
அத்தியாயம் -16
செழியன் வேறு புறமாக முகத்தை திருப்பிக் கொண்டதும் பூர்ணாவைப் பார்த்து நடந்த எல்லாத்தையும் சொன்னாள் சிற்பி.
கடைசி வரை பொறுமையாய் கேட்டவர்கள் அவள் சொல்லி முடித்ததும் அதுவரை சிரிப்பை அடக்கி வைத்திருந்த இருவரும் நடந்ததை எண்ணி வாய்விட்டு சிரித்தனர்.
சிற்பி கோபமாய் பார்த்தாள்.செழியன் “ஹேய் சிற்பி நீ அழுறது நியாயமே இல்லை உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாங்க பாரு அவங்க நாலு பேரும் தான் அழனும் இனிமேல் உன்னை நினைச்சு எங்களுக்கு கவலை இல்லை.ஆனால் அந்த நாலு அப்பாவிகளை நினைச்சாத் தான் கவலையா இருக்கு என்ன நிலைமைக்கு ஆளாக போறாங்களோ தெரியலை அவங்க இந்நேரம் அழுதுட்டு இருக்கப் போறாங்க” என்றவன் பூர்ணாவைப் பார்த்து “அம்மா நான் சொல்றது சரிதானே” என்று அவன் கேட்க பூர்ணாவும் ஆமாம் என்று தலையசைத்தார்.
அவர்கள் பேசுவதைக் கேட்ட சிற்பிக்கு கோபமாக வந்தது. பூர்ணாவைப் பார்த்து “அத்தை செழியன் தான் என்னை கிண்டல் செய்றான்னு பார்த்தால் நீங்களும் அவன் கூட சேர்ந்து என்னை நக்கல் செய்றீங்க” என்று சொன்னாள்.
முகத்தை கோபமாய் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவர் “அட செல்லப் பொண்ணுக்கு கோபத்தை பாரு நீயும் செழியனும் சேர்ந்து எத்தனை தடவை என்னை கிண்டல் செய்து இருப்பீங்க அப்போ எல்லாம் அத்தை கோவிசுட்டா இருந்தேன் கோபத்தை பாரு நீ நடந்ததை சொல்லவும் சிரிப்பு தான் வந்துச்சு இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி இருந்தால் எப்படி? வேலைக்கு போற இடத்துலயும் கலாட்டா செஞ்சுட்டு இருக்கே அந்த பிள்ளைங்க நல்லப் பிள்ளைங்கம்மா அதனாலத் தான் பொம்பளை பிள்ளையாக நீ இருந்தும் மரியாதையா நடத்தி இருக்காங்க நீ நடந்துகிட்ட விதம் அவங்களுக்கு பிடிச்சு இருந்தால் நாளைக்கு உன்னைப் பத்தி மேடத்துகிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று சிற்பிக்கு ஆதரவாகப் பேசினார்.
அவர் சொன்ன பதிலைக் கேட்டு சிற்பி “ஏன் அத்தை நான் என்ன அவ்வளவு மோசமாகவா நடந்துகிட்டேன்” என்று அப்பொழுது தான் அவளும் யோசிக்க ஆரம்பித்தாள்.
பூர்ணா “சரி விடும்மா இனிமேல் ஒழுங்கா வம்பு பேசாமல் வேலையைப் பாரு உனக்கு இந்த வேலைக்கு போக விருப்பம் தானே? ஏன்னா மாமா கேட்கச் சொன்னாங்க?”
சிறிது யோசித்தவள் “எனக்கு விருப்பம் தான் அத்தை ஆனால் அந்த சிடுமூஞ்சைப் பார்த்தால் தான் பயமா இருக்கு ஆனால் காந்தன் சாரும் மற்றவங்களும் சூப்பரா நல்லா பழகுறாங்க” என்றாள்.
“அப்புறம் என்ன கவலையை விடு இனிமேல் சந்தோஷமா போய்ட்டு வா” என்றவர் “ஆமா முன்னாடி எல்லாம் பாட்டுல ரொம்ப ஆர்வமா இருந்தே இப்போ பாரு அந்த இசை சம்பந்தப்பட்ட இடத்துல வேலை கிடைச்சிருக்கு” என்று அவர் சொன்னதும் அவள் முகம் அப்படியே மாறிப் போனது.அதை பூர்ணா கவனிக்கவில்லை.
செழியன் “சிற்பி இன்னொரு விஷயம் தெரியுமா?”
“என்ன?”
“அவங்க எல்லோரும் வெளிநாட்டுக்கு போறதாக இருந்தால் நீயும் போற மாதிரி இருக்கும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாங்க அப்படின்னா நீயும் வெளிநாடுகளைப் போய் சுற்றிப் பார்க்கலாம்” என்றான்.
அதைக் கேட்ட சிற்பி அதிர்ச்சியாய் “என்னச் சொல்லுறீங்க? உண்மையாகவா?”
பூர்ணா “ஆமாம் சிற்பி மாமா இப்போத் தான் பேசுனாங்க இவன் நாங்க பேசினதை ஒட்டு கேட்டு இருக்கான்.வீட்டை விட்டு வெளியே போனது இல்லை இப்போ உனக்காக ஒரு வாய்ப்பு கிடைக்குது அதை உபயோகப்படுத்திக்கோ சரியா?” என்றார்.
சிற்பி யோசனையாய் “அத்தை அம்மா வெளிநாடுக்கு போக ஒத்துக்குவாங்களா?” என்று அவள் கவலையாகக் கேட்டாள்.
அதற்கு பூர்ணா சிரித்துக் கொண்டே “கண்டிப்பா ஒத்துக் கொள்வாங்க ஏன்னா மாமாவும் நீங்க போற இடத்துக்கு மேடம் கூட வருவாங்களாம் அப்புறம் உங்க டீம் போட்டில பைனல்ஸ்க்கு போனால் எங்களையும் அழைச்சிட்டு போறேன்னு சொல்லி இருக்காங்க” என்றார்.
உடனே செழியன் “சிற்பி எப்படியாவது உன் டீம்மை பைனல்ஸ் வரைக்கும் எதாவது கிறுக்குதனம் செய்து போக வைச்சுட்டேன்னு வை உன் புண்ணியத்துல நாங்களும் பாரினுக்கு வருவோம்ல” என்று சிரத்தையாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு கோபமான சிற்பி “நான் கிறுக்குதனம் செய்றேனா? எல்லாம் என் அறிவாலையும் திறமையாலையும் செய்றேன் பாரு” என்றாள்.
“இரண்டாவது ஓகே ஆனால் முதல் விஷயம் தான் உனக்கு சுத்தமா எதுவும் இல்லையே நான் வேணும்னா தொலைத்த உன் பொருளை தேடி பிடிச்சு கண்டுபிடிச்சு தரேன் அப்புறம் அதை யூஸ் செய்றது பத்தி யோசி” என்றதும் சிற்பி அவனை அடிக்கப் போக அவன் தப்பிக்க என இருவரும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
மறுநாள்…
சிற்பி வாயிற்கதவை தட்டிக் கொண்டு நின்றாள்.’காலையிலேயே யாரு வந்து இருப்பாங்கன்னு?’ என்ற யோசனையிலேயே நிரஞ்சன் பாதி தூக்கக் கலக்கத்தில் மேல்சட்டை இல்லாமல் கதவை திறந்தான்.
சிற்பியோ “குட் மார்னிங்” என்று சொல்லி அவனைப் பார்த்தாள்.அவன் நிற்பதைப் பார்த்து திரும்பி கண்ணை மூடிக் கொண்டாள்.முன்னால் நிற்பது சிற்பி என்பதை மெதுவாய் உணர்ந்தவன் தன்னைப் பார்த்தவன் சட்டென்று கதவை சாத்தி விட்டு தன் அறைக்குள் செல்லும் நேரம் காந்தன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.
நிரஞ்சன் வேகமாய் தன் அறையினுள் நுழைவதை வித்தியாசமாய் பார்த்த காந்தன் ‘இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஓடுறான்’என்று கதவை திறந்துப் பார்த்தான்.
அங்கே திரும்பி நின்றுக் கொண்டிருந்தவளைப் பார்த்து “யாரு?”
அவன் புறம் திரும்பி கண்களிலிருந்து கையை விலக்கியவள் எதிரே நின்ற காந்தனப் பார்த்து “வந்துட்டீங்களா குட் மார்னிங் காந்தன்”என்று சிரித்த முகத்தோடுச் சொன்னாள் சிற்பி.
அவளின் புன்னகை முகம் அவனையும் ஒட்டிக் கொண்டது.
“வெரி குட் மார்னிங் சிற்பி,என்ன இன்னைக்கு காலைல வந்துட்டீங்க?”
அவளோ “வாங்க உள்ளே போகலாம்” என்று அவனுக்கு முன்னால் வீட்டினுள் நுழைந்தவள் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
அவளைப் பின் தொடர்ந்து வந்தவன் மனதினுள் அவளின் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.
கையில் உள்ள கோப்புகளைப் பார்த்துக் கொண்டே “இன்னைக்கு பத்து மணிக்கு போட்டோ ஷீட் இருக்கு அதான் நான் சீக்கிரமா வந்துட்டேன் நீங்களும் கிளம்ப தயாராகுங்க” என்றாள்.
“நீ சீக்கிரம் வந்ததுட்டே ஆனால் எங்களுக்கு இன்னும் குட் மார்னிங்கே ஆகலை” என்று கவலையோடு சொன்னான்.
பெரிய யோசனையோடு ” “ஹய்யோ… இப்போ என்னச் செய்யலாம்?” என்று அவளும் கவலையோடுச் சொன்னாள்.
“நான் போய் ஒவ்வொருத்தரா எழுப்புறேன்.நீ எங்களுக்கு ப்ரேக்பாஸ்ட் ரெடி செய்ய ஹெல்ப் செய்றியா?”
“ஹோ… கண்டிப்பா செய்றேன் என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க நான் செய்றேன்” என்று ஆர்வமாகச் சொன்னாள்.
காந்தன் ஆச்சரியப்பட்டு “உனக்கு சமைக்குத் தெரியுமா சிற்பி?”
“ம்ஹீம்… அதெல்லாம் தெரியாது உதவி தான் செய்யத் தெரியும்” என்று பெருமையாகச் சொன்னாள்.
அதைக் கேட்டவன் “சரி சரி விடு அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் முதல்ல நான் சொல்றதை செய்” என்று அவளிடம் சில வேலைகளைக் கொடுத்து விட்டு காந்தன் மற்ற மூவரையும் எழுப்பச் சென்றான்.
காந்தன் சொன்ன வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தவள் பழச்சாற்றை தயார் செய்துக் கொண்டிருக்கும் போது யோசனையில் நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளின் யோசனையை கலைக்கும் விதமாக காந்தன் “சிற்பி சிற்பி” என்றழைத்தான்.அவள் தான் வேறு யோசனையில் நிற்கிறாளே இவன் அழைப்பது கேட்காமல் நின்றாள்.
பக்கத்தில் வந்து அவள் காதோரமாய் சிற்பி என்றழைத்தான்.அந்ந அழைப்பினில் காந்தனைப் பார்த்தவள் “எதுக்காக இப்போ இவ்வளவு சத்தமா கூப்பிடுறீங்க?”
“நான் மெதுவா அழைச்சேன் நீ தான் வேற எதோ யோசனையில் இருக்கிற போல”என்று அவளைப் பார்த்து சொன்னான்.
“ம்ம்…” என்று ஒத்துக் கொண்டாள்.”என்ன அப்படி ஆழ்ந்த ஒரு யோசனை?”
“அ…து சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“ம்ம்ம்…. அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் சொல்லு”
“அ…து வேலைக்காக வெளியூர் வந்தும் கூட வீட்டுல இருக்கிற மாதிரியே ஒரு நினைப்பு ஏன்னா பாருங்க கிச்சன்ல வேலைப் பார்த்துட்டு இருக்கேன்” என்று சிரித்தபடியே சொன்னாள்.
அவளின் சோம்பேறித்தனத்தை புரிந்துக் கொண்ட காந்தன் “என் கூட ஹெல்ப் செய்தால் உனக்கு காலைல பிரேக்பாஸ்ட் கிடைக்கும் இல்லைன்னா எங்க வாயை பார்த்துட்டு இருக்க வேண்டியது தான்” என்று சோகமாக சொன்னான்.
உடனே சிற்பி “இஇஇஈஈ… கண்டிப்பா ஹெல்ப் செய்றேன்.எங்க அம்மாக் கூட எனக்கு ரொம்ப ஹெல்ப்பிங் மைண்ட்னு சொல்லுவாங்க” என்றாள்.
“யாருக்கு உனக்கு? நான் அதை நம்பனும் சரி விடு எல்லாம் பார்த்துக்கலாம்” என்று அவன் பழங்களை நறுக்கிக் கொண்டிருக்க இவளோ பேசிக் கொண்டே நறுக்குவதிலிருந்து ஒவ்வொன்றையாக எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து அவள் எடுக்கும் போது கைமேல் ஒரு அடி போட்டவன் “சிற்பி எல்லோருக்கும் வேணும் எடுக்காதே!” என்று அவன் மிரட்டலாய் சொல்ல அவளோ “ப்ளீஸ் ஒன்னே ஒன்னு” என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை தலையில் குட்டு வைத்தவன் “அதெல்லாம் கிடையாது” என்று இருவரும் பேசி சிரித்து விளையாடிய படியே இருந்தனர்.இதையெல்லாம் அங்கே வந்த நிரஞ்சன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு ஏதோ போல் இருந்தது.அமைதியாக அவன் சாப்பிடும் இடத்தில் வந்து அமர்ந்தான்.
காந்தன் அவன் வந்து இருந்ததை கவனிக்கவே இல்லை. சிற்பியுடன் பேசி சிரிப்பதிலேயே நேரம் போனது.பார்த்தியும்,சஹாவும் அதற்குப் பிறகு வரவும் இருவரையும் பார்த்து “ஹேய் இன்னைக்கு நாங்க சாப்பிட எதாவது இருக்குமா? இல்லை அப்படியே சாப்பிடாமல் கிளம்ப வேண்டியது தானா?” என்றதும் காந்தன் “எல்லோரும் வந்துட்டீங்களா? நான் கவனிக்கவே இல்லை சாரி” என்றான்.
பார்த்தி “எப்பவும் நிரஞ்சனும்,நீயும் தானே பிரேக்பாஸ்ட் ரெடி செய்வீங்க இன்னைக்கு என்ன தனியா செய்றீயா?”
“இல்லை சிற்பி சீக்கிரமா வந்துட்டா அதான் அவளை ஹெல்ப்க்கு வைச்சுகிட்டேன்” என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும் உதவினாள் சிற்பி.
கடைசியாக மேசையின் முனையில் வரவும் கால் தடுக்கி விழப் போகவும் அருகில் இருந்த நிரஞ்சன் அப்பொழுது எழவும் விழப் போனவளை அவளை விழாமல் பிடித்து தன்னருகே சேர்த்து பிடித்துக் கொண்டான்.
சட்டென்று நடந்த நிகழ்வில் பதறிப் போனவள் கண்களை மூடியவள் யாரோ தன்னை அழுத்திப் பிடிப்பது போல் உணர்ந்தவள் கண்களை திறந்தவளின் முகத்திற்கு நேராக நிரஞ்சனின் கூர்மையான பார்வையோடு தன் பார்வையையும் ஆழ்ந்துப் பார்த்தவள் சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டு நகர்ந்துச் செல்ல இடிப்பில் பிடித்திருந்த அவனின் பிடியும் லேசாய் தளர்ந்தது.ஆனால் அவளை நிரஞ்சன் விடவில்லை.
பதறிய மூவரும் “எங்கேயும் அடிப்பட்டு இருக்கா?” என்றான் பார்த்தி.
இல்லை என்று தலையசைத்தாள்.ஆனால் நிரஞ்சன் அவளைப் பிடித்திருந்ததை மட்டும் விடாமல் இருந்தான்.ஆடவனின் தொடுகை அவளை நாணம் கொள்ளச் செய்ய அவன் கைமீது தன் கைவைத்து தன்மேலிருந்து அவனை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டாள் சிற்பி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -15
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -17
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா லவ் மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சு போல … செழியன் தான் பாவம் … நல்ல பையன் … ஆனா சிற்பி அவனுக்கு இல்லன்னு தான் நினைக்கிறேன்
போச்சா
நாணமோ
நிரஞ்சனும் அவளும் ஏதோ ஒரு விசயத்தில் தொடர்பு உடையவராக படுது.
அவனும் அவளும் கிராமத்தில் இதற்கு முன்பு தெரியாமலேயே ஏதோ ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
விரைவில் காரணம் தெரிய வரும். அப்ப என் யூகம் சரியா பார்க்கலாம்…
நிரஞ்சனும் சிற்பியும் கண்டிப்பா ஏற்கனவே அறிமுகம் ஆனவங்களா தான் இருப்பாங்கன்னு தோணுது. அருமையான நகர்வு 👌👌