Loading

8 – காற்றிலாடும் காதல்கள் 

 

“கைய விடு ஆதர்ஷ்..” பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறினாள். 

“அப்படியெல்லாம் உன்ன விடமுடியாது மிருணா.. எனக்கு குடுக்கறேன்னு சொன்ன பொருள் என்னாச்சி? என்கிட்ட இருந்து நீ வாங்கின விஷயத்துக்கு எல்லாம் நீ திருப்பி ஏதாவது செஞ்சி தான் ஆகணும்.”

“நான் உன்கிட்ட வாங்கினத விட அதிகமா இழந்துட்டு நிக்கறேன். உமேஷ் சொன்னபடி எல்லாம் செஞ்சி உன் பணமும் திருப்பி வட்டியோட குடுத்துட்டேன். இதுக்கு மேல என்கிட்ட ஒண்ணுமே இல்ல.”

“பணம் எனக்கு பெரிய விஷயமே இல்ல மிருணா. ஆனா உன் அறிவு எனக்கு நெறைய பலன்களை அள்ளிக்கொடுக்கும். நீ எனக்கு கீழ வேலை செய்யணும். வந்துடு.”

“மறுபடியும் அந்த விஷயத்த நான் தொடமாட்டேன் ஆதர்ஷ். என்னை வற்புறுத்தாத.. அது நடக்காது.. உமேஷ் தான் இருக்கானே அப்பறம் என்ன?”

“அவன் உன் அளவுக்கு திறமைசாலியா இல்லயே.. வருஷத்துக்கு ஒண்ணோ ரெண்டோ தான் அவனால சால்வ் பண்ணமுடியுது. நீ இருந்தா மாசம் ரெண்டு சால்வ் பண்ணி நான் பேரும் புகழும் சம்பாதிப்பேன். பணமும் நெனைச்சி பாக்காத அளவுக்கு நம்ம கஷ்டப்பாடாமயே வந்துசேரும்.” கண்கள் மின்ன ஆதர்ஷ் கூறினான். 

“போன தடவயே நான் கடைசின்னு சொல்லி தான் செஞ்சேன். நான் சொன்ன சொல் மாறமாட்டேன். நீயும் அதே பண்ணா எல்லாருக்கும் நல்லது. தேவையில்லாம என்னைய நீ தொந்தரவு பண்ணா பிரச்சனை உனக்கு தான்.“ என அவனை மிரட்டிவிட்டுக் கடந்துச் சென்றாள். 

தன்மீது பயமின்றி மிரட்டிவிட்டு செல்பவளைக் கண்கள் மின்னும் வெறியோடுக் வெறித்தான். 

‘அப்படி எல்லாம் உன்னை விட்டுடமாட்டேன் மிருணா.. நீ நான் சொல்றத எல்லாம் செஞ்சி தான் ஆகணும்.” எனத் தனக்குள் பேசியபடி அவளைக் கண்காணிக்கத் தொடங்கினான். 

கீதனையும், இந்திரனையும் கண்டதும் முகத்தை நன்றாக வைத்துக்கொண்டு வந்தமர்ந்தாள். அவளின் கண் ஆதர்ஷ் அங்கே இருக்கிறானா என்றுத் துளாவிக் கொண்டிருந்தது.      

“என்னாச்சி முகம் ஒருமாதிரி இருக்கு?” கீதன் அவளைக் கவனித்துவிட்டுக் கேட்டான். 

“ஒண்ணும் இல்ல. தலைவலி. சீக்கிரம் சாப்ட்டு கெளம்பலாம்.” எனக் கூறிவிட்டு அமைதியாகச் சாப்பிட்டெழுந்தாள்.

காலையில் இருந்து இரசித்து ருசித்து நிதானமாக உண்டதைக் கண்ட இருவரும் இப்பொழுது இத்தனை வேகமாகச் சாப்பிட்டு எழுபவளைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தனர். 

“மச்சான்.. ஏதோ சரியில்ல..” கீதன் கைக்கழுவும் போது இந்திரனிடம் கூறினான். 

“அவகிட்ட யாரோ கைக்கழுவுர எடத்துல நின்னு பேசிட்டு இருந்தாங்க மாப்ள. அதுக்கப்பறம் தான் புள்ள மொகமே சரியில்ல.”

“யார் பேசினா?”

“அதோ அந்த கருப்பு சொக்காகாரன் தான் பேசிட்டு இருந்தான். நான் வண்டிய நிறுத்திட்டு வரப்ப பாத்தேன்.”

“தெரிஞ்சவனா இருக்குமோ?”

“இருக்கலாம் ஆனா எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியலியே..“

“மொத்தத்துல அவள ஏதோ தொந்தரவு குடுத்திருக்கான், அதான் அவ வேகமா போலாம்ன்னு சொல்லியிருக்கா. அவன நல்லா பாத்து வச்சிக்க” எனக் கூறிவிட்டு கீதன் முன்னே செல்ல இந்திரன் ஆதர்ஷ் அருகே அவன் முகம் தெரியும்படி சுயமி எடுத்துக் கொண்டு வண்டிக்குச் சென்றான். 

ஆதர்ஷ் மிருணாவைப் பின்தொடர ஆட்களையனுப்பிவிட்டு தான் வந்த வேலையைப் பார்க்கச் சென்றான். 

மிருணாளினி வண்டியில் பயணம் செய்யும்போதும் எதுவும் பேசாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் மௌனம் ஆண்கள் இருவரையும் வெகுவாகப் பாதித்தது என்று தான் கூறவேண்டும். காலையில் இருந்துப் பட்டாசாகப் பொறிந்துக் கொண்டிருந்தவள், இப்போது முகத்தைப் பாறையாக்கி இறுகி அமர்ந்திருக்கும் நிலைக்காணத் தாளவில்லை. 

“ஏய் புள்ள மிருதங்கம்.. ரொம்ப தலைய வலிக்குதா? ஆஸ்பத்திரி போவோமா?”என வண்டியை ஓட்டியபடிக் கேட்டான். 

“எனக்கு ஒண்ணுமில்ல.. நீ வண்டிய கவனமா ஓட்டு.. எதிர்ல நெறைய வண்டிங்க வருது.”கண் திறக்காமல் கூறினாள். 

“முழிச்சு தானே இருக்க. ஏதாவது பேசுவேன்.. நீ அமைதியா இருந்தா நல்லாவே இல்ல.” என இந்திரன் கூறியதும் டக்கென எழுந்து அவன் முகம் பார்த்துவிட்டு முன்னால் முகத்தை மறைத்துக் கவிழ்ந்துக் கொண்டாள். 

“எனக்கு தலவலியா இருக்கு. வீட்ல மாத்திரை இருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு போங்க.” எனக் கவிழ்ந்தபடியே கூறியவள் இல்லம் சென்று அறைக்குச் செல்லும் வரையிலும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. 

கீதனும், இந்திரனும் அவளுக்குள் ஏதோ இருக்கிறது எனப் புரிந்து அமைதியாக வந்தனர். 

அவள் வாங்கிய நகைகளைக் கூட கீதனும், இந்திரனும் தான் வெள்ளைச்சாமியிடம் கொடுத்தனர். 

“புள்ளைக்கு தலவலின்னு சொல்லுச்சி தாத்தா. எதுவும் பேசாம அறைக்கு போயிருச்சி. இதெல்லாம் வாங்கின பொருளுங்க. இங்க வைக்கறேன். காலைல தண்ணி பாயிச்ச வந்துடறேன் நீ சிரமம் பட்டுக்காத.” என இந்திரன் கூறிச் சென்றான். 

பாறையாக இறுகி அறைக்குச் சென்ற பேத்தியை நினைத்து மௌனமாக அவரும் கண்ணீர் வடித்தார். 

“அப்பா ஏகாம்பரநாதா.. என் பேத்திக்கு நீ தான் மனஅமைதியும், நல்ல வாழ்க்கையும் அமைச்சி தரணும்.” எனப் பூஜையறையைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு தானும் வீட்டினைப் பூட்டிவிட்டு உறங்கச்சென்றார். 

மறுநாள் விடியும் முன்னே மிருணாளினி எழுந்துக் குளித்துவிட்டு மயில்களைக் காண உப்பரிகையில் அமர்ந்திருந்தாள்.  

“என்ன கண்ணு அதுக்குள்ள தலைக்கு குளிச்சிட்ட? தலைய தொவட்டலியா? பாரு ஈரம் சொட்டுது.” எனக் கேட்டபடி இருளாயி அவளுக்கு நவதானிய கஞ்சியைக் கொடுத்துவிட்டு, முடியைத் துவட்டினார். 

மிருணாளினி அமைதியாக அவருக்கு தலைச் சாயித்துக் கொடுத்தமர்ந்திருந்தாள். 

“குடிச்சிட்டே கீழவாகண்ணு. சாம்பிராணி பொக போட்டுவிடறேன். தலபாரம் ஏறாம இருக்கும்.” எனக் கூறிவிட்டு கீழே சென்றவர். தூபக்காலை எடுத்துக் கரிக்கட்டிகளை நெருப்பில் காட்டி மூலிகை சம்பிராணி பொடி தூவ, வாசனை அவள் படிகளில் இறங்கும்போதே அவளின் நாசியை வந்தடைந்தது. 

அமைதியாக அவரின் கூற்றுக்கு எல்லாம் செவிசாய்த்து அவர் சொன்னபடி அமர்ந்துத் தலையைக் கொடுத்தாள். 

காலையில் இருந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாது இருப்பவளைக் கண்ட வெள்ளைச்சாமியின் மனம் கனத்தது, வேலையாட்களிடம் அவளை தனியே விடாமல் பார்த்துக் கொள்ளும்படிக் கூறி அவளின் மனதைத் திசைத் திருப்பும் முயற்சியில் இருந்தார். 

“ஏன் கண்ணு ஒரு வார்த்தை கூட பேசாம இருக்க? எம்மேல ஏதாச்சும் கோவமா? நான் உனக்கு புடிக்காதது என்னமும் பண்ணிட்டேனா?” என இருளாயி மனம் தாளாமல் கேட்டார். 

“இல்லக்கா.. நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னை நம்பி வந்தவள காப்பாத்தாம விட்டுட்டேன். நீங்க வேலைய பாருங்க. கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடறேன்.” எனக் கூறி மரங்களுக்கிடையே நடக்கத்தொடங்கினாள். 

அவள் உடல் தொய்ந்து நடந்துச் செல்லும் காட்சி அனைவருக்கும் மனதை வலிக்கச் செய்தது. இந்திரனும் காலையில் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறான். 

அவள் மனதை ஏதோ அரிக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவளை யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்பது வெள்ளைச்சாமி தாத்தாவின் கட்டளை. பழையதை மறக்க வந்திருக்கும் இடத்தில் அதையே ஞாபகப்படுத்தும்  விதமாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அவரிடம் மிகுந்திருந்தது. 

கீதனும் காலையில் இருந்து மூன்று முறை அவளைத் தூரத்தில் இருந்துப் பார்த்துவிட்டுச் சென்றிருந்தான். அவள் முகம் உணர்ச்சியின்றி இருப்பது அவன் மனதைக் கொய்தது. 

அவளுக்குள் மறைந்திருக்கும் வலி தான் என்ன என்று அவனும் உள்ளுக்குள் மறுகினான். 

விஸ்வநாதன் ஆளையனுப்பி ஆசாரி வந்திருப்பதாகக் கூறவும் வெள்ளைச்சாமி பேத்தியைத் தேடிச்சென்றார். அவள் ஒரு மணிநேரம் தோப்பினைச் சுற்றி நடந்தபடி இருந்துவிட்டு, இருளாயியின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சமாகக் கொறித்துக் கொண்டிருந்தாள். 

“இன்னும் ரெண்டு இட்லி வைக்கவா கண்ணு?”

“போதும்க்கா.” எனக் கூறி இரண்டு இட்லியோடு எழுந்துக் கொண்டாள். 

“நேத்து நல்லா கலகலன்னு இருந்த புள்ள இன்னிக்கி இப்படி இருக்கே.. யார் கண்ணு பட்டுச்சோ?” எனப் புலம்பியபடி அவர் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றார். 

“அம்மாடி உடுப்பு மாத்திட்டு வாடா விஸ்வநாதன் வீட்டுக்கு போகணும்.”

“கண்டிப்பா நானும் வரணுமா தாத்தா?” தயக்கத்தோடுக் கேட்டாள். 

“உன்ன கூட்டிட்டு வரசொல்லி நேத்தே சொல்லிட்டு தான் போனான் டா. நீ வரலன்னா வருத்தபடுவான்.” என அவர் கூறவும் ஐந்து நிமிடத்தில் தயாராகி கீழே வந்தாள். 

பாந்தமாக வெளிர் நீல நிறத்தில் சல்வார் அணிந்து, முடியைத் தூக்கிக் குதிரைவால் போட்டிருந்தாள். முகத்தில் லேசான பவுடர், கண்களில் லேசாக மையிட்டு, உதட்டிற்கு லிப்பால்ம் போட்டு, புருவ மத்தியில் சிறிதாக வட்டவடிவ கருப்பு நிறத்தில் பொட்டிட்டு இருந்தாள்.  

வேறு எந்த அலங்காரமும் இன்றி அவள் முகம் பளிச்சென இருந்தது. படித்த படிப்போ, கற்ற வித்தையோ, உள்ளிருக்கும் துணிவோ அவளுக்கு ஓர் தனியாளுமையைக் கொடுத்தது. 

இருவரும் மெல்ல விஸ்வநாதன் இல்லம் நோக்கி நடக்கத் துவங்கினர். வழியெல்லாம் பேத்திக்கு பல கதைகள் கூறியபடி வந்தார். அவரின் அத்தனைப் பேச்சிலும் பாட்டி சிகப்பி இடம்பெற்று இருந்தார். அவர்களின் காதலையும், அன்பின் ஆழத்தையும் மிருணாளினி நன்றாக இந்த இரண்டு நாட்களில் உணர்ந்துக்கொண்டாள். 

“நீங்க பாட்டிய லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களா தாத்தா?”

“அது காதலான்னு தெரியாது கண்ணு. ஆனா அவ பொறந்ததுல இருந்து தினம் அவள பாக்கமா இருந்தது இல்லை. திடீருன்னு ஒரு 20 நாள் அவள பாக்கவே இல்ல. எனக்கு மனசு கடந்து துடியா துடிக்குது. அவள எப்படியாச்சும் இன்னிக்கி பாத்துடணும் நாளைக்கு பாத்துடணும்ன்னு நாளும் ஓடிரிச்சி. அன்னிக்கி விஸ்வநாதனுக்கு கல்யாணம்ன்னு நானும் போனேன். அங்க பாத்தா சிகப்பி தான் பொண்ணுன்னு தெரிஞ்சது. என்னால அத ஏத்துக்கவே முடியல. உடனே விஸ்வநாதன்கிட்ட அவள கட்டிக்க ஆசைபடறேன்னு சொன்னேன். அவனுக்கு போட்ட மேடைல எனக்கும், சிகப்பிக்கும் அவன் கல்யாணம் செஞ்சி வச்சான் கண்ணு. சின்ன புள்ளையா இருந்ததுல இருந்து நாங்க நண்பர்களா இருந்தாலும், அன்னிக்கி அவன் எனக்காக பேசி எனக்கும் உன் பாட்டிக்கும் கல்யாணம் செஞ்சிவச்சான். அப்ப முடிவு பண்ணேன்  எந்த சூழ்நிலைலையும் அவன தனியா விட்டுறகூடாதுன்னு. சிகப்பியும் அதே தான் சொல்லுவா. அவன தனியா விடமுடியாம தான் சிகப்பி போன அப்பறம் கூட இன்னும் இருக்கேன் போல.” என அவர் கூறியது அவள் மனதில் புது விதமான நெகிழ்வை ஏற்படுத்தியது. 

“அப்ப பேத்திக்காக நீங்க எதுவும் பண்ணமாட்டீங்களா தாத்தா?” அவரிடம் வம்பிழுத்தாள். 

“உனக்கு என்ன வேணுமுன்னு சொல்லு கண்ணு. இந்த தாத்தன் நீ கேட்டா எது வேணா செய்வான். நீ சந்தோஷமா இருக்கணும் அதான் எனக்கு வேணும் கண்ணு.” எனக் கூறி அவளது தலைவருடினார். 

“இதான் கீதன் வீடா தாத்தா?” என ஒரு இல்லத்தின் முன்னால் நின்றதும் கேட்டாள். 

“ஆரது என் பேரன பேர் சொல்லி கூப்பிடறது?” எனக் கேட்டபடி விசாலாட்சி பாட்டி பக்கவாட்டில் இருந்து வந்தார். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்