Loading

அத்தியாயம் – 40

அலுவலகம் முடிந்து வந்த விக்ராந்த், நித்திலாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டான். “என்ன பேபி, ரொம்ப சந்தோஷமா இருக்க போல? முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்பு மின்னி மின்னி எரியுது!” என அவளருகில் அமர்ந்து வினவினான்.

​”ஆமா அத்து, நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! அத்த எங்க கிட்ட எவ்வளவு ஜாலியா பேசுனாங்கன்னு தெரியுமா? அவங்க இந்த அளவுக்கு மாறுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை,” என உற்சாகமாகப் அன்று நடந்ததை சொல்லிக் கொண்டுருந்தவளின் முகம் சட்டென வாடிப் போனது.

​இத்தனை நேரம் மலர்ந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ராந்த், அவளது திடீர் மாற்றத்தைக் கண்டு, “என்னாச்சு பேபி? நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்த?” என்றான் கவலையுடன்.

​”இல்ல அத்து, எப்படி இருந்தாலும் நான் இங்கிருந்து போயிடுவேன்… அப்போ இதையெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்ல, அதான் ஒரு மாதிரியா இருக்கு,” என அவள் சொல்ல, விக்ராந்தின் மனம் வலித்தது.

“ப்ளீஸ் பேபி, போறதைப் பத்தி இனி பேசாத, எனக்குக் கஷ்டமா இருக்கு,” என அவள் கரம் பற்றி வேண்டிட,.. ​”மன்னிச்சிடுங்க அத்து… நான் என் முடிவுல உறுதியா இருக்கேன்,” எனத் தலை குனிந்தபடி அவள் சொல்ல, அதற்கு மேல் விக்ராந்த் எதுவும் பேசாமல் அமைதியானான்.

​”என்ன அத்து அமைதியாகிட்டீங்க?” என அவள் கேட்க, ‘ஒன்னுமில்லை’ என்பது போலத் தலையை மட்டும் அசைத்தான்.

“ஏன் அத்து ஃபீல் பண்றீங்க? உங்க லைஃப்ல இடையில வந்தவ தானே நான்… இடையிலேயே போயிடுறேன்,” என்றாள் நித்திலா.

​அவளது இந்தத் தவறான புரிதலைக் கண்டு விக்ராந்த் வேதனையடைந்தவன்.. “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இப்படிலாம் பேசுறன்னு புரியல. என்கிட்ட ஏதாச்சும் கேட்கணும்னா வெளிப்படையா கேளு, நான் பதில் சொல்றேன்,” என்றான்.

“என் மனசுல இப்போ ஒரு கேள்விதான் இருக்கு… லாவண்யா ஏன் போனாங்க?” என்று கேட்டாள்

​”அவ போனா உனக்கென்ன? ஏன் இதையே கேட்குற?” என விக்ராந்த் எரிச்சலுடன் கேட்க, “இல்ல… நான் இங்கிருந்து போனதும் அவங்கதானே உங்க லைஃப் பார்ட்னரா வரப் போறாங்க, அதான் கேட்டேன்,” என்றாள்.

​”என் லைஃப்ல உன்னைத் தவிர வேற யாருக்கும் இடம் இல்லை பேபி!” என விக்ராந்த் ஆணித்தரமாகச் சொல்ல, ​”ஏன் அத்து இந்தத் திடீர் முடிவு? நீங்க லாவண்யா கூட வாழத் தானே ஆசைப்பட்டீங்க?” என அவள் கேட்க, “நான் உன்கிட்ட எப்பவாச்சும் அப்படிச் சொல்லி இருக்கேனா?” என விக்ராந்த் எதிர்கேள்வி கேட்டான்.

“இல்ல… ஆனா அவங்களை லவ் பண்ணதா சொன்னீங்களே,” என நித்திலா வினவ… விக்ராந்த் பதில் பேச முடியாமல் தவித்தான்.

‘இப்போ உன்கிட்ட நான் லாவண்யாவை லவ் பண்ணல, உன்னை தான் லவ் பண்ணேன்னு சொன்னா என்னை நம்புவியா பேபி, அன்னைக்கு மாதிரி என் மனசு கஷ்ட படுற மாதிரி பேசுனா மறுபடியும் என்னால தாங்கிக்க முடியாது பேபி, இப்போ நான் உன்கிட்ட என்ன சொல்றது, நீ தான் என்னோட லைஃப், நீ மட்டும் தான், அது ஏன் பேபி உனக்கு புரியமாட்டேங்கிது, வார்த்தையால சொல்ல முடியல பேபி, என்னை புரிஞ்சிக்கிட்டு என்கூடவே இருந்துடேன்’ என மனதிற்குள் உருகினான்.

​”என்ன அத்து… மைண்ட் வாய்ஸ்ல என்ன பேசிக்கிறீங்க?” என அவள் அவன் முகத்தைக் கணித்துக் கேட்க, விக்ராந்த் உறுதியான குரலில்… “என் லைஃப்ல லாவண்யாக்கு இனி இடம் இல்லை, இதை எப்போதும் நியாபகத்துல வச்சிக்கோ நிலா, இனி இதை பத்தி என்கிட்ட பேசாத” எனக் கறாராகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

அவன் செல்வதையே பார்த்திருந்த நித்திலா, ‘ஏன் இப்படிச் சொல்றாரு? ஒருவேளை ரெண்டு பேருக்குள்ளயும் ஏதாச்சும் பிரச்சனையாகி இருக்குமோ?’ என ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

அன்று மடிக்கணினியில் தீவிரமாக அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் விக்ராந்த். முகத்தில் ஒருவித சலிப்புடன் அவனருகில் வந்தமர்ந்த நித்திலா, “அத்து… வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ரொம்ப போர் அடிக்குது,” என்றாள்.

​அவன் மடிக்கணினியிலிருந்து பார்வையை அகற்றாமலேயே, “பால்கனி சைடு நின்னு வேடிக்கை பாரு பேபி,” என்றான்.

“கடந்த சில மாசமா இதையேதானே பண்ணிக்கிட்டு இருக்கேன்… நாம வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரலாமா?” எனக் கண்கள் மின்ன அவள் கேட்க, விக்ராந்த் சில நொடிகள் யோசித்தான்.

​அவளது உடல்நிலை முக்கியம் என்றாலும், அவளது மன மகிழ்ச்சியும் அவனுக்குத் தேவைப்பட்டது. “ஓகே… எங்கே போலாம்னு சொல்லு?” என அவன் கேட்க, “எங்கேயாச்சும் போலாம் அத்து, வெளியே போனா போதும் எனக்கு!” அவள் உற்சாகமாக சொல்ல.. “சரி… ரெடியாகு,” என்றதும், சிறகுகள் முளைத்த பறவையைப் போல நித்திலா தயாராகத் தொடங்கினாள்.

விக்ராந்த் நித்திலாவை அழைத்துக்கொண்டு ஒரு கோவிலுக்குச் சென்றான். உண்மையில், இது அவனுக்குப் புதிதல்ல. கடந்த சில நாட்களாகவே அவன் தவறாமல் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தான். கடவுள் நம்பிக்கை குறைவாக இருந்த விக்ராந்தை, தன் மனைவியின் பிரசவக் கால பயம் இறைவனிடம் இழுத்து வந்திருந்தது. ‘டாக்டர் கைவிட்டாலும், கடவுள் கைவிட மாட்டார்’ என்ற அந்த ஒரு நம்பிக்கையில், அவன் தன் பேபிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கினான்.

பிரகாரத்தில் நின்று விக்ராந்த் கண்களை மூடி மனமுருக வேண்டிக் கொள்வதைக் கண்ட நித்திலாவிற்குப் பெரும் ஆச்சரியம். பகுத்தறிவு பேசும் தன் கணவன், இப்போது பக்திமானாக மாறியிருப்பதைச் சிரித்த முகத்துடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடவுளிடம் தன் பாரத்தை இறக்கி வைத்தவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு, “என்ன பேபி, பார்வையெல்லாம் பலமா இருக்கு?” என்றான்.

​”பின்னே… நீங்க கோவிலுக்கு வர்றதே எனக்கு ஆச்சரியமா இருக்கு. இதுல கண்ணை மூடி சாமி வேற கும்பிடுறீங்க… என்ன பக்தி, என்ன பக்தி!” என அவள் கேலி செய்ய, விக்ராந்த் அவளைக் காதலுடன் பார்த்தவன்…  “என்ன பண்றது பேபி? பொண்டாட்டி, குழந்தைன்னு வந்துட்டா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் குடும்பஸ்தன் தானே? பொறுப்பும் கொஞ்சம் கூடுதுல,” என்றவன், தன் மனதிற்குள் இருந்த பயத்தை வெளியே காட்டாமல் புன்னகையால் மறைத்துக் கொண்டான்..

விக்ராந்த் தனக்காகத்தான் இவ்வளவு மாறி இருக்கிறான் என்பதை நித்திலா உணர்ந்தாள். ஆனால், அடுத்த நொடியே ‘இவன் நமக்கு நிரந்தரமானவன் இல்லையே’ என்ற எண்ணமும் வர, அவள் முகம் வாடியது. அந்த யோசனையிலேயே நடந்தவள், தரையில் இருந்த ஒரு கல்லில் தடுக்கி விழப் போக, ​”பேபி!” என அலறியபடி ஓடிச் சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான் விக்ராந்த்.

“என்ன பேபி? கல்லு இருக்கிறதைக்கூடப் பார்த்து நடக்காத அளவுக்கு அப்படி என்ன யோசனை உனக்கு?” என அவன் படபடப்புடன் கேட்டான். அவன் குரலில் அமைதி இருந்தாலும், முகம் அவனது பயத்தைப் பறைசாற்றியது.

​”ஸாரி அத்து…” என அவள் மன்னிப்பு கேட்க, அதற்கு மேல் அவளை அங்கே விட விக்ராந்திற்குத் துணிவில்லை. அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வண்டியில் அமர வைத்து, நேராக வீட்டிற்குப் புறப்பட்டான்.

​”கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்துட்டு வந்திருக்கலாம்ல அத்து,” என நித்திலா ஏக்கத்துடன் கேட்க, “இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்தா, எதாவது ஏடாகூடமா பண்ணி வம்பை விலை கொடுத்து வாங்கிருப்ப! வெளியே வரணும்னு ஆசைப்பட்ட, வந்தாச்சு… போதும்,” என விக்ராந்த் கண்டிப்புடன் சொல்ல, நித்திலா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்…

​முற்றத்தில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்க, அவளும் அவர்களோடு இணைந்து கொண்டாள், அப்போது அங்கே வந்த மரகதப் பாட்டி, “என்னமா… என்ன சொல்றா என் கொள்ளுப் பேத்தி?” என வாஞ்சையுடன் கேட்டார்.

​”என்ன அத்தை… பேத்தின்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?” என ஊர்மிளா ஆச்சரியமாகக் கேட்க, பாட்டி தன் அனுபவ அறிவோடு.. “ஏதோ எனக்குத் தோணுச்சு ஊர்மி! பையனா இருந்தா முகம் பொலிவோட இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா நித்திலா முகம் அப்படி இல்லையே? அவளுக்குக் காலையில தான் அதிக சோர்வா இருக்கு. இதை வச்சு தான் பேத்தினு நானே நினைச்சுகிட்டேன், என்னோட அம்மா சொன்னாங்க இதைலாம், அதனால கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்றார்.

​”பாட்டி, அப்படின்னா எனக்குப் பொண்ணு பிறக்கும்னு சொல்றீங்களா?” என நித்திலா ஆவலுடன் கேட்க, பாட்டியும் “ஆமாம்மா ஏன்,” என்று கேட்டார்..

​”ப்ச்… எனக்குப் பையன் தான் பிறப்பான்னு நான் நினைச்சேன்,” என நித்திலா சற்றே சோகமாகச் சொல்ல, சுமித்ரா குறுக்கிட்டு… “ஏன்… என் தங்கச்சிக்குப் பொண்ணு மேல ஆசை இல்லையா?” என்றாள்.

“ஆசை இல்லைன்னு சொல்ல முடியாதுக்கா, ஆனா பையன்னா இன்னும் சந்தோஷப்படுவேன்,” என நித்திலா பதில் சொன்னாள்.

​அன்னலட்சுமியும், “எனக்கு பேத்தி தான் வேணும்,” எனத் தன் பங்கிற்கு ஆசையை வெளிப்படுத்த,  இனியாவோ, “அண்ணி எனக்கும் பொண்ணு தான் வேணும், நெக்ஸ்ட் டைம் வேணும்னா பையன் பெத்து கொடுத்துடுங்க,” எனச் சொல்லி கண்சிமிட்டி சிரித்தாள்….

நித்திலா மௌனமாக இருக்கவே, பாட்டி… “என்னமா… எதுக்கு இப்போ சோகமா இருக்க? பையனா இருந்தா என்ன, பொண்ணா இருந்தா என்ன? குழந்தை ஆரோக்கியமா, எந்தக் குறையும் இல்லாம பிறந்தா போதாதா?” எனக் கேட்க, நித்திலாவும் தன் மனதைத் தேற்றிக்கொண்டு.. “கரெக்ட் பாட்டி… எனக்கு எந்தக் குழந்தைனாலும் பரவாயில்லை. என் குழந்தை ஆரோக்கியமா இந்த உலகத்துக்கு வந்தா அதுவே எனக்குப் போதும்,” என்றாள் புன்னகையுடன்.

குடும்பத்தினருடன் பேசி முடித்த நித்திலா, சுமித்ராவின் உதவியோடு மெதுவாகத் தனது அறைக்கு வந்து சேர்ந்தாள். அறைக்குள் நுழைந்ததிலிருந்து அவள் விக்ராந்தின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கோவிலிலிருந்து தன்னை அவ்வளவு அவசரமாக இழுத்து வந்ததினால், விக்ராந்த் மீது அவளுக்குப் பெரும் கோபம் இருந்தது.

​விக்ராந்த் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாலும், அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பதை உணர்ந்தவன், மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான்.

​”இப்போ எதுக்காக முகத்தை இப்படி உர்ருனு வச்சிருக்க?” என அவன் சாதாரணமாகக் கேட்க, அவனைக்  முறைத்தவள்,.. ​”ஏன்னு உங்களுக்குத் தெரியாதா? உங்க கிட்ட நான் பேசவே போறதில்லை” என்றாள்,…

​”நீ பேசாட்டிப் போ, என் குழந்தைக்கிட்ட நான் பேசிக்கிறேன்,” என விக்ராந்த் குறும்பாகச் சொல்ல, முகத்தை சுளித்த நித்திலா… “ம்ம்ம்… நீங்க கேட்டதுக்கு அப்படியே வயித்துக்குள்ள இருந்தே உங்க குழந்தை பதில் சொல்லிடும் பாருங்க,” என அவள் கேலி செய்தாள்.

​”ஏன் பதில் சொல்லாது? சொல்லும் பாரு,” என்றபடி அவளது வயிற்றுப் பகுதிக்கு அருகில் வந்தவன்… “ஹாய் குட்டிமா… அப்பாகூட உங்க அம்மா பேச மாட்டாங்களாம், நீங்க பேசுவீங்க தானே?” எனக் கேட்டு அவன் கை வைத்த அடுத்த நொடி, உள்ளிருக்கும் உயிர் மென்மையாக உதைத்தது. விக்ராந்திற்கு அது தெளிவாகத் தெரிந்தது.

​”பார்த்தியா? என் குழந்தைக்கு நான் பேசுறது புரியுது!” என விக்ராந்த் பெருமையாகச் சொல்ல,
நித்திலா உடனே.. “இல்லடா தங்கம், நீ அப்பாக்கிட்ட பேசக் கூடாது. நான் அப்பா மேல கோவமா இருக்கேன், சோ நீயும் பேசக் கூடாது,” என்று குழந்தையிடம், அதற்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் இருந்தது குழந்தை,…

நித்திலாவின் விழிகள் விரிய, அவனோ வாய்விட்டு சத்தமாக சிரித்தவன்…  “இப்போ பாரு…” என்று சொல்லிவிட்டு,.. “குட்டிமா, நீ அப்பா செல்லம்னு இப்போவே நிரூபிச்சிட்ட! சூப்பர்டா தங்கம்,” என்றதும், குழந்தை மீண்டும் நன்றாக உதைத்தது. நித்திலாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

​”எப்படி உங்ககிட்ட மட்டும் குழந்தை இப்படி ரியாக்ட் பண்ணுது?” என அவள் கேட்க, “ஏழாவது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல்ல… நீ தூங்கிட்டு இருக்கும்போது நான் குழந்தைக்கிட்ட பேசிட்டே இருப்பேன். அதான் என் குரல் கேட்டதும் அடையாளம் கண்டுக்குது,” என விக்ராந்த் ரகசியத்தை உடைக்க, “ஓஹ்… அப்போ எனக்கே தெரியாம குழந்தையை உங்க பக்கம் இழுத்துட்டீங்க!” என முறைத்தாள் நித்திலா.

“நான் எங்கே இழுத்தேன், இப்போதும் உனக்குள்ள தான் இருக்கு குழந்தை” அவன் கண்சிமிட்டி சொல்ல… “என்ன கிண்டலா” அவள் மீண்டும் முறைக்க, “ஓகே டென்ஷன் ஆகாத” என்றுவிட்டு “உனக்கு ஏன் பையன் வேணும்னு ஆசை?” எனக் கேட்டான்.

“கீழே நாங்க பேசிகிட்டதை ஒட்டு கேட்டீங்களா” அவள் கேலியுடன் வினவ,.. “ஒட்டுலாம் கேட்கலை, காதுல விழுந்தது” என்றவன்,…”சரி சொல்லு” என்றான்,…

“ஏன்னா, பையன்னா அப்படியே உங்களை மாதிரியே பிறப்பான்ல, அதுக்குத்தான்,” என நித்திலா தன் காதலை வெளிப்படுத்த, “என்னாலேயே இங்கே பல பேருக்குக் கஷ்டம், இதுல என்னைப் போல இன்னொருத்தனா?” என விக்ராந்த் சலித்துக் கொண்டான்.

​”உங்களுக்கு என்ன குறை? கொஞ்சம் கோவம் வரும், மத்தபடி என்ன குறை?” என நித்திலா வாதிட, விக்ராந்த் மெதுவாக, “நான் சரியில்லாததாலதானே என்னை விட்டுப் போகணும்னு நினைக்கிற?” என்றான்.

“நான் எப்போ அப்படி சொன்னேன்”  அவள் வினவ,.. “நீ தானே சொன்ன அன்னைக்கு சொன்ன?” என்றவனிடம் அந்தப் பழைய காயத்தைக் கிளற விரும்பாத நித்திலா, “ஓகே, இந்த சேப்டர் இப்போ வேணாம். இப்போ நான் ஹேப்பியா இருக்கேன். இப்போ சொல்லுங்க, உங்களுக்கு பொண்ணு வேணுமா? பையன் வேணுமா?” என ஆவலோடு கேட்டாள்.

​விக்ராந்த் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், “அப்சல்யூட்லி பொண்ணுதான் வேணும்!” என்றான்.

​”ஏன் அப்படி?” என அவள் வியக்க,
​”பையன் அம்மாக்கூட அட்டாச்மென்ட்ல இருப்பான், ஆனா பொண்ணு எப்பவும் அப்பா பக்கம்தான். அதோட, எனக்கு என் ‘பேபி’யை உரிச்சு வச்ச மாதிரி ஒரு குட்டிப் பேபி வேணும். அவளை என் மார்பிலேயே தாங்கிக்கணும். உன் சின்ன வயசு ஆட்டிடியூட் எல்லாம் எனக்குத் தெரியாது, வரப்போற இந்தக் குட்டிப் பேபிகிட்ட இருந்து அதையெல்லாம் நான் பார்த்து ரசிக்கணும். அவளோட முதல் சிரிப்பு, முதல் அழுகை, முதல் பேச்சுன்னு ஒவ்வொன்னையும் நான் பார்க்கணும். அதுக்காகத்தான் நான் ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என உணவுப்பூர்வமாக பேசிக் கொண்டு போனவனை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா,….

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அடேய் அவ தான் தவறான புரிதலில் இருக்கானு தெரியுதே அப்போ கூட அவ கிட்ட திருவாயை திறந்து உண்மைய டெட்டால் போட்டு விளக்கமா மனசுக்குள்ளயே பேசிட்டு இருக்க.

    இவனாவும் சொல்ல மாட்டேங்கிறான் அவளா கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் வீட்ல உள்ளவங்களையும் சொல்ல கூடாதுனு சொல்லிட்டான்.

    என்ன தாண்டா செய்ய போற விக்ராந்த்? உன் மனசுக்குள்ள இருக்கிறத தெரிஞ்சுக்க அவளுக்கு மந்திர சக்தி தான் தரணும்.

    குட்டி நித்திலா 😍😍