Loading

  1. இனி எந்தன் உயிரும் உனதா…

 

கல்லூரி நாட்கள் அழகாய் ஓட, ஆருஷி முயற்சியைக் கைவிடாமல் பாவனி பற்றி தேடிக் கொண்டிருந்தாள். அத்துடன் மறுபுறம் ப்ரித்வியை வேறு எந்த பிரச்சினையைப் பற்றி சிந்தித்தும் தலைவலி ஏற்படுத்திக் கொள்ள விடாமல், அவளே பிரச்சினையாக இருந்து, அவனுக்குத் தொடர் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் சாய் குட்டிச்சுவர் ஒன்றில் ஏறி அமர்ந்திருக்க, அவன் பின்னிருந்து குதித்து ஏறி அருகில் அமர்ந்த ஸ்ருஷ்டி, “ஹாய் படிப்ஸ்…” என்றாள்.

“வாம்மா மின்னல், என்ன ஒருவாரமா ஆளக் காணோம்…” என்றான் சாய்

“ஆமா, ஆர்ட்ஸ் ப்ளாக்குக்கும், சைன்ஸ் ப்ளாக்குக்கும் இடைல ஆறு கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருந்தா, எப்டி வர்றதாம்?” என சலிப்பாகக் கூறினாள் ஸ்ருஷ்டி.

“ரொம்பப் படிக்கிறியோ?” என சாய் கேட்க,

“வாய்ல போடு, வாய்ல போடு… இப்டில்லாம் தப்பு தப்பா பேசிட்டுருந்த சாமி கண்ணக் குத்திரும்” என்று தீவிரமாகக் கூறினாள் ஸ்ருஷ்டி.

“எனக்கென்ன லட்டு, பூந்தியா குடுத்த? வாய்ல போட… ஓவரா பேசுறதுக்கு உன் வாய்ல தான் ஓங்கி ஒண்ணு போடப் போறேன்” என அவன் சிரிக்காமல் கூற,

“உனக்கென்னப்பா நீ நல்லா படிப்ப, இப்டி தான் பேசுவ… நான் என்ன அப்டியா? ஏதோ வீட்டுல இருந்தா டிஸ்கவுண்ட்ல தள்ளி விட்ருவாங்கன்னு காலேஜ் வந்துட்டு இருக்கேன்” என முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கூறினாள் ஸ்ருஷ்டி.

அவள் கூறியதில் அவனுக்கு சிரிப்பு வர, முறைக்க முயன்று தோற்றவன், “இப்டியே பேசிட்டு இரு, ஆல் க்ளியர் பண்ணிருவியா, இல்லனா அரியர் தானா?” எனக் கேட்டான்.

“அப்டியெல்லாம் சொல்லப்படாது… நா அரியர் வச்சாலும், அடுத்த செம்ல கரெக்டா க்ளியர் பண்ணிருவேன்” என அவள் பெருமையாகக் கூற,

“அப்ப அடுத்த செம்ல வைக்கிறத, அதுக்கடுத்த செம்ல க்ளியர் பண்ணுவியா?” என அவன் நக்கலாகக் கேட்டான்.

“ஐயோ யுவா, இப்டி படிப்ப பத்திப் பேசி, பச்சப் புள்ளய பயமுறுத்தாத… எல்லாத்தையும் எப்டியாச்சும் ஃபைனல் செம்ல க்ளியர் பண்ணிருவேன். உன் அரும, பெருமைக்கு எந்த பாதிப்பும் வராது” என வீராப்பாகக் கூற,

“என் அரும, பெருமையா?” என ஒரு புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“ஐயோ ஃப்ளோவுல உளருறேனே…” என நாக்கைக் கடித்தவள், அவனைப் பார்த்து ‘ஈஈஈஈ…’ என இளித்து வைக்க, அவள் பாவனையில் தன்னை மீறி எழுந்த புன்னகையை சிரமப்பட்டு அடக்கியவன், அவளைப் பார்க்காமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

அங்கு ஆருஷியும், ப்ரித்வியும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட சாய், “ஐயோ, அடுத்த சண்டையா? இதுங்களுக்கு மட்டும் எப்டி தான் டெய்லி அடிச்சுக்க வெரைட்டி வெரைட்டியா ரீசன் கெடைக்குமோ தெரியலையே, ஆண்டவா…” எனப் புலம்பினான்.

“ஆனா, எவ்ளோ சண்ட போட்டாலும், அவங்க ரெண்டு பேரும் பிரியுறதே இல்ல பாத்தியா? அதுனால தான் நா சொன்னேன், இவங்க செம பேர்னு…” என கண்கள் மின்ன, ஸ்ருஷ்டி கூற,

“ஆமா, இவங்களப் பத்தி உனக்கு எப்டி தெரியும்? உங்க ப்ளாக் தான் ஆ……று கிலோமீட்டர் தள்ளி இருக்கே…” என சாய் நக்கலாகக் கேட்டான்.

“உன்ன சைட்டடிக்க வந்தப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்னு, உன்கிட்டயே எப்டிடா சொல்லுவேன்?” என மனதிற்குள் நினைத்தவள், “அதாவது யுவா…” என ஆரம்பிக்க,

“எனக்கே தெரிஞ்சுருச்சு, நீ ஒன்னும் சொல்ல வேணாம்…” என்றவன் தொடர்ந்து,

“ஆனா, நீ என்ன வேணா சொல்லு… எனக்குத் தெரிஞ்சு இந்த காலேஜ்ல பெஸ்ட்டுனு சொல்லணும்னா, அதுக்கு இன்னொரு க்யூட் பேர் இருக்காங்க…” என அவளை நோக்கிக் குறுஞ்சிரிப்புடன் கூறியவனைக் கண்டவளின் முகத்தில், வெட்கச் சிதறல்கள் விரிந்தது.

சாய், ஸ்ருஷ்டி இருவருமே விழிகளால் ஒருவரையொருவர் தீண்டியபடி ஒரு மோன நிலையில் இருக்க, “ஓவரா போய்க்கிட்டு இருக்க எனிமி…” என்ற ப்ரித்வியின் குரலில் தான் கலைந்தனர்.

ப்ரித்வியும், ஆருஷியும் ஆளுக்கொருபுறம் அந்த சுவரில் ஏறி அமர, “இப்போ நா அப்டி என்ன பண்ணிட்டேன்னு நீ குதிச்சுக்கிட்டு இருக்க ஆதி?” என்றாள் ஆருஷி.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன பண்ணேன்னு என்கிட்ட கேளு” என முறைக்க,

“டேய் அடுத்த தலைமுறை நல்லபடியா இந்த காலேஜ்ல வாழ ஹெல்ப் பண்ணேன் இது ஒரு குத்தமா? நியாயமாப் பாத்தா நீ இதப் பண்ணிருக்கணும்… உன் கடமைய நா பண்ணதுக்கு, என்னப் பாராட்டலன்னாலும் பரவால்ல, இப்டி கரிச்சுக் கொட்டாத…” என அவளும் சூடாகவே பதில் சொன்னாள்.

“இப்ப என்னடா?” என சாய் சலிப்பாகக் கேட்க,

“நீயே கேளு மச்சி, ஃபர்ஸ்ட் இயர் பசங்க கொஞ்சம் பேரு, படத்துக்குப் போக வெளில போறதுக்கு, பங்க் பண்ணிட்டு பேக் கேட் வழியா போகணும்னு பேசிட்டு இருக்காங்க… கேட்டவ என்ன பண்ணனும்? அவபாட்டுக்கு கண்டுக்காம வரணுமா, இல்லையா? அத விட்டுட்டு, பேக் கேட்டுல இன்னிக்கு வாட்ச் மேன் இருப்பாரு. பயாலஜி லேப் பின்னாடி இருக்க செவுருல ஏறி குதிச்சுப் போங்க, அங்க தான் ஆள் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு, பின்குறிப்பா அதுல ரைட் சைடு கார்னர்ல கொஞ்சம் தூரத்துக்கு, சொருகி வச்சுருந்த க்ளாஸ் பீஸஸ நொறுக்கி வச்சுருக்கேன்… அங்க கை வச்சு ஏறுங்க, காயம் படாதுன்னு சொல்றாடா” என ப்ரித்வி கூறியதில், சாய் சத்தம் போட்டு சிரித்து விட்டான்.

“இதக் கேட்டா, நம்ம இந்த வருஷம் முடிச்சுப் போனதுக்கு அப்புறம் இந்த காலேஜக் கட்டிக் காப்பாத்தப் போறவங்களுக்கு இந்த சின்ன ஹெல்ப் கூட பண்ணக் கூடாதான்னு கேக்குறா” என மேலும் கூற,

“வாவ் அவனி, அந்த நல்ல காரியத்தப் பண்ணது நீ தானா? கையக் குடு… அன்னிக்கு பிரியாணி சாப்ட வெளிய போனப்ப, அத செஞ்ச நல்ல உள்ளம் நூறு வருஷம் நல்லாருக்கணும்னு வேண்டிக்கிட்டு தான் போனேன்…” என குதூகலமாகக் கூறினாள் ஸ்ருஷ்டி.

சாய் இன்னும் சிரிக்க, “பொண்ணுங்களா நீங்க? காலேஜுக்கு எதுக்கு வர்றீங்க?” என்றான் ப்ரித்வி.

“ஆமா, இது அப்டியே கேம்ப்ரிட்ஜ் யூனிவர்சிட்டியோட மதுரை கிளை… நாங்க தா அதோட நல்ல பேருக்கு பங்கம் விளைவிக்கிறோம்…” என ஆருஷி வார,

அவள் தலையில் நறுக்கென்று கொட்டிய ப்ரித்வி, நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்த சாயையும் எட்டிக் கொட்டிவிட்டு அமர்ந்தான்.

💝

அன்று காலை கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆருஷி. வெளியில் நின்ற ஸ்கூட்டியை உயிர்ப்பிக்க, அதுவோ ஸ்டார்ட் ஆகாமல் சதி செய்தது.

உள்ளே சென்றவள், “மச்சா, வண்டி ஸ்டார்ட் ஆகல… கொஞ்சம் உங்க வண்டி குடுங்களேன்…” என சௌந்தர்யாவிடம், மரியாதையாகக் கேட்டாள்.

“எப்பவும் சவுண்டு சரோஜா, இப்ப மட்டும் மச்சாவா? எனக்கு ஆஃபீஸ் போகணும்… நீங்க நடந்து போங்க நாத்தனாரே” என சௌந்தர்யா எழ,

“சௌ, என்ன சௌ… ப்ளீஸ், என் செல்ல மச்சால்ல… இன்னிக்கு வன் டே மட்டும் குடுடி…” என செல்லம் கொஞ்சினாள் ஆருஷி.

“வாய்ப்பில்ல ராஜாத்தி, பேசாம ஒன்னு பண்ணு. கெளம்பி ப்ரித்வியோட போ…” எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள் சௌந்தர்யா.

“அட இது நல்லாருக்கே…” என ஆருஷியும், நேராக அவன் வீட்டிற்குச் சென்றாள்.

💝

“கௌசி பேபி…” என ஏலம் விட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவள், ஹாலில் இருந்த பாண்டியனிடம் “ஹாய்ப்பா…” என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“வாடி, என்ன காலைலயே வந்துருக்க? சாப்புடுறியா?” என கௌசல்யா வாஞ்சையாகக் கேட்டார்.

“அதெல்லாம் வேணாம், வேர் இஸ் யுவர் புள்ளையாண்டான்?” என்றாள் அவள்.

“எங்க, இன்னும் அவருக்கு பள்ளியெழுச்சி பாடல… ஆழ்ந்த சயனத்துல இருக்காரு…”

“உன் புள்ளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல கௌசி”

“எப்புடி வரும், எந்நேரமும் அவங்கப்பா, நா பெத்த மகனே, நாய்க்குட்டி தலையான்னு கொஞ்சுனா… அவன் தறுதலையா தான் இருப்பான்” என கணவரைக் கழுவி ஊற்றினார்.

சிரித்த ஆருஷி, “உனக்கும், தாராவுக்கும் இருக்க வாய இன்ஹெரிட் பண்ணிப் பிறந்த ஒரே ஆள் நான் தான் கௌசி. ஆதியும், அருணும் சரியான அப்பாவி புள்ளைங்க…” என்றாள்.

“அப்பாவி புள்ளைங்களா இருந்தா பரவால்லையே… அப்பா புள்ளைங்களா இருந்து நம்ம உயிர எடுக்குறானுங்க” என அவர் சலித்துக் கொள்ள,

“நா போய் அவன எழுப்புறேன்…” என அவன் அறைக்குச் சென்றாள் ஆருஷி.

அங்கு சென்று அவனை வாட்டர் வாஷ் செய்து எழுப்பலாம் என நினைத்தவள், அவன் உடலைக் குறுக்கிக் கொண்டு, குழந்தை போல் தூங்குவதைக் கண்டு எதுவும் தோன்றாமல் நின்றுவிட்டாள்.

அவன் முகம் பார்த்தவாறு, அவன் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவள், மௌனமாய் இதழ் மலர்ந்த புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கையை தலைக்கடியில் அவன் வைத்திருக்க, அதனை மென்மையாக உருவியவள், “ரத்த ஓட்டமே இருக்காது, லூசு…” என்றுவிட்டு தன் கைக்குள் வைத்துக் கொண்டாள்.

அவனின் சுவாசம் சீராக வந்து கொண்டிருக்க, அவன் மூக்கைத் தட்டினாள் அவள். அதை உணர்ந்தானோ, என்னவோ உறக்கத்திலேயே புருவம் சுருக்க,

அதில் புன்னகைத்தவள், “மூஞ்சப் பாரு, எந்நேரமும் என்கிட்ட மட்டும் உர்ருனு வச்சுக்கோ. நீ என்ன விட்டுட்டு இன்னொருத்திய லவ் பண்ணிருக்கனு தெரிஞ்சப்போ, உன்ன குனிய வச்சு கும்மலாம் போல தான் இருந்துச்சு. ஆனா, முடியலையே என்ன பண்றது? ஏன்னு எல்லாம் எனக்கு தெரியாது ஆதி. ஆனா, என்னத் தவிர உன்ன எவனும் கஷ்டப்படுத்த விட்டதே இல்ல. இனிமேலும் விட மாட்டேன். சீக்கிரமே உன் லைஃப்ல இருக்க எல்லா பிரச்சினையயும் சரி பண்றேன்” எனப் பெருமூச்சு விட்டவளுக்கு குரலில் சுருதி இறங்க,

“அதுக்கப்புறம் இத சொல்ல முடியுமான்னுத் தெரில. இப்பவே சொல்லிக்கிறேன்டா, ஐ லவ் யூ ஆதி…” என்றவளுக்கு விழியில் நீர் துளிர்க்க, மூடிய அவன் இமையில் மெலிதாய் இதழ் பதித்தாள்.

மேலும் தொடர்ந்து, “சின்ன வயசுல இருந்தே உன் கையப் புடிச்சு தான் நடக்குறேன் ஆதி. ஆதி ஸ்கூலுக்கு தான் போவேன், ஆதி சைக்கிள் தான் வேணும், ஆதி பேர்த் டேக்கு தான் கேக் வெட்டுவேன், ஆதி போறான்ல நானும் டூருக்குப் போவேன், ஆதி வண்டி வாங்கிருக்கான், எனக்கு வாங்கித்தர மாட்டீங்களான்னு எல்லா வயசுலயும், எல்லா விஷயத்திலயும் உன்னப் பார்த்து அடம்புடிச்சுருக்கேன். ஆனா, உண்ம என்ன தெரியுமா? தெரிஞ்சோ, தெரியாமலோ என் உலகம் முழுக்க முழுக்க, ஆதி, ஆதி, ஆதின்னு உன்ன சுத்தி மட்டுமே தான் இருந்துருக்கு.”

“அப்டி இருக்க உலகத்துக்குள்ள நீ இருக்க மாட்டியோங்குற நெனைப்பே, உயிர மொத்தமா பிச்சு எடுத்துட்டுப் போற மாதிரி வலிக்குதுடா. ஆனா, எதுவா இருந்தாலும் நா அக்செப்ட் பண்ணிப்பேன் ஆதி… எவ்ளோ சண்ட போட்டாலும், உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம்… காதலுக்காக எல்லாரும் உயிரக் குடுப்பாங்க, ஆனா, உன் சந்தோஷத்துக்காக என் உயிர விட அதிகமா நெனைக்குற, உன் மேல வச்சுருக்க காதலக் குடுக்கவும் நா யோசிக்க மாட்டேன்… லவ் யூ லாட் ஆதி” என்றவள் மீண்டும் அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழுந்தாள்.

அவள் கை, அவன் கைக்குள் சிக்கியிருக்க, அதைப் பிரித்ததில், கண்களை சுருக்கியவாறு எழுந்தவன், அருகில் அவளின் முகத்தைக் கண்டு, “அம்மா பேயி…” என அலறினான்.

“பிசாசே, பிசாசே… நான் தான்டா, ஏன் கத்தி ஊரக் கூட்டுற?” என அவன் வாயைப் பொத்த,

‘நீ தானா’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன், அவள் கையை எடுத்துவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

“எந்திரிடா எரும. என்னப் பாத்தா பேய் மாதிரியா இருக்கு?” என அவனை முதுகிலேயே அடிக்க,

“உண்மைய சொன்னா கோவப்படாதடி. காலங்காத்தாலயே எதுக்கு வந்த?” என்றான்.

“ஆ, உன் அலாரம் க்ளாக் வேல செய்யலயாம், அதான் ‘குக்கூ குக்கூ’னு கத்தி, எஞ்சாய் எஞ்சாமினு தூங்குற உன்னக் கெளப்பி விடலாம்னு வந்தேன்” என,

“போடி, உன் மூஞ்ச வேற எந்திரிச்சதும் க்ளோஸப்ல பாத்துட்டேன்… இன்னிக்கு நாள் வெளங்குன மாதிரி தான்” எனக் குப்புறப்படுத்தவாறே கூறினான்.

“எரும, வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு. காலேஜுக்குக் கூட்டிட்டுப் போ…” என மீண்டும் அடிக்க,

“ஐயோ வந்து தொலையுறேன்…” என்று எழுந்தவன், துண்டை எடுத்தவாறு குளிக்கச் சென்றான்.

தயாராகி வந்தவன், சாப்பிடுவதற்காக அமர, “நீ சாப்புடல்லாம் வேணாம், லேட்டாச்சு போலாம்” என ஆருஷி அவனைப் பிடித்து இழுக்க,

“எட்டரை தானடி ஆகுது, நான்லாம் காலேஜுக்கு ஒன்பதரைக்கு கொறஞ்சு போனதே இல்ல” என்றான்.

“எனக்கு லைப்ரரி போணும், நீ இப்பவே வா ஆதி” என ஒற்றைக் காலில் நிற்க,

“ஐ ஹேட் யூ ஆருஷி…” என்றவன், பைக் சாவியை எடுத்துக்கொண்டுக் கிளம்பினான்.

“மா நான் கேன்டீன்ல சாப்டுக்குறேன்…” என்றவன்,

அவளிடம் திரும்பி, “நீ தான் வாங்கித் தரணும்…” என்றான்.

“அல்ப, வாங்கித் தர்றேன் வா…” என்று கூறியவள், “பை பா, பை கௌசி…” என கையசைத்தவாறு அவனுடன் சென்றாள்.

பைக்கில் இருபுறமும் காலைப் போட்டு ஏறியவள், தன் ஸ்லிங் பேகிலிருந்து நோட்டை எடுத்து அவன் முதுகிலேயே வைத்து எழுதத் தொடங்கினாள்.

“ஏய் வண்டி ஓட்டிட்டு இருக்கேண்டி, என்ன பண்ற?” என அவன் கோபமாகக் கூற,

“இருடா இத மட்டும் எழுதிக்குறேன்… நேத்து நடத்துனதெல்லாம் எனக்கு புரியவே இல்ல. சாய்கிட்ட தான் கேட்டேன், அவன் தான் ரெஃபெரன்ஸ் புக்கெல்லாம் சொன்னான்” என்றவாறே எழுதினாள்.

“அந்த நாய் பண்ண வேலையா, இது? காலேஜ் போய் அவனப் பாத்துக்குறேன்” என்றவாறே வண்டியை ஓட்டிச் சென்று, கல்லூரி பார்க்கிங்கில் நிறுத்த, இறங்கி வேகமாக நடந்தாள் ஆருஷி.

“ஒரு தேங்க்ஸாவது சொல்றாளா, பைத்தியம்” என்று முணுமுணுத்தவன், ஸ்டாண்டைப் போட்டுவிட்டு நடந்தான்.

ஆருஷி நூலகத்தை நோக்கி, குனிந்து நோட்டைப் பார்த்தவாறே நடக்க, டீம் செலக்ஷனின் போது, அவளை இடிக்க வந்த ராஜ், “அன்னிக்கு இவள இடிக்க வந்ததுக்கு தான, அந்த ப்ரித்வி என்னப் போட்டு பொளந்தான்… இன்னிக்கு இடிக்கிறேன், எவன் வர்றான்னு பாத்துக்கலாம்” என கறுவியவாறே அவளை நோக்கிச் சென்றான்.

அவள் பின்னால் வந்த ப்ரித்வி, தூணுக்கு மறுபுறம் வந்ததால், ராஜ் அவனைப் பார்க்காமல் முன்னேற, அவன் இடிக்க வந்ததைப் பார்த்த ப்ரித்வி, சட்டென அவளைத் தன்புறம் இழுத்துக் கொண்டான். இத்தனை காலையில் ப்ரித்வியை எதிர்பாராதவன் திகைக்க, “ஏண்டா அன்னைக்கு வாங்குனது பத்தலையா?” என சீற்றத்துடன் வினவினான் ப்ரித்வி. அதில் அவன் பம்மியவாறு ஓடிவிட்டான்.

ப்ரித்வி, இழுத்த வேகத்தில் அவன் தோளில் பட்டென இடித்த ஆருஷி, தன் தலையைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். சீற்றம் குறையாமல் அவள்புறம் திரும்பியவன், அவள் தோளை விடாமல் அழுத்திப் பிடித்தவாறே, “அறிவில்ல உனக்கு, எதிர்ல யாரு வர்றானு கூட பாக்கமாட்டியா?” என்றான்.

அவன் அதட்டியதில் அவளுக்குப் புன்னகையே வர, எம்பி அவன் நெற்றியில் முட்டிவிட்டு அவனிடமிருந்து விடுபட்டு, சென்றுவிட்டாள். அவள் சென்ற திசையை முறைத்தவாறே, “சரியான மெண்டல்…” என்றவாறு நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் ப்ரித்வி.

 

-தொடரும்…

  -அதி… 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.