Loading

அன்று மாலை ரவுண்ட்ஸ் சென்று விட்டு வந்த துஷ்யந்தின் கைப்பேசி குறுந்தகவல் வந்ததாக விடாமல் ஒலி எழுப்பியது.

கைப்பேசியை எடுத்துப் பார்க்க, வாட்சப்பில் ஒரு புது எண்ணில் இருந்து நிமிடத்துக்கு ஒரு குறுந்தகவல் வந்து, பின் அனைத்தும் டிலீட் செய்யப்பட்டு இருந்தது.

துஷ்யந்த் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் அதே நம்பரில் இருந்து, ‘ஹாய்…’ என குறுந்தகவல் வரவும், ‘ஹாய்… ஹூ ஆர் யூ?’ எனப் பதில் அனுப்பினான் துஷ்யந்த்.

இது துஷ்யந்தின் தனிப்பட்ட எண் என்பதால் துஷ்யந்திற்கு மிக நெருக்கமானவர்களைத் தவிர வேறு யாரிடமும் இந்த எண் இல்லை.

அதனால் தான் ஒருவேளை தெரிந்தவர்களோ என எண்ணிப் பதில் அனுப்பினான்.

உடனே அவ் எண்ணில் இருந்து பதில் வந்தது.

‘ஐம் நிரஞ்சனா…’ என்ற குறுந்தகவலைப் பார்த்ததும் துஷ்யந்தின் நெற்றியில் புருவ முடிச்சுகள்.

முதலில் அவனுக்கு யார் என்று பிடிபடவில்லை.

அதன் பின் தான் அன்று பெண் பார்த்து விட்டு வந்ததில் இருந்தே அவனது தாய் வார்த்தைக்கு வார்த்தை நிரஞ்சனா நிரஞ்சனா என்று கூறியது நினைவில் வந்தது.

வருங்கால மனைவியின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்துக் கொள்ளாத தன் மடத்தனத்தை எண்ணி தலையிலேயே அடித்துக் கொண்டான் துஷ்யந்த்.

அப்போது சரியாக துஷ்யந்தின் மனசாட்சி அவனின் காலை வாரி விட்டது, ‘ஆமா அந்தப் பொண்ணு முகம் எல்லாம் அப்படியே டாக்டர் சாருக்கு ஞாபகம் இருக்கு பாரு…’ என்று.

நிஜமாகவே துஷ்யந்திற்கு நிரஞ்சனாவின் முகம் சட்டென நினைவில் வரவில்லை.

எப்படி வரும்? கண் மூடினாலே சகுந்தலாவின் முகம் தான் துஷ்யந்தின் மனக்கண்ணில் தோன்றி அவனைப் பார்த்துப் புன்னகைக்கும்.

தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவனோ சில நொடிகள் கழித்து, ‘ஹாய்…’ என மட்டும் பதில் அனுப்பினான்.

அந்த ஒரு சொல்லே மறு முனையில் இருந்த பெண்ணவளுக்கு பெரிதாக ஏதோ சாதித்து விட்ட திருப்தியைக் கொடுத்தது.

பரிமளம் துஷ்யந்தின் எண்ணைத் தந்து விட்டுச் சென்றதில் இருந்தே அவனுடன் பேசி விட பேதை உள்ளம் வெகுவாகத் துடித்தது.

துஷ்யந்தின் கைப்பேசி எண்ணைக் கொடுக்கும் போதே மகனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த பரிமளம் நிரஞ்சனாவிடம் தெளிவாக சொல்லி விட்டார் துஷ்யந்த் தானாக அவளுடன் பேச வாய்ப்பு கம்மி என்றும் அவனுக்கு கைப்பேசியைப் பார்க்கவே நேரம் இருக்காது என்றும்.

அதனாலேயே துஷ்யந்தாக பேசும் வரை காத்திருக்க முயலாத நிரஞ்சனா அன்று தானே அவனுக்கு வாட்சப்பில் ‘ஹாய்’ என ஒரு குறுந்தகவலைத் தட்டி விட்டாள்.

குறுந்தகவலை அனுப்பும் போது இருந்த தைரியம் அனுப்பிய பின் நிரஞ்சனாவுக்கு இல்லாது போக, எங்கே தானே குறுந்தகவல் அனுப்பினால் தன்னைப் பற்றித் தவறாக எண்ணி விடுவானோ எனப் பயந்து உடனே அக் குறுந்தகவலை அழித்து விட்டாள்.

மறு நொடியே நிரஞ்சனாவின் மனம் அவளை சமாதானம் செய்தது தான் பேசாவிட்டால் நிச்சயம் தன்னவனும் பேச மாட்டான் என்று.

உடனே மீண்டும் ‘ஹாய்’ என அனுப்பினாள்.

துஷ்யந்த் வேறு ஆன்லைனில் இல்லாது போகவும் மீண்டும் அதனை அழித்து விட்டாள்.

இப்படிப் பலமுறை ‘ஹாய்…’ என அனுப்புவதும் அதனை டிலீட் செய்வதுமாகவே இருந்தவள் மீண்டும் ஒரு முறை குறுந்தகவலை அனுப்ப, இம்முறை உடனே ப்ளூ டிக் காட்டியது துஷ்யந்த் குறுந்தகவலைப் பார்த்து விட்டான் என்று.

மறு நொடியே நிரஞ்சனாவின் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

‘தன் கைப்பேசி எண் தெரிந்திருக்குமோ? என்ன பதில் அனுப்புவான்? தன்னைத் தவறாக எண்ணி விடுவானோ?’ இப்படி துஷ்யந்தின் பதில் வரும் வரை பலவாறு எண்ணி விட்டாள் பெண்ணவள்.

துஷ்யந்த் அவளை யார் என்று கேட்கவும் ஒரு நொடி மனம் வாடினாலும் தன்னைப் போல அவன் என்ன வெட்டியாகவா வீட்டில் இருக்கிறான் என்று தன் பெயரை அனுப்பினாள்.

துஷ்யந்த் மீண்டும் பதில் அளிக்க எடுத்துக் கொண்ட சில நொடிகளில் எங்கே அவன் தன்னை மறந்து விட்டானோ என்று எண்ணியவளின் கண்கள் கண்ணீரை சிந்தத் தயாராகின.

ஆனால் தன்னை அவனுக்கு நினைவில் இருக்கிறது என்பது துஷ்ய்ந்த் மீண்டும் ‘ஹாய்’ என அனுப்பவும் புரிந்தது நிரஞ்சனாவிற்கு.

அதற்கே ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது அவளது முகத்தில்.

அதன் பின்னரே அடுத்த என்ன அனுப்புவது என யோசித்தவள், ‘என்ன பண்ணுறீங்க?’ எனக் கேட்டாள் அவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதை அறிந்து இருந்தும்.

சில நொடிகள் கழித்து, ‘எட் ஹாஸ்பிடல்’ எனப் பதில் வந்தது துஷ்யந்திடமிருந்து.

எல்லாப் பதில்களும் ஒற்றை வார்த்தையில் முடிந்து இருந்தன.

ஆனால் காதல் கொண்ட பெண் மனமோ அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

துஷ்யந்தோ கைப்பேசித் திரையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

ஒரு குறுந்தகவல் அனுப்பவே அவனின் உள்ளம் ஆழிக் கடலாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த லட்சணத்தில் திருமணம் என்று நினைக்கும் போதே எட்டிக் காயாய் கசந்தது.

மீண்டும் நிரஞ்சனாவிடம் இருந்து, ‘சாப்பிட்டீங்களா?’ என செய்தி வந்தது

இதழ் குவித்து பெருமூச்சை வெளியிட்ட துஷ்யந்தோ, ‘ம்ம்ம்…’ என மட்டும் பதில் அளித்து விட்டு கைப்பேசியை அணைத்து வைத்து விட்டான்.

கைப்பேசியை வைத்து விட்டு முகத்தை அழுத்தமாகத் தேய்த்து விட்டவனுக்கு எதிர்காலமே சூனியமாகத் தெரிந்தது.

எந்தப் பக்கம் செல்வது என்றே ஆண்மகன் அவனுக்குத் தெரியவில்லை.

அந்தளவுக்கு துஷ்யந்தைப் படுத்தி எடுத்தது சகுந்தலா மீதான காதல்.

வெகுநேரமாக துஷ்யந்தின் பதில் வராததால், ‘பிஸியா இருக்கீங்களா?’ எனச் செய்தி அனுப்பினாள் நிரஞ்சனா.

ஆனால் அவள் அனுப்பிய செய்திக்கு வெறும் ஒற்றை டிக் காட்டவும் ஒரு நொடி மனம் வாடினாலும் தன்னவன் பிஸியாக இருக்கிறான் போல எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் பாவை.

________________________________________________________________

“சேம்ப்… அங்கிள் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே. பரத் கம்ப்ளீட்டா ரெகவர் ஆகும் வரை ரொம்ப தூரம் எல்லாம் ட்ராவல் பண்ணக் கூடாது. ஆனா நீங்க ஆசைப்பட்டீங்கன்னு தான் அங்கிள் அங்க போக உங்களுக்கு பர்மிஷன் தந்து இருக்கேன். போற இடத்துல மம்மிய தொந்தரவு பண்ணக் கூடாது. மம்மி சொல்றத கேட்டு நடந்துக்கணும். பரத் இப்போ பிக் போய் தானே. சூப்பர் ஹீரோஸ் போல ப்ரேவ். சோ பரத் தான் மம்மியையும் பத்திரமா பார்த்துக்கணும். சேம்ப் போய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிட்டு வாங்க. நெக்ஸ்ட் டைம் அங்க போகும் போது கம்ப்ளீட்டா ரெகவர் ஆகி பரத்தோட ஃப்ரெண்ட்ஸ் போலவே ஸ்கூல் போகலாம். வெளிய விளையாடலாம். எல்லாம் செய்யலாம். ஓக்கேவா?” என பரத்தின் உயரத்திற்கு மண்டியிட்டுக் கேட்ட துஷ்யந்திடம் புன்னகையுடன் தலை அசைத்தான் பரத்.

“இந்த சாக்லேட்ஸ் எல்லாம் பரத்தோட ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணுங்க.” என்றவாறு துஷ்யந்த் தந்த பார்சலை வாங்கிக் கொண்ட சிறுவன், “தேங்க் யூ சாக்லேட் அங்கிள்.” என்றான் சத்தமாக.

சகுந்தலா அவர்கள் இருவரையும் புன்னகையுடன் வேடிக்கை பார்க்க, பரத்தின் தலையைக் கோதி விட்டு எழுந்த துஷ்யந்த், “நானும் கூடவே வந்து இருப்பேன் சகுந்தலா. பட் லாஸ்ட் மினிட்ல ஒரு இமர்ஜென்சி கேஸ். கண்டிப்பா நான் இருந்தாகணும். சமாளிச்சிப்பாய் தானே.” எனக் கேட்டான் வருத்தமாக.

“இட்ஸ் ஓக்கே துஷ்யந்த். ஐ கென் அன்டர்ஸ்டேன்ட். பரத் மட்டும் இல்லையே உங்க பேஷன்ட். உங்க பேஷன்ட்ஸ் எல்லாருக்குமே நீங்க தேவை. அதுவும் இல்லாம ஃப்ளைட்ல தானே போறோம். ஒரு பிரச்சினையும் இல்ல. முன்னாடி கூட நான் தனியா தானே பரத் கூட ட்ராவல் பண்ணுவேன். பரத்தோட ட்ரீட்மெண்ட்டுக்காகவே நிறைய இடங்களுக்கு தனியா ட்ராவல் பண்ணி இருக்கோம். சோ நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துப்பேன்.” என்றாள் சகுந்தலா புன்னகையுடன்.

ஆனால் துஷ்யந்தோ சகுந்தலா பின்பு கூறிய எதையும் காதில் வாங்காது அவள் முதலில் கூறிய, ‘பரத் மட்டும் இல்லையே உங்க பேஷன்ட்.’ என்பதையே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

‘அப்போ பரத்துக்கு நான் ஜஸ்ட் டாக்டர் மட்டும் தானா? சகுந்தலா அப்போ என்னை பரத்தோட டாக்டரா மட்டுமா பார்க்குறா?’ எனத் தன்னையே கேட்டுக் கொண்ட துஷ்யந்திற்கு பதில் தான் கிடைக்கவில்லை.

சகுந்தலா செல்ல வேண்டிய விமானத்திற்கான அழைப்பு வரவும் தன்னிலை மீண்ட துஷ்யந்த், “எனக்கு அடிக்கடி பரத்தை பத்தி அப்டேட் பண்ணிட்டே இரு. நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே. பரத்த ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண விட வேணாம். மெடிசின்ஸ் எல்லாம் மிஸ் ஆகாம ஃபாலோ பண்ணு‌. என்னன்னாலும் உடனே எனக்கு இன்ஃபோர்ம் பண்ணு. டேக் கேர். ஹேவ் அ சேஃப் ஃப்ளைட்.” என்றான் அவசரமாக.

சரி எனத் தலையசைத்த சகுந்தலா பரத்தை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, துஷ்யந்திற்கு கையை ஆட்டிக் காட்டியவாறே சென்றான் பரத்

அவர்கள் சென்று வெகுநேரம் கழித்தும் யாருமற்ற அப் பாதையையே வெறித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.

மனம் எல்லாம் வெறுமையாக இருந்தது.

ஏதோ ஒன்று தன் கையை விட்டு நழுவும் உணர்வு.

மறுநாள் நிரஞ்சனாவின் வீட்டில் இருந்து திருமணத்திற்கு நாள் குறிக்க வர இருந்தனர்.

ஆனால் இன்னுமே துஷ்யந்தின் மனம் ஒரு நிலையில் இல்லை.

அன்று பரிமளம் துஷ்யந்த் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதைப் பற்றி சகுந்தலாவிடம் கூறியதோடு சரி.

வேறு ஒன்றுமே அவளிடம் கூற சந்தர்ப்பம் அமையவில்லை.

பரிமளமும் திருமண வேலைகளில் பிஸியாகி விட, ஏனோதானோ என்று திருமணத்திற்கு சம்மதித்த துஷ்யந்தும் அந்தப் பேச்சை எடுக்கவில்லை.

சகுந்தலாவும் துஷ்யந்திடம் அவனின் திருமணம் பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை.

அதுவே துஷ்யந்திற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

சில நாட்களாகவே அவனுக்கு ஏனோ சகுந்தலா முன்பு இருந்ததைப் போல் அல்லாது தன்னை விலக்கி வைக்கும் உணர்வு.

ஆனால் அது தன் மன பிரம்மையாக இருக்குமோ என துஷ்யந்த் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அவனே திக்குத் தெரியாத காட்டில் தனியாக விட்டது போல தவித்துக் கொண்டிருக்கிறான்.

இதில் எங்கே அவன் மற்ற விடயங்களில் கவனத்தை செலுத்த?

ஆனால் துஷ்யந்த் அறியவில்லை நிஜமாகவே சகுந்தலா அவனைத் தம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டு இருக்கிறாள் என்று.

துஷ்யந்தை மீண்டும் சந்தித்ததில் இருந்தே சகுந்தலாவின் மனம் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த காதலை மீண்டும் வெளிக்கொணர முயற்சித்துக் கொண்டிருந்தது.

ஆனால் வாழ்வே வெறுத்துப் போய் மகன் மட்டுமே தன் உலகம் ஆகிப் போனவளுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தைத் தாங்கும் அளவுக்கு சக்தி இல்லை.

ஏற்கனவே எப்போது பரத்தின் இதய மாற்று அறுவை சிகிச்சை முடியும் எனக் காத்துக் கொண்டு இருக்கிறாள் இங்கிருந்து கிளம்பிச் சென்று விட.

இப்போது துஷ்யந்தின் திருமண விடயம் அறிந்த பின் அவளின் முடிவு மேலும் உறுதியானது.

பரத் ஏற்கனவே துஷ்யந்துடன் மிக நெருக்கமாகி விட்டான்.

இது மேலும் வளர்ந்தால் துஷ்யந்தின் பிரிவு பரத்தை மிக மோசமாகப் பாதித்து விடும் என்பதால் இயன்றளவு தானே பரத்தின் விடயங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டாள்.

இருந்தும் துஷ்யந்த் தானாகவே முன் வந்து உதவும் போது அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்