
அத்தியாயம் – 33
அப்போது ஹரியும் எம்.பி.ஏ முடித்து விட்டு கோயம்புத்தூரிலே ஒரு மென்பொருள் நிறுவனம் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
அன்று ஒரு நாள் கார்த்திக் தன் நண்பனைக் காண கிளம்பிச் செல்ல,அங்கு அவன் மீண்டும் வர்ஷூவை சந்தித்தான். மொத்தமாக இரண்டு வருடங்கள் கழித்து தன் வீட்டின் முன் அவனைக் கண்டதில் பயந்து போனவள் ,”எங்கே கண்ணாடி என கேட்பானோ” என நினைக்க,
அவனோ அவளைப் பார்த்து வியந்தவன்,”ஹேய் குட்டிச் சாத்தான் நீ இங்க தான் இருக்கியா?? எப்படி இருக்க?? முன்ன இருந்ததுக்கு இப்போ நாலு சுத்து பெருத்துட்ட போல ..வீட்டுல நல்ல சாப்பாடோ” என எப்போதும் போல் வம்பிழுக்க,
‘எத்தனை வருஷம் ஆனாலும் இவன் மாறுறானா பாரு சரியான லூசு லூசு’ என மனதிற்குள் திட்டியவள், வெளியே,”யார் நீங்க?? ” என தெரியாயது போல் ஆக்டிங்க் விட்டாள்.
“இன்னும் உனக்கு திறமை பத்தலை திம்சுகட்டை..இன்னும் வளரனும் நீ” என கிண்டல் செய்தவன் அவள் வீட்டிற்கு அருகில் இருந்த தன் நண்பனின் வீட்டிற்குள் சென்றான்.
“அடப்பாவி என்னையவா திம்சுகடைன்னு சொல்ற இரு உன்னை என்ன பண்றேன் பாரு” என மனதிற்குள் கறுவிக் கொண்டவள் கட்டிங் ப்ளேடை எடுத்து வந்து அவன் ப்ரேக் வயரை கட் செய்து விட்டிருந்தாள்.
அதை செய்து முடித்த பின்பே பெரிய அடியா பட்டிருச்சுனா?? என்ற பயம் தோன்ற, அவன் அடித்தாலும் பரவாயில்லை உண்மையை சொல்லி விட வேண்டி தான் என நினைத்தவள் அவனுக்காக காத்திருக்க, அவனோ நண்பன் வீட்டில் சமைத்த பிரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டு பொறுமையாக இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.
வந்தவன் அங்கு தன் பைக்கிற்கு அருகிலே திரு திருவென முழித்துக் கொண்டிருந்த வர்ஷூவைக் கண்டு ,”என்ன அன்னைக்கு கூலிங் கிளாஸை திருடுன மாதிரி இன்னைக்கு எப்படிடா பெட்ரோலை திருடலாம்னு ப்ளான் போட்டுட்டு இருக்கியா” என தன் காதுக்கு அருகில் கேட்ட குரலில், வர்ஷு உலுக்கி விழ,
“ச்சி இந்த லூசுக்கா பாவம் பார்த்தோம் பேசாம போய் அடிபடட்டும்னு விட்டிருவோமா” என்று கூட ஒரு நிமிடம் சிந்தித்தவள் மறுநிமிடமே மனதை மாற்றிக் கொண்டு ,”அது..வந்து.. உன் பிரேக் வயர் பிஞ்சிருக்கு பாரு” என அதைச் சுட்டிக்காட்ட,
அதைக் கண்டவனுக்கு அது இவளின் வேலை தான் என்று புரிந்துவிட, பிரேக் வயரை அறுத்தும் விட்டு பின்பு நான் விழுந்து அடிபடக்கூடாது என அவனிடமே அதை தெரிவிக்கும் அவளின் இந்த குழந்தை மனம் அவனைக் கவர்ந்தது.
அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே பைக்கில் ஏறியவன் ,”நான் விழுந்து அடிபடுவேன்னு தான பிரேக்கை அறுத்த.. நான்லாம் யாரு தெரியுமா நம்ம தலயவே(அஜித்குமார்) பைக் ரேஸ்ல பிரேக் இல்லாத பைக்கை வச்சு தோக்கடிச்சவன்..இதெல்லாம் எனக்கு ஜுஜுபி.. போ போய் குச்சி மிட்டாய் சாப்பிட்டு கும்கி படம் பாரு விஜய் டிவில வாரவாரம் போடுவான்” என கலாய்த்தவன் அடுத்த நிமிடமே பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப,
“ஹேய் லூசு விழப்போறடா” என வர்ஷூ பதட்டத்தில் கத்த, அவள் நினைத்ததைத் போலே அந்த தெருவை கடப்பதற்குள்ளேயே ஒரு கல் இடறிவிட, கவுந்தடித்து கீழே விழுந்திருந்தான்.
பயத்தில் அவன் அருகில் ஓடி வந்தவள் , அவன் வில்லு பட வடிவேலு போல் காலை பிழந்து மங்கி போல் விழுந்து கிடந்ததை பார்த்து பக்கென்று சிரித்து விட, அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“என்னை கொலை பண்ண திட்டம் போட்டதும் இல்லாம இப்போ கெக்க புக்கன்னு சிரிக்க வேற செய்றியா இரு உன்னை கம்பி எண்ணி களி தின்ன வைக்கிறேன்” என உடல் வலியையும் பொறுத்துக் கொண்டு அவளை மிரட்ட,
அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டே, “நீ முதல்ல எழுந்து ஹாஸ்பிட்டல் போ..அப்பறம் போலிஸ் ஸ்டேஷன் போறத பார்க்கலாம்” எனக் கூறியவள் அவனை தூக்க கையை நீட்டினாள்.
அது மதிய வேளை என்பதால் தெருவில் ஆள் நடமாட்டமில்லாமல் இருந்தது.எனவே வேறு வழியில்லாமல் வலியில் முனகிக் கொண்டே அவளின் கையைப் பிடித்து எழுந்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது கால் முட்டியில் இருந்த சதை கிழிந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
அதுவரையில் கிண்டலடித்துக் கொண்டிருந்தவள் அவன் காயத்தைப் பார்த்து பதறி, “அய்யோ இரத்தம்!!” என்று கத்தியவள் உடனே குனிந்து தன் துப்பட்டாவை எடுத்து ரத்தம் வெளியே வராதவாறு கட்டியவள் , அமர்ந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்து கண்களில் கண்ணீருடன் ,”ரொம்ப வலிக்கிதா..சாரி” என அழும் குரலில் மன்னிப்பு வேண்டினாள்.
அவளின் குரலும் அந்த கண்ணீர் நிறைந்த அவளின் காந்த விழிகளும் அவன் மனதை ஏதோ செய்ய, வலி உயிர் போனாலும் ,”இல்லை வலிக்கலை..நீ கிளம்பு பார்க்குறவங்க ஏதாச்சும் நினைக்க போறாங்க..நான் போய்க்கிறேன்” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
எழுந்து நின்றவள் ,”இல்லை வாங்க ஹாஸ்பிடல் போலாம்.. இப்படியேலாம் நான் தனியா விட்டுட்டு போக மாட்டேன்” என வர்ஷூ மறுத்தாள்.
“உங்க வீட்டுல தேட போறாங்க.. போ..உன் பக்கத்து வீட்டுல என் ஃப்ரென்ட் பாலா இருக்கான் அவனை வர சொல்லு நான் ஹாஸ்பிடல் போய்க்கிறேன்” என அவன் அங்கிருந்த மின்கம்பத்தில் சாய்ந்து நின்று கொண்டு கூற,
எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் அவன் இன்று வலியில் வாடுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்த பாலாவைப் பற்றி அவளுக்குத் தெரியும் அவன் அம்மா அவனை வெளியே விடமாட்டார்கள் என அறிந்தவள், அவன் போனை அவனிடம் இருந்து பறித்து நாலடி தள்ளிச் சென்றவள் கால் லாகில் இருந்த ஹரிக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னவள் அடுத்து அம்மா என்று பதிந்திருந்த எண்ணுக்கும் அழைத்து மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு அந்த தெருவின் கடைசியில் இருந்த ஒரு ஆட்டோவை ஓடி போய் அழைத்து வந்தாள்.
இவளின் செய்கைகள் ஒவ்வொன்றும் அவனை எவ்வளவு பாதித்தது என்றும் அது அவன் மனதில் ஆழமாய் பதிந்து போனதையும் அவள் அறியவில்லை.
ஆட்டோ வந்ததும் அந்த டிரைவரின் உதவியுடன் அவனை ஆட்டோவில் ஏற்றியவள் ,”உங்க அம்மாவையும் அப்பறம் ஹரி அண்ணாவையும் ஹாஸ்பிடலுக்கு வர சொல்லிருக்கேன்.. பார்த்து போங்க.. வீட்டுல லேட்டா போனா அம்மா காரணம் கேட்பாங்க.. அப்போ நான் உங்க ப்ரேக் வயரை கட் பண்ணதை சொன்னா அடி பின்னிருவாங்க.. அதான் உங்க கூட வரலை சாரி.. உடம்பை பார்த்துக்கோங்க.. அகைன் சாரி” என அவனிடம் உணர்ந்து மன்னிப்பு கேட்டவள், அந்த ஆட்டோ டிரைவரிடமும் நூறு முறை அவனை பார்த்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்திவிட்டே அங்கிருந்து கிளம்பினாள்.
அவளின் ஒவ்வொரு செய்கைகளும் அவள் பால் அவனின் மனதை ஈர்த்துக் கொண்டு சென்றதை உணர்ந்தவன் புன்னகையுடனே ஆட்டோவில் பயணிக்க, அதை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்த டிரைவர் ,”இவனுக்கு காலுல தான அடின்னு அந்த பாப்பா சொல்லுச்சு..ஒருவேலை கபாலத்துலயும் அடி பட்டு இப்படி ஆய்ட்டானோ” என நினைத்து அவனுக்காக பரிதாபம் வேறு பட்டார்.
மருத்துவமனை வந்ததும் அவனின் பாதி குடும்பமும் அங்கே நிற்க, இது நிச்சயம் இந்த அம்மாவோட வேலையா தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.
அதன் பின் ஒரு வழியாக காலுக்கு மருந்திட்டு வர வீட்டிற்குக் கிளம்பினர், மறக்காமல் தன் உதிரம் அவளின் வாசமும் கலந்த அந்த துப்பட்டாவை தன் கையோடு எடுத்துக் கொண்டான்.
வீட்டிற்கு திரும்பிய பின் தான் சந்து தொலைந்து விட்டாள் என்ற பேரிடி அவர்களைத் தாக்க, அதன் பின் அவன் வர்ஷூவையே சுத்தமாக மறந்துவிட்டான்.
தன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவனும் அனைவருடனும் சேர்ந்து தேடி அலைந்து திரிந்து ஒரு மாதமாகியிருந்தது.
அப்போது திடீரென்று அவனின் கூர்மையான மூளைக்குள் அன்று வர்ஷூவின் வீட்டில் பார்த்த சித்துவின் முகம் கண்முன் தோன்றி மறைந்தது.
சந்துவை பள்ளியிலுருந்து அழைத்துச் செல்லும் போது அவன் பார்வை சந்துவை தொடர்வதை அவனின் நினைவடுக்குகளில் இருந்து மீட்டியவனுக்கு, சித்துவின் மேல் சந்தேகம் தோன்றியது.
எனவே அதை உறுதிபடுத்திக் கொள்ள அன்று சென்ற வர்ஷூவின் வீட்டிற்கு செல்ல, பூட்டியிருந்த வீடே அவனை வரவேற்றது.
அக்கம் பக்கம் விசாரித்ததில் அவர்கள் வருடத்தில் ஒரு முறை மும்பை சென்று ஒரு மாத காலம் தங்கியிருந்துவிட்டு வருவர் என்பது தெரிய வர, ஹரியிடம் இங்கு அவர்கள் சித்துவையும் அவன் நண்பர்களைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னவன் மும்பை கிளம்பிச் சென்றான் தன் வாழ்க்கையே இந்த பயணத்தில் மாறப் போறது தெரியாமல்.
ப்ரியவர்ஷினி(வர்ஷூ) – வரதராஜன் – சுந்தரி தம்பதியரின் ஒரே செல்லப் புதல்வி.வரதராஜன் மும்பையில் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் அப்பர் மிடில் க்ளாஸ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்.
அவர்களுக்கு ஆறு வருடம் கழித்து தவமிருந்த கிடைத்த வரமே வர்ஷூ. எனவே அவளை ஒரு மகாராணி போலவே அவளின் அன்னை தந்தை வளர்த்தனர்.
அவள் பேச்சிற்கு மறுபேச்சு என்பதே அந்த வீட்டில் கிடையாது. மொத்தத்தில் அது ஒரு அழகான அளவான பாசக் கூடு.
வரதராஜனும் சுந்தரியும் அந்தக் காலத்திலே வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு உறவு என யாரும் இல்லை.
அவர்களுக்கு இருந்த ஒரே ஆதரவு வரதராஜனின் பால்ய சிநேகிதனும் அவர்களின் நலம்விரும்பியுமான வசந்தகோபாலன் குடும்பம் தான்.
அவர் தான் இவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வரதராஜனுக்கு ஒரு சிறிய மெக்கானிக் ஷாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். வரதராஜன் அதை தன் திறமையால் இப்போது பெரிய அளவில் மாற்றியிருந்தார்.
வசந்தகோபாலன் தம்பதியரின் ஒரே மகனான சித்துவிற்கு வர்ஷூ தான் செல்லத் தங்கை. தனியாக வளர்ந்த வர்ஷூவிற்கும் சித்துவும் கோபால் அப்பா லக்ஷ்மி அம்மா என்றால் கொள்ளை பிரியம்..வருடம் மூன்று முறை அவள் இங்கு வந்து விடுவாள் அல்லது இவர்கள் அங்கு சென்று விடுவார்கள்.
சுந்தரி இன்ட்ரோவெர்ட் என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். அவர் தன் மகளையும் கணவனிடமே அளந்து அளந்து தான் பேசுவார், ஆனால் மனதிற்குள்ளே கடலளவு பாசம் இருந்தது.
அதை அவர்களிருவருமே புரிந்து கொண்டதால் அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையைப் சென்றது.
அது வர்ஷூ ஒன்பதாவது படிக்கும் வரை மட்டுமே..அதன் பின் யார் கண் பட்டதோ வர்ஷூவின் பிறந்த நாளைக்கு அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நகை எடுக்கச் சென்ற அவளின் பெற்றோர் திரும்ப வரவே இல்லை.
தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை போதும் என நினைத்து ஒரு ஆக்சிடென்டில் இருவரின் உயிர்ப்பறவையும் இறைவனடி சேர்ந்தது.
ஒரே நாளில் அனாதையான வர்ஷூ திக்பிரம்மை பிடித்தவள் போல் ஆகி விட,சித்துவின் குடும்பம் தான் அவளைத் தாங்கியது.
வசந்தகோபாலன் முன் நின்று கனத்த மனதுடன் தன் ஆரூயிர் நண்பனுக்கு இறுதி சடங்கை செய்தவர், அதன் பின் அங்கிருந்த கடையை விற்று , வந்த பணத்தைதை வர்ஷூவின் பெயரில் போட்டுவிட்டு,அனைத்தையும் செட்டில் செய்துவிட்டு அவளை தங்களுடனே அழைத்து வந்துவிட்டிருந்தனர்.
வர்ஷூ இங்கு வந்த பின்னும் அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.. பதினான்கு வருடமாக தன்னை தாங்கி வளர்த்த பெற்றோர் ஒரே நாளில் மாயமான அந்த அதிர்ச்சியை அந்த பிஞ்சின் மனம் ஏற்க மறுத்தது.
அதன் பின் அவளை ஒரு நல்ல மனநல மருத்தவரிடம் காண்பித்து, அவளை பழைய வர்ஷூவாக மீட்டெடுக்க அவர்களுக்கு முழுதாக இரண்டு வருடமானது.
அவள் சரியானதும் சித்துவின் படித்த பள்ளியிலே அவளை பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டனர்.
ஸ்ரீ, நந்துவுடன் சேர்ந்து வீட்டிலும் சித்துவின் உபயத்தால் அவள் பழைய வர்ஷூவாக மாறியிருந்தாள்.
இறந்தாலும் தன் பெற்றோர் வாழ்ந்த அந்த வீட்டில் தான் அவர்கள் உயிர் இன்னும் இருக்கின்றது என நம்பிய வர்ஷூ வருடம் ஒரு முறை தன் பெற்றோர் வாழ்ந்த அந்த வீட்டில் சென்று தங்கி வரவேண்டும் என்று ஆசைப்பட, அவளின் இந்நாள் பெற்றோரும் அவள் ஆசையை நிறைவேற்ற சம்மர் வெக்கேஷனில் அவளை அங்கு கூட்டிச் சென்று வருவர்.
இந்த வருடமும் அப்படித் தான் கிளம்பிச் சென்றிருந்தனர் அங்கு அவர்களின் செல்ல மகளுக்கு காத்திருக்கும் இன்னலை அறியாமல்.
கார்த்திக் இங்கிருந்து மும்பை வந்தவன் , தான் வாங்கி வைத்திருந்த வசந்தகோபாலனின் எண்ணிற்கு அழைத்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கேட்க நினைத்து அவருக்கு அழைப்பு விடுக்க, மறுமுனை ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.
பலமுறை ட்ரை செய்தும் எடுக்காததால், அடுத்து இராஜலெக்ஷ்மியின் எண்ணிற்கு அழைத்தான். அவரின் கைபேசியிலும் அழைப்பு போய்க்கொண்டிருந்ததே தவிர எடுக்க ஆளில்லை.
அவன் மனதில் ஏதோ தவறாகப் பட, உடனே தன் மேட்ரிக்ஸ் மூளையை உபயோகப்படுத்தி அவர்கள் மொபைல் எண்ணை வைத்து அவர்கள் இப்போது இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவன் அங்கு விரைய, அங்கு அவன் கண்ட காட்சி அவன் உயிரை உரையச் செய்தது.
வீடு உள்பக்கமாக பூட்டியிருக்க, காலிங்க் பெல்லை அழுத்தி விட்டு கதவு திறப்பதற்காக காத்திருந்தான்.
கதவு திறப்பதற்கான அறிகுறி ஏதுமில்லாததால் அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க, அந்த வீட்டிற்கு பின் பக்கமாக ஒரு வழி இருப்பது தெரிந்தது.
அவனின் நல்ல நேரம் அது பூட்டாமல் இருக்க, உள்ளே நுழைந்தவன் அங்கே யாரையும் காணாமல் ஒவ்வொரு அறையாக தேடினான், ஹாலின் இடதுபுறத்தில் கடைசியாக இருந்த அறையில் இருந்து ஏதோ முனகல் சப்தம் வர, அங்கு விரைந்தவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.
அறையின் உள்ளே வர்ஷூவின் தந்தை தூக்க மாத்திரை முக்கால் வாசியை விழுங்கியிருக்க, அவரைத் தொடர்ந்து அவரின் மனைவியில் மீதமிருந்ததை விழுங்கி பாதி மயக்கத்தில் கிடந்தனர்.
அவசரமாக உள்ளே நுழைந்தவன்,”அங்கிள் என்னாச்சு, ஆன்ட்டி ஏன் இப்படி முட்டாள்தனமான முடிவு எடுத்து வச்சிருக்கீங்க..எங்க வர்ஷூ” என அவன் அவர்கள் கன்னத்தை தட்ட,
வர்ஷூ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர்களின் கண்கள் மேலும் கலங்க, “எங்க பொண்ணை பாதுகாக்க முடியாத பாவி ஆய்ட்டோம் பா..நாங்கெல்லாம் இருக்கவே கூடாது” என கோபாலன் திணறலாக கூறியவர் மொத்தமாக மயங்கிச் சரிய, நிலமை கை மீறுவதை உணர்ந்த கார்த்திக் விரைவாக செயல்பட்டான்.
அவன் முன்பே மும்பையில் இரண்டு வருடம் தங்கியதால், அதனின் மூலை முடுக்கு வரை அவனுக்கு அத்துப்படி. அங்கு தனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் பிரசாத் மூலம் ஒரு மருத்துவமனையில் இவர்களை சேர்த்தவன் அவர்களை டாக்டர்கள் பொறுப்பில் விட்டு விட்டு வர்ஷூவிற்கு என்னானது என சிந்திக்கலானான்.
எப்படியும் அவர்கள் கண்விழிக்க ஒரு நாளைக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். வர்ஷூவின் அப்பா கடைசியாக சொன்ன வார்த்தைகளை நினைத்து, அவள் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறாள் என யூகித்தவன் இப்போது அவர்கள் எழுந்து சொல்லும் வரை காத்திருந்தால் அதற்குள் வர்ஷூவிற்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என பதறியவன், தான் முன்பு வேலை பார்த்த டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றான்.
அங்கு தனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரை துணைக்கு வைத்துக் கொண்டு முதற்கட்டமாக அவன் வர்ஷூவின் வீட்டில் சோதனை செய்ய, அவனின் நண்பர்கள் அக்கம் பக்கம் விசாரிக்கச் சென்றனர்.
சுந்தரி தன் மகள் கணவனைத் தவிர யாரிடமும் பேசமாட்டார் என்பதால் அங்கிருந்தோர்க்கு வர்ஷூவின் பெற்றோர் இறந்ததோடு வசந்தகோபாலன் தம்பதி அவர்களை அழைத்துச் சென்றது மட்டும் தான் தெரிந்திருந்தது. இதற்கும் வசந்தகோபாலன் அவர்களின் உறவா? நண்பரா? எங்கிருக்கிறார் என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
நல்ல சமூகம் டா பக்கத்து வீட்டுல என்ன நடந்தா எனக்கென்ன நான் நல்லா இருந்த போதும்னு நினைக்குற இந்த மனோபாவம் எப்போ தான் மாறுமோ என நினைத்து அவனின் நண்பர்கள் நொந்து கொண்டு கார்த்திக்கிடம் வந்து அதை தெரிவித்தனர்.
அவன் அதுவரையில் வீட்டில் தேடிப்பார்த்து கிடைத்ததிலிருந்தே இவர்கள் சொன்ன விஷயத்தை அவன் முன்பே கண்டுபிடித்திருந்தான்.
அடுத்த கட்டமாக அங்கிருந்த அவர்களின் செல்பேசியை எடுத்தவன் , கடைசியாக யாருக்கு கால் செய்திருக்கிறார்கள் என ஆராய, அதில் சித்துவின் எண் தான் பலமுறை டயல் செய்யப்பட்டு அது ஸ்விட்ச் ஆப் என வந்திருந்தது.
தங்கள் பிரச்சனையை மகனிடம் கூற அழைத்திருக்கிறார்கள் என புரிந்துகொண்டவன், ‘அப்போ சந்துவை இவன் தான் கடத்தியிருப்பானோ’ என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.
அதைப் பற்றி மேலும் சிந்திக்க விடாமல் அடுத்து வரிசையாக பல முறை வந்திருந்த அந்த புதிய எண் அவன் கவனத்தை ஈர்த்தது.
அங்கு அவர்களுக்கு வேறெந்த துப்பும் கிடைக்காததால் அவர்களிருவரின் செல்போனை மட்டும் எடுத்துக் கொண்டு பிரசாத்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் பயணிக்க, அப்போது கார்த்திக்கிற்கு யாரோ தங்களை பின் தொடர்வதைப் போல் இருக்க, திரும்பி பார்த்தான், அதற்குள் யாரோ மறைவதைப் போல் இருக்க, மனதில் குறிப்பெடுத்துக் கொண்டவன் வண்டியை எப்போதும் செல்லும் வழியில் செலுத்தாமல் மும்பையிலிருந்த சந்து பொந்தெல்லாம் சுற்றி பின் தொடர்ந்தவனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பிரசாத் வீட்டிற்குள் நுழைந்தனர்.
பிரசாத்தின் வீடே தனி ஆய்வுக்கூடம் போல் தான் இருக்கும். சுற்றி கம்ப்யூட்டர்கள் சூழ இருந்த அவனின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் முதலில் அந்த புதிய எண் யாருடையது என முதலில் தேட, அது தந்த முடிவில் இவர்கள் குழப்பத்தின் உச்சிக்கு சென்றனர்.
அது மும்பையின் முன்னால் அமைச்சரான காளிதாசனின் பி.ஏ நம்பர்.அதில் இருந்து எதற்கு இவர்களுக்கு இவ்வளவு முறை போன் கால் வர வேண்டும் என அவர்கள் குழம்ப, அதற்கு விடை ஓரளவிற்கு அவர்களுக்கு இருவரும் பேசிய கால்களை டேப் செய்து கேட்டதிலிருந்து தெரிந்தது.
அந்த போன் காலில் அவர்களுக்கு புரிந்த விஷயம், வர்ஷூ இப்போது அந்த அமைச்சரின் பிடியில் சிக்கியிருக்கிறாள், மேலும் அந்த அமைச்சருக்கும் அவளுக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்றும் இதை இவளின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கோ இல்லை போலிஸுக்கோ தெரியபடுத்தினால் அவர்கள் மகளின் மானத்தோடு சேர்த்து உயிரும் அடுத்த நிமிடம் காற்றில் பறக்கும் என்பது தான்.
இதை அறிந்த கார்த்திக்கின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது.
அவளின் குழந்தை முகத்தை நினைத்து பார்த்தவனுக்கு அவளுக்கா இந்த நிலமை என மனம் ரணமாய் வலித்தது. இந்நேரம் அங்கே என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாளோ என நினைத்த மனம் அவளுக்காய் வருந்த, தன்னைக் குறித்தே அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
சந்துவின் தொலைந்த போது அவன் மனம் எப்படி பதறியதோ அதே போல் வர்ஷூவை நினைத்தும் துடிப்பதைக் கண்டு, அவள் மேல் தனக்கு அத்தனை பாசமா என வியந்தான்.
அவனுக்கு வர்ஷூவின் மேல் காதல் எல்லாம் இல்லை என்றாலும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததென்னவோ உண்மை.
இதைப் பற்றி பின்பு சிந்தித்துக் கொள்ளலாம் முதலில் வர்ஷூவை அந்த கிழவனிடம் இருந்து எப்படி காப்பற்றுவது என சிந்திக்க ஆரம்பித்தான்.
ஆம் அந்த அமைச்சர் ஒரு கிழவன் தான்..அறுபது வயதை நெறுங்கிக் கொண்டிருக்கும் கிழவன், அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது வேறு கார்த்திக்கின் கடுப்பை மேலும் கூட்டியது.
அவன் இப்போது அமைச்சர் இல்லையென்றாலும், அவனுக்கு ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருந்ததால் எதையும் பொறுமையாக தான் கையாள வேண்டும் என நினைத்தவன் வர்ஷூவை அந்த இராவணிடடமிருந்து மீட்பதற்கான திட்டத்தை சிரத்தையோடு வகுக்க ஆரம்பித்தான்.
போலிஸ் துறையிலும் , மீடியா துறையிலுமிருந்த தன் நம்பகமான நண்பர்களைக் கொண்டு அந்த வீணாப்போன அமைச்சரைப் பற்றி விசாரிக்கச் சொன்னவன், அந்த காளிதாசனின் பி.ஏவை தொடர்ந்து வர்ஷூ இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பிரசாத்தை அனுப்பிவிட்டு, இவன் அந்த காளிதாசனைப் பற்றி தன்னாலான தகவல்களை சேகரித்ததோடு, வர்ஷூவின் பெற்றோர் முழிப்பதற்காகவும் காத்திருந்தான்.
அவர்கள் விழித்தால் தான் வர்ஷூ எப்படி அவனிடம் சிக்கினாள், இதிலிருந்து எப்படி மீள்வது என தெளிவாக சிந்திக்க முடியும் என நினைத்தவன் அந்த மருத்துவருக்கு அழைத்துக் கேட்டான்.
அவரோ அவனை அதிர வைக்கும் வகையில் அவர்கள் கண்விழித்து விட்டதாகவும் ஆனால் அவர்களின் அருகிலேயே அடியாட்கள் போல் இரண்டு பேர் எப்பொழுதும் அமர்ந்திருப்பதாக கூறினார்.
கண்டிப்பாக இது தன்னை தொடர்ந்தவன் கொடுத்த துப்பில் அந்த கிழவன் செய்த ஏற்பாடகத் தான் இருக்கும் என யூகித்த கார்த்திக், இப்போது அவர்களை அந்த தடியன்களில் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தன்னிடம் கொண்டு வந்துவிடுவது சுலபமென்றாலும், இப்படிச் செய்தால் அந்த கிழவன் உஷாராகி விடுவான் என நினைத்த கார்த்திக் வேறு திட்டத்தை யோசித்தான்.
அதன்படி அங்கிருந்த மருத்துவரை அழைத்தவன் அங்கிருந்தவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள் என ஏதேதோ விசாரித்தவன், அவர் கொடுத்த விபரத்தின் மூலம் அவர்கள் ஏதோ அந்த கிழவனுக்கு கடைநிலை அடியாள்கள், புத்தி கிடையாத முரடன்கள் எனப் புரிய, தனக்குள் சிரித்துக் கொண்டவன் தன்னுடைய திட்டத்தை அவரிடம் விவரித்து அதை அவரை வைத்தே செயல்படுத்தினான்.

