41- நதியே தீராநதியே

Loading

மார்ச் எட்டு அன்றிரவு நடந்த சம்பவங்கள் தான் அனைவரின் வாழ்க்கையும் புரட்டி போட்டது. அந்த இரவு பொழுதில் அகிலன் அரங்கேற்றியிருந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அகரநதியும் கார்த்திக்கும் செல்லாமல் இருந்திருந்தால் எந்தப் பாதகமும் ஏற்பட்டிருக்காது, ஆனால் அகிலன் தான் அதியை அங்கு வர வைப்பதற்காகக் கௌதம் மூலம் ஸ்கெட்ச் போட்டிருந்தான், ஆனால் அங்கு அவன் எதிர்பாராமல் கார்த்தி வந்தது தான் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கியது..

 

ஆம் அன்று நடந்த சம்பவம் தான் கார்த்திக்கை சிறையில் அடைத்தது, அகரநதியோ சுயநினைவின்றிக் கோமாவுக்குச் சென்றாள்.

மார்ச் எட்டுக்கு முந்தைய நாள்

அலுவலகத்தின் வெளியே இருந்த டீக்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்றிருந்தவனின் கைகளில் தொலைப்பேசியில் மலர்விழியின் தாயின் தொலைப்பேசி எண்ணை தேடிக்கொண்டிருந்தான். சரியான எண்களைக் கண்டுபிடித்தவன் அழைப்பு விடுத்திருந்தான்.

“ஹலோ ஆண்ட்டி நான் கார்த்திக் பேசுறேன்”

“சொல்லுப்பா கார்த்தி.? என்ன விசயம்.?”

“மலர் உங்களுக்குக் கால் செய்தாளா ஆண்ட்டி.?” என அவன் சொன்னவுடன் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த மலரின் தாய் வள்ளிக்கு குரல் தழுதழுத்தது.

“உனக்கு விசயம் தெரியாதாப்பா.?” என அமைதியாய் தொடங்கியவரின் குரல் அழுகையின் விசும்பலில் முடிந்தது.

“ஆண்ட்டி என்ன ஆச்சு மலருக்கு என்ன ஆச்சு.?” என அவன் கத்த தொடங்கியிருந்தான்.

“வெளிநாட்டுல வேலை மாசம் எழுபதாயிரம் சம்பளம், குடும்பத்துல இருக்கப் பிரச்சனைய சரி பண்ணிரலாம்மான்னு சொல்லிட்டுப் படிப்பெல்லாம் பாதிலையே விட்டுட்டு போனவளோட முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் பண்ணிட்டாங்க” என்ற வள்ளியின் அழுகை கேட்டு தன் காதலிக்கு என்ன ஆனதோ.? என்ற அச்சம் அதிகமானது.

“என்ன ஆண்ட்டி சொல்றீங்க.? மலர் இப்போ எங்க இருக்கா.? சொல்லுங்க எங்கே இருந்தாலும் நான் அவளைப் பார்த்தே ஆகணும்” என அவன் பேச,

“தம்பி கார்த்தி மலர் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டாப்பா, அவளோட முகத்தைக் கூடக் கடைசி நேரத்தில் பார்க்க கொடுத்து வைக்காதா தாயாகிட்டேனே” என அலறினார் வள்ளி.

“ஆண்ட்டி அப்படிலாம் எதுவும் இருக்காது, நீங்க நல்லா விசாரிச்சிங்களா.?”

“தெரியலையே எதோ தீ பில்டிங் புல்லா பத்திகிச்சு உங்க பொண்ணோட டெட் பாடி எதுன்னு தெரியலை இந்தியாவுக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டானுகளே” எனக் கலங்கி பேசிய தாயின் வலியை உணர்ந்த படி அவனுக்குள் பெரும் வலி ஏற்பட்டது, காதல் எனும் பெரும்வலியில் துடித்தவன் அனைத்தையும் கேட்டபின். அழைப்பை துண்டித்தவன் தேநீர் கடையிலிருந்த மேசையில் அமர்ந்தபடி பொதுவெளி என்றும் பாராது கதறி அழுதுக்கொண்டிருந்தான்.

அதே சமயம் தேநீர் கடைக்கு வந்திருந்தாள் அகரநதி,

“கார்த்தி என்னடா ஆச்சு.? ஏன் அழுதிட்டு இருக்க.?” அவனெதிரே நின்றபடி கேட்டாள் அகரநதி.

“ஒன்னுமில்லை இன்னைக்கி அம்மா இறந்த நாள்டி அம்மா நினைப்பு வந்திருச்சு அதான்” என அவன் சொன்னவுடன், வெற்றுத் தரையில் மண்டியிட்டு அவன் விழிநீரை துடைத்துவிட்டாள் அகரநதி, அவள் செய்த செயல் அவனின் தாயை அவனுக்கு நினைவூட்டியது, தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் அவளிடம் மலரை பற்றி மறைக்கிறோமே என்று குற்ற உணர்வில் கூனி குறுகினாலும், இதற்கெல்லாம் நீ தான் காரணம் கார்த்திக் அவன் மனம் தன்னையே குற்றம் சாட்டிய போது,

“கார்த்திக், அம்மா உன் கூட இல்லைன்னு கவலைபடாதேடா, உன்ன தூரமா இருந்து பார்த்திட்டு தான் இருப்பாங்க, நீ சிரிக்கும் போது அவங்களும் சிரிப்பாங்க, நீ அழும் போது அவங்களும் அழுவாங்க, இப்போ நீ அழுகுறதை பார்த்தா அவங்க சந்தோஷபடுவாங்கன்னு நினைக்குறீயா கார்த்தி” அவன் நாடி உயர்த்திக் கேட்டாள் அகரநதி.

“சரி அதி, நான் நார்மல் ஆயிடுவேன் அதை விடு” எனச் சொன்னவன் மீண்டும் அவளைப் பார்த்து,

“கௌதம் சார் தனியா உனக்கு மீட்டிங் வச்சாறே எதுக்கு, எதாவது பிரச்சனையா.? அதி.?” கேள்வி தாங்கிய முகத்துடன், மலரை பற்றி அவளிடம் சொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் உணர்வுகளை அடக்கியபடி கேட்ட கார்த்தி, இதை அதி தாங்கிக் கொள்ள மாட்டாள் என்று நன்கு அறிந்திருந்தான் அதனால் என்னவோ அனைத்தையும் தன் தோழியிடமிருந்து மறைத்திருந்தான் கார்த்திக்.

“அது ஒரு சீக்ரெட் ஆப்ரேசன்டா, யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சார் சொல்லியிருக்காரு” என மழுப்பினாள்.

“ஏன் என்கிட்ட சொல்ல மாட்டியா அதி.?”

“உன்கிட்ட மறைப்பேனடா, நீ த யார்க்கிட்டையும் சொல்லமாட்டேன்னு எனக்குத் தெரியாதா.?” எனச் சொன்னவள் மூன்றாவது கண் ப்ராஜெக்ட் பற்றியும், அதற்காக மார்ச் எட்டு அன்று நடக்கும் சக்ஸஸ் பார்ட்டியை நோட்டம் விடுவதற்காக மாறுவேடத்தில் செல்லப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அதை நீ எப்படி ஒத்துகிட்ட.? ஏற்கனவே அகிலனுக்கும் நமக்கும் இருக்கப் பிரச்சனை போதாதா.?”

“கார்த்தி இதில் என் பேர் வெளிய வராதுடா, யார் அந்த ரீப்போர்டர்ன்னு தெரியபடுத்த மாட்டாங்கடா” என அவள் எடுத்துரைத்தாள்.

“சரி நீ மாறுவேசத்துல போற ஓகே, உன் கூட யார் வர்றாங்க”

“டேய் இதுகெல்லாமா துணைக்கு ஆள் அனுப்புவாங்க, இது சீ்க்ரெட் ஆப்ரேசன்டா கார்த்தி” எனச் சொன்ன அதியின் மீது கோபம் எழும்பியது, மலரை அந்தரங்கமாக வீடியோ எடுத்து வைத்திருக்கும் அகிலனடமே இவள் மோத போகிறாளே என்ற கோபம், என்ன தான் அவள் மனதில் தைரியம் இருந்தாலும், அன்று போதை மருந்தை அதிக்கு கொடுத்து அவளை நாசம் செய்ய முயன்றவனிடமே மீண்டும் எதையோ கண்டுபிடிக்கப் போவதாய்ச் சொல்கிறாளே, அன்று தீரா மட்டும் வரவில்லை என்றால் அதியின் நிலை என்ன ஆகியிருக்கும், மலரின் இறப்புக்குப் பின் அகிலன் இருக்கிறான் என்றால், அதியை அங்குத் தனியாக வரவழைப்பதிலும் அகிலன் தான் இருக்கிறானா.? என்ற கேள்விகள் வரிசைக் கட்டி கொண்டு நிற்க பதில் தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.

“உன்னை தனியா அனுப்புறதில் எனக்கு விருப்பம் இல்லை அதி, சக்ஸஸ் பார்ட்டினா அங்கே நிச்சயமா போதை மருந்துகளைப் பயன்படுத்துவாங்க, உனக்கு எதாவது ஆயிடுச்சுனா நான் என்னடி பண்ணுவேன், நீயும் என்னைத் தனியா தவிக்க விட்டு போயிறாதாடி” எனத் தன்னை மீறி உளறியிருந்தான் கார்த்தி, மலரைப்போல் இவளும் ஆகிவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு.

“நானும் உன்னை விட்டு போயிருவேனா.? என்னடா பேசுற.?”

“இல்லை அதி மலரும் வெளிநாட்டு வேலைன்னு போயிட்டா, இப்போ எனக்காக நீ மட்டும் தான்டி இருக்க” சமாளித்து வைத்தான் கார்த்தி. மலருக்கு என்ன ஏற்பட்டது என்ன ஆனது என்று அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது.

“சரிடா கார்த்தி நீ கவலைபடாதே, எதாவது பிரச்சனை மாதிரி தெரிஞ்சுதுனா கண்டிப்பா உனக்குக் கால் பண்ணுறேன்” என அதி சொல்ல,

“இவள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாள்” என நினைத்துக்கொண்டவன்.

“சரி உன் விருப்பம் அதி, எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் போகணும்” எனச் சொல்லி அங்கிருந்து அகன்றவன் நேரே சென்றது சரளாவின் வீட்டுக்கு தான். கல்லூரி பேருந்தில் வந்து செல்வதால் சரளாவின் வீட்டை கண்டுபிடிக்க அவன் அவ்வளவு சிரமம் கொள்ளவில்லை. அன்று கல்லூரி விடுமுறை நாள் என்பதால் சரளா வீட்டில் இருந்தார்.

“மேம்..!” என அழைத்தபடி சரளாவின் வீட்டினுள் நுழைந்த போது அவனெதிரே சரளாவின் மகள் சத்யா வந்து நின்றாள்.

“அம்மா துணி காயப் போட்டுட்டு இருக்காங்க வீட்டுக்கு பின்னாடி” எனச் சொல்லி தன் அறைக்குள் சென்றாள்.

வீட்டின் பின்புறம் துணியைக் காய்ப்போட்டுக்கொண்டிருந்தார் சரளா.

“சரளா மேம்” அழைத்தான் கார்த்தி அவனழைப்பில் திக்கென்ற உணர்வு பெற்றவர் அதைக் காட்டிக்கொள்ளாது மெல்ல திரும்பினார் சரளா.

“சொல்லுப்பா கார்த்தி.? என்ன விசயம்.?”

“மலருக்கு என்ன ஆச்சு சொல்லுங்க மேம்” ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

“அவளுக்கென்னப்பா மலேசியால இருப்பா, நான் தான் சொன்னேன்ல ட்ரெயினிங் முடியுற வரைக்கும் போன் கால்லாம் பேசமுடியாது” எனச் சாதாரணமாய்ச் சொன்னார்.

“அவ செத்து போயிட்டதா யாரோ கால் பண்ணி சொல்லியிருக்காங்க” என அவன் கேட்கும் போது சரளாவுக்குப் புரிந்து போனது, மலர் முழுவதுமாக அந்தத் தொழில் இறக்கிவிட்டிருப்பார்கள் என்று.

“அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா அப்படி எதாவது நடந்திருச்சுனா, அதுக்குப் பணம் அனுப்பியிருப்பாங்களே”

“என்ன மேம் இவ்ளோ சாதாரணமா சொல்லுறீங்க, இப்போ என்ன நடந்திச்சுன்னு சொல்றீங்களா.?”

“என்ன கார்த்தி மிரட்டுறீயா.? வேலைக்கு அனுப்புறது மட்டும் தான் என்னோட வேலை, அதுக்கு அப்பறம் எல்லாமே அகிலனோட வேலை” எனத் திமராய் பேசிய சரளாவை பார்த்துக் கோபம் மூண்டது கார்த்திக்கு.

“உங்களை நம்பி தானே மலரை அனுப்பினோம், அவளை இப்படிப் பாழும் குழிக்குள்ள தள்ளி விட்டுட்டிங்களே” எனக் கோபமாய்ச் சாடினான் கார்த்தி, அவர் பெண் என்பதால் அவரை அடிக்கக் கூட அவன் கை ஓங்கவில்லை, மாறாக,

“உங்க மேல நம்பிக்கை வர வச்சு ஒருத்தவங்களை ஏமாத்துறதுக்குப் பேரு என்ன தெரியுமா.? உங்களை நாங்க எவ்வளவு நம்பினோம் இப்படி அந்த அகிலனோட சேர்ந்து இப்படி ஒரு தொழில் பண்ணிட்டு இருக்கீங்க, உங்களுக்கே இது அசிங்கமா இல்லை, கடைசி வரைக்கும் மலர் சொன்னா, சரளா மேம் சொன்ன வேலை நல்ல வேலையா தான் இருக்கும்னு சொன்னா, அவளோட நம்பிக்கைய கொன்னு குழி தோண்டி புதைச்சுட்டிங்களே மேம், அவளோட போட்டோஸ் வீடியோஸ் எல்லாமே அந்த அகிலன்கிட்ட இருக்கு, அதுவும் அவ சுய நினைவு இல்லாதப்போ எடுத்து வச்சிருக்கான், இது கண்டிப்பா உங்களுக்குத் தெரியாமல் நடந்திருக்காது சொல்லுங்க, மலரை என்ன செஞ்சீங்க, கொண்ணு புதைச்சுட்டிங்களா, அவளோட டேட் பாடியாவது வாங்கிக் கொடுங்க” எனச் சரளாவை பார்த்து ஆத்திரம் பொங்க பேசிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் பேசியதில் அவருக்கு மனம் இறங்கியதோ இல்லை மனம் மாறியதோ என்னவோ அது சரளா மட்டுமே அறிந்தது. ஆனால் அவனிடம் அந்த உண்மையை அவர் சொன்னார்.

“மலர் உயிரோட தான் இருப்பா, அகிலன் கிட்ட பேசி பாரு, அவன் அவளைத் திருப்பிக் கொடுக்க வாய்ப்பு இருக்கு, ஆனா மலர் இந்தியா தாண்டி எங்கேயும் போகலை அவ்வளவு தான் எனக்குத் தெரியும்.” என அவள் உயிரோடு இருக்கிறாள் என்று தெரிந்தது தான் தாமதம் தன் மலரானவளை இனியும் ஒரு நிமிடம் கூட அந்தக் கயவர்கள் கூட்டத்தில் விட்டு வைக்கக் கூடாது, அவளை மீட்டாக வேண்டும், தன்னவளை தானே அறியாமல் எங்கோ தள்ளிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு, அங்கு என்ன என்ன துயரங்களை அனுபவிக்கிறாளோ என்ற எண்ணத்துடன், அகிலனை தேடி ஓடியிருந்தான் மலரானவனின் காதலன் கார்த்திக்.

கற்பு என்பது உடலில் இல்லை மனதில் தான் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தான் கார்த்தி, தன் மலரானவள் மீது களங்கம் ஏற்பட்டிருந்தாலும் அவள் அவனவள், அவள் மீது ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும், அவளுக்கும் ஏற்பட்டிருக்கும் துயரத்தையும் துடைக்கும் கடமை ஆண் என்பவனுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தான் கார்த்தி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பிரச்சனைகுறிய இடம் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் எதற்காக அங்கேயே செல்ல வேண்டும். வேலையின் நிமித்தம் என்றாலும் நாம் தரவுகளை கொடுத்த நபரே யாருக்கு எதிராக கொடுத்தோமோ அவர்களிடமே நம்மை அனுப்புவது நெருட வேண்டாமா.

    மலருக்கு என்ன ஆனது என்று தெரியாத கார்த்திக்கின் தவிப்பு, அகருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விட கூடாது என்ற பதற்றம்.

    இருவருமே தீரன் என்ற ஒருவனை அறிந்திருந்தும் அவனிடம் விடயங்களை கொண்டு சென்று தீர்வு காணாமல் விட்டு விட்டனர்.

    மலரை பற்றி அறிந்த பிறகாவது கார்த்தி தீரனின் உதவியை நாடி இருக்கலாம்.