
பிறை -28
வார்த்தைகளுக்கு பஞ்சமாகிப் போனது. கதவுகள் மூடப்படிருக்க.. மூடிய கதவுகளுக்கு உள்ளே இரு ஜீவன்கள், முதலில் யார் ஆரம்பிப்பது என்ற பட்டிமன்றத்தில் இருக்கிறார்கள்.
சிவானந்தம் கூறியதால் பல்லை கடித்துக் கொண்டு வந்து நின்றாள் பிறை. அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பதை போல நிற்க.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொங்கி விட்டாள்.
” பேச ஒன்னும் இல்லைனா நான் போயிடவா.. ” எங்கோ பார்த்துக் கொண்டு அவள் கேட்டதில்.. காதை குடைந்தவன்..
” யாரோ சொன்னாங்க.. கல்யாணத்துக்காக உங்க முன்னாடி வந்து நிக்க மாட்டேன்னு ”
அதில் சினம் ஏறிப் போனவள்.. ” ஹலோ கமிஷனர் சார்.. இப்பவும் நீங்கதான் என் கிட்ட பேசனும்னு சொல்லியிருக்கீங்க.. நான் சொல்லல.. ”
” ஓ… ஓகே ஓகே”
” என்ன ஓகே”
” கல்யாணத்துக்கு ஓகே”
” என்னது ” அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
” என்ன அதான் பேசிட்டேன்ல .. இப்போ போகலாம் ”
” நீங்க ஏன் ஓகே சொல்லுறீங்க ”
” எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை வந்துருச்சு சோ ஓகே சொல்லுறேன் ”
பல்லை கடித்தவள்.. ” அப்போ உங்க அம்மா கேட்கும் போதே சொல்லியிருக்க வேண்டியதானே.. என்கிட்ட எதுக்காக பேசனும்னு சொன்னீங்க ”
” அதுக்கு காரணம் இருக்கே மூன். இதுக்கே இப்படி டென்ஷன் ஆனா எப்படி ”
” என்ன காரணம்.. ”
” வெளிய போய் காரணத்தை சொல்லவா ”
” ஏன் இங்கேயே சொன்னா என்ன ” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கதவை திறந்து கொண்டு வெளியேறி இருந்தான் ஆதி.
” இவரை … ” என பல்லை கடித்துக் கொண்டு அவன் பின்னே வெளியேறி இருந்தாள் பிறை.
இவர்களது பதிலுக்காக மொத்த குடும்பமும் நடுக்கூடத்தில் காத்துக் கொண்டிருந்தது.
மெதுவாக இறங்கி வந்த ஆதி.. பிறையின் தந்தையை பார்த்து.. ” எனக்கு இந்த கல்யாணத்துல ஓகே தான்.. ஆனால் உங்க பொண்ணுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல போல.. பேசிட்டு சொல்லுங்க.. ட்ராப் பண்ணிக்கலாம் ” என போனை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று விட.. பின்னே வந்த பிறையை கண்டன பார்வை பார்த்து வைத்தார் சிவானந்தம்.
‘ அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டு போயிட்டானே.. படுபாவி.. அப்பா வேற முறைக்கிறாரே ‘ என பயத்தில் படியிறங்கி வந்தாள் பிறை.
” கொஞ்சம் பொறுமையா இருங்க.. நான் என் பொண்ணு கிட்ட பேசிட்டு சொல்லுறேன் ” என சிவானந்தம் அறைக்குள் செல்ல.. சிவகாமியோடு அவளும் உள்ளே வந்தாள்.
” நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க பிறை.. இப்போ எவ்வளவு பெரிய விஷயம் உன் வாழ்க்கையில நடந்திருக்குன்னு உனக்கு புரியுதா இல்லையா.. அதையும் மீறி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு.. மரியாதையா நம்ம ஊருக்குள்ள உன்ன கூட்டிட்டு போக பார்க்குறேன்.. ஆனால் நீ எல்லாத்துக்கும் தடையா இருக்க.. நீ அசைபட்டா மாதிரி தான் உன்ன சென்னைக்கு அனுப்பினோம்.. ஆனால் என்ன ஆச்சு நாங்க பயந்த மாதிரியே நடந்துச்சு. முதல் பிரச்சனை வந்த அப்போவே உன்ன கூட்டிட்டு போயிருக்கனும்.. நான் தான் உன் பிரெண்ட் மாமா சொன்னதை கேட்டு தப்பு பண்ணிட்டேன்..
இப்பவும் உன்ன நம்பி தான் இவ்வளவு பெரிய விஷயத்தை முடிவு பண்ணேன்.. ஆனால் நீ என்ன பண்ண.. அந்த தம்பிட்ட போய் விருப்பம் இல்லைன்னு சொல்லியிருக்க.. அவங்க இனிமே சம்மதிக்கலைனா என்ன பண்ணுறது..
இப்படியே உன்ன ஊருக்குள்ள கூட்டிட்டு போனாலும்.. எத்தனை பேரோட வாயை என்னால அடைக்க முடியும்.. ஊர் ஆளுங்களை விடு. உன் அப்பாத்தாவும், உன் அத்தையும் பேசியே என்னையே சுடுகாட்டுக்கு அனுப்பிடுவாங்க ” என்றதும்..
” ஐயோ அப்பா.. ” என பதறிப் போனாள் பிறை..
” தயவுசெஞ்சு நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது.. இந்த கல்யாணம் நடக்கனும். போய் அந்த தம்பி கிட்ட பேசி சம்மதிக்க வை.. இல்லைன்னா நானும் உங்க அம்மாவும் அடுத்த நிமிஷம் ஊருக்கு கிளம்பிடுவோம் ” கட்டளையாக கூறிய தந்தையை பார்த்தவள்…
” எனக்கு சம்மதம் தான் பா ” கண்ணீர் விழிகளுடன் கூறிய மகளை பார்க்க இயலாது..
” நீயே போய் வெளிய பேசு.. ” என அமைதியாக அமர்ந்து விட்டார்.
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள்.. ஹாலில் அமர்ந்திருந்த மீனாட்சி, திவாகரை ஒரு பார்வை பார்த்தவள்.. தோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அபிசியல் என்பது பேசும் விதத்திலேயே தெரிந்தது. அதனால் அமைதியாக ஒதுங்கி நின்றாள். இவள் வந்ததை பார்த்ததும்.. ஐந்தே நிமிடத்தில் பேசி விட்டு போனை வைத்தவன்..
” என்னாச்சு திரும்ப என் கிட்ட எதுவும் பேசனுமா ” நக்கலாக கேட்டவனை வெற்றுப் பார்வை பார்த்தவள்…
” பிளீஸ் சார்.. நான் பண்ணது தப்பு தான்.. என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்க.. பிளீஸ் ” என கண்ணீர் விழிகளுடன் கேட்டவளை, புருவம் இடுங்கப் பார்த்தவன்..
” புரியலையே..”
” எங்க அப்பா நீங்க சொன்னா தான் நம்புவாங்க.. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்.. நீங்களும் வந்து சொல்லுங்க பிளீஸ்.. ” அவளது இயல்பை மீறி அவனிடம் கேட்டு விட்டாள். கேட்டு விட்டாள் என்பதை விட கேட்க வைத்து விட்டான் விடாக் கொண்டன்.
நினைத்ததை நடத்தி முடித்து விட்டான் தான். ஆனால் துளியும் மகிழ்ச்சி இல்லை. அவன் நினைத்ததை போல அவனிடம் வந்து திருமணத்திற்காக கெஞ்ச வைத்து விட்டான். ஆனால் ஏன் இன்னும் மனம் பாரமாகிப் போனது என்பது தான் கேள்விக்குறி.
அவள் கன்னங்களில் வழியும் கண்ணீரை கண்டு மனம் உருகியதோ என்னவோ !
நேராக வீட்டிற்குள் சென்றவன்.. இருவரது பெற்றோர்களையும் பார்த்து.. ” எங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் .. ” என்றதும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது. அதில் மீனாட்சி தான் ஒரு படி மேலே சென்று பிறையை கட்டிக் கொண்டாள்.
” என் செல்ல மருமகள்.. போதும் டி யம்மா இது போதும்.. ” என மகிழ்ச்சியில் ஆர்பரித்தார்.
” இன்னொரு முக்கியமான விஷயம் மா..”
” என்ன பா ”
” கல்யாணம் இன்னும் ஒரு வாரத்துல வைங்க.. சிம்பிளா கோவில்ல.. அப்பறம் இந்த கேஸ் முழுசா முடியவும்.. உங்க விருப்பபடி ரிசப்ஷன் வச்சுக்கலாம்.. ” என்றதும்.. திவாகரும் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து தலையசைக்க.. மீனாட்சிக்கு தான் வருத்தமாகிப் போனது.
மகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுசெய்த மருமகனை எண்ணி… அவரது தேர்வு சரி தான் என உணர்ந்து கொண்டார் சிவானந்தம்.
” உங்களுக்கு.. ” என தயக்கமாக கேட்டவனுக்கு பதிலாக..
” நீங்க சொல்லுற படியே செஞ்சுடலாம் மாப்பிள்ளை.. ” சிவானந்தம் போட்ட போட்டில் சிவகாமி வாயடைத்து போனார்.
‘ மாப்பிள்ளையாமே ‘ மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
” இப்போதான் சந்தோஷமா இருக்கு. வீட்ல ஒரு நல்ல விசேஷம் நடக்க போகுது.. எல்லாரும் சேர்ந்து நல்லா பண்ணலாம்.. அப்பறம் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு. நீ கொஞ்சம் லீவ் போட்டு வீட்ல இருந்தா நல்லா இருக்கும் ஆதி ” மீனாட்சி மெதுவாக கேட்டு பார்த்தார்.
” ம்ம் இருக்கலாம் தான்.. உங்க மருமகள் கேஸ் தான் போயிட்டு இருக்கு. நான் வீட்ல இருந்துட்டா.. இவ தான் அக்கியூஸ்ட்ன்னு உள்ள போடுவாங்க பரவாயில்லையா ” மகன் கேட்டதும்.. வாயை மூடிக் கொண்டார் மீனாட்சி.
” நம்ம தான் இத்தனை பேர் இருக்கோம்ல.. கல்யாண வேலையை நம்ம பார்த்துக்க மாட்டோமா.. அவன் வேலையை பார்க்கட்டும்.. தாலி கட்ட வந்தா போதும் ” என திவாகர் முடித்து விட.. அவ்வளவு தான் என்பதை போல அறைக்கு சென்று விட்டான். ஒரு நொடி கூட அவளை திரும்பிப் பார்க்கவில்லை.
பிறையும் அவளது அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள். பொறுமையாக நால்வரும் பேசி திருமணத்தை எப்படி செய்வது என பேச ஆரம்பித்து இருந்தனர்.
மீனாட்சி மாடியேறி மகளின் அறைக் கதவை தட்ட.. சோர்வாக வந்து கதவை திறந்தாள் பார்கவி.
” என்ன மா டின்னர் பண்ணியாச்சா ”
” திண்ணி மூட்டை.. சொல்ல வந்த விஷயத்தை கேளு டி..”
” அப்படி என்ன மா விஷயம்..”
” உன் அண்ணன் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டான்..”
” என்ன மா சொல்லுற ”
” பிறையை தான் பார்த்து இருக்கோம்”
” எது அவங்களா..”
” ஏன் டி .. அவளுக்கு என்ன ”
” ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்காங்களே மா.. நான் அண்ணனுக்கு பஜாரி மாதிரி ஒரு பொண்ணு வந்து இவனை அடக்குவாங்கன்னு நினைச்சேன். அதுவும் போச்சா ”
” அடிப்பாவி ” என்று மகளை தட்டியவர்.. ” அதுசரி நீ ஏன் சோர்வா இருக்க ”
” ப்ராஜெக்ட் ஒர்க் தான் மா.. ரொம்ப அலைச்சல்.. இன்னும் ரெண்டு மாசம் தான்.. முடிஞ்சுடும்”
” ரொம்ப படிக்காத டி.. மண்டை வெடிச்சிட போகுது .. கீழே வா தோசை சுட்டு தரேன் ” என மீனாட்சி கீழே செல்ல.. தலையில் அடித்துக் கொண்டு அன்னையை பின் தொடர்ந்தாள் பார்கவி.
படிப்பில் படு கெட்டி. அனைத்திலும் முதல் மதிப்பெண் தான்.. காலேஜில் கூட கோல்ட் அடித்து விட்டாள்.
” மூணு போதுமா ”
” இன்னும் ஒன்னு.. நெய் ஊத்தி ..கொஞ்சம் இட்லி பொடி போட்டு.. அப்படியே மேலே ஒரு முட்ட .. ” என அடுக்கிய மகளை முறைத்தவர்.. அவள் கேட்டதை போல தோசை சுட்டு கொடுத்தார்.
அறையில் இருந்த ஜன்னலின் வழியாக அந்த முழு நிலவினை வெறித்துக் கொண்டிருந்தாள் பிறை.
அவளது ரசனையை கலைப்பதற்காகவே சுஷ்மிதா அவளுக்கு அழைத்திருக்க..
” சொல்லு டி ”
” என்ன டி குரலே ஒரு மாதிரி இருக்கு ” எடுத்ததும் கண்டு கொண்டாள் தோழி.
நடந்ததை எல்லாம் கூறி விடலாமா என யோசித்தவள்.. பின் ஒன்று விடாமல் அவளிடம் பகிர்ந்து கொண்டாள்.
” என்ன டி சொல்லுற.. கமிஷனர் கூட டூம் டூம் டூம்மா ”
” விளையாடாத டி.. நான் சீரியஸா பேசறேன்..”
” நானும் அதான் சொல்லுறேன்.. ஓரக்கண்ணால பார்த்து பார்த்து கடைசி மஜா பண்ணிட்டியே ”
” அப்படியெல்லாம் எதுவும் இல்ல சுஷ்மி.. ”
” ஹலோ மேடம்… உனக்கு அந்த கமிஷனரை பிடிக்காதுன்னு மட்டும் சொல்லு பார்ப்போம் ” சுஷ்மிதா கேட்டதும் சற்றே சிந்தித்தவள்..
” பிடிக்காதுன்னு சொல்லுறதுக்கு காரணம் இல்லையே டி ”
” அதான் காதல் இருக்கே டி… அப்பறம் காரணம் எதுக்கு ” நக்கலாக கேட்ட சுஷ்மியை அலைபேசி வாயிலாக முறைத்தவள்..
” காதல் எல்லாம் இல்ல ”
” வேற என்னவாம் ”
” எதுவுமே இல்ல.. பியூர் அரேஞ்ச் மேரேஜ் ”
” ஹே வேற யாராவது காது குத்தாம இருப்பாங்க.. அவங்ககிட்ட சொல்லு உன் கதையை ”
” நிஜமா தான் டி ”
” ஓ அப்போ கமிஷனர் இடத்துல வேற யார் இருந்தாலும்.. உங்க அப்பா சொன்னாருன்னு நீ கல்யாணம் பண்ணிருப்பியா ” சுஷ்மிதா கேட்டதும்.. அந்த சூழலை நினைத்துப் பார்த்தாள்.
அவனை தவிர அந்த இடத்தில் யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.
” நீ என்னைய ரொம்ப குழப்புற.. நாளைக்கு வீட்டுக்கு வா மிச்ச கதையை பேசிக்கலாம்.. நான் வைக்கிறேன் ” என போனை வைத்து விட்டாள் பிறை.
” காதலா.. கமிஷனர் மேலயா.. ” சிந்தித்து பார்த்தவளுக்கு.. காதல் எப்படி இருக்கும் என்ற உணர்வே புரியவில்லை.
புரியும் நேரமும் வரும்.. ஆனால் புரிந்த பின்பு பிரிய வேண்டிய நிலையும் வரும்..
சனா💖
