தன்னை சமன் செய்தவன், “இதயமா அகா?” என்று கேட்க,

 

வேகமாய் ‘ஆம்’ என்று தலையாட்டினாள்.

 

“இதயம் நீச்சலடிக்க போவுதா? என்னடி சொல்ற?” என்று விஷ்வேஷ் வினவ,

 

பொறுமை இழந்து தலையைப் பீய்த்துக் கொண்டவள் ஒரு குச்சியை எடுத்து மண் தரையில் ஒரு வட்டமும் நடுவே ஒரு இதயமும் வரைந்தாள்.

 

“வட்டத்துக்குள்ள ஹார்டு.. வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்றியா” என்று ஜான்வி கைகளைக் கட்டிக் கொண்டு அவளைத் தோரணையாய் நோக்கியபடி வினவ,

 

நாக்கை மடித்து விரல் நீட்டிப் பத்திரம் காட்டியவள், அந்த வட்டத்தினையும் சுற்றியுள்ள இடத்தினையும் காட்டினாள்.

 

“பூமியா?” என்று ப்ரியா வினவ,

 

“பூமியோட இதயமா?” என்று மதி கேட்டான்.

 

வேகமாய் ஆமென்று தலையாட்டியவள், தன்னவனிடம் வந்து ‘நீ’ ‘’நான்’ ‘இதயம்’ என்று அபிநயம் பிடிக்க,

 

“நானும் நீயும் லவ் பண்றோம்” என்றான்.

 

ஆமென்று தலையாட்டி ‘நம்மை இணைத்தது இதயம்’ என்று அபிநயம் பிடித்தவள், தான் வரைந்ததை சுட்டிக் காட்டி ‘நீர்’ போன்று கையை அசைத்தாள்.

 

“புரிஞ்சுடுச்சு! மனுஷன இணைப்பது இதயத்தில் உள்ள அன்பு தான். அதேபோல பூமியை இணைப்பது கடல். கடல் தான் பூமியோட இதயம்” என்ற இளநகை, “மேதினினா பூமியா?” என்றாள்.

 

அகநகை ஆமென்று தலையசைக்க, “அப்ப கடலுக்குள்ள போகனுமா?” என்று துருவன் கேட்டான்.

 

அதற்கு அகநகை தன் தோள்களைக் குலுக்க, “சரி இப்ப எப்படி போகனும். அதைச் சொல்லுங்க” என்று அகர்ணன் வினவினான்.

 

அனைவரும் மதியை நோக்க, ‘என்ன எல்லாரும் நம்ம புருஷனயே லுக்கு விடுறாங்க?’ என்று நினைத்த ஜான்விகா, ‘அவனுங்களே லுக்கு விடுறாங்க.. பட்டா போட்டு நாமினி பண்ண நம்ம ஏன் சும்மாருக்கனும்’ என்று அவளும் அவனைப் பார்த்து ‘சிங்.. சிங்’ என்று கண் சிமிட்டினாள்.

 

அவளை மறைத்துக் கொண்டு வந்து நின்ற கரடியும் தன் கண்களை சிமிட்டி அவனை நோக்க,

 

“கொப்ப மவனே.. கஸ்டபட்டு கரெக்டு பண்ணி நான் கட்டிகிட்டா நீ ஓசில வந்து ஏசி காத்து வாங்குறியா?” என்று கரடியுடன் சண்டைக்குப் பாய்ந்தாள்.

 

‘கொடுமைடா’ என்று தலையில் அடித்துக் கொண்டவன் “முதல் லைன்படி மரத்தைத் தான் பார்க்கனும்டா லூசுகளா..” என்று கூற,

 

“அட ஆமால?” என்று அனைவரும் சுற்றியுள்ள மரங்களைப் பார்வையிட்டனர்.

 

“அந்தக் குகைக்குள்ள தானே இந்த க்ளூ கிடைச்சது. அப்பக் குகைக்குப் பக்கத்துல உள்ள மரங்கள்ல தான் க்ளூ கிடைக்குமாருக்கும். வாங்க அங்க போய்ப் பார்ப்போம்” என்று துருவன் கூற, யாவரும் நடையை துவங்கினர்.

 

யாவரும் குகையை நோக்கி நடக்க, மனதில் இனம் புரியாத சிலிர்ப்புடன், துருவனோட பின்தங்கி நடந்து வந்துக் கொண்டிருந்தாள் இளநகை.

 

“என்னாச்சு?” என்று துருவன் மென்மையாய் கேட்க,

 

அவன் கேள்வி புரியாது அவனை நோக்கினாள்.

 

புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “டயர்டா இருக்கா?” என்று வினவ,

 

குழப்பமான முகத்துடன், “இல்லையே! ஏன்?” என்றாள்.

 

“இல்ல எப்பவும் முதல் ஆளா நடந்து போவ. துருதுருனு அடுத்த க்ளூ என்னவோனு தேடுவ.. இப்ப லாஸ்டா போறோமே” என்று அவன் கேட்க,

 

‘அட எவ்ளோ நோடிஸ் பண்றாங்க’ என்று எண்ணியவள், “இல்ல சும்மாதான்.. இந்த இடமெல்லாம் அழகாருக்குல்ல” என்றாள்.

 

அவள் பேச்சை மாற்றுவது புரிய, மெலிதாய் சிரித்தவன், “ம்ம்..” என்க,

 

மேலும் அவனுடன் பேச்சு வளர்க்க ஆசை இருந்தபோதும் என்ன பேசவென்று தெரியாது மௌனியானாள்.

 

“ஏ கண்டுபிடிச்சுட்டேன்” என்று ஜான் கத்த,

 

தன் காதுகளைப் பொத்திக் கொண்டபடி அவளிடம் வந்த‌ விஷ்வேஷ் அவள் மண்டையிலேயே நங்கென்று கொட்டியிருந்தான்.

 

“ஆ..” என அலறியவள் “பக்கி ஏன்டா?” என்க,

 

“ஆ.. சாவடிக்குறாளே” என்ற காதுகளை ஆட்டிக் கொண்டவன், “நாயே.. வந்து எத்தனை நாளாவது.. கத்தாதனா கேட்குறியாடி? என் காது சவ்வு செத்தே போயிடும்போலடி” என்று மூச்சுப் பிடிக்க கத்தினான்.

 

அவன் திட்டி முடிக்கும் வரை சிரத்தையுடன் கவனித்தவள், “மச்சான்.. மறுக்கா சொல்றேன்.. நீ ஏதோ என்னை வண்ண வண்ணமா பாராட்டுரனு புரியுதுடா.. அனா பாரு.. எனக்கு காது கேட்காது” என்று அவன் தலையில் கூடை மண்ணை அள்ளி கொட்டினாள்.

 

“சரி எதுக்கு கத்தின?” என்று சிரித்து ஓய்ந்த மதி சைகையில் வினவ,

 

அங்குள்ள ஒரு மரத்தை காட்டினாள். 

 

அனைவரும் அதன் பக்கம் திரும்ப, அம்மரத்தின் ஒரு கிளை மனித கை வடிவிலும் அதிலுள்ள ஆள் காட்டி விரல் ஒரு பாதையையும் குறிப்பிட்டுக் காட்டியது. 

 

அனைவரும் அந்த மரத்தை வியந்து பார்த்தபடியே அதனருகே செல்ல, “இதுதான் விருட்சம் வழி காட்டுறதா?” என்று ப்ரியா கேட்டாள்.

 

“ம்ம்.. ப்ரியாக்கா நோட் பென் கொடுங்க. வழியை நோட் பண்ணிட்டே வருவோம்” என்று இளநகை கூற, 

 

ப்ரியாவும் அவற்றை வரவழைத்துக் கொடுத்தாள்.

 

போகும் பாதையை ஒரு முன்னெச்சரிக்கைகாக எப்போதும் போல் குறித்துக் கொண்டே வந்தவள், அடுத்து அடுத்து வழிகாட்டும் மரங்களைக் கண்டு குதூகலமாய் “அதோ அங்க”, “ஏ இங்க” என்று குறிப்பிட்டாள்.

 

அவளது துள்ளல்களையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்த துருவன் தோளை சுரண்டிய அகநகை, ‘துடைச்சுக்கோடா.. வழியுது’ என்று சைகையில் கூற, அதையெல்லாம் கண்டுகொள்ளும்படி அவனில்லை.

 

தன்னவளை தோள் வளைவில் இழுத்துக் கொண்ட அகர்ணன், “விடு அவி.. தொரை காதல் பித்துல இருக்காப்படி” என்க, 

 

‘ஆஹ்ங்?’ என்றபடி சிரித்து வைத்தாள்.

 

கடைசியாக ஒரு மரம் மேலே கைகாட்டியபடியான கிளையுடன் இருக்க மேலே பார்த்த ஜான், “என்னடா ஒரேடியா மேல போவ சொல்லுது” என்றாள்.

 

தலையில் அடித்துக் கொண்ட ப்ரியா, “ஜான் இம்பூட்டு அறிவா இருக்கும்னு இத்தனை வருஷம் தெரியாம போச்சு” என்றுவிட்டு, “மதிண்ணா.. பறவை” என்க,

 

“எஸ் ப்ரியா.. அதான் நானும் பார்க்குறேன்” என்று மதி கூறினான்.

 

வேகமாய் பறந்து வந்த ஒரு கழுகின் வேகம் கண்டு அங்குள்ள அனைவரும் அய்யோ அம்மாவென தெரித்து ஓட, இளநகை துருவன் கரத்தை பற்றிக் கொண்டு மரமொன்றின் பின்னே மறைவாய் நின்று கொண்டாள்.

 

இன்ப அவஸ்தை என்பார்களே! அதைதான் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மரத்தில் அவனை சாய்த்து, அவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு அவனுக்கு முன்னே நின்றவள், பயத்தில் விழிகளை மூடியபடி நின்றிருந்தாள்.

 

‘உப்..’ என்று இதழ் குவித்து ஊதியவன், “கொல்லுறடி” என்று கிசுகிசுப்பாய் கூற,

 

பட்டென விழி மலர்த்தியவள் அவன் கண்களில் தன் பார்வையால் ஊடுறுவிப் பயணித்தாள். 

 

நொடிகள் தாண்டி நிமிடத்தில் அடி வைத்த பார்வை போரில், தன்னிலை கிறங்கியவன் பாவை இடை பற்ற தன் கரமுயர்த்த, “அடேய் எல்லாம் வாங்கடா” என்று மதி கத்தினான்.

 

அதில் இருவரும் திடுக்கிட்டு போக, அவனிடமிருந்து சட்டென நகர்ந்தவள், தன் சிகையை சரிசெய்தவளாய் முன்னே சொன்றாள்.

 

அங்கு அந்த பெரிய கழுகினை தன் கையில் பிடித்திருந்த மதியோ, “இவங்க நமக்கு வழிகாட்டுவாங்கடா” என்று கூற,

 

“எம்புருஷன் என்னைகூட இப்படி தோளுமேல தூக்கி சுமந்ததில்லை.. முதல்ல கரடி கூட உருண்டு பிறண்டான்னு பார்த்தா இப்ப கழுகு.. சரியான வண்டலூர் ஜூவா வந்து வாச்சுருக்கு” என்று சத்தமாய் முனகியபடி ஜான்விகா முன்னே சென்றாள்.

 

அதில் கலகலவென்று சிரித்த யாவரும் அவர்களைத் தொடர, மதியும் கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி , பாதையை கேட்டு தெரிந்து கொண்டே அனைவரையும் வழிநடத்தினான்.

 

“அந்த கழுகுக்கு எத்தனை வயசு? இம்மாம்பெருசா இருக்குது?” என்று ஜான்விகா வினவ,

 

சிரித்தபடி அந்த கழுகிடம் பேசிய மதி, “நாற்பத்தஞ்சு வயசாம்” என்று கூறினான்.

 

“ஆத்தே! கழுகு அத்தனை வருஷம் வாழுமா?” என்று ப்ரியா வினவ,

 

“மனிதனோட வளர்ப்புலயோ கட்டுப்பாடுலையோ வளர்க்கப்படும் கழுகு தான் இத்தனை வருஷம் வாழ முடியும். காட்டில் வாழும் கழுகுகளுக்கு இருபது வருடம் தான் கணக்கு” என்று இளநகை கூற,

 

“அப்ப இது மனுஷன் வளர்க்குற கழுகா?” என்று விஷ்வேஷ் கேட்டான்.

 

“இல்ல மேஜிக் வளர்க்குற கழுகு” என்று கூறிய துருவன், “இந்த கழுகோட வாழ்க்கை வரலாறு இப்ப ரொம்ப முக்கியமா? அடுத்து எப்படி போகனும்னு வழிய கேளுங்கடா” என்று கூற,

 

மதியும் கழுகிடம் வழி கேட்டான்.

 

கழுகும் அவர்களுக்கு வழி காட்டுகிறேன் பேர்வழி, பாடாய் படுத்திவிட்டு ஓரிடத்தைக் கண்டதும் அதி பயங்கர சத்தத்துடன் கத்திக் கொண்டே பறந்து சென்றிட, “ஏ..ஏ..ஏ..” என்று மதியும் கத்தியபடி ஓடி மண்ணைக் கவ்வினான்.

 

“என்னடா ஓடிப் போயிடுச்சு” என்று விஷ்வேஷ் கூற,

 

“சின்ன திருத்தம். அது பறந்து போயிடுச்சு” என்று ப்ரியா கூறினாள்.

 

“ரொம்ப முக்கியம்” என்று அவன் முனங்க,

 

“இந்த இடம் வித்தியாசமா இருக்கே?” என்று இளநகை கூறினாள்.

 

அவர்கள் முன்னே அடர்ந்த மரங்களும், மரங்களுக்கு இடையே திரை போன்ற கொடிகளும் இருந்தன.

 

அவற்றைக் கண்ட இளநகை முன்னேறி செல்ல, அவளோடு துருவனும் சென்றான்.

 

அந்த பச்சை பசேலென்ற கொடிகளாலான திரை அவர்கள் கண்களை உறுத்த ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அதில் கை வைத்தனர்.

 

சட்டென்று பெரும் வெளிச்சத்துடன் பச்சை நிற ஒளி உருவாக, அதில் கண்கூசி விழி மூடிய யாவரும் விழி திறக்கையில் இளநகை மற்றும் துருவன் மட்டும் காணாமல் போயிருந்தனர்!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்