
அத்தியாயம் 17
விமல் வாகனத்தின் கதவைத் திறந்துவிட, உள்ளிருந்து இறங்கினர் மௌனிகாவும் ரெங்கநாயகியும்.
விழா அரங்கம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் மணமும் ஒப்பனையும் வருவோரின் சிந்தையைத் தன் வசமாக்கிக் கொள்ளும் படி இருக்க, புன்னகையுடன் நோக்கினாள் பாவை.
மூத்தவர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப பெண் வீட்டாருக்கு எவ்வித வேலையும் வைக்காது, விழா அரங்கின் வாயில் பகுதியில் பன்னீர் தெளித்து வரவேற்பதில் துவங்கி, விருந்தினர்கள் வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்கள் வரை முழுப் பொறுப்பையும் ஏற்று, அவற்றைக் கச்சிதமாய் செய்திருந்தான் சரண்.
அவளைக் கவனித்து இருந்த விமல், “என்ன அண்ணி?”
“நைஸ் டெக்கரேஷன். யாரோட ஐடியா?”
“எல்லாமே அண்ணனோட ஏற்பாடு. நேத்து ஃபுல்லா ஃபங்ஷன் வொர்க் மட்டும் தான் பார்த்தான்.”
“எல்லா வேலையையும் அந்தப் பிள்ளைக்கிட்டயே கொடுத்துட்டோமே? எப்படிச் சமாளிப்பானோனு நான்கூட சங்கடப்பட்டுக்கிட்டே தான் இருந்தேன். ஆனா சும்மா சொல்லக்கூடாது நல்லா செஞ்சிருக்கான்!” என ரெங்கநாயகி சான்றிதழ் வழங்கிட,
“அண்ணனுக்கு ஒரு குணம் இருக்கு ஆச்சி. யாருக்காவது வாக்குக் கொடுத்திட்டா, அதை எப்பாடு பட்டாவது செஞ்சிடுவான். உங்கக்கிட்ட கல்யாண வேலையை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லீட்டான் இல்ல? கவலையை விடுங்க, நல்லமுறையில செஞ்சிடுவான்.” என்று உரைத்தான் இளையவன்.
“சரி, உள்ள போகலாமா?” என மௌனி வினவிட, மூவருமாய் அரங்கிற்குள் சென்றனர்.
மணப்பெண் அறைக்குள் அவளை அழைத்துச் சென்று விட்ட விமல், தமையனைக் காண்பதற்காக சென்றான்.
சிறிது நேர இடைவெளியில் விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கினர்.
அர்ச்சனாவிற்கும் சேகரனிற்கும் வேறு வழி இருக்கவில்லை.
தங்களது பெண்ணின் விழாவிற்காக என்று முன்பு அழைப்பு விடுத்திருந்த உறவுகளில் பலரும், “மண்டபத்துக்கு எப்படி வரணும்? எத்தனை மணிக்கு ஃபங்ஷன் ஆரம்பிக்கிது? மண்டபத்தோட பேர் என்ன? வழி சொல்லுறியா கொஞ்சம்?” என அழைப்பை விடுத்து விபரம் கேட்க, தேள் கொட்டியதைப் போல் ஆனது இருவருக்கும்.
“என்னப்பா, சொந்தக்காரங்க நாங்களே மண்டபத்துக்கு வந்துட்டோம். பொண்ணு வீட்டுக்காரங்க நீங்க இன்னும் வராம இருக்கீங்க?” என்று உறவுகளில் சிலர் விசாரிக்க, பதில் சொல்ல வழியின்றி தயாராகி விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தனர். உடன் அவர்கள் ஈன்ற பெண்களான லாவண்யாவும் பிரீத்தியும் வருகை தந்திருந்தனர்.
விலகி நிற்க எண்ணினாலும், சூழலானது அதற்கு அனுமதியாது அவர்களை இழுத்து வந்து நிறுத்திவிட்டது.
“பொண்ணுக்கு நிச்சயம் வச்சிருக்கோம். வந்திருங்க!” எனச் சேகரனும் அர்ச்சனாவும் அழைப்பு விடுத்திருக்க.. வந்தவர்களில் பெரும்பாலானோர், ” பெத்தவங்க இல்லாததால, அந்த இடத்துல இருந்து அண்ணன் மகளை, தன் பொண்ணா நினைச்சு எல்லாரையும் அழைச்சிருகாங்க பாரு. நல்ல மனசு!” என்று உண்மை அறியாது வாழ்த்தினர்.
தம்பதியருக்கு எதையும் வெளிக்காட்ட இயலாத நிலை. புன்னகை அரிதாரம் பூசி சமாளித்துக் கொண்டிருந்தனர்.
ஆறு மணியைக் கடந்த நிலையில் ரோகிணியும், அவளின் சிற்றன்னை வசந்தியும் இணைந்து, மௌனிகாவை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
மேடையின் திரைச்சீலையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த மணமக்களின் பெயர்களைக் கண்டு, வியப்பில் மேல் ஏறியது பாவையின் புருவம் இரண்டும்.
‘அரங்கநாதன் என்கிற ஶ்ரீசரண்’ என்ற பெயரைக் கண்டவள், “உங்க அண்ணனுக்கு ரெண்டு நேமா?” என வினவினாள் ஆடவனின் தங்கையிடம்.
“ம்ம்.. அரங்கநாதன் எங்க தாத்தா பேரு. பெரியவங்களோட பேரைச் சொல்லிக் கூப்பிட முடியாதுனு, அப்பா ரெண்டாவதா சரண்னு இன்னொரு பேர் வச்சாரு. வீட்டுல மட்டும் தான் சரண். மத்தபடி வெளியில அரங்கநாதன். சர்ட்டிஃபிகேட்ல கூட அந்தம் பேருதான் இருக்கு.” என்று விளக்கம் தந்தாள் ரோகிணி.
தலை அசைத்து மெலிதாய்ப் புன்னகைத்வள், ஆடவனைப் பார்வையால் தேட, பணி செய்பவர்களிற்கு ஏதோ கட்டளை இட்டபடி மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
ஆலிவ் பச்சை வண்ணத்தில் மேற்சட்டையும், கீரீம் நிறத்தில் கால் சராயும் அணிந்து இருந்தான். அது அவனது உடலோடு பொருந்தி பாந்தமாய் காட்சி அளித்தது.
படிய வாரிய சிகையும், நெற்றியில் பளிச்சிட்ட சந்தனமும், சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களைப் போடாமல் விட்ட இடைவெளியில் மறைந்து நின்று எட்டிப் பார்த்து பொன் சங்கிலியும், கைப்பகுதியில் மடித்து விடப்பட்ட சட்டைக்குக் கீழான மணிக்கட்டில் உரசிக் கொண்டிருந்த கைச் சங்கிலியும்.. மாப்பிள்ளை களையைத் தந்திருந்தது.
மௌனி, முன்பு லாவண்யாவிற்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் விழாவிற்கு என்று, தான் அணிவதற்காக கொண்டு வந்திருந்த சற்றே வேலைபாடு மிகுந்த சுடிதாரையே உடுத்தி இருந்தாள்.
நிச்சய ஓலை வாசித்து உறவானது முடிவு செய்யப்பட்ட பின்னர், மாப்பிள்ளை வீட்டார் தரும் உடையை அணிய வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் மெலிதாய் ஒப்பனை செய்து தயாராகி வந்திருந்தாள்.
கீழே இருந்த உறவுகளில் சிலர், “என்ன, பொண்ணு சேலைக் கட்டாம சுடிதார் போட்டு இருக்கு?” எனத் தங்களுக்கு இடையே பேசிக் கொள்ள.. அதற்கான எதிர்வினையாய், “சென்னையில வேலை பார்க்கிற பொண்ணாம். அங்க இப்படித்தான் துணி உடுத்துவாங்களாம்!” என்ற பேச்சு அடிபட்டது.
அவற்றை எல்லாம் செவியில் கேட்டபடி நடந்து வந்தான் ஆடவன்.
மேடையில் ஏறுவதற்கு இரண்டு படிகள் இருக்க அதில் காலடி எடுத்து வைத்தவனின் கரத்தைப் பற்றி நிறுத்தினான், அவனின் நண்பன் அருண்.
“என்ன மாப்ள.?” எனச் சரண் கேள்வியாய் பார்க்க, காதோரம் சரிந்து விபரத்தை உரைத்தான்.
“ஓகே, நான் மோனிக்கிட்ட பேசுறேன். எதுனாலும் சரி, நீ ரெடியாவே இரு.” என்று தோழனிடம் உரைத்தவன், பாவையை நோக்கிச் சென்றான்.
தன் எதிரே வந்து நின்றவனின் முகம் யோசனையில் சுருங்கி இருப்பதைக் கவனித்தவள், “என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?”
“பிரச்சனையா இல்லையானு, நீதான் சொல்லணும்.”
“நானா? முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க!” என அவள் விசாரிக்க. பொதுவா நிச்சயத்தை ரெண்டு பக்கப் பெரியவங்களை வச்சுதான் பேசி, வெத்தலை பாக்கு மாத்துவாங்க. ஆனா இப்ப..” என்று தயங்கி நிறுத்தினான்.
“ஓகே! அதுனால என்ன?”
“உனக்கே தெரியும், என் பக்கம் அப்பா இல்ல, அம்மா மட்டும் தான். அதே மாதிரி தான உனக்கும்..”
“ம்ம்..”
“இங்க சித்தி சித்தப்பாவை வச்சுப் பேசலாம்னு நினைக்கிறாங்க. அதேபோல அங்கேயும்..?”
மெலிதாய் புன்னகைத்த மௌனி, “இந்த ஐடியா, முதல்ல உங்களுக்கு ஓகேவா சரண்?”
“நோ..”
“அப்ப, நான் மட்டும் எப்படி ஓகே சொல்லுவேன்னு நினைச்சீங்க?”
தலை அசைத்தவன், “எனக்குத் தெரியும். இருந்தாலும் வெளிப்படையா பேசிடுறது நல்லது இல்லையா?”
“ம்ம்..”
“எல்லா நேரத்துலயும், நம்ம விருப்பத்துக்கே எல்லாத்தையும் செய்ய முடியாது. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும்.”
“புரியிது சரண். சரி சொல்லுங்க, வெத்தலை பாக்கு மாத்துறது சம்மந்தமா வேற எதுவும் ஐடியா?”
“இப்போதைக்குச் சட்டுனு எதுவும் தோணல.”
அவளின் வதனமும் சிந்தனையில் ஆழ்ந்திட, “இதைப்பத்தி முன்னாடியே யோசிக்காதது என்னோட தப்புதான்!” என வெளிப்படையாகவே உரைத்தான் சரண்.
“இட்ஸ் ஓகே! ஒரே ஆளா, நீங்களும் எவ்வளவு தான் செய்வீங்க? பெரியவங்க கட்டாயம் வெத்தலை பாக்கு மாத்தணும்னா, ஆச்சியையும் உங்க அம்மாவையும் வச்சே செய்யலாம். இல்லேனா அதை ஸ்கிப் பண்ணிடலாம்.”
“ம்ம்.. நான் அம்மாக்கிட்டப் பேசுறேன்!” என்றவன் ரெங்கநாயகியையும் பாகீரதியையும் அழைத்து விஷயத்தைப் பகிர.. இருவருமே, “நாங்க எப்படி?’ எனத் தயங்கினர்.
“சித்தி சித்தப்பாவை வச்சு எனக்கு இதைச் செய்யிறதுல இஷ்டம் இல்ல ஆச்சி!” என்று மௌனி நேரடியாக உரைக்க, மூத்தவர் வேதனையுடன் நோக்கினார்.
சரண் சூழலைக் கையில் எடுத்துக் கொண்டான்.
பாவையானவள் உரைத்ததை வேறுவிதமாய் செயல்படுத்தினான்.
ஆடவனின் நண்பன் அருண் கையில் ஒலிவாங்கியுடன் மேடையில் ஏறினான்.
“ஹலோ… வெல்கம் டூ ஆல். ஃபங்ஷனோட ஹீரோ ஹீரோயினான அரங்கநாதன் மௌனிகா ரெண்டு பேரோட ஃபேமிலி சார்பா, நான் உங்களை வரவேற்கிறேன்.
காலம் மாறிகிட்டு வருது. அதுக்கு ஏத்தமாதிரி நாமளும் கொஞ்சம் மாறிக்க வேண்டியது தான். சரி, நாம இப்ப ஃபங்ஷனை ஆரம்பிக்கலாமா?
பொண்ணு மாப்பிள்ளைக்கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம். மிஸ் மௌனி, என்னோட ஃப்ரெணட் அரங்கநாதனைத் திருமணம் செஞ்சுக்கிறதுல உங்களுக்குச் சம்மதமா.?”
தலை அசைப்பிலும் புன்னகையிலும் அவள் சம்மதத்தைத் தெரிவிக்க, “அடுத்ததா மாப்பிள்ளைக்கிட்ட கேட்போம். மிஸ்டர் அரங்கநாதன், உங்க பக்கத்துல நிக்கிற மௌனிகாவோட எதிர்கால வாழ்க்கையைப் பகிர்ந்துக்க உங்களுக்கு விருப்பமா.?”
“எஸ்.. ” என அவன் வார்த்தையில் மொழிந்திட, “அடுத்து ஃபேமிலிக்கிட்ட கேட்போம். அம்மா, மௌனிகாவை உங்க மருமகளா ஏத்துக்க உங்களுக்கும் உங்க ஃபேமிலிக்கும் சம்மதமா?”
“எங்களுக்குச் சம்மதம்பா!’ என பாகீரதி உரைத்திட, ரோகிணியும் விமலும் அன்னையின் சொல்லை அப்படியே வழி மொழிந்தனர்.
“ரெங்கநாயகி ஆச்சி, உங்க பேத்தியை அரங்கநாதனோட குடும்பத்துல கல்யாணம் செஞ்சு தர்றதுக்கு உங்களுக்கு விருப்பமா?”
“இஷ்டம் தான்பா!” என அவர் உரைத்திட, “இப்ப ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் இந்த உறவை உறுதி செய்யுற விதமா முறைப்படி வெத்தலை பாக்கு மாத்திக்கோங்க..” என்று தேங்காய் பழம் வெற்றி பாக்கு நிறைந்த தாம்பூல தட்டை எடுத்து நீட்டினான் அருண்.
பாகீரதி அதனை வாங்கி, ரெங்கநாயகியிடம் கொடுக்க, பெற்றுக் கொண்டார் அவர். அதேபோல் அவரும் தாம்பூலத் தட்டை தர, மாப்பிள்ளையின் அன்னை என்ற முறையில் வாங்கிக் கொண்டார்.
“வெத்தல பாக்கு மாத்திட்டதால, அரங்கநாதன் மௌனிகா ரெண்டு பேரும் இந்த நிமிஷத்துல இருந்து நிச்சயமான ஜோடியா மாறுறாங்க. அடுத்ததா ரிங் மாத்திக்கிற ஈவண்ட். அதுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் ரெடியாகி வரணும். அதுவரைக்கும் நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..” என அருண் சிறிது இடைவெளி விட, சரணும் மௌனியும் உடை மாற்றி வருவதற்காக சென்றனர்.
இருவரும் தயாராகி வரும்பொழுது, இருபது நிமிடங்கள் கடந்து இருந்தது. அடுத்ததாய் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடந்தது.
விமல் கூச்சலிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர, ரோகிணி கைதளைத் தட்டி தமையன் மற்றும் அவனின் வருங்கால துணைவிக்கு வாழ்த்துத் தெரிவித்தாள்.
விழாவின் முக்கிய நிகழ்வு நடந்து முடிய, விருந்தினர்கள் மெல்ல கலையத் துவங்கினர். பந்திக்கு முந்து என்பதற்கு ஏற்ப உணவுக் கூடத்தில் சலசலப்பு.
மேஜையை இழுப்பது நாற்காலியைத் தள்ளிப் போடுவது, காலியான கோப்பையில் நீரை ஊற்றுவது, உணவைப் பரிமாறும் பொழுது கரண்டியின் நுனி உரசியதில் உண்டாகும் ஒலி யாவும் விருந்தினர்களின் உபசரிப்பிற்குக் கட்டியம் சொன்னது.
உறவுகள் ஒவ்வொருவராய் வந்து நிச்சயித்த ஜோடிக்கு நலங்கு வைத்து வாழ்த்திவிட்டுச் செல்ல, பாவைக்கு மோதிரம் அணிவிக்கும் பொழுது பற்றிய கரத்தை இன்னும் விடாமல் தனது கரங்களிற்குள் வைத்து இருந்தான் சரண்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அழகா பெரியவர்களை ஓரங்கட்டி பிரச்சினையை சால்வ் பண்ணிட்டாப்ல அருண்…