Loading

அழைப்பை துண்டித்தவளது எண்ணங்கள் கடந்தகாலத்தை நோக்கி சென்றது.

மாலதி அவரின் புகுந்தவீட்டிலிருந்து வெளியேறிய பின் அங்கிருந்து யாரும் அவரையோ வினயாஸ்ரீயையோ தேடி வரவில்லை.

ஆனால் என்று வினயாஸ்ரீ சட்டரீதியாக மேஜரானளோ அன்றிருந்து பிரச்சினை தொடங்கியது.

மாலதியின் கணவர் தன் குடும்பம் பற்றி நன்றி அறிந்ததாலேயோ என்னவோ அவர் திருமணம் முடிந்த உடனே தன் பெயரிலுள்ள சொத்துக்கள் அனைத்தும் தனக்கு பின்னான வாரிசிற்கே சொந்தம் என்று எழுதிவைத்துவிட்டார்.அதுவும் தன்னுடைய வாரிசு மேஜரான பின்பே இந்த சொத்துக்களுக்கு உரிமை கோரமுடியும் என்ற நிபந்தனையோடு அவரின் உயில் எழுதப்பட்டிருந்தது.

இந்த சொத்து விஷயம் இத்தனை காலமாக எந்த தொந்தரவும் தராமையால் மாலதியின் புகுந்தவீட்டார் அமைதியாக இருந்தனர். வினயாஸ்ரீ மேஜரானதும் இது பற்றி மாலதியின் புகுந்த வீட்டு குடும்ப வக்கீல் இந்த விஷயத்தை தெரியப்படுத்த சமுத்ராவோ மாலதியின் விருப்பத்தை தெரிந்துகொள்ள விரும்பினாள்.

மாலதிக்கு இதில் பெரிதாக ஆர்வம் இல்லாத போதிலும் வினயாஸ்ரீக்காக யோசிக்க சமுத்ரா தான் இந்த விஷயத்தை பார்த்துக் கொள்வதாக கூறி வழக்கு தொடர இதோ கடந்த ஒரு வருடமாக வழக்கு நடைபெறுகிறது.

சுமூகமாக முடியவேண்டிய விஷயம் மாலதியின் புகுந்தவீட்டாரின் தலையீட்டால் இத்தனை நாட்கள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. அவர்களும் என்னென்னமோ செய்தும் கூட சமுத்ராவும் இதனை விடுவதாக இல்லை. எப்படியேனும் இந்த வழக்கை வென்று வினயாஸ்ரீக்கு சேர வேண்டிய சொத்தினை மீட்டிட வேண்டுமென்று முடிவெடுத்தவள் அதற்கு தேவையான அனைத்தையும் செய்திருந்தாள்.

வழக்கு தமக்கு சாதகமாக முடியும் தருவாயிலில் மீண்டும் அங்கிருந்து ஒரு நபர் வந்து குழப்பம் செய்துவிட்டு போகவே அவள் இத்தனை முன்னாயத்தங்களை செய்யவேண்டியதாகியது.

தன் யோசனையிலிருந்து மீண்டவள் மீதமிருந்த வேலைகளை கவனிக்கத்தொடங்கினாள்.

மாலை ஆறு மணியளவில் அனைத்து வேலைகளையும் முடித்த சமுத்ரா சோர்வாக உணர இப்போதைக்கு வீட்டிற்கு போக வேண்டாமென்று முடிவெடுத்தவள் வீட்டுற்கு வர தாமதமாகுமென்று மட்டும் தகவல் சொல்லிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பி நேரே பீச்சிற்கு வந்தாள்.

கடல் மண்ணில் சாவகாசமாய் அமர்ந்தவளுக்கு அளவாயிருந்த கடற்கரை கூட்டம் அவள் வேண்டிய தனிமைக்கு இடையூறு இழைக்காத வண்ணம் அவளை கடந்து சென்றது.

கடல் மண்ணில் அமர்ந்து காலிற்கு முட்டு கொடுத்தபடியே கடலை பார்த்தபடி கடல் மண்ணில் கோலம் போட்டவளின் மனதில் ஆயிரம் சலிப்புக்கள்.

ஓட்டமும் உழைப்பும் மட்டுமே 18 மணி நேரமாகிப்போன வாழ்க்கையில் அவளுக்கான நேரமென்பது இல்லாமலேயே போயிருந்தது‌. தனக்கென்று அவள் செலவழிக்க முயன்ற நேரமென்று ஒன்றிருப்பதாய் அவளுக்கு தெரியவில்லை.

கடமை என்ற நோக்கத்துக்காக அயர்வில்லாத ஓடுகின்ற போதிலும் சலிப்பென்ற ஒன்று வருகின்ற போது அதனை அழுது தீர்த்துக்கொள்ளவோ சிரித்து அழுத்துக்கொள்ளவே அவளால் முடிவதில்லை. எங்கே தன் பலவீனம் தன்னை தாக்கிவிடுமோ என்ற பயத்தில் அவள் அதற்கு முயற்சித்ததும் இல்லை. 

தனக்கென்று அடுத்து பல இலக்குகள் இருக்கின்றபோதிலும் தன் தனிமையின் அசுவாரஸ்யத்தை அசைபோட்டது அவளின் மனது.

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்த சமுத்ராவின் வதனம் ஒரு நட்புப்புன்னகையை கையகப்படுத்தியிருந்தது.

“என்ன மேடம் இன்னைக்கும் என் இனிய தனிமையேவா?”என்று கேட்டபடி ஒரு இளவயது ஆடவன் வந்து அவளருகில் அமர அவளோ புன்னகையுடன் கடல் இசைந்தாடிய திசையை பார்த்து திரும்பிக்கொண்டாள்.

“எப்படி இருக்கீங்க சார்?”என்று சமுத்ரா நலம் விசாரிக்க

“நமக்கு என்ன மேடம் இந்த வானம் தான் எல்லை. அந்த எல்லைக்குள்ள நமக்கு செய்ய வேண்டிய வேலை ஏகப்பட்டது. அதை கவனிச்சிக்கிட்டே வாழ்க்கை ஜோரா போகுது. நீங்க எப்படி இருக்கீங்க மேடம்? கொஞ்ச நாளாக இந்த பக்கமே காணமுடியல?”என்று அந்த ஆடவன் கேட்க

“நேரம் கிடைக்கல.”என்று பதில் கூறியவள் அதற்கு பின் அமைதியாகிட அந்த ஆடவனும் அவளைப் போலவே கடலை ரசித்துக்கொண்டிருந்தான்.

இந்த இருவருக்கும் ஒருவரை பற்றி மற்றவருக்கு தெரியாது. இருவருக்குமே அதனை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. ஆனால் இருவருக்குமிடையே சில வார்த்தையாடலின் மூலம் அழகானதொரு நட்பு உருவாகியிருந்தது.

ஆரம்ப காலங்களில் அதாவது சமுத்ரா உதய் தந்தையின் அலுவலகத்தின் வேலை செய்யும் நாட்களில் தன் அமைதிக்காக கடற்கரைக்கு வருவதுண்டு. அப்போதுதான் இந்த வாலிபரை சந்தித்தாள்.

அவளிடம் அவரே வந்து முதலில் பேச சமுத்ராவோ தன் முறைப்பாலேயே துரத்தியடிக்க முயல அந்த வாலிபரோ

“என்ன மேடம் ஒரு ஹாய்க்கு முறைக்கனுமா? ஜஸ்ட் ஒரு ஹாய் தானே முறைச்சிட்டே சொல்லிடுங்க.”என்று அந்த வாலிபர் அதையும் சாதாரணமாக சொல்ல சமுத்ராவோ அப்போதும் தன் எதிரொலியை மாற்றுவதாக இல்லை.

“உங்க மைண்டுல வேற விஷயம் ஓடுதுனு நினைக்கிறேன். ரொம்ப யோசிக்காதீங்க மேடம்.நம்ம வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குதுனா அது நிச்சயமாக எதிர்காலத்துல நடக்கப்போற ஒரு விஷயத்துக்கான முதல் அனுபவமாக தான் நடக்கும். முதல் அனுபவம் எப்பவுமே சரியா இருக்கனும்னு இல்லை. ஜஸ்ட்டு கடந்து போங்கன்னு சொல்லமுடியாது. ஆனா கடமைனு நினைச்சு கடந்து போக வேண்டிய விஷயங்களை கடனாக்கிடாதீங்க. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு. பாய் மேடம்.”என்றுவிட்டு அந்த வாலிபரும் கிளம்பிட சமுத்ராவுக்கு அந்த நபர் தன் பிரச்சினைக்கு தீர்வு தந்திருக்கிறாறென்ற உண்மை புரிந்தது.

அங்கிருந்து நகர்ந்து சென்ற அந்த வாலிபரை பார்த்த சமுத்ராவிற்கு அந்த வாலிபர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உண்டானது. அன்று தொடங்கிய நட்பு இதோ இன்று வரை சுயவிவரம் கூட அறியாது தொடர்கிறது.

“மேடம் அந்த வானத்தோட நீளம் அகலம் ஒவ்வொருத்தரோட கண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரில?”என்று சமுத்ராவை பார்த்து கேட்க அந்த வாலிபர் கேட்க அவளோ புரியாது பார்த்தாள்.

“வானத்தோட எல்லை நாம குழந்தையாக இருக்கும் போது நம்ம தலைக்கு மேல. வளர்ந்த பிறகு அறிவியலோட கணக்கு. பறவைக்கு அதோட கடைசி இலக்கு இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல். ஆனா நாம புரிஞ்சிக்காத ஒரே விஷயம் அந்த வானத்தை தவிர யாருக்குமே அதோட எல்லை தெரியாது. அந்த நிதர்சனம் இங்க பலபேருக்கு புரியிறதில்லை. நம்ம வாழ்க்கைக்கு நாம போடுற எல்லை தான் நம்மள ஒரே வட்டத்துக்குள்ள சுத்தவைக்கிதே தவிர வேற யாரோட பங்களிப்பும் இல்லை. நம்ம போட்ட கோடு கொஞ்சம் எல்லை தாண்டி போயிடுச்சுனாலும் ஒன்னு அழிச்சிட்டு எல்லையை குறைச்சிக்கிறோம். இல்லையா எல்லையே வேணாம்னு மொத்தமா அழிச்சிடுறோம். ஆனா மறுபடியும் அதையே எல்லையை போடுறதுக்கான மனசும் எப்படி எல்லையை தாண்டுனோம்ங்கிறதுக்கான தேடலும் எப்பவும் நமக்கு இருந்ததில்லை. பார்த்தீங்களா இப்போ கூட அந்த எல்லை இல்லாமல் தான் நானும் ஏதேதோ பேசிட்டு இருக்கேன். சரி மேடம் நான் கிளம்புறேன்.” என்றபடி எப்போதும் போல் அவர் கிளம்பிட சமுத்ரா தான் எப்போதும் போல் அதிசயித்து போனாள்.

எப்போதும் போல இன்றும் தன் மனம் ஸ்தம்பித்து நிற்கும் போது சம்பந்தமே இல்லாமல் பேசி தன் மனம் வேண்டிய தெளிவை கொடுத்துவிட்டு செல்லும் அந்த பெயர் தெரியாத நபரின் செயலை அவள் மனம் பாராட்ட மறக்கவில்லை.

செல்லும் அந்த வாலிபனையே பார்த்திருந்தவளின் இதழ்களில் புன்னகை தவழ சற்று நேரம் கடல் மண்ணிலேயே அமர்ந்திருந்தவள் கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.

சமுத்ரா வீட்டிற்கு வந்தபோது அனைவரும் வீட்டிலேயே இருந்தனர்.

அமராவதி ஊர்த்திருவிழாவிற்கு போவதை பற்றி சொல்ல சமுத்திரா அதற்கான ஏற்பாடுகளை தன் அன்னை மற்றும் அத்தையின் பொறுப்பில் விட்டு விட்டாள்.

இரவு உணவிற்கு பின் தன் அறையிலிருந்து ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த சமுத்ராவின் அறைக்கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் சமுத்ரா.

வெளியே அமராவதி முகம் முழுக்க வியர்வையுடன் நெஞ்சை பிடித்தபடி மூச்சு வாங்கிக்கொண்டிருக்க அவர் நின்ற கோலம் கண்டு சமுத்ராவிற்கு ஒரு நொடி ஆட்டம் கண்டது.

விரைந்து தன் அன்னையை தாங்கிக்கொண்டவள் அவரை கைத்தாங்கலாய் அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்து மெதுவாக விசாரிக்க அவரால் எதுவும் பேசமுடியவில்லை. 

நிலைமை உணர்ந்து சமுத்ரா அடுத்த நடவடிக்கையை செய்து முடிக்கும் முன்னே அமராவதியின் தலை தொங்கிட சமுத்ராவின் அலறல் அந்த தெரு முழுவதையும் நிறைத்தது.

சட்டென்று தூக்கத்திலிருந்து எழுந்த அமராவதிக்கு இப்போ நிஜமாகவே மூச்சு வாங்கியது. சற்று நிதானித்தவருக்கு அப்போது தான் இத்தனை நேரம் தான் கண்டதனைத்தும் கனவென்று புரிந்தது.

அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்தவர் ஒரே மடக்கில் மொத்த போத்தலையும் குடித்து முடித்தார்.

தன்னை சற்று நிதானிப்படுத்திக்கொண்டவரின் மனம் அடுத்து செய்யவேண்டிய அனைத்தையும் கணக்கு போட்டு முடித்தது.

மனம் அதே யோசனையில் மூழ்கிட அப்படியே விடிந்தது. அதற்கு பின் உறங்குவது சரிப்படாது என்று எண்ணியவர் தன் வேலைகளை கவனிக்க சென்றார்.

சிறியவர்கள் காலேஜிற்கு கிளம்பியதும் சமுத்ராவை கோவிலுக்கு அழைத்தார் அமராவதி. அன்றொரு முக்கியமான மீட்டிங் இருக்க

“அம்மா முக்கியமான மீட்டிங் இருக்கு. சாயந்திரம் போகலாம்”என்று கூற 

“மாமா ஏதோ முக்கியமான விஷயமாக பேசனும்னு ஊருக்கு வரச்சொன்னாரு. நான் ஊருக்கு போறதுக்கு இன்னைக்கு நைட்டு பஸ் புக் பண்ணிடுமா”என்று அமராவதி கூற சமுத்ராவோ

“ஏன் திடீர்னு அவசரமா? ஏதாவது முக்கியமான விஷயமா?”என்று சமுத்ரா விசாரிக்க

“தெரியல. மாமா நேர்ல பேசுனாத்தான் சரிப்படும்னு சொன்னாரு. போய் பார்த்து பேசிட்டு வந்திடுறேன்.”என்று அமராவதி தான் அவசியமென்று நினைத்த விபரத்தை மற்றும் தகவலாக கூற சமுத்ராவும் அதற்கு பின் எதுவும் கேட்கவில்லை.

“சரி நான் டிக்கெட் ரிசவ் பண்ணிடுறேன். நீங்க சாயந்திரம் ரெடியாக இருங்க.”என்று கூறியவள் அலுவலகம் கிளம்பினாள்.

சமுத்ரா கிளம்பியதும் மாலதி

“ஏன் அண்ணி இவ்வளவு அவசரப்படுறீங்க? கொஞ்சம் பொறுமையாக எந்த முடிவையும் எடுக்கலாம் அண்ணி.” என்று மாலதி கூற அமராவதியோ எதையும் கேட்கும் முடிவில் இல்லை.

“என்னை இந்த விஷயத்துல தடுக்காத மாலதி. சீக்கிரம் நம்ம சமுத்ரா வாழ்க்கைக்கு தேவையானதை செய்தா தான் நான் நிம்மதியாக கண்ணை மூட முடியும்.”என்று முதல் நாள் கனவின் தாக்கத்தில் அமராவதி பேச

“என்ன அண்ணி நீங்க?”என்றவருக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.

அமராவதி இந்திராணிக்கு அழைத்து தான் வரும் விஷயத்தை சொல்ல

“நான் ஷாத்விக்க ஸ்டாண்டுக்கு அனுப்பிவைக்கிறேன் அண்ணி.” என்று அழைப்பை துண்டிக்கப்போனவரிடம்

“அண்ணி ஒரு நல்ல விஷயத்தோட வரேன்‌. நான் வர்ற காரியம் நல்லபடியாக முடியனும்னு குலதெய்வத்துக்கு ஒரு காணிக்கை முடிஞ்சு வைங்க அண்ணி.” என்று அமராவதி கூற இது தான் காரணம் என்று அறியாத போதிலும் அதை செய்வதாக சொன்னவர் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் முதல் வேலையாக குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்துவைத்தார்‌.

வெள்ளைத்துணியை மஞ்சளில் நனைத்து அதனுள் ஒரு ரூபாய் குற்றியை முடிந்து சுவாமி படத்தின் முன் வைத்தவர் அமராவதி வரும் காரியம் சித்தியடைய வேண்டுமென்ற வேண்டுதலையும் வைத்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

 முடியப்பட்ட காணிக்கையும் அமராவதியின் முடிவும் என்ன முடிவை கொடுக்கும்?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்