Loading

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். நாளைக்கும் சேர்த்து ரெண்டு எபி போட்டு இருக்கேன். அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை போடுறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இது கான்செப்ட் 18+ தான். சோ பிடிக்காதவங்க கடந்துடுங்க. கதை முடிஞ்சதும் எங்க 18+ ன்னு கேட்டு அசிங்கப்படுத்தப் படாது🤭 happy ரீடிங்….🌧️🌧️🌧️🌧️🌧️ And share your comments☺️

அத்தியாயம் 8

சற்றுப் பொறுமையாகவே வான்மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவன், மெல்லக் கரங்களை விலக்கிக்கொள்ள அப்போதும் அவள் நிமிரவே இல்லை. அவனும் அவளின் மேல் பதிந்த விழிகளை அகற்றவும் இல்லை.

அவன் விலகிய நொடியே, வான்மதி அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புகுந்து கொள்ள, ஆரவ் வெகு நேரம் அதே இடத்தில் நின்று எங்கோ இலக்கின்றி வெறித்திருந்தான். பல பாரங்கள் ஒன்றாய் சேர்ந்து நெஞ்சை அழுத்துவது போல் இருக்க, அதற்கு மேல் நிற்க இயலாதவனாய் அறைக்குள் சென்று உறங்கிக்கொண்டிருந்த இஷாந்தையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான். பிறகு எப்போது உறங்கினான் என்று அவனுக்கும் தெரியவில்லை.

இது எப்போதும் நடப்பது தான். படுத்ததும் உறக்கம் கண்ணைத் தழுவ மறுக்கையில், இஷாந்தை பார்த்தபடியே படுத்திருப்பான். அதன் பின் அவனை மீறி உறங்கினால் தான் உண்டு.

தன்னறைக்கு சென்ற வான்மதி, அந்த அறையையே சுற்றி முற்றி நோட்டமிட்டாள். நீள அறை தான். நான்கு பேர் உறங்கும் அளவு, அகலமான கட்டில், மெத்தை. சுவற்றோடு ஒட்டி இருக்கும் பெரிய அளவிலான டிவி, பழச்சாறு வைப்பதற்கு சிறிய குளிர்சாதனப்பெட்டி. அறையை ஒட்டி ஒரு ஓரத்தில் லேப்டாப் டேபிள். ஒரு பக்க சுவர் முழுக்க வார்ட்ரோப் குத்தகைக்கு எடுத்திருக்க, அதற்கு அருகில் பால்கனிக்கு செல்லும் கதவும் இருந்தது.

இப்போதைக்கு அங்கு செல்லும் எண்ணம் இல்லாததால், குளியலறைக்குள் புகுந்தவளுக்கு, அங்கும் பாத் டப், ஷவரில் நனைய தனி கண்ணாடித் தடுப்பு என நவீனத்தின் உச்சமாய் இருந்தது.

‘இதெல்லாம் ஏற்கனவே இருந்துச்சா. இல்ல எனக்காக பண்ணாரான்னு தெரியலையே’ என சிந்தித்தவளோ, ‘ஏற்கனவே இருந்துருக்கும்.’ என்று முடிவெடுத்து விட்டு, லேசான குளியல் ஒன்றை போட்டு விட்டு, படுக்கையில் சரிந்து விட்டாள்.

உடல் அசதியும், குளுகுளு அறையும், வெயில் உள்ளே வராத படி, ஜன்னல்கள் எல்லாம் திரைச்சீலையில் மறைந்து, மெல்லிய இருளை கொடுத்தும் கூட, கண்கள் மூட மறுத்தது பெண்ணவளுக்கு.

வாழ்க்கை அடுத்து என்ன வைத்திருக்கிறது என்று புரியாதவளாய், விதி அழைத்துச் செல்லும் திசையில் காற்றில் பறக்கும் காற்றாடியாய் அவளும் மிதந்து கொண்டிருக்கிறாள்.

நேரம் கடந்தே உறக்கம் கண்களைத் தழுவ, இஷாந்த் அழுகை சத்தம் கேட்டே கண் விழித்தாள். அப்போதே மணி ஆறை தொட்டிருந்தது.

‘இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்’ என பரபரத்தபடி, முகம் கழுவி விட்டு வெளியில் வந்திட, அந்நேரம் சமையலறையில் இருந்து கையில் பால் பாட்டிலுடன் வந்தான் ஆரவ்.

“இஷு அழுது எழுப்பி விட்டுட்டானா?” என கண் சிமிட்டி கேட்டவனிடம், “இல்ல இல்ல.” என வேகமாக மறுத்தவளைக் கண்டு சிறு நகை பூத்தவன், “டீ?” எனக் கேட்க, அவளும் தலையாட்டினாள்.

“வெய்ட் வரேன்.” என்று விட்டு, இஷாந்திற்கு பாலை கொடுத்தவன், அவனை சமாதானம் செய்ய, வான்மதிக்கு தான் உள்ளே எப்படி செல்வது என தயக்கமாக இருந்தது.

அவளை மேலும் சோதிக்காமல், அவனே இஷாந்தை வெளியில் தூக்கி வந்து அவளிடம் கொடுக்க, அதன் பிறகு அவள் முற்றிலும் அவனுடன் ஐக்கியமானாள்.

அதற்கு இடையில், ஆரவ் அவளுக்கு தேநீர் குவளையை நீட்ட, மறுக்காமல் வாங்கிக்கொண்டவள் மீண்டும் இஷாந்துடன் புதைத்தாள்.

அவளுக்கு நேர் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த அவனும் மடிக்கணினியில் வேலையாக இருக்க, “நான் இஷுவை என் ரூம்ல வச்சு இருக்கேன் ஆரவ்.” என எழுந்தாள்.

அதில் நிமிர்ந்தவன், “நோ. அவனை தூங்க வைக்கிறதுன்னா என் ரூம்க்கு கூட்டிட்டு போ!” என்று உத்தரவாகக் கூற, அவள் புரியாமல் விழித்தாள்.

“இல்ல. சும்மா தான் விளையாடுறான். அதான்…” என அவள் இழுக்க, “அவன் விளையாடுனாலும் என் ரூம்ல தான் இருக்கணும்” என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட, அவளுக்குத் தான் சுருக்கென இருந்தது.

‘அவரு பேபி… அவரோட இஷ்டம்.’ எனத் தன்னை தானே சரி செய்துக்கொண்டவள், ஹாலிலேயே இருந்து விட்டாள். அவளின் முக மாற்றம் உணர்ந்தும் கூட, அதனை கண்டுகொள்ளவில்லை அவன்.

பின், இரவு நேரம் ஆனதை உணர்ந்து, “டின்னர் ஆர்டர் பண்றேன் வான்மதி. உனக்கு என்ன வேணும்?” எனக் கேட்டான் மென்மையாக.

“எதுனாலும் ஓகே.” என்று அவனைப் பாராமல் பதிலளித்தவளிடம், “அப்போ அடுப்பு கரி ஆர்டர் பண்ணவா?” என்றான் குறும்புடன்.

அதில் மெல்ல அவனைப் பார்த்து முறைத்தவள், “உங்களுக்கு என்ன வாங்குறீங்களோ அதே வாங்குங்க” என்றாள்.

“எனக்கு ஒரு பாட்டில் பீர் வாங்க போறேன். உனக்கும் வேணுமா?” அவன் அதே நக்கலை தொடர, அவள் தான் பேந்த பேந்த விழித்து, “ரெண்டு இட்லி போதும்” என முணுமுணுத்தாள்.

“ரெண்டு இட்லியா? நாட் பேட்.” என மூக்கை சுருக்கிய படி எழுந்தவனை, சற்றே மிரட்சியுடன் பார்த்து வைத்தவள், “உண்மையாவே பீர் வாங்க போறீங்களா?” எனக் கேட்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு, “ஆல்ரெடி. நான் நிறைய ஸ்டாக் வச்சு இருக்கேன். உனக்கு ஒரு பெக் வேணுமா?” என்றதில், அவசரமாக “வேணாம்” என தலையாட்டினாள்.

“குட். அப்போ, கொஞ்ச நேரத்துல ஃபுட் வந்துடும். வாங்கி வை.” என்றவன் அவனறைக்கு செல்ல, அவன் சொன்னது போன்றே, சில நிமிடங்களில் சாப்பாடும் வந்தது. அதை வாங்கி டைனிங் டேபிளில் வைத்து விட்டு, அவன் அறைக்கதவைத் தட்டினாள்.

அவன் பதிலளிக்காமல் போனதில், இஷாந்திற்கு மட்டும் பாலை புகட்டி விட்டு, தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்து உறங்க வைத்தாள். அப்போது தான் வெளியில் வந்த ஆரவ், “அவனை தொட்டில்ல போட்டுட்டு சாப்பிட வா.” என்றிட, அவளும் அவன் அறைக்கு சென்றாள்.

ஆனால், உண்மையிலேயே டேபிளில் பாதி காலியான நிலையில் ஒரு பீர் பாட்டில் இருக்க அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவசரமாக குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு, வெளியில் வந்தவளுக்கு பயம் நெஞ்சைக் கவ்வியது.

அவனோ, சாவகாசமாக “இட்லி ஆறுறதுக்குள்ள வந்து சாப்பிடு வான்மதி.” என சாப்பிட்டவாறு கட்டளையிட, எச்சிலை விழுங்கியபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தவள், “நீங்க உண்மையாவே குடிச்சுருக்கீங்களா” எனக் கேட்டாள் மிரண்டு.

அதில் உண்ணுவதை ஒரு நொடி நிறுத்தியவன், “குடிக்கலைன்னா தூக்கம் வரமாட்டேங்குது. கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணிடுறேன்.” எனத் தட்டைப் பார்த்தே பதில் அளித்து, கொறித்து விட்டு உள்ளே சென்று விட, அவனை வருத்தமும், ஆதங்கமும் கலந்து ஏறிட்டவள், எதுவும் பேசவில்லை.

பகல் முழுதும் தூங்கி விடுவதால், இரவில் தானும் தூங்காமல், ஆரவையும் தூங்க விட மாட்டான் இஷாந்த்.

இன்றும் அதே போல், உற்சாகத்துடன் விளையாடியவாறு, கையை காலை உதற, அவனும் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான், அவ்வப்பொழுது மதுவும் உள்ளே சென்று கொண்டு தான் இருந்தது.

பின் இஷாந்த் அழுகத் தொடங்க, அவனை சரி செய்ய அவனும் என்னன்னவோ செய்து பார்த்தும் அவன் அழுகை நிற்கவில்லை.

ஒரு அளவுக்கு மேல் பொறுக்க இயலாமல், வான்மதி அவன் அறைக்கதவைத் தட்ட, “திறந்து தான் இருக்கு” என சத்தம் கொடுத்தான்.

அவன் குரலில், கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள், “பேபிய குடுங்க. நான் தூங்க வச்சுக்குறேன்” எனக் கேட்க,

ஆரவோ, “நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல. அவன் இங்க தான் இருப்பான். அப்படி நீ பார்த்துக்கணும்ன்னா இங்க வந்து பாத்துக்க. நான் அவனை என் கண் பார்வையை விட்டு அனுப்ப மாட்டேன்.” என எரிந்து விழுக, வான்மதி உதட்டைக் கடித்து உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றாள்.

பின், இஷாந்தை தூக்கி சமன் செய்ய, அவளையே பார்த்திருந்தவன், பாட்டிலை எடுத்து ‘மடக் மடக்’ என குடிக்க,

அவள் தான், “பிளீஸ். பேபி முன்னாடி ட்ரிங்க் பண்ணாதீங்க.” என்றாள் கண்டிப்பும் கெஞ்சலும் கலந்த தொனியில்.

“ம்ம்.” என்றவன், பால்கனிக்கு சென்று சிவந்த விழிகளுடன் மீண்டும் குடிக்க, அவளுக்குத் தான் அவனை நினைத்து மலைப்பாக இருந்தது.

அலுவலகத்தில் இருக்கும் ஆரவிற்கும் இப்போது இருப்பவனுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!

அப்போதும் அவன் ஒன்றும் அமைதியாக பேசி விட மாட்டான் தான். ஆனால் ஒரு மென்மை அவனிடம் குடிகொண்டிருக்கும். ஆனால், இப்போது முகம் முழுதும் பரவி இருந்த வன்மை குடியால் ஏற்பட்டதா? அல்லது அக்குடிக்கு காரணமானவர்களால் ஏற்பட்டதா? எனப் புரியாது, இஷாந்தை ஒருவாறாக அமைதிபடுத்தினாள்.

நெடு நேரம் கடந்தே குழந்தையும் உறங்க, அதுவரை அவனும் பால்கனியில் தான் நின்றான்.

‘இவரு அங்கேயே தூங்கிட்டாரா?’ என எண்ணியவள், பால்கனியை எட்டிப் பார்க்க, தீர்ந்து போன பீர் பாட்டிலை கோபத்துடன் நோக்கியபடி நின்றவனைக் கண்டு அவளுக்கு பயத்தில் அடி வயிறு கலங்கியது.

“ஆ… ஆரவ்… பேபி தூங்கிட்டான்” எனத் திக்கி திணறி கூற, அவளைப் பாராமல் “ம்ம்” என்றான்.

“நான் ரூம்க்கு போறேன்”

“ம்ம்” என மீண்டும் ஆரவ் கூறியதில், பெருமூச்சு விட்டு அறைக்கு ஓடியே விட்டாள்.

‘இப்போலாம் யாரையும் நம்ப கூடாது போல. இவரு இவளோ மோசமா இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்ல. அவரு மேல வச்சு இருந்த நம்பிக்கையால தான், இவளோ பட்டும் இஷுக்காக மேரேஜ் பண்ணேன். ஆனா, இவரு என்னன்னா அவனையும் என்கிட்ட தனியா விட மாட்டுறாரு. இதுல குடி வேற…

இன்னைக்கு ஒரு நாளே இவளோ பதட்டமா இருக்கே. இனிமே ஒவ்வொரு நாளும் எப்படி ஓட்டுறது. என் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காதுன்னு தான் சொன்னாரு. ஆனா இப்போ பயமா இருக்கு.’ என மனதினுள்ளேயே புலம்பித் தீர்த்தாள்.

பின், காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து கொண்டவள், முயன்று உறங்கிப் போனாள்.

காலையில் எட்டு மணி அளவில் தான் துயில் கலைந்தவளின் காதில் விழுந்தது, ஆரவின் கொஞ்சல் மொழிகளும், அதற்கு இஷாந்த் பேச முயலும் மழலை ஓசைகளும் தான்.

அது செவிக்கு இனிமையான தேனாகப் பாய, இதழோரம் தோன்றிய முறுவலுடன் கண் விழித்தாள் வான்மதி.

ஆனால், கூடவே இரவு நிகழ்ந்தது நினைவு வர, யோசனையுடன் குளித்து விட்டு வெளியில் வந்தவளைப் புன்னகை முகத்துடன் ஏறிட்டான் ஆரவ்.

“குட் மார்னிங். இப்பவும் நாங்க தான் சத்தம் போட்டு எழுப்பி விட்டுட்டோமா?” எனக் குறும்பாக கேட்க, அவனிடம் பாராமுகம் காட்ட வேண்டும் என உறுதி கொண்டிருந்தவளோ அதனை மறந்து, “இல்ல ஆரவ். இப்பவே லேட் எந்துரிச்சது.” என்றாள்.

அலுவலகத்திற்கு கிளம்பி இருக்கிறான் போலும், “நீ ஆபிஸ் வரலையா?” எனக் கேட்டான்.

அவள், “இல்ல…” என தயங்க, “அப்போ உன் கடைக்கு போறியா?” எனக் கேட்டதில், “இன்னைக்கு எங்கேயும் போற ஐடியா இல்ல” என்றாள் சோர்வாக.

“ஓகே. டேக் ரெஸ்ட். இஷுவை ஃபுல் டே மேனேஜ் பண்ணிப்ப தான? இல்ல நான் ஆபிஸ்க்கு தூக்கிட்டு போகாட்டா?” என கேள்வியாய் பார்க்க, அவளோ முறைத்தாள்.

“நான் பார்த்துப்பேன்.” என பல்லைக்கடித்துக் கூறியதில், தோளைக் குலுக்கிக் கொண்டவன், “பட் லிசன். அவனை என் ரூம்ல தான் தூங்க வைக்கணும்.” என மீண்டுமொரு முறை நினைவு படுத்தினான்.

அதில் அவளுக்கு தான் மேலும் சினம் எழ, “உங்களுக்கு என் மேல அவ்ளோ நம்பிக்கை இல்லைன்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? இஷுவை பார்த்துக்க தான நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். இப்போ அதுக்கே இவ்ளோ ரூல்ஸ் போடுறீங்க…” என மனதில் இருந்ததை கோபமாகவே கொட்டி விட,

அவளை சிறு இதழ் நகையுடன், விழி உயர்த்தி பார்த்தவன், “இதுக்கு பதில் பொய் சொல்லவா? இல்ல உண்மைய சொல்லவா?” எனத் தலையை சாய்த்து கேட்டான்.

“உங்க இஷ்டம்!” அவள் மறுபுறம் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவளின் பாவனையில் நன்றாகவே சிரித்தவன், “பொய்யே சொல்றேன். எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல.” எனக் கூறிவிட்டு, கண் சிமிட்டினான்.

அவன் பதிலில் சிறு முறைப்புடன் அவனை நோக்கியவளின் விழிகள், அவனின் கண் சிமிட்டலில் இப்போது தன்னிச்சையாக வேறு புறம் திரும்பியது.

“உண்மையே சொல்லுங்க” மென்குரலில் அவள் வினவ, சற்றே சிந்திக்கும் பாவனை புரிந்தவன், “ம்ம்… நேரம் வரும் போது சொல்றேன்.” என நமுட்டு சிரிப்புடன் பார்க்க, அவளுக்கு தான் இதயம் காரணமின்றி படபடவென துடித்தது.

‘சஸ்பென்ஸ் வைக்கிற அளவு அப்படி என்ன காரணமா இருக்கும்’ என மண்டையை பிய்த்துக் கொண்டவள், “நேரா சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாம் சொல்ல மாட்டுறீங்க. மறைமுகமா சொல்ல வேண்டிய விஷயத்தை நேரா சொல்லிடுறீங்க. அட்லீஸ்ட் இந்த கேள்விக்காச்சு பதில் சொல்லுங்க. என் அண்ணன் சுதாகரை உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள் குழப்பமாக.

இதற்கும் பதில் கூறவில்லை என்றால் அழுதாலும் அழுது விடுவேன் என்ற ரீதியில் நின்றவளை பார்த்தவனுக்கு சிரிப்பு முட்டியது.

பின், “எனக்கும் அவன் உன் அண்ணன்னு தெரியாது. அன்னைக்கு கடைல பார்த்தப்போ கூட உன் கடை மேனேஜர்ன்னு தான் நினைச்சேன். நம்ம மேரேஜ் நடக்குற ஒன் வீக் முன்னாடி அவனே என்கிட்ட வந்து பேசுனான். அப்போ தான் தெரியும்…” என்று விளக்கமளிக்க, புருவம் சுருக்கியவள் ‘என்ன பேசுனான்?’ எனப் பார்த்தாள்.

சுதாகர் வான்மதியின் பெரியப்பா மகன். வான்மதியின் தந்தைக்கு மூன்றுமே பெண் பிள்ளைகளாக போய் விட, அண்ணன் மகன்களிடம், கடை கிளைகளின் பொறுப்புகளை கொடுத்திருந்தார். வான்மதிக்கு கொடுத்த சொத்தில், சுதாகர் ஏற்கனவே பொறுப்பேற்றிருக்கும் அந்த கடையும் அடக்கம்.

அவள் அக்கடையின் தனி முதலாளியாக வந்து விட, அவனோ, தங்கையை விட்டு எங்கும் நகர மாட்டேன் என அடம்பிடித்து, அதே கடையில் மேனேஜராக பொறுப்பேற்றுக்கொண்டான்.

“நீ வேற பிரான்சை பார்த்துக்கோ சுதாகர். இங்க மேனேஜரா இருக்கணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?” என பல முறை கேட்டு விட்டாள். ஆனால், அவனோ “நீ மறுபடியும் நம்ம வீட்டுக்கு வா. நான் வேற பிரான்ச்க்கு போறேன்” என்று பிடிவாதமாக மறுத்து விட்டான்.

அவன் முழுக்க முழுக்க பார்த்துக்கொள்வதாலேயே பெரிதாக அங்கு அவளுக்கும் வேலையும் இருக்கவில்லை. அதற்கிடையில் சில ஆண்களும், அவளை திருமணம் செய்து கொள்ள அணுக, அவள் அனைவரையும் தவிர்த்து விட்டாள்.

ஆனால், ஆரவ் தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கேட்டதை மட்டும் சுதாகரிடம் கூறி இருக்கிறாள். இதுவரை எதைப் பற்றியும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் இறுக்கமாக இருந்த தங்கை, முதன் முதலில் ஒருவனைப் பற்றி பேசியதில், அவனும் பேச்சு கொடுத்தான்.

“நீ தான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னியே. அப்படியே இவன்கிட்டயும் சொல்லிடு.” என்று யோசனை கொடுக்க, “ம்ம். அப்படி தான் சொல்லிருக்கேன்.” என்றவளுக்கு ஒரு குழப்பம் இருந்ததே தவிர, அவன் கேட்டதால் கோபம் எழவில்லை என்பதை தமையனும் குறித்துக் கொண்டான்.

“உனக்கு அவனை பிடிச்சு இருக்கா வண்டு?” எப்போதும் கிண்டலாக பேசும் போது அவளை அப்பெயரில் தான் அழைப்பான். பல மாதங்கள் கழித்து அதே பெயரை உபயோகித்த அவனுக்கும், அதனைக் கேட்ட அவளுக்கும் கண் கலங்கியது.

பின், தன்னை மீட்டுக்கொண்டவள், “இஷு பேபி எவ்ளோ கியூட் தெரியுமா? அவனை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆனா, அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா. அதுவும் இன்னொரு தடவை தெரிஞ்சே நரகத்துல விழுக எனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு.” என்னும் போதே அவளுக்கு குரல் கம்மியது.

அதில் சுதாகருக்கு தான் ஏதோ நெருடியது. தான் அறிந்த தங்கை இப்படி இல்லையே. ஆரவ் விஷயத்தில் இவள் ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறாள் எனக் குழம்பியவன், இஷாந்திற்காக இருக்கும் என முடிவெடுத்துக்கொண்டான்.

சில நாட்கள் கழித்து, “நான் ஆரவை திருமணம் செய்ய போகிறேன்” என்று தன்னிடம் செய்தியாக கூறியவளை வியப்பாக பார்த்தான்.

“ஆனா, நீ வர கூடாது. எனக்கு யாரும் அங்க வர்றது பிடிக்கல!” என திட்டவட்டமாக கூறி விட, சுதாகருக்கு மனது வலித்தது. ‘நான் என்ன பண்ணேன்’ என்ற ஆதங்கம் மிகுந்தாலும், ஆரவைப் பற்றி தெரியாமல் இதனை நடத்த விடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவனாய், அவனை அலுவலகத்தில் சென்று சந்தித்தான்.

அப்போது தான் ஆரவிற்கே சுதாகர் வான்மதியின் உறவே தெரியும்.

“நீங்க அவள் அண்ணனா? அப்பறம் ஏன் மேனேஜரா?” என இழுத்த ஆரவை விரக்தி நகையுடன் ஏறிட்டவன், “அது ஒரு லாங் ஸ்டோரி ஆரவ். அப்பறம் சொல்றேன். இப்போ நான் ஏன் வந்தேன்னா…” என பேச தயங்கி நிற்க,

ஆரவ் தான், “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியும். அவள் பர்ஸ்ட் லைஃப் டைவர்ஸ்ல முடிஞ்சுருச்சு. செகண்ட் லைஃப் ஆச்சு நல்லா இருக்கனும் அது தான?” எனக் கேட்க, அவன் விழி விரித்தான்.

அதில் மென்னகை புரிந்த ஆரவ் அவனே பதிலாக, “டோன்ட் வொரி. இனிமே அவள் என் பொறுப்பு. கண்டிப்பா நல்ல ஹஸ்பண்ட் ஆ, வெல் விஷரா, ப்ரெண்டா அவளை நல்லாவே பார்த்துப்பேன். உங்க தங்கச்சிக்கு சொன்ன மாதிரி உங்களுக்கும் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணனுமா?” எனத் தீவிரமாக பேசியவன், இறுதியில் நக்கலுடன் முடிக்க, அவன் பேசியதை நம்புவதா வேண்டாமா என குழம்பிய சுதாகர் தான் பேந்த பேந்த விழித்தான்.

பின் பக்கென சிரித்து விட்டவன், “இதுக்கு முன்னாடி எனக்கு உங்களை தெரியாது ஆரவ். ஆனா, என்னமோ தெரியல உங்களை நம்பணும்ன்னு மனசு சொல்லுது. ஒருவேளை அவளுக்கும் அப்படி தான் இருந்துருக்குமோ?” என யோசனையாய் புன்னகைக்க, ஆரவும் முறுவலித்தான்.

ஆனாலும் மனது கேளாமல், “உங்களுக்கு அவளை பத்தி தெரியுமா? பாஸ்ட்ல என்ன ஆச்சுன்னு?” என ஆரம்பிக்க, அவனை கை நீட்டி தடுத்தவன்,

“நிஜமா அவள் ஃபர்ஸ்ட் மேரேஜ் பத்தி எனக்கு எதுவும் தெரியாது சுதாகர். இப்போதைக்கு அதை தெரிஞ்சுக்க அவசியமும் இல்லன்னு நினைக்கிறேன்.

ஏன்னா, நீங்க சொன்னா உங்க கோணத்துல தான் அவளோட பாஸ்ட்ட சொல்லுவீங்க. நானும் அதே மாதிரி ஃபிக்ஸ் ஆகிடுவேன். இதே அதெல்லாம் அவளே சொன்னா, அவளோட கோணம் எனக்கு புரியும். அவள் சொல்லவே இல்லைன்னாலும் எனக்கு அது தேவை இல்லை. முடிஞ்சதை பத்தி பேச எனக்கு விருப்பமும் இல்லை.” என அழுத்தமாக மறுத்தவனிடம் ஏதோ பேச வாய் திறக்க,

“அதே மாதிரி, என்னை பத்தியும் நீங்க கேட்காதீங்க. அப்படியே நான் சொல்லனும்னா உங்க தங்கச்சிகிட்ட சொல்லிக்கிறேன்” என அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, சுதாகருக்கு தலை சுற்றியது.

‘என்ன இவன் இவ்ளோ கட் அண்ட் ரைட்டா இருக்கான்.’ என புரியாமல் நிற்க, ஆரவ் அவனை ஆராய்ந்து விட்டு, “கமிங் மண்டே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். நீங்க வந்துடுங்க.” என அழைப்பு விடுத்தான்.

“எங்க… அவள் தான் என்னை வரவேணாம்ன்னு சொல்றாளே.” என முகம் சுருங்கியனிடம், “நீங்க வாங்க சுதாகர். அவள் எதுவும் சொல்ல மாட்டா.” என்றதில் தான், சுதாகரும் திருமணத்திற்கு வந்தது.

வான்மதி தான் உறைந்து நின்றாள். சுதாகருக்கே முதல் திருமணம் பற்றி அரை குறையாக தான் தெரியும். அதனை அப்படியே உளறி வைத்து இருப்பானோ என்று தான் முதலில் கண் கலங்கியது அவளுக்கு. ஆனால், ஆரவ் அதனை லாவகமாக தடுத்து, நாகரிகமாக தவிர்த்து, அதற்கு ஒரு காரணமும் கூறியதில் அவனை வியப்புடன் பார்த்திருந்தாள்.

அத்தியாயம் 9

அவள் முன்னே சொடுக்கிட்டவன், “மேடம் நிஜ உலகத்துக்கு திரும்பி வந்தா… நான் ஆபிஸ் கிளம்புவேன்.” என கிண்டலாக கூற, அதில் லேசாக இதழ் விரித்தவள், தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவனிடம் இருந்து இஷாந்தை வாங்கி கொண்டாள்.

அவன் வேறு எதுவும் கேட்டு அவளை சங்கடப்படுத்தாமல், சாக்ஸை போட்டுக் கொண்டே, “பிரெட் டோஸ்ட் பண்ணி வைச்சிருக்கேன். உனக்கு வேணும்னா சாப்பிடு. இல்லைன்னா பிரிட்ஜ்ல மாவு இருக்கு. தோசை ஊத்திக்கோ. இஷுக்கு பால் காய்ச்சு வைச்சிருக்கேன். தேவைப்பட்டா அது காலி ஆனதும் காய்ச்சிக்கோ.

மதியம் நான் ஆபிஸ்ல சாப்ட்டுக்குவேன். நீ உனக்கு மட்டும் ஏதாவது குக் பண்ணிக்க. 3 மணிக்கு மெய்ட் வருவாங்க வீடை க்ளீன் பண்ண. சோ யாரோன்னு நினைச்சு பயந்துறாத. தென், கவனம்! இஷு அழுதா எனக்கு உடனே போன் பண்ணு நான் வரேன்.” என அவன் வரிசையாக உத்தரவு பிறப்பிக்க, தலையை ஒரு மையமாக ஆட்டி வைத்தாள் வான்மதி.

அவனோ, “உன்னால ரொம்ப சமாளிக்க முடியலைன்னா, உடனே கால் பண்ணிடு.” என பத்து முறை கூறி விட்டு, “இன்கேஸ், உனக்கு கடைக்கு போகணும்னு சிட்டுவேஷன் வந்தா, எனக்கு சொல்லிடு. நான் அவனை ஆபிஸ்க்கு கூட்டிட்டு போயிடுறேன். உன்னால சமாளிக்க முடியாது.” என்றதில் அவள் முறைக்க,

“தினமும் ஒரு மணி நேரம் பார்த்துக்குறது வேற. நாள் முழுக்க சமாளிக்கிறது வேற வான்மதி.” என அதற்கு விளக்கமும் அளித்தவனிடம் முறைப்புடனே தலை அசைத்தாள்.

ஆனால், அவனோ கிளம்பாமல் “இஷுவை பார்த்துக்கோ” என்ற வாசகத்தையே பல மாடுலேஷனின் அரை மணி நேரமாக லெக்சர் எடுக்க, தலை ஆட்டி ஆட்டி அவளுக்கு கழுத்து வலி வந்தது தான் மிச்சம்.

“ஷப்பா. நான் பாத்துக்குறேன். முதல்ல கிளம்புங்க” என அவள் வாய்விட்டே கூறியபிறகே, வாசலுக்கு சென்றவன், சட்டென திரும்பி, “பேசாம நீயும் என் கூட ஆபிஸ் வந்துடேன்.” என யோசனை கொடுக்க, அவள் அவனை பார்வையாலேயே எரித்தாள்.

“ஓகே. கூல்.” என மனைவியின் சினத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவனுக்கு கிளம்ப மனமே இல்லை.
“இவன் பிறந்ததுல இருந்து, யார்கிட்டயும் விட்டதில்லை மதி. எங்க போனாலும் தூக்கிட்டு போய் பழகிட்டேன். க்ரஷ்ல கூட விட்டதில்லை. அதான்…” என பின்னந்தலையை கோதிக்கொண்டவன், இஷாந்திற்கு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “பை” என்று மனமில்லாமல் கிளம்பினான்.

ஏதோ பள்ளிக்கு செல்லும் சிறுவன் போல இருவரையும் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றவனைப் பார்த்தவளுக்கு தான், கால்களும் கண்களும் நகரவே இல்லை.    

இரவில் இறுகிப் போய் இருத்ததென்ன, இப்போது மகனை விட்டு செல்ல மருகுவதென்ன, என தனக்குள் புன்னகைத்துக் கொண்டாலும், இப்படியும் கூடவா ஆண்கள் இருக்கின்றனர்… என்று நம்ப இயலாமல் உள்ளே சென்றாள்.

ஒருவேளை, அவர்களின் உறவென்றால் மட்டும் பாசம் வந்து விடும் போல. யாரோ ஒருவரின் மகள் மனைவி ஆகிவிட்டால் மட்டும் இளக்காரமாகி விடுவோம்… என ஏதேதோ நினைவில் மூழ்கியவள், தலையை உலுக்கி நிதானத்திற்கு வந்து, இஷாந்துடன் அந்நாளை மகிழ்வுடன் செலவழித்தாள்.

ஆனால், 11 மணி அளவிலேயே, ஆரவ் வீடியோ கால் செய்திருந்தான். அதனை எடுத்தவள், “சொல்லுங்க ஆரவ்” என்க, “இஷு என்ன பண்றான் மதி? அழுகலைல.” என பதற்றமாக கேட்க,

“அவன் சமத்தா சாப்பிட்டுட்டு விளையாடிட்டு இருக்கான் ஆரவ். நீங்க வொரி பண்ணாதீங்க.” என்றவள், “இஷு பேபி இங்க பாருங்க. அப்பா பாருங்க” என அவனிடம் போனை காட்ட, தந்தையை கண்டதும் அவன் விசும்பத் தொடங்கி விட்டான்.

“ஆஆ.. ப் ஆ…” என ஏதேதோ சொல்லி, அவனைப் பார்த்து அழுதவனைக் கண்டு ஆரவ் பதறி விட, வான்மதியோ, “உங்களை கொல்ல போறேன். இப்ப யாரு உங்களை வீடியோ கால் பண்ண சொன்னது?” என பெருமூச்சுக்கள் வாங்க முறைத்தாள்.

“சாரி சாரி. நான் உடனே வரேன்” என்றவனிடம், “ஒண்ணும் தேவை இல்ல. நான் பாத்துக்குறேன். நீங்க மட்டும் கிளம்பி வந்தீங்க, அப்பறம் நீங்களாச்சு உங்க பேபியாச்சுன்னு நான் கிளம்பி போய்டுவேன்” என விழிகளை உருட்டி அவள் மிரட்டல் விடுக்க, அவனோ பாவமாக பார்த்தான்.

அதனை கண்டுகொள்ளாமல் போனை வைத்து விட்டு, இஷாந்தின் அழுகையை விளையாட்டு காட்டி நிறுத்தியவளுக்கு, ஆரவை எண்ணி சிரிக்காமலும் இருக்க இயலவில்லை.

‘இஷு பேபியா அவரு பேபியான்னே தெரியல…’ என அவனை வாய்க்குள்ளேயே திட்டிக்கொண்டவள், அவன் அறையிலேயே இஷாந்தை உறங்க வைக்க முயன்றாள். அதன் விளைவாக, அவனுடன் சேர்ந்து அவளும் கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள்.

ஒரு மணி வரை நேரத்தைக் கடத்தியவன், அதற்கு மேல் முடியாமல் வீட்டிற்கு வந்து விட, அவனிடம் ஒரு சாவி இருந்ததால், அவனே திறந்து உள்ளே வந்தான். ‘என்ன இவ்ளோ அமைதியா இருக்கு’ என எண்ணியபடி தன்னறைக் கதவை திறந்தவனின் இதழ்கள் புன்னகையில் உறைந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உறங்குவதை ரசித்துப் பார்த்த ஆரவிற்கு, அவள் மீதிருந்து கண்களை எடுக்கத்தான் இயலவில்லை. உடலைக்குறுக்கி உறக்கத்தில் இருந்தவளின் அருகில் வந்தவன், அவளின் காலை மெல்ல நீட்டி விட்டு, சிறு நகையுடன் அரவமின்றி அடுக்களைக்கு வந்தான்.

அங்கு அவன் வைத்துச் சென்ற ‘பிரெட் டோஸ்ட்’ அப்படியே இருக்க, ‘இவள் காலைல என்ன சாப்பிட்டா? தோசை ஊத்துன அறிகுறி கூட இல்ல. சமைக்கவும் இல்ல. இவ்ளோ நேரம் சாப்பிடாமையா இருந்தா ஸ்டுப்பிட் கேர்ள்.’ என வாய்க்குள்ளேயே அவளைத் திட்டிக்கொண்டவன், அவள் எழுவதற்குள் அவனே சமைக்க ஆரம்பித்தான்.

அவன் வந்து சென்ற சில நிமிடங்களிலேயே விழிப்பு தட்டியது வான்மதிக்கு. எழுந்ததுமே பசி வேறு வயிற்றைக் கிள்ள, ‘ஒண்ணுமே சமைக்கலையே. ஆர்டர் பண்ணிடலாமா’ என்ற யோசனையுடன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஹாலுக்கு வந்தவளுக்கு சமையலறையில் பாத்திரம் உருட்டும் சப்தம் கேட்டதும் அச்சம் பரவியது.

‘மெய்ட் கூட மூணு மணிக்கு தான வர்றதா சொன்னாங்க.’ என நினைக்கும் போதே, இதயம் வேகமாக துடிக்க, எச்சிலை விழுங்கிப்படி மெல்ல எட்டிப்பார்த்தவள் ஆரவைக் கண்ட பிறகே ஆசுவாசமானாள்.

“நீங்க தானா. நான் பயந்தே போய்ட்டேன்.” என நெஞ்சை பிடித்து மூச்சு வாங்கியவளைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டவன், “இங்க என்னை தவிர வேற யாரும் வர முடியாது. உன்ன ரொம்ப படுத்திட்டானா?” என சற்றே பாவமாக கேட்டான்.

“அவன் கூட படுத்தல. ஆனா உங்க இம்ச தான் தாங்க முடியல” என முணுமுணுத்தவளைக் கண்டு அவன் முறைக்க, அவளுக்கு அவன் முறைப்பில் இளநகையே தோன்றியது.

அதனை ரசித்தவன், “ஏன் எதுவுமே சமைக்கல. இன்னும் சாப்பிடவும் இல்லையா?” என அதட்டலாகக் கேட்க, திருதிருவென விழித்தவள், “ம்ம்ஹும்” என தலையாட்டினாள்.

“எனக்கு பிரெட் பிடிக்காது…” என சிறு குரலில் கூற, “அப்போ தோசை ஊத்த வேண்டியது தான? சாப்பிடாமையா இருப்ப?” என ஆரவ் கண்டிக்க, அவள் மேலும் விழித்தாள்.

“சரி. இந்த கேரட்டை கட் பண்ணு” என்று அவளுக்கு ஒரு வேலையை பணித்து விட்டு, அவன் வெங்காயத்தை நறுக்க, அவளோ கேரட்டையும் கத்தியையும் மாறி மாறி பார்த்து, “என்ன ஷேப்ல கட் பண்ணனும்?” எனக் கேட்க, அவனோ ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.

“ரௌண்ட் ஷேப்ல” என அவன் பதிலளித்ததும், வேகமாக தலையாட்டியவள், கேரட்டிற்கு வலிக்கும் அளவிற்கு ஒரே ஒரு வட்ட வடிவத்தை ஐந்து நிமிடமாக நறுக்கினாள்.

“ஆரவ். இங்க பாருங்க இது ஓகே வா?” என பொரியல் செய்து கொண்டிருந்தவனை அழைத்து ஒரே ஒரு பீசை காட்ட, அவனோ “இதை தான் இவ்ளோ நேரம் கட் பண்ணுனியா?” என்றான் முறைப்பாக.

அதில் அசடு வழிந்தவளைக் கண்டு வாய் விட்டே சிரித்து விட்டவன், “உனக்கு சமைக்க தெரியாதா?” எனக் கேட்டான் உதட்டை மடித்து.

“காபி கூட போட தெரியாது…” தலையை குனிந்த படி, அவள் பாவமாக கூற, “அடிப்பாவி. இதை காலைலேயே சொல்ல வேண்டியது தான.” என்றவன், மேலும் ஏதோ கேட்க வந்து விட்டு, சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான்.

ஆனால், அவன் கேட்க வருவதை அவள் அறிந்து கொண்டு, “ஹலோ. சமைக்க தெரியாததுனால எல்லாம் எனக்கு டைவர்ஸ் ஆகல.” என சிலுப்பியபடி பதில் அளிக்க, அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “நான் எதுவுமே கேட்கலையே” என்றான் கேலியாக.

“நீங்க சிரிக்கிறதுலையே தெரியுது.” என உதட்டை குவித்து முறைக்க, அவன் புன்சிரிப்புடன் “அப்போ இவ்ளோ நாள் எப்படி சாப்பிட்ட?” எனக் கேட்டான் அக்கறையாக.

“ஹாஸ்டல்ல கேன்டீன் இருக்கும். அங்க சாப்ட்டுக்குவேன். வீட்ல இருந்தவரை சர்வன்ட்ஸ் இருப்பாங்க.” என கையில் இருந்த கேரட்டை சுரண்டியபடி பதில் அளித்தவளிடம்,

“பார்ன் வித் கோல்ட் ஸ்பூன்?” என ஒரு புருவத்தை உயர்த்தினான்.

அதில் நிமிர்ந்து அவனை அமைதியாக பார்த்தவள், “பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்ல. நீங்க சொல்ற பார்ன் வித் கோல்ட் ஸ்பூன்…” என்றாள் வலியுடன்.

அதில் அவன் பார்வை தன் மீது படிவதை உணர்ந்தவள், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “ஆமா, எனக்கே சமைக்க தெரியாது. உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?” எனக் கேட்க, அவனோ கரண்டியை வைத்து அவள் தலையில் நங்கென அடித்தான்.

“அதென்ன… உனக்கே…?” என இடுப்பில் கை வைக்க, “ஆ…” என தலையை தேய்த்தவள், “நீங்க பேபியை வளர்க்கவே கூகிள் ஆண்டவர்கிட்ட தான் கேட்பீங்க. அப்பறம் எப்படி இது தெரியும்ன்னு தான் கேட்டேன்.” என்றாள் முகத்தை சுருக்கி.

“இதுவும் யூ டியூபின் உபயம் தான்…” என மென்னகையுடன் அவன் கூற,

“அதான பார்த்தேன். ஆனா, நான் கூட ஒரு தடவை யூ டியூப் பார்த்து ட்ரை பண்ணேன். எண்ணையை ஊத்திட்டு கடுகை போட்டுட்டு அடுத்து என்ன போடன்னு பார்த்துட்டு வரதுக்குள்ள அது கருகிடுச்சு. அதோட எங்க அம்மா என்னை கிட்சன்க்குள்ளயே விடுறது இல்ல.” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

அவ்வதரங்களின் மீது அவன் விழிகள் ஒரு நொடி படர்ந்து மீள, “எனக்கும் சேம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. மேரேஜ்க்கு முன்னாடி மெய்ட் சமைச்சு வைச்சுட்டு போவாங்க. இல்லன்னா ஹோட்டல் சாப்பாடு தான். மேரேஜ்க்கு அப்பறம், மிருணா நல்லா சமைப்பா.” என தன் போக்கில் கூறி விட்டு, சட்டென அமைதி ஆகி விட்டான்.

அவளுக்கும் சங்கட நிலை தான் நொடிப் பொழுதில் இறுகிப்போன அவன் முகம் கண்டு.

அந்நேரம் சாம்பார் குக்கரில் இருந்து விசில் வந்ததும் தான், “செம்மயா பசிக்குது ஆரவ். கேரட் போடவே இல்ல சாம்பார்ல” என அவனை இலகுவாக்க முயல, அவனும் நிகழ்வுக்கு மீண்டு, “நீ கட் பண்ண ஸ்பீட்க்கு கேரட்டுக்கு வெய்ட் பண்ணுனா சாம்பார் கருகிடும்.” என்றான் அடக்கப்பட்ட நகையுடன்.

அதில் போலியாய் முறைத்தவள், ஸ்மெல் சூப்பரா இருக்கு. யூ டியூப் பார்த்தே இவ்ளோ நல்லா செயிறீங்க?” என மெச்சியவளிடம்,

“நானா இருந்தவரை கத்துக்க தோணல. பட் இஷுக்கும் ஹோட்டல் சாப்பாட பழக்க பிடிக்கல. அதான், களத்துல நானே இறங்கிட்டேன்.” என்றவனை, இமைக்காமல் பார்த்திருந்தாள்.

பின், “நானும் கத்துக்குறேன்” என தலையாட்டியவளைக் கண்டு சிறிதாய் புன்னகைத்தவன், “முதல்ல கேரட் கட் பண்ண கத்துக்கோ.” என்னும் போதே போன் வந்தது.

“சாம்பார்ல கொஞ்சம் வெல்லம் போடு நான் வந்துடுறேன்.” என போனை எடுத்து பேசிக்கொண்டே வெளியில் செல்ல, அவளோ ‘கொஞ்சம்ன்னா எவ்ளோ போட?’ எனத் தெரியாமல் நின்றிருந்தாள்.

போனில் கவின் தான், “எங்கடா இருக்க. மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டு நீ இன்னும் ஆபிஸ்க்கு வரல” என கேட்க, “வீட்ல தான் இருக்கேன் வந்துடுறேன்…” என பதில் கூறும் போதே, ஒரு கரண்டி நிறைய வெல்லத்தை எடுத்து வந்து, ஹஸ்கி குரலில் “ஆரவ்… இவ்ளோ போடவா?” எனக் கேட்டாள் வான்மதி.

போனை இறக்கி விட்டு, “ஏன் சாம்பார்ல சக்கரைப்பொங்கல் செய்ய போறியா?” என கண்ணை சுருக்கி முறைத்தவனைக் கண்டு பரிதாபமாக அசட்டு நகை உதித்தாள்.

அதில் அவனுக்கு தான் இதயம் சிறிது சிறிதாக நழுவிக் கொண்டிருந்தது. எதிர் முனையில் இருந்த கவினோ “டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று கதற, “ப்ச். சாம்பார் வைச்சுட்டு இருக்கேன்டா. மீட்டிங்க மேனேஜ் பண்ணு. நான் இடைல ஜாயின் பண்ணிக்கிறேன்” எனக் கூறி விட்டு போனை வைக்க, கவின் தான் போனையே பார்த்து விழித்தான்.

அப்போது அங்கு வந்த ஹேமா, “என்னடா போனை பொண்டாட்டி மாதிரி முறைச்சு பார்க்குற. ஆரவ்க்கு போன் பண்ணியா? எங்க போனானாம்?” எனக் கேட்க, “ம்ம். சார் சாம்பார் வைக்கிறதுல பிசியா இருக்காராம். நம்மளையே பார்த்துக்க சொல்றாரு” என்றதில், அவளும் ‘பெக்க பெக்க’ என விழித்தாள்.

தேன் தூவும்…!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
236
+1
17
+1
19

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.