Loading

அத்தியாயம்-19

 

மறுநாள் காலை.. தோழர்கள் நால்வரின் மொத்த குடும்பமுமே மதியின் வீட்டில் கூடியிருந்தது. 

 

“என்னடா நாலு பேர் ஃபேமிலியும் ஆஜர் ஆயிருக்கு” என்று ஜான் சோக முகத்துடன் விஷ்ஷிடம் முணுமுணுக்க, 

 

“பைத்தியமே நீ தானே என் லவ்வரு. இவங்க எல்லாருக்கும் நீ செல்லப் பொண்ணு. உன்னோட வருங்காலம் நான் செத்துட்டா எல்லாரும் தான வருவாங்க” என்று மதி கூறினான்.

 

“டேய் இவன போகச் சொல்லுடா. சும்மாவே எனக்கு அழுக வரமாட்டுது. இதுல இவன் பக்கத்துல நின்னா எனக்குச் சிரிப்பு தான் வரும். சாவு வீட்ல சிரிச்சு வெச்சுட போறேன். அப்புறம் இவனுங்க எல்லாம் சேந்து, இவன் செத்துப்போன சோகத்துல எனக்கு பித்துப் புடிச்சுப் போச்சுனு கீழ்பாக்கத்துல சேத்துடப் போறானுங்க” என்று அவள் முணுமுணுக்க, 

 

“பாவம் வாழ்க்கையவே தொலைச்சுட்டு அந்தப் பிள்ளை பைத்தியமா நிக்குதேடா. இப்படி விட்டுட்டு போயிட்டியே” என்று நேற்று புலம்பிய அதே பாட்டி மீண்டும் ஹை டெசிபெலில் புலம்பினார்.

 

அதில் மதி உருண்டு உருண்டு சிரிக்க, இவளோ கண்களை மூடிக் கொண்டு ‘இறைவா.. இப்படி சாவடிக்குறானே? இதுதான் செத்தாலும் சனியன் உன்னை விடாதுங்குறதா? தோ பாரு கிராணி.. உன் பேரன் செத்துப்போவலை.. என்னைத் தான் சாவடிச்சுட்டுக் கிடக்கான்’ என்று மனதோடு புலம்பினாள்.

 

“பாருடா பாரு.. உன்ன இந்தக் கோலத்துல பார்க்கக் கூட முடியாம அந்தப் புள்ள நிக்குறத பாரு” என்று அவர் அழ, 

 

‘பார்த்துட்டு தான கிழவி இருக்கான்.. நீ வேற காமெடி பண்ணாத தாயி.. இந்த ஆம்புலென்ஸ் காரன் எப்ப வந்து தொலைவானோ தெரிலையே’ என்று மனதோடு ஜான்விகா புலம்பினாள்.

 

சில நிமிடங்களில் ஆம்புலென்ஸ் வாகனத்தின் சத்தம் கேட்க பட்டெனக் கண்கள் திறந்தாள். 

 

உள்ளே வந்த ஒருவர், “மதிமகிழன் வீடு இதுதானே?” என்க, 

 

ஆங்காங்கே மீண்டும் அழுகையின் ஓலம் எழுந்தது. 

 

மதியின் தந்தை வந்து, “எ.. என் பையன் தான் சார்” என்று அங்குள்ள கண்ணாடிப் பேழையைக் காட்ட, 

 

“அவரு உடல் உறுப்புத் தானத்துக்கு எழுதிக் கொடுத்திருக்காரு. உடல் உறுப்புக்களை கலெக்ட் பண்ணிக்கிட்டு பாடிய கொடுக்குறோம்” என்று கூறினான்.

 

அவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்த மதியின் தாய் மாதவி, “என் பையன் அப்படி ஒன்னும் எழுதிக் கொடுக்கலையே” என்க, 

 

“ஆமா சார். நீங்க வேற யாரோனு நினைச்சு வந்துட்டீங்கனு நினைக்குறேன்” என்று பாலாஜியும் தோய்ந்த குரலில் கூறினான். 

 

போலியாக அச்சடித்துத் தயாராக வைத்திருந்த சான்றிதழ் ஒன்றை காட்டியவன், “சார்.. அவங்க பாடிலருந்து ஆர்கன்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஹேண்ட் ஓவர் பண்ணிடுறோம்” என்று கூற, 

 

அதற்குமேல் ஒன்றும்பேச முடியாமல் பாலாஜி ஒப்புக் கொண்டார். 

 

“என் பையன் நாலு பேர் மூலமா வாழுற நிம்மதியாவது கிடைக்கட்டும். எடுத்துட்டுப் போப்பா” என்று பாலாஜி கூற, 

 

சடலத்தை எடுத்து வண்டியில் ஏற்றினான்.

 

தானும் சென்று ஏற இருந்த பாலாஜியை “மாமா” என்ற அழைப்பில் தடுத்த ஜான்விகா, 

 

“நா.. நான் போறேன் மாமா. அ..அவர்கூட க.. கடைசியா ஒரு தடவ ட்..டிராவல்..” என்று அதற்குமேல் கூற முடியாமல் வாயடைத்ததைப் போல் முகத்தை மூடிக்கொண்டு “அஹ..அஹ..அஹ” என்று அவள் அழ, இல்லை இல்லை அழுவதைப் போல் நடிக்க, 

 

“ஜானு பேபி..உனக்குள்ள இப்படியொரு திறமையா?” என்று மதி வினவினான்.

 

‘அய்யோ இவன் வேற படுத்துறானே’ என்று நொந்தவள் இல்லாத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவரைப் பாவமாகப் பார்க்க, 

 

“தனியா வேணாம்டா. வா நானும் வரேன்” என்று கூறினார். 

 

“நீங்க அத்தைய பாருங்க மாமா. பெரியத்தான் வேற வந்துட்டு இருப்பாரு. நானும் விஷ்வேஷும் போறோம்” என்று சோகமாகக் கூறினாள். 

 

ஆனால் அதற்கெல்லாம் அசராத அந்த மனிதர், “வாடா மூனு பேருமே போவோம்” என்று விடாப்பிடியாக ஆம்புலென்ஸில் ஏறிவிட, 

 

இங்கு இவளுக்குப் பதற்றம் உச்சத்தைத் தொட்டது. 

 

“ஏ ஜானு பேபி. என்னடி எங்கப்பாவும் வர்றாரு?” என்று மதி வினவ, 

 

‘அய்யோ டேய்.. உன் நைனா வர்றதுக்கு நான் என்னடா பண்ணுவேன்?’ என்று நொந்தவள் ‘இதை எப்படி அவனுங்களுக்கு சொல்றது?’ என்று குழம்பியபடி விஷ்வேஷைப் பார்த்தாள்.

 

அவன் தன் கண்களை மூடித்திறந்து அவளை ஆறுதல் படுத்திவிட்டு, துருவனுக்கு அனைத்தையும் குறுஞ்செய்தியாக அனுப்பிட, 

 

அங்கு துருவனும் அகாவும் அதைப் பார்த்துத் தலை வெடிக்காத குறையாக இருந்தனர்.

 

“இருக்குற தொல்லைல இந்தாளு வேற” என்று அவன் பொறிய, 

 

“டேய் பெரியவருடா” என்று அகா கூறினாள். 

 

“அடியே.. எதாச்சும் சொல்லிட போறேன். டென்சன் ஏத்தாத” என்று தலையைப் பிய்த்துக் கொண்டவனுக்கு மூளைக்குள் ஒரு மணியடிக்க, அவளையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 

சில நிமிடங்களில் அங்கு வாகனம் வந்து நிற்க, ஸ்டிரெட்சரை ஓட்டுனர் இறக்கியதும், அவர்களை நோக்கி மருத்துவ உடையில் கையுறை, முக கவசம் என்று அத்தனையும் அணிந்துகொண்டு டிப் டாப்பாக ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர்.

 

அந்த ஓட்டுனருடன் பேசி ஸ்டிரெச்சரை கைப்பற்றியவர்களில் அப்பெண், “அங்க வெயிட் பண்ணுங்க சார்” என்று கீச் கீச் குரலில் கூற, 

 

“அட நம்ம அகா” என்ற மதி “இதென்னடா புது கெட்டப்பு?” என்று சிரித்தான்.

 

அவனை முறைத்து விட்டு இருவரும் அவன் உடலைக் கொண்டு செல்ல, 

 

ஜான், விஷ் மற்றும் பாலாஜி சென்று அமர்ந்தனர். 

 

உடலைக் கொண்டு வந்த துருவன், தனது தோழனிடம் கொண்டு சென்று, “டேய்.. இதுதான்டா. பேரு மதிமகிழன். கொஞ்ச நாள் மட்டும் இந்த பாடிய இங்க பத்திரமா வச்சுக்கணும்” என்று கூறினான்.

 

சற்றே பயந்த முகத்துடன், “டேய்.. என்னாச்சுடா? இவர் எப்படி செத்தாரு?” என்று அவன் வினவ, 

 

“மச்சி என்னை நம்பு. இது கொலை கேஸ்லாம் இல்லை. இப்ப சொன்னா உனக்கு எதுவும் புரியாது. பாடிய பத்திரமா வச்சுக்கடா. திரும்ப வாங்கிக்கும்போது எக்ஸ்ப்ளைன் பண்றேன். ப்ளீஸ்டா” என்று துருவன் கெஞ்ச, 

 

“எதும் பிரச்சினை ஆகிடாதுல?” என்றான்.

 

“எந்தப் பிரச்சனையும் வராது. நான் கேரெண்டி தரேன். இதோ இவ மேல சத்தியம்” என்று அருகில் இருப்பவள் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய, 

 

பதற்றத்துடன் அவனைப் பார்த்தவள் அவன் தோழன் முன்பு ஏதும் பேச இயலாது வாயை மூடிக் கொண்டாள்.

 

“சரிடா” என்று உடலை வாங்கி உள்ளே கொண்டு சென்று பத்திரப்படுத்தியவன், முன்பே துருவன் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளயிருந்த உடலைக் கொண்டு வந்து தந்தான். 

 

“இந்தா மச்சி. நீ கேட்டது. அவ்வளவு தான? கவலையேபடாத. பாடி பத்திரமா இருக்கும். இங்க தான் எனக்கு வேலை. அதனால நீ எதும் பயப்பட வேணாம்” என்று கூற, 

 

“ரெம்ப தேங்ஸ்டா” என்றான்.

 

உடலைக் கொடுத்துவிட்டு அவன் சென்றிட, துருவன் தோளைச் சொறிந்த அகா, “எனக்கு ஒரு டவுட்டுடா” என்க, 

 

“என்னா?” என்றான். 

 

“இல்ல.. இந்தப் பாடிய எப்படி அவங்கட்ட தர? போஸ்ட் மார்டம் பண்ணி உடம்பை தான் மூடிக் கொடுப்பாங்க. மூஞ்சிய மூடினா ஏன்னு கேக்க மாட்டாங்க?” என்று கேட்டாள்.

 

“ஆத்தீ.. இத மறந்துட்டேனே” என்ற துருவன், “நீ முதல்ல மூஞ்சிய கவர் பண்ணு” என்க, 

 

“என்ன காரணம் சொல்லுவ?” என்றாள். 

 

“அட இருமா யோசிக்கணும்” என்றவன் யோசித்து முடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிவிட, 

 

“ஆங்.. கண்..கண் தானத்துக்கும் அவன் எழுதிக் கொடுத்ததா சொல்லிக்கலாம்” என்றான்.

 

“அதுக்கு மூஞ்சி மொத்தமும் மூடிடுவாங்களா?” என்று அவள் வினவ, 

 

“இந்தாரு.. அவிங்களே இம்புட்டு அறிவா யோசிக்க மாட்டாங்க. நீ வாய மூடிட்டு வா” என்றபடி முகக்கவசத்தை அணிந்துகொண்டு உடலைக் கொண்டு வந்தனர்.

 

அதைப் பார்த்ததும், “எ..ஏன் முகத்தை மூடிட்டீங்க” என்று பாலாஜி பதற, 

 

“அவர் கண் தானத்துக்கும் எழுதிக் கொடுத்திருந்தாரு சார். அதான் கண்ணையும் நோண்டி எடுத்துட்டோம்” என்று மீண்டும் அந்தக் கீச் கீச் குரலில் அகா கூறினாள். 

 

“அடப்பாவிகளா.. நீங்கச் சொல்றதுலயே எனக்குப் பயந்து வருதுடா” என்று மதி கூற, இங்கு அவன் பேச்சையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் யாருமில்லை.

 

பாலாஜி முகம் சற்றே யோசனையாகச் சுருங்க, துருவன் விஷ்வேஷுக்கு கண்காட்டா, விஷ்வேஷ் ஜான்விகாவின் காலை மிதிக்க, 

 

“ஆ..” என்று கத்தியவள் பாலாஜி திரும்பியதும்.. “ஆ.. என்னோட மகி இனியாவது நாலு பேர்ல உயிர் வாழட்டும். வாங்க மாமா போவோம்” என்று அழுதபடி கூறினாள். 

 

அவரும் மீண்டும் சோகம் கொண்டவராய் உடலை வாங்கிக் கொண்டு செல்ல, நால்வருக்கும் பாதி நிம்மதி மீண்டது. 

 

வீட்டிற்கு சென்றதும் அவர்கள் மூத்த மகன் அறிவழகன் வந்திருக்க, “டேய்.. இப்படி கடைசில உன் முகத்தகூட பாக்க முடியாம போயிட்டேனேடா” என்று கதறினான்.

 

பார்க்க யாவருக்கும் பாவமாக இருக்க, உண்மை தெரிந்தவர்களுக்குக் கூடக் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. 

 

“ஜானு பேபி.. எதுக்கு அழுவுற?” என்று மதி கூற, 

 

“உங்கண்ணன் அழுவுறத பார்த்தா எனக்கே ஃபீலாவது உனக்கு ஆவலையா?” என்று முணுமுணுத்தாள். 

 

“ஃபீல் பண்ணாலும் எனக்குத் தான் தண்ணி வராதே” என்று அவன் கூற, 

 

“போடா பன்னி” என்றுவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

அப்படி இப்படியென்று எப்படியோ அந்த யாருமற்றவனது உடலுக்கு ஈம சடங்குகள் முடிந்துவிட, யாவரும் அவரவர் வீட்டைப் பார்த்துப் புறப்பட்டனர். 

 

அவ்வளவு தான். ஒரு மரணம் அவரைச் சார்ந்தவரைப் பாதிப்பதெல்லாம் வெறும் ஒரே நாள் தான். பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் காதலியையும் வேண்டுமானால் அது பல நாட்கள் வருத்தத்தில் வைக்கலாம் என்றாலும் மாதங்கள் கடந்தால் அவர்களும் அதிலிருந்து மீண்டு மறந்து வருவர் என்பது தான் நிதர்சனம். அதைக் குறையும் கூற இயலாது. இறந்த ஒருவனுக்காக இருக்கும் மற்றோரை வருத்துவதா என்ற எண்ணம் தானே அனைவருக்கும் இருக்கும்?

 

அதேபோல் உற்றார் யாவரும் அதைக் காலைநேர செய்தியைப் போல் கடந்து சென்றுவிட, பெற்றோரும் உடன் பிறந்தவனும் தான் துடித்துக் கொண்டிருந்தனர். 

 

ஜான்விகாவுக்கு வெளியே சோகமாக நடிப்பது மிகவும் கடினமாக இருப்பதால் அறையை விட்டே வெளியே வராது இருந்துகொள்ள, அவளது பெற்றோர் தான் வெகுவாக வாடிப்போயினர்.

 

சிரித்து மட்டுமே பார்த்த மகள், அறைவிட்டுக் கூட வெளிவர மனமின்றி, பரிதவித்துத் துடிப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, காதுகளில் குத்துப் பாட்டு ஒலிக்க, கட்டிலில் படுத்துக் கொண்டே கை கால்களை ஆட்டி, ஆடிக் கொண்டிருந்தாள், அவர்களது செல்வக் குமரி.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அட பாவி பயலே விழுந்து புரண்டு சிரிச்சு அவள mental hospital la சேர்க்காம ஓயமாட்டியா நீ.

    எப்படியோ பிண மாறாட்டம் வெற்றிகரமா செஞ்சாச்சு.

    அவன் Dead body ya கூட easy ya handle செஞ்சிடலாம் போல அவன் ஆன்மாவ ஹேண்டில் செய்றது தான் பெரிய குஷ்டம். 🙆🏼‍♀️