
சபதம் – 39
ஊரும் பேரும் ஒன்றுபட்டு எழுந்து,
வேரோடு நிலம் காக்கும் வன்மை போல,
வேற்றார் நுழைய வழி தடுக்க,
கேடு நினைப்பவர் கால்தளர,
மண்ணின் மேல் உயிர் கொடுக்கும் மானம் உடையார்.
(புறநானூறு – 192, ஆய்யூர் மூலங்கிழார்)
பொருள்:
இந்தப் பாடலில் நாடு காக்கும் பொழுது மக்கள் அனைவரும் தனித்தனியாக அல்ல, ஒருமித்தெழ வேண்டும் என்ற கருத்தை கவிஞர் வலியுறுத்துகிறார். ஊரும் பேரும் ஒன்றுபட்டு – சிற்றூர், பேரூர் என வேறுபாடின்றி நிலம் காக்க – தாய்நாட்டை பாதுகாக்க
உயிரையும் கொடுக்கத் தயங்காத மானம் – மண் மீது உள்ள ஆழ்ந்த பற்று எதிரி வந்தால் அரசன் மட்டும் அல்ல; மக்கள் அனைவரும் சேர்ந்து எழுந்தால் தான் நாடு பாதுகாப்பாகும் என்ற சமூகப் பொறுப்பை இந்தப் பாடல் பேசுகிறது.
விடியல் இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அரவள்ளி ஏற்கனவே விழித்திருந்தது. மலைத்தொடர், வெளிர் வானத்தை வெட்டியபடி உயர்ந்து நின்றது. அதன் அடிவாரத்தில், அதிவார் அரண்மனை தீப்பந்தங்களால் ஒளிர்ந்தது.
அரண்மனைச் சுவர்களை உயிரோடு காக்கும் கோட்டையாக ராஜ்புத் வீரர்கள் வரிசையாக நின்றனர். ஆனால் இந்த முறை, அது அரண்மனை மட்டும் அல்ல. முழு அரவள்ளி மலைத்தொடரும் சூழப்பட்டிருந்தது. அருகிலுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள். அடிவாரக் காடுகளில் வாழும் பழங்குடிகள். ராஜஸ்தானின் எல்லா திசைகளிலிருந்தும் வந்த ராஜ்புத் குலங்கள். உதய்ப்பூர் அரச குடும்பமே, தங்கள் மக்களுடன் தோள் கொடுத்து நின்றனர்.
ஒரு மௌனப் புரட்சி. எந்த கோஷமும் இல்லை. எந்த வன்முறையும் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள், அரசாங்க வாகனங்கள் மலைக்குள் நுழைய முடியாதபடி
உறுதியான சுவர்களாக நின்றனர்.
அம்மக்களை உலுக்கிய புதிய சட்டம், “நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரம் இல்லாத நிலவடிவங்கள் மலைகளாக கருதப்பட மாட்டாது. அவை அகற்றப்படலாம்.”
இது அரவள்ளியை அழிக்க எழுதப்பட்ட சட்டம். அரவள்ளி மலைத்தொடரை சுரங்கங்களுக்கு திறக்க எழுதப்பட்ட சட்டம். ப்ரிதவேந்திர சௌஹான் உருவாக்கிய சட்டம். ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
மந்திரி சௌஹான் புல்டோசர்கள், இயந்திரங்கள், காவல் வாகனங்கள் நிரம்பிய அணிவகுப்புடன் வந்தவன் எதிர்பார்த்தது ராஜபுத்திரர்களின் பயத்தை. ஆனால் அவன் கண்டது, மக்களால் எழுப்பப்பட்ட கோட்டையை.
பித்தளை குடங்களை பிடித்த பெண்கள். குச்சியைத் தாங்கிய முதியவர்கள். கைகளை மடக்கி நின்ற இளைஞர்கள். அவர்களின் முன்னால் மக்களின் பாதுகாப்புக்காக, முழு கவசத்துடன் நின்ற ராஜ்புத் வீரர்களுடன் உதய்ப்பூர் அரச குடும்பம், ஆசாத் கான் மற்றும் கலீலுடன் நின்றிருந்தனர்.
அவர்களின் இருப்பே காவல்துறையை அமைதியாக்கியது. சௌஹான் கோபத்துடன், “இங்கே கூட்டம் கூட்டுவது சட்டப்படி தப்பு! எல்லாரும் களைந்து போங்க! இது அரசாங்கம் போட்ட உத்தரவு, அதை ஏற்க வேண்டியது மக்களோட கடமை. இந்த சட்டம் உங்கள் நல்லதுக்காகத்தான். இனி உங்க மக்கள் காட்டிலும் மேட்டிலும் கஷ்டப்பட வேண்டாம். நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும். இரவு மிருகங்களின் தொல்லை இருக்காது, உங்க பயிர்களும் நாசமாகாது” என்றவனின் வார்த்தைகளை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.
ஒரு உயிரும் அசையவில்லை. அமைதி, அதுவே இந்த போராட்டத்தின் மிக வலிமையான சக்தியாக இருந்தது.
சௌஹானின் குரல் உடைந்து, “நான் சொல்றத கேளுங்க, நகருங்க!” என்றபோதும் சின்ன அசைவும் இல்லாமல் இருந்த இடத்தில் நின்றிருந்தனர்.
அப்போது ஒரு ராஜ்புத் தலைவர் முன்வந்து, “இந்த மலை, உங்க சட்டங்களைக் காட்டிலும் பழமையானது.”
மற்றொரு குரல், “உங்க அரசாங்கத்தை விட பழமையானது.”
மூன்றாவது குரல், “இது எங்கள் வாழ்வாதாரத்தின் தூண்” என்பது போல் குரல்கள் எழுந்ததும் சௌஹான் முகம் சிவந்து போனது. அவன் காவல்துறைக்கு சைகை செய்ய,
அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
சூரியன் உதிக்கும்போது, உலகமே மாறிப் போயிருந்தது. செய்தி காட்டுத்தீப் போல பரவியது.
காலை நேரத்திற்குள், லட்சக்கணக்கான மக்கள் அரவள்ளியில் திரண்டனர். முக்கியமாக அரவள்ளி காக்கும் முக்கிய மாநிலங்களான டெல்லியிலிருந்து மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஹரியானாவிலிருந்து விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள், ராஜஸ்தானிலிருந்து ராஜ்புத் குலங்கள், பழங்குடிகள், கிராம மக்கள் மற்றும் குஜராத்திலிருந்து அரவள்ளி மலைத்தொடரின் நதிகளை நம்பி வாழும் சமூகங்கள் திரண்டனர்.
நெடுஞ்சாலைகள் மக்கள் நதிகளாக மாறின. ரயில்கள் நிரம்பி வழிந்தன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன, ஏனெனில் பயணிகள் இறங்க மறுத்தனர். அரசாங்கம் அதிர்ந்து போனது.
ஒரு மலை ஒரு இயக்கமாக மாறி இருந்தது.
அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருந்தது. செய்தி வாசிப்பாளர்கள், “அரவள்ளி மலைத்தொடரிலிருந்து நேரலை. இங்கு ஆயிரக்கணக்கான கிராம மக்கள், ராஜ்புத் குலங்கள், மேலும் உதய்ப்பூர் அரச குடும்பத்தினரும் மௌனப் போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்…” என்ற ஒவ்வொரு வரிக்கும் ஏற்றது போல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
மேலும் தொடர்ந்த செய்தி வாசிப்பாளர், “இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. கோஷமில்லை, வன்முறையில்லை, ஆனால் அசைக்க முடியாத மக்களின் ஒற்றுமை.”
மற்றொரு சேனலில், “புதிய அரசு சட்டம், நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரமில்லாத நிலவடிவங்கள் மலைகளாக கருதப்படமாட்டாது. அவை அபிவிருத்திக்காக அகற்றப்படலாம்” செய்தியாளர் குரல் இறுக்கமானது.
“அரவள்ளி சுற்றி உள்ள மலைத்தொடர்கள் அந்த அளவை விட சற்றே குறைவாகக் கொண்டுள்ளன.” திரை இரண்டு பாகமாகப் பிளந்து, மந்திரி மஹாவீர் சௌஹான்
புல்டோசர்கள் மற்றும் காவல் வாகனங்களுடன் வந்ததை காட்டியது.
செய்தியாளர், “அமைச்சர் சௌஹான் பின்வாங்கினார். ராஜ்புத்திரர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்.”
காலை நேரத்திற்குள், செய்தி சேனல்கள் புதிய காட்சிகளால் நிரம்பின. ட்ரோன் காட்சிகள்,
நான்கு மாநிலங்களிலிருந்து அரவள்ளிக்குத் திரண்ட லட்சக்கணக்கான மக்களை காட்டி கொண்டிருந்தன.
ஒவ்வொரு சேனலும் ஒரே வரியை மீண்டும் மீண்டும் சொன்னது, “இது சமீபத்திய இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் போராட்டம்.”
தொலைவில், தனது ஹோட்டல் அறையில் தீவன் படுக்கையின் விளிம்பில் அமர்ந்து
தொலைக்காட்சியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் கைப்பேசி இடைவிடாமல் அதிர்ந்தது.
“அரவள்ளி முற்றுகை.”
“ராஜ்புத்துகள் அரசு உத்தரவை எதிர்த்து போராட்டம்.”
“உதய்ப்பூர் அரச குடும்பம் போராட்டத்தில் இணைந்தது.”
“நான்கு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேரணி.”
ஆனால் தீவன் காதுகளில் அந்த வார்த்தைகள் கேட்கவில்லை, அவன் கவனம் எல்லாம் நேற்றைய கனவின் அர்த்தத்தை தேடி குழம்பி கொண்டிருந்தது.
தவறான பாதை என்பது தான் காஷ்மீர் செல்லும் முடிவு, பின் சரியான பாதை என்று குழம்பி இருந்தவனை உள்மனம் அரவள்ளி போராட்டத்தை நோக்கி செல்லுமாறு உந்தியது.
மார்புக்குள் அழுத்தம் பெருக, செய்தி வாசிப்பாளரின் குரல் தொலைவில் ஒலித்தது,
“இங்குள்ள மக்கள் இந்த மலையை புனிதமானது என்கிறார்கள்…அது வீழக்கூடாது என்பதே அவர்களின் கோரிக்கை…” என்ற வார்த்தையில் தீவனின் மூச்சுத் திணறியது.
அவன் மேசையின் விளிம்பைப் பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனின் இதயம் போர்த் தாளம் போல துடித்தது. அவனுள் பழமையான ஒரு குரல், அவன் கனவில் வந்த அந்த அகோரியின் குரல், “போ…. உன் வம்சத்தின் வாக்கை காப்பாற்ற போ! உன்னை ஈன்றவனின் வேண்டுதலை நிறைவேற்ற போ.. போ பேட்டா” என்ற வார்த்தை கேட்டு கொண்டே இருக்க தீவன் திடீரென எழுந்தான்.
அரவள்ளியை நோக்கி சென்றான். விதியின் குரலை நோக்கி. அவனை எதிர்பார்த்து நின்ற பெற்றவரை நோக்கி. தனது வம்சத்தின் வாக்கை காக்கும் கடமையை நோக்கி ஓடினான்.
ஆசாத் கான் அரவள்ளி மலையின் கர்னி மாதாவின் ஆலயத்தில் நின்றிருந்தார். கண்களில் வலியோடு அன்னையை பார்த்தவரின் கைகளில் தன் வம்சத்தின் குருவால் இருக்க, “தேவி, ஹூன் வம்சத்தின் கடைசி வித்து நானோ என்று தடுமாறிய நேரமெல்லாம், எனக்கான தைரியத்தையும் உத்வேகத்தையும் கொடுத்த நீ, சில காலமாய் என் மனதில் சிறு ஆசையை ஊன்றிவிட்டாய். என் மகன் ரஷீத் உயிருடன் இருப்பதாக நானும் நம்பத் தொடங்கிவிட்டேன்” என்றவரின் குரலில் இருபது வருட வலி தெரிந்தது.
“அரவள்ளியையும் ராணா மற்றும் அதிவார் குல ரத்தங்களை ஒன்றிணைத்துவிட்டேன். இனி என் காலம் நீடிக்காது, ஒரே ஒருமுறை என் மகனை கண்களில் நிரப்பிக் கொண்டு உன்னிடம் வந்துவிடுகிறேன்” என்றவரின் குரல் தெய்வத்துக்கு கேட்டதோ என்னவோ, திடீரென ஒரு பலமான காற்று அரவள்ளி மலைத்தொடரில் வீசியது. கோவிலை சுற்றி தீப்பந்தங்கள் துடித்தன. தூசி வானில் சுழன்றது.
ஸ்தபத் ஸ்தம்பம், பழமையான சபதத் தூண், மலையோரத்தில் மெதுவாக ஒளிர்ந்தது.
ஆசாத் கான் உடலை இறுக்கி, கடவுளின் கட்டளைக்கு காத்திருந்தார். இந்த அமானுஷ்ய நிகழ்வு அதிவார் அரண்மனையில் கூடியிருந்த பலபேரால் உணர முடிந்தது.
ராஜ்புத்திரர்கள் தலைகளைத் தாழ்த்தினர். உதய்ப்பூர் அரச குடும்பம் பயமும் மரியாதையும் கலந்த பார்வைகளைப் பரிமாறிக் கொண்டது. கலிலின் உடல் நடுங்க, கரண் அவனை மறைவிடத்துக்கு அழைத்து சென்று, “என்ன ஆயிற்று சூரா?” என்றவனுக்கு கலிலால் பதில் கூறத் தெரியவில்லை.
கலீல் சுற்றி அனைவரையும் பார்த்தவன் கண்கள் தனது வாப்பா அங்கு இல்லாததை உணர்ந்து, “வாப்பா” என்றிட கரணுக்கும் ஆசாத் கானின் இருப்பிடம் தெரியவில்லை.
அந்தநேரம் இருவரையும் நெருங்கிய சுகவிந்தர், கரணிடம் தொலைபேசியை கொடுக்க, அந்த புறம் அதிரா, “கரண், கலீல் உன்னருகில் இருக்கின்றானா? மீனாட்சி ஏதோ அவனிடம் சொல்ல சொன்னால்.. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றதும் தொலைபேசியை ஒலிபெருக்கியில் மாற்றி மீனாட்சியிடம் கொடுக்க சொன்னான்.
கலீல் அனைத்தையும் குழப்பத்துடன் பார்த்து நின்றவன் காதுகளில், “தாதாஷா…” என்ற மெஹருன்னிஷாவின் குரல் கேட்க கண்கள் கலங்கி, நெஞ்சு விம்ம சுற்றி பார்த்தவனுக்கு, அவள் தெரியவேயில்லை.
“மெஹர்.. மேரே சோட்டி…கஹா ஹே தூ?” என்றவன் குரல் உடைந்து வெளிவர, அவனது தோள்களில் கைகளால் இறுக்கி அனைத்து கொண்ட கரண், தொலைபேசியை கண்களால் காட்டினான்.
மீண்டும் “தாதாஷா..” என்ற மீனாட்சியின் குரலும் கண்ணீரில் வெளிவந்தது, உணர்ச்சி பெருக்கில் சிக்கித்தவித்த இருவரையும் கரணும் அதிராவும் நிகழ்வுக்கு கொண்டு வந்தனர்.
தொலைபேசியில் மீனாட்சியால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், “காவலன் வந்து கொண்டிருக்கிறான். ஹூன் வம்சத்தின் மகன். ஆசாத் கான் கா பேட்டா..” என்றதில் கலீல் முகம் வேர்த்து நிற்க, அவன் செவிகளில், “தாதாஷா…. உங்கள் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை விட்டுவிடுங்கள், ரஷீத் கான், உங்கள் சகோதரர் உயிரோடு உங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்” என்று மீனாட்சி கலிலிடம் சொன்ன அந்த நிமிடம் ஸ்தபத் ஸ்தம்பத்தின் முன் நின்றிருந்த அசாத் கான் உறைந்தார்.
ஆசாத் கானின் மூச்சு நின்றது. ஏனெனில் காற்று ஒரு ஒலியை கொண்டு வந்தது. ஒரு குரல், திரும்பி பார்த்தவரின் முன் கருப்பு உடை அணிந்து, ஆசத்துக்கு வழிகாட்டிய அந்த அகோரி, ஆசாத் கானால் “பாபா ஜி” என்று அழைக்கப்பட்ட கர்னி மாதாவின் தூதுவர் நின்றிருந்தார்.
அவரை கண்ட அசாத் தடுமாறியபடி, ஒற்றை காலை நிலத்தில் ஊன்றி தலை வணங்கி நின்றவர், “பாபா ஜி” என்றதும் கைகள் உயர்த்தி ஆசீர்வாதம் செய்தவர், மலையிலிருந்து நேராக வந்தது போல திடீரென்று ஆசாத்தின் பக்கத்தில் தோன்றினார்.
அவர் ஆசாத்தை பார்த்து, “ஹூன் வம்சத்தின் மகனே! அரவள்ளியின் வாரிசுகளை பாதுகாத்து ஒன்றிணைத்துவிட்டாய். அன்னையிடம் நீ கேட்ட கோரிக்கையை நிறைவேற்ற என்னை இங்கு அனுப்பினால்” என்றவரின் குரல் நடுங்க, “இயற்கை எடுத்ததை… இயற்கைத் திருப்பித் தரும்” என்றதும் அசாதின் கண்கள் விரிந்தன.
“அதன் அர்த்தம் என்ன?” என்றவருக்கு ஞானி கிழக்கு பாதையை நோக்கி கைநீட்டினார்.
“உன் இரத்தம் உன்னிடம் வந்து கொண்டிருக்கிறான்” அசாதின் இதயம் மார்பை உடைக்கத் துடித்தது.
அவர் அந்த திசை நோக்கி பார்த்த அந்த நிமிடம், வழி தெரியாமல் மூச்சு வாங்க, சட்டை வேர்வையால் நனைந்தபடி யாரையோ தேடிக்கொண்டு ஸ்தபத் ஸ்தம்பத்தை நோக்கி ஒரு இளைஞன், முகத்தில் குழப்பத்துடன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.
தனக்கு தெரியாத ஒரு வகை அமானுஷ்யத்தால் இழுக்கப்பட்டு, அந்த திசையில் வந்து கொண்டிருந்தான் தீவன் எனும் ரஷீத் கான், ஹூன் வம்சத்தின் வாரிசு, ஆசாத் கானின் ரத்தம், கலிலின் உயிர் காத்த நண்பன், இளவரசர்களின் காவலன்.
ரணசூரன் வந்துவிட்டான்….

