
அத்தியாயம் 116
“அப்படி என்ன விஷேஷம்.” சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே கேட்டான் அரசு. அனைவரின் முகமும் மின்னல் ஒளி பட்ட தாழம்பூச்செடி போல செழித்து போய் இருக்க, பிரச்சனை இல்லாத சந்தோஷம் தான் என்று பெருமூச்சுடன் வடிவேலுவைப் பார்த்தான்.
“நம்ம வீட்டு கடைக்குட்டி அப்பாவாகப் போறான் டா.” வடிவேலு சொன்னவுடன் ஆனந்த பெருவெள்ளம் அரசுவை உடனடியாகத் தொற்றிக் கொண்டது.
“நிஜமாவா. டேய் தர்மா சொல்லவே இல்ல பார்த்தியா. தேவகிம்மா கலக்கிட்ட போ. வாழ்த்துக்கள் டா இரண்டு பேருக்கும்.” அரசு சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
“தர்மா, தேவகி அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க.” செல்வா சொல்ல, இருவரும் ஒன்றாக வடிவேலுவின் காலில் விழுந்தனர்.
“நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுத்து, நல்ல குணமான குழந்தையா அதை வளர்த்துங்க இரண்டு பேரும்.” மன நிறைவுடன் ஆசிர்வதித்தார் வடிவேலு.
“செல்வா நீ அண்ணி கூட சேர்ந்து நில்லு.” தர்மா சொல்ல, அட என்று பார்த்தான் அரசு.
“தர்மா, எங்க காலில் விழுந்து எங்களைப் பெரியவங்களா ஆக்கிட நினைக்காத. நாங்களும்உங்களை மாதிரி இளஞ்ஜோடிகள் தான்.” சிரிப்பினூடே சொன்னான் செல்வா.
“அதுக்கில்ல மாமா. இந்த சமயத்தில் நாங்க வாங்குற இந்த ஆசீர்வாதம் எங்களுக்காக மட்டும் இல்லை. என் வயித்தில் இருக்கிற எங்க குழந்தைக்காகவும் தான்.
தாத்தாவோட ஆசிர்வாதத்துக்கப்புறம் பெரியப்பா பெரியம்மாவோட ஆசிர்வாதம் அதுக்கு வேணும் இல்லையா?” என்றாள் தேவகி.
“ஓ இப்படி ஒன்னு இருக்கோ. அப்ப சரி லீலா என்கிட்ட வா.” என்றான் செல்வா.
செல்வாவின் அழைப்பைத் தொடர்ந்து லீலா அவன் அருகே வந்து நிற்க தேவகி, தர்மா இருவரும் தம்பதி சமேதராய் அவர்களுடைய காலில் விழுந்து வணங்கினார்.
இதைப் பார்த்ததும் வேகமாய் அண்ணன் அருகே வந்த தெய்வா, “அவனுக்கு மட்டும் தான் ஆசிர்வாதம் பண்ணுவியா. நானும் உன் தம்பி தான். எனக்கும் ஆசிர்வாதம் பண்ணு.” என்றுவிட்டு ருக்குவை இழுத்துக் கொண்டு தேவகி, தர்மா இருவருக்கும் அருகில் மூத்தவன் காலில் விழுந்தான்.
“டேய் பொறாமை புடிச்சவனே, அவன் அப்பாவாகப் போறான் அந்த சந்தோஷத்தில் ஆசிர்வாதம் வாங்குறான். நீ எதுக்கு ஆசிர்வாதம் வாங்குற.” நாகாவிற்கு சிரிப்பு வந்தது.
“இன்னைக்கு இல்லைன்னா என்ன. என்னைக்காவது ஒரு நாள் நானும் அப்பாவாவேன். அதுக்கு அட்வான்ஸா ஆசிர்வாதம் வாங்குறேன்னு வைச்சுக்கோ.” என்ற தெய்வாவை நினைத்து அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு பொங்கியது.
“லீலா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுறதுக்காக எல்லாருக்கும் சேர்த்து பால் பாயசம் பண்ணும்மா.” என்றார் வடிவேலு.
“ஐ இதோ பாருடா. இதையே சாக்கா வைச்சு பாயாசம் கேட்குதா உங்களுக்கு. உடம்பில் சுகர் டிரிபிள் செஞ்சுரி அடிக்கிது. பாயாசம் வேணுமாம் இல்ல பாயாசம். இங்க பாருங்க லேடீஸ். நான் அந்தப்பக்கம் போனதுக்கு அப்புறம், பாவம் பெரிய மனுஷன், வீட்டில் சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு அவரை விட்டுட்டு நாம எப்படி சாப்பிடுறதுன்னு பாயாசத்தை அவருக்கு கொடுத்தீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்.” கடுமையாய் எச்சரித்தான் அரசு.
“இந்த அண்ணனுக்கு வேற வேலை இல்லை. அவர் எப்பவும் இப்படித்தான் ஏதாவது பேசிக்கிட்டு இருப்பார். நீங்க வாங்க மாமா, நான் ஏற்கனவே பாயாசம் பண்ணி வைச்சிட்டேன். நாம சூடா சாப்பிடலாம்.” என்றாள் லீலா.
“தங்கச்சிம்மா, என் அருமைத் தங்கச்சி லீலா.” என்று அரசு அழைத்துக் கொண்டே இருக்க, என் காது கேட்காது என்பது போல் அவள் பாட்டுக்கு முன்னே சென்று கொண்டிருந்தாள்.
“டேய் விடுடா, இன்னைக்கு ஒருநாள் தானே. இராத்திரி நான் அப்பாவை செக் பண்ணி மருந்து கொடுக்கிறேன்.” பொறுப்பாய் சொன்னான் செல்வா.
“நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க. இனிமேல் பாருங்க, ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் நான் இன்னைக்கு ஒரு நாள் தான் சாப்பிடப் போறேன்னு சொல்லி சொல்லியே இவர் அதிகமாக சாப்பிட போறாரு.” அரசுவிற்கு ஆதங்கம் தாங்கவில்லை.
“டேய் விடுடா அப்பா பாவம் டா.” தந்தைக்குப் பரிந்துகொண்டு வந்தான் தெய்வா.
“ஆமா உங்க அப்பா ரொம்பப் பாவம் தான்.” அரசு சிரிக்க, “அரசு, நீ அறிவுகிட்ட பேசப் போகலையா.” சிரிப்புடன் கேட்டான் நாகா.
“வாடா மகனே உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன். என்னைக் கிண்டல் பண்றதில் உனக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷம். அறிவுக்கு இவ்வளவு டீடெயில்ட்டா ப்ளானைப் போட்டு கொடுத்து இருக்க.
நீ ட்ரெயின் மாதிரி ஒரு ப்ளான் போட்டு கொடுத்தா, அவ ஏரோபிளேன் ரேஞ்சுக்கு அந்தப் ப்ளானை எக்ஸிகியூட் பண்ணிட்டா.” அரசு சொல்லிய விதத்தில் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
“தேவகி இவ்வளவு சீக்கிரம் நீயும் நல்ல விஷயம் சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தா சாப்பிடு.” என்றவாறு பாயசத்தை அவளுக்கு ஊட்டி விட்டாள் லீலா.
“தேவகி செல்லம் இப்ப இருந்து இன்னும் இரண்டு மாசத்துக்கு நீ என்ன எல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு என்கிட்ட டியூஷன் கேட்டு நடந்துக்கோ சரியா.” என்றாள் ஊர்மி.
“ஏன் தேவகி ஒருவேளை உனக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தா.” ருக்கு கேட்க, “ஐயோ அம்மா என் உடம்பு தாங்காது எனக்கு ஒன்னு போதும்பா.” வேகமாகச் சொல்லிய விதத்தில் அவளுடைய பயம் மற்றும் பதற்றத்தை கண்டு மற்ற மூவரும் சிரிக்க, தேவகி சிணுங்கினாள்.
“ருக்கு இப்போதைக்கு உங்க செல்வா மாமா தான் கன்ஃபார்ம் பண்ணி இருக்கார். ஸ்கேன் பண்ணி பார்த்தா தான் தெரியும். தேவகி வயிற்றில் எத்தனை குழந்தைகள் இருக்குன்னு.” வேண்டுமென்றே தங்கையைச் சீண்டினாள் லீலா.
“அக்கா எனக்கு ஒன்னு போதும்.” என்று மறுபடியும் சிணுங்கினாள் அவள்.
அறைக்குள் லேகா அமைதியாக சீலிங்கைப் பார்த்தவண்ணம் படுத்திருந்தாள். சாப்பிடும் நேரத்தில் நடந்தவைகள் அவளுடைய மனதை வெகுவாகப் பாதித்து விட்டது.
மனது காயப்பட்டு இருந்தால், அந்தக் காயத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை நோக்கி சம்பந்தப்பட்டவர்களை ஈர்க்கும் வல்லமை உண்டு அதற்கு. அந்த வகையில் யூடியூப்பில் பாரதி கண்ணம்மா சீரியலின் கமெண்ட்ஸ்ஸை படிக்க ஆரம்பித்தாள் லேகா.
அது தேவையில்லாத வேலை என்று புத்தி சொன்னாலும், இயல்பிலேயே சிறிதளவாக இருந்த அவளுடைய நல்ல மனது அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று அவளை உந்தியது.
“ஊருக்குள்ள வேற ஆம்பளையே இல்லாத மாதிரி எதுக்காக இன்னொருத்தி புருஷனை புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்க லேகா. ஒருத்தியோட வாழ்க்கையை அழிச்சிட்டு அவளோட கண்ணீரில் உன்னோட வாழ்க்கை ஆரம்பிச்சா நீ சந்தோஷமா இருப்பன்னு உனக்கு தோணுதா லேகா.
செல்வா கிட்ட இருந்து அவன் பொண்டாட்டியைப் பிரிச்சு, அவனோட தம்பிங்களைப் பிரிச்சு, அப்பாவை பிரிச்சு, நண்பர்களைப் பிரிச்சு, அவனை உறவுகள் இல்லாத பிச்சைக்காரனா மாத்தி, தனியா கூட்டிட்டு போய், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ஜெயிச்சதா அர்த்தமாகிடுமா. அப்படி நீ வாழ்ற வாழ்க்கை உனக்கு இனிக்குமா இல்ல நிலைக்கத்தான் செய்யுமா.
உனக்காக அத்தனை பேரை விட்ட ஒருத்தன் நாளைக்கே உன்னை விட மாட்டான்னு என்ன நிச்சயம்.” இதைப் போல பல விமர்சனங்கள் சீரியல் வில்லி வெண்பாவைத் திட்டி சொல்லியிருந்தாலும், அது ஏதோ தன்னைப் பார்த்து சொல்வது போல நினைத்தாள் லேகா. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது.
அதே நேரத்தில் பால் பாயசத்தோடு இரவு உணவையும் அவளுடைய அறைக்கே கொண்டு வந்தாள் லீலா.
லேகாவிற்கு உணவு எடுத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தங்களுடைய அறைக்கு வந்தவளை விநோதமாகப் பார்த்தான் செல்வா.
“என்னாச்சு உங்களுக்கு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.” சாதாரணமாய் கேட்டாள் லீலா.
“அப்படியா தெரியுது.” நாடியைத் தடவியபடிக் கேட்டான்.
“ஆமா ரொம்ப நல்லாவே தெரியுது என்ன விஷயம்.” புருவமுயர்த்தினாள் அவன் மனைவி.
“ஓகோ அதான் என் முகத்தைப் பார்த்தே உனக்கு விஷயம் நல்லா தெரியுதுன்னு சொல்றியே. அப்ப மிச்சத்தையும் நீயே கண்டுபிடிச்சுக்கோ.” என்றான் செல்வா.
“அதுக்கெல்லாம் எதுக்காக நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு. எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன்.” பட்டென்று சொல்லி அவனைத் திணற வைத்தாள் அவள்.
“லீலா நான் பேசிக்கிட்டு இருக்கேன், தூங்கப் போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்.” என்க, “தூக்கம் வருதுன்னு அர்த்தம்” என்றாள் அவள்.
அவளுடைய பதிலில் லேசாக முகம் சுருங்கியவன் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துக் கொள்ள, கண்கள் மூடியிருக்கும் அவன் முகத்தை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்துவிட்டு, அமைதியாய் கண்களை மூடி படுத்துக்கொண்டாள் லீலா.
அறைக்குள் வந்த உடன் செல்வா தன்னைப் பார்த்த பார்வையில் இருந்த வித்தியாசம், அவனுடைய தயக்கம், வெட்கப் புன்னகை இது அனைத்தும் அவனுடைய மனதை தெள்ளத் தெளிவாக படம்போட்டு காட்டியது. இருந்தாலும் கணவனைத் தன்னிடம் கெஞ்ச வைப்பது எந்த மனைவிமார்களுக்குத் தான் பிடிக்காது.
பெண்களுக்கே உண்டான குணம் லீலாவுக்குள்ளும் மேல் எழுந்தது. அதனால் செல்வாவை தன்னை நோக்கி வரவழைக்க நினைத்து கண்களை மூடிக்கொண்டு அமைதியாய் படுத்திருந்தாள்.
“செல்வா இப்படித் தயங்கி தயங்கி தான் ரொம்ப நாளைக் கடத்திட்ட. இதுக்கு மேலேயும் தயங்கிக்கிட்டு இருக்காதே.” என்று அவனுடைய மனசாட்சிகுரல் கொடுக்க, மனதை திடப்படுத்திக் கொண்டு, “லீலா” என்று மெதுவாக அவளை சுரண்டினான்.
“என்னங்க” என்று அவளும் தூக்கத்தில் கேட்பவள் போலவே கேட்க, “தூங்கிட்டியா நான் தொந்தரவு பண்ணிட்டேனா.” நிஜமாகவே பதறித்தான் போனான் அவன்.
அவனுடைய குழந்தைத் தனத்தில் மனமிறங்கியவளாக, “பரவாயில்லை சொல்லுங்க.” என்றுவிட்டு அவன் சொல்லப் போகும் விஷயத்தை நினைத்து லேசாக சிரித்துக் கொண்டாள்.
“இல்ல வீட்டுக்கு கடைக்குட்டி அவனுக்கே குழந்தை பிறக்கப் போகுது. ஆனா நாம இன்னும் தள்ளி தள்ளி படுத்துக்கிட்டு இருக்கோம்.” இழுவையாய் சொன்னான் செல்வா.
“அதுக்கு என்ன பண்ணலாம் னு சொல்றீங்க.” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டே கேட்டாள் லீலா.
“இப்பதான் நம்ம இரண்டு பேருக்கு நடுவிலும் நல்ல ஒட்டுதல் இருக்கே. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டோம்.” என்க, “ஆமா” என்று எசப்பாட்டு பாடினாள் லீலா.
“அது வந்து… அது வந்து…” என்று இழுத்தவன் நினைத்ததை சொல்ல நினைக்க, இமைக்காமல் தன்னைப் பார்த்த மனைவியின் பார்வையில் வெட்கப்பட்டு, “ஒன்னுமில்லை நீ தூங்கு காலையில் பேசிக்கலாம்.” என்றுவிட்டு படுத்துக் கொண்டான்.
அதில் லீலாவிற்கு தான் அதிர்ச்சியாகிப் போனது. செல்வாவின் தயக்கம் புரிந்தாலும், தானாக அதைப் பற்றி பேச அவளுக்கும் வெட்கம் தடுத்தது. அதனால் அவளும் அமைதியாய் இருந்துவிட்டாள். ஓவர் பொறுப்பாக இருந்தால் இப்படித்தான் போல.
அடுத்த நாள் காலை அழையா விருந்தாளியாக அந்த வீட்டிற்கு வந்திருந்தான் கைலாஷ்.
“டேய் நாகா, செல்வா உங்க அண்ணிக்கு போட்டியா முன்னாள் காதலியைக் கூட்டிட்டு வந்திட்டான்னு கோபத்தில் உங்க அண்ணி அவங்களோட முன்னாள் காதலனை கூட்டிட்டு வந்துட்டாங்க போலயே.” சிரிப்பாய் கேட்டான் தெய்வா. வெளியில் தான் சிரித்தானே தவிர, செல்வாவை கொல்ல நினைத்ததற்காக கைலாஷின் மேல் கொலைவெறி இருந்தது உண்மை.
“அறிவில்லாம பேசாத டா முட்டாள் தெய்வா. அவங்க இப்ப நம்ம அண்ணன் பொண்டாட்டி, பார்த்து பேசு.” கோபமாய் கண்டித்தான் நாகா.
“கைலாஷ் நீங்களா நீங்க எங்க இங்க.” சாதாரணமாய் லீலா கேட்க, அவனிடம் பெருமூச்சு.
கணவனைக் கொல்ல வந்தவன் என்கிற ரீதியில் அவளுக்கும் கைலாஷிடம் கோபம் உண்டு தான். ஆனால் அவன் மேல் தொக்கி நின்ற பரிதாபம் அவனை மன்னிக்க வைத்தது.
“நான் ஊருக்கு கிளம்புறேன் லீலா. இதுக்கு அப்புறம் தமிழ்நாட்டுக்கு வரவே மாட்டேன். கடைசியா உங்க எல்லாரையும் ஒரு தடவை பார்த்துட்டு போகலாம் னு வந்தேன்.” என்று சொல்லிப் புன்னகைத்தான். அதில் உயிர்ப்பு சிறிதளவேனும் தெரியத்தான் செய்தது.
அவனால் புன்னகைக்க முடிந்ததே அவன் நலத்திற்கும், நடப்பை ஏற்றுக்கொண்டான் என்பதற்குமான எடுத்துக்காட்டு என்பதில் சற்றே நிம்மதி லீலாவிற்கு.
“வாங்க வந்து உட்காருங்க.” என்றான் செல்வா. அவனால் கைலாஷை மன்னிக்க முடிந்தது. காரணம் அவன் லீலாவைப் பின்தொடர்ந்த நாட்களைப் பற்றி தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்திருந்தாள் லீலா.
அவன் காதலும் நிஜம், அதன் கண்ணியமும் நிஜம். தங்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் லீலா அவன் காதலை ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்பதும் நிஜம்.
பாஸ்கரின் பேச்சில் தானும் ஏமாந்து இருக்கும் போது, இவனை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம் என்று அமைதியாக இருந்துவிட்டான்.
வடிவேலுவுக்கு ஆத்திரமான ஆத்திரம். ஆனால் பாதிக்கப்பட இருந்த மகனும், மருமகளுமே அவனை உபசரிக்கவும், இவனைக் கண்டிக்கிறேன் தண்டிக்கிறேன் என்று தன் பிள்ளைகளுக்கு அவமரியாதையை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைதியாய் ஒதுங்கிக்கொண்டார்.
கைலாஷிற்கு நடந்ததிலும், நடக்காமல் போனதிலும் வருத்தம் தான் என்றாலும், இன்னாருக்கு இன்னார் என்கிற ரீதியில் லீலாவிற்கு இது தான் இல்லம் என்று இறைவன் எழுதி வைத்துவிட்டான் என்னும் நிஜத்தையும், அவள் இங்கு மகிழ்வாக இருக்கிறாள் என்கிற நிதர்சனத்தையும் ஏற்றுக்கொண்டான். அதுவே அவன் மனக்காயத்தை சற்றே ஆற்றி இருந்தது.
இனி அவளை விட்டு, அவள் வாழும் இடத்தை விட்டு வெகுதொலைவு செல்வதால் அவள் நினைவும் தேய்பிறை நிலவாய் தேய ஆரம்பிக்கும் என்று கிளம்ப முடிவெடுத்தான்.
நிலவு முற்றிலுமாகத் தேய்ந்து முடிக்க நாள்கள் எடுக்கும். அந்த நாள்கள் மிகவும் வலியுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் கிரகணம் முடிந்தால் வானத்தில் இன்னொரு நிலா வளரத்துவங்கும் என்ற உண்மையை புரிந்துகொண்டான்.
தான் ஆசைப்பட்டது கிடைக்காமல் போன பின்னால், தன் நியாயமான ஆசைகள் எதற்கும் குறுக்கே நிற்காக தாய், தந்தையின் ஆசைக்கு தன்னைத் தயார் படுத்திக்கொள்வதற்காக இந்தக் கால இடைவெளியை பயன்படுத்த நினைத்தான் கைலாஷ். கிளம்பும் முன் அன்று தன்னால் சொல்ல முடியாத ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக இராதா இல்லத்திற்கு வந்திருந்தான்.
“இதையெல்லாம் என்னால் பார்க்க முடியல டா. புருஷன் லவ்வரை பொண்டாட்டி கவனிக்கிறதும், பொண்டாட்டி லவ்வரை புருஷன் கவனிக்கிறதும், இந்தக் கொடுமை எல்லாம் நம்ம வீட்டுல தான் டா நடக்கும்.” தெய்வாவிற்கு சிடுசிடுப்பாக இருந்தது.
“எது பேசுறதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பேசு. நீ பேசுற வார்த்தையில் தப்பான அர்த்தம் வருது. செல்வா மாதிரி லீலா அண்ணி ஒன்னும் அவனை விரும்பல.” கண்டிப்பாய் சொன்னான் நாகா.
“சரிப்பா நான் வாயை மூடிக்கிறேன். ஆனா ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த தெய்வா சொன்னது தான் சரின்னு உங்களுக்கு தெரியவரும்.” என்றான்.
“செல்வா நான் இங்க வந்தது உங்களையெல்லாம் வெறுமனே பார்த்துட்டு போறதுக்கு மட்டும் இல்ல. உங்க கிட்ட சொல்லாம விட்ட ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.” என்றான் கைலாஷ்.
“சொல்லுங்க கைலாஷ்” செல்வா சொல்ல, “பாஸ்கர் லீலாவைக் கொல்ல நினைச்சதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான காரணம் என்ன தெரியுமா?” என்று கைலாஷ் ஏதோ சொல்ல வரும் வேளையில்,
“செல்வா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றவாறு தன்னுடைய கைப்பையில் எதையோ தேடிக்கொண்டு வந்து நின்றாள் லேகா. அவளைப் பார்த்ததும் கைலாஷிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதான லேகா பத்தின உண்மையை இவளோ லேட்டா சொல்ல வந்திருக்க பா கைலாஷ்