Loading

துஷ்யந்திற்கு கேக்கை ஊட்டி முடித்த பரத் அடுத்து, “தாத்தா… பாட்டி… இந்தாங்க.” என துஷ்யந்தின் பெற்றோரைப் பார்த்து கேக்கை நீட்டவும் பெரியவர்கள் இருவருக்கும் திக் என்றானது.

ஏற்கனவே துஷ்யந்தை சகுந்தலாவுடன் இணைத்து வைத்துப் பார்க்கும் போது தம்மையும் மீறி மனதிற்குள் சிறு குழப்பம்.

இதில் பரத் வேறு இவ்வாறு அழைக்கவும் இருவருக்குமே ஒரு நொடி அதிர்ச்சி.

துஷ்யந்த் மெதுவாக தொண்டையைச் செறுமவும் தான் இருவரும் தன்னிலை அடைந்து பரத் நீட்டிய கேக்கை வாங்கிக் கொண்டனர்.

பெரியவர்களின் அதிர்ச்சி, துஷ்யந்தின் சமாளிப்பு என எல்லாம் சகுந்தலா அவதானித்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் அதன் காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை.

அதைப் பற்றி மேலும் ஆராய நேரம் கொடுக்காது, “சாக்லேட் அங்கிள்… உங்க மம்மியையும் டேடியையும் பரத் தாத்தா பாட்டின்னு கூப்பிடலாமா? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரெண்டு தாத்தா, ரெண்டு பாட்டின்னு இருக்காங்க. ஆனா பரத்துக்கு மம்மி மட்டும் தான்.” என துஷ்யந்திடன் கேட்டான் பரத்.

அதனைக் கேட்டு சகுந்தலாவின் விழிகளில் சட்டென ஈரம் படர, பெரியவர்களது நெஞ்சிலும் பெரும் பாரம் ஏறியது.

அவர்களின் வருத்தம் எல்லாம் ஏன் இந்த பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை எதுவும் அறியாத இந்தக் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள் என்பதே.

பரத்தின் கேள்வியில் துஷ்யந்த் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தான்.

பெற்றோருக்கும் ஒரு சிறு பிள்ளைக்கும் இடையில் மாட்டிக் கொண்டவனோ தன் பெற்றோரை ஏக்கமாக நோக்க, மகனின் முகத்தில் குடியிருந்த சோகம் அந்தப் பெரியவர்களையும் தாக்கியது.

மறு நொடியே பரத்தை தன் அருகே அழைத்து அவனின் தலையை பரிவாக வருடி விட்ட பரிமளம், “தாராளமா கூப்பிடலாம் டா கண்ணா. இனிமே யார் கிட்டயும் உனக்கு யாரும் இல்லன்னு சொல்லக் கூடாது. உனக்கு தான் மம்மி, உன்னோட சாக்லேட் அங்கிள், இதோ இப்போ தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்காங்களே. உனக்கு என்ன வேணும்னாலும் எங்க கிட்ட கேட்கலாம். என்னங்க சொல்றீங்க? நான் சொல்றது சரி தானே.” என பரத்திடம் ஆரம்பித்து தன் கணவரிடம் முடித்தார்.

சந்திரசேகரனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தவாறு பரத்தின் தலையைக் கோதி விட்டார் புன்னகையுடன்.

துஷ்யந்த் உடனே தன் தாயை பாய்ந்து அணைத்துக்கொள்ள, சகுந்தலாவும் கண்களில் கண்ணீருடன் நன்றியுடன் இரு கரம் குவித்தாள்.

சகுந்தலாவின் கூப்பியிருந்த கரங்களைக் கீழிறக்கி விட்ட பரிமளம் இமைகளை மூடித் திறந்து அவளுக்கு ஆறுதல் அளித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து சிறுவர்கள் அனைவரும் கிளம்பி விட, அன்றைய நாள் தந்த அலைச்சலில் பரத்தையும் விரைவாகவே உறக்கம் தழுவியது.

பரத்தை தூங்க வைத்து விட்டு சகுந்தலா அறையை விட்டு வெளியே வர, துஷ்யந்த் தன் தந்தையுடன் பரத்தின் உடல்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

பரிமளம் பாதி புரிந்தும் புரியாததுமாக அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க, ஒரு ஓரமாக வந்து நின்ற சகுந்தலாவை முதலில் அவதானித்தது என்னவோ சந்திரசேகரன் தான்.

“இங்க வாம்மா… பரத்தோட ட்ரீட்மெண்ட்ஸ் பத்தி தான் பேசிட்டு இருந்தோம். இங்க வந்து உட்கார் மா.” என சந்திரசேகரன் அழைக்கவும் தயக்கமாக வந்து பரிமளத்தின் அருகே சகுந்தலா அமர்ந்துகொள்ள, அவளின் கரத்தைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார் பரிமளம்.

“பரத்தோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் நான் பார்த்தேன் மா. நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேணாம். என் பையன் எல்லாம் பார்த்துப்பான். மெடிகேஷன் எல்லாம் சரியா ஃபாலோ பண்ணுங்க. முன்ன விட பரத் கிட்ட இப்போ நிறைய முன்னேற்றம் இருக்குன்னு நினைக்குறேன் நான். கூடிய சீக்கிரமே பரத்துக்கு பொருத்தமான ஒரு ஹார்ட் நிச்சயம் கிடைக்கும். நானும் எனக்குத் தெரிஞ்ச இடங்கள்ல சொல்லி வைக்கிறேன்.” என்றார் சந்திரசேகரன் ஆறுதலாக.

துஷ்யந்தே முன் நின்று பரத்தின் சிகிச்சைகளைக் கவனித்துக் கொள்வதிலேயே சகுந்தலாவிற்கு நம்பிக்கை வளர்ந்திருக்க, இப்போது அவனின் தந்தையும் அவ்வாறே கூறவும் தன் மகன் விரைவில் குணம் அடைவான் என பூரணமாக நம்பினாள் சகுந்தலா.

“ரொம்ப நன்றி அங்கிள். உங்க எல்லாருக்கும் நான் நிறைய கடமைப்பட்டு இருக்கேன். முன்ன பின்ன யாரையும் பழக்கம் இல்லாம தனி ஆளா என் பையனையும் வெச்சிக்கிட்டு என்ன பண்ணுவேன்னு ரொம்ப யோசனையா இருந்தது. ஆனா நான் கேட்காமலே துஷ்யந்த் அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார். இப்போ நீங்களும்… இனிமே என் பையன நினைச்சி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு.” என்றாள் சகுந்தலா ஆனந்தக் கண்ணீருடன்.

“இனிமே நீ தனி ஆள் இல்லம்மா. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். நீயும் எங்களுக்கு பொண்ணு மாதிரி தான் மா.” என பரிமளம் கூறவும் வாய் விட்டே அழுது விட்டாள் சகுந்தலா.

அவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது.

பெற்ற மகளை நம்பாமல் அவளுக்கு உறுதுணையாய் நிற்காமல் வார்த்தைகளால் கொன்ற தன் தாயை நினைக்கும் போது பரிமளத்தின் அன்பில் அவ்வளவு ஒரு நிறைவு அவளுக்கு.

மனம் விட்டு சற்று நேரம் அழுது கொள்ளட்டும், அப்போதாவது சகுந்தலாவின் மனதிலுள்ள வலிகள் குறையும் என மற்ற மூவருமே அவளை அவள் பாட்டில் விட்டனர்.

சில நொடிகள் கழித்து தன்னை சமாதானம் செய்து கொண்டு சகுந்தலா நிமிர, நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு பரிமளமே பேச்சை ஆரம்பித்தார்.

“பரத்தை பார்க்கும் போது எனக்கு நம்ம வீட்டுல எப்போ குழந்தை சத்தம் கேட்கும்னு ஆசையா இருக்கு. ஆனா என்ன பண்ணுறது? எனக்கு இருக்குறதே ஒரே ஒரு பையன் தான். அவனும் நான் கண்ண மூடுறதுக்கு உள்ள காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி குழந்தை குட்டின்னு செட்டில் ஆகுற வழிய காணோம்.” என்றார் பரிமளம் பெருமூச்சுடன்.

“அம்மா…” என துஷ்யந்த் அதட்ட, சகுந்தலா குழப்பமாக துஷ்யந்தின் முகத்தைப் பார்த்தாள்.

“ப்ச்… சும்மா இரு டா. ஆம்பளைங்க உங்களுக்கு தான் என் கஷ்டம் புரியல. வீட்டுக்குள்ளயே அடைஞ்சி இருக்குற எனக்கு தானே தெரியும். இந்தப் பொண்ணுக்காவது என் கஷ்டம் புரியட்டும்.” என பரிமளம் ஆரம்பிக்க, துஷ்யந்த் தன் தந்தையை உதவிக்கு அழைத்தான்.

“இந்த விளையாட்டுக்கு நான் வரல ப்பா. அம்மாவும் பையனும் என்னவோ பண்ணுங்க. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துக்கிட்டு என் தலைய தான் உருட்டுவீங்க.” என அப் பேச்சில் இருந்து நழுவினார் சந்திரசேகரன்.

இவற்றை எல்லாம் சகுந்தலா சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு இயல்பான குடும்ப சூழ்நிலையைப் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது.

“என்னன்னு நான் சொல்றது ம்மா? இந்தப் பையன் கிட்ட நானும் வித விதமா பொண்ணுங்க ஃபோட்டோ காட்டிட்டேன். இவன் என்னன்னா அந்தப் பொண்ணுக்கு மூக்கு சரி இல்ல, முழி சரி இல்லன்னு சொன்னா கூட பரவால்ல. ஆனா சாரோட எதிர்ப்பார்ப்புகள்னு ஒரு பெரிய லிஸ்ட்டையே அடுக்குறான். எல்லாம் சொல்லிட்டு நான் சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவாராம் னு ஒரு டயலாக் வேற. நீயே இதுக்கு ஒரு நியாயத்தை சொல்லு மா.” என்றார் பரிமளம் சகுந்தலாவிடம்.

பதிலுக்குப் புன்னகைத்த சகுந்தலாவோ துஷ்யந்தை கேள்வியாக ஏறிட, அவனோ மறு பக்கம் திரும்பி சங்கடமாக முடியைக் கோதிக்கொண்டான்.

“நீயாச்சும் உன் ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் புத்தி சொல்லு மா.” எனப் பரிமளம் கூறவும், “முடிஞ்சதா? இப்போ சந்தோஷமா?” எனக் கேட்டான் துஷ்யந்த் இடுப்பில் கை வைத்து கடுப்பாக.

“அட இரு டா. இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு எனக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிருக்கு. நீ வேற நடுவுல தொந்தரவு பண்ணிக்கிட்டு.” என்ற பரிமளம் துஷ்யந்த் சிறு வயதில் செய்த அட்டூழியங்களில் இருந்து இப்போது வரை செய்யும் அலப்பறைகள் என ஒவ்வொன்றாய் சகுந்தலாவிடம் கொட்டினார்.

அதனைக் கேட்கும் போது சகுந்தலாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது.

தான் பார்த்து வளர்ந்த துஷ்யந்திற்கும் வீட்டில் இருப்பவனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

நேரம் செல்வதைக் கூட உணராது அனைவரும் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“ஆனா என்னவோ தெரியல மா.‌ இவனுக்கு ஃப்ரெண்ட்ஸ்னு மட்டும் யாருமே இல்ல. எப்போ பாரு புத்தகமும் கையுமா இருந்தா எவன் வருவான் ஃப்ரெண்டா? முதல் முறையா உன்ன தான் ஃப்ரெண்ட் னு சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கான். அதுவும் ஒரு பொண்ணுன்னு சொல்லவும் எங்களுக்கு ரொம்பவே ஆச்சரியம். அதுக்குள்ள இடைல என்ன என்னவோ நடந்துடுச்சு. இப்போ உன்ன நேர்ல பார்க்கவும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு மா.” என்றார் பரிமளம் முழு மனதாக புன்னகையுடன்.

இது தான் பரிமளம். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்.

ஒருவர் மீது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பு வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

பரிமளத்துடன் பழகும் போது தான் துஷ்யந்தின் இந்த சுயநலமில்லாத உதவும் குணம் எங்கிருந்து அவனுக்கு வந்து இருக்கிறது என சகுந்தலாவிற்குப் புரிந்தது.

அதே நேரம் துஷ்யந்தின் கரத்தில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் வேகமாக சத்தமிடவும் அனைவரும் என்னவோ ஏதோவெனப் பார்க்க, துஷ்யந்தோ பதட்டமாக பரத்தின் அறைக்கு ஓடினான்.

அதன் பின்னரே அனைவருக்கும் நிலைமையின் விபரீதம் புரிய, அவசரமாக துஷ்யந்தைப் பின் தொடர்ந்து ஓடினர்.

சகுந்தலாவோ மகனுக்கு என்னவோ என அழும் நிலைக்கே சென்று விட்டாள்.

துஷ்யந்த் சென்று பார்க்கும் போது உறக்கத்தில் இருந்த சிறுவனின் உடல் முழுவதும் வியர்த்துப் போட்டிருக்க, உறக்கத்திலேயே அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தான்.

கூடவே பரத்தின் முகத்தில் இருந்த அசௌகரியத்தையும் கண்டு கொண்ட துஷ்யந்த் அவசரமாக பரத்தை தன் மடியில் எடுத்து, “சேம்ப்… சேம்ப்… இங்க பாருங்க.” என்றவாறு அவனின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான்.

இன்னுமே பரத் கண் விழிக்காமல் அசௌகரியமாக முகத்தை வைத்துக் கொண்டு, சின்ன சத்தத்தில் சிணுங்கியவாறு துஷ்யந்தின் மடியிலேயே உருண்டான்.

“என்னாச்சு துஷ்யந்த் என் பையனுக்கு? ஏன் இப்படி?” என சகுந்தலா கண்ணீருடன் பதட்டமாக வினவ, பரிமளம் அவளைத் தன்னுடன் அணைத்து சமாதானப்படுத்தினார்.

துஷ்யந்தோ சகுந்தலாவின் கேள்விக்கு பதில் அளிக்காது பரத்தின் நெஞ்சில் காதை வைத்து அவனின் இதயத் துடிப்பைப் பரிசோதித்தான்‌.

அதுவோ இரு மடங்கு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்க, துஷ்யந்தின் முகத்தில் பதட்டம்.

“பரத்தோட மெடிசின்ஸ் எங்க?” என துஷ்யந்த் சகுந்தலாவிடம் கேட்கவும் அவசரமாக அதை எடுக்க ஓடினாள் சகுந்தலா.

அதே நேரம் சந்திரசேகரன் துஷ்யந்தின் காரில் இருந்த அவனின் மெடிக்கல் கிட்டுடன் வேகமாக அங்கு வந்தார்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்