Loading

அத்தியாயம் 119

     “என்னாச்சுங்க, எதுக்காக இப்படி கத்துனீங்க.” என்றபடி அவர்கள் அறையின் வாசலுக்கு வந்தாள் லீலா.

     “என்ன இதெல்லாம்.” என்று செல்வா அறைக்குள் கண்ணைக் காட்ட, வண்ண வண்ண வாசனை மெழுகுவர்த்திகள், பலூன்கள், ரோஜா இதழ்கள், நறுமண மலர்கள் என அவர்களுடைய அறையே சொர்க்கலோகம் போல் இருந்தது கண்டு லீலா வாயடைத்துப் போனாள்.

     “என்ன லீலா இதெல்லாம்.” கேட்டு முடிப்பதற்குள் வெட்கம் வந்து தொலைத்தது செல்வாவிற்கு.

     “சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க. இந்த ஏற்பாடு எதையும் நான் பண்ணல.” சொன்ன லீலாவிற்கும் வெட்கத்தின் சாயல்.

     “நீ இதை பண்ணிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா நம்ம ரூமுக்குள் யார் போனதுன்னு உனக்குத் தெரிந்திருக்கும் தானே.”

     “தெரியலையேங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  கோவிலுக்குப் போறதுக்காக ரெடியாக நம்ம ரூமுக்கு வந்தேன். அப்ப கூட ரூம் நார்மலா தான் இருந்துச்சு. நான் கோவிலுக்கு போயிட்டு வந்த இவ்வளவு கம்மியான நேரத்துக்குள்ள யாரு இப்படி பண்ணாங்கன்னு தெரியலையே.” தன்னைப் போல் சொன்ன லீலாவிற்கு தெய்வாவின் சங்கடமான முகமும், அவன் தன்னைப் பார்க்க முடியாமல் தடுமாறியதும் நினைவு வந்தது.

     அதன்பிறகே காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அதற்குண்டான புள்ளியில் சரியாக நிறுத்திப் பார்த்து புரிந்துகொண்டு, ஐயோ என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

     “லீலா என்னாச்சு எதுக்காக அமைதியாகிட்ட.” செல்வா அவள் அருகில் வர, “இது எல்லாம் உங்களோட தம்பிகளும், என்னோட தங்கச்சிங்களும் சேர்ந்து பார்த்த வேலை தான். எப்படியோ நம்மளோட விஷயம் அவங்களுக்குத் தெரிய வந்திருக்கு. நம்மகிட்ட கேட்கிறதுக்கு கூச்சப்பட்டு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காங்க.” என்றாள் வெட்கத்துடன்.

     “பாரேன் அந்தத் திருட்டு கொட்டுங்க என்ன வேலை எல்லாம் பார்த்து இருக்காங்கன்னு. சும்மா சொல்லக்கூடாது ரொம்ப அழகா டெக்கரேட் பண்ணி இருக்காங்க.” என்ற செல்வா, தன் சொந்த அறையை தாஜ்மஹாலைப் பார்ப்பது போல் ரசனையுடன் வேடிக்கை பார்த்தான்.

     அந்த அறை அது உருமாறிய காரணத்திற்கான வேலையை சிறப்பாகச் செய்தது. ஆளை மயக்க செய்யும் நறுமணம், மனதை மயக்க செய்யும் மனைவி என அனைத்தும் சேர்ந்து செல்வாவை ஒரேடியாக கிறங்கடித்தது.

     தனக்குள் உண்டான ரசனையுடன் செல்வா லீலாவைத் தேட அவளும் அவனுக்குக் குறையாத ரசனையுடன் அதிசயத்தைப் பார்ப்பது போல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     என்றும் இல்லாத அளவிற்கு லீலா இன்று அளவுக்கு அதிகமான அழகுடன் மிளிர்வதாகத் தோன்றியது அவனுக்கு. சேலை, அலங்காரம் என்று அனைத்தும் ருக்கு தேர்ந்தெடுத்தது என்பதை அவன் எப்படி அறிவான்.

     மெதுவாக ஆனால் அதே நேரத்தில் அழுத்தமாக காலடிகளை எடுத்து வைத்து லீலாவை நெருங்கினான் செல்வா. கணவன் வருகையை அவள் உணர்ந்த அந்த நேரத்தில் அவனுக்குள் இருந்த அதே தாக்கம் அவளுக்கும் உருவாகி இருந்தது.

     முதல் முறையாக எந்த விதமான குழப்பமும், தயக்கமும் இல்லாமல் செல்வா லீலாவை அணைக்க, அவளும் அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.

     எந்த விதமான பேச்சுக்கும், காத்திருப்பிற்கும், கேள்விக்கும், சம்மதத்திற்கும் அங்கே இடமில்லாமல் போயிற்று. கண்ணுக்குத் தெரியாத மாய வலையில் சிக்குண்ட இருவரும் மன்மதனின் அம்புக்கு விரும்பியே இலக்காகிப் போயினர்.

     அடுத்த நாள் காலை, முந்தைய நாள் வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பிக்கொண்டனர். காலை பத்து மணிக்குள் அனைவரும் திரும்பி இருக்க, செல்வா, லீலா இருவரும் அறையை விட்டு அதுவரைக்கும் வெளியே வந்திருக்கவில்லை.

     கேட்டில் இருந்து இன்னமும் எடுக்கப்படாத பேப்பர் மற்றும் பால் பாக்கெட், சுத்தம் செய்யப்படாத முற்றம், இரவு போடப்பட்ட இரவு விளக்குகள் இன்னமும் அணைக்கப்படாமல் இருப்பது, அலங்காரம் இல்லாத சுவாமி படங்கள் என அனைத்தும் வந்தவர்களுக்குப் பல கதைகள் சொல்லாமல் சொல்ல, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் அவரவர் அறைக்குள் சென்றனர்.

     நேரம், காலம் தெரியாமல் உறங்குகிறார்கள் என்று நினைத்தால் தம்பிகளும், தங்கைகளும் தங்களுக்குத் தனிமை கொடுக்கத் தானே வெளியே சென்றிருக்கிறார்கள். அவ்வளவு சீக்கிரம் திரும்ப வந்து தங்களைச் சங்கடப்படுத்த மாட்டார்கள் என்கிற குருட்டு நம்பிக்கையில் அறையினுள் பேசி, சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் கணவன், மனைவி இருவரும்.

     பெண்கள் மூவரும் சமைத்து முடித்து சாப்பிட உட்காரும் போதும் அவர்கள் அறைக்கதவு திறக்கப்படவில்லை. வடிவேலு நிலைமை புரிந்தவராக அவர்கள் வெளியே வந்து தன்னைக் கண்டால் மிகவும் சங்கோஜப்படுவார்கள் என்று அறைக்குள்ளேயே இருந்துவிட்டார். அவரைச் சாப்பிட வைக்கிறேன் என்று அரசுவும் அவரோடவே சென்று விட்டான்.

     “நேத்து இராத்திரியில் இருந்து சாப்பிடல. விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது. இப்ப போய் சமைச்சா தான் மதிய சாப்பாடாவது சாப்பிடுவீங்க.” கணவன் முந்தைய நாளே பசி என்று சொன்னதை நினைவு படுத்தி கேட்டாள் லீலா.

     “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ இப்படியே என் கூடவே என்னைக் கட்டி பிடிச்சுட்டு படுத்துக்கோ. எனக்குப் பசியே தெரியாது.” என்ற செல்வா சொன்னதைச் செய்யவும் செய்தான்.

     “சரி நான் சமைக்கல. ஆனா வீடு க்ளீன் பண்ணாம இருக்கு. நான் போய் கிளீன் பண்ணிட்டாவது வரேன். திடீர்னு வீட்டுக்கு யாராவது வந்தா இவ்வளவு நேரம் ஏன் எந்த வேலையும் செய்யலன்னு கேட்பாங்க.” சங்கோஜத்துடன் சொன்னாள் லீலா.

     “அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க. அவங்களுக்கு நாகரிகம் இருக்கு. நாம தானே முதலிரவு ஏற்பாடு பண்ணோம். நாமளே போய் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு நினைச்சு வராம இருந்திடுவாங்க.” செல்வா சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கீழே அவனுடைய தம்பிகள் அவனை பயங்கரமாகக் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

     “செல்வாவைப் போய் வெத்து வேட்டுன்னு சொன்னீங்களே பார்த்தல்ல.” என்றான் தெய்வா.

     “போற போக்கைப் பார்த்தா ரூமில் இருந்து வெளியே வந்த உடனே முதல் வேலையா பர்னிச்சர் ஷோ ரூமுக்கு தான் போவாங்க போல.” என்றான் நாகா.

     “டேய் நான் வேணும் னா சாப்பாடு கொண்டு போய் அவங்க ரூம் கதவுக்கு வெளியே வைச்சுட்டு ஓடி வந்திடட்டா. ஏன் சொல்றேன்னா சாப்பிடுறதுக்காக கூட வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது பாரு.” என்றான் தர்மா.

     அடுத்தவர்கள் அந்தரங்கம் பேசுவது தவறே. ஆனால் சில நேரம் இப்படி நடப்பதை யாராலும் தடுக்க முடியாது தான். தர்மா சொன்னதைக் கேட்டு மற்ற மூவரும் சிரிக்க, அந்த சிரிப்பு சத்தம் வீடு முழுவதும் எதிரொளிக்க, “என்னங்க ஏதோ சத்தம் கேட்கிது.” என்றாள் லீலா.

     “அது உன் பிரம்மை லீலா.” என்றுவிட்டு தன் நெஞ்சில் முகம் பதிய படுத்திருந்தவளின் கேசத்தை வருடிக் கொடுக்கும் அற்புதமான பணியை மிகவும் திறம்பட தொடர்ந்து கொண்டிருந்தான் செல்வா.

     குழந்தை தனக்கு பிடித்த பொம்மையை எப்பொழுதும் தன் அருகிலேயே வைத்திருக்க ஆசைப்படுவது போல,  தன்னுனைய கணவன் தன்னை அவனுடனே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறான் என்று நினைத்து சிரித்துக் கொண்டாள் லீலா.

     “ஹேய் ஒரு ப்ளே பண்ணுவோம். செல்வாவுக்கு போன் பண்ணி என்ன பண்றன்னு கேட்கலாமா?” தர்மா யோசனை சொன்னான்.

     “செம ஐடியா டா. இன்னைக்கு மாப்பிள்ளை செமையா மாட்டிக்குவான்.” என சிரிப்புடன் தன் போனை எடுத்து செல்வாவிற்கு போன் செய்தான் தெய்வா.

     “என்னங்க போன் அடிக்குது.” என்று அதை எடுத்துக்கொடுத்தாள் லீலா.

     கையில் வாங்கிய செல்வா அதில் தெய்வாவின் பெயரைப் பார்த்ததும், “என்னடா இவனுக்கு இன்னும் மூக்கு வேர்க்கலையேன்னு நினைச்சேன், வேர்த்திடுச்சு போல. போன் பண்ணிட்டான்.” என்று சொல்லிக்கொண்டே அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைத்தான்.

     “செல்வா எங்க இருக்க.” சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான் தெய்வா.

     “இது என்னடா பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கு. இந்த நேரத்துக்கு நான் எங்க இருக்கணுமோ அங்க தான் இருக்கேன்.” உண்மையைச் சொல்ல முடியாது என்பதால் அதற்கு ஏற்ப சூட்சுமமாகப் பதில் சொன்னான் செல்வா.

     “ஹாஸ்பிடலில் இருக்கியா அதானே பார்த்தேன். நாங்க வரும் போது வீடு இருந்த நிலைமையைப் பார்த்தா வீட்டில் ஆள் இருக்கிற மாதிரியே தெரியல. அதனால தான் சந்தேகப்பட்டு போன் பண்ணேன்.” இதை சிரிக்காமல் சொல்ல சிரமப்பட்டு போனான் தெய்வா.

     “என்னது நீ வீட்டுக்கு வந்துட்டியா?” என அடித்துப் பிடித்து எழுந்து மெத்தையில் அமர்ந்தான் செல்வா. அவனுடைய பதற்றம் அவன் அருகில் அமைதியாய் இருந்த லீலாவையும் இப்போது நன்றாகவே தொற்றிக்கொண்டது.

     “ஆமா நான் வந்துட்டேன். நான் மட்டும் இல்ல அப்பா, அரசு, தேவகி, தர்மா, ஊர்மி, நாகா எல்லோரும் வந்துட்டோம்.” என அசராமல் பிசராமல் தமையனின் தலையில் இடியை இறக்கினான்.

     “என்னது எல்லாரும் வந்துட்டீங்களா? ஏன் டா இவ்வளவு சீக்கிரமா எல்லாரும் வீட்டுக்கு வந்தீங்க?” பதற்றட்டத்தில் உளறினான் செல்வா.

     “என்னது சீக்கிரமாவா? மணியைப் பார்த்தியா காலை பதினோறு மணி. நீ ஹாஸ்பிடலில் இருக்க சரி, உன் பொண்டாட்டி எங்க போனாங்க. வீட்டில் அவங்களை ஆளையே காணோமே.” வேண்டுமென்றே கேட்டான் தெய்வா.

     “சூப்பர் சூப்பர் அப்படியே கண்டின்யூ பண்ணு. செல்வா இப்ப முழி பிதுங்கிப் போய் உட்கார்ந்து இருப்பான்.” தமையன் என்ன நிலையில் இருப்பான் என்பதைக் கற்பனை செய்து சிரித்தான் நாகா.

     “லீலா என் கூட தான் இருக்கா.” பதற்றத்தில் உண்மையைச் சொல்லிவிட்டான் செல்வா.

     “அவங்க எதுக்கு உன் கூட ஹாஸ்பிடல் வந்தாங்க. ஆமா ஏன் இரண்டு பேரும் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கீங்க. அவங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா என்ன?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான் தெய்வா.

     “டேய் கொஞ்ச நேரம் அமைதியா இருடா. நானும் அவளும் நம்ம வீட்டில் எங்க ரூமில் தான் இருக்கோம்.” செல்வா சொல்ல, லீலா அவனை தொடையில் கிள்ளி வைத்தாள்.

     அவன் வலியில் கத்த அங்கே என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது போல் இங்கே இவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டனர்.

     “என்னாச்சுடா எதுக்கு கத்தின எறும்பு ஏதாவது கடிச்சிருச்சா என்ன?” தெய்வா கேட்க, நாகா அடக்க மாட்டாமல் சிரித்தான்.

     “ஆமா ஆமா எறும்பு தான்.” என்று ஏதோதோ உளறிக் கொண்டிருந்தான் செல்வா.

     “சரி செல்வா நீ இரு. நான் உன் ரூமுக்கு வரேன். உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டியது இருக்கு.” அடுத்த இடியை இறக்க, “என்னது என் ரூமுக்கா. இல்ல இல்ல நீங்க இங்க எல்லாம் வராத.” பதறினான் செல்வா.

     “ஆமா நீ ஏன் இப்போ இவ்வளவு டென்ஷனா பேசுற.”

     “அப்படியெல்லாம் இல்ல. நீ இங்க எல்லாம் வராத. இரு நானே கீழ வரேன்.” என்றான் செல்வா.

     “டேய் அப்படியே கீழே வந்து அசிங்கப்படாத. முதல்ல போய் குளிச்சிட்டு வா.” தெய்வா சொல்ல, இதுவரை மிகவும் சிரமப்பட்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்த நாகா மற்றும் தர்மா இருவரும் தங்களையும் மீறி சிரித்துவிட, பப்பி ஷேமாகிப் போனது செல்வாவிற்கு.

     அழைப்பைத் துண்டித்து அலைபேசியை மெத்தையில் தூக்கிப் போட்டவன் பாவமாய் லீலாவைப் பார்த்தான்.

     “நான் காலையில் இருந்து எத்தனை தடவை கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். யாராவது வந்தா பிரச்சனை ஆகிடும் னு. இப்ப பாருங்க ஒட்டு மொத்த குடும்பமே வந்து கீழே வெயிட் பண்ணிட்டு இருக்கு. இந்த நேரம் பார்த்து நாம இரண்டு பேரும் போனா எவ்வளவு அசிங்கமா இருக்கும். மாமா வேற இருப்பாரு கடவுளே.” என்று செல்வாவைத் திட்டிவிட்டு அவன் மீதே சாய்ந்து கொண்டாள் லீலா.

     “எனக்கு மட்டும் என்ன தெரியும் இவங்க இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவாங்கன்னு.” என்றான் செல்வா.

     கீழே ஆண்கள் மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க, கணவனுக்குப் புத்தி பேதலித்துப் போனதோ என்ற சந்தேகம் வந்து விசாரித்தனர் மனைவியர். தாங்கள் செய்த அற்புதமான வேலையைப் பற்றி அவர்கள் விளக்கவும் பெண்களுக்கு கோவம் தான் வந்தது.

     “பைத்தியமா நீங்க. கிண்டல் கேலி பண்றதுக்கு எல்லாம் ஒரு அளவு இருக்கு. இப்ப அவங்க எப்படி நம்ம முகத்துல முழிப்பாங்க சொல்லுங்க.” பொங்கினாள் ஊர்மி.

     “ஹலோ நாங்க ஒன்னும் உங்க அக்காவைக் கிண்டல் பண்ணல. எங்க அண்ணனைக் கிண்டல் பண்ணோம். அவனைக் கிண்டல் பண்றதுக்கு முழு உரிமையும் எங்களுக்கு இருக்கு தெரியும் இல்ல.

     ஆமா இதுக்கே இவ்வளவு கோபப்படுறீங்களை அவன் கீழே வந்ததும் நாங்க வைச்சு செய்யப் போறோம். அப்ப எப்படி ரியாக்ட் பண்ணப் போறீங்க.” பதில் கொடுத்தான் நாகா.

     “அதுக்கு நாங்க விடணுமே.” என்று யோசித்த தேவகி, தன்னுடைய அக்காமார் இருவர் காதிலும் இகசியம் போல் ஏதோ சொல்ல அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

     “ரெடி, ஸ்டெடி, லெட் ஸ்டார்ட்.” என்றுவிட்டு பெண்கள் மூவரும் தங்களுடைய கணவன்மார்களை தரதரவென்று தங்களுடைய அறைக்கு இழுத்துச் சென்றனர். அவர்கள் எதிர்பாரா நேரம் நடந்த நிகழ்வில் ஆண்கள் சுதாரிக்கும் முன்னர் அறை வாசல் வரை இழுத்து வந்திருந்தனர் பெண்கள்.

     உள்ளே தள்ளி கதவை வெளியே பூட்டிவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இப்படியே உள்ள கிடங்க.” என்றுவிட்டு சென்றனர்.

     கணவன்களை சமாளித்து விட்டாயிற்று. இனிமேல் அக்காவையும், மாமாவையும் எப்படி அறையை விட்டு வெளியே கொண்டு வருவது என்று யோசித்தனர் பெண்கள் மூவரும்.

     “நீ போ, நீங்க போங்க, நீ போன்னு சொல்றேன் இல்ல.” என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டு கடைசியில் தேவகியே மேலே சென்றாள்.

     செல்வாவின் அறைக்கதவை தட்டி, “அக்கா” என்று மெதுவாக குரல் கொடுத்தாள்.

     லீலாவும் லேசான படபடப்புடன் தேவகி என்று பதில் குரல் கொடுக்க, “அக்கா அறிவுக்கு முகூர்த்த புடவை எடுக்கிறதுக்காக மாமா உங்களை சீக்கிரம் கிளம்பி வர சொன்னாரு.” மிக மென்மையாகச் சொன்னாள் தேவகி.

     “சரி தேவகி நான் சீக்கிரம் வந்திடுறேன்.” சமாளிப்பாய் சொன்னாள் லீலா.

     “அக்கா உங்க கொழுந்தனார் மூணு பேரையும் ரூமுக்குள்ள போட்டு பூட்டி வைச்சுட்டோம். அதனால் நீங்களும், மாமாவும் கூச்சப்படாம வெளியில் வாங்க.” என்று சொல்லி சிரித்து விட்டு அக்காமார்களிடம் ஓடி வந்தாள் தேவகி. உள்ளே லீலாவும் செல்வாவும் தலையில் அடித்துக் கொண்டனர்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நானும் சத்தமா சிரிச்சுட்டேன் சூப்பர்