Loading

அத்தியாயம் 58

     அழைத்து வர வருகிறோம் என்று வடிவேலு அத்தனை சொல்லியும் கேளாமல், நாங்களாகத் தான் இங்கிருந்து சென்றோம் அதனால் நாங்களாக வருவது தான் சரியாக இருக்கும் என்று அனைவரையும் சமாளித்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இராதா இல்லத்திற்குள் வந்தனர் வடிவேலுவின் மருமகள்கள் நால்வரும்.

     “வாங்கம்மா, உங்க வீட்டுக்கு வர்றதுக்கு உங்களுக்கு இத்தனை நாள் தேவைப்பட்டுச்சா. இத்தனை நாளா நீங்க இல்லாத வீடு வீடாவே இல்லை.” என்ன முயன்றும் முடியாமல் வருத்தத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் வடிவேலு.

     ஊர்மி வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க முனைய, “ஊர்மி நில்லு சொன்னது மறந்து போச்சா. ஆரத்தி எடுக்காம நீ வீட்டுக்குள்ள கால் வைக்கக் கூடாது. இரு நான் இப்ப வந்துடுறேன்.” என்று வீட்டிற்குள் ஓடினாள் லீலா.

     “லீலா என்னம்மா வயித்தில் புள்ளையை வைச்சிக்கிட்டு இவ்வளவு வேகமா நடக்கிற. கொஞ்சம் பொறுமையா நடம்மா.” இதயத்தில் கை வைத்த வண்ணம் சொன்னார் வடிவேலு.

     ஊர்மிக்கு சிரிப்புத் தாங்கவில்லை. “மாமா கனவு ஏதும் கண்டீங்களா? கர்ப்பமா இருக்கிறது லீலாக்கா இல்ல ஊர்மி அக்கா.” என்றாள் தேவகி.

     இதைக் கேட்டதும் நாகாவிற்கு பகீரென்றது. அதிர்ந்த விழிகள் அதிர்ந்த நிலையிலேயே இருக்க, மனைவியைப் பார்த்தான். அவள் அழுத்தமாக அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

     “இவ பார்க்கிற பார்வையைப் பார்த்தா அந்த தேவகிப் பொண்ணு சொன்னது உண்மை தான் போலவே. அடியாத்தி இது புரியாம நான் இவனுங்க எல்லோரையும் வம்புக்கு இழுத்துட்டேனே.” உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே தன்னை யாரும் கவனிக்கிறார்களா எனக் கவனிக்க, அவன் நிலையைக் கண்டு செல்வா சத்தமாகவே சிரித்து விட்டான்.

     “எலியும், பூனையுமாக இருந்த இவங்களே ஒன்னாகிட்டாங்க. மத்த இரண்டு பேரும் சும்மாவா இருந்திருப்பாங்க. நான் மட்டும் தான் ஏமாளியா இருந்திருக்கேன். எல்லாம் இந்த ருக்குவைச் சொல்லணும். ஒன்னு சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கிறாங்க இல்லையா கோபப்படுத்துறாங்க. எப்படி நான் அப்படி யோசிக்க முடியும். அவங்களாச்சும் பக்கத்தில் வரலாம். அதையும் செய்ய மாட்டாங்க.” தனக்குள் புலம்பிய தெய்வா ருக்குவைப் பார்க்க தலையில் ஓரளவு நன்றாக முடி வளர்ந்து இருக்க, வேறு மாதிரி அழகில் தெரிந்தாள் அவள்.

     “லீலா தேவகி சொல்றது உண்மையா, அப்ப நீ கர்ப்பமா இல்லையா?” சற்றே ஏமாற்றம் தெரிந்தது வடிவேலுவின் குரலில். லீலா படபடப்புடன் தங்கையின் முகத்தைப் பார்த்தாள். ஏமாற்றம், வருத்தம், விருப்பமின்மை எதுவும் இல்லாமல் அவள் முகம் அதிகாலைத் தாமரையாய் அப்படியே இருக்க, அப்போது தான் அவளுக்கு நிம்மதியானது.

     “உண்மையில் ஊர்மி தான் அம்மாவாகப் போறா மாமா. அவ புருஷன் கூட விளையாடுறதுக்காக என்னை இப்படிச் சங்கடத்தில் மாட்டி விட்டுட்டா.” சங்கடத்துடன் கணவனின் முகத்தைப் பார்த்தவண்ணம் சொன்னாள் லீலா.

     “என்னம்மா என் மூத்த மருமக நீ உண்டாகிட்டன்னு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேனே.” வடிவேலுவுக்கு ஏமாற்றத்தை மறைக்கத் தெரியவில்லை.

     “மூத்த மருமகளா இருந்தா என்ன, மூணாவது மருமகளா இருந்தா என்ன. வரப் போறது உங்க பேரப்புள்ள தானே மாமா. அங்க பாருங்க ஊர்மியை முகத்தை சுருக்கி வச்சுக்கிட்டு இருக்கா.” விட்டால் இதையே திரும்பத் திரும்ப பேசி செல்வாவைச் சங்கடப்படுத்துவார் என்பதால் வாய்க்கால் நீரை மடை மாற்றுவது போல் தன் பக்கம் இருந்த மாமனாரின் கவனத்தை தங்கையின் பக்கம் திருப்பி விட்டாள் லீலா.

     “ஊர்மி நீ என்னை எதுவும் தப்பா எடுத்துக்காதம்மா. எனக்கு லீலா கர்ப்பமா இல்லைங்கிறது தான் வருத்தமே தவிர, நீ உண்டாகி இருக்கிறதில் ரொம்ப சந்தோஷம்.” சமாளிப்பாகப் பேசினார் வடிவேல்.

     “நான் எதுவும் தப்பா நினைக்கல மாமா. எனக்கு அப்படி யோசிக்கவும் தெரியாது.” என்றவள் அக்காவைப் பார்த்து, “கொஞ்சம் சீக்கிரம் என்னை வீட்டுக்குள்ள விடுறீங்களா? எனக்கு ரொம்பக் கால் வலிக்குது.” பூனைக்குட்டி போல் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

     “ஊர்மி, லீலா அக்காவுக்கு புகுந்த வீட்டைப் பார்த்ததும், பொறந்த வீடும் நாமளும் மறந்து போயிட்டோம் போல. புள்ளதாச்சிப் பொண்ணு உன்னை வாசல் ல நிக்க வைச்சுட்டு,  செல்வா மாமாவை சைட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க. நீ இரு நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்.” என்றுவிட்டு தன் இடத்தில் இருந்து நகரப் பார்த்தாள் ருக்கு.

     “என்ன இது, வர வர என் பொறுப்பை நீ பிடுங்கிக்கிறதுக்கு பார்க்கிற. இதெல்லாம் நல்லாவே இல்ல. போ போய் உன் இடத்தில் நில்லு.” எனத் தங்கையை  அவள் இடத்தில் நிற்க வைத்த லீலா, அடுத்த நிமிடமே ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.

     வந்தவள் மூவருக்கும் ஆரத்தி சுற்ற, “அக்கா ஊர்மி தான அம்மாவாகப் போறா. அவளுக்கு ஆரத்தி சுத்தறது நியாயம். எங்க இரண்டு பேருக்கும் எதுக்கு சுத்துறீங்க.” சந்தேகம் கேட்டாள் தேவகி.

     “நம்ம நாலு பேர் மேலும் ஏதோ பெரிய கண்ணு பட்டுடுச்சுன்னு நினைக்கிறேன். அதனால் தான் நாம இந்த வீட்டை விட்டு வெளியே போகுற நிலைமை வந்துச்சு. அந்த ஒரு நாளால் எல்லோருக்கும் எத்தனை சங்கடம். இனிமே அப்படி எதுவும் நடக்கக் கூடாது. அதனால தான் உங்க மூணு பேருக்கும் சேர்த்து சுத்துறேன்.” என்ற லீலா பேச்சை நிறுத்திவிட்டு வேலையில் கண்ணானாள்.

     “நம்மளைப் பிரிக்க நினைக்கிற எல்லாக் கொள்ளிக் கண்ணும் பட்டுப் போயி நாம நாலு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கணும். இப்ப வாங்க எல்லாரும்.” என்பதாய் அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து வந்தாள் லீலா.

     “லீலா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? யாரோ உங்களையும், என்னையும் குறை சொன்னாங்க. நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதே குழந்தை பெத்துக்கத்தான்னு. ஆனா விதியைப் பார்த்தீங்களா, இத்தனை சீக்கிரம் குழந்தை பெத்துக்கப் போறதே அவரு தான்.” பேச்சை ஆரம்பித்தான் செல்வா.

     “ஆரம்பிச்சிட்டான்டா. எப்ப என் பொண்டாட்டி தான் கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சுதோ, அப்பவே இதெல்லாம் நான் எதிர்பார்த்தேன் தான். ஆனா இந்தச் சாமியார் எல்லாம் பேசுவான்னு நினைக்கலையே.” மனதில் நினைத்துக் கொண்டான் நாகா.

     “ஆக, நாம இல்லாத நேரத்துல இந்த நாகப்பாம்பு வீட்டுக்குள்ள சில்மிஷம் பண்ணி இருக்கு. இது என்னைக்கு தான் பெட்டிக்குள்ள அமைதியா படுக்கும் னு தெரியல. எப்பப் பார்த்தாலும் படம் எடுத்துட்டு சுத்திக்கிட்டு இருக்கு. என்னைக்காவது ஒரு நாள் நடுமண்டைல நச்சுன்னு அடி வாங்கப் போகுது.” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஊர்மி.

     “நாகா, நான் கூட உன்னை என்னவோன்னு நினைச்சேன் டா. பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டு இவ்வளவு சீக்கிரத்தில் என் தங்கச்சியை வாந்தி எடுக்க வச்சிட்டியே டா. அதுவும்  இரட்டைப் புள்ள வேற.” சிரித்தபடி நாகாவின் காதில் கிசுகிசுத்தான் அரசு.

     “ஊர்மி உங்களுக்கு டயர்டா இருக்குன்னு சொன்னீங்க இல்ல. வாங்க வந்து நம்ம ரூம்ல ரெஸ்ட் எடுங்க.” என்று சிம்பாலிக்காக அவளைத் தன்னுடைய அறைக்கு வரச் சொல்லி விட்டுத் தான் முன்னால் சென்றான் நாகா.

     அன்று அத்தனை பேர் முன்னிலையில் அவளை மரியாதைக் குறைவாக நடத்தியதற்கு மன்னிப்புக் கேட்கும் விதமாக, அவளை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். அவன் சொல்லாமலே அது ஊர்மிக்கும் புரிந்தது. இது எத்தனை நாள் தாக்குப்பிடிக்குமோ என்கிற சிரிப்போடு நின்றிருந்தாள்.

     “ஊர்மி உன் புருஷன் உன்னைக் கூப்பிடுறாரு போ, கொஞ்சம் பார்த்து நடந்துக்க. டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. இரட்டை குழந்தை கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. அவர் சண்டை போட்டாலும் நீ கோபப்பட்டு கத்தக்கூடாது.” தங்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள் லீலா.

     “தேவகி, ருக்கு நீங்களும் உங்க ரூமுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.” லீலா சொல்ல நல்ல பிள்ளைகளாகக்  கிளம்பினர் இருவரும்.

     அறைக்கு வந்ததும், “ஏய் எப்படி டி நீ கர்ப்பம் ஆன.” அதிர்ச்சியில் என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் வாயைக் கொடுத்தான் நாகா.

     “அதுவா, தினமும் குழந்தைங்க படமா பார்த்துட்டு இருந்தேன். அதனால குழந்தை உண்டாகிடுச்சு.” படுநக்கலாகப் பதில் சொன்னாள் ஊர்மி.

     “ஏய் என்ன நக்கலா?”

     “டேய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு, எப்படி கர்ப்பம் ஆனன்னு என்கிட்டே வந்து கேட்கிற. உனக்குத் தெரியாதா நான் எப்படிக் கர்ப்பம் ஆனேன்னு.” இடையில் கை வைத்தபடி மூச்சு வாங்கப் பேசினாள் ஊர்மி.

     “ப்ச்… சரி கர்ப்பம் தான்னு முடிவானவுடன் என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல. குறைஞ்ச பட்சம் அன்னைக்கு உன்னைப் பார்க்கிறதுக்கு உங்க வீட்டுக்கு வந்தேனே அப்பவாச்சும் சொல்லி இருக்கலாமே.” நியாயமாகத் தான் கேட்டான் நாகா.

     “உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அதைத் தொட்டு சொல்லு. அன்னைக்கு நீ என்னைப் பேச விட்டியா? உன் கூட வந்து தான் ஆகனும் னு வானத்துக்கும், பூமிக்கும் ஏகபோகமாக குதிச்சுக்கிட்டு இருந்த.

     நீ அப்படி ஒரு நிலைமையில் இருக்கும் போது இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வேண்டாம் னு தோணுச்சு. அதனால தான் மாத்தி சொன்னேன்.” தன்பக்க நிலையை எடுத்துச் சொன்னாள் ஊர்மி.

     “என் பிள்ளையைப் பத்தி என்கிட்ட சொல்லாதது கூடப் பரவாயில்லை. நான் செஞ்சதுக்குப் பதிலுக்குப் பதிலுன்னு நினைச்சுக்கிறேன். ஆனா எதுக்குடி உன் அக்கா கர்ப்பமா இருக்காங்கன்னு பொய் சொன்ன?” அரசுவின் கிண்டல் வார்த்தைகளும், செல்வாவின் நக்கல் வார்த்தைகளும் திரும்பத் திரும்ப நினைவு வந்து தவிப்பாய் இருந்தது நாகாவிற்கு.

     “இப்ப என்ன, ஏதோ உங்ககிட்ட விளையாடத் தோணுச்சு. அதனால் அப்படிச் சொன்னேன். இப்ப அதனால் என்ன குடிமுழுகிப் போச்சு. லீலா அக்கா கர்ப்பம் னு நினைச்சு, மாமாவை நீங்க ஏதோ சொல்லி இருக்கீங்க. இப்ப உண்மை தெரிஞ்சதும் அவங்க பதிலுக்குப் பேசுறாங்க அவ்வளவு தான்.

     அடுத்தவங்களை நாம கிண்டல் பண்ணும் போது சந்தோஷம் கிடைக்கும் னா, அதே மாதிரி அடுத்தவங்க நம்மளைக் கிண்டல் பண்ணும் போது வர்ற கஷ்டத்தையும் பொறுத்துக்கத் தான் செய்யணும்.” என்றவளிடம் சூடாக ஏதோ பதில் சொல்ல வந்தான்.

     “ப்ளீஸ்… என்னால முடியல. உங்க பசங்க உங்களை விட மோசம். என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்றாங்க. எப்ப பாத்தாலும் ஒரே வாந்தி, மயக்கமாவே இருக்கு. முன்னாடி மாதிரி உங்களோட வார்த்தைக்கு வார்த்தை என்னால் போராட முடியாது. தயவு செஞ்சு விடுங்க என்னை.” கெஞ்சினாள் ஊர்மி.

     “ரொம்பக் கஷ்டமா இருக்கா, ஹாஸ்பிடல் போகலாமா.” சற்று முன்னர் அவனா அந்தச் சீறு சீறினான் என்று சந்தேகப்படுவது போல் அத்தனை மென்மையாகக் கேட்டான் நாகா.

     “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. நல்லாத் தூங்கி எழுந்தா எல்லாம் சரியாப் போயிடும். ஆனா ஒன்னு இனிமே குழந்தை பிறக்கிற வரைக்கும் நீங்க என் பக்கத்திலே வரக்கூடாது.” என்றாள்.

     “இதெல்லாம் அநியாயம் டி. கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்காம இருந்திருந்தா கூடப் பரவாயில்லை. ஆரம்பிச்சு கொஞ்ச நாளில் இப்படி அத்துவிட்டா எப்படி. நான் பாவம் ஊர்மி.” பச்சைப் பிள்ளையைப் போல் முகத்தை வைத்தபடிச் சொன்னான் நாகா.

     “உங்களுக்குப் பாவம் பார்த்தா நான் போக வேண்டியது தான். ஏற்கனவே உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. இரண்டு குழந்தையைத் தாங்காது, நல்லாச் சாப்பிடுங்க அது இதுன்னு டாக்டர் பயங்கரமா திட்டுறாங்க. இப்படி இருக்கும் போது உங்களை நான் அனுமதிச்சா, என்னால சத்தியமா முடியாது புரிஞ்சுக்கோங்க.” என்க, கோபம் வந்தது நாகாவுக்கு.

     “சம்பாதிக்கிறது சாப்பிடுறதுக்குத் தானே. கொஞ்சம் சத்தான ஆகாரமாப் பார்த்து சாப்பிட்டு இருக்க வேண்டியது தானே. உங்க அக்காவைச் சொல்லணும். கல்யாணத்துக்கு நகை சேர்க்கிறேன், பணம் சேர்க்கிறேன்னு இப்படி உடம்பில் ஒன்னும் இல்லாம வளர்த்திருக்காங்க.” கடுப்பாகக் சொல்ல, வழக்கம் போல் ஊர்மிக்கு இதில் கோபம் வரவில்லை. மாறாக கணவனின் அக்கறை இனித்தது.

     “அக்கா எங்க ஊட்டச்சத்தில் எந்தக் குறையும் வைச்சது இல்லை. ஆனா எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொருத்தரோட உடல்வாகுன்னு ஒன்னு இருக்கு தானே.” தமக்கையை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் ஊர்மி.

     “உங்க அக்காவை ஒன்னும் சொல்லிடக்கூடாதே. சரி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.” என்றபடி அவள் படுப்பதற்கு ஏற்பாடு செய்தவன் அவன் கால்களைப் பார்த்து அதிர்ந்தான்.

     “ஏய் கால் ஏன் இப்படி வீங்கி இருக்கு.” என்க, “அது கர்ப்ப காலத்தில் நீர் கோர்த்து அப்பப்ப இப்படித்தான் அங்கங்க வீங்கிக்குமாம். பலருக்கு நாலு மாசம் தாண்டி தான் இதெல்லாம் தெரியும். ஆனா எனக்கு இப்பவே இப்படி ஆகுது.

     அங்க இருந்த வரைக்கும் லீலாக்கா தினமும் காலுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பாங்க, இதமா இருக்கும். நீங்க கொஞ்சம் கால் பிடிச்சு விடுறீங்களா?” ஆசையாகக் கேட்டாள்.

     “சரி நீ படு, என் மடியில் காலைத்தூக்கி வை.” என்றுவிட்டு சௌகர்யமாக அமர்ந்தவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “நிஜமாவே நீங்க என் காலை பிடிச்சு விடப் போறீங்களா?” விழி விரித்தபடிக் கேட்டாள்.

     “ஆமா ஏன்” என்றபடி புருவம் சுருக்கினான். “இல்ல, ஆம்பளையும், பொம்பளையும் எப்பவும் ஒன்னாக முடியாது. ஆம்பள ஆம்பள தான், பொம்பள பொம்பள தான்னு பேசுவீங்க இன்னைக்கு என்னடான்னா” வார்த்தைகளை முடிக்க முடியவில்லை அவளால்.

     “என் பிள்ளை வயித்துல இருக்கிறதால தானே உனக்குக் கால் வலிக்குது. அதனால தான் இப்படிப் பண்றேன். இல்லைன்னா நான் ஏன் உன் காலை பிடிச்சு விடப் போறேன்.” சமாளிக்க முயற்சித்தான்.

     சத்தமாகச் சிரித்த ஊர்மி, “உங்களுக்குள்ள இருக்கிற நல்ல குணம் அப்பப்ப உங்களையும் மீறி வெளியே வந்துக்கிட்டு தான் இருக்கு.  அடிக்கடி முட்டாள் தனமா ஏதாவது பண்ணாலும், இந்த மாதிரி ஒரு சில நேரத்துல நீங்க பண்ற விஷயங்களால் எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிப் போயிடுதுங்க.” மனதோடு சொல்லிக்கொண்டாள் ஊர்மி.

     தங்கள் அறைக்குள், “ருக்கு அன்னைக்கு ஹனிமூன் போலாமான்னு கேட்டீங்களே இப்ப போலாமா.” மனைவியின் மனம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டான் தெய்வா.

     “அதுக்கென்ன போலாமே.” சந்தோஷமாகச் சொன்னாள் ருக்கு. தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், “என் முன்னாடி நிக்கிறது உண்மையில் என் பொண்டாட்டி ருக்கு தானா. ஹனிமூன் போகலாமான்னு நான் கேட்ட உடனே ஒத்துக்கிட்டீங்க.

     நான் கூட, ‘என் தங்கச்சி ஊர்மி அம்மாவாகப் போறா. அவ குழந்தையைப் பெத்துக்கிற வரைக்கும் அவ பக்கத்தில இருந்து அவளுக்குச் சேவை பண்ணப் போறேன்னு’ சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்.” சற்றே குத்தலாகச் சொன்னான்.

     “ஊர்மியை, லீலா அக்காவும், தேவகியும் பார்த்துப்பாங்க. உங்களுக்கு இஷ்டம் இருந்தாப் போலாம். இல்லையா ஜாலியா இந்த வீட்டிலேயே இருக்கலாம்.” ருக்கு சொல்ல, தெய்வா பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பழசை மனசுல வச்சே எல்லாரும் பேசிக்கிட்டே இருந்தா பிரச்சனை தான … லீலா உங்க ஒற்றுமைக்கு கண்ணு வச்சது ராதா இல்ல பேட் பாய்ஸ் தான் … நல்லா சுத்தி போடு … அப்படி கேளு செல்வா தேவையில்லாம அசிங்கமா பேசுறான் நாகா … பாம்பு சும்மா இருக்காது …