Loading

அதீதம்-10


அந்த நாள் வெகு பரபரப்பாகவே விடிந்திருந்தது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும். அனைத்து சமூக ஊடகங்களுக்கும், வெறும் வாயை மெல்லும் அவசியமில்லாமல், அவல் கிடைத்திருந்தது. தலைப்புச் செய்திகளில் அதிகமாய் அடிபட்டுக் கொண்டிருந்தது இமயனின் பெயர்.

 

இமயனின் பெயர் பேசு பொருளாகியிருந்தது. பேசு பொருளாய் மாறியிருந்தது என்பதை விட அவன் மாற்றியிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

“மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார்.! அவரின் பூத உடல், இறுதி அஞ்சலிக்காக அவரின் மேலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது! இவர் தமிழக முதலமைச்சரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது.”

 

“இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மதுரை வருகை..!”

 

“முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!”

 

“மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் எப்போது?!”

“மேலூர் தொகுதியின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் யார்?!”

“மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுந்தரம் அவர்கள் இயற்கை எய்தினார். இந்தச் சூழ்நிலையில், மேலூர் தொகுதியின் அடுத்த உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர், திரு.இமயவரம்பன் அவர்களை மேலூர் தொகுதியில் நிறுத்த, முடிவு செய்யப்பட்டிருப்பதாக, நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!”

 

என்ற செய்திகள் மாறி மாறி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க, அவசமாய் கிளம்பிக் கொண்டிருந்தான் இமயன்.

 

“ராசா.. நாஞ்சொன்னதைக் கொஞ்சம் ரோசனை பண்ணி பார்க்கக் கூடாதா?!” என பேரனின் முன் வந்து நின்றார் செல்லம்மா.

“நான்தேன் நீ கேட்டோப்போவே முடியாதுன்னு சொல்லிட்டேனே அப்பத்தா.. பிறகு என்ன?!”

“அதுக்கு இல்லை ராசா.. கலியாணம் நிச்சயம் செஞ்சாச்சுல்ல.. இப்படி துக்க வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது சாமி! அப்பத்தாவுக்காக போகாமல் இருக்கலாம்ல? நல்லது நடக்கப் போற நேரத்தில், ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு நடந்து போச்சுன்னா என்ன செய்றது?!” என செல்லம்மா கேட்க,

“நல்லதும் கெட்டதும் நம்ம மனசில்தேன் இருக்கு அப்பத்தா! எல்லாத்துக்கும் மனசுதேன் காரணம். நீ எதையாவது நினைச்சு சங்கடப்பட்டுட்டு கிடக்காதே! இனி உன் பேரனுக்கு நல்ல காலம்தேன்.!” எனச் சொன்னான் இமயவரம்பன்.

“நான் எதுக்கு சொல்றேன்னா..!” என அவர் மீண்டும் துவங்க,

“அப்பத்தா! போதும், இப்போ நான் போகலைன்னா அது தான் பெரிய பிரச்சனை ஆகும். நான் இன்னைக்குக் கட்டாயம் அங்கே இருந்தே ஆகனும்!” எனச் சொன்னவன் விடைபெற்றுக் கிளம்பிவிட்டான். இந்தத் திருமணம் நல்லபடியாய் நடந்துவிட வேண்டுமென்ற வேண்டுதலுடன், இமயனின் புறமுதுகை வெறித்திருந்தார் செல்லம்மா.

அவருக்கு பேரனின் மனது நன்றாகவே தெரியும். ஆருத்ராவின் முகத்திலிருந்தே அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதையும் தெரிந்து வைத்திருந்தார் செல்லம்மா. முதல் வாழ்க்கைதான் இப்படியாகிவிட்டது.. இரண்டாம் வாழ்க்கையாவது, நல்லபடியாக அமைய வேண்டுமென்ற பயம் அவருக்குள் இருந்தது.

“என்னத்தே! இங்கனையே நின்னு வாசலைப் பார்த்துட்டு நிற்கிறீக? அவனைப் பத்திதேன் தெரியும்ல்ல.. விடுங்க!” என்றபடி வந்தார் தனலெட்சுமி.

“உன் மயன்.. என்னைக்கு நம்ம சொல்றதைக் கேட்டுருக்கான்? கல்யாணம் முடிவாகி பத்திரிக்கை ஊரெல்லாம் கொடுத்தாச்சு. துக்க வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு சொன்னால், ஒருபேச்சு கேட்க மாட்டேங்குறான். நீயும் உன் மயன்கிட்டே எதுவும் பேசாதே..!” எனச் சடைத்துக் கொண்டார் செல்லம்மா.

“நீங்க சொல்லியே கேட்காதவனா.. நான் சொல்லி கேட்கப் போறான்.? தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு திரியறவனை என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லதே நடக்கும் அத்தே! நீங்க விசனப் படாதீக..!” எனச் சொன்னார் தனலெட்சுமி.

“இப்படித்தேன்.. அந்த சீமை சித்தராங்கியைக் கட்டும் போதும் சொன்னோம். பெரிய இடம் நம்மக் குடும்பத்திற்கு ஒத்து வராதுன்னு சொன்னதை உன் மயன் காதிலேயே வாங்கலையே? விசுவாசம் மண்ணாங்கட்டின்னு கட்டிக்கிட்டான். இப்போ என்ன ஆச்சு? அந்தப் புள்ளைக் கூட வாழ்ந்துட்டு இருக்கானா? தனி மரமா நிற்கிறனைப் பார்க்க மூச்சு அடைக்குது டி! இவன் கல்யாணம் பண்ணாமல், நானும் பண்ண மாட்டேன்னு ராகவ் ஒருபக்கம் நிற்கிறான். என்னத்தைச் சொல்ல? நம்ம வீட்டில் காசு பணத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லைதேன்.. ஆனால் நிம்மதி.. மருந்துக்கும் இல்லை.!” எனக் கலங்கியக் குரலில் சொன்னார் செல்லம்மா.

 

“அத்தே! பேசாமல் இருங்க! பொண்ணு வீட்டு ஆளுங்க இங்கணதேன் தங்கி இருக்காங்க. என்னத்தையாவது உளறி வைக்காதீங்க! அவன் தலையில் ரெண்டு வாழ்க்கைன்னு எழுதியிருக்கு.. விதி அப்படித்தான்னா நாம என்ன செய்ய முடியும்? முதல் கல்யாணம் அவன் விருப்பமில்லாமல்தேன் செஞ்சுக்கிட்டான்னு நமக்குதேன் தெரியுமே? எல்லாம் தெரிஞ்சும், அவனை எப்படி குறை சொல்றது?!” தன் மகன் பக்கமே பேசினான் தனலெட்சுமி.

 

“நீ உன் மயனை விட்டுக் கொடுப்பியாக்கும்? என்னமோ.. நல்லது நடந்தால் சரித்தேன்.!” என அவர் சொன்னதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
அவள் மனம் முழுதும், கலங்கியக் குட்டையாய் குழம்பிப் போயிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற தெளிவில்லாத நிலைக்கு நடுவே, ராகவ் தன்னிடம் உண்மையை மறைத்ததும் சேர்ந்து, அவளை இன்னும் கொஞ்சம் பலவீனமாக்கியிருந்தது. தனக்கு யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தாள் அவள்.
ஆனாலும், ராகவைப் பற்றியும் அவளுக்குத் தெரியும், அவன் அவளை ஏமாற்ற நினைக்க மாட்டான். அவனோடு பழகிய இந்தச் சில வருடங்களில், அவனைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள் ஆருத்ரா. ஆனாலும், அவன் தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டான் என்றக் கோபம் அவள் கண்ணை மறைத்திருந்தது. ராகவோடு பழகிய தருணங்களை நினைத்துப் பார்த்தாள். சென்னைக்கு அவள் சென்ற புதிதில், அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவன் அவன் தான். அவள் தற்போது உயர் பதவியில் இருப்பதற்குக் காரணமும் அவன் தான்.

 

“இங்கே பாரும்மா! எதற்கும் பயப்படாதே.. நானும் மதுரை தான். எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு.!” என அவளுக்கு தைரியம் தந்து இலகுவாய் உணர வைத்தவன் அவன் தான். கோப மிகுதியில் அவனை வாய்க்கு வந்தபடி பேசியதை நினைத்து வருத்தப்பட்டாள் ஆருத்ரா. அவனை இப்படிப் பேசிவிட்டோமே..? என நினைத்து அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

‘என்ன பேசுறேன்னு தெரியாமல் பேசிட்டேன்.! ராகவ் என்ன நினைச்சானோ? அவன் உண்மையைச் சொல்லியிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே?!’ என யோசித்தவள், அவனிடம் நேரடியாகவே பேசிவிடலாம் என்றெண்ணி, அவன் அறையை நோக்கி நடந்தாள். அவள் அறையின் எதிர் திசையில், படிகள் இறங்கும் இடத்தில் ராகவின் அறை அமைந்திருந்தது.

அறையின் முன் சென்று நின்றவளுக்கு, ஒரு சிறு தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனாலும், மெதுவாய் கதவைத் தட்டினாள்.

“ம்மா! நான் தான் சாப்பாடு வேணாம்ன்னு சொன்னேன்ல்ல? சும்மா சும்மா இம்சை படுத்தாதீக!” என்ற அவன் குரல் கேட்டதும், கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றிருந்தாள்.

 

“ராகவ்!” பின்னாலிருந்து இவள் அழைக்க, அவன் திரும்பவே இல்லை. அவன் கோபத்தில் இருக்கிறான், என்பது இவளுக்குப் புரிந்தது.

 

“என் கிட்டே பேச மாட்டியா டா?!” இப்போதும் அவனிடம் பதில் இல்லை. தன் பையில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

“எங்கே போற ராகவ்.? சென்னை கிளம்புறியா?!” என அவள் கேட்க,

“ஐயோ.. அண்ணி! நீங்க ஏன் இங்கே வந்தீங்க? கூப்பிட்டுந்தால் நானே வந்திருப்பேனே அண்ணி?! என்ன வேணும் அண்ணி? எதுக்காக வந்தீங்க?!” என அவன் வேண்டுமென்றே அவன் விளிக்க,

“ராகவ் போதும்.. நான் கோபத்தில் அண்ணின்னு கூப்பிட சொன்னேன் அதுக்காக இப்படியா? சும்மா அண்ணி பன்னின்னு கூப்பிடாதே.. எனக்கு எரிச்சலா இருக்கு!” எனச் சொன்னாள் ஆருத்ரா.

“ஐயோ.. அது எப்படிங்க? நீங்க என் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க! உங்களை பேர் சொல்லி கூப்பிட முடியுமா? உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடற அளவிற்கு நாம பழகலையே? நான் யாரோ, நீங்க யாரோ தானே? வேணும்ன்னா மேடம்ன்னு கூப்பிடவா?!” என அவன் வீம்புக்கென்றே நக்கலாய் கேட்க,

 

“பைத்தியமா டா நீ..? நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற? நான் உனக்கு அண்ணியும் இல்லை.. ஒண்ணும் இல்லை. நான் ஜஸ்ட் ஆருத்ரா. உன் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்.!” எனத் தெளிவாய் சொன்னாள் அவள்.

“நீங்க எனக்கு ஃப்ரெண்டா? விளையாடாதீங்க! நான் உங்களை இதற்கு முன் பார்த்திருக்கேனா? எனக்கு உங்களை யாருன்னே தெரியாதே..?!” என தன் நிலையிலிருந்து அவன் இறங்கி வர மறுக்க,

“உன்னைக் கொன்னுடுவேன் ராகவ்! என்னை நீ ரொம்ப வெறுப்பேத்துற.. இப்போ என்ன உன் காலில் விழணுமா? நான் மன்னிப்பு கேட்கலைன்னா என்னை மன்னிக்க மாட்டியா? அவ்வளவு கோபமாடா உனக்கு?!” என அவள் கேட்க, பட்டென சிரித்திருந்தான் ராகவ்.

“நீ மன்னிப்பு கேட்காமலே நான் உன்னை மன்னிக்கணுமா? மாட்டேன்.. நானும் உன்மேல் கோபமாக இருக்கேன்!” என அவன் சொல்ல,

“அம் ஸாரி.. கோபத்தில் பேசிட்டேன்.!” என மன்னிப்பு வேண்டினாள் ஆருத்ரா.

“நான் வேணும்ன்னு பண்ணுனேன்னு நினைக்கிறியா ஆரு? எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தால், உன்னை சென்னையிலேயே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேனா? உன் கிட்டே இருந்து, எந்த தகவலும் வரலையேன்னு பயந்து தான் நான் இங்கே வந்ததே.. ஆனால் என் அண்ணனை மீறி என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியலை. அவன் ஒரு முடிவை எடுத்துட்டான்னா அதை யாராலும் மாற்ற முடியாது. அவ்வளவு உறுதியாய் இருப்பான். அப்படி இருக்கும் போது, அவன்கிட்டே பேசுறதெல்லாம் வேஸ்ட் தான். ஆனால் இமயன் நிஜமாகவே நல்லவன் ஆரு. இப்போ நாங்க சொகுசா இருக்கிற இந்த வீடு, தோப்பு, தொரவு, வசதி எல்லாமே அவன் கொடுத்தது தான். இதெல்லாம் மீட்டெடுக்க அவன் அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கான்.!” என ராகவ் சொல்ல,

“நீ கூட உண்மையைச் சொல்லலைங்கிற கோபம் தான் ராகவ். உண்மை தெரிஞ்சும் மறைச்சுட்டியேங்கிற ஆதங்கம்.. எல்லாம் சேர்ந்து என்னை அறியாமல் கோபத்தில் கத்திட்டேன்.! நீ வேணும்ன்னே எதுவும் செய்யலை தான்.. நான் உன்னை நம்பறேன்.. இந்தச் சொத்துக்களை மீட்டெடுக்க உங்க அண்ணன் கஷ்டப்பட்டான்னு சொல்ற, இந்த சொத்துக்களை காப்பாத்த பண்ணின முயற்சியில் கொஞ்சமாவது, அவன் முதல் வாழ்க்கையைக் காப்பாற்ற செய்திருக்கலாம் தானே?!” எனப் பதில் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.

 

“உனக்குப் புரியாது ஆரு.. இதை நான் சொல்றதை விட, இமயன் உன்கிட்டே சொல்றது தான் சரி. அவனோட தனிப்பட்ட விஷயங்களை அவன் அனுமதி இல்லாமல், என்னால் உன்கிட்டே சொல்ல முடியாது. அப்படி நான் சொல்றது சரியாகவும் இருக்காது. எல்லாத்தையும் விட, எனக்கு மேலோட்டமாகத்தான் அதைப் பற்றித் தெரியும்.!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“உன் அண்ணன் என்ன பெரிய தியாகியா? என்னமோ வாழ்க்கையிலேயே அவன் மட்டும் தான் கஷ்டப்பட்ட மாதிரி, பேசுற.?!” என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வாகனம் வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது.

“உன் அண்ணனே வந்துட்டான்னு நினைக்கிறேன். நான் அவன் கிட்டேயே கேட்டுக்கிறேன்.!” என அவள் அறையிலிருந்து வெளியே செல்ல,

“ஆரு.. நில்லு.. சொல்றதைக் கேளு ப்ளீஸ்..!” என ஆருத்ராவின் பின்னாலேயே இறங்கிச் சென்ற ராகவ் அதிர்ந்து நின்றிருந்தான்.

வாசலில் அந்தப் பெரிய கருப்பு நிற மகிழுந்து நின்றிருக்க, அதிலிருந்து இறங்கிய இளம் யுவதியைப் பார்த்ததும், அனைவரின் முகமும் பேயறைந்தார் போல் மாறியது.

“இவ என்னத்துக்கு இங்கண வந்திருக்கா? கல்யாணத்தனைக்கு கூட, இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்னு சொன்னவள், இப்போ என்னத்துக்கு வந்தாள்? எம் பேரனுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னா இவளுக்கு மூக்கு வேர்த்துரும்..!” எனச் செல்லம்மா புலம்பிக் கொண்டிருக்க, இந்த வீட்டிற்குப் புதிதாக வந்திருந்துக்கும், இவள் யாரெனெத் தெரியாமல் குழப்பமாய்ப் பார்த்திருந்தாள் ஆருத்ரா.

*******

அந்த இடம் முழுதும், காவல்துறையினர் கணக்கில்லாமல் குவிக்கப்பட்டிருந்தனர். காக்கிச் சட்டைகளும், வெள்ளை வேட்டி சட்டையும் அதிகமாக தென்பட, சிலர் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். இமயவரம்பனும் அங்கு தான் வந்திருந்தான். சரியாய் முதலமைச்சர் மயில்ராவணன் வரும் நேரத்தைக் கணித்து அதே நேரத்திற்கு வந்திருந்தான். அவன் முகமோ சோகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

நிஜமாகவே அவனுக்கு சுந்தரத்தின் இறப்பில் வருத்தம் இருந்தது. அவனைப் பொருத்தவரை அவர் ஒரு நல்ல மனிதர். வயதில் மூத்தவர். இமயனோடு அன்பாகப் பழகுபவர். ஆனாலும் நாட்பட்ட நோயால், அவதிப்பட்டவரின் வலிகளையும் வேதனைகளையும் பார்க்கையில், இந்த மரணம் ஒருவகையில் விடுதலை என்று தான் அவனுக்குத் தோன்றியது. ஒருவரின் இறப்பை இப்படி தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறோம் என அவனுக்கு உறுத்தல் இருந்தாலும், தான் வாழும் கழுதைப் புலிகள் சூழ் உலகில், தன்னை நிலைநாட்டிக்கொள்ள சில சாணக்கியத்தனங்கள் அவசியமாகத்தான் இருக்கிறது.

 

தான் வாங்கி வந்திருந்த பெரிய மாலையை அவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தான். சுந்தரத்தின் மகனை தன்னோடு அணைத்து விடுவித்தான்.

 

“அவர் இருந்து வேதனைப்படுறதுக்கு, இது ஒருவகையில் விடுதலைதான் அண்ணே! நிறைய உழைச்சுட்டார் மனுஷன்.. பாவம் ஓய்வெடுக்கட்டும்!” என அவர் மகன் பேசியதும்,

“அவர் இங்கே உங்க கூடவே தான் இருக்கார். கவலைப்படாதீங்க!” என ஆறுதலாய் சொன்னான். சுற்றி நின்றிருந்த அத்தனை கேமிரா கண்களும், படபடவென அவர்களைப் புகைப்படமாய் பதிவாக்கிக் கொண்டது. இங்கே நடப்பவை அனைத்தையும், தன் பாதுகாவலர்கள் புடை சூழ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன். இந்தச் சமூக ஊடகங்கள், தன்னையும் இமயனையும் உற்றுக் கவனிப்பதாய் அவருக்குத் தோன்றியது.

 

“யோவ்.. எதுக்குய்யா இவ்வளவு மீடியாக்கானுங்களை உள்ளே விட்டு வச்சிருக்கீங்க? எங்கே பொணம் விழும்.. பொறுக்கி தின்னலாம்ன்னு அலையற கும்பல்கள். இந்த சுந்தரம் வேற போய்ச் சேர்ந்துட்டான். இந்த இமயன் வேற அந்தத் தொகுதியில் என்னை நிப்பாட்டுன்னு சொல்லுவான். இருக்கிற தலைவலியில் இந்த இம்சை வேற..!” எனத் தன் உதவியாளரிடம் முணுமுணுத்தபடியே சுந்தரத்திற்கான இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு மயில்ராவணன் வெளியே வந்த அதே நேரம், இமயவரம்பனும் வெளியே வந்தான்.

 

“நல்லா கேம் விளையாடுற போல இமயன்? எவ்வளவு பணம் கொடுத்த?!”எனச் சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார் மயில்ராவணன்.

 

“நீங்க கொடுக்கிறதை விட, பத்து பர்சென்ட்.. பத்தே பெர்சென்ட் தான் அதிகமா கொடுத்தேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஆடுறானுங்கன்னா பார்த்துக்கோங்க!” என இலகுவாக மென் சிரிப்புடன் பதில் சொன்னான் இமயவரம்பன்.

 

“நீயே மீடியாவுக்கு காசு கொடுத்து நியூஸ் போட சொல்லிட்டா.. நீ எம்.எல்.ஏ ஆகிட முடியுமா? ஓட்டு வேணும் தம்பி..!” என அவர் நக்கலாய்ச் சொல்ல,

 

“எல்லாம் நீங்கக் கத்துக் கொடுத்தது தான் மாமா.. மக்களுக்கு நல்லது செய்றோமோ, இல்லையோ, செய்ற மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்தணும்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்ததே நீங்க தானே மாமா! ஓட்டு விழும்.. அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப் படுறீங்க? முதலில் என்னை மேலூர் தொகுதியில் நிறுத்துங்க.. ஓட்டு மட்டும் விழலைன்னா.. நான் அரசியலை விட்டே போய்டுறேன்..” என அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மர்மாய் சிரித்துக் கொண்டார் மயில்ராவணன்.

 

“இந்த விஷயத்தில் நான் மட்டும், முடிவெடுக்க முடியாது இமயன். கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கணும். மற்ற உறுப்பினர்கள் சரின்னு சொன்னால் மட்டும் தான்.. உன்னை நிறுத்த முடியும். எதுவும் உறுதியாய் தெரியும் முன்னால், இப்படி பொய் செய்திகளை மீடியாவிற்குக் கொடுக்காதே!” உள்ளிருந்தக் கோபத்தை அடக்கியபடி சொன்னார் அவர்.

 

“கட்சி மேலிடமே நீங்கதானே மாமா? உங்களைத் தாண்டி யார் என்ன செஞ்சிட முடியும்? அரசியலைப் பொருத்தவரை சிபாரிசுங்கிற ஒண்ணு தவிர்க்கவே முடியாதது. எனக்காக நீங்க சிபாரிசு பண்ண மாட்டீங்களா மாமா? நான் உங்க மருமகன் தானே? நீங்க செய்வீங்க மாமா.. அதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை மாமா!”

 

“வார்த்தைக்கு, வார்த்தை மாமான்னு கூப்பிடாதே இமயன்..! எரிச்சலா இருக்கு! அந்த உறவு எப்போவோ முடிஞ்சு போச்சு.!”
முன்னாள் மாமனார்ன்னு கூப்பிடலாமா? நீங்க தானே என்னை ஆசைப்பட்டு மருமகனாய்க் கொண்டு வந்தீங்க? இப்போ அந்த உறவு வேணாம்ன்னு சொன்னால்.. முடிஞ்சுடுமா?!” எனக் கேட்டான் அவன்.

 

“என் பொண்ணுக்கும், உனக்கும் இருந்த உறவு எப்போவோ முடிஞ்சு போச்சு. அப்படியிருக்கும் போது, அந்த உறவை நீ தொடரனும்ன்னு நினைக்கிறது சரியில்லை இமயன்.!” என எரிச்சலுடன் சொன்னவர், முகத்தை சிரித்தபடியே வைத்துக்கொண்டார். இவரின் ஒவ்வொரு அசைவையும் சமூக ஊடகங்கள் உன்னிப்பாய் கவனிக்குமென்பது அவருக்குத் தெரியுமே..

 

“நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான் மாமனாரே..! ஆனால் நீங்க உங்க பொண்ணுக்கு பண்ணி வச்சது, ஊருக்கு கணக்குக் காட்டுற கல்யாணம்ன்னு யாருக்கும் தெரியாதே..! பேசாமல் அதை எல்லாருக்கும் சொல்லிடுவோமா? இதை மட்டும் வெளியில் சொன்னால், என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் தானே? ஜாதி சங்கம்ன்னு ஒண்ணு இருக்கு.. அதற்கு தலைவர் நீங்க தான்னு உங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும். இதுக்கு மேலே நான் எதுவும் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.!” எனப் புன்னகையுடன் அவன் சொல்ல, இமயனின் புன்னகையின் பின்னாலிருந்த அர்த்தம் புரிந்ததில், சட்டென முகம் ஒருமாதிரியாய் மாற, வியர்த்து வழிந்தது மயில்ராவணனுக்கு.

 

“சரி.. சரி.. இதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.! எப்படியும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கும். அப்போ பார்த்துக்கலாம்.!” எனச் சமாளிக்க முயன்றார் அவர்.

 

“பார்த்துக்கலாம்ங்கிற பதில், எனக்கு தேவையில்லை மாமா! எனக்கு தேவையான பதில் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஜாதின்னு ஒண்ணு உயிரோட இருக்கிறதால் மட்டும் தான், நீங்க பதவியில் இருக்கீங்கன்னு உங்களுக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும், ஒருமுறைக்கு பத்து முறை யோசிச்சு செய்ங்க! புரியும்ன்னு நினைக்கிறேன்.!”
என மிரட்டல் தொனியில் அவன் சொல்ல, அவன் குரலில் தெரிந்த ஏதோவொன்றில், அவனை நிமிர்ந்து பார்த்தார் அவர். அவன் கண்களில் தெரிந்த தீவிரமும் கோபமும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது. அவன் இதழ்கள் சிரித்தவண்ணம் இருந்தாலும், அவன் கண்கள் அவன் மனதுக்குள் எரிந்துக் கொண்டிருந்தக் கோபத்தின் அளவைக் கண்ணாடியாய்க் காட்டிக் கொண்டிருந்தது.
இமயன் சட்டெனக் கோபப்படுபவனாய் இருந்திருந்தால், அவன் கோபத்தைத் தூண்டிவிட்டு, எப்போதோ காரியம் சாதித்திருப்பார் மயில்ராவணன்.

 

ஆனால், இவன் கோபத்தில் மட்டுமல்ல, அவனின் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் தெளிவும் இருந்தது. அந்த நிதானமும் தெளிவும் தான் அவரை ஆட்டிப் பார்த்தது. அவரும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டார். ஆருத்ராவைப் பணயமாய் வைத்து அவனிடம் காரியம் சாதிக்க முயன்றார். ஆனால் அவர் திட்டமிடும் அத்தனையும் கணித்து, ஒருபடி முன்னாலிருந்தான் இமயன். இமயன் வெறும் சிறு துரும்பு என அவர் நினைத்திருக்க, அவனோ அவன் பெயரைப் போலவே இமயமலையாய் அவர் முன் நின்றான். பேசாமல் அவன் கேட்பதைச் செய்துவிடலாமா? என யோசிக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருந்தான் இமயவரம்பன்.

 

“புரியுது இமயன்..! இப்போ நீ கிளம்பு! நான் பார்த்து செய்றேன்!” அவனை அனுப்ப வேறு வழியில்லாமல் சொல்ல, புன்னகையோடு அவன் அவரிடம் கைகுலுக்கி விடைபெற்றது அடுத்த நாள் தலைப்பு செய்தியாய் முதல் பக்கத்தை நிறைத்திருந்தது.

 

“இவருக்கு பதில் இவரா?!”

“மறைந்த திரு.சுந்தரத்திற்குப் பிறகு, முதலமைச்சருக்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறார் இமயவரம்பன். மேலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக இமயவரம்பன் தேர்வு செய்யப்படுவாரா? ஆளும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?!” என வழக்கம் போல் ஊடகங்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்தே மயில்ராவணன் கோபமாய் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்க, மயில்ராவணன் கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது இவர் கண்ணில் விழுந்தது.

“இவன் யாரைக் கேட்டு பேட்டி கொடுக்க போனான்?!” எனப் புலம்பியபடியே அவர் பார்த்துக் கொண்டிருக்க,

“மேலூர் தொகுதியின் அடுத்த வேட்பாளர் யாருன்னு நீங்க நினைக்கிறீங்க?!” என்ற கேள்விக்கு,

“கண்டிப்பா இமயவரம்பன் தான்.! மறைந்த சுந்தரம் ஐயாவே இமயன் தான் அடுத்து வரணும்ன்னு நினைச்சார். இவ்வளவு ஏன், மாண்புமிகு முதல்வர் ஐயாவே, இமயனைத் தான் யோசிச்சு வச்சிருக்கிறதா என்னிடம் நேரடியாய் சொன்னார்.!” எனப் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்து இரத்த அழுத்தம் எகிறியது மயில்ராவணனுக்கு.

“யோவ்.. மணி! இப்போ பேட்டி கொடுத்துட்டு இருக்கானே.. அவனுக்கு ஃபோன் போடு! இவனுங்க இஷ்டத்துக்கு என்னத்தையோ பேசி வச்சு கழுத்தை அறுக்குறானுங்க! இவன் யாரைக் கேட்டு பேசினான். இந்தப் பதவியில் இருந்து தொலைலையறதால் அமைதியாய் இருக்கேன். மதுரைக்குள்ளே போய் கேட்டுப் பாரு.. என்னோட முழு வரலாறும் தெரியும்!” என அவர் கோபமாய்க் கத்திக் கொண்டிருக்க,

 

“பேசாமல் ப்ரஸ் மீட் வச்சு, நாமளே இவர் சொன்னதுக்கு மறுப்பு செய்தி வெளியிட்டு விடலாம் சார்!” என அவரின் உதவியாளர் மணிகண்டன் சொல்ல,

 

“மறுப்பு செய்தி வெளியிட்டால், அதுவே நமக்கு எதிரா திரும்ப நிறைய வாய்ப்பு இருக்கு. நாளைக்கு அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்.. எல்லாருக்கும் தகவல் அனுப்பிடு. பேருக்கு ஆலோசனைக் கூட்டம் வச்சுட்டு, அந்த இமயனை நிறுத்துறதா சொல்லிடுவோம். நானாக என் வாயால் அவன் பேரைச் சொல்ற வரை இந்த இமயன் சும்மா இருக்க மாட்டான்.!” என அவர் சொன்ன அதே நேரம், அவர் எடுக்கப் போகும் முடிவை முன்பே கணித்தவனாய் தனக்குள் சிரித்தபடியே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.

“வாழ்வில் படிக்கவேண்டுமென்றால்…
குருவிற்கு மாணவனாய் இரு..!
அரசியல் படிக்க வேண்டுமென்றால்..
தலைவனுக்குத் தொண்டனாய்..
எப்போதுமே இருந்துவிடாதே..!
ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து..
அரசியல் செய்து விடுவனே தவிர, அதை
உனக்குக் கற்றுத் தர மாட்டான்..!”
_சாணக்கிய நீதி

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்