Loading

“டாக்டர்… அந்தப் பொண்ணு ரொம்ப வீக்கா இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல செக்ஷுவலி அவங்கள அபியூஸ் பண்ணி இருக்காங்க.” என மருத்துவர் வந்து கூறவும் அதிர்ந்த துஷ்யந்த், “நீங்க முன்னாடி நடந்து இருக்குன்னு சொல்றீங்களா டாக்டர்?” எனக் கேட்டான் சந்தேகமாக.

“நோ டாக்டர்… இது ரீசன்ட்டா நடந்தது. இன்னும் சொல்லப் போனால் ஃபியு அவர்ஸ் பிஃபோர்.” என மருத்துவர் உறுதியாகக் கூறவும் கோபத்தில் துஷ்யந்தின் கண்கள் சிவந்தன.

“உண்மைய சொல்லணும்னா அந்தப் பொண்ணு இவ்வளவையும் தாங்கிட்டு உயிரோடு இருக்குறதே பெரிய விஷயம் தான்.” என்ற சகுந்தலாவைப் பரிசோதித்த மருத்துவர் மேலும் ஏதேதோ விபரித்தார்.

துஷ்யந்திற்கோ ஆத்திரம் கண்ணை மறைக்க, நேராக ரிஷிகேஷைத் தேடிச் சென்று அவனின் சட்டையைப் பற்றினான் ஆவேசமாக.

துஷ்யந்தின் செயலில் அதிர்ந்த ரிஷிகேஷ், “என்ன பண்ணுறீங்க டாக்டர்? மரியாதையா கைய எடுங்க.” எனக் கேட்டான் கோபமாக.

சுற்றி நின்றவர்கள் கூட முதல் தடவை துஷ்யந்தை இப்படி ஒரு கோணத்தில் காண்கின்றனர்.

எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பவனின் முகமோ இரத்தமென சிவந்து இறுகிப் போய் இருந்தது.

“உனக்கு எல்லாம் என்னடா மரியாதை ###########? முதல் தடவை நீ என் கண்ணுல பட்டப்போவே உன்ன வெட்டிப் போட்டு இருக்கணும். உன்ன சும்மா விட்டதால தானே திரும்ப இப்படி எல்லாம் பண்ணுற.” என்ற துஷ்யந்த் ரிஷிகேஷ் எதிர்ப்பார்க்காத நேரம் அவனின் முகத்தில் ஓங்கி அறைந்தான்.

ரிஷிகேஷ் பதிலுக்குத் தாக்க முயல, துஷ்யந்த் இவ்வளவு நாளும் அடக்கி வைத்து இருந்த ஆத்திரம் எல்லாவற்றையும் சேர்த்து ரிஷிகேஷைக் கீழே புரட்டிக் கொண்டு அடித்துத் துவைத்தான்.

துஷ்யந்தின் ருத்ர தாண்டவத்தின் முன் ரிஷிகேஷால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ரிஷிகேஷின் நல்ல நேரமோ என்னவோ சரியாக அந் நேரம் அங்கு வந்து சேர்ந்தார் சந்திரசேகரன்.

“துஷ்யந்த்… என்ன பண்ணுற? விடு அவர…” எனக் கத்தியபடி சந்திரசேகரன் துஷ்யந்தை விலக்க முயன்றார்.

துஷ்யந்தோ யாரையும் கண்டு கொள்ளாது ரிஷிகேஷை அடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

சந்திரசேகரன் எவ்வளவோ முயற்சித்தும் ரிஷிகேஷை விடாதவன், “பரத் பார்த்துட்டு இருக்கான் துஷ்யந்த். விடு முதல்ல…” எனச் சந்திரசேகரன் கூறவும் பட்டென ரிஷிகேஷை விட்டு விட்டு எழுந்து சுற்றியும் பார்த்தான்.

அதற்குள் ரிஷிகேஷ் அரை மயக்கத்திற்கே சென்று இருந்தான்.

பரத்தோ ஒரு மூலையில் நின்று பயத்தில் முகம் வெளுக்க, உதடுகள் அழுகையில் துடிக்க நின்று இருந்தான்.

பரத்தை அந் நிலையில் காணவும் துஷ்யந்திற்கு தன் மீதே கோபம் வந்தது.

அவசரமாக பரத்தை நோக்கி நடக்க, சிறுவனோ மறுப்பாகத் தலை அசைத்து விட்டு அங்கிருந்து ஓடினான்.

தன்னைக் கண்டு பரத் பயப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட துஷ்யந்த் அங்கிருந்த தாதி ஒருவருக்கு கண்ணைக் காட்ட, பரத்தைத் தொடர்ந்து சென்றார் அந்தத் தாதி.

துஷ்யந்திற்கோ இன்னுமே கோபம் அடங்க மறுத்தது.

தன் முடியை அழுத்தமாகப் பற்றியவன் கீழே விழுந்து கிடந்த ரிஷிகேஷை வெறித்துப் பார்த்தான்.

“என்ன பழக்கம் இது துஷ்யந்த்? இதைத் தான் நாங்க உனக்கு சொல்லித் தந்தோமா?” எனக் கேட்டார் சந்திரசேகரன் கோபமாக.

“அப்பா இந்த நாய் என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியாது.” எனக் கூறிய துஷ்யந்திடம், “அதுக்காக மேல கை வைப்பியா நீ? டாக்டர் தானே நீ. ஒரு உயிரோட மதிப்பு உனக்கு தெரியாதா?” எனக் கேட்ட சந்திரசேகரனுக்கு துஷ்யந்த் இவ்வாறு நடந்து கொண்டதன் பின்னால் ஏதாவது தகுந்த காரணம் இருக்கும் எனப் புரிந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து இப்படி அவன் நடந்து கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அப்பா… ஏன் புரிஞ்சிக்காம பேசுறீங்க? உயிரோட மதிப்பு தெரிஞ்சதனால தான் இவனைப் போட்டு வெளுத்தேன். இந்த மிருகம் உயிரோட இருந்தா பல பேரோட உயிர எடுத்துட்டு தான் நிற்பான்.” என்றான் துஷ்யந்த் கோபமாக.

“அது என்னவா வேணா இருக்கட்டும். அவன் தப்பு பண்ணா அவன தண்டிக்க போலீஸும் சட்டமும் இருக்கு.” என அதட்டினார் சந்திரசேகரன்.

“நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க ப்பா. ஆனா இன்னும் ஒரு நிமிஷம் கூட இவன் என் கண்ணு முன்னால நின்னா உங்க பையன நீங்க கொலைகாரனா தான் பார்க்க வேண்டி வரும்.” என ஆவேசமாகக் கூறிய துஷ்யந்த் சகுந்தலாவை அனுமதித்து இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

துஷ்யந்தின் பேச்சில் ஏகத்துக்கும் அதிர்ந்து நின்றிருந்தார் சந்திரசேகரன்.

இதுநாள் வரையிலும் துஷ்யந்த் எக் காரணத்தைக் கொண்டும் தன் பெற்றோரின் பேச்சைத் தட்டியதும் இல்லை, அதனை எதிர்த்துப் பேசியதும் இல்லை.

ஆனால் துஷ்யந்தின் இன்றைய அவதாரம் அவருக்கும் புதிது.

ஆனால் துஷ்யந்தின் இன்றைய நடவடிக்கை அவன் சொன்னதை செய்து விடுவான் என்பதை அவருக்கு எடுத்து உரைக்க, உடனே ரிஷிகேஷை அங்கிருந்து அகற்றும் வேலையில் இறங்கினார்.

ஒரு மருத்துவராகத் தன் கடமையை நிறைவேற்ற ரிஷிகேஷின் காயங்களுக்கு பெயருக்கு சிகிச்சை அளித்தவர் துஷ்யந்த் சொன்னது நினைவு வந்து ரிஷிகேஷைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அங்கிருந்து விரட்டினார்.

மருத்துவமனையை விட்டு வெளியேறிய ரிஷிகேஷோ அம் மருத்துவமனையை வன்மத்துடன் வெறித்தான்.

பழி வெறி அவனின் ரத்த நாளங்களில் எல்லாம் பாய்ந்து ஓடியது.

அது யாரில் போய் வினையாக முடியுமோ கடவள் மட்டுமே அறிவான்.

சகுந்தலாவைப் பரிசோதித்த மருத்துவர் சந்திரசேகரனிடமும் நடந்ததைக் கூறி இருந்தார்.

துஷ்யந்தின் கோபத்தின் காரணமும் அவருக்குப் புரிந்தது.

அதனாலேயே துஷ்யந்தின் அன்றையை நடவடிக்கையை மன்னித்து விட்டார் அவர்.

சகுந்தலாவை அனுமதித்து இருந்த அறைக்குள் நுழைந்த துஷ்யந்தோ வாடிய கொடியாய் படுத்துக் கிடந்தவளின் அருகே இருக்கையைப் போட்டு அமர்ந்து அவளின் முகத்தையே வெறித்தான்.

அப்போது தான் அவளின் முகமும் லேசாகக் கன்றிச் சிவந்து இருந்ததை அவதானித்தான்.

சகுந்தலா மீது இருந்த கோபத்தில் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த தன் மீதே அவனுக்குக் கோபமாக வந்தது.

அதே நேரம் பரத்தைக் கவனிக்கச் சென்ற தாதி வந்து துஷ்யந்தை அழைக்க, உடனே கிளம்பிப் போனான்.

துஷ்யந்தின் அறையில் ஒரு மூலையில் கால்களில் முகம் புதைத்தவாறு கீழே அமர்ந்து இருந்தான் பரத்.

அவனுக்கு எதிரே மண்டியிட்டு அமர்ந்த துஷ்யந்த் பரத்தின் தலையில் கை வைக்க, மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்த பரத்தோ துஷ்யந்தைக் கண்டதும் சட்டெனப் பாய்ந்து துஷ்யந்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

பரத் தன்னைக் கண்டு பயப்படுகிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த துஷ்யந்தோ பரத்தின் செய்கையில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

“சேம்ப் அங்கிள் கூட கோவமா இருக்கீங்கன்னு நினைச்சேன்.” என லேசாகக் கண்கள் கலங்க புன்னகையுடன் கூறிய துஷ்யந்திற்கு பதில் அளிக்காமல் தன் அணைப்பை இறுக்கினான் பரத்.

பரத்தின் முகத்தை நிமிர்த்து தன் முகம் பார்க்க வைத்த துஷ்யந்த், “என்னாச்சு சேம்ப்? அங்கிள் கூட கோவமா? இல்லன்னா எங்கயாவது வலிக்குதா?” எனக் கேட்டான்.

உடனே மறுப்பாகத் தலையசைத்த சிறுவனோ, “மம்மிக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல.” என்றான் கண்கள் கலங்க.

பரத்தின் கேள்வியில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் துஷ்யந்த்.

“என்ன சேம்ப் சொல்றீங்க?” எனக் கேட்டான் துஷ்யந்த் குழப்பமாக.

“அந்த டாக்டர் ஆன்ட்டி சொன்னத பரத் கேட்டேன்.” என பரத் கூறவும் சிறு பிள்ளையையை அங்கு வைத்துக் கொண்டு சகுந்தலாவைப் பற்றிப் பேசிய தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் துஷ்யந்த்.

“பரத்தோட மம்மிக்கு ஒன்னும் இல்லடா. இன்னும் கொஞ்சம் நேரத்துல நாம போய் பார்க்கலாம்.” என்றான் துஷ்யந்த் பரத்தை சமாதானப்படுத்தும் விதமாக.

“சூப்பர் ஹீரோஸ் பேட் பர்சன்ஸ தானே அட்டாக் பண்ணுவாங்க. சாக்லேட் அங்கிள் சூப்பர் ஹீரோ. அப்போ பரத்தோட டேடி பேட் பாயா? அந்த டாக்டர் ஆன்ட்டி கூட சொன்னாங்களே.” என்றவாறு துஷ்யந்தின் முகம் பார்த்தான் பரத்.

துஷ்யந்தோ பரத்தின் கேள்விக்குப் பதில் அளிக்காது மறு நொடியே அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

இந்த சிறு வயதில் எவ்வளவு எல்லாம் யோசிக்கிறான் இப் பாலகன்.

பெரியவர்கள் செய்யும் தவறில் அநியாயமாக தண்டனையை அனுபவிப்பது என்னவோ ஏதும் அறியாத இக் குழந்தைகள் தான்.

“என் சேம்ப் குட் போய் தானே. எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது நீங்க. இந்த சாக்லேட் அங்கிள் எப்பவும் சேம்ப்புக்காக இருப்பேன். சேம்ப் கூப்பிட்டா எங்க இருந்தாலும் ஓடி வருவேன்.” என்றான் துஷ்யந்த்.

“அப்போ பரத் என்ன சொன்னாலும் செய்வீங்களா?” எனக் கேட்டான் பரத்.

“என்ன கேட்டாலும்…” என்ற துஷ்யந்திடம், “ப்ராமிஸ்?” எனக் கேட்டு தன் பிஞ்சுக் கரத்தை நீட்டினான் பரத்.

உடனே அதனை அழுத்தமாகப் பற்றிக் கொண்ட துஷ்யந்த், “ப்ராமிஸ்… என் சேம்ப் என்ன சொன்னாலும் செய்வேன்.” என வாக்குக் கொடுத்தவன் ஆசை தீர பரத்தின் முகம் எங்கும் முத்தமிட்டான்.

சற்று நேரத்தில் கண் விழித்த சகுந்தலா கண்டது என்னவோ அவள் அருகில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்த துஷ்யந்தைத் தான்.

“பரத்?” எனக் கேட்டவாறு சகுந்தலா கஷ்டப்பட்டு எழுந்து அமர, அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிலைக் காட்டினான் துஷ்யந்த்.

பரத்தோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அதன் பின் தான் சகுந்தலாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

“நான் உனக்கு அவ்வளவு வேண்டாதவனா போய்ட்டேனா சகுந்தலா?” எனக் கேட்டான் துஷ்யந்த் வருத்தமாக.

சகுந்தலாவோ அவனின் கேள்விக்கு பதில் அளிக்காது தலை குனிந்து அமர, “எதைக் கேட்டாலும் உடனே அப்பாவி மாதிரி தலைய தொங்கப் போட்டுக்க. அந்த அயோக்கியன் உனக்கு இவ்வளவு பெரிய அநியாயத்த பண்ணி இருக்கான். உனக்கு கொஞ்சமாச்சும் என் கிட்ட சொல்லணும்னு தோணலயா?” எனக் கேட்டான் துஷ்யந்த் கோபமாக.

“எ…என்ன அநியாயம்? எதை சொல்றீங்க?” எனக் கேட்ட சகுந்தலாவின் முகமோ பயத்தை அப்பட்டமாக வெளிக் காட்டின.

அதனை உடனே கண்டு கொண்ட துஷ்யந்திற்கு அதன் காரணம் தான் புரியவில்லை.

சகுந்தலாவிடம் கேட்டாலும் நிச்சயம் சரியான பதில் வரப் போவதில்லை என்பதால் அமைதி காத்தான்.

சாறு நேரம் அங்கு மௌனமே ஆட்சி செய்தது.

பின் துஷ்யந்தே அங்கு நடந்தவை அனைத்தையும் சகுந்தலாவிடம் கூற, அவளோ, “ஓஹ்…” என மட்டும் கூறி விட்டு அமைதி ஆகி விட்டாள்.

மருத்துவமனையில் இருந்து சென்ற ரிஷிகேஷ் அதன் பின் சகுந்தலாவையோ பரத்தையோ காண வரவேயில்லை.

ஆனால் அடிபட்ட பாம்பு பழி வாங்கத் துடித்துக் கொண்டு இருப்பதை அவர்கள் யாரும் அறியாமல் போய் விட்டனர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்