
அத்தியாயம் – 36
“நந்து அழாத டி.. ஸ்ரீக்கு ஒன்னும் ஆய்ருக்காது அதான் ஹரி, கார்த்திக், விஜய் அண்ணா மூனு பேரும் தேடுறாங்கள சீக்கிரம் கிடைச்சிருவா” என்று மதுவும் நிஷாவும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து அங்கே அழுது கொண்டிருந்த நந்துவை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீயை கடத்திவிட்டார்கள் என்று ஆதிரா இவளுக்கு கால் செய்து சொன்னதிலிருந்தே அவள் இப்படித் தான் அழுது கொண்டிருக்கிறாள்.
“ஏய் நந்து கேன்டீன் முன்னாடி உட்கார்ந்துட்டு அழாத டி.. பார்க்குறவங்களாம் ஏதோ நான் தான் உன்னோட சமோசாவை திருடி தின்னுட்டேன்னு கேவலமா பார்க்குறானுங்க” என நிஷா வருத்தமான குரலில் கூற,
“பக்கிக்கு நினைப்பு எங்க போகுது பாரு..ஏண்டி எப்போ பாரு சாப்பாடை தவிர வேற ஒன்னும் உன் மூளையில ஓடாதா…லூசு லூசு” என மது அவளைக் கடிய,
“நான் இப்போ அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்னு இவ இந்த குதி குதிக்கிறா” என நிஷா நினைத்துக்கொண்டிருக்கும் போதே அங்கு பிரசன்னமானான் வருண்.
‘அய்யோ இந்த லூசு வேற வந்துருச்சா சும்மாவே அவனை பார்த்தா இந்த நந்து ஆடுவா இன்னைக்கு இவனுக்கு டப்பா டான்ஸ் ஆடப்போகுது போ’ என மது அவனுக்காக பரிதாபப்படுகையில் ,
வருண் எப்போதும் போல் தன் உற்சாகக் குரலில் ,”ஹேய் நந்து எதுக்கு மூஞ்சி இப்படி வீங்கிப்போன வெங்காயம் மாதிரி இருக்கு.. என்ன உன் ஆள் அருண் உன்னை சைட் அடிக்காம அந்த சங்கீதாக்கு ரூட் விடுறான்னு கண்ணை கசக்குறியா ஃபீல் பண்ணாத பேப்ஸ் உனக்காக ஒரு மன்மதன் வரப்போறான் பாரு” என கண்ணடித்துக் கூற,
“இன்னைக்கு அவ கையால செருப்படி வாங்கனும்னு உன் தலையில இருந்தா அதை யாரால மாத்த முடியும் அய்யோ பாவம்” என நிஷா உச்சு கொட்ட,
நந்துவோ மிகவும் கஷ்டப்பட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ,” மது அவனை இங்கிருந்து போகச் சொல்லு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னே எனக்கு தெரியாது” என கோபத்தை அடக்கப்பட்ட குரலில் முடித்தாள்.
அவனோ அடங்காமல் ,”பேப்ஸ் எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் ..கூல் நந்து.. சரி எங்க என் ஆளு இந்த நிஷா எதுவும் பசிக்கிதுன்னு என் ஸ்ரீகுட்டியை முழுங்கிட்டாளோ அதான் நீ அப்செட்டா இருக்கியா” என அவர்களைச் சீண்ட அது அவனுக்கே வினையாகிப் போனது.
ஏற்கனவே ஸ்ரீயை காணவில்லையே அவள் எங்கு கஷ்டப்படுகிறாளோ என துடித்துக் கொண்டிருந்த நந்துவின் மனதில் வருணின் ஸ்ரீகுட்டி, என் ஆளு என்ற அழைப்பு எரிமலையை உருவாக்கியிருந்தது.
பட்டென அது வெடித்துச் சிதற, “இன்னொரு முறை ஸ்ரீயை என் ஆளுன்னு சொன்ன காலேஜ்ன்னு கூட பார்க்க மாட்டேன் வருண் செருப்பு பிஞ்சிரும்.. நீ என்ன பைத்தியமா டா.. அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னு உனக்கு புரிஞ்சும் இத்தனை வருஷமா எதுக்கு அவளை டார்ச்சர் பண்ற.. எத்தனை முறை உன்னை மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிருக்கா சொரணையே இல்லையா?? அவ இன்னொருத்தன் பொண்டாட்டி இப்போ .. இனிமேலும் அவ பின்னாடி சுத்தி உன் தரத்தை நீயே தாழ்த்திக்காத..முதல்ல இங்க இருந்து போ என் முன்னாடி நிக்காத” என நந்து கத்த, அங்கிருந்த மாணவர்கள் அவர்களை திரும்பி பார்த்தனர்.
மதுவும் நிஷாவும் நந்துவை அடக்க, வருணோ தான் கேட்டதை நம்ப முடியாமல் ,”ந..நந்து பொய் தா…ன பொய் தான சொன்ன.. அவ … அவ என் ஸ்ரீ …நிஷா நந்து ப்ளீஸ் உண்மையை சொல்லு விளையாடாத இது என் வாழ்க்கை ” என அவள் தன்னை திட்டியதைக் கூட பொருட்படுத்தாமல் வருண் கெஞ்ச,
அங்கிருந்தவர்களுக்கு அவன் நிலயை காண சகிக்கவில்லை.
கல்லூரியின் டாப்பர், சீனியர் தொடங்கி ஜூனியர் வரை அனைத்து மாணவிகளுக்கும் ட்ரீம் பாய், இருந்தும் இந்த நான்கு வருடத்தில் ஸ்ரீயைத் தவிர வேறெந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. உண்மையில் அவளை தன் வாழ்வில் கடவுள் கொடுத்த வரமாகத் தான் நினைத்தான், பிறந்ததிலிருந்து அன்னை தந்தையைப் பிரிந்திருந்து ஒருவித தவ வாழ்க்கையை தான் வாழ்ந்திருந்தான், அப்படி இருந்தவன் ஸ்ரீயைத் தான் தன் வாழ்க்கையை மாற்ற வந்த வசந்தமாக நினைத்தான்.
அவள் மேல் உயிரையே வைத்திருந்தவனின் காதில் இடியாய் வந்து இறங்கியது அவளின் திருமணச் செய்தி. தான் கேட்டது பொய்யாக இருக்கக்கூடாதா என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் வினவ, அங்கிருந்த மூவருக்குமே அது மனதைப் பிசைந்தது.
‘இதற்குத் தான் முன்பே அவனிடம் பக்குவமாய் சொல்லி விடலாம் என்று சொன்னேன் கேட்டீர்களா’ என நந்து குற்றம் சாட்டும் பார்வையை மற்றைய இருவரின் மீதும் வீசியவள் பின் தெளிவான குரலில் ,” ஆமா அவளுக்கு கல்யாணம் ஆய்ருச்சு.. சின்ன வயசுல இருந்தே அவ மாமா பையனும் அவளும் லவ் பண்ணாங்க போன மாசம் கல்யாணம் முடிஞ்சிருச்சு ..இனிமேல் அவளை பத்தி நினைச்சு உன் லைஃப் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா வாழ்க்கையில் முன்னேறப்பாரு வருண்.. உன்னை ஹர்ட் பண்ணிருந்தா சாரி” என கூறியவள் இன்னும் சற்று நேரம் அங்கிருந்தால் மீண்டும் அழுது விடுவது உறுதி என நினைத்து அங்கிருந்து நகரப் போனாள்.
“நந்து ஒரு நிமிஷம்” என்ற வருணின் வருந்திய குரல் அவள் நடையைத் தேக்க, திரும்பாமல் அங்கேயே நின்றாள்.
“எனக்கு கடைசியா ஒரு முறை ஸ்ரீ கிட்ட பேசணும்” எனக் கூற, மது முறைத்தாள்.
அதைக் கண்டவன் ,”பயப்படாத மது , இன்னொருத்தன் மனைவியை மனசால நினைக்குற அளவுக்கு இந்த வருண் அவ்ளோ கேவலமானவன் இல்லை.. ஜஸ்ட் அவகிட்ட சாரி கேக்கணும் அவ மனசை புரிஞ்சுக்காம அவளை தொல்லை பண்ணதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போய்ருறேன்..இனிமேல் அவ கண் முன்னாடி வர மாட்டேன்” என அவன் தன் காதலிற்கு சமாதி கட்டிவிட்டு, தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பேசினான்.
நந்துவோ அழுகையோடு அவன் முகத்தை திரும்பி பாராமலே ,” அவளை தொலைச்சுட்டு நாங்க நிக்கிறப்போ எங்ககிட்ட வந்து கேட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை வருண்” என குரல் கமற கூறியவள் அவன் அடுத்த கேள்விக்கு அங்கு நிற்காமல் ஓடியிருந்தாள்.
அவள் கூறியதைப் புரிந்து கொண்ட வருண் , மிகவும் பதட்டத்துடன் ,”நிஷா ஸ்ரீக்கு என்னாச்சு..நந்து என்ன சொல்லிட்டு போறா உண்மையை சொல்லுங்க ” என கேட்க,
நிஷாவும் ,”இன்னைக்கு காலையில ஸ்ரீயை அவங்க விட்டுல இருந்து வெளிய வரப்போ யாரோ கடத்திட்டாங்க வருண்..எல்லாரும் தேடிட்டு இருக்காங்க..இது யாருக்கும் தெரிய வேணாம்..நிச்சயம் ஹரி அண்ணா அவளை கண்டு பிடிச்சிருவாரு..அவ காணமப்போனதுல நந்து அழுதுட்டே உன் கிட்ட ஏதோ பேசிட்டா மனசுல வச்சுக்காத சாரி .. நாங்க கிளம்புறோம் பாய்” என கூறியவள் மதுவையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
ஆனால் அவர்கள் சென்ற பின்னும் வருண் அவர்கள் கூறிய செய்தியின் தாக்கத்திலிருந்து வெளிவராமல் அங்கயே நின்றிருந்தான்.
அவன் மனம் நேற்று அவனின் தந்தை ஸ்ரீயைப் பற்றி கேட்டதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என சிந்திக்க, ‘அப்படி தன் தந்தை தான் இதற்குக் காரணமாக இருந்தால் என் கையால் தான் அவனுக்கு சாவு’ என நினைத்தவன் கோபத்துடன் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
அந்த சிசிடிவி காணொளியை பார்த்ததிலிருந்து கார்த்திக்கின் மூளை அந்த இரண்டாமவனின் இடப்புற நெற்றியில் இருந்த தழும்பை எங்கே பார்த்தோம் என சிந்தித்துக் கொண்டிருந்தது.
அதன் பின் அந்த வண்டியைக் கண்டுபிடிக்க அவர்கள் வீட்டிற்கு அடுத்து உள்ள மெயின் ரோடு சிக்னலில் இருக்கும் சிசிடிவி காணொளியைக் காண அந்த வண்டி அந்த சாலையைத் தாண்டி சென்றது ஊர்ஜிதமானது.
அந்த சாலை வழியாக சென்றால் மூன்று பிரதான சாலைக்கு செல்லலாம், அடுத்து ஹரி , கார்த்திக், விஜய் மூவரும் பிரிந்து சென்று ஒவ்வொரு பிரதான சாலையில் உள்ள காணொளியில் தேட அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
அந்த கார் அந்த ஒரு சாலையைத் தவிர வேறெங்கும் பதியவில்லை, ஒன்று இந்த இரண்டு சாலைகளுக்கும் இருக்கும் இடைவெளியில் தான் ஸ்ரீயை கடத்தி வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் இந்த இடைவெளியில் வேறொரு காரில் ஏறி தப்பிச் சென்றிருக்க வேண்டும் என யூகித்தவர்கள் அடுத்து என்ன செய்வது என சிந்திக்கலானர்.
ஸ்ரீயின் மொபைலும் அவள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்றிருந்ததால் அதை வைத்தும் அவளை ட்ரேஸ் செய்ய முடியாது என உணர்ந்த ஹரிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
ஸ்ரீக்கு எதிரிகள் என்று யாரும் இருப்பதாக அவர்களுக்கு தோன்றவில்லை, வீட்டில் சிந்தியா ஹரியை காதலித்த ஒரு பெண் என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாததால் அவள் பெயர் கூட யாருக்கும் நினைவு இல்லை.
மேலும் பணத்திற்காக கடத்தியிருந்தால் இந்நேரம் அவர்களுக்கு கால் வந்திருக்கும், இதுவரை எதுவுமே வராததால் அவர்களுக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க ஆரம்பித்தது.
தினமும் நியூஸ் பேப்பரில் வருகின்ற கடத்தல், கொலை, பலாத்காரம் என ஆயிரம் செய்திகள் அவர்கள் கண்முன் தோன்றி மேலும் கலவரப்படுத்தியது.
எனவே ஹரி பயத்தில் தன்னுடைய s.p நண்பன் ஒருவனிடம் சொல்லி மறைமுகமாக ஸ்ரீயை தேடச்சொல்லி கேட்டுக் கொண்டான்.
அவனிடம் சொன்னாலும் இவர்களும் தங்களாலான முயற்சிகளை விடாமல் மேற்கொண்டனர்.அதற்கடுத்து இந்த மூன்று சாலைகளிலும் அப்பார்ட்மென்ட் , ஏடிஎம், ஹோட்டல் பொன்ற இடங்களில் பொதிக்கப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளைக் காண அங்கும் சிந்தியா இவர்கள் கண்ணுக்கு சிக்காமல் போனது துரதிர்ஷ்டமே.
இதற்கே நள்ளிரவு ஆகியிருக்க, விஜயும் கார்த்திக்கும் வீட்டிற்கு திரும்பினர்.
ஹரியை அவர்கள் எவ்வளவு வற்புருத்தி அழைத்தும் அவன் வர மறுத்து விட்டான்.காரை எடுத்தவன் எங்கெங்கோ இலக்கில்லாமல் சுற்றித் திரிந்தவனின் கார் இறுதியாக கடற்கரையில் வந்து நின்றது.
கடைசியாக இங்கு வந்த போது ஸ்ரீயுடன் கழித்த அந்த பொன்னான நிமிடங்கள் அவன் கண்முன் தோன்றி அவனை உயிரோடு கொன்றது.
“எங்கடி போன என்னை விட்டுட்டு.. என் கிட்ட வந்துரு லட்டு என்னால நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.. ஐ மிஸ் யூ லட்டு” என கடலை வெறித்துக் கொண்டு மனதில் மானசீகமாக தன் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டுத் தெரித்தது.
அப்படியே வேரறுந்த மரம் போல் அந்த மண்ணிலே பொத்தென அமர்ந்துவிட்டவன் மனம் எங்கும் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும் வலி பரவிக் கொண்டிருக்க,இறுதியாக இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தான்.
இங்கு வீட்டிற்கு வந்த கார்த்திக்கிற்கு ஹரியின் அந்த கலைந்து போன முகமே மனதில் தோன்றி அவனை வதைத்தது.
வீட்டிலிருப்போரை பார்க்கும் திராணி இல்லாமல் அவன் நேராக தன் அறைக்குச் சென்று விட, அங்கு வர்ஷூ அழுது கொண்டு அமர்ந்திருந்தாள்., அவளைப் பார்த்த அந்த நொடி அவனுக்கு காலையிலிருந்த அந்த முகம் யாருடையது என்ற குழப்பம் தெளிவானது.
ஆம், மும்பையில் கார்த்திக்கின் தோளில் பாய்ந்த தோட்டா அந்த தழும்புக்காரனுடைய கைகளில் இருந்த துப்பாக்கிக்கு சொந்தமானது.
இருட்டில் அவன் முகம் சரியாக தெரியாவிட்டாலும் நெற்றியின் இடதுபுறம் இருந்த தழும்பு கார்த்திக்கின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
அப்போ அந்த காளிதாசன் ஆட்கள் தான் ஸ்ரீயை கடத்தியிருக்கிறார்களா?? என கார்த்திக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
சரியாக அதே சமயம் எழுந்த வர்ஷூ, கார்த்திக்கைப் பார்த்து முகமெல்லாம் ஆவலுடன் ,”ஸ்ரீ கிடைச்சுட்டாளா??” என கேட்க,
தன் ஆருயிர் நண்பனும் தன் செல்லக்குட்டி ஸ்ரீக்கும் தங்களால் தான் இந்த நிலமை என குற்றவுணர்ச்சியில் இருந்தவனிற்கு வர்ஷூவின் கேள்வி அவன் மூளையை மழுங்கச் செய்தது.
“அவ வரமாட்டா எல்லாம் அந்த காளிதாசன் தான் அவளை கடத்தியிருக்கான்.. எங்க வீட்டு மகாலக்ஷ்மி இந்த வீட்டை விட்டு போனதுக்கு நம்ம தான் காரணம்..இனிமேல் என் ஹரி முகத்துல நான் எப்படி முழிப்பேன்.. ஷிட்!!!! உன்னையை பாத்துக்கணும் பார்த்துக்கணும்னு என் ஸ்ரீயை நான் விட்டுட்டேன்… எல்லாம் என் தப்பு தான்” என்று ஏதேதோ புலம்பியவனின் வர்ஷூவின் முகமாற்றத்தை கவனியாமல் போய்விட்டது தான் அவன் செய்த பிழையோ..
வர்ஷூ காலையிலிருந்தே குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவள் ,இப்போது கார்த்திக் பேசியதில் மொத்தமாக உடைந்தாள்.
இந்த வீட்டிலிருப்போருக்கு என்னால் தான் கஷ்டம், முக்கியமாக கார்த்திக்கிற்கு, என்னால் தான் அவன் இப்போது இப்படி தவிக்கிறான் என்று எப்போதும் போல் தவறாக சிந்தித்தாள்.
அவள் இருந்த நிலையில் கார்த்திக் அப்போது கூட அவளைப் பிரித்துக் கூறாமல் நாம் தான் காரணம் என அவளும் இவனும் ஒன்று என்ற அர்த்தத்தில் கூறியதை இவள் கவனித்திருந்தால் அவனின் காதலும் அவளுக்கு புரிந்திருக்குமோ??
இனிமேல் தன்னால் அவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் கஷ்டம் வரக்கூடாது என நினைத்தவள் இரவெல்லாம் சிந்தித்து அவனைப் பிரிவது என முடிவெடுத்தவள்,
‘இனிமேல் என்னை சகித்துக் கொண்டு வாழ அவசியமில்லை உனக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்.. தேங்க்ஸ் அண்ட் சாரி’ என எழுதியவள் அதை மேசையில் வைத்துவிட்டு கனத்த மனதுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் கார்த்திக்கின் வர்ஷூ!!!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அட லூசு வர்ஷூ.. இருக்கிற பிரச்சினையில நீ புதுசா ஒன்னு ஆரம்பிச்சுட்டியா? போச்சுடா.. பாவம் கார்த்திக்..