
மெல்லினம் 31
அடுத்த நாள் காலை அவன் தூங்கி எழும் நேரம், அவனின் வீட்டு ஆட்கள் வந்திருக்க அதன் பிறகு நேரம் பறந்தது கதிருக்கு.
அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியேற, சிறு வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருந்தவன், அந்த வாய்ப்பு கிடைத்ததும் நொடியும் தாமதியாது வெளியேறி இருந்தான்.
நேற்று போல் இன்றும், அவன் முல்லையை எதிர்பார்க்க, அவளும் வந்தாள், கூட அவளின் தந்தை உடன்.
அவள் செல்லும் இடம் எல்லாம், பிறர் கவனத்தை ஈர்க்காதா வகையில், அவளை பின்தொடர்ந்து கண்களால் சிறைப்பிடித்து கொண்டான் அவன்.
காதல் கொண்ட மனம், அவள் பின்னே அலைபாய ஆசை கொள்ள, மறுக்காது அதன் ஆசையினை நிறைவேற்றி வைத்தான் கதிர்.
மாலையில் கதிரின் குடும்பம் பொங்கல் வைக்க வர, சதீஷின் குடும்பமும் வந்திருந்தது.
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து கொண்டதால், சதீஷின் அப்பாவும், அம்மாவும் கதிரின் குடும்பத்துடன் சில மணி நேரம் பேசியவர்கள், பின் பொங்கல் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
கூட்டம் அதிகம் ஆனதால், கதிரின் குடும்பம் கொண்டு வந்த தொன்னைகள், பற்றாக்குறை ஆகிவிட, சற்றே சங்கடமாக உணர்ந்தனர்.
அவர்களின் சங்கடத்தை உணர்ந்து கொண்ட, சதீஷின் அப்பா தர்மதுரை,
“அட இதுக்கு ஏன் மச்சான் சங்கடபடுறீங்க. நம்ம வீட்டுல தொன்னை இன்னமும் கெடக்கு, இருங்க, சதீஷை போய் எடுத்துட்டு வர சொல்றேன். கிட்டத்தானா வீடு” என அவர் கூறி, சதீஷை அனுப்பி வைக்க துணைக்கு கதிரும் சென்றான்.
சதீஷ் உள்ளே பலசரக்கு பொருட்கள் வைத்திருந்த அறைக்கு செல்ல, ஹாலில் அமர்ந்து சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின், விழிகளில் அங்கே டேபிள் மீதிருந்த ராதை சிலையும் அதன் அருகே முல்லை வாங்கிய கீ-செயினும் விழ,
சதீஷ் வருகிறானா என பார்வையை சுழற்றியவன், மெல்ல எழுந்து அதன் அருகே சென்று அதனை பார்க்க, சிறு சிறு பொடி சிவப்பு மற்றும் வெண்கற்களால், அச்சிலை அலங்கரித்திருப்பதை கண்டவன், கையில் எடுத்து பார்க்க அடிப்பாகம் ஏதோ நெருடியதில், அச்சிலையை அவன் திருப்ப அங்கே “தேன் முல்லை” என்ற அவள் பெயர் மின்னி கொண்டிருந்தது.
இவையாவும், அவனின் ஹனிடாலின் கைவண்ணம் என்பதை உணர்ந்தவனுக்கு, அவள் ஞாபகமாய் அவள் பெயர் பதித்த அச்சிலையை அவனுடன் எடுத்து கொள்ள மனம் பரபரக்க, திருட்டு என்று தெரிந்தே அச்சிலையையும், கீ-செயினையும் அவன் எடுத்த வேளை, சதீஷ் வந்துவிட வேகமாக தனது பாக்கெட்டுக்குள் அடக்கியவன் சற்று தள்ளி சென்று நின்று கொண்டான்.
எங்கே சதீஷ் எதையும் கண்டுபிடித்து கேட்டுவிடுவானோ? என்ற பயமும் இருக்க ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை. இருவரும் கோவிலுக்கு திரும்பினர்.
பொங்கல் வைத்து முடியும் வரையிலும், கதிரின் பார்வை முல்லையை வட்டமடித்து கொண்டே தான் இருந்தது. ஆனால் அவளோ இவனை ஒருதரம் கூட எதோர்ச்சையாக கூட பார்க்கவில்லை.
இருந்தும் கதிர் அவளை முழுதாக தனக்குள் வரித்து கொண்டான்.
***********************************
கண்ணிமைக்கும் நேரத்தில் நான்கு நாட்களும் ஓடிவிட, இன்று கடைசி திருவிழா. கதிர் முகத்தில் சுரேத்தே இல்லாமல் சுற்றி கொண்டிருக்கிறான்.
இன்று இரவே ஊருக்கு கிளம்புகின்றனர். இனி அவளை காண முடியாது, என நினைக்கும் போதே அவனிற்கு தொண்டை அடைத்தது.
சற்றே பெரிய பெண்ணாக அவள் இருந்திருந்தால், நிச்சயம் தன் காதலை சிறு கோடிட்டாவது காட்டி இருப்பான். ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. அடுத்து இனி அவளை எப்போது காண்பானோ??
அதுவரையிலும் அவன் காதல் கொண்ட மனதை அடக்கி வைத்திருக்க வேண்டும்.
தம்பியின் முகவாட்டத்தை கண்டு கொண்ட ராகேஷ் “என்னடா, ஏன் ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு??” என்,
“ம்ம்.. ம்ம், இல்லண்ணா இன்னைக்கு ஊருக்கு கிளம்பிடுவோம்ல அதான்” என அவன் பொய் கூறி சமாளிக்க,
ஆனால் ராகேஷ் நம்பவில்லை. எப்போதும் இது போல் வந்து செல்வது இயல்பு தானே, அப்போதெல்லாம் கதிர் வாடி அவன் கண்டது இல்லையே. ஏதோ இருக்கிறது என அண்ணனின் மனம் கணித்து கொண்டது.
வீட்டினரிடம் சொல்லி கொண்டு அவன் கோவிலுக்கு கிளம்ப, அவனின் வாடிய முகத்தை கொண்டவர்களும் எதுவும் பேசாமல் அனுப்பி வைத்தனர்.
நண்பர்கள் இருக்கும் இடம் தேடி வந்தவன், அவர்களுடன் கலந்து கொண்டாலும் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.
கடைசி நாள் ஆதலால், ஆட்டம் கலைகட்ட கோவிலின் முன் இளைஞர்கள் தங்களது ஆட்ட திறமையை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.
கதிரின் நண்பர்களும் அதில் ஐக்கியமாகி விட ,கதிர் மற்றும் மறுத்து விட்டான். அவனிற்கு துணையாக விஷாலும் இருந்து விட்டான்.
“போதும் மச்சான், ரொம்ப சோக கீதம் வாசிக்காத! நீ ஊருக்கு போனாலும் என்னால முடிச்ச அளவு முல்லைய பத்தின அப்டேட்ட கொடுக்குறேன். அவ படிச்சு முடிச்சது தெரிஞ்சா அடுத்த நிமிஷமே சொல்லுறேன். வந்து உங்கப்பாவோட பொண்ணு கேளு” என கதிரின் சோகத்தை தாள முடியாது விஷால் கூற,
அதிர்ந்து விட்ட கதிர், அவனை பார்க்க குறும்பு சிரிப்புடன் கண்ணடித்தான் விஷால்.
“டேய், உனக்கு??” என் கதிர் நிறுத்த,
“பாம்பின் கால் பாம்பறியும்டா கதிரு. இந்த அஞ்சு நாளும், உன் கண்ணு ரெண்டும் அந்த பிள்ளை பின்னாடியே தான்டா போச்சு. அதுக்கு கூட புரிஞ்சுக்க முடியாதா என்னால?? அப்பறம் நீ எனக்கு சொன்ன அறிவுரையை உனக்கும் சேர்த்து தான சொல்லிகிட்ட, உன்னை பத்தி முழுசா தெரிஞ்சவங்களுக்கு உன்னோட இந்த மாற்றத்தை ஈஸியாக கண்டுபிடிச்சுடலாம். அப்புடி உன்னோடு கண்ணாலயே அந்த புள்ளைய ரசிக்கிறியேடா” என விஷால் கூற,
வெட்கம் வந்து விட்டது கதிருக்கு. மெல்லிய புன்னகையை சிந்தியவன்,
“கேலி பண்ணதாடா” என்க,
“ச்சே…ச்சே உண்மைடா கேலி எல்லாம் இல்லை”
“ம்ம்ம் டா யாருக்கும் தெரிய வேணாம் டா, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவளை. ஆனா எனக்கு மொதல தெளிவாகனும். இது வெறும் அவளை பார்த்ததால வந்த ஈர்ப்பா? இல்லை உண்மையிலயே அவளை நான் விரும்புறேனான்னு தெரியணும். அதை தெரிஞ்சுகிட்டு தான் அவ கிட்ட வெளிப்படுத்துவேன்” என்க விஷாலும் அதை ஆமோதித்தான்.
இவர்கள் பேசி கொண்டிருந்த நேரம், சதீஷ் வந்து விட அவனின் முகமே ஒரு மாதிரி இருந்தது.
“என்னடா ஏன் மொகம் டல்லடிக்குது” என விஷால் கேட்க,
“ப்ச் ஏண்டா, வீட்ல முல்லை ஒரே அழுகை காலையில இருந்து” என,
பதறிப்போன கதிர் வாய் திறக்க முயல, அதற்குள் விஷால் கேட்டு விட்டான்,
“என்னாச்சு டா எதுக்கு அழுகை??”
“அவ டான்ஸ் ஆடுனதுக்கு ஒரு ராதை சிலை கொடுத்தாங்கள, அதை காணோம்டா. அதோட அவ ஆசையா வாங்குன கீ-செயினும் காணோம்டா. பாவம் டா மச்சான், முல்லை அந்த சிலை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, அதை கலர் கலர் ஸ்டோன் வச்சு, எல்லாம் அழகுப்படுத்தி அவ பேரையும் எழுதி வச்சிருந்தா அது தொலைச்சுருச்சுன்னு ஒரே அழுகை.
யாரு சமதானப்படுத்தியும் கேட்கலை, ஒரே அழுகை தான்” என அவன் கூற கதிர் திருட்டு முழி முழித்தான்.
அப்பொழுது அபிஷேகத்திற்கு பொது மக்களை வர சொல்லி விழா கமிட்டியிடம் இருந்து அறிவிப்பு வர, அனைவரும் வீடு நோக்கி சென்றனர்.
சதீஷ் கூறியதை கேட்டு கதிருக்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது. இப்போது அதை திருப்பியும் அவனால் கொடுக்க இயலாதே.
மாலையில் அனைவரும் ரெடியாகி அர்ச்சனை செய்ய கோவிலுக்கு செல்ல, கதிருக்கு அவன் வாங்கியிருந்த கண்ணன் சிலை ஞாபகம் வர, அதனை கையோடும் எடுத்து சென்றான்.
கோவில் வரிசையில் இவர்களுக்கு முன் சதீஷ் குடும்பத்தினர் நின்றிருந்தனர். சாமி அருகே செல்ல, செல்ல தள்ளு முள்ளு ஏற்பட, அதில் முல்லையும் மலரும் கதிருக்கு முன் வந்துவிட்டிருந்தனர்.
தீபாராதனை காட்டப்பட, கண்மூடி வேண்டிய முல்லையின் அடிவயிற்றில் “சுள்” என்ற வலி ஏற்பட, “ஸ்ஸ்ஸ்” என முகத்தை சுருக்கினாள் பெண்ணவள்.
அவளின் முகத்தையே உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தவனுக்கு, அவளின் முகசுழிப்பு கண்ணில் பட்டு விட்டது.
நேரம் ஆக, ஆக, வலி அதிகமாக கூட்டத்தில் அவளின் அன்னையை நோக்கி நகரவும் முடியாமல், பல்லை கடித்து வலியை அடக்கி கொண்டவளை கண்டவனிற்கு ஏதோ தவறாக பட,
ஏதோ ஒரு சிந்தனையில் அவளின் உடையினை அவன் கவனிக்க, அவள் அணிந்திருந்த வெள்ளை சுடிதாரில், மெல்ல மெல்ல சிகப்பு கறை ஏற ஆரம்பித்திருந்தது.
ஒரு நொடி திகைத்த கதிருக்கு விடயம் பிடிபட்டு விட, தன் அன்னையை அவன் அழைக்க முற்படுவதற்குள், அருகிலிருந்த வயதான பெண்மணி ஒருவர்,
“ஏய்…யாத்தே, என்னம்மா இது? ஏப்பா இது யாரு வீட்டு பிள்ளையா” என அவர் சத்தமிட்டதில், அனைவரின் பார்வையையும் இவள் புறம் திரும்ப, இந்நிலையில் மற்றவரின் பார்வை அவள் மேல் விழுவதை விரும்பாத கதிர், சட்டென அவளின் பின்புறத்தை முழுவதுமாக மறைத்தவாறு நின்று கொண்டான்.
முல்லைக்குமே விசயம் புரிந்து விட்டிருக்க, அவள் தாயை அழைப்பதற்குள் அந்த பெண்மணி கத்தி விட்டிருந்தார்.
என்னவோ என்று மங்கை கூட்டத்தை தள்ளி முல்லையின் அருகே வர பார்ததவர்க்கு மகிழ்ச்சியே!!
“ஏங்க, சீக்கிரம் இங்க வாங்க” என தனது கணவரை கத்தி அழைத்தவர், அவர் வந்ததும் அவருக்கு விபரத்தை தெரிவிக்க, உடனடியாக முல்லையை அங்கிருந்து கூட்டி கொண்டு சென்றனர்.
வலி உயிர் போக, தாயின் தோள்களில் கண்ணீருடன் அவள் சாய்ந்து நடக்க, சத்யமூர்த்தி அவர்களுக்கு முன்பாக சென்று கூட்டத்தினரை ஒதுங்க வைத்து வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார்.
அவளின் வலி நிறைந்த முகத்தை கண்ட கதிர், கூட்டத்தினை பயன்படுத்தி சட்டென அவளின் கையினை பிடித்து அதில் கண்ணன் சிலையினை வைத்தவன், “நீ ஆடுன டான்ஸ்க்கு என்னோட கிஃப்ட் இதை பிடிச்சுக்கோ முல்லை நல்லதே நடக்கும்” என அவள் கைகளில் திணிக்க,
வலியில் இருந்தவள் தன் கையில் கிடைத்த பொருளினை, இறுக பிடித்து கொண்டாள்.
அடுத்து ஒரு மணி நேரத்தில் தேன்முல்லையை ஊருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
பின் அர்ச்சனையை முடித்துவிட்டு கதிரின் குடும்பமும் கிளம்பி விட, ராதை சிலையையும், கீ-செயினையும் அவளின் நினைவுகளின் பொக்கிஷமாக எடுத்து கொண்டு மனதில் அவளை சுமந்து கொண்டு கதிர் ஊர் திரும்ப,
கதிரின் நினைவுபொருள் என அறியாது, அந்த கண்ணன் சிலையோடு ஊருக்கு புறப்பட்டு சென்றிருந்தாள் தேன் முல்லை
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
39
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடேங்கப்பா பயங்கரம். இந்த மாதிரி ஒரு காதலை நான் எங்கேயும் பார்த்ததில்லை. முல்லையோட ரியாக்ஷனை பார்த்தே ஆகணும்.