
பிறை -27
வீட்டு வாசலுக்கு முன் பெரிய தோட்டம். அதை பரமாரிக்க ஆட்களையும் நியமித்து இருந்தார் திவாகர்.
” நம்ம ஊர்ல எவ்வளவு பெரிய வயலை ஒத்த ஆளா நான் சமாளிப்பேன். ஆனால் பாரு இங்க இந்த சின்ன தோட்டத்தை பார்க்க ஆள் போட்டுருக்காங்க.. ” தோட்டத்தில் நடந்து கொண்டே சிவானந்தம் கூற.. அதை கவனித்து கொண்டே வந்தார் சிவகாமி.
” நம்ம வேற, இவங்க வேற.. நமக்கு அதாங்க பொழப்பு.. ஆனால் இவங்களுக்கு அப்படி இல்லையே ”
” நீ சொல்லுறதும் சரிதான் மா.. எனக்கு என்னமோ இந்த குடும்பத்தை பிடிச்சு தான் இருக்கு. ரவைக்கு நீ சொன்னதை எல்லாம் யோசிச்சு பார்த்தேன்.. ஆனால்.. ” என சிவானந்தம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆதியின் கார் வீட்டிற்குள் நுழைந்தது.
வேகமாக மகளை காண சென்ற சிவகாமியின் கைகளை பிடித்து தடுத்தவர்.. அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார். இவர்கள் இருவரும் தோட்டத்தில் இருப்பதை காரில் இருந்த ஜோடிகளும் கவனிக்கவில்லை.
கார் நின்றதே தவிர இருவருமே இறங்கவில்லை. ” நான் ஊருக்கு போகனும் சார்.. இங்க இருக்கவே எனக்கு மூச்சு முட்டுது” மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் பிறை.
” ஏன் மூச்சு முட்டுது.. அப்படி முட்டுற அளவுக்கு நான் ஒன்னும் பண்ணலயே மூன் ” சாதாரணமாக பேசி விட்டு , ஸ்டெரிங்கில் அவன் தாளமிட.. அவனை முறைத்து பார்த்தவள்..
” இந்த டபிள் மீனிங் எல்லாம் வேணாம் சொல்லிட்டேன் ”
” இதை விட டெரெக்டா சொல்ல முடியாது மூன் ”
” இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை.. ” கேட்டவளுக்கு மூக்கு கோவை பழமாக சிவந்து போனது.
” எனக்கு என்ன பிரச்சனை.. உனக்கு தான் பிரச்சனை.. எங்க என் வீட்லயே இருந்துட்டா என்னைய லவ் பண்ணிடுவியோன்னு பயம்.. அதான் ஊருக்கு ஓட பார்க்குற “என்றவனை வெறியாக பார்த்தவள்..
” எத்தனை நாள் வேணாலும் நான் இங்க இருக்கேன்.. எனக்கு பிரச்சனை இல்ல ” என சட்டென ஜீப்பில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றவளை சுவாரசியமாக பார்த்திருந்தான் ஆதிதேவ்.
பின் வந்த வழியாக கிளம்பி ஸ்டேஷன் சென்றிருந்தான் ஆதி. தோட்டத்தில் நின்ற இருவரும், பலத்த சிந்தனையோடு வீட்டிற்குள் நுழைந்தனர்.
” கேஸ் விஷயம் என்னாச்சு மா ” சிவகாமி கேட்க.. மீனாட்சி, சிவானந்தம் இருவரும் அவளது பதிலுக்காக காத்திருந்தனர்.
” அங்க நடந்ததை எல்லாம் கேட்டாங்க மா.. சொல்லிட்டு வந்துட்டேன் ”
அவள் களைப்பாக தெரியவும்.. ” உனக்கு குடிக்க எதுவும் வேணுமா மா ” மீனாட்சி கேட்டதும், தயக்கமாக அவரை பார்த்தவள்.. ” அது வீட்ல இருக்கும் போது ஒன்னும் தெரியல ஆண்டி.. வெளிய போயிட்டு வரவும் ரொம்ப சோர்வா இருக்கு .. அது.. ஜுஸ் போட்டு தரீங்களா ” தயக்கமாக கேட்டவளை செல்லமாக கைகளில் தட்டியவர்.. ” உனக்கு இல்லாததா.. இதுக்கு ஏன் தயங்குற” என அடுக்களைக்கு சென்றவர்.. பத்தே நிமிடத்தில் ஆரஞ்சு பழச்சாறுடன் வந்து சேர்ந்தார்.
” குடி தெம்பா இருக்கும்.. ” சிவகாமி மகளின் தலையை வருடியவர்.. ” நாங்க இங்க இருக்கிறதுல உங்களுக்கு அதிக சிரமம் தான்.. நான் தனியா போறோம்னு சொன்னாலும்.. பாதுகாப்பு இல்லைன்னு சொல்லுறாங்க.. ” என கையை பிசைய..
” நான் அப்படி நினைக்கவே இல்லைங்க.. நீங்க தாராளமா இங்க இருக்கலாம். பிறை எனக்கும் பொண்ணு மாதிரி தான்.. ” என்றவர்..
” மதியம் உனக்கு கறி சூப் வச்சுருக்கேன். அதையே சாதத்துல போட்டு சாப்பிடு ” என்றதும் சரியென தலை அசைத்தாள் பிறைநிலா.
” உங்ககிட்ட பேசலாமா ” எப்படி பேசுவது என தெரியாமல் முதலில் அனுமதி கேட்டு விட்டார் சிவானந்தம்.
” என்னங்க இது.. என்னனு சொல்லுங்க.. ” என எழுந்த மீனாட்சியும் அமர்ந்து விட்டார்.
” அது வந்து நீங்க என் கிட்ட ஒரு விஷயம் கேட்டீங்க இல்லையா ”
சற்றே யோசித்தவருக்கு கண்கள் பளிச்சிட.. ” ஆமாங்க.. கல்யாணம் விஷயம் தானே ” என அவரே எடுத்து கொடுத்தார்.
” ம்ம் அதாங்க.. நானும் சிவகாமியும் நல்லா யோசனை பண்ணி பார்த்துட்டோம். இப்படியே என் பொண்ணை ஊருக்கு அழைச்சுட்டு போக விருப்பம் இல்ல.. இங்கேயே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறது நல்லதுன்னு படுது ” தந்தை பேசிய வார்த்தைகளை உள்வாங்கியவளுக்கு.. நெஞ்சம் எங்கும் நடுங்கியது.
” அப்பா… ” என இடை வெட்டிய மகளை ஒரு பார்வை பார்த்தவர்.. ” என் தங்கச்சி மகனை விட்டுட்டு வேற யாரை அப்பா கை காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்க பிறை ” என நினைவூட்டியவரை இயலாமையுடன் பார்த்தாள் பிறை.
” அதாங்க.. உங்க மகனுக்கும் என் மகளுக்கும் இங்கேயே நல்ல நாளா பார்த்து கல்யாணம் பண்ணி எங்க ஊருக்கு கூட்டிட்டு போயிடலாம்னு யோசிச்சு வச்சேன்.. நீங்க என்ன சொல்லுறீங்க.. உங்க வீட்டுக்காரர் இல்லாம நான் பேசியிருக்க கூடாது தான்.. இருந்தாலும் மனசுக்குள்ளையே வச்சிருக்க முடியாம தான் கேட்டுட்டேன் ” சிவானந்தம் கேட்டதும் மீனாட்சியை கையில் பிடிக்க முடியவில்லை.
மகனுக்கு ஒரு நல்லது நடக்க போகிறது.. அதுவும் திருமணம்.. என்றால் அவரை பிடிக்க முடியுமா என்ன.. ” ஐயோ என் வீட்டுக்காருக்கும் இதுல சம்மதம் தாங்க.. உங்க கிட்ட பேசுன அன்னைக்கே நான் என் வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டேன். அவர் வந்ததும் முதல் வேலையா எல்லாரும் இதை பத்தி பேசுவோம்.. ” மீனாட்சி மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திவாகர் உள்ளே வந்தார்.
” என் பொண்டாட்டி இவ்வளவு சந்தோஷமா இருக்கான்னா என்ன விஷயமா இருக்கும் ” என பேசிக் கொண்டே வந்தவரை .. ஓடி சென்று வரவேற்றவர்.. ” இங்க வந்து உட்காருங்க… அவங்களுக்கு கல்யாணம்… ” என கூற வந்தவர்.. ” நான் சொன்னா நல்லா இருக்காது.. அவங்களே சொல்லுவாங்க ” என மீனாட்சி ஆர்வமாக சிவானந்தனை பார்க்க..
” என் மகளை உங்க மகனுக்கு கட்டி கொடுக்க சம்மதங்க.. உங்களுக்கு சரின்னா நம்ம மேற்கொண்டு பேசலாம் .. ” என பளிச்சென்று கூறி இருந்தார் அவளது தந்தை.
” ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்ல.. என் மகன் கிட்ட இன்னும் இதை பத்தி கலந்துக்கல .. அவன் வந்ததும் ஒரு வார்த்தை பேசிட்டு உங்களுக்கு முடிவை சொல்லவாங்க.. ” தன்மையாக பேசும் அவரை சிவானந்ததிற்கு மிகவும் பிடித்துப் போனது.
” கண்டிப்பா.. இதுல அவரோட சம்மதம் ரொம்ப முக்கியம்.. ” என்ற தந்தையை முறைத்து பார்த்தாள் பிறை. ‘ அவரு சம்மதம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தானே அவரை கட்டிக்க போற என்னோட சம்மதமும் முக்கியம்.. இது ஏன் அவருக்கு புரிய மாட்டேங்குது ‘ என மனதிற்குள் நினைத்தவள் வெளியில் சொல்லவில்லை.
” நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.. நான் பாயாசம் பண்ண போறேன் ” என மீனாட்சி , சிவகாமியை அழைத்துக் கொண்டு அடுக்களைக்கு செல்ல.. பெரியவர்களும் கலைந்து விட.. பிறை தனித்து விடப் பட்டாள்.
” போச்சு கமிஷனர் சொன்ன மாதிரி நடக்க போகுதோ.. கண்டிப்பா நான் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்.. ” என உறுதியாக கூறிக் கொண்டாள் பிறை.
பாயாசம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. பார்கவிக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை. ஆதி முடிவை கூறிய பின் சொல்லிக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விட்டார்கள்.
அறைக்கு வந்த சிவகாமி.. ” என்னங்க அப்படி என்ன அவசரம் உங்களுக்கு.. இப்படி திடீர்னு கேட்டுட்டு வந்துட்டீங்க.. நேத்து தான் போலீஸ்காரன் அது இது பார்த்து பண்ணனும் அப்படின்னு சொன்னீங்க.. இன்னைக்கு என்னனா சம்மந்தம் பேசிட்டு வந்திருக்கீங்க.. ” கணவனது செயல் புரியாமல் கேட்டார் சிவகாமி.
” எல்லாம் இன்னைக்கு அவங்க கார்ல வந்ததை வச்சு தான் சிவகாமி. அந்த தம்பிக்கு நம்ம பொண்ணு மேல பிரியம் இருக்கு. அவரு வெளிப்படையா தான் இருக்காரு.. ஆனால் நம்ம பொண்ணுக்கும் பிரியம் இருக்கு.. அதை இன்னும் அவ உணரல.. அவ்வளவு தான். கல்யாணம் பண்ணி வச்சா சந்தோஷமா இருக்கப் போறாங்க.. அதான் உடனே பேசிட்டேன். இவரை விட நம்ம பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க போறாங்களா என்ன.. நம்ம மகளை நல்லா பார்த்துப்பாங்க.
நம்ம ஒரு மாப்பிள்ளை பார்த்தாலும்.. பிறைக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லி.. நம்ப வச்சு கல்யாணம் பண்ணனும்.. அவன் நம்பினானா இல்லையான்னு தெரியாது. பின்னாடி நம்ம பிள்ளைக்கு பிரச்சனை வந்தா என்ன பண்ணுறது. ஆனால் இந்த கல்யாணம் நடந்தா அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. அது மட்டும் காரணம் இல்ல. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு அதான் நான் முடிவு பண்ணேன்.. ” தெளிவாக முடிவெடுத்த கணவனை எண்ணி மெச்சி கொண்டார் சிவகாமி.
” என் விஷயத்திலையும் நீங்க இந்த மாதிரி யோசிச்சிருக்கலாம் .. ” சிவகாமி மனதில் இருந்ததை மறைக்காமல் கூற.. வேதனையாக பார்த்தார் சிவானந்தம்.
” நான் இப்போ உனக்காக என்ன பண்ணாலும்.. பழசை உன்னால மறக்க முடியாதுல .. நீ வயசுல இழந்த சந்தோஷத்தை என்னால திருப்பி கொடுக்க முடியாதுல ” குரல் கரகரக்க கேட்ட கணவனை பார்த்தவர்.. தலையில் அடித்துக் கொண்டு.. ” நான் ஒரு கேனச்சி..எதை எப்போ பேசனும்னு தெரியல.. நம்ம மக கல்யாணத்தை நல்ல படியா முடிப்போம்.. ”
” நல்ல படியா நடக்கும் சிவகாமி..”
” கல்யாணத்துக்கு உங்க அம்மா, தங்கச்சி எல்லாம் வேணாமா ”
” இப்போதைக்கு அவங்க இல்லாம பண்ணுறது தான் நல்லது. ஆனால் இது தப்பு தான். வேற வழி இல்லையே. இங்க வந்து பிறை மனசு கஷ்ட படுற மாதிரி அவங்க பேசி கல்யாணத்தை நிறுத்த நினைப்பாங்க.. வேண்டாம்.. பண்ணிட்டு ஊருக்கு தானே போக போறோம்.. அப்போ பார்த்துக்கலாம் ”
” செய்தியில வருங்க ”
” வரட்டும் சிவகாமி.. எதுவா இருந்தாலும் நம்ம மக வாழ்க்கைக்காக பேசி தான் ஆகனும் ” கணவன் அவரது முடிவில் தெளிவாக இருப்பதை பார்த்து, சிவகாமியும் மனதை தேற்றிக் கொண்டார்.
” என்ன பாரு இவ்வளவு லேட்டா வர.. ” மாலை , நேரம் சென்று வீட்டிற்கு வந்த மகளை மீனாட்சி கேட்க..
” ப்ராஜெக்ட் ஒர்க் மா.. ரொம்ப டயர்ட். நான் ரூம் போறேன்.. டின்னர் பண்ணிட்டு கூப்பிடுங்க ” என பார்கவி மாடிக்கு சென்று விட்டாள்.
மாலை ஏழு மணியை போல வீட்டிற்கு வந்த ஆதிக்கு விஷயம் தெரிவிக்கப் பட.. அவனோ பிறையிடம் தனியாக பேச வேண்டும் என கூறி இருந்தான். அதன் பிறகே முடிவை கூறுவதாக அவன் கூறி இருக்க.. மீனாட்சிக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
பிறை அவனிடம் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆனால் சிவானந்தம் அவளிடம் பேசி அனுப்பி வைக்க.. இதோ ஒரே அறையில் எதிர் எதிரே ஆதியும், பிறையும்.
முழு நிலவானவளுக்கு ஆதியும் அந்தமுமாக ஆருத்ரன் வருவானா ? இல்லை ஆதி வருவானா ?
சனா 💗
