5 – காற்றிலாடும் காதல்கள்
“எப்புடி கண்ணு இருக்கு நம்ம ஊரு சமையலும் ருசியும்?” விஸ்வநாதன் அவள் இரசித்து உண்ணுவதைப் பார்த்துக் கேட்டார்.
“தாத்தா.. சான்ஸ்சே இல்ல.. இப்படி ஒரு டேஸ்டி ஃபுட் இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல. வழக்கமா சிக்கன் எடுத்தா அம்மா இட்லி தான் செய்வாங்க. ஆனா இந்த ராகி களியோட சிக்கன் வேற லெவல் டேஸ்ட்.. இந்த கிரேவி எப்படி செய்யறது எனக்கும் சொல்லி கொடுக்க சொல்லுங்க தாத்தா. இந்த வறுவல் நான் இப்பதான் மொத தடவ சாப்பிடறேன். இதுவும் சூப்பர்.. ‘தி பெஸ்ட் ஃபுட்’” என இன்னும் ஒரு களியுருண்டை வாங்கி கோழி குழம்பில் பிரட்டிச் சாப்பிட்டாள்.
“ஏ புள்ள இருளாயி கேட்டியா? உன் கைபக்குவம் புள்ளைக்கும் பிடிச்சி போச்சி. அவளுக்கு நம்ம ஊரு சமையலெல்லாம் சொல்லி குடு. பயந்து பொலம்பிக்கிட்டே கெடந்த. நான் சொன்னேன்ல. என் பேத்தி என்னைய மாதிரி தான்” எனக் கூறியபடி வெள்ளைச்சாமி தாத்தா அங்கே வந்தார்.
“நான் பட்டணத்து சமையல் தானே தெரியாதுன்னு சொன்னேன். புள்ளைக்கு நான் ஆக்கி போட்டு புடிக்கலன்னா என்ன செய்யறதுன்னு வெசனம் தான். எனக்கு பட்டணத்து சமையல் ஒண்ணுமே தெரியாது. நம்ம கிராமத்து சமையலு அத்தனையும் அத்துபடி தான்.” என இருளாயி முகத்தில் லேசாக வெட்கம் படரக் கூறினார்.
“இங்க பாருங்க அக்கா.. உங்க சமையல் வேற லெவல்.. உங்களுக்கு சவாலே எனக்கு நீங்க சமையல் சொல்லி குடுக்கறது தான். நான் ஊருக்கு போறதுக்கு முன்ன எனக்கு நீங்க உங்களுக்கு தெரிஞ்ச எல்லா டிஷ்ஷும் சொல்லி தரணும் சரியா?” எனக் கண்கள் மின்னக் கேட்டாள்.
“ரெண்டு நாலு பக்கத்துல நின்னு பாத்தாலே போதும் கண்ணு மனசுல பதிஞ்சிடும். நான் சொல்லி தாரேன்..” என இருளாயி கூறிவிட்டு, இன்று செய்தக் குழம்பினைப் பற்றி அவளுக்குப் பொருட்களைக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார்.
வெள்ளைச்சாமி அவள் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து மனதிற்குள் பெருமூச்சு விட்டபடித் தலையைக் குனிந்துக் கொண்டார்.
“விடு வெள்ளையா.. போக போக எல்லாம் மாறும். அதுக்கான முதல் வெளிச்சம் இதான்.” என அவளின் ஈடுபாட்டைச் சுட்டிக் காட்டினார்.
“நீ சொல்றமாதிரி நடந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் டா விஸ்வநாதா.. சரி கல்யாண வேலை எல்லாம் எந்த அளவுல இருக்கு? தென்னம்பூவ எண்ணிக்கி குடுத்து விடணும்ன்னு சொல்லு நான் விடிகாலைல நல்ல நேரத்துல எடுத்து வைக்கறேன்.” என அடுத்தப் பேச்சிற்குச் சென்றார்.
“விசாலத்த தான் கேக்கணும். கேட்டுட்டு சொல்லிவிடறேன். சரி புள்ளையவும் கடைகன்னிக்கு அனுப்பி கல்யாணத்துக்கு பொடவை எடுக்க சொல்லு. இன்னும் பத்து நாள்ல கல்யாணம். நகை நம்ம ஆசாரிகிட்ட சொல்லிடலாம். அவர வீட்டுக்கு நாளைக்கு வர சொல்லிருக்கு. அப்ப நீயும் புள்ளையோட வா. புள்ளைக்கு புடிச்சமாதிரி செய்ய சொல்லிடுவோம்.” எனக் கூறினார்.
“இன்னிக்கி புள்ளைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் பரிட்சயம் செஞ்சி வைக்கறேன். கயல்விழி கூட இருந்தா கொஞ்சம் நேரம் போகும். அப்பறம் நம்ம கீதனோடவும் பழகட்டும்.” எனக் கூற விஸ்வநாதன் சிரித்தார்.
“செலவில்லாம என் வீட்டுக்கு புள்ளைய அனுப்ப பாக்கறியாடா? நான் நோட்டுல எழுதி வச்சி சீர் கேப்பேன் பாத்துக்க” எனக் கூறவும் வெள்ளைச்சாமி, “இன்னிக்கி என் பேர்ல இருக்கற அத்தனையும் அவளுக்கு தான்.. நானும் தான்..”
“நீ மட்டும் எனக்கு போதும் உன் நெலத்த எவன் காபந்து பண்ணி நிர்வாகம் பண்ணறது?” என விஸ்வநாதன் கூறும்போதும் இந்திரன் அங்கே வந்தான்.
“நான் எதுக்கு இருக்கேன். இன்னிக்கே கூட என் பேர்ல எழுதுங்க நான் காபந்து பண்ணிக்கறேன். இந்த தோப்புல நான் வேல பாக்கறதுக்கு இதயாவது செஞ்சி குடுங்க.”
“ஏண்டா நீ வேலை பாக்கறதுக்கு நாங்க சொத்தெழுதி தரணுமோ? செய்யற வேலைய இன்னும் உருப்படியா செய்ய தெரியல. நேத்து வயல்ல பூச்சி மருந்து அடிக்க சொன்னேன்ல. செஞ்சியாடா?” என விஸ்வநாதன் ஏசினார்.
“உங்க பேரன் தான் பூச்சி மருந்து அடிக்காத நான் வேற இயற்கை மருந்த கொண்டு வரேன்-ன்னு சொன்னான். அவன கேளுங்க. பத்தாளு பாக்கற வேலைய என்கிட்ட குடுத்துட்டு, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னைய குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இருங்க எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப உங்கள பேசிக்கறேன்.” என அவர்களிடம் பொறிந்துவிட்டு மதியத்திற்கு மீன் பிடிக்க செல்கிறேன் வாவென மிருணாளினியை அழைத்துக் கொண்டு வாய்க்கால் இருக்கும் பக்கம் சென்றான்.
“நிஜாமா நாம மீன் பிடிக்க போறோமா இந்திரண்ணா?” சிறுகுழந்தைப் போல ஆர்வமாகக் கேட்டாள்.
“ஆமா புள்ள.. உனக்கு சாயிந்தரம் மீன சுட்டும் தாரேன். மதியம் இருளாயி மீன் குழம்பு வைக்கும். நாளைக்கு வரைக்கும் அந்த குழம்ப திங்கலாம் அவளோ ருசியா இருக்கும்.”
“நானும் கேள்விப்பட்டு இருக்கேன். மீன் குழம்பு எல்லாம் அடுத்த நாள் தான் ருசியா இருக்கும்ன்னு.. என் வாழ்க்கைல மொத முறையா இதெல்லாம் டேஸ்ட் பண்ண போறேன்.”
“உங்கம்மா இதெல்லாம் செஞ்சி குடுத்தது இல்லயா?”
“எங்கப்பாவுக்கு ஃப்ரை தான் பிடிக்கும்னு அம்மாவும் அதே தான் பண்ணுவாங்க. ஒரு தடவ அவங்க செஞ்சி நல்லா இல்லாம போயிருச்சின்னு செய்யறதே இல்ல..“
“சரி வுடு இங்க இருக்க வரைக்கும் வித விதமா உனக்கு நாங்க செஞ்சி தரோம் நல்லா சாப்பிடு.“
“அது சரி… இந்திரண்ணா.. நடந்தே தான் எல்லா எடத்துக்கும் போவீங்களா?” அவன் காலையில் இருந்து நடந்தே சென்றுவருவதைப் பார்த்துக் கேட்டாள்.
“இங்கன இருக்க எடத்துக்கு காரா எடுப்பாங்க? நடந்தா தான் தின்னது எல்லாம் நல்லா செமிக்கும்.. உனக்கு கால வலிக்குதா?”
“இல்ல.. காலைல இருந்து நெறைய இன்னிக்கி சாப்பிட்டதால நடக்கறது நல்லா தான் இருக்கு. மீன் பிடிக்க எனக்கும் சொல்லி தருவியா இந்திரண்ணா?”
“அதென்ன கம்ப சூத்திரமா? தூண்டில போட்டு இடம் பாத்து உக்காந்தா மீனு தானா வந்து சிக்கும்..”எனப் பேசியபடியே இருவரும் கால்வாய் அருகே வந்திருந்தனர்.
“இங்கயா மீன் பிடிக்க போறோம்?”, ஓடும் நீரினைப் பார்த்துக் கேட்டாள்.
“இங்க இல்ல. அங்க பாரு ஏரி தெரியுது. அதுல தான் பிடிக்க போறோம். புது தண்ணி வந்து இப்பதான் தண்ணி தெளிஞ்சிருக்கு. இப்ப நெறைய மீனுங்க கெடைக்கும்.“ எனக் கூறிவிட்டு அவளை ஏரிக் கரையில் மெல்ல நடந்து வரும்படிக் கூறி, அங்கே கட்டியிருந்த மூங்கில் பாலத்தில் நடக்கச் சொன்னான்.
“இங்க தான் தண்ணி நல்ல ஆழம் இருக்கும். இதய சுத்தி மீனும் வந்து போயிட்டு இருக்கும். இந்த புழுவ தூண்டில்ல மாட்டு.”என இடுப்பில் இருந்த குடுவையில் இருந்து நெளிந்தபடி இருக்கும் ஒரு புழுவினை வெளியில் எடுத்தான்.
“அய்ய…ச்சீ… அத போய் கையால எடுக்கற. அத கீழ போடு.” எனக் கூறியபடி கையில் இருந்தப் புழுவைத் தட்டிவிட்டாள் அருகே வைத்திருந்தக் குடுவையையும் சேர்த்து.
“லூசே! எதுக்கு தட்டிவிட்ட? இப்ப எப்பிடி மீன பிடிக்கறது?” கோபமாகக் கேட்டான்.
“புழுவ போட்டு பிடிச்சா எல்லாம் எனக்கு வேணாம்“
“மீனு வேற எத திங்குமாம்? பைத்தியம்!”,மிருணாவைத் திட்டிக்கொண்டிருந்தான்.
அவளும் அவனோடு வாய் சண்டைச் செய்துக் கொண்டிருக்க, அப்போது பரிசலில் பகவத்கீதன் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தான்.
“என்ன ரொம்ப பாசமா பேசிக்கிட்டு இருக்கீங்க அண்ணனும் தங்கச்சியும்?” நக்கலாகக் கேட்டான்.
“இந்த லூசு மீன் பிடிக்க குடுவைல வச்சிருந்த புழுவ தண்ணிக்குள்ள தள்ளிட்டு குடுவையையும் போட்டுட்டா டா..“ என முறையிட்டான்.
“மீனுக்கு தூண்டிலா புழுவ தான் போடணும் மேடம். பட்டணத்து புள்ளைக்கு இதெல்லாம் தெரியாது மாப்ள. நம்ம தான் இதமா பதமா சொல்லித்தரணும்.” எனக் கூறியபடி அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.
“இங்க பாரு இந்திரண்ணா தேவையில்லாத பேச்சும், பார்வையும் என்கிட்ட வச்சிக்க வேணாம்னு சொல்லு. அப்பறம் நான் யாருன்னு காட்ட வேண்டியிருக்கும்”
“எது தேவையானது எது தேவையில்லாததுன்னு பேச்ச ஆரம்பிக்கறவங்களுக்கு தெரியாதா மாப்ள? பதில் சொல்ல முடியாதவங்க, தைரியம் இல்லாதவங்க தான் இப்படி சாக்கு போக்கு சொல்லி தான் பெரிய ஆளுன்னு தன்னத்தானே சொல்லிக்குவாங்க. சரி இந்தா மீனு. இருளாயிகிட்ட நல்லா ருசியா செஞ்சி வீட்டுக்கு குடுத்துவிட சொல்லு. நம்ம சாயிந்தரம் பாக்கலாம்.” என அவளைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுப் பரிசலைக் கரைப் பக்கமாகக் கொண்டுச் சென்றுக் கவிழ்த்துப் போட்டுவிட்டு மீண்டும் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றான்.
“ஏ புள்ள அவன் உன்கிட்ட வம்பு பண்றானா?”இந்திரன் கீதனைப் பார்த்தபடிக் கேட்டான்.
“இவ்ளோ நேரம் நீயும் இங்க தானே இருந்த.. கண்ணும் காதும் கேக்குதா இல்லையா? சரியான மரமண்டை..”என அவன் தலையில் அடித்துவிட்டு அந்த மூங்கில் பாலத்தின் வழியாகக் கரையடைந்து அவள் பாட்டுக்கு ஒரு வழியில் நடந்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மேடம் இந்த பக்கம் எங்க போறீங்க?” எனக் கேட்டபடி கீதன் அவள் எதிரே வந்தான்.
அவள் ஏதும் கூறாமல் மேலும் முன்னேற அவனும் அவளோடு நடந்தான்.
“நீங்க எதுக்கு கூட வரீங்க? எனக்கு நடந்து போக தெரியும்..”
“அப்பிடியா? நான் கூட கொஞ்ச தூரத்துல கால வலிக்குதுன்னு தூக்க சொல்வீங்கலோன்னு நெனைச்சேன்.“
“10 நிமிஷ நடைக்கு எதுக்கு கால் வலிக்க போகுது?”
“இப்படியே போனா ரயில்வே ஸ்டேஷன் தான் வரும். அதுக்கு ஒரு 10 கிலோமீட்டர் நடக்கணும். அப்ப வலிக்கும் தானே மிருணாளினி மேடம்.” எனக் கீதன் கூறவும் அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு எந்தப் பக்கம் செல்வதென தெரியாமல் முழித்தாள்.
“இந்த பக்கம் வாங்க..”, என அவன் இன்னொரு பாதையில் நடக்க, சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனைத் தொடர்வதா வேண்டாமா என்ற யோசனையில் நின்றாள்.
அவள் யோசனையாக நிற்பதைக் கண்டு, “தைரியமா வாங்க. காதல் வந்த பொண்ணு மேல தூசு கூட படாம கூட்டிட்டு போவோம் நாங்க எல்லாம்.”
“காதலா?” என அதிர்ந்து கேட்டாள் அவள்.
“ஆமா.. உன்மேல நேத்து வந்த க்ரஷ் காலைல நீ களியும், பிச்சி போட்ட கோழியும் சாப்பிட்ட அழக பாத்து காதலா மலர்ந்துரிச்சி.” என அவன் கூறியதும் அவள் அவனைப் பைத்தியமா நீ என்பதைப் போல பார்த்தாள்.
(நல்லா மலர்ந்துச்சி போ.. உன் காதல்..)