
அதீதம்-11

“யோவ்.. உனக்கு அறிவு இருக்கா? மைக் கிடைச்சுட்டால் போதும்ன்னு உன் இஷ்டத்துக்கு உளறி வைப்பியா? யாரைக் கேட்டு, இமயன் பேரை நான் சொன்னேன்னு சொன்ன?!” தன் முன்னால் நின்றவரை, ஒர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல், வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
“என்ன தலைவரே.. இப்படி பேசுறீங்க? இமயனைக் கட்சிக்குள்ளே கொண்டு வரணும்ன்னு நாம முன்னால் பேசினோம் தானே? இப்போ என்னடான்னா நீங்களே இப்படி கேட்குறீங்க?!”
“நான் சொன்னது, அவன் என் பொண்ணோட புருஷனா இருந்தப்போ.. இப்போ, அவனுக்கும், என் பொண்ணுக்கும் சம்மந்தமே இல்லைன்னு ஆகிடுச்சு. என் பொண்ணு வாழ்க்கையே இல்லாமல் ஒத்தையா நிற்கிறா. இப்போ அவனைக் கட்சிக்குள்ளே கொண்டு வந்து, என் தலையில் நானே மண்ணள்ளி போட்டுக்கவா?!” என அவர் கேட்க, எதிரில் நின்றவர் பதிலே பேசாமல் அமைதியாய் நின்றார்.
“பேசாமல், நான் சொன்னதெல்லாம் பொய்ன்னு நானே சொல்லிடவா தலைவரே?!”
“யோவ்! லூசாய்யா நீ? இதென்ன தேர்தல் வாக்குறுதியா மாத்தி மாத்தி பேசுறதுக்கு? நீ இப்படி மாத்தி மாத்தி பேசினால், கட்சியை யார் மதிப்பா? உள்கட்சி பூசல்ன்னு நியூஸ் போடுவானுங்க!” என அதற்கும் எகிறினார் மயில்ராவணன்.
“ஐயோ! தலைவரே.. தெரியாமல் பேசிட்டேன். இந்த இமயன் தான் உங்களோட தேர்வு அவன்னு சொன்னான். அவனை நம்பி பேசினதுக்கு.. எனது இதுவும் வேணும். இன்னுமும் வேணும்! வர்ரேன் தலைவரே..!” என அவர் விடைபெற்றுக் கிளம்ப, யோசனையோடு அமர்ந்திருந்தார் மயில்ராவணன்.
அவருக்கு இமயனின் திட்டம் புரிந்தது. அவன் தான் நினைத்ததை சாதிக்காமல் விடப் போவதில்லை என்பதும் புரிந்தது. தங்கள் கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி, காரியத்தை சாதிக்கிறவன், எதிர்கட்சிக்குள் மட்டும் சென்றுவிட்டால், ஆளும் கட்சி என்ற ஒன்றையே இல்லாமல் செய்துவிடுவான் என்பது புரிந்தது. ஆனாலும், அவனைக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு யோசனையாகவும் இருந்தது.
“யோவ்! இமயன் யாரையாவது மீட் பண்ணினானா? அவனை கண்காணிக்கச் சொல்லி சொன்னேனா இல்லையா?!” என தன் உதவியாளரிடம் கேட்டார் மயில்ராவணன்.
“சார்! அவர் அஃபீஷியலாய் மீட் செஞ்ச மாதிரி தெரியலை சார். அவர் இன்விடேஷன் கொடுக்கறதுக்காக எதிர்க்கட்சி தலைவரை மீட் பண்ணிருக்கார். எதிர் கட்சியிலிருக்கும், எல்லாரையும் மேரேஜ்க்கு இன்வைட் செய்திருக்கார்.!” என மணிகண்டன் சொல்ல, உள்ளுக்குள் பயமெடுத்தது மயில்ராவணனனுக்கு.
“சார்! இந்த எதிர்கட்சி, ஆளும் கட்சியெல்லாம் வெளியில் தானே சார்! மத்தபடி, அவங்க விஷயங்களை நாம கண்டுக்கக் கூடாது. நாம செய்ற எதையும், அவங்க கண்டுக்கக் கூடாதுன்னு அக்ரீமெண்ட் இருக்கே சார்.. அப்பறம் ஏன் பயப்படுறீங்க?!” என மீண்டும் மணிகண்டனே கேட்க,
“யோவ்! அதெல்லாம் மத்த விஷயங்களுக்கு தான்ய்யா! அல்வா மாதிரி விஷயம் கிடைச்சிருக்கு. எதிர்க்கட்சிகாரன் எப்படி சும்மா விடுவான்? இமயன் மட்டும் அங்கே போனான்னா நம்ம ரகசியங்கள் அத்தனையும் மேடையேறிடும்!” என்றவரின் குரல் கரகரத்தது.
“எதிர்க்கட்சிகாரன் செய்யாததையா நாம செஞ்சுட்டோம்? அவனும் பதுக்கினான். நாமளும் பதுக்கினோம். அவ்வளவு தானே? நாம செஞ்சதை அவன் சொன்னால், அவன் சொன்னதை நாம வெளிப்படுத்துவோம். நம்ம சாவி அவன் கையில் இருக்கிற மாதிரி, எதிர்க்கட்சியோட இரகசியங்களின் சாவி நம்ம கையில் இருக்கும் தானே? நம்மளைப் பத்தி நியூஸ் வெளிய வந்தால், அது எதிர்க்கட்சிக்குத்தான் ஆபத்து..!” என மணிகண்டன் சொன்ன போதும் கூட மயில்ராவணனின் முகம் இயல்புக்குத் திரும்பவில்லை.
தன் தனிப்பட்ட உதவியாளராய் இருந்தாலும் கூட, மணிகண்டன் அறியாத விஷயங்களை இமயன் அறிந்து வைத்திருக்கிறான் என்பது அவருக்கு மட்டும் தானே தெரியும். அதை வெளிப்படையாய் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், அமைதியாய் நின்றிருந்தார் மயில்ராவணன். அவர் மனமோ படபடப்பை உணர்ந்தது. ஒருவேளை எதிர்க்கட்சிக்கு, தன்னைப் பற்றிய இரகசியங்கள் தெரிந்திருக்குமோ.? என்ற சந்தேகம் அவர் மனதைக் கரையானாய் அரித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை உண்மை தெரிந்தால், தன் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற பயம் அவர் மனதை ஆட்டிப் பார்த்தது. இதற்கு மேல் தனக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்துக் கொண்டார் அவர். நான்கு பக்கமும் கட்டம் கட்டி, தன்னை நகர விடாமல், நடுவில் நிறுத்தி வைத்த இமயன் மீது, கட்டுக்கடங்காத கோபம் வந்தது அவருக்கு.
ஆனால், கோபத்தை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல.. புத்திசாலித்தனமாய் செயல்பட்டு, பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் தருணம் இதுவென்பதை சமயோசிதமாய் யோசித்து முடிவு செய்தவர்,
“மணி.. உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணு!” எனத் தன் உதவியாளரைப் பணித்தவரின் மனதில், அடுத்த திட்டம், அழகாய் உருவாகியிருந்தது.
*******
“இங்கே பாருங்க! நம்ம கட்சிக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் எப்போதுமே செய்வேன். நம்ம கட்சி, மக்கள் நலனை மட்டுமல்ல, கட்சியிலிருக்கும் உங்கள் நலனையும் சேர்த்து தான் யோசிக்கும். கட்சியோடு சேர்த்து எனக்கு நீங்களும் முக்கியம்!” என நீள் செவ்வக வடிவில் போடப்பட்டிருந்த அந்த இருக்கைகளில் நடு நாயகமாய் அமர்ந்தபடியே பேசினார் மயில்ராவணன்.
ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். இமயனும் அங்கே தான் இருந்தான். அவசர அழைப்பின் பேரில், சுந்தரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய கையோடு, மதுரையிலிருந்து சென்னைக்கு, வான் வழியாய் பயணம் செய்து வந்திருந்தான்.
இவையெல்லாம் அவன் முன்பே எதிர்பார்த்தவை தான்.
“நீங்க எது சொன்னாலும் எங்களுக்கு சம்மதம் தான் ஐயா..!”
“யோவ்.. அது எப்படி என்ன சொல்ல வர்ராருன்னு தெரியாமலே சம்மதம்ன்னு சொல்ல முடியும்? என்ன விஷயம்ன்னு சொல்லட்டும்!”
“வேற என்ன விஷயமா இருக்கப் போகுது? நம்ம மேலூரில் யாரை நிறுத்தணும்ன்னு முடிவு பண்ணத்தானே வரச் சொன்னாங்க!”
“நமக்குள்ளே யாராவது ஒருத்தரைத் தான் நிறுத்தனும்!”
“கட்சிக்கு சாதகமான ஆளாக இருக்கணும்!”
“தலைவரே.. பேசாமல் உங்க பொண்ணையே நிறுத்தலாமே..? ஏன் வேறு யாரையாவது தேர்ந்தெடுக்கணும்?!”
“அட நீ வேறய்யா.. ஓட்டு விழணுமே?!”
“புருஷன் இல்லாத பொண்ணுன்னு ஓட்டு விழாதா என்ன?!”
“தலைவர் இமயனை நிறுத்தறதாகத் தானே முடிவு பண்ணியிருக்கார்!”
“மகளை விட, முந்நாள் மருமகன் பெருசா போய்ட்டாராக்கும்?”
“இமயனை ஐயா கண்டிப்பா முடிவு பண்ணியிருக்க மாட்டார்!” கலவையான பேச்சுக்கள் மயில்ராவணன் செவிகளில் விழுந்தது.
ஆனால், இங்கே எழுந்த பேச்சுக்களில், அவர் தன் மகளை நிறுத்துவது பற்றி துளி கூட யோசிக்கவே இல்லை. அவர் இமயனை நிறுத்தக் கூடாது என்பதில் மட்டும் தான் உறுதியாய் இருந்தார். யாரை மேலூர் தொகுதியில் நிறுத்த வேண்டும் என்பதிலும் கூட உறுதியாய் இருந்தார். தன் மனதிற்குள் தான் எடுத்த முடிவை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவர், தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் துவங்கினார்.
“இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நமது மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் அவர்களின் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியாதது. எனது இருபது ஆண்டு கால நண்பர். என்னைக் கட்சிக்குள் கொண்டு வந்தவர். நான் தற்போதிருக்கும் நிலைக்கு முழுமுதற் காரணமும் அவர் தான். சிலர் இருக்காங்க, கூலிக்கு வேலை செஞ்சுட்டு, தன்னால் மட்டும் தான் எல்லாம் நடந்ததுன்னு தற்பெருமை பேசிக்கிறவங்க.. ஆனால், சுந்தரம் அவர்கள் அப்படிப்பட்டவர் கிடையாது. என் வளர்ச்சியில் உளம் நிறைந்தவர் அவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் இறப்பை எண்ணி நான் மனம் வருந்துகிறேன்..!” என்றவரின் பார்வை இமயனின் மீது நேரடியாய் விழுந்தது.
அவர் குத்தலாய்ச் சொன்னது தன்னைத்தான் என்பது அவனுக்கும் தெரிந்தே இருந்தது இமயனுக்கு. இதழ் விரிக்காமல் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
“இப்போ நாம இங்கே கூடியிருக்கும் விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கணும். ஒரு சட்டமன்ற வேட்பாளர் மறைவிற்கு பின் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நமது கடமை. அதனால், மேலூர் சட்ட மன்ற தொகுதிக்கான புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டியக் கட்டாயத்தில் நாம இருக்கோம். நான் என் மனசாட்சிப்படி ஒருத்தரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உங்க விருப்பம் என்னன்னு சொல்லுங்க!” என மயில்ராவணன் கேட்க, அந்த ஒட்டுமொத்த இடம் முழுவதையுமே நிசப்தம் சில நொடிகள் ஆட்கொண்டிருந்தது.
“நீங்க யாரைக் கை நீட்டுறீங்களோ, அவங்களையே நியமிச்சுடலாம் ஐயா!”
“இப்போ நம்ம கட்சிக்குள்ளே இருக்கிற ஒருத்தரை நிறுத்தினால், நான் தான் சீனியர், எனக்கு தான் அனுபவம் அதிகம்ங்கிற மாதிரியான பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கு. இது உட்கட்சி பூசலுக்கு வழி வகுக்கும்.!”
“எல்லாருக்கும் பொதுவான ஒருத்தரைத் தான் நிறுத்தணும்!”
“யாரையோ ஒருத்தரை நிறுத்துறதுக்கு உங்க சொந்த மகனை நிறுத்தினால் என்ன?!”
“ஆமா.. ஆமா.. அதுவும் சரிதான்.!”
“பொதுவான நபர் உங்க மகனாகத்தான் இருக்க முடியும்!”
என குரல்கள் கேட்கத் துவங்க, தன் திட்டம் வெற்றிகரமாய் வேலை செய்வதை எண்ணி சிரித்துக் கொண்டார் மயில்ராவணன். அவரின் பார்வை மீண்டும் அழுத்தமாய் இமயவரம்பனைத் துளைத்தது. நிஜமாகவே மயில்ராவணனின் திட்டம் இதுவாகத்தான் இருந்தது. தன் சொந்த மகனை அரசியலுக்குள் கொண்டு வர, இதைவிட, சிறந்த தருணம் வாய்க்காது என்பதை உணர்ந்து, அவனை மேலூர் தொகுதியில் நிறுத்தவே திட்டம் தீட்டியிருந்தார்.
ஆனால் இடையில் இமயவரம்பன் வந்து நிற்கவே, வேறு வழியில்லாமல், அவனிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு, கட்சியிலுள்ள மற்றவர்களின் விருப்பம், அவரின் சொந்த மகனாக இருக்கையில், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்ற பிம்பத்தை தோற்றுவிக்க முயன்றுக் கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனைக்குப் பிறகும் கூட, இமயனிடம் துளி மாற்றம் இல்லை. அவன் ஒற்றை வார்த்தைப் பேசவில்லை. அங்கே நடக்கும் எதையும் மாற்ற முயலவில்லை. ஆனால், அவன் கண்களில் ஒருவித உறுதி தெரிந்தது. அந்த உறுதி மாண்புமிகு முதல்வர் அவர்களையே கொஞ்சம் ஆட்டிப்பார்க்கவும் செய்தது.
“உங்களோட விருப்பமும், ஆதங்கமும் எனக்குப் புரியுது. நான் நம்ம இமயனைத் தான் மேலூர் தொகுதியில் நிறுத்தணும்ன்னு நினைச்சேன். காரணம், இமயன் மதுரையைச் சேர்ந்தவன்.. அதைவிட, முக்கியமான காரணம், என் பிள்ளைகளை இதற்குள் கொண்டு வந்து நான் வாரிசு அரசியலாக மாற்ற விரும்பலை. ஆனால், நான் என் விருப்பத்தை மட்டுமல்ல.. உங்க விருப்பத்தையும் முன் நிறுத்தணும் இல்லையா? உங்களோட விருப்பம் தான் என்னோட விருப்பமும்.. என் மகனை மேலூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்துறதுக்கு நீங்க விரும்புறீங்கன்னா அதை செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன். இப்போவும் என் மகனை இதற்குள் இழுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் சம்மதம் தெரிவிக்கிறது உங்களுக்காகவும் நம்ம கட்சிக்காகவும் மட்டும் தான்.!” என வாய்க் கூசாமல் பொய் சொல்லி நிறுத்தியவர், வெற்றிப் புன்னகையுடன் இமயனைப் பார்த்தார். இப்போதும் கூட, இமயனிடம் துளி மாற்றமில்லை.
“இமயன்.. நான் உன்னைத் தான் நிறுத்தணும்ன்னு நினைச்சேன். ஆனால் கட்சியிலிருக்கும் மத்தவங்களோட கருத்தையும் நான் மதிக்கணும் தானே?! இவங்களோட தேர்வு என் மகனாக இருக்கையில், நான் என்ன செய்ய முடியும்? உனக்கு என் நிலமை புரியும்ன்னு நினைக்கிறேன்..!” என அவர் வெளிப்படையாய் கேட்க,
“உங்களோட இந்த முடிவில் உங்க மகனுக்கு சம்மதம் தானா?!” என அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த அரங்கின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அந்தப் புதியவன்.
*********
மகிழுந்தின் முன் இருக்கையிலிருந்து இறங்கிய அந்த யுவதியைப் பார்த்து, வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர். இமயன் தான் வந்துவிட்டான் என எண்ணி, தன் அறையிலிருந்து கீழிறங்கி வந்த ஆருத்ராவோ, தன் எதிரே நிற்கும், புதியவள் யாரெனத் தெரியாமல் குழம்பி நின்றாள்.
“ஏய்! நில்லுடி! எனத்துக்கு இங்கண வந்த? என் பேரனுக்கும், உனக்கும் எல்லாம் முடிஞ்சு போன பிறகு, என்னத்துக்கு டி சீவி சிங்காரிச்சு இங்கண வந்திருக்கிற?!” என செல்லம்மா அவளை நிறுத்த முயல,
“ஏம்மா! என் பையன் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?!” என இடையிட்டார் இமயனின் தாய் தனலெட்சுமி.
“டோன்ட் ஒர்ரி ஆன்ட்டி! நான் எந்த பிரச்சனையும் பண்ண வரலை!” என்றபடி தன் பயணப் பொதிகளை இழுத்தபடி முன்னேறினாள்,
இமயவரம்பனின் முன்னாள் மனைவி கவிநயா.
“நீ ஒரு விளக்கமும் சொல்ல வேணாம். வந்த வழியே போயிரு!” என அழுத்தமாய் சொன்னார் செல்லம்மா.
“நான் தான் பிரச்சனை பண்ண வரலைன்னு சொல்றேன்ல்ல? எதுக்காக வந்தேன்னு நானே சொல்றேன்.!” என கவிநயா ஏதோ சொல்ல வர, கேட்பதற்கு யாருமே தயாராய் இல்லை.
“எம்மா ராசாத்தி! ஒருமுறை என் மயன் வாழ்க்கைக்குள்ளே வந்து அவன் வாழ்க்கையை நாசமாக்கினது பத்தாதா? உங்க அப்பனை நம்பி உன்னைக் கட்டினதுக்கு, அவனை ஆம்பிள்ளையே இல்லைன்னு நீ முத்திரை குத்தி, அவன் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் அழிச்சுட்டியே? உன்னைக் கையெடுத்து கும்பிடுறேன்.. இங்கிருந்து போயிரு..!” எனத் தன்னை மீறி, கையெடுத்துக் கும்பிட்டிருந்தார் தனலெட்சுமி.
இதே நேரம், ராகவ் செய்வதறியாது ஆருத்ராவை சங்கடமாய் பார்த்தபடி நிற்க, அவளால், ஓரளவிற்கு விஷயத்தை யூகிக்க முடிந்தது. வாசலில் வந்து நிற்கும் கவிநயாவைப் பார்த்து, ஆருத்ராவிற்கு பயமோ, குழப்பமோ தோன்றவில்லை. மாறாக இந்தத் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற நிம்மதி தான் அவளிடம் தோன்றியது.
“ஏன் ராகவ்.. இவங்க இமயனோட வொய்ஃபா?!” என அவள் கேட்ட கேள்விக்கு ஆம் என தலையாட்டினான் ராகவ்.
“அவங்க பேரு..?!”
“கவிநயா!”
“உங்க அண்ணன் கூட சேர வந்திருக்காங்களா?!”
“தெரியாது!”
“உன் அண்ணி தானே? நீ போய் பேசேன் ராகவ்!”
“ஆரு.. ப்ளீஸ்.. கொஞ்சம் அமைதியாய் இரு! அடுத்த என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோன்னு பயமா இருக்கு.!” நிஜமாகவே அவன் குரலில் இமயனின் வாழ்க்கையைப் பற்றிய பயம் தெரிந்தது.
“ஒருவேளை இவங்க உன் அண்ணன் கூடச் சேர்ந்துட்டால், உன் அண்ணன் என்னை விட்டுடுவான் தானே?!” என அவள் கேட்க, தூக்கிவாரிப்போட நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ராகவ்.
“அப்படியொரு வாய்ப்பு இருந்தால், நானே அவங்களை சேர்த்து வச்சுடுவேன்.!” எனச் சந்தோஷமாகச் சொன்னாள் ஆருத்ரா. அவளைப் பொருத்தவரை, இமயனிடமிருந்து தப்பிக்கும் வாய்ப்பாக மட்டுமே அவள் இதைப் பார்த்தாள். நிஜமாகவே கவிநயாவுடன், இமயன் மீண்டும் இணைவதாய் இருந்தால், அவளுக்கு சந்தோஷம் தான்.
“உனக்கு இமயனைப் பற்றி தெரியாது ஆரு.. அவன் நீ எதிர்பார்க்காததைத் தான் செய்வான்.!” என ராகவ் சொன்னதை ஆருத்ரா கண்டுக்கொள்ளவே இல்லை. அவள் பார்வை முழுதும் கவிநயாவின் மீதே இருந்தது. இவளிடம் எப்படியாவது பேசி, திருமணத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதே ஆருத்ராவின் எண்ணமாக இருந்தது.
அதே நேரம், தாங்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்து, கீழே இறங்கி வந்திருந்தனர் ஆருத்ராவின் குடும்பத்தினர்.
“இந்தப் புள்ள யாரு புதுசா இருக்கு?!” என வள்ளியம்மை வினவ,
“அது வந்துங்க..!” எனத் திணறியபடி நின்றார் இமயனின் தந்தை அண்ணாமலை.
“உங்க சொந்தக்கார பொண்ணா? கல்யாணத்திற்கு வந்திருக்காங்களா என்ன?!” என அபிராமி கேட்க, உண்மையைச் சொல்லவா? இல்லை பொய் சொல்லவா? எனத் தெரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டு நிற்க,
“ஏம்மா.. நீ மயில்ராவணன் மவ தானே?!” எனச் சரியாய் கேட்டிருந்தார் பழனிவேல். அவருக்கு கவிநயாவை நன்றாகவே தெரிந்திருந்தது. மயில்ராவணனின் மகள் எனத் தெரிந்த மாத்திரத்திலே அவள் யாரென மற்றவர்களுக்கும் தெரிந்து போனது. அவள் இமயனின் முதல் மனைவி எனத் தெரிந்ததும், ஆருத்ராவின் குடும்பத்தினர் முகத்தில் அதிர்வின் ரேகைகள்.
இருந்தாலும் அவள் இல்லையெனச் சொல்லிவிட மாட்டாளா? என்ற நப்பாசையும் இருந்தது.
“ஆம்!” என அவள் தலையசைக்க, ஆருத்ராவின் வீட்டினருக்கோ இடி விழுந்ததைப் போலானது.
“என்ன அபி.. நம்ம பிள்ளையோட கல்யாணத்தைப் பேசிட்டு, இப்படி முதல் பொண்டாட்டியையும் வரச் சொல்லியிருக்காங்க?!” என பொன்னி வினவ,
“என்ன நடக்குது இங்கே? என் பேத்தியை என்னத்துக்கு வந்து பொண்ணு கேட்டீக? இப்படி மூத்த தாரத்தையும் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து நிறுத்தி எங்களை அசிங்கப்படுத்தவா? இரண்டாந்தாரமாய் இருந்தாலும், நாங்க சம்மதிச்சதுக்குக் காரணம், முதல் மனைவியோட விவாகரத்து ஆகிடுச்சுன்னு நீங்க சொன்னதாலேயும், உங்கக் குடும்பத்து மேல் இருந்த நம்பிக்கையாலும் மட்டும் தான். ஆனால் இங்கே என்னென்னமோ நடக்குதே? எங்களை ஏமாத்தணும்ன்னு நினைக்குறீங்களா?!” எனப் பொருமித் தள்ளினார் வள்ளியம்மை.
“அப்படியெல்லாம் இல்லை. நாங்க சொல்றதைக் கேளுங்க! இவள் எதுக்கு இங்கே வந்தாள்ன்னு எங்களுக்கே தெரியாது.!” என தனலெட்சுமி சொல்ல, அதை நம்புவதற்கு வள்ளியம்மை தயாராக இல்லை.
“அது எப்படிங்க, உங்க வீட்டுக்குள்ளே வந்து இந்தப் புள்ளை தைரியமாய் நிற்குது.. உங்களுக்குத் தெரியாமல் வந்திருக்குமா? ஊரெல்லாம் பத்திரிக்கைக் கொடுத்த பிறகு, இந்தப் புள்ளையை வர வச்சிருக்கீங்கன்னா ஊங்களை அவமானப்படுத்த தானே திட்டம் போட்டுருக்கீங்க?!” எனக் கேட்டார் அபிராமி.
“என்னத்துக்கு இப்படி மாறி மாறி சண்டைப் போட்டுக்குறீங்க? இந்தப் பொண்ணை யார் வரச் சொன்னாங்க.? எதற்காக வரச் சொன்னாங்கன்னு கேட்டால் தெரிஞ்சுடப் போகுது. என்னன்னு விசாரிக்காமலே பஞ்சாயத்தைக் கூட்டுறீங்க? கொஞ்ச நேரம் அமைதியாய் இருங்க!” என்ற பழனிவேலின் குரலில் அனைவரும் அமைதியாகிவிட,
“ஏம்மா கவிநயா.. உன்னை யாரு இங்கண வரச் சொன்னது? கல்யாணம்ன்னு தெரிஞ்சு நிறுத்தணும்ன்னு வந்தியாக்கும்?!” என அவர் கேட்ட கேள்விக்கு ‘இல்லை’ எனத் தலையசைத்தாள் கவிநயா.
“உனக்கு இமயனோடு சேர்ந்து வாழணும்ன்னு ஆசை எதுவும் இருக்கா? ஒருவேளை அப்படியொரு எண்ணம் உனக்குள் இருந்தால் சொல்லு. நாங்க இப்போவே வெளியேறிடுறோம்..!” என மீண்டும் பழனிவேல் வினவ, இப்போதும் அவள் தலை ‘இல்லை’ என இடவலமாய் ஆடியது.
“ஏம்மா இப்படி தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு இருந்தால், நாங்க என்னதேன் நினைக்கிறது? அப்பறம் எதுக்காக இங்கே வந்த?!” எனக் கோபத்தோடு வள்ளியம்மை கேட்க,
“நான் இமயனோட மேரேஜை பார்க்க வந்தேன்.! என்னை வரச் சொன்னதே இமயன் தான். நான் ஒண்ணும் கல்யாணத்தை நிறுத்த வரலை. இமயனோட கல்யாணத்திற்கு கெஸ்ட்டா.. ஒரு ஃப்ரெண்டா வந்திருக்கேன்.!” என அவள் சொல்ல, ஆருத்ராவிற்கே ஆச்சர்யமாய் இருந்தது. அதுவும் இமயனே வரச் சொல்லியிருப்பது அவளுக்கு பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.
அங்கே நின்றிருந்த யாருமே இமயன் வரச் சொல்லியிருப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.
“இந்தப் பய என்னத்துக்கு இப்படி வேண்டாத வேலை செஞ்சுக்கிட்டு திரியறான். வேணாம்ன்னு போனவளை வலிய கொண்டார்ந்து இங்கே நிப்பாட்டியிருக்கான். உன் மயனுக்கு கிறுக்கு பிடிச்சுக்கிச்சா தனம்? என்னத்துக்கு இப்படி செஞ்சுக்கிட்டு திரியறான்? இவளையெல்லாம் கூப்பிடலைன்னு யார் அழுதது?!” என வெளிப்படையாகவே புலம்பினார் செல்லம்மா.
“ம்க்கும்.. ஏடாகூடமாய் ஏதாவது செஞ்சால் அவன் எம் மயன். மத்த நேரமெல்லாம் உங்க பேரனா? நல்லா இருக்கே கதை. உங்க பேரன் வந்ததும் என்ன ஏதுன்னு அவனைக் கேளுங்க! எனக்கெல்லாம் எதுவும் தெரியாது. இந்தக் கல்யாணத்தை முடிக்கிறதுக்குள்ளே என்ன என்னத்தையெல்லாம் இழுத்துட்டு வரப் போறானோ?!” எனப் புலம்பினார் தனலெட்சுமி.
“உன் அண்ணன் பெரிய ஆளுதான்டா ராகவ்.. தன் கல்யாணத்திற்கு முன்னாள் மனைவியையே இன்வைட் பண்ணியிருக்கான். ஒருவேளை அவன் மனசுக்குள்ளேயும், இவங்கக் கூட சேரும் எண்ணம் இருக்குமோ?!” என ராகவைப் பார்த்து உற்சாகமாய்க் கேட்டாள் ஆருத்ரா.
“எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும், என் அண்ணன் வந்ததும் கேளு!” என வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னான் ராகவ்.
அதே நேரம்,
“இமயன் தான் இந்தப் பொண்ணை வரச் சொல்லியிருக்கான். அவன் சொன்னால், எதாவது காரணம் இருக்கும். அவன் வந்தப் பிறகு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். இந்தப் பொண்ணு தங்குறதுக்கு அறை ஏற்பாடு பண்ணுங்க!” எனப் பழனிவேல் சொல்ல,
“என்னதான் நினைச்சுட்டு இருக்கீக? நம்ம புள்ளை இருக்கிற இடத்திலேயே இந்தப் பொண்ணையும் தங்க வைக்கணுமா? மதுரையில் வேற ஹோட்டலே இல்லையா? இந்த இமயன் தான் கூறுகெட்ட தனமா வரச் சொன்னான்னா.. நீங்களும் இங்கணையே தங்கட்டும்ன்னு சொல்றீக? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை!” என வெளிப்படையாகவே கணவனிடம் சொன்னார் வள்ளியம்மை.
“அவனைக் கேட்காமல், இமயன் அழைச்சிருக்கிற விருந்தாளியை வெளியே அனுப்பினால், அது மரியாதையாய் இருக்காது. இதெல்லாம் உனக்குப் புரியாது. முதலில் அந்தப் பொண்ணை உள்ளே கூட்டிட்டு வாங்க! அவங்களுக்கு ஒரு அறையை ஏற்பாடு செஞ்சு கொடுங்க!” எனச் சொல்லாவிட்டு பழனிவேல் சென்றுவிட,
“பொண்ணு வீட்டுக்காரங்களுக்கே பிரச்சனை இல்லாத போது, நாம வெளியே போகச் சொன்னால், அது நல்லா இருக்காது. ராகவ்.. அந்தப் பொண்ணை உள்ளே கூட்டிட்டு வா!” என அண்ணாமலை அவனிடம் சொல்ல, அவளை அழைப்பதற்காய் மகிழுந்தின் பக்கத்தில் சென்று, அவளை உள்ளே அழைக்க,
“ஒன் மினிட் ராகவ்!” என்றபடியே பயணப் பொதிகளை இறக்க,
“நீங்க இமயனோட சேர்வதற்காக வந்தீங்களா? உங்களுக்கு இமயனைப் பிடிக்குமா?!” எனக் கேட்டபடி இடையே வந்தாள் ஆருத்ரா. கவிநயாவோ பதில் சொல்லாமலே பயணப் பொதிகளை இறக்கிவிட்டு, வாகனத்தின் பின் கதவைத் திறந்து,
“தீபக்! வெளியே வாங்க!” என அழைக்க, மகிழுந்தின் பின்னிருக்கையிலிருந்து, கையில் குழந்தையுடன் இறங்கிய தீபக்கைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.
“ஹீ இஸ் தீபக்! மை ஹஸ்பண்ட்!” என அவளே அறிமுகப்படுத்த அதிர்ச்சி இன்னும் பலமடங்கானதென்னவோ நிஜம்.
“ஏன் அத்தை, இந்தப் பொண்ணு, நம்ம இமயனை வேணாம்ன்னு சொல்லிட்டு, வெளிநாடு போயிருச்சுன்னு தானே சொன்னாக? கல்யாணம் ஆகலை தனியாகத்தேன் இருக்குன்னு கேள்வி பட்டேன். இப்போ என்னடான்னா புருஷன் புள்ளையோட வந்து இறங்குது.?!” என தனலெட்சுமி செல்லம்மாவிடம் கேட்ட கேள்வி மட்டுமே அங்கிருந்தவர்களின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேல், ஆருத்ராவிற்கு தான் பேரதிர்ச்சி.
இமயனைத் தேடித்தான் கவிநயா வந்திருப்பாள் என அவள் கனவு கண்டிருக்க, அவளோ கணவன் குழந்தையுடன் வந்திருப்பாள் என யோசிக்கக் கூட இல்லை.அவள் கனவு காணாமல் போனதில் ஏமாற்றமாய் நின்றிருந்தாள் ஆருத்ரா.
“ஒருவர் மீதான
ஆற்றாமையை,
கோபத்தை,
பழிதீர்ப்பை,
இன்னொருவர் மீது அன்பாகச் செலுத்தினால்,
அதற்கு ஆயுள் இல்லை.!”
(படித்ததில் பிடித்தது)
