
அத்தியாயம் -17
அங்கு நடந்ததை பார்த்த சஹா “ப..பயந்துட்டா போல” என்று அவன் சொல்லவும் நிரஞ்சன் சென்றவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குப் பிறகு நிரஞ்சன் கண்முன்னால் சிற்பி வரவேயில்லை.சாம்பவி அனுப்பிய மகிழுந்தில் ஐவருமாக புகைப்படம் எடுக்க வேண்டிய இடத்திற்குச் செல்லும் போது தான் வந்தாள்.
அங்கே தேவையான ஒவ்வொன்றையும் சிற்பித் தான் செய்துக் கொடுத்திருந்தாள்.சாம்பவி அவளிடம் சொன்ன மாதிரியான புகைப்படங்கள் வருவதற்காக அங்குள்ளவர்களையும் படாய்படுத்திக் கொண்டிருந்தாள்.
இவர்கள் நடத்தும் புகைப்படத்திற்கு அடுத்த அறையில் இவர்களோடு போட்டி போடும் வேறொரு அணியினரும் அங்கே இருந்தனர்.அவர்கள் குழுவில் அனைத்துமே பெண்களாக இருந்தனர்.போன வருடம் நடந்த போட்டியில் வென்ற நடப்பு சாம்பியன்ஸ்கள் இவர்கள்.நான்கு பேர்களை கொண்ட குழு அது.
இவர்கள் இங்கே வந்திருப்பது மியூசிக் லவ்வர்ஸ் குழுவினருக்குத் தெரியாது.அவர்களை சந்திக்க அந்த பெண்கள் குழு நேராக நால்வரையும் பார்க்க இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
இங்கே புகைப்படங்கள் எடுப்பதற்கான வேலைகள் மும்மூரமாக நடந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று நான்கு பேர் உள்ளே வந்தனர்.இக்கால இளம்யுவதிகளாக திகழ்ந்த நால்வரும் அழகிலும்,உடையிலும்,நடை என அனைத்திலும் சிறந்தவர்களாக அவர்களைக் கண்டதும் சிற்பியும் ஒருநிமிடம் திணறித் தான் போனாள்.
இருந்தாலும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு முன்னால் வந்து “மேம் இங்கே வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது.ப்ளீஸ் கொஞ்சம் வெளியே போறீங்களா?” என்று சிற்பி பொறுமையாகச் சொன்னாள்.
முன்னால் இருந்தவள் அவளை மேலும் கீழுமாக பார்த்தவள் “டிரெஸ்ஸிங் சென்ஸ் கூட இல்லை நீயெல்லாம் என்கிட்ட பேசுறியா? வாட் த ஹெல்” என்று கத்தினாள்.
ஆனாலும் சிற்பி பொறுமையைக் கடைபிடித்தவள் “மேம் சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியலை.ஆனாலும் நீங்க இப்போ இங்கே யாரையும் பார்க்க பர்மிஷன் இல்லை” என்றாள்.
உடனே பின்னால் இருந்தவர்களில் ஒருத்தி “உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லனும்னு எங்களுக்கு அவசியம் இல்லை புரிஞ்சுதா மைண்ட் இட்.எதுக்காக நம்ம இந்த மாதிரி லோக்கல் ஆளுங்ககிட்ட பேசி ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்?” என்று சிற்பியை மதிக்காமல் முன்னேறிச் சென்றார்கள்.
சிற்பி என்னசெய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டு நின்றாள்.அறையின் வாயிலேயே சத்தமாக இருக்கவும் நிரஞ்சனும்,காந்தனும் அங்கு வந்தனர்.இவர்கள் நாலுபேரைக் கண்டதும் நிரஞ்சனும்,காந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இவர்களைப் பார்த்ததும் நால்வரும் தங்களின் குரலை இனிமையாக்கி “ஹாய் பாய்ஸ் ஹவ் ஆர் யூ? நீங்க தான் ரொம்ப காண்பிடன்டா இந்த தடவை போட்டியில் சேர்ந்து இருக்கீங்களாமே? சூப்பர் ஆனால் எங்களைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வாய்ப்பில்லை” என்று திமிராகச் சொன்னாள்.
அதைக்கேட்டுச் சிரித்த நிரஞ்சன் “சுபா,தீப்தி,சுப்ரியா,ரேவதி” என்று ஒவ்வொருவரையும் பார்த்து அவர்களின் பேரையும் சொன்னான்.
அதைக் கேட்டு மெதுவாய் கைத்தட்டிய சுபா “ஸ்மார்ட் ரொம்ப அட்வான்டேஜ்ஜா இருக்கிறோம்னு நினைப்பா? இப்போ கூகுள்ல யாரைப் பத்தி போட்டாலும் முழுவிவரமும் வந்துடுமே அதோட நாங்க ரொம்ப பேமஸ் எங்களைப் பற்றி தெரியாமல் இருந்தால் தான் தப்பு” என்று அவனை மட்டம் தட்டுவது போல் பேசினாள்.
காந்தன் “இப்போ எதுக்காக இங்கே வந்து இருக்கீங்க?”
உடனே சுப்ரியா “இது கரெக்டான கேள்வி நாங்க எப்பவும் மோத போவது சின்னதோ இல்லை பெரிய எதிரியாக இருந்தாலும் எங்களை எதிர்க்கிறதுக்கு முன்னாடி அவங்களை ஒரு தடவை எச்சரிக்கை செய்வோம் அதுல அவங்களா விலக்கிட்டா நல்லது இல்லைன்னா பிரச்சினையும் அவங்களோடது ஏன்னா எங்க டீம்கிட்ட மோதி அசிங்கப்படக் கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல சின்ன கரிசனம்” என்றாள்.
பேசிக் கொண்டிருக்கும் போதே பார்த்தியும்,சஹாவும் வந்திருந்தனர்.சிற்பியும் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றான்.காந்தன் “எச்சரிக்கை பண்ணிட்டீங்கல்ல இப்போ கிளம்புங்க நாங்க யோசிச்சு முடிவு எடுக்கிறோம்” என்றான்.
உடனே நால்வரும் அவர்களைப் பார்த்து கிண்டலாய் சிரித்து விட்டு “ம்ம்… பரவாயில்லை யோசிச்சு நல்ல முடிவா எடுங்க இல்லைன்னா நஷ்டம் உங்களுக்குத் தான் ஏன்னா இருக்கிற பெயரையாவது காப்பாத்திக்கலாம்” என்று சுபா கிண்டல் சொல்லி விட்டுச் சென்றவள் சிற்பியை ஒருமுறை பார்த்து நிரஞ்சனிடம் “பார்க்க எல்லோரும் ஹேண்ட்சம்மா தான் இருக்கீங்க ஆனால் ஏன் உங்ககூட மேட்சே ஆகாத ஒரு பொண்ணை எதுக்கு எடுபிடி வேலைக்கு வைச்சு இருக்கீங்க? டிஸ்கஸ்ஸிங்” என்று சிற்பியைப் பார்த்து சொல்லி விட்டுச் சென்றாள்.
இதைக் கேட்டு சிற்பி கோபத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றதும் “ஹேய் எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைப் பார்த்து அருவருப்பா இருக்குன்னு சொல்லுவே இருடி அடுத்த தடவை உங்களை பார்க்கும் போது ஒட்டி உராசி பேசலை நான் சிற்பி இல்லை ஆமா பார்த்துக்கோ” என்று மூச்சுவாங்கச் சொன்னாள்.
மூவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து “இங்கே என்ன பார்வை?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்டாள்.
காந்தன் “இங்கே யாரு இருக்காங்கன்னு இவ்வளவு சபதம் விட்டுட்டு இருக்கே? அவங்க இருக்கும் போது பேசனும் போன பிறகு வீரவசனம் எதுக்கு?” என்று அவனோ முறைத்துக் கொண்டு கேட்டான்.
அதற்கு குனிந்துக் கொண்டு சிரித்தவள் “அ…அது என்னன்னா கம்பெனி ரூல்ஸ்ல இந்த மாதிரி மரியாதை இல்லாமல் யாராவது பேசினால் வொர்க்கர்ஸ் அமைதியா இருக்கனுமாம் இதான் கண்டிஷன் ரூல்ஸ் நாம ரூல்ஸ்ஸ மீறக் கூடாதுல்ல அதனால தான் எதுவும் பேசலை இருந்தாலும் கோபமா வருது அதான் அவங்க போன பிறகு பேசுனேன் எல்லாம் உங்களுக்காகத் தான்”என்று சிரித்துக் கொண்டு சொன்னாள்.
பார்த்தி “சரியான பொண்ணு நீ எப்படி தான் இப்படி இருக்கியோ போ” என்றான்.அவர்கள் நால்வரும் நடந்த இந்த விஷயத்தை பெரிதாக மற்றவர்கள் முன்னால் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஏனென்றால் இதுவரை பல சறுக்கல்களை பார்த்து தானே இங்கே வந்து நிற்கிறார்கள்.அதனால் தங்களின் கோபத்தை எப்போதும் மற்றவர்களின் முன்னால் அவர்கள் காட்டுவதில்லை.எப்பொழுதும் அமைதியாகவே இருந்தனர்.
நால்வரும் தங்களின் ஓய்வு அறைக்கு வந்ததும் சிற்பி
உள்ளே வந்தவள் காந்தனிடம் “எனக்கு ஒரு சின்ன டவுட் கிளியர் செய்வீங்களா?”
“ம்ம்… சொல்லு”
“அந்தப் பொண்ணுங்க இவ்வளவு பேசியும் எப்படி நீங்க எல்லோரும் அதைப் பத்தி பெரிசா நினைக்காமல் இருக்கீங்க?” என்று யோசனையாக கேட்டாள் சிற்பி.
நிரஞ்சன் எழுந்து வந்து அவள் அருகினில் “சிற்பி உன் லிமிட்ஸ் என்னவோ அதுவரைக்கும் நீ இருந்துக்கோ அதை மீறினால் தேவையில்லாமல் உன் மனசு சங்கடப்படுற மாதிரி என்னை பேச வைக்காதே புரியுதா?” என்று அவன் மிரட்டலாய் சொன்னான்.
அதைக் கேட்டவளின் முகமோ மொத்தமாய் மாறிப் போனது.தலையசைத்து “ஓகே சார்” என்று அங்கிருந்து வெளியே சென்றாள்.காந்தன் “நிரஞ்சா ஏன் சிற்பிகிட்ட இப்படி பேசுனே?”
“காந்தா யாரை எங்க வைக்கனுமோ அங்கே தான் வைக்கனும்.
கண்டவங்களுக்கெல்லாம் நாம இடம் கொடுத்து பட்டபாடு பத்தாது இன்னும் படனும்னு நினைக்கிறியா?” என்று அங்கே அறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்தளின் செவிகளில் விழவும் அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாய் குத்தி சிற்பியின் காதில் வழியே இதயத்தை தைத்தது.
அதற்கு பிறகு சிற்பி அங்கு நிற்காமல் நகர்ந்து சென்றாள்.ஆனால் நிரஞ்சன் இது தன்னுடைய எண்ணத்திற்கு எதிரான வார்த்தையை பேசி தன் மனதை சரிபடுத்துவதற்காக பேசியவை.
கதவு ஆடும் சத்தத்தில் அவள் அப்பொழுது தான் சென்றிருக்கிறாள் என்று நால்வருக்கும் தெரிந்தது.காந்தன் பதற்றமாய் “சிற்பி இங்கே தான் நின்னுட்டு இருந்திருக்கிறாள் எல்லாத்தையும் கேட்டு இருப்பா ஏன் இப்படி பேசினே நிரஞ்சா?”
“இப்போ அவ கேட்டால் எனக்கு என்ன?” என்று அவன் சாதாரணமாகக் கேட்டான்.
“உனக்கு ஒன்னுமில்லை ஆனால் எனக்கு?” என்று காந்தன் பேச்சை நிறுத்தினான்.
“உனக்கு என்ன காந்தா?” என்று நிரஞ்சன் யோசனையாய் கேட்டான்.
காந்தன் மூவரையும் பார்த்தான்.”அவ ரொம்ப நல்லப் பொண்ணுடா யாருக்காகவோ ஏன் இவ மனசை நாம நோகடிக்கனும் இனிமேல் இப்படி பேசாதே நிரஞ்சா எனக்காக ஏன்னா எல்லா உறவுகளும் நம்மை விட்டு பிரிஞ்சு, இழந்து இருக்கிறோம்.இப்போ வந்து இருக்கிற இந்த புதுஉறவை நான் இழக்க விரும்பலை” என்று சொல்லி விட்டு சிற்பியைப் பார்க்க அங்கிருந்து வேகமாய் சென்றான்.
காந்தனின் பதிலில் மூவரும் குழப்பத்தில் நின்றனர்.அதில் நிரஞ்சன் தான் ரொம்ப குழப்பத்தில் இருந்தான்.சிற்பியை பற்றி அவன் நினைக்கும் நினைப்பிற்கு முட்டுக்கட்டை போடும் எண்ணத்தில் பேசினால் இங்கே நடப்பது வேறாக இருந்தது.
அந்த கட்டிடத்திலிருந்து பின்பக்கமாக வெளியே வந்து தனியாக நின்றிருந்தாள் சிற்பி.நிரஞ்சன் கண்டவங்க என்று அவளைப் பார்த்துச் சொன்னது தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.இரண்டு நாளாகத் தான் இவளுக்கு நால்வரையும் தெரியும்.ஆனால் அவர்கள் பழகிய விதம் ஆண்டாண்டு காலம் போல் இருந்ததே அவளுக்கு. ஆனால் இந்த எண்ணம் அவர்களுக்கு தன்னைப் போல் இல்லையோ? என்று அப்பொழுது தான் யோசிக்க ஆரம்பித்தாள் சிற்பி.
தன்னை அப்படி நினைக்கவில்லை என்று நினைத்து அவள் விழிகளிருந்து ஒரு துளி கண்ணீர் விழவும் காந்தன் பின்னால் வந்து நின்று “சிற்பி” என்றழைத்தான்.அவனின் அழைப்பினில் அப்படியே நின்றாள்.வேகமாக அவளுக்கு முன்னால் வந்து நின்றவன் அவளைப் பார்த்தான்.
அவள் அழுதுக் கொண்டு இருந்திருக்கிறாள் என்று கண்களே காட்டிக் கொடுத்தது.அதில் சற்று கலங்கியவன் “சாரி சிற்பி நிரஞ்சன் பேசினதுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று ஆதரவாகச் சொன்னான்.
அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். அவள் திரும்பும் பக்கம் வந்து நின்றவன் “சாரி சிப்பி அழுதா உன் முகம் நல்லாவே இல்லை ஏன் இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுறே இது உன் குணம் கிடையாதே”
“அப்போ எது என் குணம்?யார் என்ன பார்த்து கண்டவங்கன்னு சொன்னால் கூட நான் பெரிசா எடுக்காமல் அவங்ககிட்ட சிரிச்சு பேசனுமா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“அப்படி சொல்லலை அதான் சாரி கேட்கிறேன்ல”
“சாரி கேட்டால் சரியா போய்டுமா?”
“இப்போ என்ன உனக்கு கோபமா இருக்கு அதானே கோபம் போறதுக்கு என்னை வேணும்னா இரண்டு அடி அடிச்சிக்கோ” என்று திரும்பி முதுகைக் காட்டினான்.
அவனின் உரிமையான செய்கையில் சிரிப்பு வந்ததை அடக்கிக் கொண்டபடி அவன் முதுகில் ஒரு அடி போட்டாள்.அதை வாங்கியவன் பொய்யாக “ஐயோ… வலிக்குதே! சும்மா ஒரு அடி போடச் சொன்னால் இப்படியா என் முதுகை உடைப்பே” என்று வலியில் சொன்னான்.
அவன் பேசுவது உண்மை என்று நம்பியவள் அவன் முதுகை லேசாக வருடிவிட்டு “ரொம்ப வலிக்குதா?” என்றதும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.அதைப் பார்த்து காந்தனிடம் “நல்லா பாடுவீங்கன்னு பார்த்தால் நடிப்பும் சூப்பரா இருக்கு அதுவும் என்கிட்டேயே அந்த திறமையை காட்டுறீங்க சூப்பர்” என்று அவனை அவள் அடிக்கச் செல்ல இந்த அடி பலமாக விழும் என்று காந்தன் அவளிடமிருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக இருவரும் ஓடினார்கள்.
இங்கே நடப்பதை எல்லாம் ஓரமாக ஒரு ஜோடிக் கண்கள் பொறாமையோடு கவனித்துக் கொண்டிருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -16
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -18
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பொறாமையா பார்த்தது நிரஞ்சனா ?? நிரஞ்சன் கோபப்படுறேன்னு சொல்லிட்டு லவ் பண்றான் போல … காந்தன் உறவுன்னு சொன்னான் … எனக்கு என்னமோ தங்கை உறவு அப்படின்னு கூட சொல்லியிருக்கலாம் அப்படின்னு தோணுது …
நிரஞ்சன் ஏற்கனவே அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டானோ? அருமையான பதிவு 👏
ரெண்டு முறை போட்ட கமெண்ட்டும் பதியல
அடிக்கடி சைட்டுக்குள்ள வரவும் முடியல.
சரியான இம்சை…
அருமையான அத்தியாயம்
சிற்பி சூப்பர்