Loading

        பரபரவென இயந்திரமாய் அவள் கைகள் வேலை செய்ததற்கு முரணாய் மனம் சோர்ந்து ஆயாசமாக இருந்தது. அவனை எத்துணை தூரம் விலக்க நினைத்தாலும் அதிரனும் சூழலும் அவனை அத்துணை நெருங்கி அழைத்து வந்துவிடுகின்றனர். இவ்வாறு எண்ணமிட்டவளின் மனசாட்சி “ஏன் நீ அவனை நினைக்கலயா?” எனும் அதிமுக்கிய கேள்வி எழுப்பி அவளை அதிரச் செய்தது. கைகளோடு மனதும் வேலை நிறுத்தம் செய்ய மூளை அடுக்குகளிலிருந்த அவன் நினைவு மட்டும் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. அவன் நினைவுகளால் சுறுசுறுப்பான மூளையினால் சிலையாகிப் போனவளை வீட்டின் அழைப்பு மணி நில்லாமல் ஓங்கி ஒலித்து தன்னுணர்வு அடையச் செய்ய, திடுக்கிட்டு தலை சிலுப்பி அவன் நினைவுகளை தூக்கியெறிய முயன்றாள். அழைப்பு மணி மீண்டும் ஒலிக்க, முந்தாணையை இழுத்து இடையில் சொருகிய வண்ணம் யார் இவ்வளவு காலை வேளையில் வந்திருப்பதென்ற யோசனையுடன் சென்று கதவை திறந்தவளுக்கு புன்னகை முகமாய் கதிரவன் காட்சியளித்ததைக் கண்டு சிலையென சமைந்தாள்.

 

     இத்துணை நேரம் அவன் நினைவுகளில் உழன்றதால் தோன்றும் காட்சிப்பிழையோ என்று தோன்றிட, கண் மூடி மீண்டும் திறந்து பார்க்க, மீண்டும் அவனின் புன்னகை முகமே கண்களுக்கு புலப்படவும் மெல்ல முகமெங்கும் கோப அரிதாரம் பூசத் தொடங்கினாள். 

 

     “என்ன அழகி மா! உள்ள வேலையா இருந்தாலும் பத்து நிமிஷமா பெல் அடிக்கிறது கூடவா காதுல விழாது.”, கதிரவனின் பேச்சில் மெல்லிய அதிர்வு ரேகை அவள் முகத்தில் தோன்றி மறைந்ததை கவனித்த கதிரவன் “என்ன ஷாக் ரியாக்ஷன் குடுக்குறா?….. ஒருவேளை…… ஆஹா! ஷாக்காகுறத பார்த்தா மாமா நினைப்புல தான் கதவை திறக்க லேட்டாச்சு போலயே செல்லம்!”, கச்சிதமாய் கணித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

     “என்ன பத்து நிமிஷமா பெல் அடிக்கிறானா? அதுக்கூட தெரியாமயா டி அவன் நினைப்புல இருந்த?”, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட அழகி, “என்ன விஷயம்? இவ்வளோ காலையில வந்திருக்க?”, இறுக்கமாகக் கேட்டாள்.

 

     “ஆமா வெல்லக்கட்டி எழுந்துட்டானா?”, உள்ளே எட்டி பார்த்தவாறு கேட்டான்.

 

    “நான் என்ன கேட்டா நீ என்ன கேக்குற?”, சூடாகக் கேட்டாள்.

 

     “ப்ச் வெல்லக்கட்டி எழுந்துட்டானா இல்லயா?”

 

      “இல்லை. தூங்குறான். நீ எதுக்கு இப்ப அவன கேக்குற?”

 

       “ரொம்ப நல்லது. சரி தள்ளு உன்கிட்ட பேசறதுக்குலாம் டைம் இல்ல. வெல்லக்கட்டி எழறதுக்குள்ள போகணும்.”, பாதையை மறித்து நின்றவளை இடித்து தள்ளிக் கொண்டு அவன்பாட்டுக்கு வீட்டினுள் நுழைந்தான்.

 

     அவன் இடித்ததில் கைமூட்டை கதவில் இடித்துக் கொண்டு வலியில் முகம் சுருக்கிய அகவழகி அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை இனிமேலும் முடியாது என்று முகத்தில் தேக்கி பல்லைக் கடித்துக் கொண்டு கதவை அறைந்துச் சாற்றி விட்டு உள்ளே சென்றாள்.

 

     ஆத்திரத்தோடு உள்ளே வந்து பேச எத்தனித்தவளை “ஷ்ஷ்”, என உதட்டில் கைவைத்து பேசாதே என எச்சரித்த கதிரவன் உறங்கிக் கொண்டிருந்த அதிரனை சுட்டிக் காட்டவும் ஒன்றும் பேசவியலாது அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். பிரண்டு படுக்கையில் தூக்கக் கலக்கத்தில் தெளிவில்லாது தெரிந்த கதிரவனின் முகம் கண்டு நன்றாக கண்விழித்த அதிரன்,

 

      “ஹை ஹீரோ!”, குதூகலமாய் எழுந்து முழுதாய் கலையாத உறக்கத்தில் தள்ளாடி மெத்தையிலிருந்து கதிரவன் மீது தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டு பட்டு இதழ்களால் கதிரவனின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

 

     “சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே! லவ் யூ ஹீரோ!”, விழி உருட்டி இதழ் பிரித்து அழகாய் புன்னகைத்த அதி குட்டி மீண்டும் கதிரவனை முத்தமிட்டான்.

 

     “லவ் யூ வெல்லக்கட்டி!”, அதிரனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட கதிரவன், ஒரு கையால் அவனை பற்றிக் கொண்டு மறுக்கையால் கலைந்திருந்த அவன் சிகையை சரி செய்த வண்ணம், “என் வெல்லக்கட்டி கேட்டு நான் செய்யாம இருப்பேனா?! அதான் வந்துட்டேன்.”, புன்னகைத்தான்.

 

     “ஆமா வெல்லக்கட்டி நல்லா தூங்குனீங்களா?”

 

    “ம்ம் நல்லா தூங்கினேன்.”, விழி உருட்டி தலையாட்டி சிரித்த அதிரனை “ம்ம் குட் பாய்!” என கன்னம் கிள்ளி கொஞ்சினான் கதிரவன்.

 

      தினமும் எழுந்ததும் அழகி என்று குரல் கொடுக்கும் அதிரன் தன்னை இன்று மறந்தானோ? என்று அதிர்ந்திருந்த அகவழகிக்கு தான் ஒருத்தி அங்கு குத்துக் கல்லாய் நின்றிருப்பதையே கண்டு கொள்ளாத இருவரின் ஒதுக்கமும் அதிர்வின் மேல் அதிர்வாய் நெஞ்சத்தில் இறங்கியது. ஆனால் அதில் ஒரே ஆறுதல் அதிரனின் கண்களில் மிளிர்ந்த அச்சம் இப்பொழுது முழுதும் தொலைந்திருந்தது தான். உள்ளே வலித்தாலும் அந்த ஒற்றை காரணத்திற்காக வந்த தடம் தெரியாது திரும்ப இருந்தவளை கதிரவனின் குரல் நிற்க வைத்தது.

 

      “அழகி மா! நானும் வெல்லக்கட்டியும் ப்ரஷ் பண்ணிட்டு வரோம். எங்க ரெண்டு பேருக்கும் சூடா காபி எடுத்துட்டு வா!”

 

      அவனின் பேச்சில் உடல் விரைக்க நின்றவள் திரும்பியும் பாராது தலையை மட்டும் அசைத்தாள்.

 

     “அழகி! எனக்கு சக்கரை நிறைய போட்டு கொண்டு வா!”, அதிரன் கூறவும் விழிவிட்டு கீழிறங்க முயன்ற உவர்நீரை உள்ளிழுத்துக் கொண்டு திரும்பியவள், “சரி தங்கம்.” உணர்வற்ற முகமாய் கூறினாலும் அவள் கண்கள் ஏக்கமாய் அதிரனை வருடின. தன்னை நிமிர்ந்தும் பாராது அதிரனின் சிகையை கோதிக் கொண்டிருந்தவனின் மீது கோபக் கனல் வீசியவள் பட்டென்று திரும்பி அங்கிருந்து அகன்றாள்.

 

     அவள் காபி கோப்பைகளோடு வந்தபோது இருவரும் கூடத்தில் அதிரனின் பொம்மைகளை வைத்து விளையாடியபடி அமர்ந்திருந்தனர். 

 

      “ஹை காபி வந்துருச்சு.”, இருவரும் ஒருசேர கூறி சிரிக்க, அகவழகி அமைதியாய் இருவருக்கான காபி கோப்பைகளை எடுத்துக் கொடுத்தாள். மீண்டும் அடுக்களைக்கு திரும்ப இருந்தவளை “அழகி! ஒரு நிமிஷம்.” என நிறுத்தினான் கதிரவன்.

 

      உணர்வற்ற பார்வை பார்த்தவளை கண்டு உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவன், “வெல்லக்கட்டிக்கு லன்ச் கட்ட வேண்டாம். நாங்க வெளிய போறோம்.”, என்றிட, நெரித்த புருவத்தோடு அவனை ஏறிட்டாள்.

      

    “அவன் பர்த் டே முடியுற வரைக்கும் உடம்பு சரியில்லனு அவன் ஸ்கூல்ல லீவ் சொல்லிட்டேன்.”

 

      “யாரை கேட்…”, கோபமாய் ஏதோ கூற வந்தவளை கையுர்த்தி, “வெல்லக்கட்டி! நான் எடுத்து குடுத்த புது ட்ரெஸ்ஸ போட்டுட்டு வா பிட் கரக்ட்டா இருக்கானு செக் பண்ணுவோம்.”, என்றிட, 

      

    “ஹை! இப்பவே போட்டுட்டு வரேன்.”, என குதுகலமாய் எழுந்தோடிய அதிரனை அகவழகியின் கண்கள் ஏக்கமாய் தொட்டு மீண்டது. 

    

     அதிரன் உள்ளே சென்றதை உறுதி செய்த கதிரவன், “நிரஞ்சன் நேத்து நடந்தத சொன்னான்.” என்று அவளை அழுத்தமாக பார்த்தான்.

      

     “அது..”, தடுமாறியவளை “என்ன ஏதுனு நீ விளக்க வேண்டாம். லீவ்க்கு மெடிக்கல் சர்ட்டிபிக்கேட் வாங்கிக்கலாம். இன்னைக்கு நானும் அதியும் வெளிய போறோம். சோ சீக்கிரம் எங்களுக்கு டிபன் ரெடி பண்ணிடு. நான் குளிச்சுட்டு வரேன்.” என இடைவெட்டி அவள் பேச அவகாசம் தராது மகிழுந்தில் வைத்திருந்த மாற்று உடையை எடுக்கச் சென்றான்.

 

     அவன் மேலெழுந்த ஆத்திரமெல்லாம் இயலாமையாய் மாறி அவளின் அகம் அழுத்தியது. எத்துணை அழுத்தம் அடிநெஞ்சம் வரை இறங்கி நசுக்கினாலும் அதிரனின் அச்சம் எப்படியேனும் சரியாகிடாதா? என்னும் ஏக்கம் அவளின் உணர்வுகளையும் கைகளையும் கட்ட, ஆழ மூச்செடுத்து உணவு தயார் செய்ய சென்றாள்.

 

      இரண்டு ஆண்டுகளாய் அதிரனின் அச்சம் போக்க எவ்வளவு முயன்றும் முடியாதவள் தன்னால் முடியாதது அவனாலாவது முடியட்டுமென்ற எண்ணத்தில் தன் உணர்வுகளை தூர தள்ளினாள்‌. ஏனெனில் கருப்பு நிற மகிழுந்தை காணும் ஒவ்வொரு முறையும் அச்சத்தில் மருகி குறுகிப் போகும் அதிரனை அவளால் காண இயலாது. மூன்று நான்கு நாட்கள் வரை அவனை இயல் நிலைக்கு அழைத்து வர தன் மனதோடும் அதிரனின் அச்சத்தோடும் போராட்டாமே நடத்துவாள். அதன்பின் தான் அவன் சற்று இயல் நிலைக்கு திரும்புவான். அவனின் இந்நிலைக்கு நிரந்தர தீர்வு கிட்டாதா? என்கிற ஆசை தான் கதிரவனோடு அதிரன் செல்ல தடையிட முடியாமல் தடுக்கிறது. அவ்வாசை மட்டும் குறுக்கே நிற்கவில்லையெனில் தன்னை கேளாது அதிரனின் விடயத்தில் முடிவெடுக்கும் உரிமையை அவனுக்கு யார் தந்ததென கதிரவனோடு மல்லுக்கு நின்றிருப்பாள்.

 

      அதிரனும் கதிரவனும் தயாராகி வந்தபோது உணவும் தயாராக இருக்க, இருவரும் உண்ண அமர்ந்தனர். இருவருக்கும் சுடச்சுட இட்லியும் மல்லி துவையலும் சாம்பாரும் பரிமாறிய அகவழகி அதிரனுக்கு ஊட்ட வர,

 

      “அழகி! இன்னைக்கு ஹீரோ ஊட்டி சாப்பிடட்டுமா?”, என்று அதிரன் கெஞ்சலாய் கேட்கவும் ஒரு கணம் திடுக்கிட்டு அவனை பார்த்தவள் பின் தலையசைத்து எடுத்த கவளத்தை தட்டில் வைத்துவிட்டு கதிரவனை பார்த்தாள்.

 

      கதிரவன் அதிரனின் தட்டை எடுத்து, “வெல்லக்கட்டிக்கு நான் ஊட்டணுமா?! அப்ப நமக்குள்ள ஒரு டீல்.”, என்றிட, “என்ன டீல்?”, என கேட்டான் அதிரன்.

      

      “உன் பர்த் டே வரைக்கும் டெய்லி இதே மாதிரி நான் காலைல வருவேன். உன்னை என் கூட ஒரு இடத்துக்கு கூப்பிட்டு போவேன். எங்க? எதுக்கு? னு அதி கேக்க கூடாது. சமத்து பையனா என்கூட வரனும் ஓகே வா.”

 

      “ஹை! டெய்லி வீட்டுக்கு வருவீங்களா? ஓகே டீல்.”, என விழி விரித்து சிரித்து கட்டை விரலை உயர்த்திய அதிரனை கண்டு சிரித்த கதிரவனும் கட்டை விரலை உயர்த்தி, “சரி இப்ப சாப்பிடுவோமா?”, என இட்லியை ஊட்ட, அதிரன் சமத்தாய் அவன் ஊட்டிய மூன்று இட்லிகளையும் உண்டான்.

 

      அகவழகிக்கு அன்று அதிர்ச்சி தரவே அந்த நாள் வந்தது போலும். அதிரனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள். யார் உணவு ஊட்டினாலும் வேண்டாம் என்று மறுப்பவன் இன்று அமைதியாய் உண்ணுவது அவளின் நெஞ்சத்தில் சுருக்கென தைத்தது. கவிக்கு உணவு கொடுக்கும் போது மிருதுளா ஊட்டினால் கூட உண்ணாதவன் கதிரவன் கையால் உண்பது மேலும் அதிர்ச்சி தந்தது. கதிரவனிடம் நெருங்கும் அதிரன் அகவழகியை திகைக்கச் செய்தான். முதன் முறையாக தன் வைராக்கியம் தகர்த்தெறியப்படுமோ என்கிற பயம் அவள் உள்ளத்தில் உதயமாகியது.

 

      சிந்தனையில் மூழ்கியிருந்தவளை “அழகி! டாட்டா அழகி! நீ ஈவ்னிங் வீட்டுக்கு வர்றதுக்குள்ள நான் வந்து சமத்தா ஸ்நாக்ஸ் சாப்பிட்ருவேன். நான் ஹீரோ கூட போகட்டுமா?”, என்ற அதிரனின் குரல் கலைக்க, கதிரவனை உணர்வற்ற பார்வை பார்த்தவள் அதிரனை பார்த்துப் புன்னகைத்தாள்.

 

     “ஓகே அதி குட்டி! சமத்தா போய்ட்டு வரணும். கதிருக்கு எந்த தொந்தரவும் தரக் கூடாது சரியா? டைம்க்கு சாப்பிடணும். நிறைய தண்ணி குடிக்கணும் சரியா?”, என்று கேட்டிட,

     

     “ம்ம் சரி அழகி ம்மா! அதி குட் பாயா இருப்பேன். ஹீரோவுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன்.”, என்று சிரத்தையாய் கூறி புன்னகைத்த அதிரனின் கன்னத்தில் குனிந்து முத்தம் வைத்தாள். 

     

    அதிரனும் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து, “நீயும் ஒழுங்கா சாப்பிடு அழகி! அதி ஆல்வேஸ் லவ் அழகி!”, என்ற ஒற்றை வரியில் அழகியின் உள்ளத்திற்கு மருந்திட்டிருந்தான். அதிரனின் வார்த்தைகளில் நெகிழ்ந்த அகவழகிக்கு விழிகளில் நீர் கசிந்தது.

     

       அதிரனை அணைத்து விடுவித்து முத்தமிட்டு “அதி பசி தாங்க மாட்டான். அப்பப்ப சாப்பிட எதாவது குடு. பத்திரமா பார்த்துக்கோ கதிர்.”, குரல் கமறக் கூறினாள்.

 

       பல நாட்களுக்கு பின் தன்னிடம் அமைதியாய் உணர்வுக்குவியலாய் பேசும் அகவழகியை கண்ட கதிருக்கு அவளை அணைத்து ஆறுதல் கூற மனம் உந்தினாலும் “நான் பார்த்துக்குறேன் அழகி மா! நீ கவலைப்படாம உன் வேலைய பாரு. நாங்க வரோம். வெல்லக்கட்டி போலாமா?”, அதியின் புறம் திரும்பிட, அதிரன் தன் பையை தோளில் மாட்டிக் கொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டு “பை அழகி!” என்று கையசைக்க, அழகியும் கொடைக்கானல் வந்த நாளிலிருந்து முதன்முறை அதிரனை தனியே அனுப்பும் பிரிவின் வலியோடு கையசைத்தாள்.

 

      கதிரவன் அழகியை பார்க்க, அழகியும் அவனை பார்த்தாள். அவன் பார்வையில் இருந்த ஆறுதலை ஏற்க அவள் வைராக்கியம் தடுக்க, பார்வையை எங்கோ திருப்பினாள். 

      

     “இந்த அழுத்தம் எவ்வளோ நாளைக்குனு நானும் பார்க்கிறேன் டி!” என்று மனதுள் அவளிடம் பேசி விழியெடுக்காது அவளையே பார்த்தவன் அவள் மீண்டும் திரும்பி அவனை பார்த்தபொழுது அசட்டையாய் திரும்பி நடக்க, அவனின் பாராமுகம் முதன்முறை அவளுள் ஏமாற்றத்தை விதைத்துச் சென்றது. 

 

      இருவரும் கிளம்பி சென்றதும் எதுவுமே செய்யத் தோன்றாது ஏதேதோ சிந்தனையில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவளின் நெஞ்சம் குழப்பத்தின் பிடியில் சிக்கித் திணறியது. நிரஞ்சனிடமிருந்து வந்த அழைப்பு அவளின் எண்ணங்களை புறந்தள்ளவும் வேகமாக பணிக்கு கிளம்பிச் சென்றாள்.

      

     பணியிலும் அதிரனை எண்ணி முழு கவனம் செலுத்த முடியாது திணறினாள். நிரஞ்சன் அவளின் தடுமாற்றத்தை கவனித்தாலும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. மாலை வீடு திரும்பியபொழுது நெய்யின் மணம் அவள் நாசி நிறைத்து வரவேற்றது.

 

      “சீக்கிரம் சீக்கிரம் ஹீரோ! பார்க்கும்போதே எச்சில் ஊறுது.”, என அதிரன் பரபரத்துக் கொண்டிருந்தான்.

 

     “இருடா நல்லா வேகணும்ல.”, என கதிர் புன்னகைத்து பணியாரச் சட்டியில் நெய்யில் குதித்துக் கொண்டிருந்த பணியாரங்களை திருப்பிப் போட்டான். 

 

     “என்ன செய்றீங்க?”, அழகியின் குரல் கேட்டும் கதிரவன் திரும்பவில்லை.

 

     “வா அழகி நீயும் வா! ஹீரோ நெய் பணியாரம் செய்றாரு. ரிப்பெரஷ்ஷாகிட்டு வா நாம சாப்பிடலாம்.”, அழைத்த அதிரன் மீண்டும் குழிப்பணியாரச் சட்டியின் புறம் ஆவல் பொங்க திரும்பினான்.

 

     பெருமூச்செறிந்த அழகி இருவரையும் ஒருமுறை பார்த்திருந்துவிட்டு கைக்கால் கழுவி வர, கதிரவன் அதிரனிடம் அழகிக்கு தரச் சொல்லி நான்கு பணியாரங்கள் நிறைந்த தட்டினை தந்தான். தன்னை நிமிர்ந்தும் பாராத கதிரவனை ஆழமாக ஊடுருவினாள். ஆனால் அவன் தன்னை பார்ப்பான் என்று நம்பிய அழகிக்கு ஏமாற்றமளித்து பணியாரமே கண்ணாய் உண்டு கொண்டிருந்த கதிரவனை கண்டதும் அவளுக்கு புசுபுசுவென கோபம் மண்டியது.

 

      அமைதியாய் அதிரனிமிருந்து தட்டை வாங்கியவள் அவர்களை பார்த்த வண்ணம் அமர்ந்தாள். “பணியாரத்த இவரு தந்தா குறைஞ்சு போய்டுவாராமா? ஆளப்பாரு இவரு சமைச்சு குடுத்தா நாங்க சாப்பிடணுமா?” என மனதில் எண்ணமிட்டாலும் நெய்யின் மணம் அவளை கட்டியிழுக்க ஒரு பணியாரத்தை எடுத்துச் சுவைத்தவளை அச்சுவை இழுத்துக் கொண்டது. அவன் இவ்வளவு நன்றாக சமைப்பானா? என்ற ஆச்சர்யம் அவனை பார்த்த அவள் விழிகளில் வழிந்தது. அதன்பின் அனைத்து பணியாரத்தையும் அமைதியாய் உண்டவள் காலி தட்டுகளை எடுத்துக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுக்களைக்குச் செல்ல, கதிரவனும் அவளைத் தொடர்ந்தான்‌.

 

      “அழகி! நான் கிளம்பறேன். காலைல வரேன்.”

 

      “ம்ம்.”, அவ்வளவே அவள் பதிலாக இருக்க, அவளை ஆழ்ந்து நோக்க, அவளும் அவனை நோக்கினாள். ஒருகட்டத்தில் அவனின் விழிபேசிய மொழிக்கு பதில் கூறவியலாது விழித் திருப்ப, “அழுத்தக்காரி டி நீ.” என அவள் காதுபட முணுமுணுத்து அங்கிருந்து கிளம்பினான்.

 

      அவன் சென்றதும் விழி மூடி ஆழ மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள் இரவு உணவுக்கான வேலைகளில் மூழ்கினாள்.

 

      அதன்பின் வந்த நாட்களில் காலை அதிரனை அழைத்துச் செல்ல வரும் கதிர், அவளிடம் பாராமுகம் காட்டினான். அவளோடு அவன் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அதிரனை பற்றியதாக மட்டுமே இருக்க, தன்னை எப்பொழுதும் வம்பிழுத்து கோபமூட்டும் அவன் பேச்சு தொலைந்திருந்ததை எண்ணி அவளுள் ஏமாற்றம் முளைவிட துவங்கினாலும் அதனை வெளிக்காட்டாது அவன் கேட்பவற்றிற்கு மட்டும் பதில் கூறினாள். அவளை வருத்திய ஒரே விடயம் அதிரன் தன்னை விட கதிரவனோடு அதிகம் பேசியதும் பொழுது கழித்ததும் தான். ஆனால் அவனோடு இருக்கும் வேளைகளில் அதிரனின் முகத்தில் வழியும் மகிழ்வும் இதழ் விட்டு பிரியாத சிரிப்பும் அவ்வருத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வைக்கவில்லை. வலியெல்லாம் தனக்குள் இருந்தாலும் அதிரனின் சிரிப்பிற்காக எதுவும் செய்யலாம் என்றே எண்ணம் கொண்டாள். நாட்கள் இவ்வாறு நகர, அதிரனிடமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பழைய உற்சாகமும் குதூகலமும் குறும்புத் தனமும் மெல்ல திரும்புவதை கண்ணுற முடிந்தது. அவனின் மாற்றம் அகவழகிக்கு எத்துணை இன்பம் நல்கியதோ அதை விட இருமடங்கு இன்பம் கொண்டான் கதிரவன்.

 

     அதிரனின் பிறந்தநாளிற்கு முதல் நாள், மாலை எஸ்டேட்டை விட்டு கிளம்பும்பொழுது அகவழகிக்கு அழைத்த கதிரவன் ஓரிடத்தைக் கூறி அவளை அங்கு வரச் சொன்னான். அகவழகியும் அங்கு ஏன் வரச் சொல்கிறான் என்ற கேள்வியோடு அவன் கூறிய இடத்தை அடைந்தாள். தன் வண்டியை நிறுத்தி கதிரவனுக்கு அழைத்துக் கொண்டே திரும்பியவளின் முகத்தில் திகைப்பு படர, இதயம் படபடவென வேகமாகத் துடித்தது. 

தொடரும்…

      

 

 

     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்