Loading

 

 

 

 

 

 

அடுத்த நாள் காலை அம்ரிதா ஊருக்கு கிளம்பினாள். அர்ஜுன் மேலும் ஒரு நாள் இருக்கச் சொல்லி கேட்டான். அவள் தயங்க அன்பரசியிடம் பேசினான். அவருக்கு அர்ஜுனின் நிலைமை புரிந்தால் நாளை வருமாறு கூறி விட்டார்.

 

அர்ஜுனுக்கு இப்போது அம்ரிதாவை பிரிய பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக இச்சூழ்நிலையில் திருமணத்தை பற்றி பேசவும் முடியாது.

 

அதனால் அவள் அவனோடு இருக்கும் நேரத்தை அதிகபடுத்தினான். வீட்டிலேயே அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

 

செந்தில் குமார் வந்ததும் முகத்தை திருப்பிக் கொள்ள அம்ரிதா முறைத்தாள்.

 

“அர்ஜுன் என்ன பழக்கம் இது?”

 

“எனக்கு அவர் கிட்ட பேச பிடிக்கல”

 

“இப்படி பேசாத அடி வாங்குவ”

 

“உனக்கு தெரியாது அம்மு.. எத்தனை கஷ்டம் இவரால வந்துருக்குனு”

 

“அப்படி என்ன கஷ்டம்? நீ முகத்த திருப்பிக்கிறது அவருக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? நீ தான் இனி அவருக்கு எல்லாமே”

 

“அப்படினு நீ நினைச்சுக்க. அவருக்கு அவரோட சினிமா தான் எல்லாம்”

 

“அர்ஜுன்..” – செந்தில்குமார்.

 

“பேசாதீங்க.. உங்கள பார்த்தாலே கோபம் கோபமா வருது”

 

“டேய்” என்று அம்ரிதா அதட்ட அர்ஜுனுக்கு கோபம் குறையவில்லை.

 

“அர்ஜுன்”

 

“பேசாதீங்கனு சொல்லுறேன்ல… எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கல.. துக்க வீட்டுல எல்லாரும் என்ன பேசிகிட்டாங்கனு கேட்டீங்கள்ள?

 

நீங்க தான் என் அம்மாவ கொன்னுட்டீங்களாம். அதுவும் எதோ ஒரு நடிகைக்காக.. ச்சே.. கேட்கவே அசிங்கமா இருக்கு”

 

செந்தில்குமார் மகனது பேச்சில் அதிர்ந்து போய் விட அம்ரிதாவிற்கு கோபம் கோபமாக வந்தது.

 

“அர்ஜுன் வாய மூடு.. அவர் உன் அப்பா.. அத மனசுல வச்சுட்டு பேசு”

 

“தெரியும் அம்மு.. நல்லா தெரியும்.. இவர பத்தி சாகும் போது கூட அம்மா சொன்னாங்க. நல்லவரு வல்லவருனு. அந்த விசயத்துல அம்மா பொய் சொல்லல. ஆனா அம்மா செத்ததுக்கு இவர் தான் காரணம். அது மட்டும் நிஜம்”

 

அம்ரிதாவிற்கு வார்த்தையே வரவில்லை. இப்படி ஒரு பழியை தூக்கி போடுகிறானே என்று அதிர்ந்து நின்றாள்.

 

“என்ன பார்க்குறீங்க? ஆமா.. நீங்க தான் அம்மாவோட சாவுக்கு காரணம். என் கிட்ட இருந்து அம்மாவ பறிச்சது நீங்க தான். நீங்க மட்டும் சாதாரணமா வேலை பார்த்துட்டு வீட்டுக்கு வந்துடுற ஹஸ்பண்ட்டா இருந்து இருந்தீங்கனா அம்மா இன்னைக்கு உயிரோட இருந்துருப்பாங்க.

 

அவங்களுக்கு பல நாளாவே உடம்பு சரியில்ல. அத கூட கவனிக்காம சூட்டிங் சூட்டிங் சூட்டிங்… உங்க சினிமா மட்டும் தான் முக்கியம்னு சுத்துனீங்களே… அதுல தான் எல்லாமே ஆச்சு.

 

நீங்க கவனிச்சு இருந்தா அம்மா இப்படி போயிருக்க மாட்டாங்க. உங்க மேல இருக்க கோபத்துக்கு நானும் உங்கள விட்டு ஓடாம இருந்தா அம்மா இன்னைக்கு என் கூட இருந்துருப்பாங்க.

 

அவங்க சாவுக்கு நீங்க மட்டும் இல்ல. நான் கூட ஒரு காரணம் தான். எல்லாம் தெரிஞ்சுருந்தும் ஒரு வார்த்தை கூட சொல்லாம தனக்குள்ள போட்டு பூட்டிட்டு வெளிய சிரிச்சுட்டு இருந்துருக்காங்க அம்மா. அவங்க வலிய கூட நான் உணரவே இல்ல. ச்சே..

 

உங்கள மன்னிக்க மாட்டேன். மன்னிக்கவே மாட்டேன். உங்களால தான் அம்மா இப்போ இல்ல. நீங்க ஒரு நல்ல ஹஸ்பண்டும் இல்ல. நல்ல அப்பாவும் இல்ல. ஐ ஹேட் யூ”

 

பேசுவதை எல்லாம் பேசி விட்டு அருகில் இருந்த பொருளை தள்ளி விட்டு விட்டுச் சென்றான். அவன் பின்னால் போகப்போன அம்ரிதா இடிந்து போய் அமர்ந்து இருந்த செந்தில்குமாரை கவனித்தாள்.

 

“மாமா.. மாமா என்னாச்சு?” என்று பதறி தண்ணீரை கொடுத்து அசுவாசபடுத்தினாள்.

 

செந்தில்குமாருக்கு கண்கலங்கி விட அம்ரிதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

 

அன்று முழுவதும் அம்ரிதா கோபமாக இருக்க அர்ஜுன் அமைதியாக அவளுடனே இருந்தான்.

 

அடுத்த நாள் இவர்களை இப்படியே விட்டு விட்டு கிளம்ப அம்ரிதாவிற்கு மனமில்லை. ஆனால் அங்கே அன்னை தனியாக போராடுவதையும் விட்டு விட முடியாது. அதனால் கிளம்பி விட்டாள்.

 

அர்ஜுனிடம் பேசாமலே ஊர் வந்து சேர்ந்தாள். அவளை விட்டு விட்டு ஒரு மணி நேரத்தில் கிளம்பியவன் “நான் ஹைதராபாத்கே போறேன். திரும்ப வரும் போது பார்க்க வரேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அவன் இருக்கும் நிலையில் அம்ரிதா வீட்டு கஷ்டத்தை கூறவில்லை. அது அவளோடு போகட்டும் என்று விட்டு விட்டாள்.

 

ஆனால் இருக்க இருக்க பிரச்சனை பெரிதாகியது. கடனுக்கு வட்டி கட்டவும் முடியாமல் போனது. மூன்று மாதமாக வட்டி கட்டவில்லை என்று வீட்டுக்கே வந்து கேட்டு விட்டுச் சென்றனர்.

 

என்ன செய்வது என்ற திண்டாடத்திலேயே மேலும் ஒரு மாதம் கடந்து விட்டது.

 

இம்முறை பணம் கொடுத்தவன் புதுமாப்பிள்ளை போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு நடுவீட்டில் வந்து அமர்ந்தான்.

 

அன்பரசி எவ்வளவோ பேசிப்பார்க்க அசைவதாக இல்லை. கடைசியாக கொடுத்த பணத்திற்கு ஈடாக அம்ரிதாவை திருமணம் செய்து வைக்க கேட்டான்.

 

மொத்த குடும்பமும் அதிர்ந்து போனது. அப்படி கேட்டவனுக்கு வயது நாற்பதை தாண்டி இருக்கும். அவனது முதல் மனைவி அவனை வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

இப்போது பதினெட்டு வயதே ஆன அம்ரிதாவை கேட்டு நிற்கிறான். பணம் அசலும் வட்டியுமாக வேண்டும். அல்லது பெண்ணைக் கொடு என்று கேட்க அன்பரசி பயந்து போனார்.

 

அம்ரிதாவிற்கு இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று புரிந்தது. பணம் அவ்வளவு பெரிய தொகை. அதை புரட்ட வேண்டுமென்றால் குடியிருக்கும் வீட்டை விற்க வேண்டும்.

 

அவள் அந்த முடிவுக்கு வந்த நேரம்‌ மனைவியின் எண்ணங்கள் தாக்க அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க செந்தில் குமார் வந்து சேர்ந்தார். நிலைமை கைமீறிப்போனது தாமதமாக தான் அவருக்கு தெரிந்தது.

 

இருந்தாலும் அவர் பணத்தை புரட்டி கொடுக்க முன் வந்தார். அம்ரிதா மறுத்து விட்டாள்.

 

“இல்ல மாமா.. இன்னொரு கடனெல்லாம் வாங்கவே முடியாது”

 

“இத ஏன் மா கடன்னு நினைக்கிற? அர்ஜுன நீ கல்யாணம் பண்ணிகிட்டா என் கிட்ட இருக்க எல்லாமே உனக்கும் அவனுக்கும் தான?”

 

“அது அப்புறம் மாமா.. இப்போ கடன் தான்”

 

“குடியிருக்க வீட்ட வித்துட்டு எங்கமா போவீங்க?”

 

“அதெல்லாம் யோசிக்க நேரமில்ல மாமா. அவன் ஒரே மாசத்துல பணத்த கொடு. இல்லனா…”

 

“இல்லனா உன்ன தூக்கிட்டு போயிடுவேன்னு சொன்னானா? இரு போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுறேன்”

 

“வேணாம். பணம் வாங்குனது நாம. திருப்பி கொடுக்காம அவன் மேல கம்ப்ளைண்ட் பண்ணி என்ன ஆக போகுது?”

 

“இந்த வீட்ட இப்போ வித்தாலும் கூட அவ்வளவு வராதே”

 

“அதுக்கு மேல எதாச்சும் பண்ணனும்”

 

செந்தில் குமார் இரண்டு நாளாக யோசித்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்து அம்ரிதாவிடம் பேசினார்.

 

“என் கிட்ட பணம் வாங்க மாட்ட.. ஆனா உன்னோட உழைப்புக்கு கிடச்சா வாங்கிப்பல?”

 

“எப்படி? நானே பனிரெண்டு வரை தான் படிச்சு இருக்கேன். எனக்கு அவ்வளவு பணம் கொடுக்குற வேலை எல்லாம் கிடைக்காது. கொள்ளை தான் அடிக்கனும்.”

 

“இருக்கு.. ஒரே வழி.. எனக்கு தெரிஞ்ச வழி… சினிமா”

 

அம்ரிதா புரியாமல் பார்த்தாள்.

 

“நீ நடிக்குறனு ஒத்துக்கிட்டா நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்”

 

“நிஜம்மாவா?”

 

“என்னால பேச முடியும். ஆனா அர்ஜுன்க்கு சினிமா சுத்தமா பிடிக்காது. நீ யோசிச்சு முடிவ சொல்லு”

 

அம்ரிதா பலமாக யோசித்தாள். அர்ஜுனுக்கு பிடிக்காது தான். அதே நேரம் அவளுக்கும் நடிக்கத் தெரியாது. இதை எப்படி கையாள்வது என்று புரியாமல் விழித்தாள்.

 

கடைசியாக, தான் அர்ஜுனிடம் முழுமையாக சென்று சேர வேண்டுமென்றால் செந்தில்குமார் சொன்ன வழி தான் சரியென்று தோற்றியது. அர்ஜுனிடம் பேசி புரிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில் அம்ரிதா ஒப்புக் கொண்டாள்.

 

உடனே அம்ரிதாவை ஒரு தயாரிப்பு நிறுவனத்தினரிடம் அழைத்துச் சென்றார் செந்தில் குமார். அம்ரிதாவை துக்க வீட்டில் பார்த்து விட்டு அந்த பெண் நடித்தால் நன்றாக இருக்கும் என்று செந்தில் குமாரிடம் கேட்டார் அந்த தயாரிப்பாளர். ஆனால் செந்தில் குமார் மறுத்து விட்டார்.

 

இப்போது அவரிடமே அழைத்து வந்தார். அவரிடம் பணத்தேவையை விளக்க அவரும் புரிந்து கொண்டார். ஆனால் மெத்த பணமும் வேண்டுமென்றால் இரண்டு படங்கள் நடிக்க வேண்டும். ஒரு படத்திற்கு ஒரு வருடமென இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் போடச்சொன்னார்.

 

அம்ரிதாவிற்கு இதை பற்றி எதுவும் தெரியாததால் செந்தில்குமாரிடம் முடிவை விட்டு விட்டாள். அவரோ அலசி ஆராயந்து விட்டு ஒப்புக் கொண்டார்.

 

அவருடைய சம்மதத்துடன் அம்ரிதா கையெழுத்திட்டாள். கையெழுத்து போட்டதுமே பணத்தை கொடுத்து விட்டார்‌. இடையில் அவள் நடிக்க மாட்டேன் என்று கூறினால் இந்த பணத்தை இரண்டு மடங்காக திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு.

 

அம்ரிதாவும் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து அந்த வட்டி காரனிடம் கொடுத்து விட்டாள்.

 

“இனிமே உன்ன இந்த வீட்டு பக்கம் பார்த்தேன்… கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்” என்று எச்சரித்து அனுப்பினாள்.

 

பணத்தை பெற்றுக் கொண்டவனோ “சரியான பஜாரி.. நல்ல வேளை நான் இவள கட்டல” என்று அவளை விட சிறுவயது பெண் கிடைக்குமா என்று தேடச்சென்று விட்டான்.

 

வாங்கிய பணம் மொத்தமும் கடனுக்கு சென்று விட ஒப்பந்தம் மட்டும் அப்படியே இருந்தது. நான்கு மாதங்கள் கழித்து அம்ரிதாவை பார்க்க வந்த அர்ஜுனுக்கு அம்ரிதா சினிமாவில் நடிக்க கையெழுத்திட்டது தெரிய வந்தது.

 

நம்பவே இல்லை அவன். அவளாக ஒப்புக் கொண்டால் தான் நம்புவேன் என்று வேகமாக அவள் முன்னால் வந்து நின்றான்.

 

அவள் எதோ பேச வந்தாள். ஆனால் காது கொடுத்து கேட்காமல் சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டாயா இல்லையா என்பதை பற்றி மட்டுமே அறிய விளைந்தான்.

 

அவள் அதை உண்மை என்று கூறியதும் அவன் மனம் உடைந்து போய் விட்டது. இருந்தும் தனக்காக அவள் அதை வேண்டாம் என்பாள் என்று எதிர் பார்த்தான்.

 

அவளது நிலை அதை செய்ய விடாமல் தடுத்தது. கடைசியில் காரணத்தை கேட்டு விட்டு, பொறுமையாக நடிக்க சொல்லி விட்டு, அதை வேடிக்கை பார்க்க அவன் தயாராக இல்லை. தன் மீதே வந்த கோபத்தில் மோதிரத்தை கலட்டி எறிந்து விட்டு சென்று விட்டான்.

 

ஆனாலும் ஊரை விட்டு போக பிடிக்கவில்லை. பக்கத்து ஊரிலேயே ஹோட்டலில் தங்கி விட்டான். லெனினை, தான் ஹைதராபாத் சென்று விட்டதாக அவளிடம் கூறச்சொன்னான். 

 

விசயம் சரியாக தெரியாமல் லெனின் அங்கு சென்றான். ஆனால் அங்கு போனப்பிறகு அம்ரிதா இருக்கும் நிலையில் நண்பனை திட்டி விட்டு வந்து விட்டான். அர்ஜுன் தன்னிலை விளக்கம் கூறிய பின்பே லெனினின் கோபம் தனிந்தது.

 

அர்ஜுனுக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலை அந்த சினிமா கொடுக்கும் என்று அறிந்தே இருந்தான் லெனின். ஒப்பந்த விவரத்தை கேட்டுக் கொண்டு அவன் சென்ற போது லெனினால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒப்பந்தம் முடியும் வரை அர்ஜுனும் இங்கு வர பிரியப்படவில்லை.

 

அம்ரிதா, அர்ஜுனை நினைத்து அழுது ஓய்ந்து போக மஞ்சுளாவிற்கும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியாக படப்பிடிப்பு ஆரம்பித்த பின் அம்ரிதா என்ற பெயர் திவ்யான்ஷியாக மாற்றப்பட்டது. பிறப்புச் சான்றிதழ் வாக்காளர் அட்டை தவிர எல்லா இடத்திலும் திவ்யான்ஷி என்ற பெயர் நிலைத்தது.

 

அவள் நடித்த இரண்டு படங்களும் வெளிவந்தது. அதில் மின்மினியாக அவள் நடித்திருந்த படம் பிரபலமானது. இரண்டு வருட காண்ட்ராக்ட் முடியும் நேரம் வந்தது.

 

வாங்கிய பணம் முழுவதும் கடனுக்கும் வட்டிக்கும் சென்று விட்டது. அதோடு மகளும் நடிக்கச் சென்று விட்டதால் தையல் மிஷனில் அமர்ந்தார் அன்பரசி‌. அது அவரை மேலும் அதிகமாக பாதிக்க மருத்துவர் அவரை தைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

 

அடுத்த சில நாட்களிலேயே அம்ரிதாவின் தந்தை உயிரை துறந்து விட்டார். படுத்தே இருந்தாலும் கணவன் இருக்கும் தைரியத்தில் இருந்த அன்பரசிக்கு அவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

கை கால் இழுத்துக் கொள்ள, மயங்கி விட்டார். ஒரு பக்கம் அன்னையின் நிலை மறு பக்கம் தந்தையின் இறப்பு என்று அம்ரிதா ஆடிப்பானாள். அவள் மனம் அர்ஜுனை தான் தேடிக் கொண்டிருந்தது. அவனும் வந்தான். அவனே மருமகனாக இருந்து சரவணனுக்கு கடைசி காரியங்களை முடித்தான்.

 

அனால் அம்ரிதாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரியம் முடிந்ததுமே கிளம்பி விட்டான். தந்தையின் இறப்புக்கு அழுது கொண்டிருந்த அம்ரிதாவிற்கு அவன் சென்றதே தெரியவில்லை.

 

ஒரு வாரம் கடந்த பின்பு லெனின் அம்ரிதாவை சந்தித்தான்.

 

“அர்ஜுன் இன்னைக்கு ஊருக்கு போறான். எதுவும் பேசனும்னா போய் பேசு” என்று கூற வேகமாக ஓடினாள்.

 

இரயில் நிலையத்தில் அவன் அமர்ந்து இருக்க அவனிடம் ஓடினாள். அவளை எதிர்பார்க்காததால் அர்ஜுன் எழுந்து விட்டான். மூச்சு வாங்க ஓடி வந்தவள் எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்.

 

அர்ஜுனும் எதுவும் பேசவில்லை. இரண்டு வருடமாக திரையில் மட்டுமே பார்த்து மனதை தேற்றிக் கொண்டிருந்த முகம். இப்போது நேரடியாக நிற்கிறது.

 

அர்ஜுனுக்கு சினிமா பிடிக்காது என்றாலும் அம்ரிதா நடித்த படத்தை பார்த்தான். அதில் மின்மினி சாகும் போது அவனால் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

அந்த மின்மினிக்காக நிறைய வருத்தப்பட்டு இருக்கிறான். அவளை பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் அவனுக்கு தெரியும்.

 

புதுமுக நடிகை திவ்யான்ஷி சீக்கிரத்தில் மின்மினி திவ்யான்ஷியாக தெரிய வந்தாள். எவ்வளவு நடந்தாலும் அர்ஜுன் அம்ரிதாவை சந்திக்க வரவேயில்லை.

 

இன்று முன்னால் நிற்கிறாள். எதுவும் பேச தோன்றாமல் நின்று இருந்தான்.

 

“ஏன் பேசாம போற?” என்று மூச்சு வாங்கியபடி அம்ரிதா கேட்க அதற்கு பதில் வரவில்லை.

 

“உன் மனசுல நான் இல்லையா அர்ஜுன்? இந்த ரெண்டு வருசத்துல ஒரு தடவ கூட என்ன நீ பார்க்கனும்னு நினைக்கலையா?”

 

“இல்ல திவ்யான்ஷி. ஒரு நடிகைய பார்க்கனும்னு ஆசை படுற ஆளு நான் இல்ல”

 

“நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன். என்ன ஆச்சுனு”

 

“எனக்கு அது அப்பவும் தேவை படல. இப்போவும் தேவை படல”

 

“எக்ஸ்ப்ளைன் வேணாமா? இல்ல நானே வேணாமா?”

 

“எனக்கு ஒரு நடிகை வேணாம்”

 

“ஓ.. நான் நடிச்சதால என் மேல இருந்த உன் காதல் காணாம போயிடுச்சு?”

 

“….”

 

“உன் உணர்வுக்கு நான் மதிப்பு கொடுக்கனும்னு எதிர் பார்க்குற நீ என் உணர்வ பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா?”

 

“யோசிச்சதால தான் விட்டுட்டு போனேன்”

 

“புரியல”

 

“புரியாது. புரியவும் வேணாம். நீ இப்போ யாரு? அம்ரிதாவா திவ்யான்ஷியா?”

 

“ரெண்டுமே நான் தான்”

 

“அப்போ அந்த ரெண்டு பேருக்கும் அர்ஜுன் வேணாம்.”

 

“நீயா முடிவு பண்ணிக்குற? அத நான் சொல்லனும்”

 

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே சூஸ் பண்ண சான்ஸ் கொடுத்தேன். நீதான் நான் வேணாம்னு முடிவு பண்ண”

 

அம்ரிதா குற்ற உணர்வுடன் திரும்பிக் கொண்டாள்.

 

“உன் மேல தப்பு சொல்லல. நான் தான லவ் பண்ணேன். நீ சும்மா ஏத்துக்கிட்ட அவ்வளவு தான். சோ உன் சாய்ஸ்ல தப்பு இல்ல.. அந்த சாய்ஸ மெயிண்டைன் பண்ணு”

 

பேசியது போதும் என்று தன் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.

 

“அவ்வளவு தானா ?”

 

“ம்ம்”

 

“வேற எதுவுமே இல்லயா?”

 

“இருக்கு.. ஆனா அம்ரிதா கிட்ட தனியா திவ்யான்ஷி கிட்ட தனியா சொல்லனும்”

 

“சொல்லு”

 

“அம்ரிதாக்கு… உன் குடும்பம் இப்போ மொத்தமா உடைஞ்சு போயிருக்கு. என்னால அவங்கள பார்க்க முடியும். ஆனா நீ சுயமரியாதை காரி. உன் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்துட்டு இப்போ போறேன். என்ன தவிர நீ யாரயும் திரும்பி பார்க்க மாட்டனு நம்பிக்கையில”

 

அம்ரிதாவிற்கு கண்ணீர் வந்தது. அவளும் இதை தான் சொல்ல நினைத்தாள். தந்தை இறந்து விட்டார். அடுத்ததாக அன்னை படுத்து விட்டார்.

 

இப்போது அன்னையை காப்பாற்ற அவள் ஓட வேண்டும். நடிப்பை விட்டு விடலாம் என்று முடிவு செய்தவளை விதி மாற்றி விட்டது.

 

அவள் இதை விட்டு விட்டு வேறு எதைச் செய்தாலும் அன்னையை அவளால் காப்பாற்ற முடியாது. அவளது படிப்புக்கு வேலை தேடினாலும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அன்னையை இருபத்து நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்க முடியாது.

 

அவளுக்கு அவள் வாழ்வை விட கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த அன்னை பெரிதாக தெரிந்தார். அதற்காக அர்ஜுனிடம் நான் திரும்பவும் நடிக்கட்டுமா என்று கேட்க தான் வந்தாள்.

 

முதல் முறை அவனை கேட்காமல் செய்து விட்டாள். ஆனால் இம்முறை அவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவள் கேட்கும் முன்பே அர்ஜுன் அதை புரிந்து கொண்டான். அவளது கஷ்டத்தில் அவள் எடுக்கும் முடிவுக்கு துணை நிற்க நினைத்தான்.

 

அதை கேட்டதும் அவளுக்கு கண்ணீர் தான் முதலில் வந்தது. தனக்கு பிடித்தவனை மீண்டும் மீண்டும் தனக்காக தன்னுடைய குடும்பத்துக்காக தியாகம் செய்ய வைக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்தது.

 

அர்ஜுன் அவளது கண்ணீரை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க கண்ணை துடைத்துக் கொண்டாள்.

 

“அப்போ திவ்யான்ஷிக்கு?”

 

“திவ்யான்ஷிக்கு…” என்று இழுத்தவன் “நான் வெறுக்குற ஒரே ஆள் அவ தான். அவள பார்க்கவே பிடிக்கல. ஒரு நாள் அவ ஏன் டா சினிமாக்கு வந்தோம்னு அழுவா” என்று கூறினான்.

 

அம்ரிதா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

 

“எழுதி வச்சுக்க சொல்லு.. அந்த சினிமா அவள அவ்வளவு கஷ்டப்படுத்தும். அவ பேர கூட காப்பாத்திக்க முடியாது”

 

அம்ரிதா அதிர்ச்சியிலிருந்து விலகி அவனை முறைத்தாள்.

 

“அப்படி எதுவும் நடக்காது”

 

“ஓபன் சேலன்ஜ்… திவ்யான்ஷிய முடிஞ்சா அவ பேர காப்பாத்தி காட்ட சொல்லு. எத்தனை பேரோட ரூமர் வரனுமோ வரும். ஏன்னா அந்த சினிமா உலகமே அப்படி தான்.”

 

“சேலன்ஜ்… நானும் சேலன்ஜ் பண்ணுறேன். என் பேர காப்பாத்தி காட்டுவேன்”

 

“தோற்காம இருக்க வாழ்த்துக்கள். ஆனா முடியாது” என்று கூறி நடக்க ஆரம்பித்தான்.

 

“நில்லு…”

 

“என்ன?”

 

“அம்ரிதாவ அம்போனு விட்டுட்டு போறியே… கில்டி கொஞ்சம் கூடவா இல்ல?”

 

“அம்ரிதா என்னைக்கு அந்த திவ்யான்ஷிய கொன்னுட்டு அர்ஜுன் தான் வேணும்னு நினைக்கிறாளோ அன்னைக்கு அவ முன்னாடி நான் இருப்பேன்” என்று கூறியவன் திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

 

அம்ரிதா சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள்.

 

ஒரு வருடம் கழித்து அர்ஜுன் வெளி நாட்டுக்கு போவதாக லெனின் கூறினான். அதன் பின் அவனை பற்றிய எல்லாமே லெனின் மூலமாக தான் தெரிந்தது. அர்ஜுன் திரும்பி வரும் வரை திவ்யா தன் பெயரை காப்பாற்ற எவ்வளவோ போராடி இருக்கிறாள்.

 

எல்லாமே வீணாகி தான் போனது. முதல் முதலாக பாலனோடு அவள் பெயர் அடி பட்ட போது அம்ரிதாவிற்கு அதிர்ச்சி தான். அதுவும் பாலன் திருமணம் முடித்து குழந்தையோடு இருப்பவன்.

 

இது போன்ற விசயங்களால் பாலனின் குழந்தைகளும் அர்ஜுனை போன்று பாதிக்கப்படலாம். அதை நினைத்தவளுக்கு ஏன் தான் சினிமாவிற்கு வந்தோம் என்று தோன்றி விட்டது.

 

பாலனின் குழந்தைகளை ஒரு முறை மட்டுமே பார்த்து இருக்கிறாள். அடுத்த முறை பார்க்கும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்ள திவ்யாவிற்கு மனம் நொந்து போனது.

 

அர்ஜுன் அனுபவித்த அதே பிரச்சனை. இவர்களும் அனுபவிக்க போகிறார்களோ என்று பயந்து விட்டாள். ஆனால் பாலனின் மனைவி அவர்களை முழுமையாக நம்பினாள்.

 

கல்யாணி தன் கணவனை நம்பியது போல இவளும் நம்பினாள். பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்க இனி பாலனின் எந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என்று செந்தில் குமார் கூறி விட்டார்.

 

ஆனால் அடிமனதில் திவ்யாவிற்கு அர்ஜுன் சொன்ன வார்த்தைகள் ஓடிக் கொண்டே இருந்தது. நாட்கள் கடக்க கடக்க திவ்யான்ஷியின் பெயர் முழுமையாக அடி பட்டது. அவளை பற்றி எவ்வளவு வதந்தியை பரப்ப வேண்டுமோ பரப்பினர்.

 

அர்ஜுனிடம் பெயரை காப்பாற்றுவேன் என்று விட்ட சவாலில் தோற்றுப்போக ஆரம்பித்தாள். மன உளைச்சலில் விழுந்து மருத்துவம் பார்த்து வெளி வர வேண்டியிருந்தது.

 

அர்ஜுனும் அவளது பெயரை அவள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் அப்படி ஒரு சவால் விட்டான். அதில் திவ்யா தோற்று விடக் கூடாது என்பதே அவனது ஆசையும். ஆனால் உலகம் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மாறாக வேலை செய்தது.

 

திவ்யா நினைத்தது போல் அன்னையின் மருத்துவ செலவு அளவுக்கு அதிகமாக இருந்தது. அன்றாட செலவு தவிர பணம் மொத்தமும் மருத்துவத்துக்கு சென்றது. மேலும் அன்பரசியின் வியாதியும் பரம்பரை வியாதி என்பதால் அதை சரி செய்ய முடியாது. அவரது கால்கள் செயலிழந்து போனாலும் உயிரை காப்பாற்றி இருந்தனர். நடக்க முடியாது என்றாலும் மற்ற உறுப்புகளில் பாதிப்பு வரவில்லை.

 

செந்தில் குமார் பழைய வீட்டை மாற்றி கட்டினார். அதே வீட்டில் திவ்யான்ஷியையும் தங்கச் சொல்லி விட்டார்.

 

மஞ்சுளா கல்லூரி படிப்பு வரவில்லை என்று பாதியில் விட்டு விட்டு ‘ப்யூட்டிஷியன்’ படித்தாள். அதை அவள் முடித்ததுமே திவ்யா தன்னோடு வருமாறு அழைத்தாள்.

 

மஞ்சுளாவிற்காக அவளது பெற்றோர்கள் சென்னைக்கே சென்று விட்டனர். ஆனால் மஞ்சுளாவிற்கு சில மாதங்களிலேயே சினிமாவை பிடிக்காமல் போய் விட்டது.

 

வேலையை விட வேண்டும் என்று நச்சரிப்பாள். ஆனாலும் திவ்யாவை தனியாக விட மனமில்லாமல் கூடவே இருந்து விட்டாள்.

 

லெனினுக்கு சொந்த ஊரிலேயே சொந்த க்ளீனிக் ஒன்றை கட்டிக் கொடுத்தனர் அவன் வீட்டில் இருந்தவர்கள். ஆனால் அவன் சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவ மனையில் வேலை பார்க்க வந்து விட்டான்.

 

இவர்கள் மூவரும் ஒரே ஊரில் இருக்க அர்ஜுன் மட்டுமே வெளி நாட்டில் இருந்தான்.

 

இவர்கள் யாரும் அறியாத விசயம் அர்ஜுன் அடிக்கடி அன்பரசியிடம் பேசுவது. அங்கு வேலை செய்ய நியமிக்கப்பட்ட சந்திராவிற்கு மட்டும் தான் இது தெரியும்.

 

தொடரும்.

 

 

மக்களே…

 

இதோட ஃப்ளாஷ் பேக் முடிஞ்சது. அடுத்து இப்ப நடக்குற விசயத்துக்கு போகனும். இத சின்னதா முடிச்சுடலாம்னு பார்த்தேன். ஆனா முடியல. பெருசா போயிடுச்சு. இன்னமும் சில விசயங்கள சொல்லனும்னு தோனுது. அத தனியா இப்ப சொல்லுறேன்.

 

கதையோட ஆரம்பத்துலேயே திவ்யா புக் படிப்பா அர்ஜுன் வந்து பேசுவான். அப்போ அவ கூட நைட் எல்லாம் கதை படிச்சது பேசுனது எல்லாம் ஞாபகம் வரும்.

 

அடுத்து அர்ஜுன் அவளோட சுயரூபத்த காட்டுறேன்னு சொன்னது அவ அவனுக்கு சொந்தமானவனு காட்டுறத சொல்லுவான். அவளுக்கு கோபம் வராதுனு சொன்னதும் கூட கல்லடி பட்டத நினைப்பானே..

 

அப்புறம் திவ்யா தன்ன பார்க்க நினைச்சு இருக்க மாட்டாளானு ஆசை படுவான்.‌ ஏன்னா அம்ரிதா ஆசை படனும். அப்போ அவ கிட்ட வருவேன்னு சொல்லி இருப்பான். அதான் அவ ஆசை பட்டாளா இல்லையானு தெரிஞ்சுக்க நினைப்பான்

 

அர்ஜுனுக்கு சினிமா உலகத்துல சில கசப்பான அனுபவம் இருக்கதால அவள பேர காப்பாத்திக்க சொல்லி சவால் விடுவான். ஆனா திவ்யாவால காப்பாத்த முடியாது.

 

பாலன் விசயத்துல சண்டை போடுவான். ஏன்னா அவனும் ஒரு டைரக்டரோட பையன். அந்த டைரக்டரோட பிள்ளைங்கள நினைச்சு தான் கோபம் வரும்.

 

நடக்காத நிச்சயம் பத்தி பேசுற ஆதாரம் இருக்கானு மஞ்சுளா திட்டுவா. மோதிரத்த தூக்கி எறிஞ்சுட்டு இப்போ பேசுறியேனு அம்மு குளத்துல தள்ளி விட்ருவா.

 

அந்த மோதிரத்த தூக்கி போட்டதுக்கு தான் திவ்யான்ஷி அவன் மன்னிப்பு கேட்கனும்னு எதிர் பார்ப்பா.

 

இன்னும் எல்லாமே முன்னாடி நடந்தத வச்சு இத கம்பேர் பண்ணி பாருங்க. புரியும்.

 

சோ அர்ஜுனுக்கு அவன் உணர்வு முக்கியமா பட்ருந்தா அம்ரிதாவ ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பான். அவனோட கஷ்டத்துலையும் அம்ரிதாவே முடிவெடுக்கட்டும்னு நினைச்சு தான் அவள விட்டு பிரிவான்.

 

அம்ரிதாவும் தனக்கு இன்னும் மெச்சூரிட்டி வேணும்னு தான் அவன தேடிப்போக மாட்டா. எட்டு வருச பிரிவு உங்களுக்கு அதிகமா இருக்கலாம்.

 

ஆனா இருபது வயசுல இருந்து ஆறு வருசம் கழிச்சு இப்போ மீட் பண்ணுறாங்க. இருபத்தாறு வயசுல இருக்க பக்குவம் பதினெட்டு இருபது வயசுல இருக்காது. அவங்க கல்யாணம் பண்ணிக்க கூடிய வயசு தான் இது.

 

அவளா அவ முடிவ மாத்திக்கட்டும் அது வரை காத்திருப்பேன்னு அர்ஜுன். தன் வாழ்க்கைய விட குடும்பத்த பார்த்துக்குறது பெருசுனு நினைக்கிற அம்ரிதா. இவ்வளவு தான் இவங்க கேரக்டர். இது மாறாம தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

 

சப்போஸ் நடுவுல அம்ரிதா தன் முடிவ மாத்தி இருந்தா அது லெனின் மூலமா அர்ஜுனுக்கு தெரிஞ்சுருக்கும். ஓடி வந்துருப்பான். அம்ரிதாவுக்கு முடிவ மாத்த முடியாம பணம் அவ்வளவு அவசியமா தேவை பட்டது. அவளால மாத்த முடியல.

 

இதான் கதையோட ப்ளாட்டே.. போதும் கை வலிக்குது. இன்னும் எதாச்சும் நீங்க அப்சர்வ் பண்ணா சொல்லுங்க. வேற எதுவும் சொல்லனும்னா கதைய முடிச்சுட்டு சொல்லுறேன்.

நன்றி

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்