Loading

அவள் கேட்ட அனைத்தும் சரிதானே.. அவளை விட தன்னை நம்பியவர் யார் இருக்கிறார். ஆனால் அவ்வாறு நம்பியவளுக்கு தான் என்ன செய்தோம்.. அவளிடம் இன்று நடந்து கொண்டது எவ்விதத்திலும் சரி இல்லை, என்று நினைத்து கொண்டான்.

“சொல்லுங்க.. ஜெய் நீங்க ஏதாவது சொன்ன தான எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியும்.. இவ்ளோ நாள் நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைச்சேன்.. ஆனா நீங்க சொல்லல அதான் நானே இப்போ கேட்கறேன்.”, என்று ஸ்வாதி அவன் முகத்தை பார்த்து கேட்க,

“உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நான் நினைக்கல ஸ்வா. ஆனா இப்போ நீயே கேட்கற அதனால சொல்றேன்”, என்றவன் சூர்யா தியாவின் கடந்தகாலம் பற்றிக் கூறத் தொடங்கினான்.

சூர்யா மீது புதைந்து அழுது ஓய்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவன், அவள் தோளை தட்டி
கொடுக்க அவன் நினைவுகளோ கடந்த காலம் நோக்கி பயணித்தது.

“டேய் கொஞ்சம் மெதுவா போடா பயமா இருக்கு”, என்று கத்திய ஜெயின் குரல் காற்றோடு கரைந்து போனது. கண்களிலிருந்து நீர்த்துளிகள் காற்றில் பறக்க தனது பைக்கில் பறந்து சென்றான் சூர்யா.

அவன் பின்னால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ஜெய் ஒருவழியாக கல்லூரி வாசலில் தன் வண்டியை நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கியதும், “எப்பா டேய் உன்ன காலேஜ் தானடா கூட்டிட்டு போக சொன்னேன்.. நீ விட்டா கைலாசத்துக்கு கூட்டிட்டு போவ போலயே”, என்று இன்னும் குறையாத பயத்தில் சூரியாவிடம் எகிறினான்.

அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் ஹெல்மெட்டை கழட்டி கொண்டு இருந்தான். “உன் கூட வந்தா எனக்கு ரோடுலாம் தெரிய மாட்டேங்குது டா.. எமன் எருமைல வர்ற மாதிரியே இருக்குது”, என்று தன்னை திட்டிக் கொண்டிருந்த ஜெய்யை இழுத்துக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தான் சூர்யா.

இன்று தான் அவர்களுக்கு கல்லூரியின் முதல் நாள். ஒருவழியாக வகுப்பை கண்டுபிடித்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற இரண்டாவது நிமிடம் ஜெயின் தோளில் யாரோ அடிக்க திரும்பிப் பார்த்தான். அங்கே அழகாக சிரித்துக் கொண்டு நின்றாள் தியா.

“தியா நீ எங்கே இங்க”,  என்று ஆச்சரியமாக கேட்டவன் அவளருகில் எழுந்து சென்றான்.

“அதேதான் நானும் கேட்கணும்னு நீ எங்க இங்க”, என்று தியாவும் கேட்க, “நான் இங்கதான் ஜாயின் பண்ணி இருக்கேன்”, என்று சிரித்துக்கொண்டே கூறினான் ஜெய்.

உற்சாகத்தில் குதித்த தியா,  “நானும் இனி இங்கேதான் குப்பை கொட்ட போறேன் செம்ம போ”, என்று அவளுடன் ஹைப்பை அடித்துக்கொண்டான்.

இருவரின் சம்பாஷனங்களை பார்வையாளர் போல் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா. பிறகு சூர்யாவின் நினைவு வர,  தியாவிற்கு சூர்யாவையும் சூர்யாவிற்கு தியாவையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“தியா இது சூர்யா. எனக்கு ஸ்கூல்ல இருந்து ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்”, என்று கூறியவன் சூர்யாவிடம் திரும்பி, “இது தியா டா  என்னோட ஃப்ரெண்ட் ஒரு விதத்துல சொந்தமும் கூட”, என்று இருவருக்குமான அறிமுக படலத்தை முடித்து வைத்தான். சூர்யா தியா இருவரும் சினேகமாக புன்னகைத்து கைகுலுக்கிக் கொண்டனர். இன்று இணைந்த கைகள் வாழ்விலும் இணைய போவதை அன்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கல்லூரி ஆரம்பித்த சில நாட்களிலேயே சூர்யாவும் தியாவும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். தியாவிற்கு முன்னால் பழக்கமானவன் ஜெய்யா இல்லை சூர்யாவா என்ற குழப்பம் ஓங்கும் அளவிற்கு இருந்தது அவர்களின் நட்பு.

அனைவரும் அவளை தியா என்று அழைப்பதால், தான் ஏதாவது வித்தியாசமாக செய்ய எண்ணி அவளை ரதி என்று அழைத்தான்.

நரேனும் அதே கல்லூரியில் தான் படித்தான். ஒரே வகுப்பு இல்லை என்றாலும், தியா சூர்யா ஜெய் அனைவருக்கும் அவன் பழக்கமானவன் தான்.

இவை அனைத்தும் ஜெய்யிக்கும் பிடித்திருந்தது. சூர்யா ஜெய் இருவரையும் விட தியான நன்றாக படிப்பாள். எனவே படிப்பு விஷயத்தில் இருவருக்கும் அவள் ஆசானாகவே திகழ்ந்தாள்.

படிப்பைத்தாண்டி வேலைகள் என்று வந்துவிட்டால் அதில் கில்லாடி ஜெய் அவான். எனவே படிப்பு தவிர ப்ராஜெக்ட் போன்ற இதர வேலைகளை அவர்கள் இருவரும் சேர்த்து அவனே செய்து முடிப்பான்.

எனவே சூர்யா ராஜா வீட்டு கண்ணுக்குட்டி போல எந்தக் கவலையும் இன்றி வலம் வந்தான். அனைத்து நேரங்களிலும் எவ்விதப் பொறுப்பும் இன்றி சுற்றித் திரிவான், தேர்வு நாட்களின் போது மட்டும் தியாவிற்கு பயந்து சிறிது படிப்பான்.

அதை வைத்து இல்லாத வேலைகள் எல்லாம் செய்து தேர்வில் சிலவற்றில் தேர்ச்சி பெறுவான் சிலவற்றில் அதுவும்  நடக்காமல் போய்விடும்.

தியாவும் தன்னால் முயன்றவரை அவனிடம் பொறுமையாக சொல்லி பார்த்துவிட்டாள், அவனோடு சண்டையும் கூட போட்டாள், ஆனால் அவன் ஒரு துளிகூட மாறுவது போல் தெரியாததால் கடுப்பானவள், “எப்படியோ போடா”, என்று விட்டு விட்டாள்.

இவை எதையும் கண்டு கொள்ளாமல் ஒய்யாரமாக சுற்றித்திரிந்து வந்தாள் சூர்யா. இவ்வாறாக இவர்களது கல்லூரி பயணம் சென்றது.

அதற்காக சூர்யா வருத்தப்படும் நாளும் வந்தது வழக்கம்போல தேர்வுத் தாள்களை திருத்தி எடுத்து வந்த பேராசிரியர் ஒவ்வொருவராக கொடுக்க சூர்யாவின் தாளும் வந்தது.

தியா மற்றும் ஜெய் ஒருவரை ஒருவர் கலக்கமாக பார்க்க திமிராக எழுந்து சென்றான் சூர்யா. அந்தத் தேர்வில் சூர்யா ஐம்பதிற்கு 4 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அந்தப் பேராசிரியருக்கு சூர்யாவின் நடவடிக்கையால் அவனைக் கண்டாலே பிடிக்காது.

இப்போது அவரது பாடத்திலும் இவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுத்து இருந்ததால் அவர் அவனை சரமாரியாக திட்டத் தொடங்கினார்.

“நீ எல்லாம் என் உயிரை எடுக்கவே காலேஜுக்கு வரியா? படிக்கனும்னு எண்ணம் இருந்தா கிளாசுக்கு வரணும். இல்லன்னா நீ சுத்த நிறைய இடம் இருக்கு, அங்க எங்கச்சும் போ. நீ டைம் பாஸ் பண்ண என் கிளாஸும் பரிட்சை ஹாலில் தான் கிடைச்சதா?.. முட்டாள்”, என்று கத்தியவர் அவனது தேர்வு தாளை அனைவர் முன்னிலையிலும் படிக்கத் தொடங்கினார்.

“எல்லாரும் கேளுங்க ஐயா என்ன எழுதி இருக்காரு பேப்பரிலன்னு நான் படிக்கிறேன், என்று கூறியவர் படிக்கத் தொடங்கினார்.

“What are transfers write about its specifications.”, “அப்படின்னு கேள்வி இருக்குது அதுக்கு சார் என்ன எழுதி இருக்கார் தெரியுமா, “transfers are transfers that do tranfer. So transfer ate called transfers and because of its specifications they are transfers.”, என்று அவர் படித்து முடிக்க அனைவரும் கேலியாக சிரித்தனர்.

அங்கு நடப்பதை பார்த்த ஜெய்க்கு அந்த பேராசிரியரின் மீது கோபம் கோபமாக வந்தது. இருப்பினும் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் கைகளை இறுக்க மூடி அமர்ந்திருந்தான்.

தியாவிற்கும் அங்கு நடப்பது வருத்தமாக இருந்தது. அந்த ஆசிரியரோ சூர்யாவின் தாளில் இருந்த ஒவ்வொரு  கேள்விகளுக்குமான பதிலையும் அனைவருக்கும் படுத்துக் காட்டியவர், இறுதியில் அந்தத் தாளை சூர்யாவின் மீது விட்டேரிந்தார். அதை எடுத்துக் கொண்டவன் அவரை முறைத்து பார்க்க,

அதை கவனித்தவர்,  “இந்த முறைப்பெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத. உன்னால முடிஞ்சா இந்த பேப்பர்ல ஐம்பதுக்கு ஐம்பது வாங்க வேணாம் ஒரு 40க்கு மேலே வாங்கி காட்டு.. அடுத்த டெஸ்டில.. அப்ப வந்து உன்னோட இந்த திமிர் எல்லாம் காண்பிக்கலாம். பட் நவ் கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்”, என்று அவர் கத்த வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

அவன் செல்வதையே ஜெய்யும் தியாவும்  செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட, தியா மற்றும் ஜெய் இருவரும் சூர்யாவை தேடினர் கல்லூரி வளாகம் முழுக்க அவர்கள் தேட அவன் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தேடி களைத்து போன இருவரும் அங்கிருந்த கல் மேடை மீது அமர்ந்தனர்.

“அவன் எங்க டா போய்ருப்பான்.”, என்று தியா கேட்க, “அதான் தியா தெரியல.. ஒருவேளை வெளிய எங்காச்சும் போய் இருப்பானா”, என்று சந்தேகமாக ஜெய் கூற, “எனக்கும் அப்டிதான் தோணுது நாம்ம வெளிய போய் பாக்கலாம்.. டா”, என்று வெளிய வந்தனர்.

அவர்கள் கல்லூரி வளாகத்தின் கேட்டின் அருகில் செல்ல மின்னல் வேகத்தில் ஒரு இருசக்கர வாகனம் அவர்களை கடந்து சென்றது வேற யாரு சூர்யாதான் சென்றான்.

அவன் செல்வதை பார்த்து பதறிய இருவரும் அவனை அங்கிருந்து கத்தி அழைக்க அவர்கள் குரல் காற்றோடு கரைந்து போனது.

“அவன் எங்க போறான் எனக்கு தெரியும் நீ வா”,  என்று தியாவை அழைத்துக்கொண்டு தன் நண்பனின் வண்டியை வாங்கி வந்த ஜெய் அவளோடு அங்கிருந்து கிளம்பினான். சிறிது தூரம் செல்ல ஆள்நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் சூர்யாவின் வண்டி மட்டும் நின்றது.

அவ்விடத்தில் தாங்களும் இறங்கியவர்கள் அவனை தேட அங்கிருந்த மையில் கல் ஒன்றன்மீது அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்ற ஜெய், அவனை அழைக்க  பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தான் சூர்யா.

“இந்த வெட்டி கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. அவர் உன்ன திட்டுனதில என்னடா தப்பு இருக்கு.? நீ ஒழுங்கா எக்ஸாம் எழுதி இருந்தா அந்த ஆள் ஏன் திட்ட போறாரு.  தப்பு உன் பக்கம் வைச்சு கிட்டு உனக்கு கோபம் வேற வருது.”, என்று ஜெய் கத்த அவனை நிமிர்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்தான் சூர்யா.

“பாத்தா பயந்துடுவோமா உன்னால முடியாதுன்னு தெரிஞ்சு தான் அந்த ஆள் இப்படி ஒரு உன் கிட்ட சலென்ஜ் பண்ணிருக்காரு.. அவரு அவ்ளோ பேசுனாருல .. ஒன்னு அவர்கிட்ட பேசணும் இல்ல அமைதியா இருக்கணும் ரெண்டும் இல்லாம ஏன்டா இப்படி இருக்க.. உன்ன வச்சுகிட்டு முடியல என்னால..  படுத்துற எங்கள நீ”,  என்று பேசிக்கொண்டே போக அவனை தடுத்தாள் தியா.

“சூர்யா உன் மேல எப்படி தப்பு இல்லையோ அதே மாதிரி அவர் மேலயும் எந்த தப்பும் இல்ல. படிச்சி தான் ஆகணும்னு எந்த சட்டமும் இல்லையே, ஆனால் தன்னோட கிளாஸ்ல படிக்காம இருக்க ஒரு ஸ்டுடென்ட் பனிஷ் பண்றதும் தப்பு கிடையாது.

இது உனக்கு இன்சல்ட் அப்படின்னு நீ நினைச்சா அவரோட சேலஞ்ச ஏத்துக்கிட்டு படிக்கிற வேலைய ஆரம்பி. இல்லனா இத இப்படியே விட்டுட்டு அடுத்த வேலைய பாரு. அவ்ளோதான் நான் சொல்லுவேன்”,  என்று தியா அவனுக்கு எடுத்துச் சொன்னாள்.

“நீ சொல்றது எல்லாம் சரிதான் ரதி. நான் அந்த ஆளு சொன்ன மாதிரி படிச்சு காமிக்கிறேன்”, என்ற சூர்யா சொல்லி முடிக்க வயிறு குலுங்க சிரித்தாள் ஜெய்.

அவனை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா. “என்னை ஏன்டா முறைக்கிறாய் நீ சொன்னத யாரு கேட்டாலும் இப்படித்தான் சிரிப்பாங்க”, என்று சொல்லிக்கொண்டே சிரிக்க சிரித்தவன் தியாவின் முறைப்பில் அமைதியானான்.

“அவன் கிடக்கிறான் சூர்யா நீ நான் சொல்றதை கேளு, நீ படிக்க ரெடியா அத மட்டும் சொல்லு உன்ன மார்க் வாங்க வைக்க வேண்டியது என்னோட பொருப்பு”, என்று சொல்லி முடித்தாள் தியா. அவளைப் பார்த்தாவன், “படிக்கல்லாம் நான் ரெடி தான் ரதி.  ஆனா முடியுமா?.. அதான் தெரியல”, என்று சந்தேகமாக கேட்டான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு சூர்யா உன்மேல. நீ ரொம்ப யோசிக்காத. நீ படிக்கிற அந்த ஆளு சொன்னமாறி மார்க் வாங்குற ஓகே.. எந்திரி”, என்று அவனை அழைத்துக்கொண்டு அவள் முன்னே செல்ல, தலையில் அடித்துக்கொண்ட  அவர்களோடு தானும் கிளம்பினால் ஜெய்.

ஆசிரியை தியாவின் வழிகாட்டுதலின்படி இதுவரை தனக்கு பழக்கமே இல்லாத ஒன்றை ஆரம்பித்தான் சூர்யா.

முடிவு என்னவோ?..

கடந்த கால நினைவில் மூழ்கி இருந்தவன், அசைந்து திருப்பி உறங்கிய தியாவாள் அதிலிருந்து வெளியே வந்தான்.

எனினும் அவளை பார்க்க, கடந்து வந்த பாதை மீண்டும் நிழற்படமாக ஓடியது. அவனுக்காக தான் படிப்பதை விட்டிவிட்டு அவனை படிக்க வைப்பதிலேயே கவனமாக இருந்தாள் தியா,

அவளின் அனைத்து முயற்சிகளும் பயனின்றி போக தேர்வில், அவன் ஆசிரியர் வைத்த சவாலை அவனால் முறி அடிக்க முடியவில்லை.

அவனை இகழ்ந்த அனைவரிடமும், “இன்னைக்கு இல்லனாலும் கண்டிப்பா ஒரு நாள் சூர்யா ஜெய்ச்சு காட்டுவான்.. நான் காட்ட வைப்பேன்.”, என்று பேசிவிட்டு வேகமாக அவனை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டாள்.

அதை எண்ணி பார்த்தவனுக்கு, “என் மேல எவ்ளோ நம்பிக்கை இருந்துதுல ரதி உனக்கு..”, என்று மெதுவாக சொன்னான், அவள் செவிகளை தான் அது எட்டவில்லை.

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் அவனுக்கு சவாலாகவே  இருந்தது. அனைத்திலும் உடன் இருந்தாள் தியா. 

இதற்கிடையில் தியாவுக்கு யாரோ காதல் கடிதம் வரைய, அதை பார்த்த அவள் தோழிகள் அனைவரும் அது சூர்யா தான் என்று கூற, வெளியே சொல்லவில்லை என்றாலும் ஜெய்க்கும் கூட அந்த சந்தேகம் இருந்தது.

காரணம் சூர்யா தியாவின் நெருக்கம் மற்றும் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த அன்பு தான். ஆனால் தியா மனதில் அந்த சந்தேகம் எழவில்லை.

அனைவரும் சூர்யாவை சந்தேகப்படும் போது கூட, “அவனுக்கு அப்டி ஒரு எண்ணம் இருந்த என்கிட்டே சொல்லுவான் இப்டி எல்லாம் சீப்பா நடந்துக்க மாட்டன்.. ” என்று பேச்சை முடித்துக் கொண்டாள். 

அவள் நம்பியது போலவே கடிதம் வரைந்தது வேறு ஒரு மாணவன் அனைவரும் சூர்யாவை சந்தேகப்பட்டதற்காக வெட்கித் தலை குனிந்தனர்.

சில நாட்கள் ஓடிய பிறகு சூர்யாவிற்கு அவை அனைத்தும் தெரியவந்தது தன் மீது தான் அவளுக்கு எத்தனை எத்தனை நம்பிக்கை என்று பெருமிதம் கொண்டான்

நாட்கள் அதன் போக்கில் ஓடியது இவர்களும் இரண்டாம் வருடம் படிப்பை முடித்து இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். நாட்கள் அதன் போக்கில் அழகாக சென்று கொண்டிருக்க சூர்யா ஜெய் தியா மூவரின் நட்பும் எந்த சலனமும் இல்லாமல் தொடர்ந்தது.

ஒரு நாள் அவர்கள் வகுப்பின் மாணவன் ஒருவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் ஜெய்யும் சூர்யாவும் அவனை காண மருத்துவமனை சென்று விட்டனர் அன்று தியா மட்டும் கல்லூரிக்கு சென்றாள்.

“அவள் கல்லூரியில் தனியாக பாவம் என்ன செய்கிறாள்”,  என்று தெரிந்து கொள்ள அவளுக்கு அழைப்பு விடுத்தான் சூர்யா. அழைப்பை எடுத்தாவள், “நீங்க ரெண்டு பேரும் இல்லாம இருக்கவே பிடிக்கவில்லை”, என்று கூற சூர்யாவிற்கு தான் ஏதோ போலாகி விட்டது. “சரி நான் வரேன்”, என்று கூறியவன் கல்லூரிக்கு கிளம்பினான்.

சூர்யா வரும் வரை நேரத்தை கடத்த காரிடாரில் நடந்து கொண்டு இருந்தாள் தியா. அப்போது ஏதோ ஒரு வகுப்பறையில் இருந்து சத்தம் கேட்க அங்கு சென்று பார்த்தாள். அந்த இடத்தில் நரேனும் தியாவிற்கு பழக்கம் இல்லாவிட்டாலும் தெரிந்த பெண் ஒருத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த பெண்  வினிதாவின் கையை முறுக்கி வளைத்து பின்னால் பிடித்திருந்தான் நரேன்.

அவளோ அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தாள். அவன் அந்த பெண்ணிடம் தகராறு செய்கிறான், என்று புரிந்து கொண்டவள் தன்னால் அவனிடம் சண்டையிட முடியாது என்று அங்கிருந்து வெளியே வந்தவள், அவள் வகுப்பு மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வர, அப்போது சூர்யாவும் கல்லூரிக்கு வந்து சேர, அவனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.

இவர்கள் அனைவரும் அந்த வகுப்பிற்குள் நுழைய அங்கு கண்ட காட்சியில் சற்று அதிர்ந்துதான் போயினர். வினிதா கீழே விழுந்து கிடக்க அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் நரேன். 

அதற்குள் அங்கு வந்த ஒருவன் அவனைத் தடுத்து நிறுத்த சூர்யா அவனை அடித்து விட்டான். அனைவரும் அவனை அடிக்க சண்டையை நிறுத்திய தியா அவனை ஏகத்துக்கும் திட்டி விட்டு அவனை அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றாள். இதற்கிடையே வினிதா அங்கிருந்து சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

சூர்யாவும் தன் கோவம் அடங்கும்வரை அவனை அடித்து விட்டு சென்றான். அதன்பிறகு வந்த நாட்கள் நரேனுக்கு கல்லூரி என்றால் நரகத்தை போன்று இருந்தது. அவனுடன் அதுவரை நட்பு பாராட்டிய யாரும் இப்போது அவனோடு இல்லை அவனை ஒரு அருவருப்புடனே அனைவரும் பார்த்தனர்.

வினய் மட்டும் தான் தன் நண்பன் மீது நம்பிக்கொண்டு இருந்தான். ஆனால் அவனாலும் மற்றவர்கள் நரேனை ஏளனம் செய்யும் போது தடுக்க முடியவில்லை.

அனைவர் மனதிலும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றவன் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. போதாதற்கு தியாவும் அவனை பார்க்கும் போதெல்லாம் தன்னால் இயன்ற வரை அவனை அவமதித்து விட்டு சென்றாள்.

அவனை அடிக்கும் போதும் சரி இப்போதும் கல்லூரியிலும் சரி அவன் கூற வந்ததை யாரும் கேட்க விழயவில்லை. அவன் எவ்வளவு முயன்றும் அவன் முயற்சிகள் அனைத்தும் வீணாக ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவனுக்கு அனைவர் மீதும் கோபம் தான் வந்தது.

அதில் தியாவின் மீது எல்லையற்ற கோபத்தில் இருந்தான். ஒருவேளை அவர்கள் தான் கூற வந்ததை கேட்டிருந்தால் தனக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்து இருக்காது என்று எண்ணினான். அவர்களை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தான். ஆனால் அதற்கான நேரம் அப்போது வரப்போவதில்லை என்று அவனுக்கு தெரியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்