Loading

காதலொன்று கண்டேன்! 

 

தேடல் 10

 

(I)

 

மரத்தடியில் அமர்ந்து இருந்தவனை தூரத்தில் வரும் போதே,கவனித்தவளுக்கு அவனின் நலமறிய வேண்டும் என்கின்ற உந்துதல்.

 

அவனின் உருவம் முழுதாக விழிகளுக்குள் விழும் ஓரிடத்தில் நின்றவளின் விழிகள் அவனை ஒரு கணம் முழுதாய் அலசி மீண்டன.

 

“காயம்லாம் ஆறிடுச்சு போல..” தோழியிடம் ஒப்பித்தவளின் மனதில் பெருத்த நிம்மதி.அவள் மனதில் ஒளிர்ந்திருந்த தவிப்பது,அவனின் தரினத்திலேயே முற்றாய் அணைந்து போனது.

 

“பேசாம வாடி..பாக்கறவங்க தப்பா எடுத்துக்க போறாங்க..” தோழி அழைத்தும் ஓரிரு நொடிகள் தாமதித்தாள்,யாழவள்.

“ஒரு தடவ உன்ன காப்பாத்திட்டார்னு இவ்ளோ பக்தி ஆகாது பா..” மித்ரா முணுமுணுக்கவும் செய்தாள்,அவளுக்கு கேட்கும் படி.

 

“சும்மா இருடி..” தோழியை அதட்டியவளோ,அவனின் நெற்றியில் தெரிந்த காயத்தை விழி சுருக்கி ஆராய முயல,அவளுக்கே தெரியும் தெளிவாய் விளங்காது என்று.

 

ஆனாலும்,விழி சுருக்கி பார்வை வீச்சை ஒடுக்கி கூரான புலனுடன் அவள் காண, பிரயத்தனப்படுகையில் தான்,கண்டு கொண்டான்,பையன்.

 

அவளைக் கண்டதும் அவனுக்கு சுர்ரென்று எகிறியது.விழிகளிளோரம் அனல் குவிய,தலை சரித்து கழுத்தை வருடியவாறு அவளை சைகை மொழியில் அழைத்திட,அவனின் விரலசைவைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது,பாவையவளுக்கு.

 

“பாத்துட்டாரு டி..” அவளோ தலை தாழ்த்தி காணாதது போல் கடந்திடப் பார்த்திட,அவளின் கரத்தைப் பிடித்து நிறுத்தினாள்,தோழி.

 

“சீனியர்ஸ் டி கூப்டு போகலன்னா நம்ம பேட்ச் ஆளுங்களே திட்டுவானுங்க..” தோழியின் கரத்தை அழுந்தப் பற்றி அவள் நடந்தாள்,பயமும் பதட்டமுமாய்.

 

அன்று போல் தலை தாழ்த்தி இருந்தவளைக் காணக் காண பையனுக்கு அவ்வளவு கோபம்.அவனைப் பொறுத்தவரையில் அவள் அவனை காதலிக்கிறாளே.

 

“அறிவில்லி இடியட்..? திருந்த மாட்டியா நீ..? எத்தன தடவ உன் கிட்ட சொல்றது..?அங்க இங்க நின்னு பாத்து என்னோக அட்டேன்ஷன சீக் பண்ணி இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணியா..?” காரமாக அவன் சீறிட,பாவையவளுக்கு எதுவும் பேச இயலா நிலை.

 

அவன் மீது அவளுக்கு இருப்பது வெறுமனே அக்கறையுணர்வு தான்.அந்த உணர்வால் தான் அவனின் நலத்தை அவள் கண்டறிய முயன்றது.அதற்கு அவன் வேறோர் அர்த்த்ம் கற்பித்துக் கொண்டிருக்க,அதை மறுத்திடவும் இயலவில்லை,அவளால்.

 

தான் நின்று பார்த்திராவிடின்,அவனிடம் இப்படி திட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லையே என்கின்ற நினைவே மனதில்.

 

“செவுடா நீ..? இவ்ளோ கத்தறேன் எதுவும் தெரியாத மாதிரி தரய பாத்துட்டு இருக்க..? கேட்ட லவ் இல்லன்னு டயலாக் வேற..இனிமே என் கண்ணு முன்னாடி வந்த தொலச்சி கட்டிருவேன்..இடியட் கெட் லாஸ்ட்..” அவன் எகிறிட,குனிந்த தலை நிமிராமலே அகன்று வந்தாள்,அவளும்.

 

அவனின் பார்வை வீச்சில் இருந்து வெளியேறியதுமே,அவளுக்குள் ஆசுவாசம்.நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் தீர்மானித்துக் கொண்டாள்,இனி ஒரு போதும் அவன் கண் முன்னே நடமாடிடக் கூடாதென்று.

 

யாரைத் தான் விட்டது இந்த விதி..?

 

மேலும்,சில நாட்கள் கடந்திருந்தன.

 

கல்லூரி நேரத்திலும் வீட்டிலும் இயல்பாக இருப்பவனுக்கு,ஏனோ இரவின் நிழல் நிறையும் போதெல்லாம் உறங்கச் செல்வது மட்டும் சிரமமாய்.

 

அடிக்கடி அவளின் வார்த்தைகள் அவனின் செவியில் மோதி நகர,எத்தனை முயன்றும் அதில் தொனித்த உணர்வுகளின் தாக்கத்தை தவிர்க்க முடியாது தவித்து நின்றான்,பையன்.

 

இமை மூடும் இரவுகளில்,அவளின் வார்த்தைகள் இசையாய் இசைத்து அவனை இம்சைக்குள் தள்ள,இதழ்களின் இயைபாக்கங்கள் தன்னையே நிந்தித்துக் கொள்ளும்.

 

நிசப்தங்கள் ஓங்காரமாகும் தருணங்களில்,தொனித்த உணர்வுகள் ஆங்காரமாய் அவனுக்குள் கிளம்பிட,விழிகளில் கருமணிகள் அலைந்து திரிந்து தேடல் வேண்டும்.

 

அரிதிலும் அரிதாய்,அவளின் தொடுகை நினைவில் வருகையில்,தன் கரததின் மணிக்கட்டை எடுத்து தானே பார்த்துக் கொள்வான்,பையன்.மனதில் முகிழ்த்த உணர்வலைகள் வித்தியாசம் காட்டிற்று.

 

இம்சையாய் அவனின் நாட்கள் கழிய,அன்று மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அவன் கிளம்பிச் சென்றிருந்தான்,தோழன் சகிதம்.

 

“அப்பு நானும் வர்ரேன் பா..” பிடிவாதம் பிடித்த மனிதரின் தேக சுகத்தை கருத்தில் கொண்டு மறுத்தவர்களோ,அவரை அழைத்து வரவில்லை.

 

அவன் வந்ததும், பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்த வண்ணம் இருந்தது.அவனைத் தெரிந்தது போல் அவர் பேசியதில் பையனுக்கு குழப்பம்.

 

“டாக்டர் நீங்க..?”

 

“நா தான் அன்னிக்கி உங்களுக்கு ட்ரீட் பண்ணேன்..பட் அன்ஃபார்ச்சுனேட்லி நீங்க கண் முழிக்கிறதுக்கு முன்னாடி பொய்ட்டேன்…” என்றவரோ,அவனை பரிசோத்து முடித்து இருந்தார்.

 

“பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்..எந்த ப்ராப்ளமும் இல்ல..உங்களுக்கு வந்த வேண்டுதலுக்கு நீங்க கண்டிப்பா க்யூர் ஆகி தான் இருப்பீங்க..வேண்டுதலோட பவர் அப்டி” ஆர்ப்பாட்டமான சிரிப்புடன் அவர் உரைத்திட,இருவருக்கும் எந்தவொன்றும் புரிந்தபாடில்லை.

 

“கெக்க பெக்க கெக்க பெக்கன்னு சிரிச்சிட்டு ஏதோ பெனாத்துறாரு..சரியான லூஸு டாக்டர் போல..” மனதுக்குள் பொருமிக் கொண்டான்,தோழன்.

 

எதுவும் புரியாத பாவனையை சத்யா வெளிப்படுத்துவதைக் கண்டவருக்கு இன்னும் சிரிப்பு அதிகமானது.”உங்க ஃப்ரெண்ட ரொம்ப தத்தி போல..” சந்தடி சாக்கில் அவனையும் வாரி விட்டிருந்தார்,மருத்துவர்.

 

இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் இருவரும் விழித்திடவே,அது புரிந்தாற் போல் பதில் சொல்லத் துவங்கினார்,அவர்.

 

“என்ன ஹேன்ட்ஸம் எதுக்கு இவ்ளோ ஷாக்..? நா என்ன சொல்றேன்னு புரிலியா..?இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா..?”

 

“………………..”

 

“அட அன்னிக்கி அந்த பொண்ணு வேண்டிகிட்டத தான் சொல்ற..? உங்கள பண்ணியிருந்த வார்ட்கு முன்னாடி சின்ன சாமி செல ஒன்னு இருக்கு..அதுக்கு முன்னாடி நின்னுட்டு பலமான வேண்டுதல் அது..ரொம்ப தீவிரமா கடவுள் கிட்ட வேண்டியிருக்கும் போல..”

 

“………………”

 

“உங்கள ட்ரீட் பண்ண போய் வரும் போது தான் கவனிச்சேன்..அவங்க ஃபேஸ் ரியாக்ஷன பாத்து நானே பாவப்பட்டுட்டேன்..காலேஜ் பொண்ணுங்க போல..அதான் எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுன்னு உங்கள நானே அட்மிட் பண்ணதா எல்லாத்தயும் பாத்து போலீஸ் என்குவாரி ய கூட நானே ஃபேஸ் பண்ணேன்..” என்றிட,அவனுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.

 

அவர் கூறியது எல்லாம் அவனின் அகத்தை குடைந்து உள்ளத்தில் புகுந்து ஆழம் தாக்கிட,வித்தியாமான உணர்வலைகள் பிரசன்னமாகி அவன் ஜீவனுக்குள் ஓடி நிறைந்தது.

 

அவன் இது வரை இப்படியெல்லாம் உணர்ந்தே இல்லை.உயிரின் அடி ஆழத்தில் வாசம் வீச,மனமெங்கும் புதுவித உணர்வலைகளின் பூக்காடு.

 

அவரின் வார்த்தைகள் அவனின் செவியை நிரப்பியதில்,அவன் உயிரும் நிறைந்து போக,விழிகள் ஒரு நொடி அவளின் விம்பத்துக்கான வரம் கேட்டிற்று.

 

அவன் உணர்வது புதிது;அவனுக்கு புதுமையும் கூட.இது என்ன புதுவித உணர்வுகள்..?

 

உயிரோசையில் சின்னச் சின்ன சப்தங்களை கோர்த்து விட்டு,அவனுள் சில நெகிழ்வுகளையும் இனம் புரியா தளர்வுகளையும் கொண்டு சேர்த்திடுது..?

புரியவேயில்லை,அவனுக்கு.

 

ஒருமித்த நேரத்தில் ஏராளமான உணர்வலைகள் உள்ளுக்குள் எழுந்து அலையடித்தால் அவனும் என்ன தான் செய்வதாம்..?

எதையும் பிரதிபலிக்க முடியா மனநிலை அவனில்.

 

அந்த அரை மயக்க நிலையில் அவளின் தவிப்பை அவன் உணர்ந்த ஆழத்தை விட,யாரோ ஒருவர் கூறக் கேட்கையில் அது உள்ளிறங்கிய ஆழம் இன்னுமின்னும் கணிக்க முடியாத அளவு அதிகமாய்.

 

ஆயிரமாயிரம் உணர்வுகள் உயிர்ப்பெற,அது எவற்றையும் விழிகளில் காட்டாது அழுத்தமாகத் தான் இருந்தான்,பையனும்.

 

“அது உங்க லவ்வரா..?” அட்டகாசமான சிரிப்புடன் மருத்துவர் கேட்ட கேள்விக்கு உடனடியாய் மறுப்பாய் தலையசைத்திருந்தான்,பையன்.

 

“நானும் அப்டி தான் நெனச்சேன்..பட் நீங்க கண்ணு முழிக்க முன்னாடி அவங்க போனதால டவுட் வந்துருச்சு..பட் அவங்க உங்கள வன் சைடா லவ் பண்றாங்க போல” அவர் கூறிட,நெஞ்சில் கை வைத்தான்,தோழன்.

 

“இவன் ஒரு எரிமலன்னு தெரியாம இவரு வேற கொளுத்திப் போட்றாரே..” அங்கலாய்ப்புடன் நினைத்தவனுக்கு,பையனின் அமைதி சிறு வித்தியாசத்தை உணர்த்திற்று.

 

“என்ன அணுகுண்டு அமைதியா இருக்கு..?” அவன் நினைத்திட்டு பையனின் முகம் பார்த்திட,அவனோ அதே நிலையில் அமர்ந்து இருந்தான்.

 

எழுந்து கிளம்பிட புத்தியது,புத்தி சொன்னாலும் மனமோ மறுப்புடன் அதே இடத்தில் ஒட்டிக் கிடந்தது.

 

“இன்னொரு விஷயமும் சொல்லனும்..? நீங்க ஃப்ரீன்னா சொல்றேன்..” அவர் கூறிட,”இவரு தான டாக்டர்..?” என சத்யாவின் மனதில் எண்ணமொன்றும் வந்து போனது.

 

“இந்த வெடி குண்டு கிட்ட லவ் ஸ்டோரி சொல்லி யப்பா..” என்று அர்ச்சித்தவனோ,”இல்ல டாக்டர்..” என்று எழுந்து கொள்ள முயல,பையனோ அசையவில்லை.

 

இதழ்வழி உதிர்த்திடா வார்த்தைகளை,இரு விழிகளும் கோர்த்து தம்மேல் படரவிட,அது புரிந்த மருத்துவர் இன்னும் பெரிதான சிரிப்பை தர,”இடி மாதிரி சிரிக்கிறாரு..” திகைப்புடன் மீண்டும் அமர்ந்து கொண்டான்,தோழன்.

 

“ஐ திங்க் அந்த பொண்ணு உங்கள லவ் பண்ணுது..?அன்னிக்கி நானும் என் வைஃபும் கோயில்கு போனோம்..அப்போ தான் அந்த பொண்ணு வேண்டிட்டு இருந்துச்சு..”

 

“………………..”

 

“கோ இன்சிடன்ட் தான்..என் வைஃப் போய் நின்னு வேண்டிகிட்டு இருக்குறப்போ இந்த பொண்ணு கொஞ்சம் சத்தமா வேண்டிகிச்சாம்..இவளுக்கு கேட்ருக்கு..பேர் கூட ஆர்யா ன்னு ஏதோ சொல்லுச்சாம்..” என்கவும் பையனின் ஒரு கணம் நின்று துடிக்க,தன்னை மீறி இதழ்கள் பிளந்து கொள்ள ஆழமான சுவாசம்.பட்டென்று வாயை கரம் கொண்டு மறைத்துக் கொண்டான்,மருத்துவருக்கு தெரியாதவாறு.

 

“என் வைஃப் என் கிட்ட சொன்னா..நானும் வந்து உங்க ரிப்போர்ட்ஸ் பாத்தா உங்க பேரு ஆர்யா..செம்மயா இருந்துது எனக்கு..” புன்னகை மாறாமல் உரைத்தார்,அவர்.

 

“ஆனாலும் செம்மல..கண்டிப்பா உங்களுக்கு அந்த பொண்ணு பொருத்தமா இருப்பா யங் மேன்..அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா..?” மருத்துவர் கேட்டிட,படபடத்தான்,பையன்.

 

தெரியாது என்றால் நிச்சயம் காட்டிக் கொடுப்பார் என்பது புரிய,அவனால் நிலை கொள்ள முடியவில்லை.பார்த்தாக வேண்டும் என்ற தவிப்பும் இல்லை வேண்டாம் என்கின்ற தவிர்ப்பும் அவன் இதயத்தை தகிக்க வைத்தது.

 

“தெரியும் டாக்டர்..” தோழன் இடைவெட்டிட,பையனின் விழிகள் அவனை உறுத்து விழித்தன,ஒரு கணம்.

 

●●●●●●●●

 

(II)

 

“இங்க பாரு தென்றல் இந்த கல்யாணத்துல உன் வாழ்க்க மட்டுல்ல..உன் தங்கச்சி வாழ்க்கயும் இருக்கு..ஒரு பொண்ணு ஒரு பையன விரும்புதுன்னா மத்த எவனும் திரும்பி கூட பாக்க மாட்டான்..இது எல்லாம் தெரிஞ்சும் சித்து கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கான்..அவன விட உனக்கு நல்ல சாய்ஸ் யாரும் இல்ல..ஒழுங்கு மரியாதயா கல்யாணத்துக்கு ஒத்துக்கற வழிய பாரு..” என்றும் இல்லாமல்,தந்தை அவளின் அதட்டி உருட்டிட,அவரின் வார்த்தைகளில் உறைந்திருந்த கட்டளையில் அவள் விழிகளில் நீர் கோர்த்தது.

 

கலங்கிய விழிகளை காட்டாது மறைத்திட,தலை தாழ்த்தியவளுக்கு எல்லோர் மீதும் அவ்வளவு கோபம்.அதுவும் சித்தார்த்தின் விருப்பம் தனக்கும் திணிக்கப்படுவதை எண்ணுகையில் அவன் மீது எரிச்சலும் பிறந்தது.

 

“நா இவ்ளோ சொல்றேன் உன்னால ஒத்துக்க முடியாதா..? என்ன தான் நெனச்சிகிட்டு இருக்க மனசுல..? வாயத் தெறந்து பேசு..”

 

“என்னால இப்போ கல்யாணம் பண்ண முடியாது..” மெதுவான சத்தத்துடன் வந்த வார்த்தைகள் என்றாலும்,அந்த வார்த்தைகளில் அப்படியொரு அழுத்தம்.

உறுதியாக இருந்தாள்,தன் முடிவில்.

 

“ஏன் தென்றல் இப்டி இருக்க..?” அத்தனை ஆதங்கம் அவருக்கு.இவ்வளவு கூறியும் இறங்க வர மறுக்கிறாளே என மனம் பிசைந்தது.

 

திட்டக் கூட முடியவில்லை,அவரால்.காதல் என்று அவளே ஒருத்தனை கூட்டி வந்திருந்து,அவள் மறக்காது தவிப்பதென்பது வேறு.அதுவே,அவர்கள் கைகாட்டியவனை காதலித்துத் தொலைத்து விட்டு நினைக்காமலே இருக்க முடியாது தடுமாறுவது என்பது வேறு ஆயிற்றே.

 

தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய்,அவர் கடந்து போக,அவளும் மன அமைதி வேண்டி வீட்டை விட்டு கிளம்பியிருந்தாள்,நூலகத்துக்கு.

 

நூலகத்துக்கு வந்து அமர்ந்தவளின் மனமோ,ஒரு நிலையில் இல்லை.அனைவரும் சேர்ந்து தன்னை வற்புறுத்துவதை அவளால் ஏற்க இயலாது போக,அவனின் நினைவு தான் வந்தது.

 

ஓரிரு முறை அவனின் புரிதலை எண்ணி அவளே வியந்து இருக்கிறாள்;வார்த்தைகளின்றி உறைந்து இருக்கிறாள்.அவனைப் போன்று யாரும் தன்னை புரிந்து கொள்ள முடியாது என்கின்ற எண்ணமும் அவளுக்குள் வந்து போனதுண்டு,அந்த நொடிகளில்.

 

விழிகளில் நீர்த்திரளிருக்க,மெதுவான இதழ் விரிவுடன் புன்னகைத்தவளோ,புத்தகத்தில் ஆழ்ந்து போய் அரை மணி நேரம் கடந்து இருக்கும்.

 

அலைபேசி ஒலித்திட,உடனடியாய் அழைப்பை ஏற்றவளோ,சிறு சங்கடத்துடன் தான் வெளியே வந்தாள்.மற்றையவர்களுக்கு இடையூறு நேர்ந்து இருக்குமே.

 

வெளியில் வந்தவளோ,”ஹலோ” என்றிட,மறுமுனையில் அழுகுரல் பெரும் சத்தத்துடன் ஒலித்தது.

 

“ஏய் சங்கவி என்னாச்சு..?” படபடப்புடன் வினவியவளுக்கு மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் மயக்கம் வராத குறை தான்.அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடியிருந்தாள்,மருத்துவமனைக்கு.

 

வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்பியிருக்க,மூச்சு வாங்க அவ்விடம் வந்தவளை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தார்,பார்வதி.

 

இத்தனை நேரம் மௌனமாய் விசும்பிக் கொண்டிருந்தவரை மகளின் வருகை உச்சிக்கு ஏற்றியது.

 

“அம்மா என்னம்மா..? அப்பா..?” என்று அவள் கேட்கும் முன்னமே,கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்திருந்தார்,அவர்.யாருமே அவரிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்ப்பார்த்திடவில்லை.

 

சங்கவி அதிர்ந்து விழித்திட,ஸ்டெத்துடன் அங்கு வந்த சித்தார்த்தும் ஒரு கணம் ஸ்தம்பித்து போய் விட்டான்,அவரின் அறையின் வீரியத்தில்.

 

“எதுக்குடி எதுக்குடி..? உன் கல்யாணத்த நெனச்சு நெனச்சு தான் நெஞ்சப் புடிச்சி கிட்டு வந்து படுத்து கெடக்குறாரு மனுஷன்..? எல்லாம் உன்னால தான்..உன்னால மட்டுந்தான்..”

 

அவரின் வார்த்தைகள் அவளை வெகுவாய் உடைத்துப் போட,கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தை தொட்டது.ஒற்றைக் கையால் கன்னத்தை பொத்தியவாறு அதிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அடிபட்ட பாவம்.

 

“என்னடி முழிக்கிற..? என்னன்னு கேக்கறேன்..? நீ பண்ற வேலயால தான் எங்க எல்லாருக்கும் கஷ்டமே..அந்த மனுஷன் எப்டி இருந்தவரு தெரியுமா..? அவரப் போய் நெஞ்சப் பிடிச்சிகிட்டு படுக்க வச்சிட்டியே..டாக்டர் வந்து சொல்லிட்டுப் போறாரு..அவரு மனசுக்குள்ள உன்ன பத்தின யோசனய தவிர என்னடி இருக்கப் போகுது..? எவனோ ஒருத்தன நெனச்சிகிட்டு எங்கள கஷ்டப்படுத்தி இப்போ அவர இப்டி கொண்டு வந்துட்டியே..” ஆற்றாமையில் அவர் வெடிக்க,அவளுக்கு அழுகை வலுத்தது.

 

“இல்லம்மா..” அவள் ஏதோ பேச வர,கரத்தை நீட்டி தடுத்தவருக்கு பதட்டம் ஒரு புறம்.கணவருக்கு முதல் முறை இப்படி நேர்ந்திருக்க அந்த சூழ்நிலையைக் கையாளத் தெரியாதவரின் கோபம் மகள் மீது மொத்தமாய் திரும்பி இருந்தது.

 

“தயவு செஞ்சி கண்ணு முன்னாடி நிக்காம போயிரு தென்றல்..திரும்ப அறஞ்சிரப் போறேன்..உன்ன பெத்த பாவத்துக்கு நாங்க இன்னும் என்ன என்ன அனுபவிக்கனுமோ தெரில..ஒருத்தியோட கல்யாணம் அந்தரத்துல நிக்கிது..இப்போ இவர இப்டி நெஞ்சப் பிடிச்சிட்டு படுக்க வச்சிட்ட..எல்லாம் போதும் தாயி..தாராளமா போதும்..போயிரு என் கண்ணு முன்னாடி நிக்காம..” அவர் கை கூப்பி கெஞ்சிட,முழுதாய் நொருங்கி விட்டாள்,அவள்.

 

வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட மறந்தவளாய் அவள் அவ்விடத்தை விட்டு அகன்றிருக்க,அங்கிருந்த யாவருக்கும் பார்வதியின் பேச்சு அதிகப்படி என்று தோன்றாமல் இல்லை.சங்கவியோ,தமக்கை தேடிப் போகப் பார்த்திட,பார்வதியின் அழுத்தமான பார்வை அவளை தடுத்து நிறுத்தியது.

 

அகல்யாவும் பரிமளாவும் தமக்கும் பார்வைகளை பரிமாறிக் கொண்டாலும்,யாருக்கும் பார்வதியிடம் பேசும் தைரியம் இல்லை.அவ்விடத்தில் அன்பரசன் இருக்கவில்லை.பணம் கட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று இருந்தார்.

 

வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்து ஓய்வறைக்குள் நுழைந்தவளின் அழுகை மட்டுப்படாது போக,விழிகளில் அத்தனை சிவப்பு.

 

தந்தையின் நிலையை விட,தாயின் வார்த்தைகள் அவளை வெகுவாய் தாக்கியிருக்க விழிநீர் வற்றிப் போகவே இல்லை.

 

ஏங்கி ஏங்கி அழுதவளில் இருந்து கேவலும் வெளியேறிட,வாயைப் பொத்திக் கொண்டவள்,குறைந்தது ஒரு மணி நேரமாவது அழுது இருப்பாள்,அங்கு இருந்தே.

 

விழிகள் சிவந்து போக,வீங்கிய முகத்துடன் அவள் வெளியே வருகையில் எதிர்ப்பட்டான்,டாக்டர்.

 

காதல் தேடும்.

 

2025.04.12

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அப்போ தென்றலுக்கு பார்த்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் ஆகாம போச்சா … அது ஆர்யா இல்லையா …

    ரெண்டும் வேறு வேறு கதையா … ஆர்யாவுக்கு காதல் வந்திடுச்சு … பொண்ணு யாருன்னு தெரிஞ்சுடுமா