Loading

தனா ரூமுக்குள் சென்றவுடன் இளவரசி தனது மகனை முறைத்துவிட்டு, “நான் என்னடா  தப்பா கேட்டுட்டேன்? ஏன், இப்பவும் அதுதான் கேட்கிறேன். யாரையாச்சும் விரும்புறியா சொல்லு. இல்லன்னா, நம்ம தனாவைப் பேசி முடிக்கிறோம். இதுக்கு மேலயும் எங்களால பொறுத்து இருக்க முடியாது.”

 

“உங்க அம்மா இவ்ளோ வருத்தப்பட்டு தானே பேசிட்டு இருக்காங்க. கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் இருக்க சரோ” என்றார் பாக்கியம்.

 

“உன் கூட ஒன்னு மண்ணா சுத்திட்டு இருந்த ருத்ரனுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது தானே” என்றவுடன் தனது மச்சானை முறைத்துப் பார்த்தான்.

 

“உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது. இன்னும் என்ன டா உனக்கு? உன் தங்கச்சியையும் கட்டிக் கொடுத்தாச்சு. வீட்டோட மொத்த பொறுப்பையும் நீ தான் பாத்துட்டு இருக்க. இன்னும் உனக்கு என்ன பண்ணனும்?”

 

“இல்ல, ஆனா…”

 

“டேய், ஒன்னு உன் மனசுல யாராச்சும் இருந்தா சொல்லு. இல்லையா, வீட்ல பாக்குற பொண்ணக் கட்டிட்டுப் போ” என்றார் பாக்கியம்.

 

“இல்ல அத்தை, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்.”

 

“இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள்னு சொல்லிப் பாதி வயசாகிடுச்சு. நேரா அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கியோ?” என்ற உடன் ருத்ரன் சிரித்து விட்டான்.

 

சரவணன் தன் நண்பனைப் பார்த்து முறைத்துவிட்டு, “இல்ல அத்தை, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா, எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க” என்று வேறு எதுவும் பேசாமல் தன் தாயைக் கையோடு அழைத்துக் கொண்டு சென்றான்.

 

வீட்டிற்குச் சென்று கத்த ஆரம்பித்தான்.

 

“என்னம்மா நினைச்சுட்டு இருக்க? நீ மாட்டும் அங்க போயிட்டு, தனாவைப் பொண்ணு கேட்டுட்டு இருக்க”

 

“ஏண்டா, கேட்டா என்ன தப்பு? எனக்கு என் வீட்டுக்கு மருமகளா தனா வந்தா நல்லதுன்னு தோணுச்சு, ஆசையும் கூட” என்றார்.

 

“அவ வயசு என்ன? என் வயசு என்ன?”

 

“பெரிய வயசு டா… என்ன ரொம்ப வயசு? மிஞ்சிப் போனா ஒரு ஏழு எட்டு வருஷம் உன்னை விடச் சின்னவளா இருப்பாளா? இருந்துட்டுப் போகட்டும். உங்க அப்பாவுக்கும், எனக்கும் 10, 15 வருஷம் வித்தியாசம் டா. ஏன், நாங்க ஒன்னு மண்ணா வாழலையா? வயசுலாம் பாத்து வாழ்க்கை வாழ முடியாது டா சரவணா”.

 

“அது உங்கக் காலம். இந்தக் காலத்தில் எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியுமா?”

 

“வேற என்ன தான்டா காரணம்? நான் இந்தக் கல்யாணப் பேச்சை எடுத்ததிலிருந்து மூஞ்சைத் தூக்கி வச்சுட்டுச் சுத்துற. உன் அப்பாவுக்கும் உனக்கும் வேற சாயங்காலம் பஞ்சாயத்து ஆயிடுச்சு. எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு சரவணா.

 

ஒன்னு யாராச்சும் விரும்புறேன் என்றால், அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு கட்டி வைக்கிறேன். இல்லையா, நாங்க பாக்குற பொண்ணைக் கட்டிட்டுப் போ… எனக்கும் சரி, உங்க அப்பாவுக்கும் சரி, தனாவை உனக்குக் கட்டி வைக்கணும்னு தான் ஆசை. இதுக்கு அப்புறம் முடிவு உன் கையில தான். இல்ல உன் சித்தப்பாவும், சித்தியும் வந்து பேசினா தான் ஒத்துக்குவனா சொல்லு. அவங்களையும் வர வைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்குள் வந்த தனம், “என்ன கா,  என்னப் பத்திப் பேச்சு அடி படுது” என்று கேட்டுக் கொண்டே வர,

 

“வா தனம், நானே உனக்கு போன் பண்ணனும் நினைச்சேன்.”

 

“என்னக்கா?” என்று கேட்க, நடந்த அனைத்தையும் சொல்ல,

 

“சரவணன் கிட்ட நான் பேசிக்கிறேன், நீங்க விடுங்க. மாமாகிட்ட நான் பேசுறேன் என்று சொல்லுங்க” என்றார்.

 

சரி என்று சரவணனைத் தனியாக அழைத்து, “என்ன டா நினைச்சுட்டு இருக்க? இந்த அளவுக்கு அம்மாவைப் புலம்ப வைக்கிற, நீதானே பார்த்துக்கணும்…”

 

“சித்தி நான் தான் பார்த்துக்கணும். ஆனா, இவங்க கை காமிக்கிற  பொண்ணை ஏத்துக்கணுமா?”

 

“சரவணா ஒரே ஒரு விஷயம் தான். நீ தான் முடிவு பண்ணனும். என்னன்னு சொல்லு மேற்கொண்டு முடிவு பண்ண…”

 

“சித்தி…” என்று விட்டுச் சில நொடிகள் தயங்கியவன் தன் மனதில் தனா இருப்பதும், அவளை எத்தனை வருடமாக விரும்புகிறேன் என்பதையும் சொல்ல,

 

சிரித்து விட்ட தனம், “இதுக்கு ஏன்டா தயங்குற? ஏன் நானும், உன் சித்தப்பாவும் வேணாம்னு சொல்வோம்னு நினைக்கறியா?”

 

“அப்படி இல்ல சித்தி, தனாவுக்கு வயசு என்ன? என் வயசு என்ன?”

 

“வயசு வித்தியாசத்தைப் பார்த்தாடா விரும்ப ஆரம்பிச்ச.”

 

“இல்ல தான் சித்தி. இருந்தாலும்…”

 

“நான் வீட்ல பாக்கியம் கிட்டயும், ருத்ரன் கிட்டயும் சித்தப்பா கிட்டயும் பேசிட்டு வரேன் டா. அவ கிட்ட நீ தாண்டா பேசணும். அவ தானே கட்டிக்கப் போறா… அவ கிட்டப் பேசாம மத்த மூணு பேர் கிட்டயும் பேசிட்டு, ஒரு நல்ல முடிவா சொல்றேன்” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுத் தனம் பாக்கியத்தைப் பார்க்கச் செல்ல,

 

பாக்கியம் நடந்ததைச் சொல்ல,

 

சிரித்த தனம், தனா என்று வேகமாக அழைக்க, ரூமில் இருந்து கண்கள் சிவக்க வந்து நின்றாள்.

 

அவளைப் பார்த்த உடனே தனத்திற்கு ஒன்று புரிய வர, “தனா மா, உனக்கு சரவணனைப் பேசலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன். நீ என்ன டா மா சொல்ற?” என்றார்.

 

“அவருக்கு தான் வேற ஏதோ ஒரு பொண்ணைப் புடிச்சிருக்கே அத்தை” என்று தன்னை மீறிச் சொல்லிவிட,

 

அவளைப் பார்த்துச் சிரித்து விட்டார்கள். தமிழ், ருத்ரன், தனம் மூவரும்.

 

பாக்கியம் ஒன்றும் புரியாமல் தன் மகளைப் பார்க்க,

 

“அப்படின்னு உனக்கு யார் சொன்னது, சரவணனா? இல்ல, அக்கா சொன்னாங்களா?”

 

“ரெண்டு பேரும் சொல்லல. அத்தை கேட்கக் கேட்க மாமா ஒரு வார்த்தை கூடச் சொல்லலையே அத்தை. என்னைக் கட்டிக் கொடுக்கணும்னு கேட்டுட்டு இருக்காங்க, அப்பக்கூட மாமா எதுவும் பேசாம அமைதியா தான இருந்தது.”

 

“அவன் அமைதியா இருக்கக் காரணம் உனக்கும், அவனுக்கும் வயசு வித்தியாசம் இருக்குன்னு.”

 

“என்ன அத்தை, ஒரு ஏழு எட்டு வருஷம் வித்தியாசம் இருக்குமா? ஏன், உனக்கும், மாமாவுக்கும்… பெரிய மாமாக்கும், அத்தைக்கும் கூட வயசு வித்தியாசம் நிறையவே இருக்கு தானே. நீங்க எல்லாம் சந்தோஷமா சண்டை சச்சரவு இல்லாம வாழ்ந்து காட்டலையா?” என்று சொல்ல,

 

தனது மகளைப் பார்த்த பாக்கியம் அவளது அருகில் வந்து, “தனா, உனக்கு சரோவைப் புடிச்சிருக்கா?” என்று கேட்க,

 

தன் தாயைக் கட்டிக்கொண்டு, “புடிச்சிருக்கு மா, எப்ப இருந்து எப்படி எல்லாம் தெரியாது. ஆனா, மாமா இங்க வந்து பேசின உடனே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு” என்று தன் ரூமுக்குச் சென்று விட்டாள்.

 

தன் மகளைப் பார்த்துவிட்டுத் தனது அண்ணியைப் பார்க்க,

 

“ஒன்னும் இல்ல பாக்கியம், விடு. நான் உங்க அண்ணன் கிட்டப் பேசுறேன். சரவணனுக்கு இவளைப் புடிச்சி இருக்குன்னு சொல்லிட்டான். மேற்கொண்டு என்ன பண்ணனுமோ, நாம பாக்கலாம். உனக்கு இதுல விருப்பமா? அதைச் சொல்லு” என்றார்.

 

“என்ன அண்ணி, என்னைக் கேட்டுகிட்டு… உங்களுக்கும், அண்ணனுக்கும்  விருப்பம்னா எனக்கு விருப்பம் தானே. ருத்ரா நீ ஏன்டா எதும் சொல்ல மாட்ற?”

 

“என் தங்கச்சியை என் மச்சானை விட வேற யாரால அத்தை நல்லாப் பார்த்துக்க முடியும்?” என்று சொல்லிப் பின் கட்டிற்குச் செல்ல,

 

தன் மகளைப் பார்க்க,

 

அவள் கண்ணை மூடித் திறந்தவுடன், “சரி நான் அப்பாகிட்டப் பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன் தமிழு. அப்புறம் இதைப் பற்றி மேற்கொண்டு பேசலாம். மாமாவும் அக்காவும் வேற சீக்கிரம் சரவணன் கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கிறாங்க” என்று விட்டுத் தங்கள் வீட்டிற்கு நடையைக் கட்டினார்.

 

தனம் வீட்டிற்குப் போகும் போதே காயு புலம்பிக் கொண்டே இரவு உணவு சமைத்துக் கொண்டு இருந்தாள்.

 

“எங்கம்மா போன நேரம் கெட்ட நேரத்துல. சமைக்கணும் என்ற எண்ணமே கிடையாது இல்ல.”

 

“ஒரு நாள் சமைக்கிறதுக்கு வலிக்குது உனக்கு?” என்று சொல்லிச் சிரித்துவிட்டு தனம் சமையலறைக்குள் போக,

 

“ஆமா நோவுது போ” என்று விட்டு “அப்பா தான் பசிக்குதுன்னு கேட்டாரு” என்றாள்.

 

“ஏன் மதியம் சாப்பாடு இருக்குமே” என்று விட்டுப் பார்க்க, “நான் சாயங்காலம் வந்து பசிக்குதுன்னு சாப்பிட்டேன். எங்க இருக்குது சோறு?” என்று சிரித்தாள்.

 

அவளைப் பார்த்துச் சிரித்த தனம், “சரிடி” என்று விட்டு, “என்ன செஞ்ச?”  என்றார்.

 

அவள் சோறு வடித்து அப்பளம் பொரித்து பொரியல் செய்திருக்க,

 

“பொரியல் இருக்கு அப்புறம் எதுக்குடி அப்பளம்?” என்றார்.

 

“ஏன் ஒரு நாள் அப்பளம் சாப்பிட்டா கொறஞ்சா போயிடுவ” என்று விட்டு சாப்பாடை எடுத்துக் கொண்டு சென்று ஹாலில் வைத்தாள்.

 

காலையில் செய்த குழம்பு இருக்க, செல்வம் எதுவும் சொல்லாமல் தன் மகள் செய்த சாப்பாட்டை, “பரவால்ல தனம், தமிழ் மாதிரியே நம்ப காயுவும் சீக்கிரம் சமைக்கக் கத்துக்கிட்டா”  என்றார்.

 

“அப்போ, நல்லவரா பார்த்துட வேண்டியது தான்” என்றார் சிரிப்புடன்.

 

அப்போது காயு, “பாக்குறது தான் பாக்கறீங்க, வீட்டோட மாப்பிள்ளையா  பாருங்க” என்றவுடன் செல்வம் இப்பொழுது சிரித்து விட்டார்.

 

“அப்போ கட்டிக்க நான் பெத்த கழுதைக்குச் சம்மதமா?” என்று கேட்க,

 

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்? நீ தான் சொன்ன, சமைக்கக் கத்துக்கிட்டு உடனே கட்டிக் கொடுக்கப் போறேனு, அதுக்கு தான் சொன்னேன. வீட்டோட மாப்பிள்ளையா பாரு, அப்படினு தான் சொன்னேன். உன் பொண்டாட்டி சமைச்சுப் போடுறது சாப்பிட்டுச் சாப்பிட்டு உன் நாக்கு செத்துப் போய் இருக்கும்”  என்று சொல்ல,

 

“அதான  பார்த்தேன். கல்யாண ஆசை என் பொண்ணுக்கு வந்திருச்சோ என்று நினைத்தேன்” என்று சிரித்தார்.

 

தனம் இப்பொழுது பேசி விடுவது நல்லது என்று யோசித்தவர்,

 

“ஏங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றார்.

 

“சொல்லு தனம், எங்க போயிட்டு வந்த இவ்வளவு நேரம்?”

 

“அக்காவைப் பார்க்க” என்றார்.

 

“அண்ணி என்ன சொன்னாங்க?” என்று கேட்டார்.

 

“ஒரே புலம்பல் தான், சரவணன் கல்யாணத்தப் பத்தி…”

 

“கல்யாணமா, அது சரி ஜாலி தான், ஒரே கொண்டாட்டம் தான். ஒரே கல்யாணமா வருது. எனக்கும் புதுப்புது டிரஸ்ஸா வருது” என்று சொல்லிக் காயு சிரிக்க,

 

“அடி கழுதை, கொஞ்ச நேரம் கம்முனு இருடி பேச விடு.”

 

“நீ பேசு தனம், நான் எங்க உன்னைத் தடுத்தேன்” என்று தன் தாயைப் பேர் சொல்லி அழைக்க,

 

“கழுதை, அமைதியாகவே இருக்க மாட்டியா?” என்றார்.

 

“பிள்ளையைக் கழுதை என்று சொல்லாத என்று எத்தனை டைம் சொல்லி இருக்கேன்” என்றார்.

 

“ஆமா உங்க மக பேசுறதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாது.

 

“சரி சரி, என் பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கோ. அண்ணனுக்கு ஏதோ கல்யாணம்னு சொன்னியே, பெரியம்மா ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே, அதைச் சொல்லு” என்றாள் காயு.

 

தன் மகளையும், தனது கணவனையும் ஒரு சில நொடி அமைதியாகப் பார்த்தார் தனம்.

 

“என்னமா என்ன பாக்குற” என்று கேட்டாள்.

 

“ஏன் தனம், என்ன விஷயம் சொல்லு” என்று செல்வம் கேட்க,

 

“அவன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கானாம்.”

 

“ஏன், என்று நான் தனியா போய் கேட்டதுக்கு, அவனுக்குத் தனாவைப் புடிச்சிருக்குன்னு சொல்றான்” என்றவுடன் அதிர்ச்சியாகிய காயத்ரி, “எது? தனாவைப் புடிச்சிருக்கா? எது நம்ம கீர்த்தனாவையா?” என்று கேட்க,

 

அவளது வாயில் ஒன்றைப் போட்டவர்,

 

“அதுக்கு ஏண்டி இப்படி வாயப் பொளக்குற? கீர்த்தனாவை தான் புடிச்சிருக்கு என்று சொன்னான்”.

 

“ஒரு வார்த்தை சொல்லலையே” என்றாள் காயு.

 

“யாருடி சொல்லல?” என்று தனம் கேட்க,

 

“அவளும் தான் சொல்லல” என்று சொல்ல,

 

“அவளுக்கும் தான் புடிச்சிருக்காம், ரெண்டு பேருமே விரும்புறாங்க. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர்  சொல்லிக் கொள்ளவில்லை” என்றார்.

செல்வம் தனது மனைவியை முறைத்துக் கொண்டு நின்றார்.

 

அதைப் பார்க்காத தனம் தன் மகளிடம் வாதாடிக் கொண்டு இருந்தார்.

 

“எப்போ என்ன பண்ணலாம் என்று நீங்க தான் சொல்லணும், அக்கா உங்க கிட்டப் பேசச் சொன்னாங்க. நான் உங்ககிட்டப் பேசிட்டு மாமாகிட்டப் பேசலாம்னு சொல்லி இருக்கேன்” என்றவுடன்,

 

“இது சரிப்பட்டு வராது” என்று விட்டு சாப்பிட்ட தட்டிலே பாதி சாப்பாட்டில் கை கழுவிக்கொண்டு எழுந்து விட்டார் செல்வம்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. யாருமே காதலை ஒழுங்கா சொல்லவே மாட்டிங்களா? செல்வம் அன்ன சொல்ல போறாரோ… வேணாம்னு சொல்றதுக்கு வேற‌ரீசன் எதாச்சும் இருக்குமோ?