இந்திராணி அமராவதி வருவதை பற்றி பரசுராமரிடம் தெரிவித்தார்.
“இவ ஏன் இந்த பொண்ணு விஷயத்துல இவ்வளவு அவசரப்படுறா? அதுவும் இவனுக்கு கட்டி வைக்க?”என்று பரசுராமர் சலித்துக்கொள்ள
“ஏன் என் பையனுக்கு என்ன கொற?”என்று இந்திராணி தன் மகனுக்காக பேச
“உன் பையன் அந்த பொண்ணுக்கு எந்த வகையில சரிப்படுவான்? ஒத்த புள்ளையா அந்த மொத்த குடும்பத்தையும் பார்த்துக்கிறா. தனியாளா ஒரு தொழிலை கொண்டுபோறா. இதுல ஒன்னாவது உன் புள்ள செய்றானா? அது மட்டுமா.. எந்த பிரச்சினை வந்தாலும் தனியா சமாளிக்கிற தைரியம் சமுத்ரா கிட்ட இருக்கு. உன் பையனை கட்டிக்கிட்டா இவன் இழுத்துட்டு வர பிரச்சினையையும் சமாளிக்கிறதுலயே காலம் போயிடும் அவளுக்கு.”என்று பரசுராமர் சரமாரியாக தன் மகனை திட்ட இந்திராணியோ கொதித்தெழுந்தார்.
அவர் அடுத்து ஏதோ பேசும் முன்னர் வீட்டிற்கு வந்த ஷாத்விக்
“ஆமாம்மா உன் வீட்டுக்காரர் சொல்லுறது சரி தான். நீ ஏன்மா எனக்காக பேசி வாங்கிக்கட்டிக்கிற? வேற வேலையிருந்தா போய் பாரு.” என்று சாதாரணமாக கூறிவிட்டு ஷாத்விக் தன் அறைக்குள் செல்ல பரசுராமரோ
“உன் மகனே சொல்லிட்டான்ல… போ போய் வேற வேலையிருந்தா பாரு. அமராகிட்ட நான் பேசி புரியவைக்கிறேன்.” என்று சொன்னவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் அந்தப்புறம் சென்றதும் கோபத்தோடு ஷாத்விக்கை தேடி வந்தார் இந்திராணி.
“தினமும் உப்பு போட்ட சாப்பாட்டை தானே உனக்கு குடுக்குறேன். ஏன்டா அந்த மனிஷன் அவ்வளவு கேவலமா பேசிட்டு போறாரு நீயும் அது தான் சரின்னு ஆமா சாமி போட்டுட்டு வர? மனசுல என்ன தான்டா நெனச்சிட்டு இருக்க?”என்று ஆற்றாமையுடன் கேட்க
“இப்போ எதுக்கும்மா நான் அவர்கிட்ட மல்லுகட்டனும்னு நெனக்கிற?”என்று ஷாத்விக் கேட்க
“அவரு உன்னை லாயக்கில்லாதவன்னு சொல்லிட்டு போறாருடா.” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க
“அவரு பார்வையில நான் அப்படியே இருந்துட்டு போறேனே.”என்று ஷாத்விக்கும் சாதாரணமாக சொல்ல
“இல்லடா என் புள்ள எல்லா விதத்துலயும் உசத்தினு அவருக்கு தெரியனும்.”என்று கூற
“அம்மா இப்போ உன் பிரச்சினை நான் உசத்திங்கிறது இல்லை. என் கல்யாணத்துக்கு அவரு மறுக்கிறாருங்கிறது தான்.”என்று ஷாத்விக் சிரித்தபடியே கூற
“நீ என்ன வேணாலும் நெனச்சுக்கோ. உன் அத்தையே கேட்கும் போது இவரு எதுக்கு மறுக்கனும்?” என்று இந்திராணி தன் பக்க நியாயத்தை கூற
“அம்மா நீ என்னோட பக்கத்துல மட்டும் இருந்து யோசிக்கிறதை விட்டுட்டு அவரு பக்கம் உள்ள நியாயத்தையும் பாரு. சமுத்ரா சிட்டியில வளர்ந்த பொண்ணு. அவளுக்குனு சில கடமைகள் இருக்கு. அதை உதறிட்டு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா நிச்சயம் அவ ஒத்துக்க மாட்டா. இதே நீங்க எதிர்பார்க்கிறபடி எங்க கல்யாணம் நடந்தா நீ அவ இங்க வந்து இருக்கனும்னு எதிர்பார்ப்ப. அது குடும்பத்துல வேற பிரச்சினையை கொண்டு வரும். இதெல்லாம் தேவையானு தான் அவரு எனக்கு நிலையா ஒரு தொழில் இல்லைங்கிற காரணத்தை சொல்லி மறுக்குறாரு. அவருக்கு நான் வெளியில செய்றது தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கியா? அவருக்கு எல்லாமே தெரியும். தெரிஞ்சு தான் இப்படி பேசிட்டு போறாரு.” என்று ஷாத்விக் யதார்த்தத்தை கூற
“கல்யாணத்துக்கு பிறகு நீங்க இரண்டு பேரும் எங்க இருந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா அவ கடமையை செய்ய நாங்களும் துணையாக இருப்போம். இது உன் அப்பாவுக்கும் புரியல உனக்கும் புரியல.”என்று தன் பக்க நடப்பை கூற
“எல்லாம் சொல்லும் போது நல்லா தான்மா இருக்கும். ஆனா நடைமுறைக்கு சரிப்படாது. இதை நீ புரிஞ்சிக்கிட்டா தான் அத்தைக்கு புரியவைக்க முடியும்.”என்று கூறியவனிடம்
“உன் அத்தை ராத்திரி பஸ்ஸூக்கு வர்ற. அவளை அழைச்சிட்டு வரும் போது நீயே அதை புரியவச்சிடு”என்ற இந்திராணி தன் வேலையை பார்க்க கிளம்பினார்.
ஷாத்விக்கோ அடுத்த பிரச்சினையா என்று மனதில் புலம்பியபடியே கிளம்பி வெளியே சென்றான்.
மாலை சொன்னபடியே சமுத்ரா முன்னரே வர அமராவதியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றாள்.
சன்னதியை வலம் வந்து முடித்ததும் அமராவதி ஒரு ஓரமாக அமர சமுத்ராவும் அவரருகே அமர்ந்துகொண்டாள்.
பிரசாதத்தை சமுத்ராவிடம் நீட்டியவர்
“நைட்டு எத்தனை மணிக்கு பஸ்?”என்று கேட்க
“ஒன்பதரைக்கு. நீங்க மாமாவுக்கு சொல்லிட்டீங்களா?”என்று சமுத்ரா கேட்க அமராவதியும்
“ம்ம் சொல்லிட்டேன். ஷாத்விக்கை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்புறதா சொன்னாங்க.”என்று கூறிய அமராவதி சமுத்ராவையே குறுகுறுவென்று பார்க்க அவளோ தன் கையிலிருந்த பிரசாதத்தை காலி செய்வதில் மும்முரமாக இருந்தாள்.
ஏதோ முடிவுக்கு வந்தவராய் தன் பர்சை எடுத்த அமராவதி அதிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சமுத்ரா முன் நீட்ட
“என்னம்மா இது?”என்று கேட்க
“பிரிச்சு பாரு”என்று மட்டும் கூறினார் அமராவதி.
அதனை வாங்கி பிரித்து படித்தவளது கண்களோ அதிர்ச்சியில் விரிந்ததோடு தன் அன்னையை பதட்டத்தோடு நோக்கியது.
இத்தனை வருடங்களுக்கு பின் சமுத்ராவின் முகத்தில் தோன்றிய அந்த அதிர்ச்சி அமராவதிக்கே காணக்கிடைக்காத அதிசயமாகத்தான் இருந்தது.
“இது இது உங்களுக்கு எப்படி?”என்று அதே பதட்டத்துடன் கேட்க அமராவதிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே தெரிய இதனை பயன்படுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்தார்.
“ஸ்டோர் ரூம் சுத்தம் பண்ணும் போது உன்னோட பழைய டையரியில இருந்து கிடைச்சது.”என்று அமராவதி கூற இப்போது சமுத்ராவினுள் பரவியிருந்த பதற்றம் பயமாக பரிணாமமடைந்தது.
“அது அம்மா. இது…”என்று இழுக்க
“உனக்கு ஷாத்விக்கை பிடிக்குமா?”என்று நேரடியாக கேட்க ஒரு நொடி அவளின் மனதில் பல எண்ணங்கள் வந்து போக மறுநொடியே அவளின் வதனம் பழையபடி இறுகிக்கொண்டது.
“இது அறியாத வயசுல நடந்த ஒரு விஷயம்.” என்றதோடு சமுத்ரா அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க முயல அமராவதியோ அவளை விடும் நோக்கில் இல்லை.
“அறியா வயசுல நடந்த விஷயத்தை இன்னும் ஏன் பத்திரமா வச்சிருக்க சமுத்ரா?”என்று அமராவதியும் கேள்விக்கணைகளை வீச சமுத்ரா அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தன் கையிலிருந்த கடிதத்தை சட்டென்று நூறு துண்டுகளாக்கிவிட்டாள்.
“இது இருந்தது தானே பிரச்சினை. அதான் உருத்தெரியாமல் கிழிச்சிட்டேன். இனிமேல் இது பத்தி பேசாதீங்க.” என்று கூறிய சமுத்ராவோ மறைமுகமாக தன் அன்னைக்கு ஏதோ செய்தி சொல்லியிருந்தாள்.
இதற்கு மேல் சமுத்ராவிடம் பேசுவது பலனளிக்காதென்று எண்ணிய அமராவதி கிளம்பலாமென்று சொல்ல
“அம்மா மறுபடியும் சொல்றேன். இது என்னோட கடந்த காலம். இதுக்கு நீங்க உயிர் கொடுக்கனுங்கிற எண்ணத்துல இருந்தீங்கனா அதை இப்போதே மறந்திடுங்க. அது ஒரு காலமும் நடக்காது.”என்றவளின் வார்த்தைகளில் இது பற்றி பேசவே ஊருக்கு செல்வதானால் போகவேண்டாமென்ற எச்சரிக்கையே இருந்தது.
ஆனால் அமராவதியோ தன் முடிவில் உறுதியாக இருந்ததால் சமுத்ராவின் சொற்களை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதோடு இப்போதைக்கு அமைதியாக இருப்பது சிறந்ததென்று எண்ணி அமைதியாக சமுத்ராவோடு வீட்டிற்கு கிளம்பினார்.
இரவு அமராவதியை சமுத்ரா பஸ் ஏற்றிவிட்டு சென்றதும் கடந்த காலங்களில் ஊரில் நடந்த அனைத்து சம்பவங்களையும் ஓட்டி பார்த்தார் அமராவதி.
அப்போது தான் சொற்ப வருடங்களாகவே சமுத்ரா தன் ஊருக்கு வரவில்லையென்ற உண்மை அவருக்கு புரிந்தது. போகலாமென்று சொன்னதும் சரியென்பவள் கடைசி நிமிடத்தில் வேலை அது இதுவென்று ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துவிடுவாள்.
இத்தனை நாள் அதனை சாதாரணமாய் நினைத்திருந்தவருக்கு இன்று தான் காரணம் புரிந்தது.
இனி தன் முடிவில் பின்வாங்குவதற்கு எந்த காரணமும் இல்லையென்று எண்ணியவர் நாளைய நாளை எதிர்பார்த்தபடியே உறங்கிப் போனார்.
தன் அன்னையை பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்த சமுத்ரா தன் அறைக்குள் அடைந்துகொண்டாள்.
“என்ன மஹி மதினி டல்லா இருக்குற மாதிரி இருக்கு?”என்று ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த வினயாஸ்ரீ கேட்க
“அம்மா கூட கோவிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து அவ அப்படி தான் இருக்கா. அம்மா என்ன சொன்னாங்கனு தெரியல.”என்று மஹதி யோசனையுடனேயே கூற
“ஹேய் அம்மாவும் அத்தையும் பேசும் போது என் காதுல ஒரு விஷயம் விழுந்துச்சு”என்று வினயாஸ்ரீ கூற என்ன என்பது போல் பார்த்தாள் மஹதி.
“அத்தை ஊருக்கு போறதே ஷாத்விக் அண்ணா மதினி மேரேஜை பத்தி பேசத்தான்.”என்று வினயாஸ்ரீ தனக்கு தெரிந்ததை சொல்ல மஹதியோ
“என்னடி சொல்லுற? அவருக்கா ?”என்று மஹதி அதிர்ச்சியுடன் கேட்க
“அவங்க பேசுனதை வச்சு பார்த்தா அப்படி தான்டி தெரியிது.” என்று வினயாஸ்ரீ கூற
“அப்போ கனெக்ஷன் கட்டா? யோவ் பி.எச்.டி ட்ரிப்பிள் ஸ்கெயார் நீ தப்பிச்சிட்ட. ஆனாலும் இந்த மாம்ஸூ கூட ஓகே தான். ஆனா அக்கா ஒத்துப்பாளா?” என்று மஹதி புலம்ப
“இப்ப என்னதான்டி உனக்கு பிரச்சினை?”என்று வினயாஸ்ரீ கேட்க
“பிரச்சினையெல்லாம் எதுவும் இல்லை. ஆனா உன் மதனியை ஒத்துக்க வைக்கமுடியுமா? அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்கலனா யாருக்காகவும் தன்னை மாத்திக்கிட்டு அதை செய்யமாட்டா. அது உயிர் போற விஷயமா இருந்தா கூட அதை செய்யமாட்டா. இவ போறதை பார்த்தா அம்மா ஏதோ சொல்லியிருக்காங்க போல. இப்போ இவ என்ன பதில் சொல்லுவானு தெரியலையே.” என்று மஹதி கூற
“அவங்க யோசிச்சு ஒரு முடிவை சொல்லுவாங்க. இதுக்கு நீ இவ்வளவு சீன் போடுறது தான் கொஞ்சம் டூ மச்.” என்று வினயாஸ்ரீ அவளை வார
“இது சீன் இல்ல பங்கு. பொறுப்புணர்ச்சி. ஒரு வேளை என் கூட பொறந்தவ மறுத்துட்டா மறுபடியும் கனெக்சன் கொடுக்க ரெடியாகனும்ல.” என்று மஹதி சொல்ல தலையில் அடித்துக்கொண்டாள் வினயாஸ்ரீ.
மறுபுறம் தன் நண்பன் நாதனை பார்க்க அவனது தோப்பிற்கு சென்றிருந்தான் ஷாத்விக்.
தோப்பிற்கு வந்தவனிடம்
“என்னடா இந்த நேரம் இந்த பக்கம்?” என்று கேட்க
“புது பிரச்சினை பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டு இருக்குடா.”என்று ஷாத்விக் சோகமாக சொல்ல
“என்னடா சொல்லுற?”என்று நாதன் புரியாமல் கேட்க
“அமரா அத்தை வர்றாங்க டா.”என்று ஷாத்விக் விஷயத்தை சொல்ல
“யாரு கராத்தே கருப்பு பட்டி மேடம் அம்மாவா?”என்று கேட்க
“அவங்களே தான்.”என்று ஷாத்விக் சொல்ல
“அவங்களுக்கு என்னடா?” என்று நாதன் கேட்க
“அவங்க பொண்ணை எனக்கு கட்டிவைக்க போறாங்களாம்.”என்று சோகம் கீதம் வாசிக்க
“டேய் மாப்பிள்ளை வாழ்த்துக்கள்டா. கடைசியாக நீயும் குடும்பஸ்தனாகப்போற.”என்றவன் ஏதோ நினைவு வந்தவனாக
“டேய் அவங்களா பொண்ணு?” என்று ஒரு பதட்டத்துடன் கேட்க ஆமென்று தலையாட்டினான் ஷாத்விக்.
அவனின் பதிலில் ஜெர்க்கான நாதன்
“டேய் நீ ஏதும் விளையாடலையே?”என்று உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் கேட்க
“என்னை பார்த்தா விளையாடுற மாதிரியா தெரியிது?”என்ற ஷாத்விக்கின் கடுப்பான பதிலில், தான் கேட்டது உண்மை தானென்று உறுதிசெய்திகொண்டான் நாதன்.
“ஆனாலும் நீ இப்படி சிக்கியிருக்ககூடாதுடா”என்று உச்சிகொட்டியவனை முறைக்க மட்டுமே முடிந்தது ஷாத்விக்கால்.
“உங்க அப்பா உனக்கு ஆப்பு வைப்பாருனு எதிர்பார்த்தேன். ஆனா அந்த பொண்ணை கட்டி வச்சு லைஃப் டைம் ஆப்பு வைப்பாருனு எதிர்பார்க்கலடா.” என்று இப்போது ஷாத்விக்கை கலாய்க்கத்தொடங்கியிருந்தான் நாதன்.
“எல்லாத்துக்கும் எனக்கு எதிராகவே இருக்கவரு இந்த விஷயத்துல எனக்கு சப்போர்ட்டா தான் இருக்காரு. ஆனா இந்த அம்மா தான் இந்த முறை பல்டி அடிச்சிடுச்சு.”என்று ஷாத்விக் சொல்ல
“பிறகு எதுக்குடா பயப்படுற? அதான் உன் அப்பாவே இதுக்கு ஒத்துக்கலல்ல?” என்று நாதன் கேட்க
“பேச வர்றது அத்தடா. அவரு தங்கச்சிக்கு அவரை எப்படி சரிகட்டுறதுனு நல்லாவே தெரியும்.”என்று நடக்கப்போவதை இப்போதே சொல்ல நாதனோ நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“அப்போ இனி சில சிறப்பான பல தரமான சம்பவங்களை பார்க்கலாம் போலவே.” என்றவன்
“ஆனாலும் அன்னைக்கு சம்பவத்தை நெனச்சு பார்த்தா உன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு என்னால யூகிக்க முடியிது” என்றவனது நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தை நோக்கி சென்றது.