
அத்தியாயம் 17
அங்கு போனை வைத்தவள் திருப்பி திருப்பி மொபைலை பார்த்துவிட்டு, அவன் திரும்ப கால் செய்யவில்லை ௭னவும் மேலும் கடுப்பாகி, ‘எப்டித்தான் இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க, நாளைக்கு போய் பேசிக்கிறேன்’ என முடிவு எடுத்துவிட்டு இருந்த இடத்திலேயே மொபைலை வைத்து விட்டு சென்று படுத்தாள்.
சிறிது நேரம் கழித்து வேலயெல்லாம் முடித்துவிட்டு வந்து இவளை பார்த்த ஜெயந்தி, அவள் தூங்கி விட்டாள் என தெரிந்ததும், ப்ரகலத்தனுக்கு போன் செய்தார். அவன் எடுக்கவில்லை, அவள்தான் அழைக்கிறாளோ என நினைத்து எடுக்காமல் இருந்து கொண்டான்.
இவர் மறுபடியும் அழைக்க, “என்னம்மா?” என்றவாறு எடுத்தான்.
“என்னப்பா எடுக்கும் போதே இவ்வளவு சலிப்பு” ௭ன ஜெயந்தி முறைப்பாய் கேட்க.
“சாரி ஆண்ட்டி, நீங்கன்னு கவனிக்கல”.
“என்ன?? என் பொண்ணவிட்டு கேட்க வச்சு, என்ன டிரை பண்ண பாக்குற? நா எப்டி அலோவ் பண்ணுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணுற?”.
“நாங்க எவ்வளவு தான் கரெக்டா இருந்தாலும், நீங்க ஏன் ஆண்ட்டி நம்பவே மாட்டேங்குறீங்க. ஒரு பப்ளிக் பிளேஸ்க்கு போக தான கேக்குறோம்”.
“அதுலா நீங்க எங்க வயசுக்கு வரும் போது புரியும்பா. நம்புற மாதிரி இங்க யாரும் இல்லயேப்பா. மூஞ்சு முழுக்க மூடிக்கிட்டு கண்ணு மட்டும் தெரியிற முக்காடு போட்டு சுத்துற காலமால இருக்கு”.
“சரி ஆண்ட்டி, நல்ல வழில போறவங்க அண்ட் கிடைக்கிற வாய்ப்ப தப்பா யூஸ் பண்றவங்க இப்டி 50:50 தான் எல்லாமே. முக்காடு போட்டு மறைச்சிட்டு அன்-டைம்ல போறவங்கெல்லாம் பொய்யா லவ் பண்றவங்களுமில்ல, ஃப்ரீயா எந்த பயமும் இல்லாம சுத்துறவங்கெல்லா உண்மையான லவ்வர்ஸ்ன்னு சொல்லிட முடியாது. ஆனா உங்க பிள்ளைகள நீங்க நம்பலாமே. காலேஜ் செகண்ட் இயர் வந்துட்டா இதுவர போன் வாங்கி கொடுங்கன்னு உங்கட்ட கேட்டுருக்காளா? லேட்டா வந்துட்டு பொய் சொல்லிருக்காளா? இல்ல பர்சன்டேஜ் கம்மியாகி அரியர்ஸ் எதுவும் வச்சிருக்காளா? நாங்க கரெக்டான வே ‘ல்ல தான் போய்கிட்டுருக்கோம்ன்னு ப்ருவ் பண்ண இன்னும் நிறைய கொஸ்டீன்ஸ் இருக்கு ஆண்ட்டி ௭ன்ட்ட, தயவு செஞ்சு பயப்படாதீங்க ௭ங்க மேல நம்பிக்க வைங்க” என முடித்தான். அவன் அம்மாவிடம் பதில் கூற முடியாமல் வந்த்தற்கும் சேர்த்து ஜெயந்தியிடம் பேசிவிட்டான்.
ஒரு பெரு மூச்சுடன் ஜெயந்தி, “எப்டியோ பேசியே காம்ப்ரமைஸ் பண்ணிடுற, ஆனாலும் ஒருத்தியா அவள வளக்குறேன்பா, எந்தக் கெட்டப் பேரும் வரக்கூடாதுன்றதுல நா உறுதியா இருக்கேன். சோ யோசிச்சு தான் எதையும் செய்ய முடியும்” என்றார் அவரும் திட குரலில்.
“சரி ஆண்ட்டி, உங்க இஷ்டம். அவ ஆசப்படுறாளேன்னு தான் நா இவ்வளவு தூரம் பேசுனேன். பட் ஃபைனல் டிஷிஷன் இஸ் யுவர்ஸ். நீங்க ஓகே சொன்னா ஓகே, இல்லனாலும் ஓகே” ௭ன்க.
“போட்டு பாக்குற? குட்நைட்” என அவர் பதில் சொல்லாமலே முடித்துவிட,
“ஓகே ஆண்ட்டி, குட் நைட்” என இவனும் வைத்தான்.
மறுநாள் சீக்கிரம் சென்று அவர்கள் எப்போதும் மீட் செய்யும் மரத்தடியில் அவளுக்காக காத்திருந்தான். அவனிடம் சண்டையிடுவதற்காகவே சீக்கிரம் கிளம்பி வந்தாள், முறைத்துக்கொண்டே வந்தவளை சிரித்துக்கொண்டே பார்த்தான். வேகமாக வந்து அவன் அருகில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்தாள். “குட்மார்னிங் எழில்” என்றான்.
திரும்பி முறைத்துவிட்டு மறுபடியும் திரும்பிக்கொண்டாள்.
“மேடம் என்ன காலையிலேயே இவ்வளவு உஷ்ணமா இருக்கீங்க?” அப்பொழுதும் அவள் அமைதியாகவே இருக்க, நெருங்கி அமர்ந்தான், திரும்பவம் இல்லை, விலகவும் இல்லை அவள்.
“சரிம்மா சாட்டர்டே போவோம், ஆண்ட்டி ஒத்துக்கலனாலும். ஆனா இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட், இனி இப்டி..” அவன் முடிக்கும் முன்.
எழுந்து பெரிய கும்பிடு போட்டு “இந்த தடவயும் நா உங்கள கூட்டிட்டு போக சொல்லல போதுமா. நா சேரியே கட்டல ஓ.கே வா. ச்ச., ஃபர்ஸ்ட் டைம் நமக்கே நமக்குன்னு ஒரு சேரி எடுக்கப் போறோமே, அத உங்கள கூட்டிட்டு போயி உங்களுக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ண சொல்லி கட்டலாம்னு நினைச்சது ஒரு குத்தமா. அதுக்காக 1ஸ்ட் டைம் பேசும்போதே ௭ன் மாமியார்ட்ட திட்டு வாங்கி, நேத்து நைட் உங்க மாமியார்ட்ட இடி வாங்கி, நம்ம ஆளுக்காது போன போடுவோம்னு நைட் போன போட்டா, அதே பல்லவிய நீங்களும் பாடுறீங்க ஏதோ கோவத்துல கட் பண்ணிட்டேன், திரும்பக் கூப்பிட்டு பேச தோணுச்சா உங்களுக்கு?, ஒரு சேரிக்கே இவ்வளவு போராட்டமா இருக்கு, ஒருத்தர்னாலும் ௭ன் பக்கம் நின்னா தான ௭னக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” ௭ன பேச லேசாக கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.
அவளை இழுத்து அருகில் அமர்த்தியவன் “சாரிம்மா, தோப்புக்கரணம் வேணும்னா போடவா? ஆண்ட்டிட்ட சொல்லிட்டு போனா ப்ராப்ளம் இல்லன்னு பாத்தேன். கண்டிப்பா சாட்டர்டே போறோம், நா எடுத்து தர்றத தான் மண்டே நீ கட்டுற ஓகேவா? அதுக்குள்ள கண்ணுலா கலங்கிட்டு பாரு” என அவள் கண்ணீரை துடைத்து தோளை சுற்றிப் கைபோட்டு அழுத்தம் கொடுத்து விட்டு எடுத்தான்.
“நா இவ்வளவு போராடுன அப்றம்தான் இதுவே நடக்குதுன்னா, மத்ததெல்லாம்?” என்க.
“அது அத நடக்கும்போது பாத்துக்கலாம், இப்ப கிளாஸ் போ” என்றான். அயர்வாகவே எழுந்து சென்றாள். அவனுக்குமே இரண்டு அம்மாக்களையும் நினைத்து கொஞ்சம் பயமாகவே இருந்தது. வெள்ளி இரவு ஜெயந்திக்கு அழைத்தான், “ஆண்ட்டி, நாளைக்கு நா எழில கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?” என்றான் நேராகவே. அவனுக்கு ஆறெழிலுக்கு ௭ந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது ௭ன்பதில் உறுதியாக இருந்தான். அதானாலேயே அவர் திட்டினாலும் பரவாயில்லை ௭ன மறுபடியும் அழைத்து விட்டான்.
“உன் அம்மாட்ட கேட்டுட்டியாப்பா?” ௭ன்றார் ஜெயந்தி,
“சொல்லிட்டேன் இன்னும் அவங்க ஒத்துக்கல, ஒத்துப்பாங்க” ௭ன்றான்.
“என்னவோ என் பொண்ணு வாழ்க்க நிம்மதியா அமையணும், எனக்கு அதுதான் வேணும். என்ன திரும்ப இப்டி ஒரு தர்ம சங்கடத்துல தள்ளாதப்பா ப்ளீஸ். கல்யாணம்னு ஒன்னு நடக்குற வர அவ என் பொண்ணாவே இருக்கட்டும். இப்டி வெளில சுத்துறதெல்லா வேணாம். இப்ப நீங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தான்னு நினைச்சு நா இப்ப அனுப்பி வைக்கிறேன். வீட்டுக்கே வந்து கூட்டிட்டு போயிட்டு, மதியதுக்குள்ள வீட்டுலயே கொண்டு வந்து விட்டுறு” என்றார். ஒரு டீச்சராக அவர் செய்யும் வேலை கஷ்டமாகவே இருந்தது.
“தேங்க்ஸ் ஆண்ட்டி” என யோசனையுடனே அவனும் போனை வைத்தான். அவர் வேறு வழியின்றி மன கஷ்டத்துடன் ஒத்துக்கொண்டது இவனுக்கும் கஷ்டமாக இருந்தது. சாட்டர்டே மார்னிங் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆறு. நீலவண்ண சுடிதார், ஃப்ரீ ஹேர், பெர்ப்யூம், மேக்கப் என பக்கா காலேஜ் பொண்ணாக கிளம்பினாள். முந்தின நாள் ஈவினிங் காலேஜிலிருந்து வந்ததும், “ப்ளீஸ்மா இந்த ஒரே ஒரு டைம் அலோவ் பண்ணுமா” ௭ன கெஞ்சி கொண்டே ஜெயந்தியை சுற்றி வர.
“இனி கேட்காமலே போறேன்னு நாசுக்கா சொல்றியோ?”.
“ம்மா”.
“நானு உன்ன இந்த ஒரே ஒரு தட அனுப்புறேன். அந்தப் பையன வந்து கூட்டிட்டு போக சொல்லு. நீங்க பிரண்ட்லியா பழகுறீங்கன்னு நம்பி தான் இப்ப கூட அனுப்புறேன்” ௭ன அவனிடம் சொன்னதையே இவளிடமும் சொல்ல.
“தேங்க்யூம்மா, தேங்க்யூ சோ மச்” என கட்டி முத்திக்கொண்டாள் ஜெயந்தியை.அன்றைய நாள் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள் தான். அவனுமே முதல் முறை அவள் வீட்டிற்கு வருவதால் டிப்டாப்பாக கிளம்பி வந்தான். காலிங் பெல் சத்தத்தில் ஜெயந்தியே வந்து கதவைத் திறந்தார்.
“வாப்பா”.
“எப்டி இருக்கீங்க ஆண்ட்டி?” என கேட்டவாறே உள் நுழைந்தான். “ம்” என தலையசைத்து வந்து ஹாலில் அமர்ந்து அவனுக்கும் கை காட்டினார்.
“ஏன் ஆண்ட்டி ஒரு மாதிரியா இருக்கீங்க” என அவன் அவர் முகத்தை பார்த்தே கேட்க, ஆறெழில் வெளியே வந்தாள்.
“ஹாய்” என்றாள் அவனைப் பார்த்து, அவளை பார்த்து சிரித்தவன் திரும்பி,
“சொல்லுங்க ஆண்ட்டி” என்றான் மறுபடியும்.
“எனக்குப் பிடித்தமில்லப்பா. இது நம்ம கல்ச்சர் இல்ல, மனசு அடிச்சுக்கிட்டேயிருக்கு, தப்பு தப்புன்னு சொல்லிட்டே இருக்கு, உங்களுக்கு இந்த லவ்வு கிவ்வுலா ஈஸியா தான் இருக்கும், ஆனா இத உன் வயசுக்கு சொன்னா புரிஞ்சுப்பியான்னு கூட தெரில”.
“ம்மா, நீ என்னமா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்குற” ஆறு நடுவில் வர.
“எழில் எனக்கு ஒரு டீ கிடைக்குமா?” என்றான் ப்ரகலத்தன்.
“ம்” என இருவரையும் பார்த்தவாறே கிட்சனுள் சென்றாள்.
“நீங்க சொல்லுங்க ஆண்ட்டி, என்ன பிரச்சன? ௭னக்கு புரியும், புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்”.
“அது சொன்னா உங்களுக்குப் புரியாதுப்பா. நிச்சயம் பண்ண பொண்ணயே மாப்பிள்ளையோட கல்யாணத்துக்கு முன்ன வெளியே அனுப்ப யோசிப்போம். இது!! இது, என்னால யோசிக்க கூட முடியல, நீ சொல்றதெல்லாம் ஓகே. எல்லாத்தையும் விட என் ஆத்துக்காரர் உன்ன ஏத்துக்க தயாரா இருந்துருக்குறார்ன்னு என் மனசு நம்புது, அதான் நீ இப்ப இங்க என் முன்ன உக்காந்துருக்க. அதுக்காக இப்டி ஊர் சுத்திட்டு வாங்கன்னு.. என்னால முடியலப்பா” என்றார் பெருமூச்சுடன்.
“சாரி ஆண்ட்டி, உங்கள இவ்வளவு கஷ்டப்படுத்துனதுக்கு” என அவன் சொல்லிக் கொண்டிருக்க. காலிங் பெல் சத்தம் கேட்டது, ஜெயந்தி சென்று “யாரு?” ௭ன்றவாறு திறக்க லட்சு நின்று கொண்டிருந்தாள், வெளி வாசலில் அவள் அப்பா இறக்கி விட வந்தவர். “வணக்கம் மேடம், ஏதோ டிரஸ் எடுக்க பிரெண்ட்ஸ்லா சேந்து போகுதுகளாமே அதான் இங்கன விட்றுங்கப்பான்னு சொன்னா, கிளம்பட்டுமா?” என்க.
“உள்ள வாங்க சார், டீ சாப்ட்டு போலாம்” ௭ன இவர் அழைக்க.
“வேணாமா, இருக்கட்டும், காலாகாலத்துல போயிட்டு வர சொல்லுங்க, நா சாயந்தரம் இங்கயே வந்து கூப்ட்டுக்றேன்” என்று விட்டுப்போனார்.
“நீயும் கூடப் போறேன்னு சொல்லவே இல்லமா அவ, உள்ள வா” என்றார். இப்பொழுது அவர் முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் வந்திருந்தது.
“அப்பா விட மாட்டாங்கன்னு சொல்லிருந்தேன் ஆண்ட்டி. நா வரலன்னு சொன்னதும் அவ வேற யாரயுமே கூப்பிடல, சீனியர்ட்ட மட்டும் தான் கேட்டா, ஆனா அப்றம் அண்ணாதான், எல்லோருமா போயிட்டு வந்தா ஜாலியா இருக்கும். ஒன்ஸ் அப்பாட்ட கேட்டுப்பாருன்னு சொன்னாங்க. சரின்னு சும்மா டிரை பண்ணி பாத்தேன். வெளி உலகத்தையும் கத்துக்கணும்னு ரூபாயக் கொடுத்து அனுப்பிட்டாங்க. நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்” என உள்நுழைந்து கொண்டே முடித்தாள்.
எட்டி யாரென பார்த்த ஆறெழிலும் “ஹேய்..லட்சு வரமுடியாதுன்ன, இப்ப கலக்கலா ரெடியாகி வந்திருக்க?” என வந்து கட்டிக்கொண்டாள்.
“எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் தான்”,
“அடுப்புல வச்சத்த அனைச்சியாடி?” என ஜெயந்தி கேட்க,
“அச்ச்சோ இல்லம்மா” என அவள் அந்தப் பக்கம் ஓட,
“ஹாய் அண்ணா, அப்பவே வந்துட்டீங்களா?” என வந்து அவன் எதிரில் அமர.அடுத்த காலிங்பெல் நிலா, அமலா இருவரும் வந்தனர். அடுத்தடுத்த பத்து நிமிடத்தில் வைரம், தாணு, அகத்தியன், நாது, மூர்த்தி, என வரிசையாக வந்துவிட, 10 பேர் ஆர்ப்பாட்டத்தில் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த தெருவே கலகலப்பாக இருந்தது. எல்லோருக்கும் டீ, ஸ்னாக்ஸ் எடுத்து வந்து கொடுத்தார் ஜெயந்தி. எப்படி எடுக்கலாம்? என்ன க்ளாத் எடுக்கலாம் ௭ன ஜெயந்தியை படுத்தி எடுத்துவிட்டனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Jeyanthi pillaiga evvalo pakkuvama yosikkirangannu purinjiruppanga…but oru parent aa avanga yosainaiyum bayamum correct dhan..👍