Loading

  1. இனி எந்தன் உயிரும் உனதா…

 

இன்னும் இரண்டு நாட்களில் செமஸ்டர் தொடங்கிவிடும் என்ற நிலையில், இன்னும் கூட பாவனி பற்றி, ஆருஷியால் அறிய முடியவில்லை. எந்த பக்கம் சென்றாலும் செங்கல் சுவரில் முட்டிக் கொள்வது போலவே இருந்தது.

அன்று ஞாயிறு என்பதால், வீட்டிலிருந்த ஆருஷி, தன் ஐபாடில் பாடலைப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள். இசைக்கு மொழியில்லை என தத்துவம் பேசுபவள் ஆதலால், அனைத்து மொழி பாடல்களையும் பதிவேற்றி இருந்தாள்.

ஷவரில் நனைந்தபடியே ஒரு குஜராத்தி மொழி பாடலை, ஐபாடுடன் இணைந்துப் பாடிக் கொண்டிருந்தவளுக்கு, மூளையில் ஏதோ மின்னல் வெட்டியது. உடனே டவலை சுற்றிக் கொண்டு வெளியில் சென்றவள், பாடலை நிறுத்திவிட்டு, மொபைலை எடுத்து கூகுளுக்குச் சென்றாள். அதில் தான் நினைத்ததைப் பார்த்தவளுக்கு, ஒன்றும் ஓடாமல் அதையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

💝

வீட்டில் வெட்டியாக இருப்பதால், அப்படியே சென்று அருணைப் பார்த்துவிட்டு, ஆருஷியை வம்பிழுத்து விட்டு வரலாம் என அடுத்த தெருவில் இருக்கும் அவள் வீட்டிற்குக் கிளம்பினான் ப்ரித்வி.

அனைவரிடமும் பேசியவன், சௌந்தர்யாவிடம், “ஆருஷி எங்கக்கா?” என கேட்க,

“அவ ரூம்ல இருப்பா, பாரு…” என்றுவிட்டு அவள் சமையலறைக்குச் செல்ல, ப்ரித்வி, ஆருஷியின் அறை நோக்கி சென்றான். “ஆருஷி, ஆருஷி… ஓய், எனிமி…” என அவன் கதவைத் தட்ட, உள்ளிருந்து பதில் ஏதும் வராததால், மெதுவாய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்.

அவளோ, இடைவரை நீண்டிருந்த ஈரக் கூந்தலிலிருந்து நீர் சொட்ட, நீளமான டவலைக் கட்டியபடி ஃபோனை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளின் பக்கவாட்டுத் தோற்றத்தைக் கண்டவன் இதழ் பிளந்து, மூச்சு விடவும் மறந்து நிற்க, சட்டென சுயநினைவிற்கு வந்தவன், கதவை அடைத்துவிட்டு வேகமாக கீழிறங்கி, அவளை மீண்டும் சந்திக்க மனமில்லாமல், வீட்டிற்கே சென்றுவிட்டான்.

💝

இரவில் தூக்கம் வராமல், தன் அறையில் உலவிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. எங்கே தூங்குவது, கண்ணை மூடினாலே, அவள் காலையில் நின்ற தோற்றமே வந்து இம்சிக்க, தூங்காமல் அலைந்து கொண்டிருந்தான்.

கட்டிலில் வந்து படுத்தவன், “ஐயோ கடவுளே… அவளப் பாத்து நா ஏன் அப்டியே நின்னேன்? அவ மட்டும் பாத்துருந்தா, நம்மளப் பத்தி என்ன நெனைச்சுருப்பா? டேய், ஆதி உனக்கு அறிவே இல்லடா… ராட்சசி, கதவையாவது லாக் பண்ணிட்டு நின்னு தொலைய வேண்டியது தான… ஐயோ, இனிமே எப்டி அவ மூஞ்சில முழிப்பேன்? ஹேட் யூ எனிமி…” எனப் போர்வையை இழுத்து முகம் வரை போர்த்திக் கொண்டான்.

ஆதி என்ற பெயரை, எந்தவித தயக்கமும் இன்றி தானே உச்சரித்ததையும், அவளை எனிமி என அழைக்கும் மறந்து போன பழக்கம் மீண்டிருந்ததையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

“எப்டி தான், எதுவுமே பண்ணாம எல்லாத்தையும் சரி பண்றியோ தெரிலடி… நீ ஒரு பாசிட்டிவ் வைப் ஆருஷி. உன் பக்கத்துல இருக்க எல்லாரையுமே சந்தோஷமா வச்சுக்குற… நீ என் லைஃபோட ப்லிஸ்டி” என்றெண்ணியவன் அவள் நினைவிலேயே, இதழில் உறைந்த புன்னகையுடன் உறங்கிப் போனான்.

💝

இங்கு ஆருஷியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். காலையில் அவள் கண்டறிந்த விஷயம் தான் அதற்குக் காரணம். அதனை சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணமே தூக்கத்தை விரட்டியிருக்க, என்ன செய்வது, எப்படி சொல்வது என்ற யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

“இப்ப தான் கொஞ்ச நாளா எதைப் பத்தியும் நெனைக்காம, நீ உன்னோட நேச்சருக்குத் திரும்பிருக்க. இப்பல்லாம் நீ பழையபடி மனசு விட்டு சிரிக்கிறன்னு நேத்து கூட கௌசிம்மா சொன்னாங்க. இந்த நேரத்துல இப்டி ஒரு விஷயம், எனக்கு எதுக்குத் தெரியணும் ஆதி? இத சொன்னா நீ கண்டிப்பா நொறுங்கிடுவடா… ஆனா, சொல்லாமலும் இருக்க முடியாது. சரி ஓகே, எக்ஸாம் டைம்ல உன்னக் குழப்ப வேணாம். நிம்மதியா படி. அப்புறமா லீவ்ல ஒரு நாள் பொறுமையா சொல்றேன். இத நா தெரிஞ்சுட்டு இருந்துருக்கக் கூடாது, சாரி ஆதி…” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள். அவன் மேல் கொண்ட காதல், அவள் மூடிய இமைகளின் வழியே கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது.

💝

மறுநாள் கல்லூரிக்கு வந்தவள், அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடி ஸ்டோன் பெஞ்சிற்கு வந்தாள். அவளுக்கு முன்பே, ப்ரித்வி வந்து அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

மற்றத் துறையினருக்கும் தேர்வுகள் தொடங்கி நடந்து கொண்டிருப்பதால், வகுப்புகள் ஏதுமின்றி அனைவரும் பிடித்த இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

ஆருஷி அமைதியாக புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்ததிலிருந்தே அங்கு அமர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி. புத்தகத்தைப் பார்ப்பதும், அவ்வப்பொழுது அவளை ஓரக் கண்ணால் பார்ப்பதுமாக இருந்தான்.

நேரம் போவது தெரியாமல் சலனமின்றி படித்துக் கொண்டிருக்கும், ஆருஷியையே புதிதாகப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சிறு வயதிலிருந்தே பார்த்தவள் தான், ஆனால் இப்போது சில நாட்களாகவே புதிதாய் தான் தெரிகிறாள்.

அவன் மனம் அனுமதியின்றியே, ஆருஷியையும், பாவனியையும் ஒப்பிடத் தொடங்கியிருந்தது. பாவனி அவன் தோள் வரை தான் இருப்பாள், ஆருஷி கிட்டத்தட்ட அவன் உயரத்தை ஒட்டியிருக்கிறாள். பாவனி விஸ்காம் என்ற காரணத்தைக் கூறியே நிறைய ஒப்பனையும், நவநாகரிக உடையும் அணிவாள், ஆருஷி துளியும் ஒப்பனையை விரும்ப மாட்டாள், ஆனால் மாடர்ன் உடைகள் தான் அணிவாள். பாவனிக்கு நீண்ட சில்கி கூந்தல், ஆருஷிக்கு அவள் அளவிற்கு இல்லையென்றாலும் நீளமான, ஆனால் சிக்கல் விழும் கூந்தல். பாவனிக்கு முக அவயங்கள் எல்லாம் சிறிதாக, வசீகரிக்கும் அழகுடன் இருக்கும், ஆருஷியோ நீண்ட நெற்றி, பெரிய மீன் விழிகள், குல்ஃபி மூக்கு, செங்காந்தள் இதழ்கள் என அக்மார்க் மதுரைப் பெண்ணாக, ஆளுமையுடன் கூடிய அழகைக் கொண்டிருப்பாள்.

இருவருக்கும் ஒற்றுமை என்றால், அவர்கள் இருவரிடமும் அவன் சாதாரணமாக பேசியதைவிட சண்டையிட்டது தான் அதிகம். பாவனியுடன் போட்ட சண்டைகள் இப்போது நினைத்தாலும் வலியைத் தான் கொடுக்கும்.  ஆனால், ஆருஷியுடன் போட்ட சண்டைகள் அப்போது கோபத்தைத் தந்தாலும், பின்னர் நினைத்துப் பார்க்கையில் சிரிப்பு தான் வரும்.

இப்போது அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், “என்ன இது, நா ஏன் இவள, அவளோட கம்பேர் பண்ணிட்டு இருக்கேன். என்ன ஆனாலும் ஆருஷி, பாவனி ஆக முடியாது…” என்றெண்ணியவனுக்கு காரணம் இன்னதென புரியாமல் மனம் வலிக்க,

“அதே மாதிரி பாவனியும் எப்பவும் ஆருஷி ஆக முடியாது…” என்ற எண்ணம் தோன்றி, இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டது. எண்ணங்களில் கூட தன் ரணங்களை, ஆருஷி தான் மயிலிறகாய் வருடுகிறாள் என அந்த நொடி ஏனோ அவனுக்குப் புரியாமல் போனது. 

ஸ்ருஷ்டியையும் அழைத்துக் கொண்டு வந்த சாய், “டேய் எந்திரிடா…” என ப்ரித்வியை எழுப்பிவிட்டு, ஆருஷியின் மடியில் தலை வைத்து, காலை நீட்டிப் ‘பப்பரப்பா’வென படுத்துக்கொண்டான்.

“தடிமாடே, எப்டி படுத்துக் கெடக்குற?” என ஆருஷி கேட்க,

“எவனாவது பாத்துட்டு என்னத்தயாவது சொல்லப் போறாய்ங்கடா…” என ஸ்ருஷ்டியும் கூறினாள்.

“ப்ச், ஆ…” என நாக்கை நீட்டி விட்டு, அவன் பாட்டிற்கு, புத்தகத்தைத் முகத்திற்கு நேராக தூக்கிப் பிடித்தவாறு படிக்கத் தொடங்கினான். சிரிப்புடன் அவன் தலையில் தட்டிய ஆருஷி, புத்தகத்திற்குள் புதைந்து கொண்டாள். ஸ்ருஷ்டியும் படிக்கத் தொடங்கி விட, ப்ரித்விக்கு தான் கடுப்பாக இருந்தது.

“இவன் இப்போ என்னாத்துக்கு அவ மடில ஏறி படுக்குறான்? அந்த லூசும் ஒன்னும் சொல்லாம பல்லக் காட்டிக்கிட்டு இருக்கு…” என்று கடுப்புடன் எண்ணினாலும், அவர்களைப் பற்றித் தவறாக எல்லாம் நினைக்கவில்லை. அவள்மீது கொண்ட உரிமை, அவனே அறியாமல் ஏற்படுத்திய பொஸஸிவ்னஸில் தான் அப்படிப் பொங்கிக் கொண்டிருந்தான்.

“டேய் ஒழுங்கா எந்திரிச்சு ஒக்காருடா…” என ப்ரித்வி, சாயை அதட்ட,

“மம்மி, பாரு மம்மி இவன…” என சிறுவன் தாயிடம் அளிப்பது போல, புகாரளித்தான் சாய்.

அவன் குழந்தைத்தனத்தை ரசித்த ஸ்ருஷ்டி, “ச்சோ, க்யூட் டா நீ…” என மனதிற்குள்ளாகவே சாய்க்கு நெட்டி முறித்தாள்.

“டேய். எதுக்குடா என் சன்னோட வம்பிழுக்குற? நீ படுத்துக்கோ மை சன், அவன் கெடக்குறான் சுண்டக்கா பையன்…” என ஆருஷி கூறியதில்,

காண்டான ப்ரித்வி, “சன்னாம் சன்னு… இப்ப அவன் எந்திரிக்கல, அடிக்குற அடில உன் சன்னு, தக்காளி சாஸ்ல முக்குன பன்னு மாதிரி ஆகிருவான்…” என்றான்.

ப்ரித்வியின் பொஸஸிவ்னஸ்ஸைக் கண்டு, “இப்போ எதுக்கு இவன் லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கான்?” என்று ஆருஷிக்கு சிரிப்பு தான் வந்தது.

“ஆமா, நீங்க ரெண்டு பேரும் ஏன் மம்மி, மை சன்னு கூப்டுக்குறீங்க?” என ஸ்ருஷ்டி தன் தலையாய சந்தேகத்தைக் கேட்டாள்.

“சாய் யுவனேஷ்னா, சூரியனோட இளமையான பையன்னு இவ தான் சொன்னா. ஆருஷின்னா சூரியன் தான? அதான், அப்டி கூப்டுக்குறோம்…” என்று விளக்கம் கூறினான் சாய். இன்னும் கூட அவள் மடியிலிருந்து நகரவில்லை. (மவனே இன்னிக்கு உனக்கு தீபாவளி தான்டா…)

“ஆதித்யான்னா கூட சூரியன் தான்…” என் ஸ்ருஷ்டி இழுக்க,

“அப்ப அவன் என் டாடி…” எனப் பட்டென்று கூறினான் சாய்.

“லூசுப்பயலே…” என புத்தகத்தால், அவன் வயிற்றில் தட்டி விட்டு, அங்கிருந்து எழுந்து சென்ற ப்ரித்விக்கு, இத்ழ்களில் மெலிதாய் ஒரு வெட்கப் புன்னகை பூத்தது.

“இப்போ நா என்ன சொல்லிட்டேன்னு, டாடி அடிக்கிறான் மம்மி?” என சாய், அவன் அடித்த இடத்தைத் தேய்த்து விட்டபடி கேட்க,

“மூடிட்டுப் படிடா…” என்று கூறிய ஆருஷிக்கும் கன்னங்களில் நாணச் சிகப்பு பரவியது.

அவள் கன்னங்களில் செம்மை படர்ந்ததைக் கண்ட ஸ்ருஷ்டி, “ஒரு பல்பு எரிஞ்சுருச்சு போலயே, இன்னொன்னு தான் என்ன பண்ணுதுன்னு தெரில…” என்று எண்ணிக்கொண்டாள்.

💝

அன்று தான் அந்த செமஸ்டரின் கடைசித் தேர்வு. அன்று மாலையில் ஸ்ருஷ்டிக்கு ப்ரப்போஸ் செய்யலாம் என்று முடிவெடுத்திருந்த சாய் அதனை ஆருஷியிடம் கூறினான்.

“மம்மி, இன்னிக்கு உன் மருமககிட்ட லவ்வ சொல்லலாம்னு இருக்கேன்…” என,

“உடம்ப இரும்பாக்கிக்கடா மை சன்… எந்த ஆங்கிள்ல அடி விழும்னே தெரியாது” என சிரிப்புடன் கூறினாள்.

“அவளும் என்ன லவ் பண்றா. அதுனால அடிக்க மாட்டா” எனும்போதே, அங்கு வந்த ப்ரித்வி,

“யாரு, யார அடிக்கப் போறா? இவன் வாங்கப் போறானா?” எனக் கேட்டான்.

“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?” என ஆருஷி கேட்க,

“பாக்குறதுக்கு பாப்கார்னோட வருவேன், உனக்கும் வேணுமா?” என்றான் ப்ரித்வி.

“அடேய், புள்ள அடி வாங்கப் போறான்னு ரெண்டு பேரும் ஃபீல் பண்றீங்களா?” என சாய் கேட்டதில்,

“ஓ யெஸ் மை சன், ரொம்ப ப்ரவுடா ஃபீல் பண்றேன்…” எனக் கூறும்போதே ஆருஷிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமாமா, ரொம்பப் பெருமையா இருக்கு…” என டிக்டாக் ஸ்டைலில் ப்ரித்வி கூற, ஆருஷி அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

“டேய் இவ வந்ததுக்கு அப்புறம் நீ ரொம்பப் பேசுறடா” எனப் பாவமாகக் கூறினான் சாய்.

“அட நீ வேற, இவன் எனக்கு மேல பேசுவான்…” என ஆருஷி கூற, அது உண்மை தானே என சாய்க்குத் தோன்றியது. ஆருஷி தான் ப்ரித்வியின் சுயத்தை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறாள் எனப் புரிந்தவனுக்கு, ஸ்ருஷ்டி சொன்னது நிஜம் தானோ எனத் தோன்றியது.

💝

அன்று மாலை ஸ்ருஷ்டி அவள் வகுப்பின் அருகே வராண்டாவில், தூணில் சாய்ந்து அமர்ந்து கேள்வித்தாளை வைத்து புத்தகத்தில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்த சாய், “என்ன எழுதுன ஆன்சர் கரெக்டான்னுப் பாக்குறியா?” என,

“இல்ல, இன்னிக்கு வந்த க்வெஸ்டின் பேப்பர் என்னோடது தானா, இல்ல மாறி வந்துருச்சான்னு பாக்குறேன்…” எனத் தீவிரமாக புத்தகத்தைப் புரட்டியபடி கூறினாள்.

“என்னடி சொல்ற?” என சாய் நெஞ்சைப் பிடித்தபடி கேட்க,

“ஒன்னு கூட நா படிச்ச மாதிரி இல்ல, அதான்…” என அசால்ட்டாக சொன்னாள் அவள்.

அவள் தலையில் கொட்டியவன், “அதுக்கு ஒரு தடவையாவது புக்க புரட்டிருக்கணும்…” என்றான்.

அவன் ப்ரப்போஸ் செய்வான் என்ற நம்பிக்கையில், எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஆருஷி, “என்ன இவன் சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கான்? இன்னிக்கு ப்ரப்போஸ் பண்றேன்னு சொன்னத மறந்துட்டானா?” என யோசித்தாள்.

அப்போது தான் அங்கு வந்த ப்ரித்வி, அவள் தோளைப் பற்றியபடி எட்டிப் பார்க்க, “என்ன இவன் கேனத்தனமா மொக்க போட்டுட்டு இருக்கான்…” என அவள் மனதில் நினைத்ததைக் கூறினான்.

அவன் மிகவும் நெருக்கமாக சாய்ந்து நின்றதிலேயே, உறைந்து போனவள், அவன் மூச்சுக் காற்று கழுத்தில் மோதியதில், மொத்தமாக வேறு உலகத்திற்கு சென்றிருந்தாள்.

ஸ்ருஷ்டியையே பார்த்துக் கொண்டிருந்த சாய், ஆழ்ந்த குரலில், “சிமி…” என்று அழைத்தான். அவனின் புதுவித அழைப்பில் குழப்பமாக நிமிர்ந்தவள், அவன் கண்களில் தெரிந்து கொண்டிருந்த உணர்வில் கொஞ்சம், கொஞ்சமாக தொலைந்து கொண்டிருந்தாள்.

 

-தொடரும்…

  -அதி… 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Aarushi character so fabulous and pritnivi character also manly sai pakka

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.