
நிரஞ்சனாவின் வீட்டில் துஷ்யந்தின் குடும்பத்திற்கு கவனிப்பு தடபுடலாகக் காணப்பட்டது.
முரளியின் தம்பியின் குடும்பமும் தங்கையின் குடும்பமும் கூட அவ் வீட்டில் ஒன்றாகத் தான் இருக்கின்றனர்.
எனவே பெண் பார்க்கும் நிகழ்வே நிச்சயதார்த்தம் போல கலை கட்டியது.
“அக்கா… மாம்ஸ் ஃபோட்டோவ விட நேர்ல செம்ம ஹேன்ட்சமா இருக்கார் க்கா. அப்படியே கெத்தா ஹீரோ போல…” எனக் குதூகலித்த தங்கையைப் பார்த்த நிரஞ்சனாவுக்கும் தன் மணாளனைக் காண ஆர்வம் மேலோங்கியது.
கண்ணாடி முன் அமர்ந்து லேசாக டச்சப் செய்து கொண்டிருந்த நிரஞ்சனா அவசரமாக தங்கை காயத்ரியின் பக்கம் திரும்பி, “நிஜமாவா? நான் அவருக்கு மேட்ச் ஆவேனா? வெளிய என்ன நடக்குது? எனக்கு இப்போவே அவர பார்க்கணும் போல இருக்கே.” என்றாள் வெட்கத்துடன்.
அவளின் தோளில் பட்டென ஒரு அடியைப் போட்ட அவளின் அத்தை மகள் பூஜா, “கொஞ்சமாச்சும் கல்யாணம் பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுட்டு உட்கார் டி. இப்படி பறக்குற. எப்படியும் துஷ்யந்த் அண்ணன பார்க்க உன்ன கூப்பிடுவாங்க தானே. என்ன அவசரம்?” எனக் கிண்டல் செய்தவளுக்கும் நிரஞ்சனாவின் வயது தான்.
அசடு வழிய சிரித்தவளோ இப்போதே துஷ்யந்த் உடன் எதிர்காலக் கனவுகள் காண ஆரம்பித்து விட்டாள்.
வெளியே அமர்ந்திருந்த துஷ்யந்த் ஒட்டி வைத்த புன்னகையுடன் அமர்ந்து இருந்தான்.
‘மாப்பிள்ளை… மாப்பிள்ளை…’ என எல்லாப் பக்கம் இருந்தும் அவனுக்கு ராஜ மரியாதை தான்.
பரிமளமோ பழைய உறவுகளைப் புதுப்பிக்கும் வேலையில் இருக்க, துஷ்யந்த் தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத பாவனையில் காணப்பட்டான்.
எதற்கு வந்தோம் என்றே மறந்தது போலத் தான் அனைவரும் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்துக்கு மேல் துஷ்யந்தே கடுப்பாகி, “அம்மா… பொண்ண சீக்கிரம் வர சொல்லுங்க.” என்றான் எரிச்சலாக.
சட்டென அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.
அதன் பிறகு தான் பரிமளத்தின் காதில் முணுமுணுக்க இருந்தவன் இருந்த கடுப்பில் சத்தமாகவே கத்தி விட்டது துஷ்யந்திற்கு உரைத்தது.
பரிமளமும் சந்திரசேகரனும் மகனை அதிர்ச்சியாக நோக்க, நிரஞ்சனாவின் வீட்டுப் பெரியவர்களோ அதிக நேரம் காத்திருக்க வைத்து தங்கள் மாப்பிள்ளையை கோபப்படுத்தி விட்டோமோ என வருத்தமாகப் பார்த்தனர்.
இளம் பட்டாளத்தை சொல்லவும் வேண்டுமா?
துஷ்யந்தைப் பார்த்து அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, துஷ்யந்துக்கோ இப்படி அவமானப்பட்டு விட்டோமே என சங்கடமாகப் புன்னகைத்தான்.
நிரஞ்சனாவின் தங்கை காயத்ரிக்கு சாதாரணமாகவே வாய்த் துடுக்கு அதிகம்.
இப்போது துஷ்யந்தின் பேச்சில் உடனே தன் சீண்டலை ஆரம்பித்து விட்டாள்.
“என்ன மாம்ஸ்? அக்காவ பார்க்க அவ்வளவு அவசரம் போல.” எனக் கேட்டு காயத்ரி சிரிக்க, துஷ்யந்த் வேகமாகத் தலை ஆட்டினான் இல்லை என்று.
“அப்போ பொண்ண பார்க்க வேணாமா?” எனக் கேட்டாள் காயத்ரி மீண்டும்.
துஷ்யந்தின் மனமோ, ‘ஆளை விட்டா போதும்டா சாமி…’ எனக் கவுண்டர் கொடுக்க, ‘இதற்கு என பதில் சொல்ல?’ என்பது போல முகத்தை வைத்திருந்தான் துஷ்யந்த்.
காயத்ரி மீண்டும் அவனை சீண்டுவதற்கு வாயைத் திறக்க முயல, அவளின் கையைக் கிள்ளி விட்ட தாய் வேணி, “ஷ்ஷ்ஷ்… என்ன பழக்கம் காயு இது? மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவரைப் போய் சீண்டிட்டு இருக்க. நீ போய் உள்ள அக்கா கூட இரு.” என அதட்டினார்.
பதிலுக்கு தன் தாய்க்கு பழிப்பு காட்டி விட்டு நிரஞ்சனா இருந்த அறைக்குச் சென்றாள் காயத்ரி.
“மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. நீங்களும் மன்னிக்கணும் சம்பந்தி. சின்னவ எப்பவும் அப்படி தான். சரியான வாய்த் துடுக்கு. ஆனா பெரிய பொண்ணு அப்படி இல்ல. ரெண்டு பேருமே அப்படியே எதிரும் புதிருமா இருப்பாங்க.” என்றார் முரளி சங்கடமாக.
எங்கே இளைய மகளின் பேச்சைக் கேட்டு மாப்பிள்ளை மூத்த மகளையும் அப்படியே எடை போட்டு பெண்ணைப் பிடிக்காமல் போய் விடுமோ என்று அவருக்குப் பயம்.
“ச்சே ச்சே… எதுக்கு சம்பந்தி மன்னிப்பு எல்லாம்? வீட்டுல யாராச்சும் ஒருத்தர் உங்க சின்ன பொண்ண போலவும் இருக்கணும் சம்பந்தி. அப்போ தான் வீடு உயிரோட்டமா இருக்கும்.” என்ற சந்திரசேகரன், “எங்க வீட்டுல என் பொண்டாட்டிய போல.” என மனைவியைப் பார்த்துக் கண்டித்தார்.
அதில் கணவனை முறைக்க முயன்று தோற்ற பரிமளத்தின் முகத்திலும் புன்னகை.
இவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவரும் புன்னகைத்தனர்.
“சரி பையனே வாய திறந்து கேட்டுட்டான். அதனால நாம வந்த வேலையைப் பார்க்கலாம். என் மருமகள வர சொல்லுங்க அண்ணா.” எனப் பரிமளம் கூறவும் துஷ்யந்த் தன் தாயைப் பாவமாகப் பார்த்தான்.
ஆனால் அவர் கண்டு கொண்டால் தானே.
வேணி பூஜாவுக்குக் கண் காட்டவும் நிரஞ்சனாவை அழைத்து வரக் கிளம்பினாள் அவள்.
இங்கு அறைக்குள்ளோ தன் சகோதரியை வெட்கம் பிடுங்கித் திண்ணும் அளவுக்கு சீண்டிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“நீ பார்த்து இருக்கணுமே க்கா மாம்ஸோட மூஞ்ச. பார்க்கவே பாவமா இருந்துச்சு.” என காயத்ரி சிரிக்க, “சும்மா இரு டி. பாவம் மனுஷன்.” என்றாள் நிரஞ்சனா தன்னவனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு.
“பார்ரா… புருஷனுக்கு இப்போவே சப்போட்டா?” என காயத்ரி மீண்டும் சீண்ட, ‘புருஷன்’ என்ற வார்த்தையிலேயே நிரஞ்சனாவின் கற்பனைக் குதிரைகள் தறிகெட்டு ஓடின.
அதே நேரம் அங்கு வந்த பூஜா, “நிரு… பொண்ண அழைச்சிட்டு வர சொன்னாங்க.” என்கவும் நிரஞ்சனாவைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“ஹேய் எல்லாம் ஓக்கேயா டி? மேக்கப் ஓவரா இருக்கோ? ஜடை எல்லாம் லூஸாகிட்டு போல இருக்கு.” எனப் பதட்டத்தில் நிரஞ்சனா கண்ணாடியில் தன்னை ஒரு முறை மீண்டும் சரி பார்த்த வண்ணம் கேள்விகளை அடுக்கினாள்.
தலையில் கை வைத்த பூஜாவோ, “எல்லாம் சரியா தான் இருக்கு டி. மேக்கப்பே இல்லன்னா கூட நீ அழகி தான். அதுவும் இல்லாம அண்ணாவுக்கு உன் மேல ஓவர் லவ்ஸ் போல. உன்ன போலவே அவசரப்படுறார். விட்டா இன்னைக்கே பொண்ண தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவார் போல.” என அவள் பங்குக்கு சீண்டியவள் காயத்ரியுடன் ஹைஃபை அடித்துக் கொண்டாள்.
அதனைக் கேட்டு நிரஞ்சனாவின் முகம் செவ்வானமாய் சிவக்க, “பொண்ண கூட்டிட்டு வர சொன்னா மூணு பேரும் இன்னும் என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க?” என்ற வேணியின் குரலில் திரும்பினர்.
அழகே உருவமாய் நின்றிருந்த மகளைக் கண்டு வேணியின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தின.
உடனே நிரஞ்சனாவிற்கு நெற்றி வழித்து திருஷ்டி கழித்தார்.
பின் பூஜாவும் காயத்ரியும் சேர்ந்து நிரஞ்சனாவை ஹாலுக்கு அழைத்துச் செல்ல, அவளோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
வேணி அவளின் கையில் காஃபி ட்ரேயை வழங்கவும் அதனை வாங்கிக் கொண்டு ஒவ்வொருவருக்காய் காஃபியை நீட்டினாள் நிரஞ்சனா.
ஆனால் கீழ்க்கண்ணால் துஷ்யந்தைத் தேடியவளுக்கு ஷூ அணிந்து இருந்த அவனின் கால்கள் தான் தெரிந்தன.
காயத்ரி கிண்டல் செய்து விட்டு கிளம்பிய பின் கைப்பேசியை எடுத்து நோண்டுவது பாவ்லா செய்தவன் மீண்டும் தலையை நிமிர்த்தவே இல்லை.
அதனால் நிரஞ்சனாவை அழைத்து வந்ததை அவன் கவனிக்கவில்லை.
துஷ்யந்திற்கோ நேரம் செல்லச் செல்ல மூச்சு முட்டுவதைப் போல இருந்தது.
ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல் இதயம் படபடத்தது.
சகுந்தலாவுக்கு துரோகம் செய்கிறோமோ என ஒரு நொடி எண்ணியவனின் மனசாட்சி தான் துஷ்யந்தின் தலையில் தட்டி அவனை அடக்கியது.
உள்ளம் நிறைந்திருந்த காதலையே சகுந்தலாவிடம் வெளிப்படுத்தாத போது எங்கனம் அவளுக்கு துரோகம் செய்ய?
இருந்தும் துஷ்யந்தின் மனம் சமாதானப்பட மறுத்தது.
சரியாக அதே நேரம் பரிமளத்திற்கு காஃபியை கொடுத்து விட்டு நிரஞ்சனாவோ துஷ்யந்தின் முன் வந்து நின்று குனிந்தவாறு அவனுக்கு காஃபி ட்ரேயை நீட்டவும் துஷ்யந்த் சட்டென எழுந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது.
துஷ்யந்தின் கை பட்டு காஃபி ட்ரே தூரம் விழ, இதனை எதிர்ப்பார்க்காத நிரஞ்சனாவும் சமநிலை தவறி கீழே விழப் போனாள்.
அதன் பின்னரே துஷ்யந்தின் புலன்கள் விழித்துக்கொள்ள, சட்டென இடையால் அணைத்து நிரஞ்சனாவைக் கீழே விழாமல் பிடித்தான் துஷ்யந்த்.
துஷ்யந்தின் இழுப்பில் நிரஞ்சனா நேராக வந்து அவனின் மார்பில் மோதி நின்றாள்.
உள்ளம் கவர்ந்தவனின் திடீர் அணைப்பில் நிரஞ்சனாவின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
திடீரென எங்கிருந்தோ விசில் சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்த துஷ்யந்த், தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உணர்ந்து அவசரமாக நிரஞ்சனாவை விட்டு விலகி நின்றான்.
நிரஞ்சனாவின் முகம் மருதாணி போட்டது போல் சிவந்து விட்டது.
சில நொடிகளே என்றாலும் தன்னவனின் கரம் பட்ட இடை குறுகுறுத்தது.
விசில் அடித்து அவர்களைக் கலைத்த காயத்ரியோ இஞ்சி தின்ற குரங்கைப் போல் முகத்தை வைத்திருந்த துஷ்யந்தைப் பார்த்து, “இவ்வளவு அவசரமா மாமா? காலம் பூரா அக்கா மூஞ்ச தானே பார்த்து ரசிக்க போறீங்க. அதுக்கு கூட பொறுமை இல்லாம இப்படி வேகமா எழுந்து பார்க்கணுமா?” எனச் சீண்டினாள்.
“நான்… இல்ல அது வந்து…” என துஷ்யந்த் செய்வதறியாது திணற, இளம்பட்டாளமோ சிரித்து மான்றனர்.
இன்னுமே நின்று கொண்டிருந்தவனின் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட சந்திரசேகரனுக்கு மகனின் மனநிலை ஓரளவு புரிந்தது.
ஆனால் அவரும் என்ன தான் செய்ய?
தந்தை என்ற இடத்தில் இருந்து பார்க்கும் போது மகன் ஆசைப்படுவது எக் காலத்திலும் சாத்தியப்படாத ஒன்று.
அதனாலேயே வேறு வழியின்றி கையைக் வேடிக்கை மட்டும் பார்த்தார் அவர்.
“இங்க வந்து உட்கார் மா…” எனப் பரிமளம் நிரஞ்சனாவைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.
அவருக்குப் பெண்ணை நிரம்பவே பிடித்து விட்டது.
போதாக்குறைக்கு துஷ்யந்தின் தடுமாற்றம் கூட பெண்ணைப் பிடித்ததால் தான் என எண்ணிக் கொண்டது அத் தாயுள்ளம்.
“வேணி… நீ போய் வேற காஃபி போட்டு எடுத்து வா.” என மனைவியை அனுப்பி வைத்தார் முரளி.
பரிமளம் நிரஞ்சனாவிடம் பேசிக்கொண்டிருந்த இடைவெளியில் பூஜா அவசரமாக அவ் இடத்தை துப்பரவு செய்தாள்.
வேணியே காஃபியைக் கொண்டு வந்து துஷ்யந்துக்கு கொடுக்க, தலையை உயர்த்தாமலே அதனைப் பெற்றுக் கொண்டான் அவன்.
துஷ்யந்தால் யாரின் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.
“மாப்பிள்ளை பொண்ணு கூட தனியா பேசுறதுன்னா பேசிட்டு வாங்க. என்ன தான் ரெண்டு பேரும் ஃபோட்டோல ஒருத்தர ஒருத்தர் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னாலும் கொஞ்சம் மனசு விட்டுப் பேசினா ஒரு திருப்தி தானே.” என்றார் முரளியின் தம்பி.
ஏற்கனவே அங்கு அமர்ந்து இருக்கவே முடியாமல் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த துஷ்யந்த் எங்கே இதில் இருவரையும் தனியே வேறு அனுப்பி விடுவார்களோ என்ற பதட்டத்தில், “இல்ல வேணாம்.” என்றான் அவசரமாக.
அதனைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினர்.
நிரஞ்சனாவோ எங்கு துஷ்யந்திற்கு தன்னைப் பிடிக்கவில்லையோ என எண்ணி விட்டால் அழுது விடுவாள் போல நிலைக்குச் சென்றாள்.
அவளின் கண்ணெல்லாம் கலங்கி விட்டன.
அனைவரும் தன்னை அதிர்ச்சியுடன் நோக்கவும் தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்ட துஷ்யந்த், “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. அதான் ஆல்ரெடி சொல்லிட்டேனே எனக்கு பொண்ண பிடிச்சிருக்குன்னு.” என்கவும் தான் அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.
அதன் பின்னரே நிரஞ்சனாவின் முகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.
“எனக்கு அர்ஜென்ட்டா ஹாஸ்பிட்டல் போய் ஆகணும். யாரும் தப்பா நினைக்காதீங்க. நான் வரேன்.” என்ற துஷ்யந்த் தன் பெற்றோரிடம் கண்களாலேயே இறைஞ்சுதலாக அனுமதி கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
மகனின் சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்த பரிமளத்திற்கும் சந்திரசேகரனுக்கும் அதற்கு மேல் அவனைப் பிடித்து வைத்திருக்க மனம் வரவில்லை.
இவ்வளவு தூரம் அவன் வந்ததே பெரிது என அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் பாவம் நிரஞ்சனா தான் துஷ்யந்த் கிளம்பிச் செல்லும் போது தன்னை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க மாட்டானா என எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தது.

