
அத்தியாயம்-21
ஒரு வாரம் வெற்றிகரமாகக் கடந்திருக்க, மற்றவர் முன் சிரித்தும் பேசவில்லை என்றாலும் ஜானும் வேலைக்குப் போக, வர என்று தான் இருந்தாள். இதில் இரண்டுமுறை மதியின் வீட்டிற்கும் சென்று அவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்திருந்தாள்.
அந்த இரவுவேளை மதியையும் சேர்த்து ஐவரும் மொட்டை மாடியில் அமர்ந்திருக்க, யாவரிடமும் பலத்த யோசனை தான்.
“ஏன்டா.. எப்படிடா திரும்ப இவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வர்றது?” என்று விஷ் மண்டையை பிய்த்துக் கொள்ள,
“அது தெரிஞ்சா நாங்க ஏன்டா இங்க இருக்கோம்?” என்று யாவரும் கோரசாகக் கூறினர்.
“ஏன் மகி.. ஒருவேளை நீ எதாச்சும் டிடெக்டிவ் வேலை பார்க்கணும்னு மேஜிக் போட்டவர் நினைக்குறாரோ?” என்று ஜான் வினவ,
யாவரும் அவளைக் குறுகுறுவெனப் பார்த்தனர்.
“டேய் யோசிச்சு பாருங்க. முன்ன இப்படி நம்ம லைஃப்ல ஒரு மேஜிக் நடந்தப்போ நம்ம என்ன பேசினோம்? எத்தனை வருஷம் ஆனாலும் சிலது மாறாதுனு. சோ நமக்கு அடுத்த அம்பது வருஷத்துல உலகம் எப்படியெல்லாம் மாறியிருக்கும்னு ஒரு டெமோ காட்டிச்சு. அன்னிக்கு நான், பேயா மாறி டெஸ்ட்ல எழுத ஹெல்ப் பண்ற மாதிரி நீ எதும் கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணலாமேனு சொன்னேன் தானே? ஒருவேளை அதுபோல எதும் நீ செய்யணும்னு இருக்கோ?” என்று அவள் வினவவும் யாவருக்கும் பக்கென்று ஆனது.
“ஏன்டி வாய வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியா? எதையாவது சொல்லி வெச்சுக்கிட்டு.. டிடெக்டிவ் வேலைலாம் பார்க்க அவன் கேசுக்கு எங்க போவான்? என்ன பண்ணுவான்?” என்று அகா வினவ,
“அப்படி கேளு.. இவளுக்கு வேற வேலை பொழப்பில்லை. என்னை எப்படி பழையபடி ஆக்குறதுனு வழிதேட சொன்னா எதாவது கேஸுல கோர்க்குறதுக்கு வழி பார்க்குறா” என்று மதி கூறினான்.
“சும்மா தோனுச்சுனு சொன்னேன் போங்கடா” என்று அவள் தோள்களைக் குலுக்க,
விஷ்வேஷ் வீட்டிலிருந்து அமிர்தப்ரியாவும் அகர்ணனும் மாடிக்கு வந்தனர்.
“ஏ அகர்.. வாங்க வாங்க” என்று விஷ் வரவேற்க,
அமிர்தப்ரியா வந்து அவனருகே அமர்ந்துக் கொண்டாள்.
அகாவின் அருகே வந்து நின்ற அகர், “ஃபோன கைல வச்சுக்க மாட்டியா?” என்று வினவ,
தனது கால்சாரய் பையில் துழாவி “ஃபோன் வீட்ல.. ஏய் ஹால்ல தான் இருக்கு. ஃபோன் போட்டீங்களா?” என்று பதற்றத்துடன் எழுந்தாள்.
“இப்ப பதறு.. என்னனு சேவ் பண்ணிருக்க?” என்று அவன் வினவ,
“அகர்னு தான் பண்ணிருக்கேன்” என்றாள்.
“நல்லவேள.. உங்க நைனா தான் எடுத்தாரு. நீ மாடில இருக்கனு சொன்னாரு. சரினு வச்சுட்டேன்” என்று அவன் பெருமூச்சு விட, அப்போதே அவளுக்கும் மூச்சு வந்தது.
“போன வாரம் வரை வேற தான் சேவ் பண்ணிருந்தேன். ரூம்ல குளிச்சுட்டு இருந்தப்ப உங்க கால் வந்திருக்கு. குட்டி வாண்டு பார்த்துட்டு பேரை மாத்தி வை அப்பாவோ அம்மாவோ பார்த்துட போறாங்கனு சொல்லவும் தான் மாத்தினேன்” என்று அவள் நெஞ்சில் கைவைத்துக் கொள்ள,
“அப்படி என்னத்த போட்டுச் சேவ் பண்ணிருந்தீங்க அம்மணி?” என்று ஜான் வினவினாள்.
அப்போதே ஜான்விகாவைப் பார்த்த அகர், அவள் முகத்தில் இருந்த தெளிவு கண்டு ஏதும் கேட்டு மனதை வருத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் இயல்பாய் ஒரு புன்னகை புரிந்து, “அதான என்ன போட்டிருந்த?” என்று வினவினான்.
“அ..அதெல்லாம் எதுக்கு இப்போ? சரி எதுக்கு போட்டீங்கனு சொல்லுங்க?” என்று கேட்க,
அனைவரையும் பார்த்துக் கொண்டவன் தன் தலையைக் கோதியபடி, “வெளிய போகணும் வா” என்றான்.
அவனுடன் அகா வெளிய செல்வதெல்லாம் அரிதிலும் அரிதுதான்.
மாய உலகம் விட்டு வந்து, தன்னவனைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கித் தவித்து அவனை இப்பூமியில் கண்டுகொண்ட சந்திப்பில் தான் அவனை அவள் அணைத்துக் கொண்டதே என்ற போது, அவர்களின் அன்புப் பரிமாற்றம் எல்லாம் கண்கள் மற்றும் அலைபேசி வழியே தான்.
இப்படி அவ்வப்போது சந்திக்கும் போது இரண்டு வார்த்தைகள் பேசிக் கொள்வான். எப்போதாவது அவளைக் கூட்டிக் கொண்டு கோவில் செல்வான். அதுவும் அனைவரும் இருக்கும் தருவாயில் கேட்டதில்லை. அலைப்பேசியில் முன்பே அவன் கூறிடவே, தோழர்களிடம் அதைக் கூறி அவர்கள் கேலியிலிருந்து தப்பி ஓடிச்செல்வாள்.
இன்று அவன் அனைவர் முன்பும் பளிச்சென்று கேட்கவும் என்றுமில்லா வெட்கம் அவளைச் சூழ்ந்து கொள்ள,
“அ..ஆங்?” என்றாள்.
“வெளிய கூப்பிடுறாருமா.. வெளிய வெளிய.. போயிட்டு வாங்க” என்று துரு கூற,
யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
அதில் சிவந்து நின்றவள் அகர்ணனை முறைக்க, கண்கள் சுருங்கி ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான்.
“வ.. வரேன் போங்க” என்றவள், இவர்கள் பக்கம் திரும்ப,
“சத்தியமா சொல்றேன் அகா.. உனக்குள்ளயும் இப்படியான பெண்மை குணங்கள் இருக்குனு நம்ம காலேஜ் படிச்ச காலத்துல எவனாவது சொல்லிருந்தா நம்பிருக்கவேமாட்டேன்” என்று ஜான் கூறினாள்.
அதற்குமேல் தாங்காது, “ப்ச்.. போடி. நான் வரேன்” என்று அவள் நகர்ந்நிட,
“ம்ம் ம்ம்.. போயிட்டு வாங்க மேடம்” என்று துருவனும், “ஹேவ் ஃபன் டார்லி” என்று விஷ்வேஷும் கூறினர்.
“அவன பாக்காம இவ தவிச்ச தவிப்பென்ன இப்ப இருக்கும் நிலையென்ன? நினைக்கவே புல்லரிக்குதுடா” என்று துரு கூற,
“கியூட் டா. அகால்லாம் வெக்கம் மானம் சூடு சுரணைன்னு எதுவும் இருந்து பார்த்ததில்லை. ஆனா இப்ப பாரு.. இந்த லவ் எவ்வளவு மேஜிகல்ல?” என்று விஷ் கூறினான்.
“பாரு.. அது பிள்ளை எவ்வளவு அழகா அகர் கூப்பிட்டதும் வெட்கம் பட்டுட்டு போகுது. நீயெல்லாம் நான் கூப்டா கூடச் சண்டைக்கு வர்றமாதிரி தான் வருவ” என்று மதி கூறியதும் துருவும் விஷ்ஷும் பக்கெனச் சிரித்து வைத்தனர்.
அமிர்தா இவர்களை விசித்திரமாகப் பார்க்க, “அவ வெட்கப்பட்டதை நினைச்சு சிரிப்பா வருது” எனச் சமாளித்தான்.
சில நிமிடங்களில் துரு, விஷ் மற்றும் அமியும் சென்றுவிட, தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன், “ஏன் மாமா உங்களுக்கு விவஸ்தையே இல்லையா? பாவம் ஜானுக்கா. இப்பதான் அவங்க லவ்வர இழந்துட்டு இருக்காங்க. அவங்க முன்ன வச்சே இப்படி லவ், மேஜிக் அது இதுனு சொன்னா அவங்க வருத்தப்பட மாட்டாங்களா? நான் அவங்க அகா பார்த்துப் பொறாமை படுவாங்கனு சொல்லலை. ஆனா பாவமில்லையா அவங்க? நீங்களும் இன்னும் அந்த ஃபீலிங்ஸ் கொடுக்குற போல பேசுறீங்களே” என்று கேட்டாள்.
மனைவி கேட்டதில் மென்மையாய் புன்னகைத்தவன், அவள் கன்னம் தாங்கி, “சரிங்க மகாராணி.. இனிமே சொல்லலை” என்க,
“என்னவோ போங்க” என்று நகரப் பார்த்தாள்.
எங்கே முடிந்தது? கணவன் பிடியில் மாட்டிக் கொண்ட அந்தப் பட்டாம்பூச்சியின் இமைகள் சிறகடிக்க, “வி..விடுங்க மாமா” என்றாள்.
“விடுறதுக்காடி புடிக்குறேன்” என்றவன் அவள் இதழ்களோடு புதைய, அழகாய் ஒரு கவி அங்கே பிறப்பெடுத்தது!
அங்குக் கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கிவிட்டு மகிழுந்தில் வீடு திரும்புகையில், “அவி.. என் பெயர என்னனு சேவ் பண்ணிருந்த?” என்று ஆர்வத்தோடு அகர் கேட்டான்.
“அ..அதெதுக்கு?” என்று அவள் வினவியபடி பார்வையை வெளியே திருப்பிக் கொள்ள,
வண்டியை ஓரம் கட்டிவிட்டு அவளைச் சுண்டி தன்னை நோக்கி இழுத்தான்.
நடுவில் உள்ள கியர் பாக்ஸ் தடுத்து நிறுத்த, “அ.. அகர்” என்று தடுமாறினாள்.
“சொல்லுமா..” என்று அவன் வினவ,
தனது அலைபேசியை எடுத்து ஒரு நிழல்படத்தைக் காட்டினாள்.
‘My first & last’ என்பதுடன் ஒரு முத்தம் கொடுக்கும் இமோஜியும் இருக்க,
“டெ..டெலிட் பண்ணப்போ எஸ் எஸ் எடுத்து ஹைட் பண்ணி வெச்சுக்கிட்டேன்” என்றாள்.
அதை அழகான புன்னகையுடன் கண்டு ரசித்தவன், “லவ் யூ அவி” என்க,
கண்கள் லேசாகக் கலங்க இதழில் நிறைவான புன்னகையுடன் அவனைப் பார்த்து, “லவ் யூ டூ அகர்” என்றாள்.
அன்றைய நாள் அதே அழகுடன் முடிந்துவிட, மறுநாள் காலையும் அமைதியாகப் பிறந்தது.
எப்போதும் போல் யாவரும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்ல, அமைதியும் அடக்கமுமாய் புறப்படும் ஜான் வேலைக்குச் சென்றுவிட்டால் கலகலவென்று மாறிவிடுவாள்.
அங்கு அவளது காதல், காதலன் மரணம் என்று ஏதும் யாருக்கும் தெரியாது என்ற பட்சத்தில் அவளை அடக்க அங்கு யாருமில்லை.
வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவள், “தோழர்களைப் பார்த்து நான் வெளிய போறேன். நீங்க வீட்டுக்குப் போங்க” என்று கூற,
“எங்க போகப்போற?” என்று மதி கேட்டான்.
“உன்னைப் பாக்கதான்” என்று அவள் கூற,
“நான் இங்கதானடி இருக்கேன்” என்றான்.
“ப்ச்..” என்றவள் தோழர்களைப் பார்க்க, “அவன் என்னடா பண்ணுவான். பார்ட் டைமா செத்து போயிருக்கான். உடம்பு இல்லை உயிர் மட்டும் தான்னு அவனுக்கே மனப்பாடமாகலை. அதான் அப்படி சொல்றான். நீங்க போயிட்டு வாங்க” என்று விஷ் கூறினான்.
சரியென்று புறப்பட்டவள் அவனை வைத்திருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல, “எதுக்கு ஜானு இங்க வந்து என்னைப் பார்த்துக்குற? என்மேல அம்புட்டு பாசமா?” என்று மதி வினவினான்.
“இல்லையா பின்ன? இவ்ளோ பெரிய ஆஸ்பிடல்ல எவனாவது தெரியாம உன் பாடிய மாத்திட்டா நான் என்ன பண்ண? அதான் வந்து செக் பண்ணிக்குறேன்” என்றாள்.
“அடியே.. பீதி ஏத்தாதடி” என்று அவன் பதற,
“ம்ம்.. பயமா இருக்குல்ல? அதே தான் எனக்கும்” என்று கூறினாள்.
துருவனின் தோழன்மூலம் உள்ளே சென்றவள் மதியின் உடலிருக்கும் அடுக்கைக் கேட்டுக் கொண்டாள். அந்தப் பனிப்பெட்டியை அவன் திறந்து கொடுத்துவிட்டுச் செல்ல, “பயமா இருக்கு மகி.. சீக்கிரம் நீ திரும்ப வந்துடுவல?” என்று வினவினாள்.
“வருவேன்னு தான் நம்புறேன்” என்று அவன் கூற,
“ஹ்ம்..” என்ற பெருமூச்சுடன் அவனது முகத்தைத் தொட்டவள் சட்டெனப் பதற்றத்துடன் அதிலிருந்து கையை எடுத்துக் கொண்டாள்.
“என்னடி?” என்று மதி வினவ,
“ம..மகி.. சுடுறடா” என்றாள்.
“சுடுறேனா? ஐஸ்ல வச்சதால காச்சல் வந்துடுச்சா?” என்று அவன் புரியாமல் வினவ,
“டேய் லூசு.. செத்துபோன எப்படிடா காச்சல் வரும்?” என்றாள்.
“ஆமா..” என்றவன், “திரும்பச் செக் பண்ணு” என்க,
அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
உடல் விரைக்கவில்லை, இறுகவில்லை, குளிர்ச்சியில்லை. காய்ச்சல் வந்து படுத்துக்கிடக்கும் உயிர்ப்புள்ள மனிதனைப் போல் உடலின் வெப்பம் குறையாது தான் இருந்தது அவன் உடலில்.
“மகி.. உன் பாடில பயாலஜிகல் சேஞ்சஸ் எதுவும் மாறாது போலடா” என்று ஜான் கூற,
“அதெப்படி ஜான்? உயிரில்லாத உடம்பு அழுகித்தான போகும்?” என்றான்.
“உடல்ல இருந்து உயிர் பிரிஞ்சு இப்படி வந்து நிக்குறதே மேஜிக் தான். இதுவும் ஏன் அந்த மேஜிக்கோட வேலையா இருக்கக் கூடாது?” என்று ஜான் வினவ, சற்றே யோசித்தவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.
“சீக்கிரம் வாடா. துருகிட்ட சொல்லி உன்னோட உடம்பை வீட்டுக்கே எடுத்துட்டு போயிடலாமானு கேட்போம். இங்கயே வச்சிருக்குறது அவ்வளவு சேஃபா எனக்குப் படலை” என்று கூறியவள் துருவனுக்கு அலைபேசியில் அழைத்துக் கூப்பிடாது நேரில் பேசச் சென்றதே அவள் செய்த பெருந்தவறாகிப் போகுமென்று அப்போது அறிந்திருக்கவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

இவன் என்னத்த டிடெக்டிவ் வேலை செஞ்சு என்னத்த துப்பறியரது.
பார்ட் டைம் வேலை அதான் ஒன்னும் புரியல பாவம். 🤣🤣
“உயிர் மட்டுமே உடல் இல்லைனு” imposition கொடுப்போம் ஆன்மா மண்டைக்குள்ள ஏறுதா பார்க்கலாம்.
குளு குளு பெட்டில இருந்து காய்ச்சல் வந்துட்டா மகி? 🤣🤣